கிள்ளான் காகம்

நீ கிள்ளானில் வசிக்கும் ஒரு காகம். இன்றும் நீ நடுக்கத்துடன் தான் எழுகிறாய்.

என்னதான் சூரியன் மெல்ல உதித்துக்கொண்டிருந்தாலும், வானம் இன்னும் இருண்டவண்ணமே இருக்கிறது. குச்சிகளாலான உன் கூட்டிலிருந்து எதிரே இருக்கும் திரு.ங்-ஙின் வீட்டை நீ எட்டிப் பார்க்கிறாய். நீ உன் கறுத்த இறக்கைகளை அசைக்க, உன்னுடன் வசிக்கும் சகோதரர்கள், உறவினர்கள், அண்டை மரத்துக் காக்கைகள் யாவும் ஒவ்வொரு கிளையிலிருந்தும் விழித்தெழுகின்றன. உனது குடியிருப்புப் பகுதிகளெல்லாம் இன்னும் மந்தநிலையில் அமைதியாகத்தான் உள்ளது. எனினும், காற்று எதையோ எச்சரிப்பதுபோன்ற உணர்வு சற்று மேலெழுகிறது.

திரு.ங் வேலைக்குக் கிளம்பியவாறே வீட்டிலிருந்து வெளியேறுகிறார். வெளியே நிற்கின்ற அவரது காரில் ஏற முற்படும்போது முன்கண்ணாடியில் ஒரு வெண்துளியைக் காண்கிறார் – அது காக்கையின் எச்சம்.

“சனியனுங்க!” அடித்தொண்டையில் கத்துகிறார். வீட்டிற்குள் ஓடியவர் சட்டெனக் கையில் ஒரு நீண்ட துடைப்பத்துடனும் ஹாக்கியன் வசைபாடல்களுடனும் வெளியே வருகிறார். ஓடி வந்த வேகத்தில் வாசலின் இரும்புக் கம்பிகளில் ஓங்கி அடிக்க, காதடைக்கும் பலத்த சத்தம் ஏற்படுகிறது. “எங்கேயாவது போய் செத்துத் தொலைய வேண்டியதுதானே!”

அருகிலுள்ள மரங்களில் இருந்த காகங்கள் அனைத்தும் படபடவென இறக்கைகளை அடித்துக்கொண்டு வான்நோக்கிப் பறக்கின்றன. அவையாவும் பயத்தில் கரைகின்ற சத்தம் ஒரு பெருங்கூச்சலாய் உருவெடுக்கின்றது. திரு.ங்-ஙின் அண்டை வீட்டார்கள் சபிப்பதும், சடாரெனச் சன்னல்களை மூடுவதும் உனக்குக் கேட்கின்றன. ஒருவித மன கணத்துடன் “இன்று மீண்டும் அந்தச் சாபம் உயிர்த்தெழப் போகிறதா?” எனச் சிந்தித்தவாறு நீ அங்கேயே இருக்கிறாய்.

திரு.ங்-ஙின் மனைவி கதவோரம் வந்து நின்று, “காலையிலேயே என்ன சத்தம்?” என்று அவரைவிடச் சத்தமாகக் கேட்கிறார். “என்னதான் பிரச்சனை உங்களுக்கு?”

“உன்னாலதாண்டி நாம இந்தக் கிள்ளானுக்கு வர வேண்டியதா போச்சு!” திரு.ங் விரக்தியில் கோபித்துக்கொள்கிறார். “குற்றங்களோட எண்ணிக்கைதான் கூடிக்கிட்டே போகுதுன்னா, இந்தக் காக்காய்களோட எண்ணிக்கையும் கூடிக்கிட்டே போகுது. டவுன் கௌன்சில்ல புகார் கொடுத்து இதுங்க எல்லாத்தையும் சுட்டுத் தள்ளச் சொல்லப்போறேன் பாரு! சீ… என்ன ஊரு இது?”

“ஓஹோ.. பழி இப்போ என்கிட்ட வந்துருச்சா? நான் தான் எல்லாத்துக்கும் காரணமா?”

இதுவரை கேட்டதே போதுமென நினைத்த நீ உனது அகலமான, கறுத்த சிறகுகளை விரி த்து,  வானத்துக்குள் பாய்கிறாய். காற்றின் நயமறிந்து, மேன்மேலும் மேலேறியபடியே கீழே தெரிகின்ற சிறுசிறு கூரைகளாலான அந்த முழு ஊரைப் பார்த்த வண்ணம் பறக்கிறாய்.

ஆகாயத்திலிருந்து பார்க்கையில், கிள்ளான் என்பது வீடுகள், கடைகள், பள்ளிக்கூடங்கள் மற்றும் அலுவலகங்கள் யாவும் கலைந்து கிடக்கும் ஓர் ஒழுங்கற்ற ஓவியமாய்த் தெரிகிறது. நீ காற்றினூடே பயணித்துக் கொண்டிருக்கையில் ஆயிரமாயிரம் சன்னல்களில் சூரியனின் ஒளிக்கீற்றுகள் பிரதிபலித்து மின்னுகின்றன. ஆனால், இத்தனை அழகைக் காணும் உனக்கு உள்ளத்தில் மகிழ்ச்சியில்லை; பதற்றம் மட்டுமே அதிகரித்துக்கொண்டிருக்கிறது.

“க்வா!”

உன் பெயரை யாரோ அழைப்பதைக் கேட்டுத் திரும்பிப் பார்க்கிறாய்.

உனது மூன்றாம் நிலை தளபதி ரொக், நீ பறந்துகொண்டிருக்கும் இடத்தை நோக்கி, உன்னுடன் சேர்ந்து பறக்க வந்துகொண்டிருக்கிறான். அவனுக்குப் பின்னால் பறந்து வரும் ஐம்பது காகங்களும் உனது படையினராவர். இன்று அவர்களுள் ஒருவர்கூட உயிரிழந்துவிடக் கூடாதெனும் உறுதியை மனதில் சுமக்கும் தலைவன் க்வா. அது நீதான்.

“உனக்கும் ஏதேனும் தவறாகத் தோன்றியதா?” வினவினான் ரொக். “அந்தச் சாபம்?”

நீ உன் கூரிய நகங்களை இறுகப் பற்றியவாறே ஒப்புக்கொள்கிறாய். ”ஆம்.”

“உத்தரவிடு, க்வா!” தயாரானான் ரொக்.

“உங்கு எங்கே?” என்று கேட்கப் போவதற்குள் உனக்கே நினைவுக்கு வந்துவிட்டது.

“ரொக், இப்பொழுது நீதானே இக்காகப்படையின் புதிய இரண்டாம் நிலை தளபதி. பாதி பேரைக் கூட்டிக்கொண்டு போ, பறந்து விரிந்து தேடு! இன்றைக்கு எவ்வளவு சாப்பாடு வேண்டுமென நாம் கணக்கிட வேண்டியுள்ளது!”

“ஹனுக்கை கூப்பிடவா?” ரொக் கேட்கிறான்.

“சரி, கூப்பிடு!” என நீயும் கூற,

ரொக் தலையசைத்து ஒப்புதல் தெரிவித்துவிட்டுத் தனது இறக்கைகளைப் புடைத்து, குழுவில் பாதியை அழைத்தபடி கிள்ளானின் வடக்குப் பகுதியை நோக்கிப் பறக்கத் தொடங்குகிறான். பழுப்பு நிறத்தாலான நெளியாறு ஒன்று கிள்ளானை இரண்டாகப் பிரிக்கிறது. அந்நதியின் தென்பகுதி உனது கட்டுப்பாட்டில் உள்ளது. ஹனுக் வடக்கிலுள்ள ஆதரவுப் படையை வழிநடத்துகிறார். அதில் இளம் காகங்களும் முதிய, தளர்வுற்ற காகங்களும் இருக்கின்றன. மோசமான நாட்களில் அவையாவும் களமிறங்கும்.

நீ சூரியனைப் பார்க்கிறாய். மாலை 7 மணிக்கு இருட்டத் துவங்கும். அதற்கு இன்னும் பன்னிரண்டு மணி நேரம் எஞ்சியுள்ளது. இதை நீ வருடக்கணக்கில் செய்து வந்திருந்தாலும், சமீப காலங்களில் அந்தச் சாபம் அடிக்கடி உயிர்த்தெழுகிறது. ஒவ்வொரு முறையும் பயமும் பதற்றமும் உன் கழுத்தைச் சற்று அதிகமாகவே இறுக்குகிறது.

‘இன்று யாரும் இரத்தம் சிந்தக்கூடாது,’ என உன் உள்ளம் பிரார்த்திக்கின்றது.

மதிய வேளையில், நீ திராக்கின் காகப்படையினரைக் கிள்ளானின் தென்பகுதி அடிவாரத்திலுள்ள தாமான் செந்தோசாவில் சந்திக்கச் செல்கிறாய். அவையாவும் சேர்ந்து கத்தும் கரகரப்பான இரைச்சல் உனது செவிக்குத் தொலைவிலிருந்தே எட்டிவிட்டது. தொழிற்சாலைகளும் உணவகங்களும் நிறைந்த அவ்விடத்தில் அக்காகங்களின் கரையும் குரல்களைத் துல்லியமாகக் கவனித்தபடியே நீ அக்கடைவரிசைகளின் பின்புறவழியாகப் பறந்து வந்தடைகிறாய்.

திராக் ஒரு கூரையில் அமர்ந்தபடியே தனது காகக்கூட்டத்தைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறார். அவரது காகங்களோ கீழே குப்பைத் தொட்டிக்குள் அடக்க முடியாமல் அதனருகே மலை போன்று மூட்டை கட்டி வைக்கப்பட்டிருக்கின்ற கறுப்புப் பைகளைத் தோண்டித் துருவித் துழாவிக் கொண்டிருக்கின்றன. நீ அவரருகே சென்று அமர்கிறாய்; திராக் உன்னை வரவேற்கிறார். பல குப்பை பைகள் கிழிக்கப்பட்டு, அங்கே சிதறியுள்ள கழிவுகளிலிருந்து சாப்பிடக்கூடியவற்றை இழுத்தெடுத்துக் கொண்டிருக்கின்றன அவரது படை காகங்கள். துர்நாற்றம் தாங்கவில்லை.

“இன்றைய சாபம் தாங்க முடியாத அளவிற்கு மோசமாக இருக்கிறதே க்வா,” என திராக் கரைகிறார். அவர் மிகவும் அனுபவமுடையவர். பல ஆண்டுகள் செயல்திறன்மிக்கவர்.

நீ தலையசைக்கிறாய். “ஆமாம் திராக்.” 

ஏதோவொரு கடையின் பின்வாசலிலிருந்து ஒரு பெண் வெளியே வருகிறாள். காகங்களைத் தமிழில் சபித்தவாறே கையிலிருந்த பிசுபிசுக்கும் நெகிழி மூட்டையை அந்தக் குப்பைமேட்டில் வீசுகிறாள். காகங்கள் ஒதுங்கிப் பின்வாங்குவது போல் பாவனை செய்துவிட்டு, அவள் உள்ளே சென்றதும் மீண்டும் பாய்ந்தோடி வந்து அந்தப் புதிய குப்பை பையைச் சுற்றி வளைத்துக் கொத்தித் திறக்கின்றன. அதனுள்ளே கெட்டுப்போன இறைச்சியும், சாப்பிடாமல் வீணடிக்கப்பட்ட மீத உணவு பகுதிகளும் கிடக்கின்றன.

“இவையெல்லாம் போதாது,”  திராக் எச்சரிக்கிறார். “குறைந்தபட்சம் ஒரு பிணமாவது வேண்டும்.”

“எங்காவது இரத்தம் சிந்தியதா?” நீ கேட்கிறாய். நீ இன்று காலையிலேயே கிள்ளானில் பல வளமான வீதிகளை வட்டமிட்டு வந்திருக்கிறாய். ஆங்காங்கே மக்களிடையே வாய்ச்சண்டைகளும் தகராறுகளும் நிலவியிருந்தாலும், எந்த அச்சுறுத்தும் சம்பவமும் இதுவரை இன்னும் நிகழவில்லை.

“விடியற்காலையில் ஒரு கொள்ளைக்கூட்டம் ஆயுதத்துடன் இறங்கியுள்ளது,” திராக் கூறுகிறார். “தமிழர்களின் குண்டர் கும்பல்களுக்கு மத்தியில் ஏதோ சின்ன கைகலப்பு. சிலர் காயமுற்றிருக்கின்றனர்.”

உனது உள்ளம் மேலும் கணக்கிறது. ஆக, சாபத்தின் ஆட்டம் தொடங்கிவிட்டது.

“நீ சென்று பண்டமாரனை நோட்டம் பார்,” திராக் ஆலோசிக்கிறார். “இந்தப் பகுதியில் தேடும் வேலையை நான் பார்த்துக்கொள்கிறேன். வடக்கிலிருந்து ஹனுக்குக்குத் தகவல் சொல்லிவிடு – இன்று நிச்சயம் உனக்கு நிறைய உதவி தேவைப்படும்.”

“அதற்குத்தான் ரொக்கை அனுப்பியிருக்கிறேன்,” நீ பதிலளிக்கிறாய். உன் சிறகுகளை மரியாதையுடன் அசைத்து அவருக்குத் தலைவணங்கிவிட்டு மேற்கே பண்டமாரனை நோக்கிப் பறக்க ஆயத்தமாகிறாய்.

திராக்கின் தாமான் செந்தோசாவில் குற்றச்செயல்களின் எண்ணிக்கை வேண்டுமானால் அதிகமாக இருக்கலாம். ஆனால், ஒட்டுமொத்த கிள்ளானில் அதீத ஆபத்தான, கொடூரமான பகுதியென்றால் அது பண்டமாரன் தான். பழைய காலங்களிலிருந்தே சீனக் கும்பல்கள் அல்லது இரகசியக் குழுக்களின் நடவடிக்கைகள் இப்பகுதியில் வழக்கம். இன்றும் சட்டவிரோதச் செயல்களின் மையமாகவே திகழ்கிறது அவ்விடம். சாபம் அவர்கள் வரை இன்னும் சென்றிருக்கக் கூடாது எனத் துதித்துக்கொண்டே நீ வானில் பறக்கிறாய்.

‘இன்று வேண்டாம், தயவுசெய்து இன்றைக்கு மட்டும் வேண்டாம்…’

அந்தப் பகுதியில் பல உயரமான அடுக்குமாடிகள் இருக்கின்றன; சந்தேகத்திற்குரிய நபர்கள் தங்குவதற்கு உகந்த மலிவான குடியிருப்புகள். நீ அங்கு வந்து சேர்வதற்குள் அடுக்குமாடிகளின் கூரைகளும் அருகிலுள்ள சாலைகளும் காக்கைகளால் நிரம்பியிருந்தன. வேறு யாருமல்ல, காவ் காவ்வின் படையினர்தான்.

குறிப்பிட்டதொரு நடைபாதையில் மட்டும் காக்கைக் கூட்டம் திரளாகச் சூழ்ந்திருக்கும் காட்சியை நீ கவனிக்கிறாய். ‘தயவுசெய்து அங்கே ஒரு சடலம் இருக்க வேண்டும்,’ என வேண்டிக்கொண்டே அந்தக் காகக் கூட்டத்திற்கு மத்தியில் பாய்ந்திறங்குகிறாய்.

அது ஒரு இறந்த நாய். அற்புதம்.

சாலையின் வளைவில் காவ் காவ்வும் அவனது கூட்டத்தினரும் சற்றும் அக்கறையின்றி வாகனங்களிலிருந்து வீசப்பட்ட குப்பைகளைப் பொறுக்கிக் கொண்டிருக்கின்றனர். பாதசாரிகளும் வாகன ஓட்டிகளும்கூட காகங்களைத் தவிர்த்தபடியே செல்கின்றனர். இதைக் காண்கையில் உனக்குள் ஒரு மனக்கசப்பு ஏற்படுகிறது. இக்காகங்களின் அசட்டுத் தைரியம் அச்சாபத்தை மேலும் மோசமாக்கும் என நீ நம்புகிறாய்.

காவ் காவ் அந்நாயை நோக்கித் தாவி வருகிறான். அது நேற்றிரவு இறந்த ஒரு தெருநாய். கட்டையால் அடித்துக் கொன்றிருக்கிறார்கள் போலும். அதன் கண்களை ஏற்கனவே ஆர்வக்கோளாறு பிடித்த காக்கையொன்று குத்திக் குடைந்தெடுத்திருக்கிறது.

“சாபம் மோசமாக இருக்கிறதா? இந்த நாய் நமக்குத் தேவைப்படுமா?” காவ் காவ் கரைகிறான். மின்னும் கருநிறச் சிறகுகளும் கூரிய நகங்களும் கொண்ட இளைஞன் அவன். புதிதாக நியமிக்கப்பட்ட படைதளபதி. இன்னும் நடைமுறைகளைக் கற்றுக் கொண்டிருக்கிறான்.

அவனது காக்கைப்படை அந்நாயைச் சுற்றிப் பரபரப்புடன் பறக்கின்றன. ஆனால் அடுத்து என்ன செய்வதென்று யாருக்கும் தெரியவில்லை. சாலையோரப் படையினரின் வழக்கம்தான் இது. எக்காலமும் இங்கேயே எளிதாகக் கிடைக்கின்ற குப்பைகளையே தொடர்ந்து உட்கொண்டு வந்ததால் ஏற்பட்ட சோம்பல். சுயமாகச் சிந்திக்காமல் உன்னைப் போன்ற ஒருவரிடமிருந்து கட்டளையை எதிர்ப்பார்த்தே கிடக்கின்றன.

“ஆம், இந்த நாய் நமக்குத் தேவை,” நீ இடித்துரைக்கிறாய். “வேலையைத் தொடங்குங்கள். அருகிலுள்ள பெரிய சாக்கடையைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். அதுதான் குறுக்கு வழி.”

சாக்கடை எனக் கேட்டதுமே காவ் காவ்வின் முகத்தில் சிறு பதற்றம் தோன்றி மறைகிறது.  அவனது குழுவினருக்கும் அதே பதற்றம் இழையோடுவதை நீ உணர்கிறாய். அதைப் பொருட்படுத்தாது தொடர்கிறாய். “சாக்கடையைப் பயன்படுத்துங்கள். ஏதாவது குற்றத்தைப் பார்த்தீர்களா? எங்காவது இரத்தம் சிந்தியதா? குண்டர் கும்பலின் சண்டை எப்படிப் போய்க்கொண்டிருக்கிறது?”

“இரத்தமெல்லாம் சிந்தவில்லை, ஆனால் ஒரு திருட்டு நடந்தது,” தெரிவிக்கிறான் காவ் காவ். “எனக்குத் தெரிந்து குண்டர் கும்பல்களெல்லாம் வடக்கு நோக்கிப் போயிருக்கிறார்கள் என நினைக்கிறேன். இந்தப் பக்கம் யாரையும் பார்க்கவில்லை.”

உனது பெருமூச்சினில் நிம்மதி கலக்கின்றது. எதற்கும் வடக்கில் நோட்டமிடுவது அவசியமென்றும் உனக்கு நீயே நினைவூட்டிக்கொள்கிறாய்.

சில மூடக் காகங்கள் சாலையை மறித்துக்கொண்டிருந்ததனால், ஒரு வாகனத்தின் ஹார்ன் சத்தம் காதைப் பிளக்கின்றது. “இதுங்களுக்கு ஒரு சாவு வரமாட்டேங்குதே!” என்று அந்த ஓட்டுனரின் சாபம் ஹார்னைத் தாண்டி உன் செவிகளில் விழுகிறது. காகங்கள் சிதறிச் செல்கின்றன, நீ வானை நோக்கிப் பறக்கத் தொடங்குகிறாய். காவ் காவ்வும் அவனது படையினரும் மீண்டும் குவிந்துகொண்டு அந்த நாயைக் குதறத் தொடங்கியதை நீ மேலிருந்து காண்கிறாய்.

இங்கு மிகப்பெரிய சிக்கலே வாகனங்களும் ஓட்டுனர்களும்தான்.

காகங்கள் கரையும் சத்தத்திற்கு அடுத்து கிள்ளானை அடையாளப்படுத்துவது வாகனங்களின் ஹார்ன் சத்தம்தான். காகங்களுக்கு வேண்டுமானால் அந்தச் சாபத்தின் தாக்கம் அதிகரிக்கலாம் அல்லது குறையலாம். ஆனால், வாகன ஓட்டுனர்களுக்கு அது என்றென்றும் நிரந்தரம்தான். நெரிசலில் சிக்கும்போது பிசாசைப் போல கத்துவார்கள்; வண்டி நகரும்போது பிசாசைப் போல ஓட்டுவார்கள்.

ரொக் உன்னைப் பள்ளிகளின் சாலைகளுக்கு மேலுள்ள மேகங்களில் பறந்தவாறே சந்திக்கிறான். உன்னிடம் சொல்வதற்கு நிறைய உள்ளதென்று அவனைப் பார்த்தாலே உணர முடிகின்றது. ஆதலால், போர்ட் கிள்ளான் நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள ஒன்பது உயர்நிலைப்பள்ளிகளுள் ஒன்றை நோக்கி அவனை வளைத்துக் கீழே அழைத்துச் செல்கிறாய். அவ்வகையில் பள்ளிகளிலுள்ள கும்பல்களைக் கண்காணிக்கவும் வசதியாக இருக்கும். நீ பள்ளியின் மைதானத்தின் மேலுள்ள சிவப்புக் கூரையில் அமர, ரொக் அருகே அமர்கிறான்.

“ஆறு கார்கள் விபத்துக்குள்ளாகிவிட்டன க்வா,” ரொக் தெரிவிக்கிறான்.

நீ நடுங்குகிறாய். “ஏதேனும் சண்டை? இறப்பு?”

“ஓர் இறப்பு, இரண்டு கைகலப்புகள். Old Town-இல் பயங்கர நெரிசல் வேறு.”

நீ உன் தலையை இறக்கைகளுக்குள் புதைத்துக்கொள்கிறாய்.

“போதுமான உணவு கிடைத்துவிட்டதா?” ரொக் அச்சத்துடன் கேட்கிறான்.

“ஒரே ஒரு நாய்தான்.”

“அது போதுமா?”

திடீரென ஒரு மாணவன் அலறுகிறான்.

நீயும் ரொக்கும் கீழே உள்ள பள்ளி மைதானத்தைப் பார்க்கிறீர்கள். இரண்டு கும்பல்கள் ஒருவரையொருவர் தாக்க முற்படுகின்றனர். சிலர் கைகளில் கட்டைகளையும் மற்றவர்கள் பிளாஸ்டிக் நாற்காலிகளையும் வைத்திருக்கின்றனர். ஒருவன் கையில் பிரம்பை வீசிக்கொண்டு வருகிறான். மற்றவர்களும் நடக்கவிருக்கின்ற சண்டைக்குத் தயார்நிலையில் கைகளை முறுக்கிக்கொண்டிருக்கின்றனர்.

“வாடா!” ஒரு மலாய் சிறுவன் கத்துகிறான். “உங்கப்பன் ஒரு…”

அவன் பேசி முடிப்பதற்குள் எங்கிருந்தோ ஒரு நாற்காலி பறந்து வந்து அவன் முகத்தில் விழுகிறது. அதுதான் சண்டையின் துவக்கமாகிப் போனது. தாங்கள் எதற்குப் பள்ளிக்கு வந்தோமென்பதையே மறந்து மாணவர்கள் கோபத்தில் தகாத வார்த்தைகளில் திட்டிக்கொண்டும், ஆயுதங்களை வைத்து விரட்டிக்கொண்டும் ஆங்காங்கே ஓடிக்கொண்டும் இருந்ததால், அந்த இடமே சற்று நேரத்தில் கலவரத்திற்குள்ளாகிவிட்டது.

நீ ரொக்கின் கேள்விக்குப் பதிலளிக்கிறாய். “இல்லை. ஒரு நாய் நிச்சயம் போதாது.”

“அப்படியென்றால், நாம் மறுபடியும் வேட்டையாடிக் கொல்ல வேண்டுமா?”

“அப்படி ஒன்று நடந்துவிடக் கூடாதென்றுதான் நானும் நினைக்கிறேன். ஆனால், அவசியப்பட்டால் செய்துதான் ஆக வேண்டும். மீண்டுமொரு உணவு போதாமை ஏற்பட்டுவிடக் கூடாது.”

ரொக் வேண்டாவெறுப்பாய்த் தலையசைக்கிறான். “இந்நேரம் உங்கு இருந்திருக்க வேண்டும்,” என்கிறான்.

ரொக்கை கடுமையாகத் திட்டிவிட வேண்டும் என்கிற உணர்வைச் சிரமப்பட்டு அடக்குகிறாய். அவன் ஒன்றுமறியா இளங்காகம். ஆனால், நீயோ வாழ வேண்டிய பல காகங்கள் அச்சாபத்தில் சிக்கி இறந்ததைக் கண்கூடாய்ப் பார்த்திருக்கிறாய். உங்கு உனது நம்பிக்கைக்குரிய இரண்டாம் நிலை தளபதி. உங்குவின் பரிதாபகரமான இறப்பிற்குப் பிறகுதான் ரொக் அப்பதவியில் நியமிக்கப்பட்டிருக்கிறான். ரொக் தன் உள்ளத்தில் தைரியத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். நீ ஏதோ சொல்ல வருகிறாய், அதற்குள் ஒரு காகத்தின் இறக்கைப் படபடப்பு உன் கவனத்தைத் திசை திருப்பிவிட்டது.

ஒரு பெண் காகம் உன்னை நோக்கிப் பறந்து வருகிறது.

“க்வா! க்வா! ஹனுக்கிடம் ஒரு கொலை செய்தி உண்டு!”

“எங்கே?”

“காப்பாரில்! ஹனுக் உங்களை நதிக்கரையோரமாக வந்து சந்திக்கச் சொன்னார்!”

நீயும் ரொக்கும் பார்த்துக்கொள்கிறீர்கள்.

“படையைத் திரட்டி ஹனுக் இருக்கும் இடத்துக்குச் செல்லுங்கள்,” நீ கட்டளையிடுகிறாய். “நான் சுல்தான் அரண்மனையை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு, பிறகு உங்களையெல்லாம் நதிக்கரையில் சந்திக்கிறேன்.”

சுல்தான் அரண்மனை அருகே மேலும் ஒரு வாகன நெரிசலைக் கடந்து பறக்கிறாய். தொலைவிலிருந்தே வாகனங்களின் ஹார்ன் சத்தம் உனது காதுகளை ஒருபக்கம் கிழித்துக் கொண்டிருக்க, காரின் பின்புற விளக்குகளிலிருந்து ஒளிரும் தீவிரமான சிவப்பு ஒளி உனது கண்களைக் கூசச் செய்கிறது. ‘இந்தச் சிவப்பு ஒளியுமே மக்களை ஆத்திரப்படுத்திச் சாபத்திற்குச் சக்தியூட்டுகிறதோ?’ என நீ நினைக்கிறாய்.

கிள்ளான், சிலாங்கூர் மாநிலத்தின் இராஜ நகரமாகவே திகழ்கிறது. அரண்மனை என்றும் போல அமைதியாகவே இருக்கிறது. மலைக்கு மேலிருக்கும் அந்த அரண்மனையைத் தாண்டிப் பறக்கும்போது உனக்குள் ஒருவித நிம்மதி எழுகிறது. ஆனால், மலையடிவாரத்தில் இருப்பதோ புகழ்பெற்ற ‘லிட்டில் இந்தியா’ தெரு. அவ்வழியே பறந்து செல்லும்போது வானம் முழுதும் நிரம்பியிருக்கும் புறாக்கூட்டங்களின் சாம்பல் இறகுகள் உன் கண்களை மறைப்பதாலும், அவைகளின் ‘குதுகுதுக்.. குதுகுதுக்.. குர்ர்’ சத்தமும் உனக்கு ஒவ்வவில்லை. அதனால், நீ உன் இறகுகளாலும் கூரிய நகங்களாலும் அவற்றைத் தள்ளிவிட்டபடியே பறக்கிறாய்.

பம்பாய் நகைக்கடையின் பின்புறத்தில் சில இளம் காகங்கள் ஓர் இறந்த எலியைச் சாக்கடைக்குள் இழுத்துச் செல்ல முயற்சிக்கின்றன. இவை என்னதான் செய்கின்றன என்று அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் சில புறாக்கள் அங்கே வேடிக்கை பார்க்கின்றன. நீ உடனே கீழிறங்கி அக்கண்காணிப்புப் புறாக்களை விரட்டிவிடுகிறாய். முடிந்தவரை சாக்கடையிலிருந்து தள்ளி இருக்க முயற்சித்தாலும், உன்னையே அறியாமல் அதன் விளிம்பில் நின்றுகொண்டிருந்ததால், உள்ளே எட்டிப் பார்க்கிறாய்.

நகரத்தின் சாலைகளுக்கு அடியிலே ஒரு மீட்டருக்கு மேல் நீண்டு செல்கிற ஒரு சிறிய ஓடையைப் போலவே இருக்கிறது. துர்நாற்றத்தைக் கிளப்பிக்கொண்டு கறுப்பு எண்ணெய் கலந்த கழிவு நீர் உள்ளே வழிந்தோடுகிறது. என்னதான் குப்பைகள் அடைத்துக் கொண்டிருந்தாலும், அது எப்படியும் நதியைச் சென்றடைந்துவிடும் என்று உனக்குத் தெரியும். உடனே ஒருவிதமான சிலிர்ப்பு உன்னுடலில் பாய்கிறது. நேரத்தைக் கணிக்க நீ சூரியனைப் பார்க்கிறாய்.

ஐந்து மணி. ஹனுக்கைச் சந்திக்கும் நேரம்.

ஹனுக்கும் நூறு காகங்களும் உனக்காக நதிக்கரையின் வடக்குப் பகுதியில் காத்திருக்கின்றன. அவை சாலையோரச் சிறுவேலிகளிலும் தொலைதொடர்புக் கம்பிகளிலும் அமர்ந்திருக்கின்றன. அவற்றின் கரைகின்ற குரலும், சண்டையிடும் சத்தமும், ஒருவரையொருவர் தள்ளிக்கொள்ளும்போது ஏற்படும் சலசலப்பும் சேர்ந்து செவியைக் கிழிக்கும் அளவுக்கொரு பேரிரைச்சலை ஏற்படுத்துகின்றன. அந்தச் சக்திமிகுந்த சாபம் இவர்களையும் விட்டுவைக்கவில்லை போலும். ஒரு மிக மோசமான நாளில், இரண்டு காகங்கள் ஒருவரையொருவர் கொன்றுவிடும் அளவிற்குச்  சண்டையிட்டதை நீ ஏற்கனவே பார்த்திருக்கிறாய்.

ரொக் அவர்களுடன்தான் இருக்கிறான். அவனுக்கும் ஹனுக்கிற்கும் இடையே நீ பறந்து சென்று அமர்ந்துகொள்கிறாய்.

“நிலவரத்தைத் தெரியப்படுத்துங்கள்,” நீ கேட்கிறாய்.

“கொலைகாரர்கள் பிணத்தை இந்த ஆற்றுப்பக்கமாகக் கொண்டு வருகிறார்கள்,” என்று ஹனுக் தனது முதிர்ந்த சாம்பல் நிற இறகுகளைத் தடவிக்கொடுத்தபடியே கூறுகிறார். “எனது குழுவிலிருந்து இரண்டு பேர் அவர்கள் வருகின்ற லாரியைப் பின்தொடர்ந்துகொண்டே  இருக்கிறார்கள்.”

“இவன், குண்டர் கும்பல் சண்டையில் கொல்லப்பட்டவனா?”

“அப்படித்தான் போலிருக்கின்றது.”

உனக்குள் ஒட்டிக்கொண்டிருந்த நிம்மதியின் கடைசி சுவடும் சாம்பலாய்க் கரைகிறது.

“அதோ வருகிறார்கள்!” கதறுகிறான் ரொக்.

ஓர் அடையாளமற்ற லாரி சாலையை விட்டு விலகி, நதிக்கரையிலுள்ள அடர்ந்த மரங்களும் புதர்களும் சூழ்ந்த காட்டுப் பாதைக்குள் நுழைகிறது. அந்த லாரியின் மேற்பரப்பில் இரண்டு காகங்கள் அமர்ந்திருக்கின்றன. உனது கட்டளைக்கிணங்கி, உனது காகங்கள் அனைத்தும் தத்தம் இடங்களிலிருந்து சலனமற்று எழுந்து, லாரியை நெருங்குகின்றன.

ஒரு மெலிந்த சீன ஆடவன் அந்த லாரியிலிருந்து குதிக்கிறான். உன்னையும் உனது காகத் தோழர்களையும் கவனிக்கிறான். “நாம என்னத்த தூக்கிட்டு வர்றோம்னு இதுங்களுக்குத் தெரிஞ்சிருக்குன்னு நினைக்கிறேன்.. அநியாயத்துக்குப் புத்திசாலிங்களா இருக்கும் போலயே,” என ஹாக்கியன் மொழியில் கூறுகிறான். “ஷூ! போ! இங்கிருந்து போ!” கைகளை வேகமாக அசைக்கிறான்.

“அதுங்களைக் கண்டுக்காதடா, கெடக்குதுங்க.. சீக்கிரம், இதையெல்லாம் உள்ளே போடு,” அவனது நண்பன் கூறுகிறான்.

வந்தவர்கள் சில குப்பை பைகளையும், ஒரு நீளமான சாக்கு மூட்டையையும் தூக்கி அந்தப் பழுப்பு நதியில் எறிவதை நீ கவனிக்கின்றாய். இதை வேறெந்த மனிதர்களும் காணவில்லை. காகங்கள் மட்டுமே அக்காட்சிக்குச் சாட்சிகள்.

“நல்லவேளை ஆற்றில் தூக்கிப் போட முடிவு செய்தார்கள்,” ஹனுக் சொல்கிறார். “ஒருவேளை சென்ற முறையைப் போல் எரித்திருந்தார்களென்றால், மறுபடியும் நாம்தான் தெருவில் திரிகின்ற ஏதாவது ஒரு நாயையோ பூனையையோ கொல்ல வேண்டி வந்திருக்கும். அது அவளுக்கும் பிடிக்காது.”

அந்த ஆட்கள் வந்த லாரியிலேயே செல்கின்றனர்.

“பிணத்தைத் தூக்கிவிடுங்கள்,” நீ கட்டளையிடுகிறாய்.

அந்த மூட்டை தூக்கி வீசப்பட்டபோதே அடியாழத்திற்குச் சென்றுவிட்டது. நிச்சயம் கற்களைக் கொண்டு நிரப்பியிருப்பார்கள். ஆனால், உன் காகப் படையினரில் பலர் சிறந்த முக்குளிப்பு வீரர்கள். அவர்கள் உடனே உள்ளே பாய்ந்து, தங்களது கூரிய நகங்களாலும் அலகுகளாலும் அந்தச் சாக்குப்பையைக் கிழித்துத் திறந்துகொண்டிருக்கின்றனர். ஒரு மணி நேரம் கழித்து, சாக்குப்பை விசாலமாகத் திறக்கப்படுகிறது.

அந்தப் பிணம் ஒருவழியாகச் சாக்குப்பையிலிருந்து விடுதலை கண்டு, வெளியேறி மிதக்கத் தொடங்குகிறது. நீரின் மேற்பரப்புக்குச் சற்று கீழே மிதக்கின்ற அந்தப் பிணத்தை மேலிருந்து பார்த்தால் சரியாகத் தெரியாது. கழுத்து கரகரவென அறுக்கப்பட்டு இறந்த ஓர் ஆணின் உடல் அது.

“பொதுவாக இவ்வளவு எளிதில் மிதக்காதே,” நீ சந்தேகிக்கிறாய்.

“காலையிலேயே கொன்று, வெந்துகிடக்கும் அந்த லாரிக்குள்ளேயே வைத்திருந்தார்கள் அல்லவா?” ஹனுக்கின் அனுபவம் பதிலளிக்கிறது.

நீ உனது காகப்படையினரைச் சில மரக்கட்டைகள், மிதக்கின்ற ஸ்டைரோஃபோம் அல்லது நெகிழிப் பொருள்கள் என எது கிடைத்தாலும் கொண்டு வரச் சொல்கிறாய். அழுக்கடைந்த இந்நதியில் அவையாவுக்கும் பஞ்சமே இல்லை.  அவர்களும் அவற்றை விரைவாகச் சேகரிக்கின்றனர். நீ அந்தப் பொருட்களையெல்லாம் அவ்வுடலுக்குக் கீழே சொருகி, அப்பிணத்தை நதியின் மேற்பரப்பில் மிதக்க வைக்க முயற்சிக்கிறாய்.

இறக்கைகளின் அசைவோடு, தனது வருகையை அறிவித்த திராக்  தனது குழுவுடன் வந்து சேர்ந்துகொள்கிறார். அவரது அலகில் சில இறைச்சித் துண்டுகள் ஒட்டிக் கொண்டிருக்கின்றன. “நான் புறா வேட்டையத் தொடங்கிவிடலாமென நினைத்தேன்,” திராக் சொல்கிறார். “சாபத்தைத் தணியவைக்க முடியாதோ என நினைத்துப் பயந்துவிட்டேன்.”

“அவளுக்கு வேண்டியது இந்தப் பிணம்தான். நாற்பது இறந்த புறாக்கள் அல்ல,” நீ கூறுகிறாய்.

பதினைந்து நிமிட உழைப்புக்குப் பிறகு, ஸ்டைரோஃபோம்களாலான மிதவையின் மேல் அப்பிணம் மிதந்துகொண்டிருக்கிறது. முப்பது காகங்கள் அப்பிணத்தின் மேல் இருபுறமும் அமர்ந்து, வழியில் செல்வோர் யாரும் காணாதபடி மறைக்க முயற்சிக்கின்றனர். நீயும் ரொக்கும் ஆற்றின் நீரோட்டத்தைப் பின்தொடர்கிறீர்கள். திராக்கும் ஹனுக்கும் மேல்நோக்கிப் பறந்து, கழுகுப் பார்வையுடன் கவனிக்கின்றனர்.

அச்சடலப் படகில் மிதந்தவாறே, நீ சூரிய அஸ்தமனத்தைப் பார்க்கிறாய்.

மாலை வானில் சிதறும் இளஞ்சிவப்பு மற்றும் ஊதா நிழல்களின் நடுவே, சூரியன் ஒரு செம்மஞ்சள் தீப்பந்து போல தொங்கிக்கொண்டிருக்கிறது. மேகங்கள் கீழே தாழ்ந்து, மந்தமாக  ஒளிர்கின்றன. அந்நதியின் பழுப்பு நீர், கீழிறங்கி வரும் சூரியக் கதிர்களைத் தங்கத் துகள்களாகப் பிரதிபலிக்கிறது. ஒரு கணம், கிள்ளான் உன்னைப் புன்னகைக்க வைக்கிறது.

முகில் போன்ற காகக்கூட்டம் பிணத்தின் மேலே வட்டமிட்டுப் பறக்கின்றன. பிணத்தின் மீது அமர்ந்திருக்கும் அனைத்து காகங்களின் இறகுகளையும் துடுப்பாக்கித் தண்ணீரில் அடித்து அப்பிணத்தை முன்நகர்த்திச் செல்லுமாறு ரொக் கட்டளையிடுகிறான். நதியோட்டத்திற்கு ஏற்றார்போல, நீயும் முன்னே செல்கிறாய். கிள்ளான் பாலத்திற்கு அடியே பயணிக்கும்போது, மேலே ஆயிரக்கணக்கான கார்களின் ஹார்ன் சத்தம் கேட்கின்றது. அழுக்குநீரில் மிதக்கும் சிதிலங்களிடமிருந்து தற்காத்தவண்ணம் துடுப்பாளர்களுக்குத் திசையும் காட்டி, சடலப் படகை நீ வழிநடத்துகிறாய். உனது கண்கள் குகைவாயிலைத் தேடுகின்றன.

“இடதுபக்கம் திருப்புங்கள்!” குகைவாயிலைக் கண்டவுடன் நீ கரைகிறாய். “இடது பக்கம்! இடது! இடது!”

தென்கரையில், பெரியதோர் குகை போன்ற ஆழமான கால்வாய் உள்ளது. அதன் முகப்பில் உள்ள வட்டமான துவாரத்தின் வழியே குப்பைக்கூளங்களும் அழுக்கடைந்த கரிய நீரும் ஆற்றின் மந்தமான நீரோட்டத்தில் மெதுவாகக் கலக்கின்றன. காகப் படையினரின் கூச்சலின்றி ஒருங்கிணைந்த சிறகுகளின் அசைவுகளால் பிணம் மிக நேர்த்தியாகக் குகைவாயிலை நோக்கி நகர்கிறது. குப்பைகளும் கசடுகளும் குகைவாயிலில் தேங்கியிருப்பதால், பிணத்தை அங்கே ஒதுங்கச் செய்வது எளிதாகிவிட்டது.

இருண்ட ஆழத்திலிருந்து ஏதோ ஒரு காகம் கரையும் சத்தம் மட்டும் மெல்ல எதிரொலிக்கின்றது.

வேறொரு காக்கைக்கூட்டம் வானிலிருந்து சுழன்று வந்து, அக்குகைக்குள் நுழைகின்றன. காவ் காவ்வின் படை அந்தத் தெருநாயின் சினைகளோடு பறந்து வருகின்றன. நீ உனது வேலையிலேயே கவனம் செலுத்துகிறாய். பிணத்தைச் சுற்றி நின்று, அதன் ஆடைகளைப் பிடித்துத் தூக்கிவிடவே அறுபது காகங்கள் தேவைப்படுகின்றன. மிகவும் நிதானமாக, நீயும் உன் படையும் அந்தக் குகையினுள்ளிருக்கும் கழிவுநீர் சுரங்கத்திற்குள் செல்கிறீர்கள்.

சுரங்கத்தின் உட்பகுதியை முற்றிலும் இருள் சூழ்ந்திருக்கிறது. உள்ளே நுழைந்ததும் எண்ணற்ற காகங்களின் கரையும் சத்தம் எதிரொலிக்கின்றது. கிள்ளானின் கால்வாய்களும் சுரங்கங்களும் சற்று சிக்கலானவையே. இருந்தாலும், உனது விசுவாசிகளான காகப் படையினர் இருப்பதால் அந்தப் பயங்கரச் சுமையை அழைத்துக்கொண்டு நீ உள்ளே செல்கிறாய். உனது கண்பார்வை இருட்டிற்குப் பழக்கப்பட்டது என்பதாலும், உனது செவிக்கூர்மை சிறப்பாக இருப்பதாலும் நீ வழிதவறிவிட வாய்ப்பில்லை. வழுக்கலான, ஈரமான அந்த அழுக்குப் பாதையில் நீ அங்குமிங்கும் சறுக்கினாலும், போகும் முழுப்பாதையையும் நீ ஒரே ஜெபத்துடன் கடக்கிறாய், ‘இன்றைய உணவு போதுமானதாக இருக்க வேண்டும்.’

அந்த ஆழ்ந்த குகைக்குள்ளேயே பல மணி நேரம் பயணித்தது போன்ற ஓர் உணர்வு உனக்கு ஏற்படுகிறது.

ஒவ்வொரு சில நூறு மீட்டர்களுக்கும், ஏராளமான வடிகால்களை ஒரே சுரங்கப்பாதையில் ஒன்றிணைக்கும் ஒரு பரந்த இடம் உள்ளது. சில சுற்றுப்புறங்களில் வடிகால்துளைகள் திறந்து விடப்பட்டு ஒருபோதும் மூடப்படாமல் இருப்பதனால், சுரங்கப்பாதையின் இருண்ட மண்டபங்களுக்குள் அவ்வப்போது தெருவிளக்குகளின் ஒளிக்கதிர்கள் பிரகாசிக்கின்றன. இப்போது, மாலை நேரத்தில் அவ்வொளி மங்கியிருந்தாலும், இருண்ட ஆழங்களுக்கு அதுவே சூரியனாகத் திகழ்கின்றது. அந்தப் பிரத்தியேகச் சூரியனின் உதவியுடன் குப்பைகளடைத்த அப்பகுதியில் அழுக்குக் கசடுகளுக்கு மத்தியே ஒரு தட்டையான பாறை தென்படுகிறது.

நீ சடலத்தை அப்பாறையில் ஏற்றி, பின்னர் உனக்கும் அப்பாறைக்குமிடையே நல்ல தூரம் இருப்பதை உறுதி செய்துகொள்கிறாய். சடலத்தின் மீது அமர்ந்திருந்த காகங்கள் அனைத்தும் சட்டெனப் பறந்து சுரங்கங்களின் சுவர்களில் சற்றே உயரமான இடங்களில் அமர்கின்றன. ரொக் மட்டும் உன்னருகே நிற்கிறான்.

காக்கைகளின் கரையும் குரல்கள் ஒலியிழந்து மழுங்கி, நிசப்தம் நிலவுகின்றது.

நீ அந்த நிசப்தத்திற்குள் நின்று காத்துக்கொண்டிருக்கிறாய்.

இருளின் ஆழத்தில், மெல்ல நகர்கிறாள் மஹாகாகம்.

அவள் முன்னோக்கிச் செல்லும்போது, சாக்கடைகளின் சுவர்களைத் தன் விரிந்த இறகுகளால் இழுத்துப் போர்த்துகிறாள். அவளது கரடுமுரடான பாதங்களில் ஒட்டியிருக்கும் வளைந்த ஈட்டிகளைப் போன்ற கடுங்கூரிய நகங்கள் அக்குளிர்ந்த அழுக்குநீரைச் சலசலக்கச் செய்கின்றன. அந்நகங்கள் ஏற்படுத்தும் கிரீச்சொலிகள் சுரங்கமெங்கும் எதிரொலிக்கின்றன. நீ நடுநடுங்கித் தலையைத் தாழ்த்துகிறாய்.

அவளது வடிவம் சிதைந்து வளைந்த தலையும், பால்வெள்ளை கண்களும், வாள் போன்ற அலகும், பட்டமரத்திலிருக்கும் காய்ந்த சருகுகளைப் போன்ற இறகுகளும் அவள் ஒளிக்கதிரின் கீழ் வந்து நிற்கும்போது தெளிவாகத் தெரிகிறது. அவள் தன் கரிய இறக்கைகளை விரிக்க, அவை சுரங்கத்தையே ஒட்டுமொத்தமாக மூடுமளவுக்குப் பரவுகின்றன. எழுந்துவிட்டாள் மஹாகாகம். அவளுக்குப் பசிக்கிறது.

தலையை உயர்த்தி அவள் கரைகிறாள். அது இடியோசையைப் போல் முழங்குகிறது.

கிள்ளானில் வேரூன்றியிருந்த அரை மில்லியன் ஆன்மாக்களின் கோபமும் அவளுடைய குரல்வழியே வெடித்துச் சிதறுகிறது. அவளது கொடூரத் தோற்றத்திற்கடியில், நீயும் உன் தோழர்களும் நடுங்கி ஒதுங்குகிறீர்கள்.

அவள் பல நூற்றாண்டுகளாக இங்கேதான் இருக்கிறாள். அதிகார வெறிகொண்ட இளவரசர்களுக்கிடையே போர்கள் நடத்தப்பட்ட காலத்தில், இரத்தம் சொட்டச் சொட்டப் போரில் இறந்த வீரர்களின் சடலங்களைக் கொண்டுதான் விருந்தருந்தினாள்.

வெகுகாலத்திற்கு முன்பு, அயலகத்து இளவரசர் ஒருவருக்குக் கிள்ளான்வாசி ஒரு துரோகம் இழைத்துவிட்டான். சினங்கொண்ட அந்த இளவரசர், இனிவரும் காலங்களில் கிள்ளானில் என்றென்றும் கலவரங்களும் கொந்தளிப்புமே நிலவட்டும் என்றொரு சாபத்தைப் பிறப்பித்துவிட்டார். கண்ணுக்குத் தெரியாத அந்தச் சூனியக் கட்டுப்பாடு, நகரின் நரம்புகளில் கோபத்தைக் கிளப்பிவிட்டு, எப்போதும் இரத்தம் சிந்தும் பூமியாகக் கிள்ளானை மாற்றிவிட்டது. சில சமயங்களில் அந்தச் சாபம் வலுவிழந்துவிடும். ஆனால், அது மீண்டெழும்போது முன்பைவிடப் பலமடங்கு வலிமையானதாகத்தான் எழும். அந்தக் கணமே மஹாகாகமும் விழித்தெழுகிறாள். மரணமும் படுகொலையும் இந்நகரத்தை எப்போதும் துன்புறுத்துவதை உறுதி செய்வதற்காக, அந்த இளவரசரின் பழிவெறியிலிருந்து பிறந்தவள் தான் இவள்.

நம்பமுடியாத அந்த அழிவுகளின் சாட்சியமாக உயிர்வாழும் கடைசி உயிர்கள் நீங்கள்தான்; இந்தக் கோரத்தாண்டவம் இடம்பெறாமல் முடிந்தவரை தடுக்க, அவளுக்கும் அழிவுக்கும் இடையிலான தூதுவர்களாக நிற்பவர்கள் நீங்கள்தான் – கிள்ளானின் காகங்கள்.

காவ் காவ் தான் முதலில் முன்வருகிறான். அந்த இறந்த தெருநாயின் உள்ளுறுப்புகளைக் கொண்டு வந்து அப்பாறையின்முன் வைக்கிறான். அவனுடைய குழுவினர் அந்த நாயின் சிதறிய மீத உடல்பாகங்களைப் படைக்கின்றனர். திராக்கும் அவனது படையினரும் சில துண்டு இறைச்சிகளையும் அழுகிய பன்றியிறைச்சியையும் கொண்டு வருகின்றனர். இளங்காகங்கள் இறந்த எலியைத் தெருநாயருகே வைக்கின்றன.

மஹாகாகம் இவையனைத்தையும் நுகர்கிறாள். ஆனால், அவளது இராட்சதக் கண்கள் உன்னைப் பார்க்கின்றன.

நீ தொண்டையைச் செருமிக்கொள்கிறாய். “துவாங்கு, சாபத்தால் கொட்டிய குருதியின் சான்று இதோ. உங்கள் விருந்தை ஏற்றுக்கொண்டு, உண்டு திருப்தியடைவீராக.”

ஒரு கணம், உனது நினைவில் உங்கு வந்து நிற்கிறான். ‘தயவுசெய்து, திருப்தியடையுங்கள் துவாங்கு…’ என நீ உன்னுள் பிரார்த்திக்கிறாய்.

அவள் அப்பிணத்தை நோக்கித் தன் தலையைச் சாய்க்கிறாள். தனது நகத்தினால் அவ்வுடலைக் குடைந்து ஆராய்கிறாள். அந்த ஆடவனின் தலையைத் தனது பூதாகரமான கூரிய அலகில் வாட்டமாகப் பிடித்து, ஒரே இழுப்பில் அதை உடைத்திழுத்து விழுங்குகிறாள். தனது கரிய இறக்கைகளை விரித்து, சுரங்கமே கதிகலங்கும் அளவிற்குக் “கா…….!” எனக் கரைத்துத் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறாள்.

உனது உடல் மிரள்கிறது. இன்று அவள் உன் தோழர்கள் யாரையும் சாப்பிடமாட்டாள்.

நீ கிள்ளானில் வசிக்கும் ஒரு காகம். மனிதர்கள் உன்னைக் கண்டாலே சாபமிடுகிறார்கள்; கற்களை வீசி எறிகிறார்கள்; நகராட்சியை அழைத்துச் சுட்டுத்தள்ளவும் சொல்கிறார்கள். என்றாவது மனிதர்கள் காகங்களை முழுமையாகத் துரத்திவிடும் நாள் வரக்கூடும் என்று நீ அஞ்சுகிறாய். அந்நாளில், பசிகொண்டு விழித்தெழுவாள் அவர்களது காலடியில் புதைந்திருக்கும் மஹாகாகம்.

 

தமிழாக்கம் : பிருத்விராஜூ
(Klang Crow from The Big Book of Malaysian Horror Stories)

1 comment for “கிள்ளான் காகம்

  1. October 11, 2025 at 9:16 am

    கொஞ்ச நேரம் நான் காகமாக பிரவேசித்தேன்… நுணுக்கமான மொழிபெயர்ப்பு… சில கணங்கள்… கிள்ளான் ஒரு சூன்ய நகரமாக மாறியது…

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...