நாற்றம்

வெலிங்டன் விடுதியின் காப்பாளர் பங்களாவுக்குச் செல்லும் பாதையின் இருபுறமும் பனைமரங்கள் ஓங்கி வளர்ந்து நிற்கின்றன. அடர்ந்த பனைமரத் தூர்களின் அடியில் முற்றி உதிர்ந்த நுங்குகள் கிடக்கின்றன. வெட்டி இறக்கப்படாத நுங்கு குலையாகத் தெரித்து மட்டைகளின் இடையில் தொங்குகின்றன. பாதையில் சிதறிக்கிடக்கும் இரண்டு பெரிய நுங்குகளில் பளபளப்பு மங்கி மஞ்சள் நிறக்கோடுகள் விழுந்திருக்கின்றன. டேனியல் விஜயகுமாரின் அம்மா ரோஸ்லின் இடதுகைக்குப் பேக்கை மாற்றி உருண்டுகிடந்த நுங்குகளைப் புதரடியில் எடுத்துப்போட்டாள்.

கிளிகளின் ஓசை மரத்தின் மேலிருந்து வந்தது. மூவரும் தலைதூக்கிப் பார்த்தனர். உயர்ந்து இற்றுப்போய் நிற்கும் மரத்தின் பொந்துகளில் கிளிகள் தலைசாய்த்து இவர்களைப் பார்த்தன. சிறிதும் பெரிதுமாக மரங்கள். காவோலை கழன்று விழ தொங்கிக்கொண்டிருக்கின்றன. காய்ந்த குறவஞ்சி கொடிகள் மரங்களில் பின்னிப் பிணைந்திருக்கின்றன. ‘க்ஊஉ க்ஊஉ கூக்கூக்கூக் கூஊ’ குயில் ஓசை மரவரிசை மேல்விதமாகப் பறந்து மிதந்தது.  ரோஸ்லின் தலைதூக்கிப் பார்த்தார். புள்ளிக்குயில் பனையிடையே நிற்கும் வேப்பமர கிளையிலிருந்து கூவுகிறது. “அந்தா” மூவரும் பார்த்தார்கள் ‘கூக்கூக்கூக் கூஊ’ ரோஸ்லின் மனதிலிருந்தும் ஓர் ஓசை சுருளாக விரிந்து எழுந்தது. அழகான கல்லூரி. மகனைத் தோளோடு அணைத்து மகிழ்ந்தாள். நெடுநெடுவென வளர்ந்த பையனின் கூந்தலைக் கோதிவிட்டாள். மிக இனிய ஆசைகளை மகன் மீது நிரம்பும் வருகை மகிழ்ச்சியைக் கொடுத்தது. பாதை சரிதானா என்று தயக்கத்தில் வின்சென்ட் பால்ராஜ் திரும்பிப் பார்த்தார். நாய் குரைப்பது கேட்டது. “நாய் குரைக்கிறதே” என்றார். ரோஸ்லின் “குட்டிநாய் குரலாத்தான் இருக்குது வா” பால்ராஜை அழைத்துக்கொண்டு நடந்தார். 

மஞ்சள் பங்களா வேலிக்குள் தெரிந்தது. இடது பக்கம் சின்னத் திருப்பம் வந்ததும் பழைய பங்களா தெரிந்தது. பாதையின் இருபுறமும் அரளியும் செம்பருத்தியும் பூத்து கிளைகளை நீட்டிக்கிடக்கின்றன. மிக சன்னமானப் பாதை ஏறிச் சென்றது. பங்களாவின் முகப்பு இடதுபுறம் பெரிய நாவல்மரம் நிற்கிறது. மரத்தின் அடியில் இரவெல்லாம் வௌவால்கள் சப்பி சுவைத்துப்போட்ட கொட்டைகள் கிடக்கின்றன. மரத்தில் கருத்தப்பழங்களும் பச்சைக்காய்களும் கொத்துக்கொத்தாக இருக்கின்றன. இடது புறம் கார் நிற்கிறது. பலாமரத்தின் அடியில் படுத்திருந்த சந்தன நிற நாய்க்குட்டி எழுந்து குரைத்தது. சங்கிலியால் கட்டியிருக்கிறார்கள். பெரிய பெரிய பலாப்பழங்கள் காய்த்து தொங்கிக்கொண்டிருக்கின்றன. பலாவாசமும் நாவல்வாசமும் மூக்கினைத் துழைத்தது. கனிந்த பழங்களின்மேல் ஈக்கள் மொய்த்துக்கொண்டிருக்கின்றன. மரங்களின் கிளைகளின் ஊடே சூரிய ஒளி சரிவாகப் புகுந்து நிழலுக்குள் குளிர்காய்வதைப்போல உருண்டன. அடர்ந்த நிழல் ஒளிக்கற்றைகளைப் பிரியத்தோடு தனக்குள் இறக்கிக்கொண்டு பூக்கின்றன. இந்தக் காலையில் நிழலும் ஒளியும் ஒன்றுக்குள் ஒன்றாகிக்கொண்டிருக்கின்றன. புதிய ஒளிக்கீற்றுகள் இவனுள்ளும் புகுந்து பிரகாசிக்கும் காலவெளி விரிந்திருப்பதை நினைத்ததும் ரோஸ்லியின் கன்னத்து உரோமங்கள் சிலிர்த்தன. 

பால்ராஜ் சூட்கேஸ்சை முற்றத்தின் ஓரம் வைத்துவிட்டு தயங்கி நின்றார். டேனியல் கைகளைக் கோர்த்து அச்சத்தோடு நின்றான். வாசலில் மேசை ஒன்று, பிரம்பு நாற்காலிகள் நான்கு இருக்கின்றன. பின் நாற்காலியில் செய்தித்தாள் கிடக்கிறது. எப்படி அழைப்பது என்று தயக்கமாக இருந்தது. வெடுக்கென திட்டிவிடுவார்களோ என்ற தயக்கத்தை மீறி பால்ராஜ் அழைப்பு மணியை அழுத்தினார். அழைப்புக் குருவி மூன்று முறை கத்தியது.

சூ அணியாமல் பேண்ட் பனியனில் காப்பாளர் வெளியே வந்தார்.

“சொல்லுங்க”

“ஹாஸ்ட்டலுக்கு கையெழுத்து வாங்கிட்டு வரச்சொன்னாங்க சார்” விண்ணப்பத்தை நீட்டினார். “அங்கு வந்து போட்டுக்கிறேன்னு பரமசிவன் கிட்ட சொன்னேனே. சரி கொண்டாங்க,” பேராசிரியர் கல்லூரிக்குக் கிளம்பிக்கொண்டிருக்கும் சமயம் என்று தெரிந்தது.

மேசையில் வைத்து கையெழுத்து போட்டார். மேசைக்குப் பின் இரண்டு சிறிய சைக்கிள்கள் சாய்ந்து நிற்கின்றன. வீட்டின் உள்ளே அம்மாவின் சத்தம் கேட்கிறது. பிள்ளைகளைப் பள்ளிக்குத் தயார்படுத்திக்கொண்டிருக்கலாம்.

“எங்கிருந்து வர்றீங்க?”

“கோயம்புத்தூரில் இருந்து சார்”

“இப்போ கிளைமேட் நல்லா இருக்குமே” 

“சாரல் சீசன் சார். பத்து நாளா மழை”

“எட்டிமடை அமிர்தா காலேஜுக்கு வந்திருக்கேன்”

“அப்படியா சார். நாங்க இந்த பக்கம் கெம்பனூர் சார்”

“ஓ என்ன கோர்ஸ்?”

“மேட்ஸ் சார்”

“நல்ல கோர்ஸ். எல்லாம் கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.காம் பி.ஏ என்று ஓடுறாங்க”

“தம்பி பேரு?”

“டேனியல் விஜயகுமார்”

“நல்லா நிமிர்ந்து நில்லு. ஏன் சோர்வா நிக்கிற. உன் ஹைட்டுக்கு இன்னும் வெயிட்டா இருந்தாதான் நல்லா இருக்கும். நல்லா சாப்பிடணும்.” 

“சரி சார்”

“சார் நீங்க என்ன பண்றிங்க?”

“சார் நான் கே. பி. ஆர் பஸ் சர்வீஸ்ல கிளார்க்கா இருக்கேன் சார்” 

“நீங்க ப்ராப்பர் கோயம்புத்தூர் தானா?”

“இல்ல சார். கருப்பாயூரணி. சின்ன வயசுல கோயம்புத்தூருக்கு அப்பா கூட்டிட்டு வந்துட்டார்”

“ஓ… சரி சரி”

“பூர்வீகம் இந்த பக்கம் தானா?”

“ஆமா சார்”

“வார்டன்சீல் ஹாஸ்டல் ஆபீஸ்ல வாங்கிக்கங்க. பெஸ்ட் ஆப் லக்” விண்ணப்பத்தினைத் தந்தார். 

“சரிங்க சார்”

கையெழுத்தை வாங்கிக்கொண்டு வெலிங்டன் விடுதிக்கு வந்தார்கள். வராண்டாவின் இருபுறமும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் அமர்ந்திருந்தனர். ‘டிங்டாங்’ என்று மணியோசை வந்தது. இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு மாணவர்கள் அவசர அவசரமாக வகுப்பிற்குச் சென்றார்கள். அம்மாவின் வலது உள்ளங்கையில் தன் விரல்களைக் கோர்த்தான் டேனியல் விஜயகுமார். ஒரு நிமிடம் விட்டு மறுபடியும் ‘டிங்டாங்’ என்று இரண்டாவது மணியோசை அடித்தது. அம்மாவின் உள்ளங்கையிலிருந்து விம்மென அவனுக்குள் மௌனமான ஓசை படர்ந்து ஏகியது. பொம்மென உடம்பிற்குள் ஒலிக்கிறது. இன்று வகுப்பு இல்லை என்றாலும் வகுப்பிற்கு ஓடும் மாணவர்களின் பரபரப்பு ஒன்று தொற்றியது. புதிய வகுப்பு எப்படியிருக்கும்? புதிய ஆசிரியர்கள் எப்படி இருப்பார்கள்? புத்தம் புதிய மாணவர்கள் எப்படி நெருங்குவார்கள்? புதிய பாடங்கள் இதமாக மேவுமா? கரடுதட்டி வெருட்டுமா? ஏதோ எண்ணங்கள் விம்முகின்றன. “பெல் அடிக்கிறதுக்கு முன்னாடி வகுப்புக்கு போயிறணும் ராஜா” தலையாட்டினான். 

***

“வார்டன் சார்கிட்ட கையெழுத்து வாங்கினவங்க குடுங்க.” 

வலப்பக்கம் அமர்ந்திருந்த இரண்டு பெற்றோர்கள் எழுந்து விண்ணப்பத்தைத் தந்தார்கள். இடப்பக்கம் மூன்று பேர் எழுந்து நின்றார்கள். விடுதி காப்பாளரின் உதவியாளர் பரமசிவம் வாங்கினான். “பேக் எல்லாம் எடுத்துட்டு வாங்க” பரமசிவம் விடுதியில் உள்ளே அழைத்துக்கொண்டு போனான். விடுதியில் உள்ளே இரண்டு டென்னிஸ் திடல் அளவு விரிந்த பகுதியாக இருந்தது. ஓரத்தில் அசோக மரங்கள் மூன்று மாடிகளையும் தாண்டி வளர்ந்திருக்கின்றன. திடலின் மையத்தில் பாதை. அது கிழக்கிலும் ஒரு வாயிலுக்குக் கொண்டு செல்கிறது.

அலுவலகத்தின் பக்கத்தில் பெரிய அறை. அதில் ஏற்கனவே பைகள் தனித்தனியாக இருந்தன. பரமசிவம் “அவங்கவங்க பைய ஒன்னா வைங்க சார்” என்றான். உள்ளே வந்த பெற்றோர்கள் அவர்கள் பைகளை ஒன்றாக வைத்தனர்.

திடலுக்குப் பரமசிவம் அழைத்து வந்தான். “தரைத்தளம் முதலாம் ஆண்டு மாணவர்கள். முதல் மாடி இரண்டாம் ஆண்டு மாணவர்கள், இரண்டாவது மாடி மூன்றாம் ஆண்டு மாணவர்கள். சீனியர்கள் கூப்பிடுறாங்கன்னு மேல போகக்கூடாது. கேலி கிண்டல் பண்ணுவாங்க. கிரவுண்ட் ப்ளோர்லையே இருந்துக்காங்க. ஒரே வகுப்பு மாணவர்களை ஒரே அறையில் போடமாட்டோம். வேற வேற கோர்ஸ் மாணவர்களைக் கலந்துதான் போடுவோம். அதனால எந்த அறையென்று கணக்குப் பண்ணி போடணும். மதியத்துக்குமேல்தான் ஒதுக்கித்தர முடியும். பெற்றோர்கள் இந்த ஒரு வேளை மாணவர்களோடு சாப்பிட்டுக்கலாம். பசங்க பத்து மணிக்கு ஒருங்கிணைப்பு கூட்டம் போகணும். நீங்க அவங்களோட சாப்பிட்டுவிட்டு கிளம்பலாம். தங்கச்செயின் போட்டுடிருந்தா வாங்கிக்கோங்க. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அனுமதி இல்லை. வாங்க.”

விடுதி உணவுக் கூடத்திற்கு அழைத்து வந்தான் பரமசிவம். ஒரு பையன் அவசர அவசரமாக தோசையைப் பிய்த்துக்கொண்டிருந்தான். உண்டுவிட்டு வந்த பெற்றோர்கள் கை கழுவிக்கொண்டிருந்தனர்.

தாயா அக்காவா என்று கணிக்க முடியாத பெண். பையனை நெஞ்சோடு அணைத்து, அவனது தலையைக் கோதிவிட்டுக்கொண்டிருந்தாள். “அம்மா உங்க கூடயே வந்திடுரேன்மா” அவள் தாய்தான். அவள் தலை திருப்பி மாணவனைப் பார்த்தாள். அவருக்கும் முகம் வாடிப்போயிருந்தது.

“படிக்கணும் ராஜா”

“அப்புறமா வரேன்மா”

“நல்ல காலேஜ். காலேஜுக்குள்ள இருக்கிறது மாதிரியா இருக்கு. சின்ன காட்டுக்குள்ள இருக்கிற மாதிரி இருக்கு. அங்கப் பாரு உன்ன மாதிரி ஒரு பையன் எவ்வளவு சந்தோஷமாக போறான்.”

“அவன நாளா இடத்துக்கு போய் பழக்கப்படுத்துனும்னு எத்தனைவாட்டிச் சொன்னேன்,” கணவர் மெல்ல முணகினார். அவர் கையில் மடக்கி வைத்திருந்த பணத்தை அவனது மேல் ஜோப்பில் வைத்தார்.

“பணம் வேணாம்ப்பா”

“இல்ல வச்சுக்கோ. இன்னைக்கு என்ன புதன், சனிக்கிழமை மதியமா வந்து கூட்டிட்டு போறோம். ஞாயிற்றுக்கிழமை சாயந்திரமா வந்து விட்டுட்டு போறோம்” ஈரம் படிந்த இமைகளோடு இருவரையும் பார்த்து தலையசைத்தான்.

***

பரமசிவம் ஒவ்வொரு விண்ணப்பமாக எடுத்து வகுப்புகளைப் பிரித்து வைத்தான். எம்ஃபில் படிக்க உதவியாக இருக்கட்டும் என்று விடுதிக்காப்பாளர் ரவிக்குமார் மேற்பார்வையாளர் பணியைப் போட்டுத் தந்தார். கிராமத்தில் இருந்து வந்த ஏழை பையன்கள் படித்து முன்னேற வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு விடுதியிலும் மேல்படிப்பு படிக்கும் மாணவர்களை இந்தப் பணியில் போட்டுக்கொண்டனர். எம்ஃபில் வகுப்புகள் இன்னும் ஆரம்பிக்கவில்லை. அது ஆகஸ்ட் முதல் வாரம் ஆகிவிடும். 

மாணவர்களின் வகுப்பு, அரசு உதவித்தொகை பெற வாய்ப்புள்ள மாணவர்கள், அவர்களின் சாதி, ஊர், கைபேசி எண்கள் என விண்ணப்பத்திலிருந்து எடுத்து பதிவு செய்தான். 

டேனியல் விஜயகுமாரின் சாதி சான்றிதழ் பார்த்ததும் அவன் முகம் குறுகியது. மதம் ரோமன்கத்தோலிக் கிறிஸ்தவர் என்றும், சாதி மறவர், அடைப்பு குறிக்குள் கொண்டையன் கோட்டை என்றும் இருந்தது. ஏற்கனவே எடுத்துப் பிரித்து வைத்த சுப்பிரமணியன் விண்ணப்பத்தின் மேல் வைத்தான். மறுபடியும் இரண்டு விண்ணப்பத்தையும் சரிபார்த்தான். அரை எண் 63இல் போட்டுவிடலாம் என்று தோன்றியது. நேற்று புதுக்கோட்டையிலிருந்து வந்து சேர்ந்த தினேஷிற்கு 63இல் ஒதுக்கினான். அறை 63க்கு மூவர் நிரம்பியது. அந்த வரிசையில் 64, 65க்கு இதே போல மாணவர்களைப் பிரித்துப்போட வைத்தான்.

***

அழிஞ்சி ஓடை வழியாக வெள்ளாடுகளை மடக்கிவிட்டான். மேற்குப் பரவில் நிலக்கடலை இழுப்பு மலமலவென போய்க்கொண்டிருந்தது. கடலைக்கொடிகளை மொறுமொறுவென நான்கு நாள் காயவைத்து, விடியற்காலை பனி பதத்தில் சுருட்டி அள்ளிவைத்து கட்டுக்கட்டாகச் சுருட்டித் தூக்கிய தோட்டங்களில் இனிக்கம் புற்களும் உதிர்ந்த கடலை இலைகளும், தண்டங்கீரைகளும் ஆடுகளுக்கு மேவாகின. நிலக்கடலை எடுத்து காலிசெய்த தோட்டங்களில் நல்ல மேவு வந்துக்கொண்டிருந்தன.

பனிப் பதத்தில் பழனிச்சாமி ஐயா தோட்டத்தில் கடலைக் கொடிகளை அள்ளி கட்டி கட்டுகளைப் போட்டனர். இரண்டு லோடு முதல்நாள் மாலையிலேயே கொண்டு போனதால் மேவிற்கு இடம் விழுந்தது. சீனி ஆடுகளையோ, ராமர் அட்டி மாடுகளை கொண்டு வருவதற்குமுன் ஓட்டிவிட்டால் பொடுபொடுவென இறையெடுத்துவிடும். அழிஞ்சி ஓடைக் கரைகளில் வாய் வைத்த ஆடுகளை அமட்டி ஒட்டிக்கொண்டு வந்தான். 

வீரபத்திரன்கோயில் காடு வரை நிலக்கடலை எடுத்துவிட்டார்கள். ஆடுகள் பழனிச்சாமி ஐயா தோட்டத்தில் நுழைந்ததும், சிந்தி சிதறிக் கிடந்த கடலைக் கொடிகளை ஆர்வத்தோடு கடித்து மென்றன. கம்பை கழுத்தின் பின்பக்கம் வைத்துக்கொண்டு வரப்பு வழியாக பூவரச மரம் வந்தான். சேதுபதி அய்யாவின் தோட்டத்து வீடு கரை நெடுக பனை மரங்கள் நிற்கின்றன. பனங்கள் யாரும் இப்போது இறக்குவதில்லை. நாய்வால் நீளத்திற்கு ஆண்பனைகளில் சவுரி தொங்கின. பக்கத்தில் பன்னாடை இல்லாமல் உயர்ந்து நிற்கும் பனையின் உச்சியில் நுங்கு செறிந்து கொலைகொலையாக தொங்குகின்றன. ஆடுகள் நின்று மேய காடெங்கும் கடலை இலைகள் உதிர்ந்து திரண்டு திரண்டு கிடக்கின்றன. 

நெளுக்கென இளம் நுங்கு ஒரு சுவை, மிதுக்கு பருவம் இல்லாமல் திரண்ட நுங்குக்கு ஒரு சுவை, கல்நுங்கிற்கு ஒரு சுவை, நுங்கு நீருக்கும் அப்படித்தான். சீனி, ராமர் வருகிறார்களா என்று பூவரசு குடிசை மேட்டில் ஏறி நின்று பார்த்தான். ஆடு மாடு வரும் அலுக்குப் பலுக்குத் தெரியவில்லை. அவர்கள் வந்தால் நன்றாக இருக்கும். வெயில் ஏற ஏற சூடுகிளம்பியது. லேசாக வேர்த்தது. ஒரு பொத்தானை அவிழ்த்துவிட்டான். ஆடுகள் மேற்கால் ஏறிப் போகாமல் கிழக்குப் பக்கம் மடக்கி விட்டுவிட்டு பனைமர வரிசைக்கு வந்தான். குறும்பையும் இளதும் காய்வெட்டும் முற்றிய பழமுமாக குலைகள் நெறிசலாக மட்டைகளின் சரிந்து தொங்குகின்றன. தொண்டை குழியிலும் நெஞ்சிலும் நெளுநெளுவென சுவையோடு குளிர்ந்து இறங்குவதுபோல நினைப்புத் தோன்றியது. முகத்தில் அடிக்காத இனிப்புச் சுவை நுங்கில் மட்டும்தான் இருக்கிறது. எவ்வளவு தின்றாலும் வயிறு செரித்துவிடும். தின்னத் தின்ன வயிறு கேட்கும். பத்து இருபது நுங்கு தின்றால் எந்த வேனாதி வெயிலிலும் சூடு பிடிக்காது. ஒரு மரம் நுங்குத் தின்றால் உடம்பில் பாலிஷ் கூடிவிடும். பார்த்தாலே சொல்வார்கள் நுங்கு தின்ன மினுமினுப்பு நல்லா தெரியுது என்று. 

சட்டென ஏறினால் என்ன. பரமசிவம் வண்டிப்பாதை பக்கம் பார்த்தான். தோட்டத்துக்காரர் யாரும் இல்லை. மரத்தினடியில் மண்ணை அள்ளி உள்ளங்கைகளில் தேய்த்துக்கொண்டான். இடுப்பில் சொருகியிருந்த கருக்கருவாளைப் பின்புறத்தில் சொருக்கிக்கொண்டு சரசரவென ஜான்போட்டு ஏறினான். தொங்கிக் கொண்டிருந்த இரண்டு காவோலைகளைத் தட்டிவிட்டு பச்சை மட்டையில் கைபோட்டு ஏறி அமர்ந்தான். இளசில் ஒரு குலையையும் இறுகும் பதத்தில் இருக்கும் ஒரு குலையையும் வெட்டிப் போட்டான். குலைகள் கீழே விழுந்து சிதறி ஓடின. சரசரவென இறங்கி வந்து சிதறிக்கிடக்கும் நுங்குகளைப் பொறுக்கி ஊடுவரப்போரம் போட்டான். குலையில் ஒவ்வொன்றிலும்  பத்து பதினைந்து நுங்குகள் தெறிக்காமல் இருந்தன.

பக்கவாட்டில் வெட்டி இளம் பதம் நுங்கு காயம் படாமல் மட்டையை அகழித்தான். குழிக்குள் நுங்கு துளுதுளுவென அல்வாபோல இருந்தது. குழியோரம் பெருவிரலை விட்டு இளநுங்கை சுழற்றி எடுத்தான். அப்படியே பச்சை முட்டையை உடைத்து விழுங்குவதுபோல களுக்கென விழுங்கினான். அப்படி விழுங்கிவிட்டு பின் மெல்லாடைத் திரளை மென்றுத் தின்பதில் ஒரு தித்திப்பு இருக்கவே செய்கிறது. ஆசையுடன் வயிறு திறந்துகொண்டது. பசியைவிட ருசியின் துடிதுடிப்பு வாவாவென்றழைத்தது. நாளையும் அப்படியே வர வேண்டும். ஆளில்லை என்றால் சட்டென ஏறி பறித்துப்போட வேண்டும். ஆடுகள் இல்லையென்றால் வெட்டியிறக்கிய குலைகளை வேறு மறைவான இடத்திற்குத் தூக்கிச் சென்று நிதானமாகத் தின்னலாம். சரியான இடமில்லை. 

இளநுங்கைத் தோண்டி வாயில் போட்டான். மெல்லுவதற்குச் சிக்காமல் உடைந்து கரைந்து தொண்டைக்குழிக்குள் இறங்கியது. கொஞ்சம் கெட்டிபட்ட நுங்கு என்றால்தான் கடிக்குச் சிக்கும். அவசரம் அச்சத்தையும் மீறி நொளுநொளுவென வாயில் மெல்லிய இனிப்போடு ருசித்தது. 

ஒவ்வொரு தோட்டத்து வேலிகளிலும் இப்படிப் பனைமரங்கள் அடர்ந்து இருக்க வேண்டும். எங்கும் பனைமரங்களினாலான அகன்ற வரப்புகள் இருந்தன. அப்படியே இருந்திருக்கலாம். அதனடி அகன்ற மேய்ச்சல் தரைகளாக இருந்தன. மரங்களை வீழ்த்த அகன்ற வரப்புகளும் சுருங்கின. முட்டையிட்டு அடைகாத்த கௌதாரி, மயில்கள், காடை எங்கோ போய்விட்டன. முயல்குட்டிகள் இல்லாத பனைமரத் தோட்டங்கள் இல்லை.

பதினைந்து இளசுகளை தின்றபின் மிதுக்குப் பருவத்தை மீறியிருக்கும் நுங்கை வெட்டி அருவாளின் கூர்முனையால் குழியோரம் சுழற்றி பெயர்த்தெடுத்து மென்னிறுக்கத் திரளைத் தின்றான். நன்றாக இருந்தது. மற்றொரு நுங்கை கிளறி வெண்ணிற மேல் தொலியை நகத்தால் பெயர்த்து எடுத்துவிட்டு பிசுபிசுப்போடு மென்றான். நெஞ்சும் வயிறும் விழுங்கு விழுங்கு என்று பேராசையோடு குதித்தது.  

“ஏண்டாத் தேவிடியாப் பயலே” செருப்பு காலோட ஒரு மிதி விழுந்தது. கையில் இருந்த அரிவாள் நழுவி தூர விழுந்தது. அடுத்த மிதி தோள்பட்டையில் சொத்தென விழுந்தது. நுங்குத் திங்கிற கை ஈரமாக இருந்ததால் அரிவாள் பிடி நழுவி ஓடிவிட்டது. மரத்தின் ஓரம் பரமசிவம் போட்டிருந்த கம்பை எடுத்து முதுகில் திட்டீர் திட்டீரென்று அடித்தார். விழுந்தவன் சூட்டோடு சூடாக எழுந்தாலும் மறுபடி இடுப்பில் ஓங்கி உதைத்தார். மறுபடியும் விழுந்தான். 

கையை மறைக்க மறைக்க கம்பால் அடித்தார். அடிதாங்க முடியாமல் “ஐயா ஐயா” என்றான். “ஏண்டா கூதி, நான் உனக்கு ஐயாவாடா… நாயே! ஒனக்காடா பனைமரத்தை வளத்து வச்சிருக்கேன், ஈனப்பயலே!” முகத்தில் அடிக்க வந்ததைத் தடுத்தான். முன்னங்கை எலும்பு கம்புபட்டு விண்ணென வலியெடுத்தது. “தப்புதான் ஐயா. இனி பண்ணமாட்டேங்கயா, சாமி சாமி அடிக்காதீங்கய்யா.” 

வீரபத்திரன்கோயில் காட்டில் கடலைக்கொடி ஆய்ந்துக்கொண்டிருந்த செல்லம்மா, பூவாயி, வரதக்கா, மாரி, மதினி, செல்லதுரை, சின்னான் ஓடி வந்தார்கள். நுங்கு பறித்த மரத்தில் சாய்த்து வைத்து கழுத்தை நெருங்கியபடி நெஞ்சில் திடும் திடுமென அடித்தார்.

வரதக்கா அவரது கையைப் பிடித்து இழுத்து “என்னங்கய்யா ஒரு நுங்கு எழவுக்கு இந்த அடி அடிக்கிறீங்க. பதினாலு வயசு பாலகன்யா. அவனுக்கு என்னய்யா தெரியும்”

“போடி தேவிடியா முண்டை, போறவன் வரவன் திங்கத்தான் நிக்கிதா… நாதாரி நாய்களா”

“என்னய்யா ஒரு மயிருக்கு இந்த அடி அடிக்கிறீங்க”

“ஏன்டா  கூதி. நீ விடுவியாடா”

“ஒரு தட்டு தட்டிட்டு இந்த மாதிரி பண்ணாதன்னு சொன்னா தாங்கய்யா மானுசன்”

“டேய் என் மரத்துல பறிச்சா அப்படித்தாண்டா அடிப்பேன்” 

பெண்கள் அவிழ்த்த கூந்தலைத் தட்டிச் சுழற்றி கொண்டை போட்டு “இனி தொட்டீங்க அவ்வளவுதான்” மறித்து பரமசிவத்தை அணைத்துக்கொண்டு சென்றனர்.

“இப்படியா கொலையா கொல்றது. இந்த பசலை மேனி பூராம் தடிப்புத் தடிப்பா இருக்கே” சிவந்து வீங்கிய உதட்டின் பின்பக்கம் கசிந்த ரத்தத்தைப் பூவாயி மாராப்பால் துடைத்தாள். தொட்டதும் காயம் காந்தத் தொடங்கியது. நிமிர முடியவில்லை. தின்ற நுங்கின் நெளுநெளுப்பு வயிற்றில் மெல்ல அசைந்தது. வலி மேவி காந்தும் உடம்பில் நுங்கு உள்ளிருந்து ஒத்தடம் தந்தது. வலியும் ருசியும் மோதியபடி இருந்தன. மனதில் கசப்பும் அவமானமும் வெறுப்பும் புரளத் தொடங்கியது.

கொய்யாக்கா பறித்ததற்குப் பாண்டியராஜன் கிணற்றுவாரியில் கழுத்தை அமுக்கி முதுகில் அடித்த மண்கட்டி தூள் தூளாகச் சிதறிப் போனது. பின்னும் புடனியில் இரண்டு வைப்பு வைத்தார். துவரம் பொட்டில் ஆடுகள் வாய்வைத்து தின்றபோதும் தெரியவில்லை. பொட்டு அலசி தப்பு பருப்பு எடுக்காதது. “ஏன்டா… தாயோளி பொட்டு அலசலன்னு தெரியுதில்லை. எப்படிடா உனக்கு இந்த பேமாளித்தனம்.” கன்னத்தில் அறைந்து தள்ளிவிட்டார். சந்தானம் ஐயா, முதுக்கி ஆடு சிச்சிலுப்பு முதுகில் விழுந்த உதையில் நிமிரவே இல்லை. புட்டாணியைச் சாய்த்துக்கொண்டுதான் கடைசிவரை நடந்தது.

பூத் ஏஜெண்டாக சென்ற சோலையனை வன்னிமரத் தெரு முக்கில் வைத்து ஓட ஓட வெட்டினார்கள். இடது கையிலும் இடது பின் முதுகிலும் பலமான வெட்டு. வெட்டுகளில் ரத்தம் பெருகப் பெருக முருகன் எலக்ட்ரிக்கல் கடைமுன் வந்து விழுந்தபோது நேதாஜி தெரு வழியாக போலீஸ் ஜீப் வரவும் கூலிப்படை அப்படியே போட்டுவிட்டு ஓடிவிட்டது. சோலையன் பிழைக்கமாட்டான் என்றுதான் சொன்னார்கள். நொண்டிக்காலும் நொண்டிக்கையுமாக வீட்டோடு கிடக்க வேண்டியதாகிவிட்டது. தலைவர், சோலையன் வெட்டுண்ட மூன்றாம் நாள் பெருங்கூட்டத்தைச் கூட்டி எதிர்க்கட்சியைப் போர்க்குரலோடு கோசமிட்டு வழிநடத்தினார். கிருஷ்ணாஜூவல்லரி வரவர கூட்டத்தில் ஆக்ரோஷமும் ஆரவாரமும் கட்டுக்கடங்காமல் போய்விட்டது. வசைமொழி கூடக்கூட உற்சாகம் பெருக்கெடுத்துவிட்டது. சாமன் எரிந்த கல் கோல்ட் கவரிங் கடைக் கண்ணாடியை நொறுக்கி சரிந்ததுதான் தாமதம். இருபுறம் வந்த போலீசுக்கு எஸ்.ஐ. சிங்கராஜன் தடியடிக்கு உத்தரவிட்டான். முப்பது போலீஸ் கூட்டத்தின் இருபுறமும் வருவது போலத்தான் இருந்தது. எங்கிருந்து வந்ததோ சண்முகம் தெரு வழியாக திமுதிமுவென வந்த போலீஸ்படை லத்தியால் விரட்டி விரட்டி அடித்தது. போராட்டக் கூட்டம் கலைந்தது. நாலாபக்கமும் சிதறி ஓடியது. பரமசிவம் சிவகிரி ஹோட்டல் பக்கமாக தப்பித்துவிடலாம் என்று ஓடினான். சிங்கராஜன் கணுக்காலில் அடித்த அடி எலும்பு சிதைந்ததுபோல இருந்தது. தடுமாறி எழுந்து ஓடத் தொடங்கியதும் சிங்கராஜன் “தாயோளி இந்த ஜென்மத்துல நீங்க எல்லாம் போராட்டம் பண்ணத் தெருவுக்கு வரக்கூடாதுடா, நாயே” விரட்டி விரட்டி அடித்தான். தலையில் விழுந்த அடியில் மண்டை பிளந்து புருபுருவென ரத்தம் கசிந்ததுகூடத் தெரியாமல் தப்பித்து வந்தான். 

***

மூன்று இரும்பு கட்டில்கள், அமர்ந்ததும் அதன் கால்கள் இழுத்துக்கொண்டு சாய்ந்தன. கட்டில் கால் நட்டுகள் லூசானதால் கால்கள் நேராக நிற்கவில்லை. தினேஷ் முன்னமே மேற்குப் பக்கம் அலமாரியில் எண்ணெய், சோப்பு டப்பா, துண்டை வைத்திருந்தான். சுப்பிரமணி வடக்குப் பக்கம் அலமாரியை வைத்துகொள்ளட்டுமாடா என்று கேட்டான். டேனியல் தலையாட்டினான். கிழக்குப் பக்கம் இருந்த அலமாரியில் டேனியல் பொருட்களை வைத்தான். டியூப்லைட்டின் இடது ஓரம் கருப்படித்து மங்கி ஒளி வருகிறது. அதன் மேற்பரப்பில் தூசி படிந்து படிந்து அழுக்காகப் படிந்திருக்கிறது. துடைத்தால் இன்னும் கொஞ்சம் பளிச்சென்று ஒளிகிட்டும். 

பிராங்க்ளின் கட்டிடம் ரொம்ப அழகாக இருந்தது. செந்நிற கட்டிடத்திற்கு முன் பெரிய மேடை. இயற்பியல் இரண்டாம் மூன்றாம் மாணவர்களின் ஒவ்வொரு அசைவிலும் வண்ண வண்ண ஒளி பளிச்சிட்டது. அவர்கள் பெரிய வில்போல வளைந்து வரவேற்றபோது வானவில்லாக நிறம் மாறினர். ரொம்ப நன்றாக இருந்தது. அவர்கள் வட்டமடித்து விலகியபோது மையத்தில் ஏற்றிய விளக்கு பிரகாசித்தது. எல்லோரும் கைதட்டினார்கள். டேனியல் நெஞ்சில் பெருமிதம் திரண்டு பெருமூச்சாக வெளிப்பட்டது, சந்தோஷமாக இருந்தது. 

பேசாமல் அமர்ந்திருந்தார்கள். கொசுக்கள் ஙொய்யென இரைச்சலிட்டன. ஜன்னலையும் கதவையும் திறந்து வைத்திருந்தார்கள். 60ஆம் வரிசை அறைகளின் முன் புதர் மண்டிக்கிடக்கிறது. சுப்பிரமணி எழுந்து ஜன்னலை மூடினான். ஜன்னலில் பாதி பலகை இல்லை. ஜன்னல் மூடியிருந்தாலும் கொசு நுழைந்திருக்கும். காற்றாடி வேகமில்லாமல் கிறுக் கிறுக்கென்று சுழன்றது. வேகம் வைக்க பெருக்கினாலும் அதே அளவிலேயே சுழன்றது. 

சுப்பிரமணி கையில் பிடுங்கும் கொசுக்களைத் தட்டித்தட்டி விரட்டினான். சில கொசுக்கள் கையிலேயே ரத்தக் குழாமாயின. சில பறந்துபோயின.

“நீங்க எந்த ஊரு” டேனியலைப் பார்த்துக் கேட்டான் சுப்பிரமணி. “நான் கோயமுத்தூர்”

“என்ன மேஜர்”

“மேக்ஸ்”

“கோயம்புத்தூரில் இல்லாத காலேஜா”

“இல்ல மேக்ஸ்க்கு இந்த காலேஜ் பல வருஷமா நம்பர் ஒன்னுன்னு சொன்னதால இங்க போட்டுட்டோம்”

“பிசிக்ஸ் இந்த காலேஜ்தான் பெஸ்ட்னு சொன்னாங்க. அதான் இங்க வந்தேன்” என்றான் தினேஷ்.

“நீங்க எந்த ஊரு”

“நான் சிங்கம்புணரி”

“சுப்பிரமணியம் பி.காம். ஆண்டிபட்டி” என்றான். 

எல்லா அறைகளிலும் டியூப்லைட் எரிந்துகொண்டிருந்தது. வெக்கையாக இருந்தது. கொசுக்கள் இருக்க இருக்க அதிகமாகப் படையெடுத்தன. ஒருவரும் கொசுவலை கொண்டுவரவில்லை. 100, 200 என எண்ண முடியாதபடி கொசுக்கள். தெற்கு வராண்டாவில் “அம்மா முடியல, அம்மா முடியலம்மா” என்று ஒருவன் பேசிக்கொண்டு அங்கும் இங்கும் நடப்பது கேட்டது. அந்த வராண்டாவின் கிழக்குக் கடைசியில் குளியல் அறை, கழிவறை. சுப்பிரமணி கதவைத் திறந்து எட்டிப் பார்த்தான். 65ஆம் அறை முன் நின்று பேசிக்கொண்டிருக்கிறான். மணி ஒன்பதேமுக்காலைத் தாண்டிவிட்டது. வெக்கை தாழாமல் குளித்துவிட்டு வந்தவன் 61ஆம் அறையில் புகுந்தான். 

டேனியலுக்கு சீனியர் மாணவர்கள் இழுத்துக்கொண்டுபோய் ரேகிங் செய்வார்களோ என்ற பதட்டம் ஒட்டிக்கொண்டே இருந்தது. ஏழெட்டு கொசுக்கள் முதுகில் சொர்ரெனக் கொட்டியது. துள்ளியெழுந்து துண்டை மடக்கி முதுகுப் பக்கம் அடித்து விரட்டினான்.

“அந்த அண்ணன்கிட்ட சொல்லலாமா. ஃபேன் ரொம்ப மெதுவாக ஓடுதுன்னு”. சுப்பிரமணி ஜன்னலைத் திறந்து உள்திடல்வழி அலுவலக அறையைப் பார்த்தான். ட்யூப்லைட் எரிவதுபோல தெரியவில்லை. மறுபடியும் உடைந்த பாதி ஜன்னலை மூடினான். 

கொசுக்கள் இன்னும் இன்னும் வந்து அடைந்தன. நிலைக்கதவின் மேல் ஜன்னலில் கண்ணாடித் தடுப்பு இல்லை. அது வழியாகவும் கொசுக்கள் வந்தன. முதல் தளம், இரண்டாம் தள அறைகளில் அவ்வப்போது வெளிச்சம் அணைந்தன. “வேர்க்குது, நான் குளிச்சிட்டு வரேன். கொசுக்கடியும் தாங்க முடியல” சுப்பிரமணி துண்டை எடுத்துக்கொண்டு போனான். 

“கொசுவர்த்தி சுருள் இருக்குமா” என்றான் தினேஷ்.

“நாளைக்குத்தான் கடையில் வாங்க முடியும். பஜாருக்கு எட்டு மணிக்குமேல போகக்கூடாதாம். ஹால்டலுக்குள்ள விடமாட்டாங்க ரூல்ஸ். மீட்டிங்ல சொன்னாங்கல்ல.”

“ஆமா ஆமா” 

சுப்ரமணி வரவும் ட்யூப்லைட்டை அணைத்துவிட்டு படுத்தார்கள். போர்வையைப் போத்தினால் வேர்த்து ஒழுகுகிறது. போர்வையை விலக்கினால் கொசு உறிஞ்சியெடுக்கிறது. தூங்கமுடியவில்லை. டேனியல் துண்டை எடுத்து சுழற்றி சுழற்றி முதுகு, நெஞ்சு, கை, கால் என்று அடித்தான். அடக்க முடியவில்லை. தினேஷ் கைபேசியை எடுத்து “அம்மா நீ காலையிலேயே வந்து என்னைக் கூட்டிட்டு போயிடுமா” என்று மெல்ல முணகினான்.

“இல்லம்மா”

“……”

“எனக்கு பிடிக்கலம்மா”

“…….”

“நீ என்ன பாக்க வராதே” மெல்ல அம்மாவுடன் சண்டை போடுவதைக் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். 

தூக்கத்தைக் கொசுக்கள் தின்னத்தொடங்கின. திடீரென துர்நாற்றம் வீசத்தொடங்கியதும் சுப்பிரமணி எழுந்து லைட்டைப் போட்டான். துர்நாற்றம் இன்னும் மூர்க்கமாக நாசியில் தாக்கியது. யாரும் தூங்கவில்லை. எழுந்து மூக்கைப் பொத்தினார்கள். நீண்ட நேரம் மூக்கைப் பொத்திக்கொண்டு இருக்க முடியவில்லை. லபக்கென வாயில் கௌவவரும் பல்லிக்குச் சிக்காமல் சில கொசுக்கள் பறந்தாலும் சில இறையாகின. பல்லியின் வயிற்றில் கருத்த உணவு ஏறிக்கொண்டே இருந்தது.

டேனியல் துண்டை மூக்கை மறிந்து கட்டினான். நாற்றம் அதையும் மீறி தாக்கியது. மணி பதினொன்றைத் தாண்டியது. அம்மாவிற்கு அழைக்கலாமா என்று அலைபேசியை எடுத்தான். இந்த நடு இரவில் எழுந்தால் அம்மாவால் அடுத்து தூங்கவே முடியாது. அம்மா, அப்பா எந்நேரம் என்றாலும் கூப்பிடுப்பா என்று சொல்லித்தான் சென்றார்கள். 

பக்கத்து அறை 62லிருந்து “அய்யோ நாத்தம் புடுங்குதே!” என்று மாணவர்கள் கத்தினார்கள். துர்நாற்றம் வயிற்றைப் புரட்டியது. 64ஆம் அறையில் ஒருவன் ஓங்கரித்துக்கொண்டு கதவைத் திறந்தான். விஷவாயுபோல வந்து தாக்கியது. நுகர நுகர குமட்டல் எடுத்தது. தெற்குப் புறம் வராண்டாவில் நிற்க முடியவில்லை. இந்த நாற்றத்திற்குக் கொசுக்கள் இன்னும் கும்மாளம் போட்டுத் தாக்கியது. 

மூக்கில் துண்டைக் கட்டி கட்டிலில் அமர்ந்தனர். வேர்த்து ஒழுகியது. தூக்கம் போய்விட்டது. எரிச்சலில் கண்கள் காந்தின. டேனியலுக்கு வாந்தி வந்துவிடும்போல சுரப்பி சுரந்தது. முத்து நீராக ஊறியது. உடம்பெல்லாம் பற்றிப்பிடுங்கும் கொசுக்களைப் போர்வையால் அடித்தபடி தவித்தான். கசகசப்பும் வெக்கையும் நாற்றமும் அடிவயிற்றை நடுங்க வைத்தது. ஓங்ங்.. ஓங்கரிப்பு வர கதவைத் திறந்து தென்பக்க வராண்டாவில் நின்றான். வாந்தி எடுத்ததும் வேர்த்து ஒழுகியது. நுரைத்துப் பெருகித் தேங்கும் சாக்கடை நீரில் இரண்டு பெருச்சாலிகள் நீந்தி நடைபாதையாரம் திரும்பி ஓடின. புதரின் மேலிருந்து சட்டென பாய்ந்த ஆந்தை முன் ஓடிய பெருச்சாலியை நீர்ச் சொட்டச் சொட்டக் கவ்வித் தூக்கி புதரின் மேற்குப் பக்கம் கொண்டு சென்றது. பாய்ந்து கவ்விய நொடியில் நின்றிருந்தவர்கள் திடுக்கிட்டுப் பார்த்தனர். தினேஷ் டேனியலின் முகத்தில் தண்ணீரை அடித்து கொப்பளிக்கத் தந்தான். கொப்பளித்துத் துப்புவிட்டு முகத்தைக் கழுவிக்கொண்டு வந்து கட்டிலில் அமர்ந்தான். கை கால்கள் லேசாக நடுங்கின. வயிற்றில் ஒன்றுமில்லை. லைட்டை அமர்த்திவிட்டு படுத்தார்கள். கொசுக்கள் சுர்ரென பிடுங்கியெடுத்தன. 

விடியற்காலை வராண்டாவிற்கு முகத்தைப் பொத்திக்கொண்டு வந்தான் டேனியல். பக்கத்து அறை மாணவர்கள் மூக்கைப் பொத்திக்கொண்டு அடர்ந்த புதர்பக்கம் காட்டிக் கொண்டிருந்தார்கள். மலக்குழி பக்கம் மூடியை மீறி மலமும் நீரும் குபு குபுவென பொங்கி அந்தப் பகுதியெங்கும் பரவிக்கொண்டிருந்தது. மலம் மிதக்க வராண்டா வரை சாக்கடை நீர் தேங்கிக் கிடக்கிறது. 

தினேஷ், டேனியல், சுப்பிரமணி மூவரும் விடுதி அலுவலகத்திற்கு வந்தார்கள். தினேஷ் வடக்குப் பக்க தரைதள வராண்டா பக்கம் நடந்து பார்த்துவிட்டு வந்தான். 80களின் வரிசையின் நடுவில் மூன்று அறைகள் பூட்டிக்கிடந்தன. பரமசிவம் வெளியில் நின்று பல் துலக்கிகொண்டிருந்தான். “அண்ணா செப்டிக் டேங்க் வெடித்து சாக்கடையா மெதக்குது. எங்க ரூமுக்கு ஜன்னல் பாதி இல்லை. ஃபேனும் சரியா சுத்த மாட்டேங்குது. ராத்திரியெல்லாம் தூங்கலண்ணா எங்களுக்கு வேற ரூம் மாத்தித்தாங்க”.

எச்சிலை கூவாப்பில் செடியோரம் துப்பிவிட்டு “தம்பி ரூம் எல்லாம் மாற்ற முடியாது. 350 பேரு. ஹாஸ்டல் ஃபுல்லா மாணவர்கள் இருக்காங்க. அதுவும் இல்லாம இன்னும் புதுசா சேர்ந்த மாணவர்கள் 30 மாணவர்களுக்கு அறை தரமுடியாமல் முழிக்கிறோம். அறையெல்லாம் மாற்றமுடியாது. ஃபேனை சரி பண்ணச் சொல்றேன். போங்க போங்க”

“புதர் முழுக்க மலமா மிதக்குதுன்னா” என்றான் டேனியல்.

“வெடிச்சிருச்சுன்னா நானா பேண்டேன். எண்பது வருஷத்திற்கு முன்னாடி பரிச்ச குழாய் அப்பப்ப வெடிக்கத்தான் செய்யுது. வருவாங்க போங்க” 

தினேஷ் “அண்ணா வடக்குப்பக்கம் 87, 88, 89 ரூம்ல ஃப்ரீயா இருக்குதுதண்ணா. ஒன்னுல மாத்திவிடுங்களேன்” கேட்டான்.

“உன் ஜோலிமயிரப் பாத்துட்டுப்போ. அது ஏற்கனவே புக் ஆயிருக்கு. ஒரு நாளிலயே இந்த கதறல் ம்ம். போங்க போங்க”

சுப்பிரமணியன் கைகள் தடுப்பு தடுப்பாக வீங்கிவிட்டது. “அண்ணா எனக்கு கொசுக்கடி சேராது. என்னய எப்படியாச்சும் மாத்தி விடுங்கண்ணா” என்றான். “கொசு இல்லாத இடம் ஒன்னும் இருக்கா. ஃபேன சரி பண்ணச் சொல்றேன் கிளம்புங்க” டேனியல் கைகளைப் பார்த்தான். சின்னம்மை போட்டதுபோல கொசு கடித்த இடமெல்லாம் சிவப்பு சிப்பு குமிழாக இருந்தது. அரித்தது. “அண்ணா…” என்றான் டேனியல். பரமசிவம் ஒரு பார்வைப் பார்த்துவிட்டு போ என்பதுபோல புறங்கையை அசைத்தான். துர்நாற்றத்தை நோக்கி நடந்தார்கள்.

சு. வேணுகோபால்

2 comments for “நாற்றம்

  1. September 1, 2025 at 10:56 pm

    தாழ்ந்த சாதி மாணவர்களை ஹோஸ்டலில் எங்கே போடவேண்டும் என்று கல்லூரி முதற்கொண்டு சரியாகத் திட்டமிடுகிறது. கல்விச்சாலைகளில்கூட பிரிவினையை வளர்ப்பது கொடுமையாக இருக்கிறது. கொசுக்கடி வாசகனையும் பிடுங்குகிறது. மலநாற்றம் எழுத்துகளையும் மீறி ஊடுறுவுகிறது.

  2. சரவணன்
    September 6, 2025 at 11:02 am

    கதையில் நுங்கு வர்ணனை நம் நாக்கில் எச்சில் ஊறவைக்கிறது … வசதியில்லாமல் பொருளாதாரத்தில் கீழ் தங்கியவனான பரமசிவனும், அதிகாரத்தில் இருக்கும் எஸ்.ஐ. சிங்கராஜனும் , நிலக்கிராகிய பழனிசாமி இப்படி ஒவ்வொருவரும் சாதிய வெறுப்பை காட்ட ஒவ்வொரு கணமும் துடிக்கிறார்கள். எல்லா நிலையிலும் சாதிய வன்மம் நிலவும் எதார்த்தை சொல்லி சொல்கிறது கதை .. மலமும் குப்பையும் தேங்கிய இடத்தில கொசு இருப்பது ஆச்சிர்யமில்லை என்பது போல் சாதியம் நிறைந்த மனதில் வன்முறை இல்லாமல் இல்லை என்பதை நிறுவுகிறது …..

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...