
“மொழிபெயர்ப்பு இல்லையெனில், நான் என் சொந்த நூற்றாண்டின் எல்லைக்குள் மட்டுப்படுத்தப்பட்டு இருப்பேன்” என கண்டாலே கால்வினோ கூறியதுதான் செல்சி நீலம் புத்தகத்தைப் படித்து முடித்த பிறகு எனக்குத் தோன்றிய முதல் சிந்தனை. வெளிநாட்டவர்களிடம் மலேசியாவின் கவர்ந்திழுக்கக் கூடிய பண்புகளை விவரிக்கச் சொன்னால், மூவின மக்களின் உணவும், கலாச்சார பாரம்பரியங்களும் அதில் முக்கிய காரணியாக அமையும். சூழல் ரீதியாக, பொருளாதார ரீதியாக, கலாச்சார ரீதியாக மூவின மக்கள் இணைந்து வாழ்ந்தாலும் இலக்கிய ரீதியாக மொழி கடந்து பயணிப்பதில் உள்ள சிரமங்கள் இன்று வல்லினத்தின் முயற்சியால் அகற்றப்பட்டுள்ளது. மலாய் மற்றும் சீன சிறுகதைத் தொகுப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு இலக்கியப் பாதையில் மைல் கற்களாகவும் மலேசியத் தமிழ் வாசகர்களுக்கு மாறுபட்ட இலக்கியச் சூழலை அறிமுகப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.
சீன இலக்கிய சிறுகதைகள் தொகுப்பான ‘செல்சி நீலம்’ ஏழு மாறுபட்ட கதைகளை உள்ளடக்கியது. ஒவ்வொரு கதைகளும் சிரத்தையுடன் நுணுக்கமாக வாசகர்களுக்குக் கதையுடன் கூடிய உணர்ச்சிகளையும் கடத்தக்கூடிய வகையில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் ஆட்டோலியோ பாஸ் கூறியதைப் போல ‘மொழிபெயர்ப்பு என்பது நகலெடுக்கும் செயல் அல்ல அவை மறுபடியும் எழுத்துக்களைப் படைப்பது’ என்பதை மொழிபெயர்த்த அனைத்து எழுத்தாளர்களும் நிரூபித்துள்ளனர். அவற்றில் எனக்குச் சில கதைகள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின.
தொகுப்பின் முதல் சிறுகதையான, ‘நகரில் ஒரு மூன்றடுக்கு மாளிகை’ டான் செங் சின்னால் எழுதப்பட்டு எழுத்தாளர் இளம்பூரணனால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது மூன்றடுக்கு கட்டடத்தின் முழு வாழ்க்கை சுயசரிதை. அதன் முக்கியத்துவத்தின் உச்சியிலிருந்து எவ்வாறு முற்றிலும் பேணப்படாத மறுக்கப்பட்ட நிலைக்குச் சுருங்கிவிட்டதென்பதைக் கதை சொல்லி விவரிக்க நாம் வாழ்ந்த பட்டணத்தில் அதேபோல் கைவிடப்பட்ட ஒரு கட்டடம் ஞாபகத்திற்கு வருகிறது. மக்களின் சூழல், சிக்கல், பயம், எதிர்பார்ப்பு என இவை அனைத்தும் கட்டடத்திற்கு உயிர்ப்பையும் இறப்பையும் கொடுத்திருக்கிறது. இக்கதை, எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘நீர் விளையாட்டு’ சிறுகதையில் வரும் கிணற்றுடன் ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றுகிறது. ஒரு சாதாரண இடம் எவ்வாறு மனித அனுபவங்களை உள்வாங்கிக் கொண்டு மிருகத்தன்மை கொண்டதாகவோ அல்லது திகிலுடையதாகவோ மாற்றப்பட்டுப் பொலிவிழந்திருக்கின்றது என கதை விவரித்துச் செல்கிறது.
அடுத்ததாக, ‘நிசப்தப் பொழுது’ சிறுகதை கிங் பன் ஹுயால் எழுதப்பட்டு எழுத்தாளர் சாலினியால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மனிதர்களின் உளவியலை மையப்படுத்திய கதை இது. கருச்சிதைவு ஏற்பட்ட தம்பதிகள் தங்களின் இழப்பை எவ்வாறு எதிர்கொள்ள முயல்கிறார்கள் என்பதுதான் கதையின் மூலம். மனைவி தன்னையே தனிமைப்படுத்திக் கொண்டு ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீள முடியாமல் தவிப்பதைக் கணவன் எவ்வாறு உள்வாங்கிக் கொண்டு எம்மாதிரியான மன உளைச்சலுக்கு ஆளாகிறான் என்பதைக் கதை உளவியல் ரீதியாக அணுகுகிறது. ஆண்கள் பெரும்பாலும் உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியாமல் இருப்பது அவர்களின் இயல்பு எனும் சமூகத்தின் கட்டமைப்பை கிங் பன் நேர்த்தியாக உடைத்துள்ளார். இழப்புகள் எம்மாதிரியான மன அழுத்தங்களையும் உள் சிதைவுகளையும் தரவல்லது என்பதை வீட்டுச் சூழலுடன் ஈசல் பூச்சிகளின் இரைச்சல் சத்தத்துடனும் உருவகப்படுத்தி ஆண்களின் மனநிலை இழப்புகளை ஜீரணிக்கத் தொடர்ந்து ஒரு சமாளிக்கும் வழிமுறையைத் தேடுவதை இக்கதை விவரித்துள்ளது. ஒரு ஆணின் உள் உணர்வுகளைச் சித்தரிப்பது சமூக கட்டமைப்பில் அவர்களுக்கு இருக்கக்கூடிய நெருக்கடியை உடைத்து அவர்கள் வெளிப்படையாக உணர்வுகளை வெளிக்காட்ட உதவும்.
‘ஒருவரின் வாழ்க்கை முறை’ எனும் கதை லி ஸிஷுவால் எழுதப்பட்டு எழுத்தாளர் அரவின் குமாரால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இக்கதை, வழக்கறிஞர் அலுவலகத்தில் பணிபுரியும் யூ சியாவ் எவ்வாறு கொலை குற்றவாளியாக மாற்றப்படுகிறாள் என்பதைச் சித்தரிக்கின்றது. ஒரு சாதாரண மனிதர்களின் உள்ளுணர்வுகளும், கோபங்களும், அதீத கட்டுப்பாட்டில் வெளிப்படுத்தக்கூடிய வன்மங்களும் படிப்படியாக ஒரு பேரழிவுக்கு வழிவகுக்கிறது. யூ சியாவ் மனநிலை பாதிக்கப்பட்ட பெண் அல்ல, தொடர்ந்து சமூகத்தின் மேல் கட்டுப்படுத்தி வைத்திருந்த கோபத்தின் உச்சக்கட்டமே அவளைக் கொலையாளியாக மாற்றுகிறது. இந்தக் கதையின் ஒரு மிக முக்கிய படிநிலையை எழுத்தாளர் கூ செங்கின் கவிதை நிரப்புகிறது. யூ சியாவ் உணர்வுகளுக்குச் சொற்களைத் தருவதை விட, உள்ளார்ந்த அர்த்தங்களைக் கவிதைகள் தந்துள்ளது. சமூக அமைப்பில் பாகுபாட்டிற்கு உட்படுத்தப்பட்டு அவமதிப்பைத் தொடர்ந்து சந்திக்கும் ஒருவர் அமைதியைக் கலைத்து எதிர்வினை ஆற்றக்கூடிய இடத்திற்குத் தள்ளப்படுகிறார். கூ செங்கின் வார்த்தைகளில் சொன்னால் ‘உண்மையில் புரிதல் இல்லாதவர்களின் அற்ப கருணையே, பகடியை விட அதிகமாக மனதைப் புண்படுத்துகிறது.’
இத்தொகுப்பில் என்னை அதிகமாகக் கவர்ந்த கதை, ‘தூறல் மழை’. இங் கிம் சியூவால் எழுதப்பட்டு ஆசிரியர் லாவண்யாவால் மொழிபெயர்க்கப்பட்ட சிறுகதை இது. காம்ரேட் சின் பெங் அவர்களை முதன்மையாக வைத்து புரட்சி களத்தில் போரிட்ட போராளிகளின் வெறுமையையும் அடையாள தேடலையும் விவரிக்கும் கதை இது. காம்ரேட் சின் பெங் “நான் புரட்சிக்காக வாழ்ந்தேன், அதில் மிஞ்சியதில் எனக்கு வருத்தம் இல்லை” என்று தனது ‘My Side of Story’ புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பார். ஆனால், சுதந்திரத்திற்காக வெள்ளையர்களை எதிர்த்துக் களமாடிய அனைத்து கம்யூனிஸ்ட் தோழர்களும் இத்தகைய உணர்வுகளுடன் இருந்திருப்பார்களா? அதுவும் அத்தனை இழப்பிற்குப் பிறகும் சுதந்திரத்திற்காகப் போராடிய தோழர்களுக்கு இம்மண்ணில் இடமில்லை என்றபோது போராளிகளின் முடிவு அமைதியில் தொலைவதா? ஒரு போராளியின் வெறுமையே வாழ்க்கையின் பின்பகுதியில் பொதுவுடைமை யாருக்கானது எனும் கேள்வியைக் கேட்க வைக்கக் கூடும். அடையாளங்கள் மாற்றப்பட்டு, மறைவான வாழ்க்கை வாழ்ந்து, காடுகளிலும் பிற நாடுகளிலும் தஞ்சம் புகுந்து, குடும்பங்களை இழந்து வாழ்ந்த போராளிகளுக்குத் தூறல் மழையில் காம்ரெட் சின் பெங் கிடைப்பதைப் போல மீண்டும் ஒரு வாழ்க்கை பாதை கிடைக்குமாயின் அவர்கள் இழந்த வாழ்க்கையைப் பெரும் முயற்சி பாதையில் பயணிக்கக்கூடும் எனும் மாறுபட்ட சிந்தனையை இக்கதை முன் வைக்கிறது.
இதைத் தவிர்த்து சிறுகதைத் தொகுப்பில், ‘கண்ணாடியைப் நிகர்த்தது அந்த ஏரி’, ‘இறைவனிடம் திரும்புதல்’ மற்றும் தொகுப்பின் தலைப்பான ‘செல்சி நீலம்’ ஆகிய சிறுகதைகளும் அடங்கும். சீன இலக்கியங்கள் அதிகமாக சமூக கட்டமைப்பைக் கேள்வி எழுப்பி உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய கதைக்களத்தைப் பேசுகின்றன. ஒரு காலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட ரஷ்ய இலக்கியங்கள் தமிழ் வாசகர்களுக்கு உலக இலக்கியங்களின் அழகியலை ரசிக்கக்கூடிய வாய்ப்பளித்தது. அதேபோல், நம்முடன் இணைந்து வாழ்ந்து கொண்டிருக்கின்ற சீன மக்களின் இலக்கியங்களை மொழிபெயர்ப்பதால் சமூக இடைவெளிகள் குறைந்து நமக்கிடையே ஒவ்வொரு இனக்குழு குறித்து இருக்கும் பொது புத்திகள் மாற்றப்படும் என நம்புகிறேன். இலக்கியம் என்பது தனிப்பட்ட நம்பிக்கைகளைக் கடந்து மனிதர்களோடு பயணிக்க ஒரு பாதையாக அமையக்கூடும். இந்நூல் அதற்கு வழிவகுக்கும்.