அலையாட்டங்களின் விசித்திரங்கள்

செந்தில்குமார் நடராஜன் இலக்கிய ஆர்வலர். தேர்ந்த வாசகர். கும்பகோணத்தைச் சேர்ந்த செந்தில்குமார் பல ஆண்டுகளாக சிங்கப்பூர்வாசி. சிங்கப்பூரின் தங்கமுனை சிறுகதைப் போட்டியில் 2019ஆம் ஆண்டு முதல் பரிசும், 2017ஆம் ஆண்டு மூன்றாம் பரிசும் வென்றவர். ‘நீர்முள்’ இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு. ஸீரோ டிகிரி, எழுத்து பதிப்பக வெளியீடு. பத்துச் சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு இது.

அன்புக்கும் காதலுக்கும் அங்கீகாரத்துக்கும் உயிர்வாழ்வுக்கும் விடுதலைக்கும் போராடும் மனிதர்களின் கதைகள் இவை. முள்ளாகும்போது நீர் கூர்வாளைவிட கொடுமையாகத் தாக்கக்கூடியது, அப்படியான நீர் முட்கள் அம்மனிதர்களைக் குத்திக் கிழிக்கும் உணர்வுகளையும் வாழ்க்கைச் சூழலையும் தேர்ந்த மொழியில் எழுதியுள்ளார் செந்தில்குமார்.

விடுதலை என்பது ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது, அதை உணரும்போது எந்த முள்ளும் குத்துவதில்லை என்பதைச் சொல்லும் கதை ‘நீர்முள்’. இருட்டு உலகின் இரக்கமற்ற தன்மையை, அடிமைத்தனத்தின் கோரமுகத்தைச் சொல்லும் கதை.

இந்தோனேசியாவின் எல்லைக்குட்பட்ட அரஃபுரா கடற்பரப்பில் விலைமதிப்புள்ள டியூனா வகை சூரை மீன்களைப் பிடித்து டன் கணக்காகச் சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்யும் கும்பலில் ஒருவன் ஜோயோ. ஏழை நாடுகளில் ஆசைகாட்டி பிடித்து வரும் அடிமைகளைச் சாட்டையடி, கொலை, மிரட்டல் மூலம் பயமுறுத்திப் போதிய உணவு, வசதிகள் எதுவுமே இல்லாத சிறையில் அடைத்து வலுவற்றவர்களாக்கி வேலை வாங்குகிறான். வாழ்நாள் அடிமைகளாக விடுதலை பற்றி எண்ணக்கூடிய முடியாது தினமும் 20 மணி நேரம் வேலை பார்க்கும் அடிமைக்கூட்டத்தில் சிறிது சமநிலை குலையும்போது, மீண்டும் கட்டுக்குள் கொண்டுவர கொலை செய்கிறான். எவ்வித உணர்வுமின்றி வெட்டுக்கத்தியால் அன்வரைக் கொலை செய்வதில்தான் கதை தொடங்குகிறது. ஜோயோவின் கொடூர சித்தத்தைத் தன் அசாத்திய அமைதியால் அசைக்கிறான் அறிவுவளர்ச்சியற்ற மியோ. அசுரத்தனமான அவனது உழைப்பும் அமைதியும் கூர்பார்வையும் ஜோயோவைச் சங்கடப்படுத்துவதை “கலவரமற்ற அவன் கண்களைக் காண்பது ஜோயோவுக்குத் திருப்திகரமாக இல்லை. மீண்டும் கடலை வெறித்தான்,” என்று ஒற்றைவரியில் சொல்லிச் செல்கிறார்.

அன்வர் உயிரோடு இருக்கும் வரையில் கேள்விகள் கேட்டுக்கொண்டே இருக்கும் மியோ, அவன் கொல்லப்பட்ட பின்னர் அமைதியாகிறான். சலிப்பின்றி வேலை செய்கிறான், கடைசியில் விபத்தில் இறந்துபோகிறான். மீயோவின் சலனமின்மை ஜோயோவுக்குத் தரும் சங்கடமும் சீண்டலும்தான் கதையின் ஆன்மா.  அந்த உயிர்ப்பும், இருநிலைகளுக்குமான முரண்பாடும் எழுத்தில் கடத்தப்படவில்லை.

கதையின் களமான சட்டவிரோதச் செயல்களும் அதன் நடவடிக்கைகளும் விவரிவாகச் சொல்லப்படும் அளவுக்கு  மனித மன ஆழங்களும் விவரிக்கப்பட்டிருக்கலாம். இதனால், அன்வரின் கொலையைப் படகில் இருந்தவர்கள் எதிர்கொண்ட “பெரிதும் பொருட்படுத்தாத” மனநிலையே வாசகருக்கும் ஏற்படுகிறது. அறிவுவளர்ச்சியற்ற, தன்மீதான அடக்குமுறைகளை முற்றாகப் புரிந்துகொள்ள முடியாதநிலையே அமைதியைத் தருகிறதா, அமைதி எதிர்ப்பின்மையாகிறதா என இக்கதை கேள்விகளை எழுப்புகிறது.

நீண்ட நாவலுக்குரிய அத்தனை சாத்தியங்களையும் கொண்ட கதைக்களம்.

இக்கதையில் நீர் முள் புறத்திலிருந்து தாக்கி அகத்தை அழித்துச் சிதைக்கிறது, அதுவே ‘முதுகுப்பாறை’ கதையில் அகத்தை அழித்து அதனால் உடலை வருத்துகிறது.  

மனித உறவுகள் மிக விசித்திரமானவை. அந்த உறவுகள் மனத்தில் ஏற்படுத்தும் அலையாட்டங்கள்  வியப்பானவை. அது வாழ்க்கைக்கு கற்பனைச் சுவையூட்டுகிறது; கற்பனை, படைப்புக்கு உயிரூட்டுகிறது.

ஒரு குழந்தையின் தொடக்ககால மனவளர்ச்சியில், எதிர்பாலின பெற்றோர்மீது ஈர்ப்பை உணரும் சிக்மண்ட் பிராய்ட்டின் இடிபஸ் கோட்பாட்டை (Oedipal Complex) அடிப்படையாகக்கொண்ட ‘முதுகுப்பாறை’ இந்தத் தொகுப்பின் குறிப்பிடத் தக்க கதை என்று சொல்லலாம்.

சமூக நியதியில் உடல் ஈர்ப்புக்கு அப்பாற்பட்ட, புனிதமானவையாக உருப்பெற்றிருக்கும் தந்தை- மகள், தாய் – மகன், சகோதரி – சகோதரன், தாத்தா -பேத்தி முதலிய உறவுகள் அதீத அன்பினால், பாசத்தினால் சில நேரங்களில் வெறுப்பினாலும் வகுக்கப்பட்டிருக்கும் எல்லைகளைக் கடந்து ஆட்கொள்கின்றன. கட்டவிழ்த்த அந்த  மனத்தின் போக்கையும் ஆற்றலையும் எத்தனையோ பேர் எழுதியுள்ளார்கள். செந்தில்குமாரும் எழுதிப் பார்த்துள்ளார்.

அப்பாவின் மரணத்தில், மகளின் எண்ணங்களாகவும் செயல்களாகவும் கதை சொல்லப்படுகிறது.

கருத்து உயர்ந்து நிற்கும் பாறை. எதற்கும் அசையாமல், எதிர்வினை ஆற்றாமல் நிற்கும் பாறையின் கம்பீரம் கவர்கிறது. அமைதி காப்பதால் அதன் ரகசியங்கள் சுவாயரஸ்மாகின்றன. அதை ஆட்கொள்ளப் பெரும் விருப்பு ஏற்படுகிறது. பார்க்கப் பார்க்க  அள்ளிக் கொஞ்சி, அதைத் தின்று தீர்க்கும்  அவா பெருகுகிறது.

அந்தப் பாறை அப்பா.

அப்பா பாறையாக மாயம் செய்கிறார்.

மகளுக்கு அப்பாமீதான அன்பும் பாசமும் அளவு கடந்ததாகின்றன. அப்பாவைப் பிரியக் கூடாது எனும் ஏக்கம் எழுகிறது. அப்பாமீது தான் கொண்டிருக்கும் அளவு அன்பும் பாசமும் அப்பாவுக்கும் தன்மேல் வேண்டும் என எதிர்பார்ப்பு ஏற்படுகிறது. அதை உறுதிசெய்துகொள்ளத் அவளின் மனம் துடிக்கிறது.

தந்தையின் மனத்தைக் கவர்ந்த கருத்தம்மா இடத்தில் தன்னை வைக்க விழைகிறாள் மகள்.  தந்தையை ஆட்கொண்ட கருத்தம்மாவாகத் தன்னை நினைத்துக்கொள்வதில் விம்மி நிற்கிறாள். அப்பாவின் பாவனையான முத்தம், தன்னையே உறிஞ்சிக்கொள்வதாக உருகுகிறாள்.  தன் தாய்க்கோ, ஊருக்கோ அல்லது அவர் ரசித்த கருத்தம்மாவுக்கோ கிடைக்காத தந்தையின் முழுமையை தான் அடைந்துவிட அவள் மனம் போட்டிபோடுகிறது.

தந்தைக்கு எந்தவிதத்திலும் ஏற்றவள் இல்லையெனத் தன் தாயைக் கருதும் மகள், தாயை வெறுக்கிறாள். தந்தையிடம் மகள் நெருங்க நெருங்க அதை விலக்குவதிலேயே தாய் குறியாக இருக்கிறாள்.

தந்தைக்கு வாதம் ஏற்பட்டு உடல் இயங்காமல் போன நிலையில், அவருக்குச் சேவை செய்கிறாள். தந்தையைக் குழந்தையாக, குளிப்பாட்டி விடுகிறாள். தந்தையின் இயலாமை, அவள்மீதான அளவுகடந்த நேசத்தை வெளிப்படுத்த முடியாத நிலை அவளை வேதனைப்படுகிறது. அந்த நேசம் எந்த அளவு என்பதை அறிய அவள் மனம் துடிக்கிறது.

“அப்பா, நான் உன்னைத் தொட்டுக் குளிப்பாட்டுறப்ப உனக்கு என்னவோபோல இல்லையா,” என்று கேட்டுவிட்டு தந்தையைக் கட்டிக்கொண்டு உடைந்து அழுகிறாள். “என்னை விட்டுப் போகாதே” என்று கதறுகிறாள். அதன்பின் தந்தையின் இறப்பை அவளால் ஏற்றுக்கொள்ள முடிகிறது. அழாமல், உடைந்துவிடாமல், தந்தையை ரசிக்க இயல்கிறது.

வர்ணிப்பும் உறவுச் சூழல்களும் பாத்திரங்களுக்கு உயிர் கொடுக்கின்றன. எண்ண ஓட்டமும் நிகழ் காட்சியுமாக நகரும் கதை, வாசிப்பில் கவர்கிறது.

மகள் அந்த வரியை வாய்விட்டுச் சொல்லாமல் இருந்தால், இன்னும் சிறந்த வாசிப்பை இந்தக் கதை தரக்கூடும்.

சொல்லாமல் சொல்வதும் சொல்லுக்குள்ளே உணர்வுகளை ரசசியமாக நகர்த்திச் செல்வதும்தானே கலை. அந்தக் கலைகூடும்போது, அறிந்த, பலமுறை வாசித்தவைகூட  உள்ளுக்குள் இருந்து ஏதோ ஒன்றை உடைத்து விடும்.

தங்கம்மா மீதான பிரியத்திலேயே வாழ்வதுடன் தன் பிரியத்துக்குரிய பெண்ணாக மகளைக் காணும் தந்தை,  மகளின் போக்கை அனுமதிப்பதுடன் அதை ரகசியமாக விரும்பவும் செய்வதை நியாயப்படுத்த, பாதிக்கப்பட்டவரான அம்மாவைக் குற்றவாளியாகக் காட்டவேண்டியது அவசியமா என்ற கேள்வி எழுகிறது. ஆண் மனத்தின் பார்வை அப்படித்தான் இருக்குமோ என்று பொதுமைப்படுத்தவும் தோன்றுகிறது.

‘தபோவனம்’ நல்லதொரு சிந்தனை.  தங்கமுனை போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை.

ஒரு பெண் உடலையும் மனத்தையும் முழுமையாக ஒப்படைக்கும் தருணத்தை நீண்டதொரு உரையாடல் வழி கலைத்தன்மையுடன் நிகழ்த்தியுள்ளார்.  ஓவியனான ராமுவுக்கு ஏற்படும் மனத்தடையை போக்க வரும் ஜேன் அவனைவிட  அறிவு பெற்றவளாக இருக்கிறாள். மனமகிழ் கூடத்தில் நடனமாடும் அவளைக் கலையும் வாழ்வும் செதுக்கியிருக்கின்றன.

தாய்லாந்தில் பாரம்பரியமான கோன் நாடக நடன மங்கைகளான மாலியின் மாணவிகள் ஜேனும் சாராயும். நெசவுக்குடும்பத்தில் பிறந்து கலைமீது கொண்ட மிகு ஆர்வத்தால், குருவிடம் எல்லாவற்றையும் விட்டுக்கொடுக்கிறாள். ஆனாலும், நடனத்தின் உச்சத்தைத் தொடும் உறுதியுடன் போராடுகிறாள். அது சாத்தியமில்லை எனத் தெரிந்தபோது, குருவைக் கொல்கிறாள். அவளின் உறுதியும் கடப்பாடும் மிக்க மாணவிகளாகவே ஜேனும் சாராயும் திகழ்கிறார்கள். மாலி இறந்தபின்னர் உடல் தொழிலாளிகளாக விற்கப்பட்டபோதும் கலையின் மேன்மையைத் தக்கவைத்து உயர் நிலையிலேயே இருக்கிறார்கள். அவர்களின் அறிவும் திறனும் அவர்களை நாடும் ஆண்களின் ஈகோவைச்  சீண்டுகிறது. அவர்களை வென்றுவிடும் வெறியை ஏற்படுத்துகிறது. இந்தப் போராட்டமே கதை.

ராமாயணத்தைத் தழுவி உருவான தாய்லாந்தின் ராமகியான், ஓவியனின் மனத்தடை, நடனமணியின் கலைமனம் மூன்றையும் இணைத்து அழகியலோடு கதையை வடித்துள்ளார் ஆசிரியர்.

தாய்லாந்தின் கோன் நடனம், அதன் நுணுக்கங்கள், அதன் தத்துவம் என்று ஆழமாக ஆய்வு செய்துள்ளார்.  அதன்வழி, ஜேனின் நகர்வுகளிலும் பேச்சுக்களில் வெளிப்படும் ஒருவித மறைமொழி, அவளது தோரணைகள் எல்லாவற்றின் மூலமாகவும் தாய்லாந்தின் ஒரு கலைப் பிரிவின் பண்பாட்டு மரபை நுட்பமாகச் சொல்ல முனைந்திருக்கிறார் செந்தில்குமார்.  

தருணங்களில் உருவாகும் மனநிலைகளை ஒட்டி, மனித நடத்தையில் வெளிப்படும் மாற்றங்களைக் காட்சிப்படுத்துவது செந்தில்குமார் சிறுகதைகளில் இயல்பாக உருவாகிவருகிறது. இதை ‘பிறழ்வு’ கதையிலும்  நன்கு உணரலாம்.

மெல்வினுக்கு விபுவின் மீது தீராக் காதல், மெல்வினுக்கு லிடி மீது பைத்தியம். லிடிக்கு கருவிலேயே கலைந்த தன் குழந்தை மீதே பற்று. முக்கோணக் காதல். அதன் ஏக்கம், ஏமாற்றம், போராட்டம், சின்ன சந்தோஷங்களைத் தாய்லாந்து மாந்திரிக நம்பிக்கைகளின் வழியே சொல்லும் கதை ‘பிறழ்வு’.

அகால மரணமடையும் ஆன்மா அதன் ஆயுள் முடியும் வரையில் இப்பூமியைவிட்டும் போவதில்லை, அந்த ஆன்மாவை ஒரு சிறுபேழைக்குள் வைத்து வழிப்படுத்தலாம் – வழிபடலாம் என்பது தாய்லாந்தின் ஒரு பிரிவினரின் நம்பிக்கை. சிங்கப்பூர் உள்பட பலநாடுகளிலும் பிரபலமாகி வரும் அத்தகைய நம்பிக்கை குறித்து இக்கதையில் விரிவாக விளக்குகிறார் செந்தில்குமார்.

அன்புக்காக தன்னைத்தானே தாழ்த்தி, ஏமாற்றி, ஏங்கும் ஓரினக் காதலன் மெல்வினின் கூற்றாக கதை நகர்கிறது. வெளியில் தெரியாமல், சத்தமற்று உள்ளுக்குள் புழுங்கி நோகும் தருணங்களை எல்லாருமே வாழ்வில் அனுபவிப்பதுண்டு. பலருக்கு அது கடந்துபோய்விடுகிறது. சிலருக்கு அதுவே வாழ்க்கையாகிவிடுகிறது. அப்படி வாழ்க்கையாக அறிந்தவர்களின் கதைகள் இத்தொகுப்பில் உள்ளன.

பரவலான வாசிப்பையும் வாழ்க்கை அனுபவத்தையும் செரித்து, முகிழ்த்து வரும் மொழியும் நடையும்  செந்தில்குமாருக்கு வசமாகி இருக்கின்றன. அவரது சொல்லடுக்கும் வாக்கிய அமைப்பும் வாசிப்பை இலகுவாக்குகிறது.

களங்களையும் காட்சிகளையும் தேர்ந்தெடுக்கிறார். அதில் உறவுச்சூழலையும் உணர்வுச் சூழலையும் அழகாக முன்வைக்கிறார். அதில் தானறிந்த எல்லாத் தகவல்களையும் பொருத்திப் பார்க்கவும் நினைக்கிறார்.

இத்தொகுப்பில் பேழை, மாடம் இரண்டும் சாதாரணமான கதைகள்.

சன்னதம், கூத்தன் கதைகளில் காட்சிப்படுத்தலிலும் மொழியிலும் வடிவத்திலும் கவனம் செலுத்தியிருக்கும் அளவுக்குக் கதையிலும் செந்தில்குமார் செலுத்தியிருக்கலாம். எதைக் கதையாக்குவது என்பதில் கொஞ்சம் கவனம் செலுத்தினால்போதும் செந்தில்குமார் நிச்சயம் சிறந்த கதைகளை வழங்குவார். 

லதா

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...