1

படுக்கை அருகே இருந்த மேசை மீது அலைபேசியை வைத்த சீனிச்சாமி மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டார். நகங்கள் கட்டில் விளிம்பில் பலமாய் பதிந்திருக்க தொண்டை வழி இறங்கிய வியர்வை மயிரற்ற மார்பின் ஊடாக வழிந்தது. பழுப்பேறியிருந்த வேட்டியைத் தொடைகளுக்கிடையே ஒடுக்கிக்கொண்டு வாசல் பக்கம் பார்த்தார். வெயில் ஏறுவதற்கு வெகுநேரம் இருந்தது. முழுதாய் விடிந்திருக்காத இவ்வேளையில் செல்லப்பாவை அழைத்ததே அவனுள் வேண்டாத சஞ்சலங்களைக் கிளர்த்துமோ என ஒருகணம் ஐயமுற்றார். பிறகு முகத்தை ஒருவிதமாக சுளித்துக்கொண்டு வெளியே வந்து ஒதுக்குப்புறமாக இருந்த சிறிய அறையை நோக்கிச் சென்றார்.
முத்துவேல் விழித்துவிட்டிருந்தான்.
ஜன்னலின் வழி திரிதிரியாய் வெளிவந்த சிகரெட் புகையைப் பார்த்து நின்ற சீனிச்சாமி நரைத்த மீசையை நீவியபடி சத்தமெழுப்பாமல் திரும்பி நடந்தார். அந்த அறையின் கதவில் தொங்கிக்கொண்டிருந்த பூட்டை மட்டும் விழிகள் ஒருமுறை தொட்டு விலகின.
முற்றத்தில் உலர்த்தப்போட்டிருந்த துண்டை எடுத்து மாலை போல் அணிந்தபடி வாசல் பக்கம் வந்தபோது பொத்தென்று காலடியில் வந்து விழுந்தது அன்றைய தினத்தந்தி. அசட்டையுடன் அதை எடுத்து எழுத்தின் மீது பார்வையை ஓட்டினார். கைகளின் நடுக்கம் அன்று சற்று அதிகமாக இருந்தது. காகிதத்தின் மணம், காலை நேர இளங்காற்று, அண்டை வீட்டு ரேடியோவில் ஒலிக்கும் பக்திப் பாடல், குப்பை வண்டியைப் பின்தொடரும் நாய்க்கூட்டம் என அன்றாடங் காட்சிகள் அனைத்தும் அவரைச் சலனம்கொள்ளச் செய்தன. தானாய் இறுகிக்கொண்ட உடம்பைக் கொஞ்சம் தளர்த்திக்கொண்டு தெருக்கோடியை நோட்டம்விட்டார். அங்கிருந்த டீக்கடை வாசலில் அமர்ந்திருந்த நால்வரில் ஒருவன் அவரைப் பார்த்து கையசைத்தான். பதிலுக்குத் தலையை லேசாய் அசைத்த சீனிச்சாமி புறங்கழுத்தைத் தடவியபடி வீட்டினுள் வந்து அலைபேசியை எடுத்து மீண்டும் செல்லப்பாவை அழைத்தார்.
அவன் “அப்பா, இந்தா வண்ணார்பேட்டை பாலம் தாண்டிட்டேன். அஞ்சே நிமிசம்!” என்றான். பலமாக வீசிய எதிர்காற்று அவன் குரலைச் சிறு துண்டங்களாக கூறுபோட்டு அளித்தது.
“சரிய்யா… சரிய்யா… பாத்து வா” என்று பலவீனமாகச் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்த சீனிச்சாமி முத்துவேல் இருந்த அறையின் பூட்டை ஓசையெழுப்பாமல் அகற்றிவிட்டு தெருவில் இறங்கினார்.
மகன் முத்துவேலுடன் ஒன்றாய் கல்லூரிக்குச் சென்ற ஜோசப் செல்லப்பாவை கடைசியாக அவனது திருமணத்தன்று சந்தித்திருந்தார் அவர். மிகவும் மென்மையானவன். அத்தனை மிருதுவான மனிதன் முத்துவேலைப் போன்ற முரடனுடன் எப்படி நெருக்கமாக பழக முடிந்தது என்று அவர் பலமுறை வியந்திருக்கிறார். கடந்த நான்கைந்து ஆண்டுகளில் அவனுடனான தொடர்பு முற்றிலுமாக அறுந்துபோயிருந்தாலும் அவனை அடிக்கடி நினைவுகூரும் வழக்கம் கொண்டிருந்தாள் முத்துவேலின் அம்மா லெட்சுமி. உடல் நோவால் அவள் இறந்துபோனதற்கு ஒருவாரம் முன்புகூட, “தனிச்சு கிடந்தா உள்ளுக்கு இருக்கற கெட்டதெல்லாம் பத்தா பெருகிரும்… அந்தப் பயல்ட்ட சும்மா பேசிப் பாரேன்… நல்ல புள்ள… உன் சுபாவம் தெரிஞ்சு பேசும்… உனக்கும் மனசுக்கு நிம்மதியா இருக்கும், கொதிப்பெல்லாம் கொஞ்சம் அடங்கும்” என்று மகனை அழைத்துச் சொல்லியிருந்தாள். ஆனால் குடும்ப வாழ்வுக்குள் நுழைந்துவிட்டவனைத் தனிப்பட்ட ஆசுவாசத்திற்காக தொந்தரவு செய்வதில் தனக்கு உடன்பாடில்லை என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லிவிட்டான் அவன்.
தெருமுனையில் இருந்த டீக்கடையை அடைந்த சீனிச்சாமி பீடிக்கட்டை வாங்கி சட்டையின் உள்பாக்கெட்டினுள் வைத்துக்கொண்டார். முன்னர் அங்கே அமர்ந்திருந்த நால்வர் இப்போது சாலையின் மறுபுறம் இருந்த பிரான்சிஸ் சேவியர் பள்ளிக்கூடத்தின் காவலருடன் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள்.
கடையில் எச்சில் குவளைகள் கழுவிக்கொண்டிருந்த பெரியவர் சீனிச்சாமியைப் பார்த்து புன்னகை செய்தபடி, “நம்ம மொதலாளி மந்திரி ஆயாச்சு போலிருக்கே… பேப்பர் பாத்தேன்!” என்றார்.
சீனிச்சாமி எதுவும் பேசாமல் அவரை உற்றுப் பார்த்தார். பிறகு, “ம்” கொட்டிவிட்டு நகர்ந்தார். தொலைவில் செல்லப்பாவின் பைக் தென்பட்டதும் அருகேயிருந்த டெம்போவின் பின்னால் கொஞ்சம் மறைவாக நின்றுகொண்டு கைதட்டி அவனை அருகே அழைத்தார்.
பைக்கை நிறுத்திவிட்டு கலைந்திருந்த தலைமயிரை ஒதுக்கிக்கொண்டபடி அருகே வந்த செல்லப்பா, “அப்பா, எப்படி இருக்கீங்க?” என்று ஆர்வம் ததும்பும் குரலில் கேட்டான்.
“இருக்கேன்யா… நீ சொவமா இருக்கியா? வீட்டம்மா நல்லா இருக்காளா?” என்று இயல்பைவிட கொஞ்சம் உயர்ந்த தொனியில் விசாரித்த சீனிச்சாமி மெல்ல முன்னகர்ந்து அவன் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார்.
நான்கு வருடங்கள் கழித்து திடுமென போனில் தொடர்புகொண்டதும், எந்தவித விளக்கமும் தராமல் உடனடியாக கிளம்பிவரும்படி இவர் கேட்டுக்கொண்டதும், என்றும் தன்னிடம் இணக்கம் காட்ட விரும்பாதவர் இன்று இப்படி நெருங்கிவந்து தனது கைகளைப் பிடித்துக்கொண்டு பேசுவதும் செல்லப்பாவைத் தொந்தரவு செய்யாமலில்லை. ஆனால் எடை மிகுந்த உணர்வுகளில் வெகுநேரம் திளைக்க விரும்பாத அவனது சுபாவம் இச்சலனத்தை உடனடியாக பின்னுக்குத் தள்ளியது. தொடர்ந்து சில நிமிடங்களுக்குத் தனது குடும்ப வாழ்வு, தொழில் விவரங்கள், பெற்றோர்களின் ஆரோக்கியம் பற்றி மூச்சுவிடாமல் விசாரித்தவர் ஒரு கட்டத்தில் மௌனமானபோது முத்துவேலின் நலம் குறித்த கேள்வி ஒன்றை எழுப்பினான்.
“அவன் இருக்கான்ப்பா… வீட்லதான் கடக்கான்” என்று சொல்லிவிட்டு கைகளைக் கட்டிக்கொண்டு வேறுபக்கம் பார்த்தார் சீனிச்சாமி.
“அம்மா எப்படி இருக்காங்கப்பா? பிள்ளைட்ட அடிக்கடி அம்மா பத்தி பேசுவேன்”
சீனிச்சாமி சில நொடிகள் பேசாமல் இருந்தார். பிறகு மந்தமான குரலில், “அவ போயிட்டாப்பா… மூணு மாசம் ஆச்சு!” என்றார்.
“அய்யோ… என்னாச்சுப்பா?”
“ரொம்ப காலமா அவளுக்கு உடம்பு சொவமில்லமாத்தான் கடந்தது… ஒரு அம்மாவாச அன்னிக்கு நடுச்சாமத்துல அம்மா அய்யோன்னு ரெண்டு மட்டம் கத்தினா… பெறவு அம்புட்டுதான்”
அந்தத் துர்நிகழ்வை ஏற்றுக்கொள்வதற்குச் செல்லப்பா இரண்டொரு நொடிகள் எடுத்துக்கொண்டான். பிறகு, “முத்துவேல் வேல பாக்கானா? என்ன பண்ணுதான்? சுத்தமா டச்சே இல்லாம போயிட்டு” என்று சொன்னான்.
சீனிச்சாமி ஒன்றும் சொல்லாமல் பள்ளிக்கூடத்தின் வாசலில் நின்றுகொண்டிருந்த நால்வரை வெறித்துக்கொண்டிருந்தார்.
“ஏதும் பிரச்சனையாப்பா? திடீருன்னு கூப்பிட்டிருக்கீங்க?”
கழுத்தில் கிடந்த துண்டை வைத்து வாயைத் துடைத்துக்கொண்ட சீனிச்சாமி ஆழமாய் மூச்செடுத்தார். உணர்ச்சியற்றிருந்த அவர் முகம் சட்டென தீவிரமடைந்தது.
“ஒரு விசயமாதான் போன் பண்ணேன் தம்பி”
“சொல்லுங்கப்பா”
“அய்யாவுக்கு ஒரு உதவி செய்யணும்…”
செல்லப்பா பணிவுடன் தலையசைத்தான்.
“பெரிய பிரச்சனை ஒண்ணுமில்லய்யா… முத்துவேலுக்கு கொஞ்ச வருசமா எதுவும் சரியா செட் ஆகல… கொஞ்சம் பணத்த வேற இழந்துட்டான் இடையில… அதுவும் இப்ப அவன் அம்மா போனதுல இருந்து பய அப்படியே தேஞ்சுட்டான்… என்ன செய்யன்னு தெரியாமத்தான் உன்ன கூப்பிட்டேன்… காலேஜுல ரெண்டு பேரும் நல்லா ஒட்டுல்லா…”
“…”
“என்ன இருந்தாலும் நம்ம அப்பா பாத்தியா… ஆம்பள புள்ளைட்ட ஒரு கட்டத்துக்குமேல நெருங்க முடியறதில்ல”
“நான் பேசுதேன்ப்பா… இதுல என்ன இருக்கு”
“சரிய்யா”
“வேற ஒன்னும் இல்லையே?”
சீனிச்சாமி நிமிர்ந்தார்.
“இல்லப்பா… விடிய முன்னமே போன் வந்ததும் என்ன ஏதுன்னு பதறிட்டேன்”
“அவன் ராத்திரி முழுக்க உறங்கின மாதிரியே தெரியல… அதான் மனசு கேக்கலன்னு…”
“அய்யோ அதனால ஒன்னுமில்ல… சரி நான் பேசுதேன்” என்றபடி பைக்கில் ஏறி அமர்ந்த செல்லப்பா, “நீங்களும் வாரீங்களா?” என்று கேட்டான்.
“இல்லய்யா… நான் எதுக்கு நடுவுல? நீங்க பேசிட்டு இரிங்க… நான் இங்கன ரெண்டு டீய குடிச்சுட்டு பைய்ய வாரேன்”
செல்லப்பா வண்டியைக் கிளப்பி மெதுவாகத் திருப்பினான்.
உள்பாக்கெட்டில் வைத்திருந்த பீடிக்கட்டில் இருந்து ஒன்றை எடுத்து பற்றவைத்த சீனிச்சாமி, “தம்பி!” என்று அவனை அழைத்தார்.
தரையில் காலூன்றியபடி திரும்பிப் பார்த்தான் செல்லப்பா.
“சொல்லுங்கப்பா”
“ஒரு முக்கியமான விசயம்”
“…”
“உன்ன நான்தான் வரச் சொன்னேன்னு வேலுக்கு தெரியவேண்டாம்”
செல்லப்பாவின் புருவங்கள் சற்று இடுங்கின.
“உன்ன தொந்தரவு பண்ணேன்னு தெரிஞ்சா என்கிட்ட மொறப்பான்… நீ எதேச்சையா வந்த மாதிரி காட்டிக்க, என்ன?”
“சரிப்பா”
செல்லப்பாவின் வண்டி தெருவினுள் செல்வதைக் கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார் சீனிச்சாமி. வீட்டினுள் அவன் அடியெடுத்து வைத்ததும் கையிலிருந்த பீடித்துண்டை வீசிவிட்டு வேகமாக நடந்து முத்துவேலின் அறையின் வெளிப்புறத்தில் இருந்த ஜன்னல் அருகே மறைந்து நின்றுகொண்டார். பக்கவாட்டிலிருந்த நீலநிறச் சுவரில் அவரது நிழல் பூதவடிவமாக விழுந்திருந்தது. நிலத்தில் வாடிப்போயிருந்த வெற்றிலைக்கொடி அவர் பாதங்களுக்கடியே நசுங்கிக் கிடந்தது.
2
அறிந்த வீடுதான். ஆனால் உள்ளே நுழைந்ததுமே உறைந்துபோன புன்சிரிப்புடன் வரவேற்ற லெட்சுமியம்மாளின் கருப்புவெள்ளை புகைப்படம் அனைத்தையும் புரட்டிப் போட்டது. ஒரே கணத்தில் அந்த இடமும், அதனுள் சுழன்ற காற்றும் விசேஷ அடர்த்திப் பெற்றதைப் போல் சுவாசம் இடறியது. ஆண்கள் மட்டுமே வசிக்கும் ஓர் இடத்தின் அவலட்சணங்கள் அனைத்தையும் கொண்டிருந்தது முத்துவேலின் இல்லம்.
இடப்புறம் இருந்த சீனிச்சாமியின் அறையில் டேபிள் ஃபேன் அதன் வழக்கமான இரைச்சலுடன் ஓடிக்கொண்டிருந்தது. அப்படியும் இப்படியுமாக அசைந்து ஆளில்லாத அந்த அறையைக் கண்காணிக்கும் அதன் உலோக மண்டையைப் பார்ப்பதற்கு எப்படியோ இருந்தது. தயக்கத்துடன் உள்ளே சென்று காத்தாடியின் இணைப்பைத் துண்டித்தான். படுக்கையில் போர்வைக் கசங்கிய நிலையில் கிடக்க, தலையணை அருகே பாதி தீர்ந்திருந்த கடலைமிட்டாய் பொட்டலம் இருந்தது. நூற்றுக்கணக்கான தடித்த சிவப்பெறும்புகள் அதை மொய்த்துக்கொண்டிருந்தன.
நிழலடர்ந்த முகத்துடன் வெளியேறி ஒடுங்கிய தாழ்வாரத்தின் ஊடாக நடந்து முத்துவேலின் அறையை எட்டினான் செல்லப்பா. துதிக்கையைத் தூக்கிப் போற்றும் இரு யானைகளின் நடுவே புன்முறுவலுடன் அருளி அமர்ந்திருக்கும் கஜலக்ஷ்மியின் வண்ணப்படம் ஒட்டப்பட்டிருந்த மரக்கதவின் விளிம்புகளைச் சிதல்கள் அரித்திருந்தன. அறையினுள் முத்துவேல் நடமாடுவதன் அதிர்வைத் தரையில் மெல்லிதாய் உணர முடிந்தது. மார்பின் மையத்தில் குவிந்த எடையை நெடுமூச்செடுத்து தணிக்க முயன்றான்.
“என்ன? என்ன வேணும்?” கதவின் மறுபக்கத்திலிருந்து முத்துவேலின் சிடுசிடுப்பான குரல் கேட்டது.
குரலைச் சரிசெய்துகொண்ட செல்லப்பா, “மாப்ள” என்றான்.
இரண்டொரு நொடிகளுக்கு மௌனமாய் இருந்த முத்துவேல் சிறிய தடுமாற்றத்துடன், “செல்லப்பாவா?” என்று கேட்டான்.
“ஆமா மாப்ள”
கீச்சுக்குரலில் சபித்தபடி வேண்டாவெறுப்பாகத் திறந்துகொண்டன கதவுகள். மேலே ஒளிர்ந்த மிதமான மஞ்சள் நிற ஒளியில் முத்துவேலைக் கண்டபோது செல்லப்பா ஒருகணம் திடுக்கிட்டுப்போனான். கல்லூரியில் ஹாக்கி வீரனாக இருந்தவன் இப்போது அசாத்திய எடை பெற்றிருந்தான். கழுத்திலும், முழங்கையிலும் தசை கொழுத்து மடிப்புகளாக இருந்தது. அவன் சுத்தமாக இல்லை என்று சுவாசிக்கும்தோறும் புலமானது. தன்னைக் கண்டுவிட்ட ஆனந்தத்தில் முகம் சற்று மலர்ச்சி பெற்றாலும் பார்வையில் ஒருவகை சோர்வும், பதற்றமும் இழையோடியது. கண்களுக்கடியே படர்ந்திருந்த கருமை ஏதேதோ உணர்ச்சிகளைக் கிளர்த்தியது.
“வா, உள்ள வா, உக்காரு”
செல்லப்பா லேசான புன்னகையுடன் அறையினுள் சென்றான். அங்கிருந்த புழுக்கமும், அழுக்குத்துணி நெடியும், தரையில் சிதறிக்கிடந்த சிகரெட் சாம்பலும் தன்னைச் சஞ்சலப்படுத்தாததைப் போல் நடந்துகொள்வதற்கு அதீத பிரயத்தனம் அவசியப்பட்டது.
“என்னல பன்னி கணக்கா பெருத்துட்ட?” என்று விளையாட்டாகக் கேட்டான் செல்லப்பா.
“கொஞ்சம் குப்பையா இருக்கும்… அட்ஜஸ்ட் பண்ணிக்க, என்ன? சுத்தம் பண்ண ஆள் வரல” என்றபடி அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டிருந்த முத்துவேல் ஓரமாய் இருந்த முக்காலி ஒன்றை எடுத்து நீட்டினான்.
செல்லப்பா அதைப் பெற்றுக்கொண்டு ஓரமாக போட்டு அமர்ந்தான்.
முத்துவேலின் முகம் ஒருகணம் தீவிரமடைந்தது. இரண்டடி பின்னே சென்று சுவரில் சாய்ந்துகொண்டு, “எதுக்கு வந்த?” என்று கேட்டான்.
செல்லப்பா விழித்தான்.
ஆனால் அடுத்த நொடியே இலகுவான முத்துவேல், “இல்ல மாப்ள, பாத்து வருசம் ஆச்சு, இப்படி திடுதிடுப்புன்னு காலங்காத்தால வந்து நிக்கியேன்னு கேட்டேன்” என்றான்.
செல்லப்பா ஒருநொடி யோசித்தான். பிறகு சிரித்த முகத்துடன், “பையன் அட்மிஷன் விசயமா விசாரிக்க இங்கன ஸ்கூலுக்கு வந்திருந்தேன்… பி.டீ வாத்தியார் நம்ம தெருக்காரர்தான்… காலைலயே வரச் சொல்லியிருந்தாரு… அப்படியே பாத்துட்டு வாரேன்” என்றான்.
“ஓ! எப்படி இருக்கான் பொடியன்? பேர் என்ன?”
“மெர்வின்”
“ம்”
“…”
“ரோஸி நல்லா இருக்காளா?”
“இருக்கா மாப்ள… சித்தப்பா மவளுக்கு கல்யாணமுன்னு திசையன்விளைல அவ அம்மா வீட்டுக்கு போயிருக்கா”
“ம்”
திடீரென நிமிர்ந்த முத்துவேல் வேகமாக அறைக்கு வெளியே சென்று இருண்டு கிடந்த தாழ்வாரத்தை உற்றுப் பார்த்தான்.
செல்லப்பா “அப்பா இல்ல மாப்ள” என்றான்.
முத்துவேல் திரும்பிப் பார்த்தான்.
“நான் உள்ள வாரப்பத்தான் அவரு எங்கனையோ வெளிய கிளம்பினாரு”
“ஓ… என்ன சொன்னாரு?”
“எதுவும் சொல்லல”
“…”
“எதுவும் பேசல… வழக்கம் போல”
“ம்”
அறையினுள் திரும்பி வந்த முத்துவேல் தரையில் அமர்ந்துகொண்டான்.
“இதுல வேணா உக்காருதியா?”
“நடிக்காதல… உக்காரு” என்று சொல்லி லேசாகச் சிரித்தான் முத்துவேல்.
செல்லப்பா கொஞ்சம் தளர்ந்தான்.
“பிறவு? வாழ்க்கையெல்லாம் எப்படி போகுது?”
“ஒன்னும் மாறல… அப்பாவோட பெயிண்ட் கடை நான்தான் பாத்துக்கிடுதேன் இப்ப… ரோஸி சின்னதா தையக்கடை வச்சுருக்கா… பையன எல்.கே.ஜி சேர்க்கணும்”
“நல்லது”
“உனக்கெப்படி போகுது… உடம்ப ஏன் ஓச்சுக்கிடுத இப்படி?”
“அத விடு மாப்ள… சொல்றதுக்கு ஒண்ணுமில்ல”
“ஜான்ஸ் காலேஜுல வேலைல இருந்தல்லா?”
முத்துவேல் பெருமூச்செடுத்தான்.
“சிகரெட் குடிக்கியா?”
“இல்ல மாப்ள… அதெல்லாம் எப்பவோ நிறுத்திட்டேன்”
மெல்லிய புன்னகையுடன் சிகரெட் பற்றவைத்துக்கொண்ட முத்துவேல் ஓரிரு நிமிடங்களுக்குச் செல்லப்பா அங்கிருப்பதையே மறந்தவனாக தன்னுள் ஆழ்ந்திருந்தான். பிறகு மெல்லிய குரலில், “அந்த வேல எப்பவோ ஓஞ்சுட்டு” என்றான்.
“ஏன்? செட் ஆகலையோ?”
“கொஞ்சம் பிரச்சனை ஆயிட்டு… ஒரு பயல அடிச்சுப்புட்டேன்”
“ஸ்டூடண்ட்டயா? எதுக்கு?”
“படிக்கற இடத்துல சாதிப் பெரும பேசிட்டு அலஞ்சான்… கூப்பிட்டு வச்சு யேசினதுக்கு, இது எங்க கோட்டன்னு திமிறா சொன்னான்… பட்டுன்னு வச்சுட்டேன் கன்னத்துல… பிரச்சன ஆயிட்டு”
“ம்”
“…”
“வேற எதுவும் செட் ஆகலன்ன?”
“இல்ல… ஷேர் மார்க்கெட்டிங்ல இறங்கி பாத்தேன்… பணம் போச்சு… பெறவு இங்கன தெருவுல ஒருத்தனோட சேர்ந்து சின்னதா மீன்கடை வைக்கலாமுன்னு அலைஞ்சேன்… அது அப்படியே… மாப்ள, அதெல்லாம் எதுக்கு பேசிகிட்டு? விடு… எதுவுமே ஒப்பேறல… அவ்வளவுதான்”
“ம், என்கிட்ட சொல்லவேண்டிதான? கல்யாணத்துக்கு பெறவு ரெண்டு மூணு மட்டம் போன் பேசினோம்… அத்தோட அவ்வளவுதான்… கழண்டு போயிட்ட”
“…”
“எதுவும் சரிப்பட்டு வரலன்னு சொல்லிருந்தா, நம்ம கடையிலேயே ஏதாச்சு பாத்து குடுத்துருப்பேன்லா… லோடு எறக்கறத கவனிச்சுக்க, பேங்க்ல செல்லான்போட, பில்லிங் அடிக்கன்னு சின்ன சின்ன வேலைக்கெல்லாம் ஆள்தான் போட்டிருக்கு… பத்து பன்னெண்டு ரூபா வாங்குதானுவோ, கைச் செலவுக்கு ஆச்சுல்லா… பேசியிருக்கலாம்லா”
“…”
“சரி விடு… இப்பவும் ஒன்னும் கெட்டுப்போகல… நல்ல நேரத்துல வந்தேன்… நாளைக்கே கூட வா… பாத்து பேசிக்கிடுவோம்”
“இல்ல மாப்ள… சரி வராது… நெலம மோசமா இருக்கு”
“என்ன மோசம்?”
“…”
“சொல்லு”
“விடு மாப்ள… நான் வர பாக்கேன்… நம்ம கடைக்கு வாரேன்… கொஞ்சம் டைம் மட்டும் கொடு!”
“நல்லது… அடுத்த திங்கள் வா… என்ன?”
“ம்”
ஒருவித மனஎழுச்சிக்கு உள்ளாகியிருந்த செல்லப்பா தொடர்ந்து சில நிமிடங்களுக்கு நிறுத்தாமல் பேசினான். வியாபாரம் குறித்த விவரங்களில் துவங்கி, கல்லூரியில் அவர்களுடன் படித்த பிற நண்பர்களின் தற்போதைய நிலை வரை பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டான். முத்துவேல் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தான். இவை அனைத்திற்கும் அப்பால் எங்கோ இருப்பதைப் போல் அவன் முகம் உறைந்து காணப்பட்டது. ஒரு கட்டத்தில் அந்த நிச்சலத்தால் பாதிக்கப்பட்ட செல்லப்பா தனது பேச்சொழுக்கை அப்பட்டமாக நிறுத்திக்கொண்டான்.
அறையினுள் சில நொடிகளுக்கு மௌனம் நிலவியது. மடிமேல் கிடந்த உள்ளங்கையை எப்பொருளுமின்றி நோக்கிக்கொண்டிருந்த செல்லப்பா மெல்ல நிமிர்ந்து, “அம்மா தவறிட்டுன்ன?” என்றான்.
சிரம் தாழ்த்தி அமர்ந்திருந்த முத்துவேல் ஆம் என்று தலையசைத்தான். பிறகு சட்டென நிமிர்ந்து, “உனக்கெப்படி தெரியும்?” என்று கேட்டான்.
அவன் பார்வையில் இருந்த எதோ ஒன்று செல்லப்பாவைக் கொஞ்சம் அச்சுறுத்தியது. ஆனால் உடனடியாக தன்னை மீட்டெடுத்துக் கொண்டவன், “போட்டோ மாட்டிருந்துச்சு… கவனிச்சேன்” என்றான்.
“ம்”
“என்னாச்சு அம்மாக்கு?”
“…”
“உடம்பு எதுவும் முடியலையா? நல்லா துறுதுறுன்னுல்லா இருப்பாங்க”
“நல்லாத்தான் இருந்தா”
“…”
“என் அப்பன்… அந்த… அந்த ஈனப்பய அவள அடிச்சு அடிச்சே சாகடிச்சான்”
செல்லப்பா அதிர்ந்துபோனான். திடமான ஒன்றைப் பற்றிக்கொள்ள விழைபவனைப் போல அங்கும் இங்கும் பார்த்துவிட்டு விரல்களைக் கோர்த்து இறுக்கிக்கொண்டான். பிறகு லேசான நடுக்கத்துடன், “நம்ம அப்பாவா?” என்று கேட்டான்.
முத்துவேல் அவனை முறைத்தான். பிறகு சற்று விட்டேற்றியாக, “விடு” என்றான்.
செல்லப்பாவிற்கு அங்கிருந்து கிளம்பினால் தேவலை என்றிருந்தது. ஆனால் மறுநிமிடமே முத்துவேலின் மீது அளவுகடந்த பரிதாபம் எழுந்தது. ஒருமுறை உச்சுக்கொட்டிவிட்டு, “என்ன பேசன்னு தெரியல மாப்ள… சங்கடமா இருக்கு… நீ கடைக்கு வா… நாம பாத்துக்கிடலாம்… மனச போட்டு வருத்திக்காத… எல்லாத்துக்கும் வழி உண்டு” என்றான்.
“அந்த ஆளுக்கு அவன் கை சுத்தமா இருக்கணும்… எதுவும் அவன் தலைமேல சுமையா இறங்கிற கூடாது… பண்றதெல்லாம் பண்ணிட்டு…”
செல்லப்பா சொன்னதை உள்வாங்கிக் கொள்ளாதவனைப் போல் உச்சக்குரலில் பேசிச் சென்ற முத்துவேல் சட்டென அமைதியானான். எதற்கோ அஞ்சுவதைப் போல் அவன் விழிகளில் மெல்லியதோர் அதிர்வு குடியேறியது. பிறகு அசட்டையாகக் கையசைத்துவிட்டு பேச்சைத் தொடர்ந்தான். ஆனால் இப்போது அவன் குரல் மிகவும் நிதானமாக இருந்தது.
“அம்மா அந்த காலத்து மனுசி… தாலி அவளுக்கு உசுரு, அத கெட்டின எங்கப்பன் அவளுக்குச் சாமி… அவன் புடிச்ச முயலுக்கு மூணு காலுன்னு சொன்னா, அட ஆமான்னு இவ தயங்காம சொல்லுவா… கொஞ்ச வருசமா எனக்கு எதுவுமே சரியா அமஞ்சு வரல மாப்ள… ஏதேதோ கோளாறு ஆயிட்டு… உறக்கமில்ல… என் நெலம கெட கெட, பல வருசமா விட்டிருந்த குடிப் பழக்கம், திரும்ப வந்துட்டு அப்பனுக்கு… கையும் நீள ஆரமிச்சுட்டு… எல்லா எழவுக்கும் நீதாண்டி காரணமுன்னு அவள சீரழிப்பான்… அவளும் வாங்கிக்குவா… பெறவு ராவெல்லாம் இந்த ரூம் வாசல்ல கடந்து ஒப்பாரி வைப்பா… ஒரு நாள் நெலம ரொம்ப மோசமாயிட்டு… என்ன நினைச்சாலோ பொசுக்குன்னு அவன்ட்ட மொறச்சுட்டு நின்னா… பித்து புடிச்ச கணக்கா ஏதேதோ கத்தினா… என் மவன் நாசமா போனதுக்கு நீதான் காரணமுன்னு அவன் சட்டைய புடிச்சு அலறிட்டா… அவ பொய் ஒன்னும் சொல்லிடல… எல்லாத்துக்கும் அவன்தான் காரணம்… அவ அத சத்தமாச் சொன்ன அன்னிக்கு தீ பட்ட புழு கணக்கா சுருண்டான் அவன்… ஆனா அன்னிக்கு என் அம்மாக்குள்ளயும் என்னமோ செத்துட்டு… அதுக்கு பெறவு ரொம்ப நாள் வாழல அவ”
“…”
“ஊருக்குள்ள நிமிந்து நிக்க முடியல… கிராமத்துல ஒரு நல்லது கெட்டதுல போய் கலந்துக்கிட முடியல… அத்தன ஆளும் ஒதுக்கி வச்சாச்சு… எல்லாத்துக்கும் யார் காரணம்? ம்? புளியம்பட்டி சீனிச்சாமி மவனா மட்டும் பொறக்கலன்னா எப்படி எப்படியோ வாழ்ந்திருக்கலாம்… இன்னைக்கு எல்லாம்… தன்ன புறான்னு நம்ப விரும்பற பருந்து மாப்ள அவன்… அவன பத்தி…”
திடீரென அலறிய செல்லப்பாவின் அலைபேசி முத்துவேலின் பேச்சைக் கூர்மையான கத்தியைப் போல் வெட்டியது.
3

அழைப்பை ஏற்ற செல்லப்பா, “ம்” என்று மட்டும் சொன்னான்.
ஜன்னலோரம் நின்ற சீனிச்சாமி அலைபேசியைக் காதில் வலுவாக அழுத்தியபடி நடந்து வாசல் பக்கம் வந்து தொலைவில் நின்ற நால்வரில் முதன்மையானவைப் பார்த்து தலையசைத்தார். பிறகு அழைப்பில் காத்திருந்த செல்லப்பாவிடம், “தம்பி, கிளம்பி வெளிய வந்துருய்யா” என்றார்.
அவன், “ம்?” என்றான்.
சீனிச்சாமி “கேள்வி கேக்காதய்யா… ஒண்ணுக்கு இருந்துட்டு வாரேன்னு ஏதாச்சு சொல்லிட்டு அப்படியே வெளிய வந்துருய்யா” என்று மன்றாடினார். அவருக்கு மூச்சிரைத்துக்கொண்டிருந்தது.
முத்துவேலிடம், “மாப்ள, முக்கியமான போன்… இந்தா பேசிட்டு வாரேன்” என்று சொல்லிவிட்டு எழுந்தான் செல்லப்பா.
முத்துவேல் பீதியுற்ற முகபாவத்துடன் எழுந்துகொண்டான். அப்போது சட்டென அறையினுள் பாய்ந்த சீனிச்சாமி, செல்லப்பாவின் கையைப் பற்றி அவனை வெளியே இழுத்து, கதவை வேகமாகப் பூட்டினார்.
“அப்பா” என்று பதறினான் செல்லப்பா.
உள்ளிருந்து முத்துவேல், “டேய்!!” என்று கூச்சலிட்டான்.
“எதுவும் கேக்காதய்யா… அப்படி வந்துரு” என்று சொல்லிக்கொண்டே செல்லப்பாவை வெளியே அழைத்து வந்தார் சீனிச்சாமி.
அறையின் கதவைப் படார் படாரென அறைந்து மிகவும் தரக்குறைவான வசைகளை உச்சக்குரலில் உமிழ்ந்துகொண்டிருந்தான் முத்துவேல். அவன் குரல் முற்றிலுமாக மாறியிருந்தது. அதைக் கேட்ட செல்லப்பாவின் உடல் சில்லிட்டுப் போனது.
அந்த நான்கு பேரும் இப்போது வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்தார்கள்.
“ஆள் வந்துட்டாவளா?” என்று சீனிச்சாமி கேட்டதற்கு அதில் ஒருவன், “ஆமா, இப்பதான் வந்தாரு” என்று சொன்னான்.
“உள்ளுக்குத்தான் இருக்கான் சார்” என்றார் சீனிச்சாமி.
மூன்று பேர் வேகமாக வீட்டினுள் சென்றார்கள். நான்காமவன் சீனிச்சாமியிடம் ஏதோ படிவத்தை நீட்டினான். நடுங்கும் விரல்களால் பேனாவைப் பிடித்து அதில் கையொப்பமிட்டார் அவர்.
வீட்டினுள்ளிருந்து எழுந்த கொடூரமான அலறல் தெரு நெடுக எதிரொலித்தது. கணநேரத்தில் அங்கே பெருங்கூட்டம் திரண்டது. இரண்டு நிமிடங்கள் கழித்து முத்துவேல் அந்த மூன்று நபர்களால் வெளியே இழுத்து வரப்பட்டான். வாட்டசாட்டமாக இருந்த இருவர் அவன் கைகளைப் பிடித்திருக்க, ஒட்டகத்தைப்போல் உயர்ந்திருந்த மூன்றாமவன் தனது நீண்ட கரங்களை அவன் கழுத்தைச் சுற்றி இறுக்கி, முழங்கையால் அவன் தோள்பட்டையை அழுத்தியிருந்தான். வலையில் சிக்கிய வனமிருகத்தைப் போல் திமிறிக்கொண்டிருந்தான் முத்துவேல். பற்களைக் கடித்து வசைபாடியும், பிறகு மிதமான குரலில் தனக்கு ஒன்றுமில்லை என்று எடுத்துச் சொல்லியும், மறுநொடியே வீறிட்டு அழுதும் அவன் துடிப்பதைக் காண முடியாமல் மறுபுறம் திரும்பிக்கொண்டான் செல்லப்பா.
சீனிச்சாமி சிலை போல் நின்று அனைத்தையும் நோக்கிக்கொண்டிருந்தார்.
தெருக்கோடியில் மருத்துவமனை சீருடை அணிந்து நின்ற ஒருவன் துடித்துக்கொண்டிருந்த முத்துவேலின் உடம்பில் ஊசி ஒன்றைச் செலுத்தினான். முறுக்கிக்கொண்டிருந்த அவனது தசைகள் தளர்வது வரை அவனைத் திடமாக பிடித்து நின்றனர் மூவரும். பிறகு அங்கிருந்த டெம்போவினுள் அடிபட்ட மாட்டையென அவனை ஏற்றிக்கொண்டு புறப்பட்டனர்.
சீனிச்சாமி “நான் பின்னால வாரேன் சார்!” என்றதும் அருகே நின்றிருந்த நான்காமவன் சரியென்று தலையசைத்துவிட்டு மருத்துவமனை சீருடை அணிந்த நபருடன் வண்டியிலேறி கிளம்பிச் சென்றான்.
இடிவிழுந்த மரத்தைப் போல் உருக்குலைந்து, இருண்டு நின்றிருந்த செல்லப்பாவின் தோளில் கைவைத்தார் சீனிச்சாமி.
நடுக்கத்துடன் கண் திறந்தவன் அவரைத் திகிலுடன் வெறித்தான்.
“மன்னிச்சுருய்யா…” என்றார் சீனிச்சாமி.
“…”
“விசயத்த விளக்கிச் சொல்லிருக்கலாம்… ஆனா காரியம் கெட்டுருமோன்னு நெனப்புல எதுவும் சொல்லல… போன மட்டம் இதே மாதிரி மாத்திரை போடாம கடந்து, பிரச்சனை முத்தினப்ப பெரிய விவகாரமாயிட்டு… ஆஸ்பத்திரி ஆள் வாராவன்னு தெரிஞ்சு கைய பிளேடால அறுத்துகிட்டான்… அதான் கொஞ்சம் பேசிட்டு, அமைதியா கடந்தா கரைச்சல் இருக்காதுன்னு உன்ன கூப்பிட்டேன்”
“…”
“உள்ள வந்து தண்ணி குடிக்கியா?”
“என்னப்பா இதெல்லாம்? என்ன நடக்கு?”
சீனிச்சாமி தலைகுனிந்து நின்றார். கருத்து வெடிப்புற்றிருந்த அவரது இதழ்கள் லேசாய் வெடவெடத்தன.
“எல்லாம் போச்சுய்யா… எப்படி இருந்த புள்ள?”
தனது விழிகள் இரண்டும் ஈரமாவதை உணர்ந்த செல்லப்பா ஆழமாய் மூச்செடுத்தான்.
“படிப்பு, விளையாட்டுன்னு எல்லாத்துலயும் முன்னுக்கு நின்னான்… ஆள் நல்ல செவப்பா, வாட்டசாட்டமா எப்படி இருந்தான்? மவராசன் கணக்கா… என்ன ஆச்சுன்னே தெரியலய்யா”
“நல்லாதானே இருக்கான்… வேலைக்கு எல்லாம் போனானே, இடையில… இப்பகூட என்கிட்ட நல்லாதானப்பா பேசிட்டிருந்தான்… எனக்கு ஒண்ணுமே புரியல”
“அங்கன பிரச்சன ஆகி வெளிய வந்தான்… பெறவு என்னலாமோ முயற்சி செஞ்சு பாத்தான் எதுவுமே சரியா வரல… தோத்துப்போவ புடிக்காது அவனுக்கு… ஆனா முட்டி மோதி பாத்தும் எதுவும் வெளங்கல… ஆள் துவண்டுட்டான்… ராத்திரியில உறங்காம… நடூல கஞ்சா குடிக்க ஆரமிச்சு… புத்தியெல்லாம் எப்படியோ போயிட்டு… மூணு வருசமாவே இப்படித்தான் கடக்கான்… ஆஸ்பத்திரி, மருந்து, ரொம்ப முரண்டு வந்தா கூட்டுபோய் கரண்டு வைக்கணும்”
“என்னால நம்பவே முடியல… எனக்கு… என்ன… என்னன்னு சொல்ல” செல்லப்பா ஏதோ பேச முயன்று தோற்றான்.
சீனிச்சாமி சில நொடிகளுக்கு அமைதியாக இருந்தார். பிறகு மருத்துவமனை வாகனம் சென்ற திசையை வெறுமே நோக்கிவிட்டு, “ஒத்த புள்ள!” என்று சொல்லி விம்மினார்.
அதிர்விலிருந்து மீண்டிராத செல்லப்பா, “எப்படிப்பா… எப்படி இப்படி ஆகும்? என்ன ஆனான்?” என்று ஏதேதோ பிதற்றினான்.
“தெரியலய்யா…”
“…”
“லெட்சுமியோட தாய்மாமனுக்கு சின்ன வயசுல புத்தி பேதலிச்சதா ஊருல பேச்சுண்டு… பெறவு…”
செல்லப்பா நிமிர்ந்து அவரை நேருக்கு நேராக நோக்கினான்.
சீனிச்சாமியின் பேச்சு தானாக அறுபட்டது. அவன் விழிகளைச் சந்திக்க விரும்பாதவரைப் போல் பக்கவாட்டில் திரும்பி பீடி ஒன்றைப் பற்றவைத்துக்கொண்டார். பிறகு தன்னிடமே பேசிக்கொள்ளும் தொனியில் “விரும்பின புள்ளைய கெட்ட முடியாம போனதுல மனசு கினசு விட்டுப்போயி என்னமோ ஆயிருக்குமோய்யா? ஒன்னும் புரியல” என்றார். கயிற்றின் மீது நடப்பதைப் போல் அவர் கால்கள் இரண்டும் ஏனோ பரபரத்தன.
வலதுகையை லேசாய் உயர்த்தி அசைத்தபடி ஏதோ சொல்ல வந்தான் செல்லப்பா.
அவனை அப்படியே இடைமறித்து, “தெரியலப்பா… விடு… ஏன் ஏன்னு கேட்டு கேட்டு சலிச்சுப் போச்சு” என்று பேச்சை முடிக்கும் தொனியில் சொன்னார் சீனிச்சாமி.
எண்ணங்களைத் தொகுத்துக்கொள்ள இரண்டொரு நொடிகள் எடுத்துக்கொண்ட செல்லப்பா மிகவும் சாந்தமான குரலில், “புடிச்ச புள்ளைன்னா யாரு? ரோஸிய சொல்லுதீங்களா?” என்றான்.
சீனிச்சாமியின் முகம் சுருங்கி உடல் லேசாய்க் குன்றியது. அந்தப் பேச்சைத் தொடர்வது அபத்தம் என்று பட்டது.
“என்னப்பா பேசறீங்க?”
“இல்லய்யா… மூணு நாலு வருசமாத்தான் இந்த பிரச்சனையெல்லாம்… ஒருவேள…”
“அப்பா… முத்துவேல் ரோஸிய விரும்பினான்… பெறவு ரெண்டு பேரும் பிரிஞ்சாங்க… அதுக்கு பெறவு ஒன்னரை வருசம் கழிச்சுத்தான் நான் அவள கெட்டினேன்… அந்த ஒன்னரை வருசமும் நாங்க டச்லதான் இருந்தோம்… எங்க கல்யாணத்த முன்ன நின்னு நடத்தி வச்சதே முத்துவேல்தான்… அவனுக்குள்ள அப்படி எந்த இதுவும் கிடையாது”
“…”
“ரோஸி அப்பாக்கு அவ முத்துவேலோட ஓரளவுக்கு மேல நெருங்கி பழகறது புடிக்கல… அதனாலத்தான் அவ…” செல்லப்பா பேசுவதை நிறுத்திக்கொண்டு சீனிச்சாமியைப் பார்த்தான்.
அவரும் தயக்கத்துடன் நிமிர்ந்து அவன் விழிகளை எதிர்கொண்டார். அடிநெஞ்சில் துளிர்த்த அவமானம் அமிலம் போல் தேகத்தைப் பொசுக்கியது. பீடியை வீசிவிட்டு தொலைவில் எங்கோ பார்த்தபடி வாயைத் தொடர்ச்சியாகத் துடைத்துக்கொண்டே இருந்தார். விரல்களின் இடுக்குகள் வழியாக புகை கசிந்துகொண்டிருந்தது.
“நான் கிளம்புதேன்ப்பா” என்றான் செல்லப்பா.
“யய்யா…” என்று முனகலுடன் அவன் கையைப் பற்றிக்கொண்ட சீனிச்சாமி அக்கணம் மிகவும் நலிந்தவராய் தோன்றினார்.
“எதாச்சுன்னா போன் பண்ணுங்க” என்ற செல்லப்பாவின் குரலில் பரிவு இருந்தாலும் அவன் முகத்தில் அச்சம் மற்றும் அருவருப்பின் திட்டுக்கள் வந்திருந்தன.
சீனிச்சாமி அவன் கைகளை விடுவித்தார்.
4
இருளில் மூழ்கியிருந்த அவனது அறையின் ஒரு மூலையில் சுருண்டு கிடந்தான் முத்துவேல். தடித்த கரங்கள் இரண்டும் பக்கவாட்டில் விசித்திர கோணங்களில் துவண்டு கிடந்தன. முகம் வெளிறி பிரேதக்களைப் பெற்றிருந்தது. சிரத்தின் வழி புகுந்த மின்சாரம் உயிர்ப்பூட்டும் நரம்புகள் அனைத்தையும் கசக்கிப் போட்டிருந்தது. சொக்கிப்போயிருந்த விழிகள் திறந்துகிடந்த கதவுகளையே நோக்கிக்கொண்டிருந்தன.
முற்றத்தில் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தார் சீனிச்சாமி. நினைவுகளால் துரத்தப்படும் மனதைப் போதைக்கடலில் மூழ்கடித்து மறைத்துவிட முற்பட்டார். இரவும், இளங்காற்றும் ஆசுவாசம் அளிக்காமல் கடந்து சென்ற நாளை, கீழ்மையான இந்த வாழ்வை, அதன் பொருளின்மையை உணர்த்துவதாக அமைந்தது.
பக்கவாட்டில் ஏதோ சலசலப்பைக் கேட்டவர் பீடி ஒன்றைக் கொளுத்தியபடி மெல்லத் திரும்பினார். முத்துவேல் இருக்கும் அறையின் ஜன்னலின் கீழே, வாடிப்போயிருந்த அந்த வெற்றிலைக்கொடியின் மீது அன்றைய தினத்தந்தி விரிந்து கிடந்தது. காலையில் கைதவறி அது விழுந்ததை நினைவுகூர்ந்தபோதே அங்கே நின்றபடி ஒட்டுக்கேட்ட உரையாடலின் சில துணுக்குகளும் செவியினுள் ரீங்கரித்தது.
சீனிச்சாமி எழுந்து வீட்டிற்குள் நடந்தார். சட்டையைக் கழற்றி ஓரமாக வைத்துவிட்டு வேட்டி முடிச்சைத் தளர்த்தியபடி அறைக்குள் சென்று மெத்தை மேல் அமர்ந்தார்.
இதழோரத்தில் குருதி வழிய தலைவிரிகோலமாய் தரையில் கிடந்த லெட்சுமி திடீரென வெகுண்டெழுந்து சன்னதம் கொண்டவளைப் போல் பெருகி, சட்டையைப் பிடித்து, “அந்த அவிசாரி மவன் பேச்ச கேட்டு எத்தன தாலிய அறுத்துருப்ப? கெட்டினவன, பெத்தவன பறிகொடுத்த பொம்பளேல், வயித்துலையும் மார்லையும் அறைஞ்சுட்டு, வாரி இறைச்ச மண்ணெல்லாம் அனாமத்தா போவுமா?” என்று கேட்ட தருணம் மீண்டும் ஒருமுறை கண்முன் அரங்கேறியது. தொலைதூரப் பிரதேசங்களில், ஊருறங்கிய வேளைகளில் அவர் வாழ்ந்த குறுகியகால வாழ்வின் எதிரொலி அவள் குரலில் தொனிக்கும் என்று அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. எண்ணத்திற்குப் புலப்படாத ஒரு ஒட்டுமொத்தத்தினால் உமிழப்பட்டவராய் அக்கணம் தன்னை உணர்ந்திருந்தார் அவர்.
மெத்தையோரத்தில் கிடந்த கடலைமிட்டாய் பொட்டலத்திலிருந்து கிளம்பிய எறும்புகள் அவர் கைவழி ஏறி உடலை மேய்ந்தன. நூற்றுக்கணக்கான எறும்புகள் தன்மேல் ஊறுவதன் உணர்வேயில்லாமல் எதிரே நிலவொளியில் மிளிர்ந்துகொண்டிருந்த மனைவியின் கருப்புவெள்ளை படத்தின் மீது விழிகளை நட்டுவைத்து அமர்ந்திருந்தார் சீனிச்சாமி.

