
“எங்கே சென்றிருந்தாய் மகதலா? நாம் இரவுணவுக்குச் செல்ல வேண்டும். அங்கே சீடர்களும் நமக்காக காத்திருப்பார்கள்.”
இந்த அழகான மாலை பொழுதில் எருசலேம் நகரமே பாஸ்கா திருவிழாவிற்காகத் தயாராகிக் கொண்டிருக்கிறது. எகிப்தில் அடிமைகளாயிருந்த இஸ்ரயேல் மக்களை மோசே வழியாக கடவுள் மீட்ட நாளையே பாஸ்கா திருவிழாவாகக் இஸ்ரயேல் மக்கள் கொண்டாடுகிறார்கள். இன்று இரவு எருசலேம் நகர மக்கள் அனைவரும் ஒரு ஆட்டுக்குட்டியைக் கொன்று அதன் இரத்ததை வீட்டின் தலைவாசலில் பூசிவிட்டு அதை சமைத்து குடும்பமாக அமர்ந்து உண்பார்கள். சீடர்களும் என் அறிவுறுத்தலின் படி கெதரோன் நீரோடையின் அருகிலுள்ள ஒரு வீட்டின் முதல் தளத்தில் பாஸ்கா விழாவிற்கான ஆயத்தங்களைச் செய்து கொண்டிருப்பார்கள். அந்த வீட்டின் உரிமையாளர் என் நண்பர், என் கருத்துக்களோடு உடன்படுபவர். என்னைப் போலவே யூத சமுதாயத்தில் நிறைந்திருக்கும் மூட நம்பிக்கைகளையும், ஏற்றத் தாழ்வுகளையும் களைய வேண்டுமென விரும்புபவர். பாஸ்கா விழாவைக் கொண்டாட ஒரு இடம் வேண்டுமென நான் அவரிடம் கேட்டபோது, “என் வீட்டிற்கு வாருங்கள். எல்லா ஏற்பாடுகளையும் செய்து தருகிறேன்” எனச் சொன்னதோடு நின்றுவிடாமல் வீட்டின் முதல் தளத்தில் ஒரு பெரிய அறையை ஒதுக்கியிருப்பதாகவும், நான் சீடர்களுடன் அமர்ந்து உணவு உண்பதற்காக மேசையையும், இருக்கைகளையும் கூட வாங்கி இட்டிருப்பதாகவும் இன்று காலையில் சந்தித்தபோது யோவான் சொன்னான். அவருக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இவரைப் போல இன்னும் எத்தனையோ பேருக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். ஏன் இந்த மகதலா?கலிலியோவிலுள்ள செல்வந்தமான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பெண் அவளின் கணவனை இழந்து விதவையான பிறகு என்னையே பின் தொடர்கிறாள். எனக்காகவும், என் சீடர்களுக்காகவும் அவள் சொத்தின் பெரும் பகுதியை இழந்து இப்போது இந்தச் சிறிய வீட்டில் குடியிருக்கிறாள். என்மேல் உள்ள அவள் பிரியத்திற்கு இணை இலக்கை நோக்கி ஒருமித்து செல்லும் எங்கள் வாழ்க்கை பயணம் மட்டுமே காரணம் என்று என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தனிமையில் நாங்கள் இருவரும் அந்தரங்கமாக உணரும் ஒன்று எங்களிடையே உள்ளது. அது இன்னும் ஒரு வார்த்தையாக உருவெடுக்காமல் என்னையும் அவளையும் உணர்வால் பிணைத்துள்ளது. எங்கே சென்றாள் அவள்? பாஸ்கா விழாவிற்குத் தேவையான பொருட்களை வாங்கி வருவதாகச் சொல்லிச் சென்றாள். இந்த நகரின் யூத மதத் தலைவர்கள் நான் மக்களிடையே தவறான கருத்துக்களைப் பரப்புவதாக என்னைக் கைது செய்ய தேடிக் கொண்டிருக்கிறார்கள். எனவே பெண் போல வேடமிட்டு சீடர்கள் இருக்கும் வீட்டிற்குச் செல்ல மகதலாவின் உதவி எனக்குத் தேவைப்படுகிறது. அதற்காகத்தான் நான் காத்திருக்கிறேன். அப்போது, நான் எதிர்பாராத விதமாக வீட்டினுள் வேகமாக நுழைந்த மகதலா, என் கேள்வியை எதிர்கொண்டு அதை பொருட்படுத்தாமல் கதவைத் தாழிட்டுவிட்டு, “ரபி, இன்று நீங்கள் அங்குச் செல்ல வேண்டாம்,” என்றாள்.
“ஏன் மகதலா? நீ ஏன் பதற்றமாக உள்ளாய்? இந்த இருக்கையில் அமர்ந்து சிறிது இளைப்பாறி கொள். உன் பதற்றம் தணியட்டும். பின் என்னவென்று தெளிவாகச் சொல்” என்றவாறு அவள் கைகளைப் பற்றி என் முன்னால் இருந்த இருக்கையில் அமர வைத்தேன். அவள் அமர்ந்தபோது, அந்தப் பழைய இருக்கையின் கால்கள் மெல்ல அசைந்து ஒலியெழுப்பவே, “இந்த இருக்கையை நாளை நான் சரிசெய்து தருகிறேன். அப்படியாவது நான் தச்சனின் மகன்தான் என்பதை உன்னிடம் நிரூபிக்க முடிகிறதா எனப் பார்க்கிறேன்” என்று சொல்லிச் சிரித்து அவளை இலகுவாக்க முயன்றேன். ஆனால், அவள் நான் சொன்னதைப் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. தணியாத பதற்றத்துடன் வீட்டினுள் அங்குமிங்கும் பார்த்துக் கொண்டே, “அதற்கெல்லாம் நேரமில்லை. நாம் இங்கிருந்து உடனடியாகச் சென்றாக வேண்டும்” எனச் சொன்னபோது அவளின் குரல் மூன்றாம் நபர் கேட்டுவிடக் கூடாத கவனத்துடன் மென் காற்றின் ஓசையாக ஒலித்தது.
“ஆம், அதற்காகத்தானே நான் காத்திருக்கிறேன். நாம் உடனடியாக சீடர்கள் தங்கியிருக்கும் வீட்டிற்குச் சென்றாக வேண்டும். இப்போதே மிகவும் தாமதமாகிவிட்டது.”
“இல்லை. இந்த நகரை விட்டே நீங்கள் வெளியேற வேண்டும்”
“அது எப்படிச் சாத்தியம். பாஸ்கா விழாவின் நாளில் நகரை விட்டு யாரும் வெளியேறக் கூடாது என்பது சட்டமல்லவா? நகரின் எல்லைகளில் வீரர்கள் காவலிருப்பார்கள். அவர்களை மீறி வெளியேற நினைத்தால் நிச்சயமாக கைது செய்யப்படுவோம். இது நீ அறியாததா என்ன?” என் பதிலைக் கேட்டதும் அவள் முகம் பனி போல உறைந்து வெளறி விட்டது.
“ஆம். இதை எப்படி நான் மறந்தேன்?”
“ஏனெனில் நீ பதற்றமாக உள்ளாய், நாம் பதற்றபடும் நேரங்களில் அடிப்படையான விஷயங்களைக் கூட மிக எளிதாக மறந்து விடுவோம்”.
“நான் ஒரு முட்டாள். இந்த நம்பிக்கையிலா உங்களிடம் ஓடி வந்தேன்” எனச் சொல்லி அவள் கைகளால் முகத்தை மறைத்து மடியில் குப்புற கவிழ்ந்து அழ ஆரம்பித்து விட்டாள். காரணம் என்னதென்று தெரியாமல் ஆண்களால் பெண்களைத் துன்பத்தில் இருந்து தேற்ற முடியாது. இன்று காலை கூட வேறொரு தருணத்தில் அவள் அழுதபோது எளிதாகத் தேற்றி விட்டேன். ஏனெனில் இருவருமே அந்தத் தருணத்தின் மனநிலையில் இருந்தோம். ஆனால் இப்போது அவள் அஞ்சியிருக்கிறாள், நான் குழம்பியிருக்கிறேன். என் அருகில் இருந்தும் அவள் மனம் நான் நெருங்க முடியாத தூரத்தில் இருக்கிறது. அவள் மனதை என்னிடம் இழுத்து வர வேண்டும் அதற்குக் கெஞ்சுவதை தவிர வேறு வழியில்லை.
“மகதலா, ஏன் அழுகிறாய்? சொல் மகதலா” என அவள் அருகில் முழங்காலிட்டு அவள் தலையை ஆதூரமாகத் தடவிக் கொண்டே கேட்டபோதும் அவள் அழுவதை நிறுத்தவில்லை. இந்தச் சமயத்தில் இவள் என்னை வெறுப்பூட்டுகிறாள்.
“மகதலா, நீ என்ன செய்தி அறிந்தாய்? அழுகையை நிறுத்திவிட்டு என்னவென்று சொல்” “நீங்கள் எப்படியேனும் இந்நகரை விட்டு வெளியேற வேண்டும்” என்ற அவளின் பதிலால் நான் பொறுமையிழந்தேன். “நான் ஏன் வெளியேற வேண்டும்? அதற்கான காரணம் என்ன? அர்த்தமில்லாமல் ஏன் இப்படி உளரிக் கொண்டிருக்கிறாய்?” என் கேள்வியில் இருந்த கோவத்தால் அவள் சீண்டபட்டு சட்டென தலையை உயர்த்தி, “ஏனெனில் உங்களைக் காட்டிக் கொடுக்க போகிறார்கள்.”அவளின் பதில் சிறு சலனத்தை அளித்தாலும் அதன் சாத்தியமின்மையை உணர்ந்து சிரித்து விட்டேன்.
“இப்போதுதான் நீ சரியாக உளறுகிறாய் மகதலா. என்னை யாரால் காட்டிக்கொடுக்க முடியும். இந்நகரின் மதத்தலைவர்களுக்கோ, ஆட்சியாளர்களுக்கோ என்னை யாரென்று தெரியாதே! நான் ஏழை எளிய மக்களிடம் மலைகளிலும், பாலைகளிலும் கடற்கரையோரங்களிலும் சீடர்களின் மத்தியில் மாறுவேடமிட்டு அமர்ந்தே பேசியிருக்கிறேன். நானே உண்மையான மெசியா என்று அவர்கள் நம்புகிறார்கள். அவர்களின் நம்பிக்கை பெரிது. நீ ஏதோ தவறான தகவலால் அச்சமடைந்திருக்கிறாய். பயப்படாதே”
“இல்லை ரபி, சரியான தகவல்தான். பாஸ்கா விழாவிற்காக பொருட்களை வாங்க சென்ற வழியில் இரு காவல் வீரர்கள் பேசிக்கொண்டதைக் காதால் கேட்டேன். அவர்களை எனக்குத் தெரியும். தலைமை குருவின் வீட்டில் காவலிருப்பவர்கள். நாசரேத் ஊரானாகிய இயேசுவைக் காட்டிக்கொடுக்க அவரின் சீடர்களில் ஒருவன் 30 வெள்ளி காசுகள் சன்மானமாக பெற்றுக்கொண்டான் எனப் பேசிக்கொண்டார்கள்” அவளின் பதில் தீர்க்கமாக இருந்தது. இப்போது அவள் அழவில்லை.
நான் எழுந்து அச்சிறுவீட்டின் சாளரம் அருகே சென்று வானில் தெரிந்த தேய்பிறை நிலவைப் பார்த்துக் கொண்டே, “என் சீடர்களில் ஒருவனா?” அது யார் எனக் கேட்கும் தைரியம் ஏழாத என் குரலைக் கேட்ட அவள்,“ஆம், ஆனால் யாரென்று எனக்குத் தெரியாது” என்றாள். என்னால் அவளைத் திரும்பி நோக்க முடியவில்லை. வேறந்த கேள்வியும் கேட்க துணியவில்லை. கோவேறு கழுதை ஏறி வந்த தோற்ற அரசன் போல நான் நின்றிருந்தேன். என்மேல் ஆழமான பிரியமும், நம்பிக்கையும் வைத்திருக்கும் இவள் முன் தோற்று நிற்பதை நான் விரும்பவில்லை.
“நான் சீடர்களிடம் செல்லதான் போகிறேன்”
“ஆம்!!! நான் அறிவேன். என் பணி என்ன?”
“என் அன்னையிடம் செல். ஒருவேளை நான் காட்டிக் கொடுக்கப்பட்டால் அவளுக்குத் துணையாயிரு”.
2
நான் வீரன் அல்ல. உயர்குடியில் பிறந்தவன் அல்ல. இவர்கள் நினைப்பது போல கடவுளின் மகனோ அல்லது மெசியாவோ அல்ல. எளிய தச்சனின் மகன். இந்த உலகம் என்னை வெறுப்பூட்டியது. மனிதனின் பேராசைகளும், சுயநலங்களும் எனக்குள் அச்சத்தை ஏற்படுத்தின. சமுதாயத்தின் ஏற்ற தாழ்வுகளும் அவலங்களும் என்னைத் தனிமையில் ஆழ்த்தின. பலமுறை மரணத்தின் வாசலில் நான் தயங்கி நின்றதுண்டு. ஏனெனில் இத்தனை புண்களையும், வலிகளையும் தாங்கிக் கொண்டு மனித இனம் இவ்வுலகில் நீடித்து வாழ விரும்புகிறதென்றால் அதற்கு அடிப்படையான ஒன்று மனிதனிடம் இருந்தாக வேண்டும். அதை அறிந்து கொள்ள மனிதர்களிடமும் சமூகத்திடமும் நெருங்கி சென்றாலொழிய என்னால் அறிய முடியாது என்பதை அறிந்தேன். வாழ்வில் நான் அடைவதற்காக ஏதோவொன்று மீதம் உள்ளது என்ற எண்ணத்துடனேயே நாடோடியாக பல தேசங்களில் சுற்றியலைந்தேன். உயர்குடியில் பிறந்தவர்கள், செல்வந்தர்கள், ஏழை எளிய மக்கள், தாழ்த்தப்பட்டவர்கள், துறவிகள் எனப் பலரைச் சந்தித்தேன். அனைவரிடமும் தங்கள் வாழ்வைப் பற்றிய கனவு இருந்தது. அந்தக் கனவை அடையும் முயற்சியில் ஒருவரையொருவர் பொய் சொல்லி ஏமாற்றுகிறார்கள், வெறுக்கிறார்கள், கொலையும் கூட செய்கிறார்கள். ஆனால், தன் கனவுகளையும் ஆசைகளையும் துறந்துவிட்டு ஒரு கல் போல மனிதனால் வாழ முடியாது. அவன் இன்பத்தை நாடுகிறவன். இன்பத்தை உணர வேண்டும் என்பதற்காகவே துன்பத்தை விரும்புகிறவன். எல்லாவற்றையும் துறந்து சென்று இறுதியில் எதையும் அடைய முடியாமலானால் ஏற்படும் விரக்தியை எவ்வாறு துறப்பது? துறவு என்பது மரத்திலிருந்து முறிந்து விழும் கிளையைப் போல அல்லாமல், பழுத்து விழும் இலையைப் போல தானாக நிகழ வேண்டும். அதற்கு ஒருவன் இவ்வுலகின் இன்பங்களைத் துய்த்திருக்க வேண்டும். துய்க்காத ஒன்றைத் துறக்க யாராலும் இயலுமா?
நான் குழம்பியிருந்தேன். நான் கற்ற தத்துவங்களினாலும், என் சிந்தனைகளாலும் அழைக்கழிக்கபட்டேன். நான் தேடிச் சென்றவர்கள் அனைவருமே எனக்கு ஏமாற்றத்தையே அளித்தனர். அவர்களின் கருத்துக்கள் எல்லாமே மட்கிக் கொண்டிருக்கும் எலும்புகள் போல கொஞ்சம் இறுக்கிப் பிடித்ததும் பொடிந்து காற்றில் கரைந்து போயின. நான் ஆர்வமிழந்து எந்த இலக்கும் இல்லாமல் கால் போன போக்கில் பயணித்துக் கொண்டிருந்தேன். என்னை அலைக்கழிக்கும் கேள்விகளுக்கான விடைகள் எங்கோ தூரத்தில் மறைபொருளாக இருப்பது போலவும் நான் இருளில் நின்று கை துழாவுவது போலவுமே எனக்குத் தோன்றியது. நான் தனித்து நிற்பது போலவும் என்னைச் சூழ்ந்திருக்கும் இருளில் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து போவது போலவுமே உணர்ந்தேன்.
அந்த இருளே இப்போதும் என்னைச் சூழ்ந்திருக்கிறது. இரக்கமற்ற, கொடுமையான, வேதனைகள் நிறைந்த இருள். மகதலா அன்னையிடம் சென்றுவிட்டாள். இப்போது என்னால் கண்ணீர் வடிக்க முடியும். என் சீடர்களில் ஒருவனே என்னைக் காட்டிக்கொடுக்க போகிறான் என்பது அதிர்ச்சியாகவோ ஏமாற்றமாகவோ இல்லாமல் என்னை மிகவும் மனம் கலங்க வைக்கிறது. ஆனால் இன்றிரவு என்னால் அவர்களைத் தவிர்க்க முடியாது. அவர்களிடமிருந்து என்னால் ஓடி ஒளியவும் முடியாது. அது என் தோல்வி மட்டுமல்ல, நான் அடைந்த ஞானத்தின் தோல்வி என்றே ஆகும். நான் சென்று அவர்களைச் சந்திக்கப் போகிறேன். ஒவ்வொருவரையும் கட்டியணைத்து வாழ்த்து சொல்ல போகிறேன். ஒருவேளை என்னைக் காட்டிக்கொடுப்பவனை நான் அடையாளம் காணலாம். அப்படி இல்லையென்றாலும் என்னைக் கண்ட பிறகு அவன் மனம் திரும்பலாம். வீடுகளில் வெட்டபட்ட ஆடுகளின் இரத்தம் சிதறிக் கிடக்கும் சாலையில் ஏதோ நம்பிக்கையில் தனியாக நடந்து செல்கிறேன். சமைக்கபடும் ஆட்டிறைச்சியின் மனம் காற்றில் நிறைந்திருக்கிறது. பூட்டப்பட்டிருக்கும் எல்லா வீடுகளிலிருந்தும் சிரிப்பொலிகள் கேட்கின்றன. பாஸ்கா விழா என்பது வெற்றியின் கொண்டாட்டம். விடுதலையின் நிம்மதி.
3
கெதரோன் நீரோடையின் கரையில் சீடர்கள் தங்கியிருந்த வீட்டின் கதவை மும்முறை விட்டு விட்டு நான் தட்டியபோது யோவான் தான் கதவைத் திறந்தான். என் அன்பிற்குரியவன். ஒரு நாய்க்குட்டி போல என்னைப் பின்தொடர்பவன். சீமோன் பேதுரு சிறிது பின்னால் நின்றிருந்தான். மற்ற சீடர்கள் பேசிக்கொண்டிருக்கும் ஒலி மேல்தளத்திலிருந்து கேட்டுக்கொண்டிருந்தது. வீட்டின் உரிமையாளர் வந்து என்னைக் கட்டியணைத்து வாழ்த்து சொன்னபோது நான் சீமோனின் கண்களைப் பார்த்தேன். அதில் எப்போதுமே இருக்கும் பணிவும் விலக்கமுமே இருந்தது. அவன் என்னைப் பார்த்து மெலிதாகத் தலையசைத்துச் சிரித்தான். ஒரு குழந்தையைப் போல என்னை ஒட்டி நின்றிருந்த யோவான் பூட்டபட்ட வீட்டின் கதவைப் பார்த்து, “போதகரே, மகதலா எங்கே?” எனக் கேட்டான். நான், “அவள் அன்னையிடம் செல்ல வேண்டியிருந்ததால் வரவில்லை” என்று சொல்லிவிட்டு மேல்தளத்திற்குச் செல்ல படியை நோக்கிச் சென்றேன்.
சீமோன், “போதகரே, உங்கள் பாதங்களில் இரத்தக்கறை இருக்கிறது. நான் அதை கழுவி விடுகிறேன்” என்றவாறே அருகில் வந்து என் காலணிகளைக் கழற்ற முயன்றான். நான் அவனைத் தடுத்து, “இல்லை சீமோனே, இன்று நான் தான் உங்கள் பாதங்களைக் கழுவ வேண்டும்” என்றபோதே ஏன் அவ்வாறு சொன்னேன் என்ற வியப்பு ஏற்பட்டது. ஏனெனில் அதற்கு முன்னால் அப்படியொரு எண்ணமே என் மனதில் இல்லை. அவன் நான் சொன்னதைக் கேட்டு, “நீங்கள் எங்கள் பாதங்களைக் கழுவுவதா? அதற்கு நான் சம்மதிக்க மாட்டேன்” என்றான்.
“ஏன்? நான் உங்கள் பாதங்களைக் கழுவ கூடாதா?நான் உங்கள் பாதங்களைக் கழுவுகிறேன் என்றால் நீங்களும் ஒருவரின் மற்றவரின் பாதங்களைக் கழுவ கடமைபட்டிருக்கிறீர்கள். கீழிருப்பவனுக்குப் பணிவிடை செய்வதே மேலிருப்பவனின் கடமை என்பதை இச்செயல் மூலம் புரிந்து கொள்ளுங்கள்” என்றேன்.
அவன் மனம் இணங்காமல், “இல்லை போதகரே, என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை” என்றான்.
நான் அவன் அருகில் சென்று, அவன் கண்களைப் பார்த்து, “இன்று உன் பாதங்களைக் கழுவ நீ சம்மதிக்கவில்லை என்றால் இனிமேல் உனக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லை” என்று சொல்லிவிட்டு சென்று என் பாதங்களைக் கழுவினேன். யோவானும் வீட்டின் உரிமையாளரும் என்னையே பார்த்து கொண்டிருந்தனர். சீமோன் தலைகுனிந்து நின்றிருந்தான். பாதங்களைக் கழுவிவிட்டு வேகமாகப் படியேறி மேல்தளத்திற்குச் சென்றேன். யோவான் சீமோனை ஒருமுறை பார்த்துவிட்டு என் பின்னால் வந்தான். சீமோன் கடைசியாக வர வீட்டின் உரிமையாளர் கீழேயே தங்கிவிட்டார்.
நான் மேலே சென்றபோது அதுவரையில் பேசிக்கொண்டிருந்த சீடர்கள் அமைதியாகி ஒவ்வொருவராக வந்து எனக்கு வாழ்த்து சொன்னார்கள். நான் அவர்களின் கண்களையே பார்த்தேன். அதில் ஏதேனும் ஒளிந்திருக்கிறதா எனக் காண முயன்றேன். அவர்களின் சிரிப்புகளில், தொடுகைகளில் ஏதேனும் கள்ளம் இருக்கிறதா என உணர முயன்றேன். இவர்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுக்கப் போகிறான். அவர்களுக்கு மறுவாழ்த்துரைக்க என்னால் முடியவில்லை. அனைவரும் வாழ்த்தி முடித்ததும் நான் அமைதியாகச் சென்று அந்த அறையில் இடப்பட்டிருந்த நீள்வட்ட மேசையின் குறுகிய பகுதியில் இருந்த இருக்கையில் அமர்ந்தேன். என் எதிரே அந்த மேசையின் இன்னொரு குறுகிய முனை திறந்திருந்தது. சீடர்கள் இருப்பக்கமும் வரிசையாக அமர்ந்திருக்க யோவான் என் இடப்புறமும், சீமோன் என் வலப்புறமும் அமர்ந்தனர்.
நான் தலைகுனிந்திருந்தேன். என் சந்தேகம் வழியாக அவர்களின் கண்களை ஊடுருவி மனதை அறிய முடியாது என அறிவேன். நீண்டு வளர்ந்திருந்த தலை முடி என முகத்தை மறைத்திருக்க மனமோ பலவாறாக பிரியும் பாதையில் தொலைந்து போன ஆட்டைத் தேடி எவ்வழி செல்வதென தெரியாமல் திணறும் மேய்ப்பனைப் போல தவித்துக் கொண்டிருந்தது. அறை அமைதியாக இருக்க, உணவு தயாரிக்கும் ஒலி மட்டும் கீழிருந்து கேட்டுக் கொண்டிருந்தது. நீண்ட நேரம் இவ்வாறு அமர்ந்திருக்க முடியாது என்பதை உணர்ந்த நான் யோவானை திரும்பி பார்த்தேன். அவன் புரிந்து கொண்டு எழுந்து சென்று ஒரு பாத்திரத்தில் தண்ணீரும், துணியும் எடுத்து வந்து எனக்கு முன் மேசையின் அடியில் வைத்தான். நான் எழுந்தேன். தலைகுனிந்தவாறே மேசையைச் சுற்றி நடந்து அதன் திறந்திருந்த முனை வழியாக உள்நுழைந்து தண்ணீர் இருந்த பாத்திரத்தை எடுத்துக் கொண்டு சீமோன் முன்பாக சென்று முழங்காலிட்டு அமர்ந்தேன். என் அருகில் இருந்ததால் அது சீமோன் என்று நான் அறிந்திருந்தேன். ஆனால் அதுவரையிலும் என் சீடர்களின் பாதங்களை நான் கண்டதேயில்லை. என் கைகளில் அவன் பாதங்களை ஏந்திய போது அவனிடம் ஏற்பட்ட கூச்சவுணர்ச்சியால் அவன் பாதங்கள் இறுகின. பாத்திரத்திலிருந்த தண்ணீரை அவன் பாதங்களில் ஊற்றி கழுவி துணியால் துடைத்து முத்தமிட்டபோது நடுங்கிய அவன் பாதங்களால் அவன் அழுகிறான் என ஊகித்துக் கொண்டேன். ஆனாலும் நிமிர்ந்து பார்க்காமல் அடுத்த சீடனிடம் நகர்ந்தேன். அது தோமா என்பதை அவன் பாதங்களைக் கொண்டே என்னால் அறிய முடிந்தது. அது எவ்வாறென என்னால் விளக்க முடியவில்லை ஆனால் நாம் அறியாமலே நாம் உள்ளுணர்வு நமக்கு நெருக்கமானவர்களின் அங்க அடையாளங்களை மூளைக்குள் தகவல்களாக சேர்த்து வைக்கிறது போலும்.
“கட்டை விரலுக்குச் சம நீளமுள்ள நீள்விரலும் பரந்து நீண்ட பாதங்கள் உடையவன் தோமா. கட்டை விரலை விட நீளம் குறைவுள்ள நீள்விரலும் விரல்களின் விளிம்பில் வளைந்த நகங்களை உடையவன் யாக்கோபு. கட்டை விரலை விட சிறிது நீளமான நீள்விரலும் குறுகிய பாதங்களை உடையவன் திமொத்தியு” என என்னை அறியாமலே என் மனம் பாதங்களின் வழியாக சீடர்களை அடையாளம் கண்டுகொண்டிருந்தது. இன்று காலை முதல் அவர்கள் எங்கும் வெளியில் செல்லவில்லை, உணவுக்கு முன் யூதர்கள் கால்களைக் கழுவுவதும் உண்டு என்பதால் அனைவரின் பாதங்களும் தூய்மையாகவே இருந்தன. நான் ஒவ்வொருவரின் பாதங்களாகக் கழுவிக் கொண்டிருந்தேன். எப்போதுமே பணிவிடை செய்வது நம் மனதை இலகுவாக்குகிறது. நமக்குள் இருக்கும் கனிவை வெளிக்கொணர்கிறது. இப்போது என்னைக் காட்டிக்கொடுக்க போகிறவன் யாரென நான் அறிந்தால் நிச்சயமாக என்னால் அவனை மன்னிக்க முடியும் என்ற எண்ணத்துடனேயே நான் அடுத்த சீடனிடம் நகர்ந்த போது என் முன்பிருந்தவை யூதாசின் பாதங்கள். நடுவிலிருந்து நீள்வெட்டாக இரண்டாக பிளந்தது போன்ற நகங்களை உடைய கட்டைவிரலும் அதற்குச் சமமான நீள் விரலும் கொண்டு படகின் முன்முனை போல நீண்டிருப்பவை அவன் பாதங்கள். அவை அழுக்காயிருந்தன. காய்ந்த இரத்தக் கறையை அவன் பாதங்களில் கண்டபோது என இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது. நாம் செல்லும் இடங்களின் தடயங்கள் எப்போதும் நம் பாதங்களிலிருக்கும். ஆனால் எளிதாக நாம் அவற்றை மறந்து விடுகிறோம். தற்செயலாக மரணத்திலிருந்து தப்பித்தவன் போல என் உடல் நடுங்கியது. அவன் பாதங்களைக் கழுவி துணியால் துடைத்து முத்தமிட்டு விட்டு நிமிர்ந்து பார்த்தபோது, அவன் புன்னகையில் இருந்த நேசத்தால் நான் தடுமாறினேன். ஈரத்தால் மினுங்கும் தரையைப் போல ஒளிர்ந்த அவன் கண்களில் இருந்த பரிவால் நான் துண்டாடப்பட்டேன். சில சமயங்களில் நாம் காரணம் இல்லாமல் செய்யும் செயல்களுக்கும் பின்விளைவுகள் இருக்கத்தான் செய்கின்றன.
4
சீடர்களின் பாதங்களைக் கழுவிய பிறகு என மனம் அமைதியால் நிறைந்திருந்தது. ஒரு புதிருக்கான விடையைக் கண்டுபிடித்த பிறகான நிறைவு என்னிடம் இருந்தது. இனி நான் செய்வதற்கு ஒன்றுமில்லை. அவன் பாதையைத் தேர்வு செய்துவிட்டான், அதில் செல்வதற்கான உரிமை அவனுக்கு இருக்கிறது. அவனின் முடிவை மாற்ற செய்யுமளவுக்கு என்னிடம் அதிகாரம் இல்லை. இது என் இயலாமையினாலோ அல்லது தோல்வியினாலோ அல்ல. ஒருவன் அவனாக உணர்ந்து மனம் திரும்பினாலொழிய வேறு யாராலும் அவனை மாற்ற முடியாது என்பதே என் எண்ணம். ஆனால் இப்போது நான் இவர்களிடம் பேச விரும்புகிறேன். இவர்களிடம் சொல்வதற்கு இதுவரையில் யாரிடமும் சொல்லாத ஒரு கதை என்னிடம் உள்ளது. ஒருவேளை இதுவே என் இறுதி இரவாக இருக்கலாம். எனவே “என் அன்பு சீடர்களே, நான் உங்களிடம் ஒரு கதை சொல்ல ஆசைபடுகிறேன்” என நான் சொன்னதும் இராணுவக் கட்டளையைக் கேட்ட வீரர்கள் போல அனைவரும் அமைதியானர்கள். ஆர்வமாக என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
நான் சொன்னேன், “அது நான் இந்தியாவில் அலைந்து திரிந்த காலம். ஒரு பெரிய நதியைப் படகில் கடந்து கொண்டிருந்தேன். அந்த நதியின் நடுவில் சென்றால் சுற்றிலும் கரையே தெரியாத அளவுக்குப் பெரிய நதி. அங்குள்ள மக்கள் அந்நதியைக் கடவுளாக வணங்கினார்கள். என்னுடன் அந்தப் படகில் வேறு பலரும் பயணித்தார்கள். அவர்கள் என்னை யாரென்று அறியாதவர்கள். என் மொழி அறியாதவர்கள். கலாச்சாரம், பண்பாடு, மத நம்பிக்கைகளில் என்னிலிருந்து வேறுபட்டவர்கள். எந்த விதத்திலும் நான் அவர்களுக்கு முக்கியமானவன் அல்ல. அந்தப் படகின் உயர்ந்திருந்த அணியத்தில் ஒரு பறவை போல நான் அமர்ந்திருந்தேன். கால்களை இருபுறமாக தொங்கவிட்டு நதியைப் பார்த்திருந்தேன். மறைந்து கொண்டிருந்த மாலை சூரியனின் மஞ்சள் ஒளியில் மொத்த நதியும் பொன் போல மின்னியது. ஒவ்வொருமுறை படகு அலைகளில் ஏறி இறங்கும் நொடி நேர இடைவெளியில் எனக்கு முளைத்த சிறகை யாரோ வெட்டியது போல உணர்ந்தேன். வானை நோக்கி எழுந்த என்னைப் பூமியை நோக்கி யாரோ இழுப்பது போன்ற அந்த ஊசலாட்ட அனுபவத்தை இன்னும் முழுமையாக எனக்குள் உணர விரும்பினேன். எனவே நான் எழுந்து நிற்க நினைத்தேன். ஆனால் என் ஒரு காலை வைக்கவே அணியத்தில் இடமிருந்தது. சமநிலையை இழக்காமலிருக்க என் கைகளை விரித்து வலதுகாலை அணியத்தில் ஊன்றி மெல்ல எழுந்து இடது காலை வலதுகால் மூட்டில் தாங்கிக் கொண்டு நான் தடுமாறி நின்ற போது என் பின்னாலிருந்து அவர்கள் கூச்சலிட்ட எதுவும் எனக்குப் புரியவில்லை. விரித்திருந்த கைகளை மேல்நோக்கி குவித்து கண்களை மூடிய போது படகின் அணியம் வானை நோக்கி உயர்ந்து நான் காற்றில் போகும் பறவை போல மாறிய அடுத்த கணமே நீருக்குள் விழுந்தேன். என் மேல் படகு ஏறிச் சென்றது. சுயநினைவிழந்து நதியின் ஆழத்தில் சென்று கொண்டிருந்த என்னை எங்கிருந்தோ வந்த ஒரு கை பிடித்து மேல்நோக்கி இழுத்துச் சென்றது. நான் உங்களுக்குச் சொல்கிறேன், நாம் தேடிகொண்டிருக்கும் உண்மைகள் மிக எளிமையானவை. நம் அனுபவத்திலிருந்து எழுந்து வந்து கண்முன்னே புலப்படுபவை. அதை அறிந்து கொள்ள அந்த அனுபவம் நிகழும் கணத்திலேயே நாமும் நிகழ்ந்து கொண்டிருக்க வேண்டும். எரியும் நெருப்பைப் போல அல்லது அடிக்கும் கடலலைப் போல முந்தைய கணமும் பிந்தைய கணமும் இல்லாமல் செயலும் பொருளும் ஒன்றாகும் நிலையில் மட்டுமே நம்மால் உண்மையை அறிந்து கொள்ள முடியும். அன்று நான் அத்தகைய ஒரு அனுபவத்தை உணர்ந்தேன். எனக்கான ஞானத்தைக் கண்டடைந்தேன்.
யாரோ ஒருவரால் நதியின் மேற்பரப்பில் இழுத்து வரப்பட்ட போது தடைபட்டிருந்த சுவாசம் செயல்பட தொடங்கி எனக்கு நினைவு திரும்பியது. என் நுரையீரல் கூடிய மட்டும் விரிந்து வெளிக்காற்றை உள்ளிழுத்ததால் பயங்கரமாக இருமி கொண்டிருந்தேன். என்னால் சூழலை உணர முடியவில்லை ஆனால் சிறிது தூரத்தில் படகு நின்றதைக் கண்டேன். என்னைக் காப்பாற்றியவர் என்னையும் இழுத்துக் கொண்டு படகை நோக்கி நீந்தினார். நாங்கள் இருவரும் படகை நெருங்கிய வேளையில் நதியினுள் இருந்து எழுந்த ஒரு முதலை அவரின் வலது கையைக் கவ்வியது. இடது கையால் என்னைப் படகை நோக்கி தள்ளிவிட்டு விட்டு முதலையை நோக்கி திரும்பிய அவரின் இன்னொரு கையை மற்றொரு முதலைக் கவ்வியது. படகிலிருந்தவர்கள் என்னை நதியிலிருந்து தூக்கிப் படகில் இட்டனர். இன்னும் இரு முதலைகள் அவரின் வயிற்று பகுதியையும் தொடையையும் கவ்வின. முதலைகளைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அவற்றால் இரையைச் சவைத்து உண்ண முடியாது. அவற்றின் தாடை அமைப்புகள் அவ்வாறு அமைந்துள்ளன. எனவே அவை இரையைக் கவ்வி சுழன்று பிய்த்து அப்படியே விழுங்கும். அவர் முதலைகளால் விழுங்கபடுவதை நான் மனம் அதிர பார்த்துக் கொண்டிருந்தேன்.
நான் உங்களிடம் கேட்கிறேன், எவனோ ஒருவனுக்காக அவர் தன் உயிரைப் பணயம் வைத்தது எதன் அடிப்படையில்? சக மனிதன் மீதான கருணையினாலா அல்லது தன் துணிவினாலா? இரண்டும் இல்லை. ஏனெனில் யாராலும் பிறருக்காக கருணையின் அடிப்படையிலோ, துணிவுடனோ மரணத்தின் வாசலில் சென்று நிற்க முடியாது. அதற்கு அதைவிட உன்னதமான ஒன்று மனிதனிடம் இருக்க வேண்டும். அதை தான் நான் அன்பு என்கிறேன். அதுவே நான் கண்டடைந்த ஞானம். அந்த அன்பு மனித இனத்துக்கு மட்டுமல்ல மொத்த உயிர் குலத்துக்குமே அடிப்படையானது. அந்த அன்பினால் இவ்வுலகின் பேராசைகளை, வெறுப்புகளை, வேறுபாடுகளை வெல்ல முடியும் என்பதே என் நம்பிக்கை. அந்த நம்பிக்கையுடனே நான் உங்களைத் தேடி வந்தேன், அந்த நம்பிக்கைக்கு என் வாழ்வையும் கையளித்துள்ளேன். ஆனால் இன்று உங்களில் ஒருவர் என்னைக் காட்டிக்கொடுக்க போகிறார் என நான் அறிந்தபோது அந்த நம்பிக்கை சிதறி போனது. என் மீதும் நான் அடைந்த ஞானத்தின் மீதும் ஐயமடைந்தேன். ஆனால் இப்போது உறுதியாக சொல்கிறேன்!!!.. நீங்கள் என்னைக் காட்டிக்கொடுத்தாலும் நான் உங்களை இறுதிவரை அன்பு செய்வேன். நீங்களும் ஒருவர் மற்றவரை அவ்வாறே அன்பு செய்ய வேண்டுமென நான் விரும்புவேன்.” எனச் சொல்லி முடித்தபோது என்னையறியாமலே நான் அழுதிருந்தேன்.
5
சீடர்கள் குழப்பமடைந்து ஒருவரையொருவர் பார்த்தனர். சீமோன், “போதகரே, என்ன சொல்கிறீர்கள்? நாங்கள் உங்களைக் காட்டிக்கொடுக்க போகிறோமா?” எனக் கேட்டான்.
நான், “ஆம்” என்றேன்.
அவன் நான் சொன்னதை ஏற்றுக்கொள்ள முடியாதவன் போல தலையசைத்து விட்டே, “போதகரே, இது நாம் வெளிப்பட வேண்டி பரப்பப்பட்ட புரளியாக கூட இருக்கலாம். எதுவாயினும் தீவிரமாக விசாரித்து விட்டு முடிவெடுப்போம்” என்றான்.
“உண்மை தான் சீமோனே, ஏனெனில் எனக்கு இந்த தகவலைச் சொன்னது மகதலா” என்றவுடன் அவன் கண்கள் மாறின. அது கோவமா, வெறுப்பா அல்லது பொறாமையா என்று தெரியவில்லை. ஆனால் அவளைப் பற்றி பேசும்போதெல்லாம் அவன் கண்களில் ஒரு மாற்றத்தைக் காண்கிறேன். தன் இடத்தைப் பிடித்து கொண்ட ஒருவரை எந்த உணர்வுகளையும் வெளிக்காட்டாமல் பார்க்க முயல்வது போன்ற அவனது பாசாங்கை நான் உணர்ந்து விடக்கூடாதென சீடர்களை நோக்கி திரும்பினான்.
யோவான் உடனடியாக,“மகதலா எவ்வாறு அறிந்தாள்?” எனப் பதற்றமாக கேட்டான்.
நான் பதிலளிக்கும் முன்பே தோமா, “ஒரு பெண் சொன்னதை நம்பி எங்களைச் சந்தேகப்படுகிறீர்களா?” எனக் கேட்க, சீமோன் எழுந்து கோவமாக, “முட்டாளே, அந்தப் பெண் சொன்ன எந்தத் தகவல் இதுவரை தவறாகியிருக்கிறது. இதுநாள் வரை அவள் தரும் உளவு செய்திகளைக் கொண்டே நாம் பயணங்களையும், பிரசங்கங்களையும் திட்டமிடுகிறோம் என்பதை மறந்து விடாதே. அவள் இல்லையெனில் எப்போதோ நாம் கைதுசெய்யப்பட்டிருப்போம்” என்று சொல்லிவிட்டு யோவானை நோக்கி, “அவள் எவ்வாறு அறிந்தாள் என்பதை விட அது யார் என்பதே இப்போது நாம் அறிய வேண்டியது” என்றான். பின் என்னிடம், “போதகரே, யார் என்று ஏதேனும் தகவல் சொன்னாளா?” எனக் கேட்டான்.
நான், “இல்லை. ஆனால் எனக்கு ஒருவன் மீது சந்தேகம் உள்ளது” எனச் சொல்லிவிட்டு, யூதாசை நோக்கி, “யூதாஸே, இன்று நீ இன்று எங்கேனும் வெளியில் சென்று வந்தாயா?” எனக் கேட்டேன்.
அவன் முகத்தில் எந்த மாறுதலும் இல்லை. கொஞ்சம் கூட தயங்காமல், “ஆம், போதகரே” என்றான்.
“நாங்கள் அறியாமல் நீ செல்ல வேண்டிய அவசியம் என்ன?” தோமாவின் கேள்வியில் குழப்பம் இருந்தது.
“பாஸ்கா விழாவிற்கான தயாரிப்பு பொருட்களை மகதலா வாங்கி வர தாமதமாகியதால் உணவு தயாரிப்பதில் சிரமம் ஏற்படலாம் என வீட்டின் உரிமையாளர் சொன்னார். எனவே நானே சென்று வாங்கி வந்தேன்.” யூதாஸ் உறுதியான குரலில் பதில் சொன்னான்.
சீமோன் யோவானிடம், “வீட்டு உரிமையாளரை அழைத்து வா” என்றதும், யோவான் என்னைப் பார்த்தான். நான் ஆமோதிப்பதாகத் தலையசைத்தேன். சிறிது நேரம் கழித்து யோவானுடன் வந்த வீட்டு உரிமையாளரிடம் சீமோன், “ஐயா, யூதாஸை வெளியில் சென்று பொருட்கள் வாங்கி வர பணித்தீர்களா?” எனப் பணிவுடன் கேட்க, அவர், “மகதலா வர தாமதமானால் உணவு தயாரிப்பதில் சிரமம் ஏற்படலாம் என்று தான் சொன்னேனே தவிர வெளியில் சென்று வாங்கி வர சொல்லவில்லை” என்று சொல்லிவிட்டு கீழிறங்கிச் சென்றார்.
“அப்படியானால் யாரிடமும் சொல்லாமல் நீ செல்ல வேண்டிய காரணம் என்ன?” சீமோன் யூதாஸிடம் சீறினான்.
“நம் அனைவரின் நலனுக்காகவும் நான் செய்த செயல் இப்போது உங்களுக்குப் பிழையாக தெரிகிறதா?போதகரே, நீங்களுமா என்மேல் சந்தேகம் கொள்கிறீர்கள்?” கைவிடப்பட்டவன் போல என்னிடம் கேட்ட யூதாஸிடம், “நான் ஆணையிடாததைச் செய்ய உங்களுக்கு அதிகாரம் இல்லை என்பதை நீ அறிவாய் அல்லவா?” என்ற என் கேள்வியால் அவன் கோபாமடைந்தான்.
“போதகரே, இது வீண் பழி. இதற்கு மேலும் நீங்கள் உண்டு குடிக்கும் இந்த விருந்தில் என்னால் கலந்து கொள்ள முடியாது” என்று சொல்லிவிட்டு வேகமாக வெளியேறினான். யாரும் அவனை நிறுத்த முயற்சிக்கவில்லை. எல்லோருக்கும் அவன் மேல் ஐயம் இருந்ததே தவிர அவன்தான் காட்டிக்கொடுக்க போகிறான் என உறுதியாக நம்ப முடியவில்லை.
சீமோன், “இதற்கு மேலும் இந்த வீட்டில் இருப்பது நமக்குப் பாதுகாப்பானது இல்லை. போதகரே, நாம் இங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டும்” என்றான்.
“இங்கிருந்து வெளியேறி எங்கே செல்வது?”
“அது தெரியவில்லை. ஆனால் இத்தகைய தருணங்களில் ஒரு வீட்டை விட வெட்டவெளியே பாதுகாப்பானது. நாம் எங்கு வேண்டுமானாலும் சென்றிருக்கலாம் என்ற குழப்பத்தை நம்மை தேடுபவர்களுக்கு அளிப்பது.” என்று பதிலளித்து விட்டு அவன் சீடர்களை மூன்று அணியாகப் பிரித்தான்.
தோமா, அல்பேயுவின் மகன் யாக்கோபு, கானானாகிய சீமோன், யாக்கோபின் மகன் யூதா, ஒரு அணியாகவும் மத்தேயு, பிலிப்பு, பார்த்தலமேயு, அந்திரேயா மற்றொரு அணியாகவும் என்னுடன் சேர்த்து சீமோன் பேதுரு, யோவான் மற்றும் யாக்கோபு ஆகியோரை மூன்றாம் அணியாகவும் பிரித்தான்.
மூன்று அணியினரும் வீட்டை விட்டு வெளியேறி வெவ்வேறு திசையிலாகச் செல்ல வேண்டும். எங்குச் செல்ல வேண்டுமென்பதை அந்தந்த அணியினரே போகும் வழியில் முடிவு செய்து கொள்ளலாம். எனவே எந்த அணி எங்குச் செல்கிறது என எவருக்கும் தெரிய வாய்ப்பில்லை. இன்று இரவை ஒரு பாதுகாப்பான இடத்தில் கழித்துவிட்டு மறுநாள் ஒன்று கூடுவதற்கான இடத்தைப் பற்றி தகவல் அனுப்புவதாகச் சொன்னான்.
தோமாவை தலைமையாக கொண்ட அணி வீட்டிலிருந்து வெளியேறி சென்ற சிறிது நேரம் கழித்து மத்தேயுவும் தன் அணியுடன் வெளியேறினான். நான் சீமோனிடம், “நாம் எங்கும் தூரமாகச் செல்ல வேண்டாம். அருகிலிருக்கும் கெத்சமனே தோட்டமே ஒளிந்து கொள்ள ஏதுவான இடம் தான். நம்மைத் தேடி வருபவர்கள் நாம் இத்தனை அருகில் இருப்போம் என ஊகிக்கவும் மாட்டார்கள்” என்றேன். சீமோன் பதிலளிக்கவில்லை. யாக்கோபிடம், “புறப்படுவோம்” என்று சொல்லிவிட்டு வீட்டிலிருந்து வெளியேறி நடந்தான்.
நாங்கள் கெதரோன் நீரோடையைக் கடந்து அதை ஒட்டியிருந்த கெத்சமனே தோட்டத்தில் நுழைந்தோம். அந்தத் தோட்டம் ஒலிவ மரங்கள் நிரம்பிய சிறுகாடு போலிருந்தது. 10 முதல் 15 மீட்டர்கள் உயரம் வளர்ந்திருந்த மரங்கள் காளான் போல விரிந்து நிலவின் ஒளியைத் தடுத்து நிறுத்தியதால் மொத்த தோட்டமுமே இருளடர்ந்து இருந்தது. எங்களின் காலடியோசையை வைத்தே ஒருவர் மற்றவரை அறிந்து முன்னேறிச் சென்றோம். மூன்று மரங்கள் அருகருகே நின்ற ஒரு இடத்தைச் சுட்டிக்காட்டி சீமோன் சொன்னான், “இந்த இடம் நாம் ஒளிந்து கொள்ள ஏதுவானது. தூரத்திலிருந்து யாரேனும் வந்தாலும் நம்மால் இங்கிருந்து பார்க்க முடியும்”. அவன் அமைதியிழந்திருந்தான். அவன் மூச்சு விடும் ஒலி பாம்பின் சீறல் போல கேட்டுக் கொண்டிருந்தது. நாங்கள் அங்குப் பதுங்கியிருந்தோம். நீருக்குள் கிடக்கும் கல் போல அசைவற்று குளிர்ந்து அவரவர் உலகத்தில் மூழ்கியிருந்தோம். யாக்கோபு தான் முதலில் பேசினான்.
“நாம் ஏன் ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறோம்?”
“ஏனென்றால் இன்றிரவு இந்நகரை விட்டு நம்மால் வெளியேற முடியாது” சீமோனின் பதிலில் எரிச்சல் இருந்தது.
“அதை நானும் அறிவேன். ஆனால் நான் சொல்ல வருவது அதுவல்ல”
“வேறு என்ன?”
“நாம் ஏன் இந்நகர மக்களின் ஆதரவை நாடக்கூடாது?”
“என்ன உளறுகிறாய்?”
“நான் உளறவில்லை. போதகரே, இந்நகரில் உங்களைப் பின்தொடரும் ஆயிரக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். அவர்களை ஒருங்கிணைத்து மதகுருவுக்கு எதிராக ஒரு கலவரத்தை ஏற்படுத்தினால் நம்மால் இங்கிருந்து எளிதாகத் தப்பிவிட முடியும்”. இதைக் கேட்டதும் சீமோன் உற்சாகமடைந்தான்.
“ஆம்!!! இது நல்ல யோசனை. இம்மக்கள் உங்கள் மேல் கண்மூடித்தனமான நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். உங்களுக்காக எதையும் செய்வார்கள்” என்றான்.
இவர்களின் மனம் எதை நோக்கிச் செல்கிறதென என்னால் ஊகிக்க முடியவில்லை.
நான், “அதற்காக அவர்களை என் சுயநலனுக்காக பயன்படுத்த சொல்கிறாயா?” எனக் கேட்டேன்.
“அவ்வாறல்ல, அதை தவிர நாம் தப்பிக்க வழியில்லை”.
“நான் தப்பிப்பதைப் பற்றி நினைக்கவேயில்லை சீமோனே!!! கைது செய்யப்பட்டாலும் எனக்கு வருத்தமில்லை. யூதாஸ் வெளியேறிய போதே நான் அதற்கு தயாராகிவிட்டேன். இதற்கு மேல் நாம் செய்யக்கூடியதும் எதுவும் இல்லை. இனிமேல் நடப்பவை எதுவானாலும் அதை ஏற்றுக்கொண்டாக வேண்டிய நிலையில் தான் இப்போது நானிருக்கிறேன்”.
“போதகரே, அவர்கள் உங்களைக் கைது செய்வது விசாரணைச் செய்வதற்கு அல்ல, கொலை செய்வதற்காக”
“ஆம், அறிவேன். அதற்காக மக்களைப் பகடை காய்களாக பயன்படுத்த என் மனம் துணியவில்லை. இப்போது ஒரு கலவரத்தை ஏற்படுத்தினால் என் பெயரில் எத்தனை பேர் இறப்பார்கள்? தன் நலனுக்காக மக்களைப் பயன்படுத்துவது அதிகாரத்தின் இயல்பல்லவா? நான் அதிகாரத்திற்கு எதிரானவன் என்பதை நீ அறிவாய் அல்லவா”.
“ஆனாலும் இவ்வுலகிற்கு உங்கள் பணி முக்கியமல்லவா?”
“ஒன்றை புரிந்து கொள் சீமோனே, இவ்வுலகிற்கு எந்தத் தனி மனிதனின் பணியும் முக்கியமில்லை. நான் விட்டதை இன்னொருவன் தொடர்வான். அதிர்ஷ்டவசமாக எனக்கு நீங்கள் இருக்கிறீர்கள்”
“போதகரே, நீங்கள் என்ன சொன்னாலும் வருங்கால உலகின் நலனுக்காக இன்று சிலர் இறப்பதில் தவறில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது”.
“நீ என்ன சொல்கிறாய் சீமோனே! அரசர்கள், மதத்தலைவர்கள் அதிகாரத்தின் பெயரில் மக்களை என்ன செய்கிறார்கள் என்று பார். நாட்டுக்கும் நாட்டுக்குமான போர், மத பூசல்கள், இனக்குழுக்களுக்கு இடையிலான சண்டை என்று மக்களைக் காரணமே இல்லாமல் கொன்று குவிக்கிறார்கள். அவர்களுடன் சென்று என்னையும் நிற்க சொல்கிறாயா? என் பாதை வேறு. நான் ஏந்தியிருக்கும் அன்பிற்கான முடிவு மரணமே என்றால் அதை ஏற்றுக்கொள்வதே எனக்கான பாதை. என் மரணத்தில் கூட மக்கள் அன்பு ஒன்றையே உணர வேண்டும் என்பதே என் விருப்பம். சற்று சிந்தித்து பார்!! இதுவரையில் வாழ்ந்த மனிதர்களில் தன் ஞான வெற்றிக்காக மரணத்தை ஏற்றவர்கள் எத்தனை பேர்? என் ஞானத்தின் மீது எழும் கேள்விக்கான பதிலை நான் தானே சொல்லவேண்டும். ஆம்!!. இது எனக்குத் தாங்க முடியாத துன்பம் தான், ஆனால் உண்மையான அன்பு பிறரின் நலன்களுக்காக எத்தகைய துன்பத்தையும் ஏற்றுக் கொள்ளும் என்பதை மறந்து விடாதே”
“மரணம் நெருங்கி வரும் வேளையிலும் உங்கள் உறுதி என்னைக் கலங்க செய்கிறது போதகரே”
“கலங்காதே சீமோன்… நான் உங்களை விட்டு பிரிந்தாலும் என் வார்த்தைகள் உங்களுடன் தான் இருக்கும். என்னைக் காட்டிக்கொடுப்பவனையும், என்னை மரணத்திற்குத் தீரப்பிடுபவனையும் அன்பு செய்யுங்கள். உங்களிடம் நான் எதிர்பார்ப்பது அது ஒன்றையே”
அதுவரையில் அமைதியாக இருந்த யோவான், “போதகரே, உங்களுக்காக இல்லாவிடினும் உங்கள் அன்னைக்காக உங்களைப் பாதுகாத்து கொள்ளலாமே!!” எனக் கேட்டான்.
“பதினேழு வருடங்கள் அன்னையைப் பிரிந்திருந்து நான் திரும்பி வந்த போது எந்தக் கேள்வியும் இல்லாமல் என்னை ஏற்றுக்கொண்டாள். உங்கள் அனைவரையும் விட என்னை அதிகமாக அறிந்திருப்பது அவள் ஒருத்தி தான். அவள் வருந்த மாட்டாள். என் அன்பிற்குறியவன் நீ அவளைப் பார்த்துக் கொள்” என்ற போது என்னை நானே தெளிவுபடுத்தி கொண்டது போல இருந்தது. அந்த இருளிலும் எனக்கான பாதை துலங்கி வந்தது. என் மனம் மரணத்திற்காக ஏங்குகிறது. இப்போது என்னைக் காட்டிக்கொடுப்பவன் வந்தால் அவன் எதிரில் சென்று நிற்கும் துணிவு என்னிடம் உள்ளது. அதோ வெளிச்சம் தெரிகிறது. ஆம், அவன் தான் வருகிறான். உடன் வீரர்களும் வருகிறார்கள். சீடர்கள் மூவரையும் பார்த்துவிட்டு, நான் வீரர்களை நோக்கிச் சென்றேன். சீடர்கள் என் பின்னாலேயே வந்தார்கள்.
நான் வீரர்களிடம், “இந்த இருளில் யாரைத் தேடுகிறீர்கள்?” எனக் கேட்டேன்.
வீரர்கள், “நாசரேத் ஊரானாகிய இயேசுவைத் தேடுகிறோம்” என்றார்கள்.
“அது நான் தான்” என்றேன்.
அப்போது வீரர்களின் மறைவிலிருந்து வெளியேறிய யூதாஸ் என் அருகில் வந்து என்னைக் கட்டியணைத்து என் கன்னத்தில் முத்தமிட்டான்.
“யூதாஸே, முத்தமிட்டா உன் போதகரைக் காட்டிக் கொடுக்கிறாய்? இதோ!!! உன் முத்தத்திற்குப் பிறகு நான் கடவுளாகிறேன்”.

 
		
இயேசு, யூதாஸ் என்ற இரண்டு நபர்கள், எப்போதும் கடவுளுக்கு தேவைப் படுபவர்கள். அப்போது தான் அன்பு என்ற உணர்வுக்கு தன் தலையைக் காட்ட வழி பிறக்கும்.