அண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான்

இந்தப் புத்தாண்டில் நண்பர்களுடன் லங்காவி தீவில் இருக்கிறேன். லங்காவி உற்சாகத்துக்குக் குறைவில்லாத தீவு. பூலாவ் பெசார் போலவோ பங்கோர் போலவோ அங்கே செயலற்று அமருவதெல்லாம் சாத்தியப்படாது. 2021ஐ உற்சாகமாக வரவேற்க அந்தத் தீவில் தஞ்சமடைவதே சரியெனப்பட்டதால் ஒரு மாதத்திற்கு முன்பே இப்படி ஒரு பயணத்திட்டம் உருவானது. மேலும் எனது கொண்டாட்டம் என்பதே வருடத்தின் முதல் நாள் மட்டுமே. வேறு எந்த பண்டிகைகளையும் நான் கொண்டாடுவதில்லை.

நான்  அசைவ உணவுப் பிரியன் என்பது பலரும் அறிந்தது. போப்பி இறந்த சில நாட்கள் எவ்வளவு முயன்றும் மாமிசங்களைச் சாப்பிட முடியவில்லை. வாயில் வைத்து மென்றாலே ஏதோ சக்கையை மெல்வதாகத் தோன்றியது. சுவைக்கவில்லை. எனவே சில வாரங்கள் மாமிசம் சாப்பிடுவதை ஒத்திவைத்தேன். இப்போது மனதளவில் சாப்பிட முடியும் என்றே தோன்றினாலும் கோழி, ஆட்டிறைச்சியை முழுமையாகவே ஒதுக்கி விடுகிறேன். தனித்த காரணங்களுக்காக உருவாக்கிக்கொள்ளும் கட்டாய விரதங்கள் எப்போதும் நினைவு வைத்துக்கொள்ள விரும்பும் ஒரு தருணத்தின் ஆயுளை நீட்டித்துக்கொடுப்பதாகவே தோன்றுகிறது. எந்த உணவு மேசையில் அமர்ந்தாலும் போப்பி தன் வாழ்நாளின் இறுதிப்பகுதியில் எனக்களித்த நிபந்தனையற்ற அன்பை எண்ணிக்கொள்கிறேன். அவனது விருப்ப உணவுகள் கண்முன் இருந்தும் சாப்பிட முடியாமல் தவித்த தருணங்களின் சிறு துளியை எனக்குள் செலுத்திக்கொள்கிறேன்.

இழப்புகள்

சாமி மூர்த்தி

ஒவ்வொரு வருட இறுதியிலும் இலக்கியச் சூழலில் மனதுக்கு நெருக்கமான சிலரது மரணமே பேரிழப்பாக மனதில் பதிந்துவிடுகிறது. சிலரது இழப்பு குற்ற உணர்ச்சியையே உண்டாக்கிவிடுகிறது. எழுத்தாளர் சாமி மூர்த்தியின் மரணம் அத்தகையதே. டிசம்பர் 13  அவர் மரணமடைந்தார்.

‘காதல்’ இதழை நடத்தியபோதுதான் (2006) அவரைச் சந்தித்தேன். இதழை வெகுவாகச் சிலாகித்தார். தனது கடந்தகால இலக்கிய வாசிப்பைப் பகிர்ந்துகொண்டார். எழுத்தாளர் எனச் சொல்லிக்கொள்வதைவிட தன்னை வாசகர் எனச் சொல்லிக்கொள்வதில் பெருமை கொண்டார். மா.சண்முகசிவா, அரு.சு.ஜீவானந்தன் போன்றவர்களுடன் இணைந்து 1987இல் ‘அகம்’ என்ற அமைப்பை முன்னெடுத்தவர்களில் சாமி மூர்த்தியும் ஒருவர் என்பதைத் தாமதமாகவே அறிந்தேன்.  அதன் பின்னர் ஜெயமோகனின் முதல் மலேசிய நிகழ்ச்சியை இருவருமாகச் சேர்ந்து வடிவமைத்தோம். அவர் தன்னை முதன்மையான வாசகனாக முன்வைப்பவர். ஜெயமோகனை முதன்முறையாகச் சந்தித்தபோதும் “உங்களுடைய காடு நாவலை மலேசியாவில் முதன் முறையாக வாசித்தவன் நானாகத்தான் இருப்பேன்” என்றே அறிமுகம் செய்துகொண்டார். அவரது சிறுகதைத் தொகுப்பு (சாமி மூர்த்தி சிறுகதைகள்) 2001இல் வெளியீடு கண்டிருந்தாலும் தீவிர இலக்கிய வாசகன் என்பதையே நிரந்தர அடையாளமாகக்கொண்டிருந்தார்.  மலேசிய இலக்கியம் குறித்து ஏராளமான வரலாற்றுத் தகவல்களை அறிந்திருந்த அவரை விரிவான ஒரு நேர்காணலாவது செய்திருக்கலாம்; தவறிவிட்டேன். ‘சடக்கு’ தளத்துக்காக மட்டும் அவரிடமிருந்து சொற்பமான படங்களைப் பெற முடிந்தது.

கே.எஸ்.மணியம்

அதுபோலவே கே.எஸ்.மணியம்,  ஜீ.வி.காத்தையா ஆகியோரது இழப்புகளும் மலேசிய இலக்கியத்துக்கும் அறிவுலகத்திற்கும் பேரிழப்புதான். ஆங்கிலத்தில் மட்டுமே அறியப்பட்ட கே.எஸ்.மணியம் அவர்களின் புனைவுகளை விஜயலட்சுமி தமிழில் மொழிபெயர்த்து, அதை வல்லினம் வழி பதிப்பித்தது தமிழ்ச் சூழலில் அவரை விரிவாக அறிமுகப்படுத்த உதவியது.   ஜீ.வி.காத்தையாவை விரிவான நேர்காணல் செய்திருந்தாலும் ஓர் ஆவணப்படம் செய்யும் எண்ணம் இருந்தது. மலேசியத் தொழிற்சங்க வரலாறு குறித்து விரிவான தகவல்கள் அவரிடம் புதைந்துகிடந்தன. அழைக்கும்போதெல்லாம் நோய்மை தீரக் காத்திருக்கச் சொன்னார். பல சமயங்களில் காத்திருப்புகள் ஏமாற்றங்களையே தருகின்றன. அதுபோல தமிழின் மிக முக்கியமான ஆளுமைகள் கோவை ஞானி, பேராசிரியர் வேதசகாயகுமார, தொ.ப போன்றவர்களின் மரணங்களும் ஈடுசெய்ய முடியாதவை.

வல்லினம்

2020இன் ஜனவரி வல்லினம் இதழே கடும் விமர்சனங்களைத் தாங்கி வெளிவந்தது. குறிப்பாக பல வருடங்களாக எவ்வித விமர்சனப் போக்கும் இல்லாமல் தேங்கிக்கிடந்த மலேசியக் கவிதைகள் குறித்த கவிஞர் சாம்ராஜின் உரையும் கட்டுரையும் பெரும் அதிர்வை உண்டு செய்தது.

வல்லினத்தின் ஒவ்வொரு இதழும் ஒரு சிறப்பிதழாக வெளிவந்ததோடு மிகச்சரியாக முதல் திகதியே பதிவேற்றம் செய்ய முடிந்தது. இன்னும் சொல்லப்போனால் மிகச்சரியாக 12.01க்கெல்லாம் முதல் கட்டுரை பதிவேற்றம் கண்டிருக்கும். தரமான படைப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டதால் வாசகர்கள் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்தது. மேலும் தமிழின் மிகச்சிறந்த படைப்பாளிகளின் பங்களிப்பு வல்லினத்தை பரவலாக கவனப்படுத்தியது. 2020இல் வெளிவந்த ஐந்து இதழ்களையும் வாசித்தவர் எண்ணிக்கையைக் கணக்கில் கொண்டு வல்லினம் ஆரோக்கியமான பாதையில் பயணிப்பதை உணரமுடிந்தது. மிக அதிகமாக 37,054 வாசகர்கள் நுழைவும் மிகக்குறைவாக 17,560 வாசகர்கள் நுழைவும் வெவ்வேறு மாதங்களில் பதிவாகியுள்ளன. கணினி கொடுத்துள்ள இந்தக் கணக்கெடுப்பு ‘கிளிக்ஸ்’ சார்ந்தது என வல்லினம் குழு அறியும். ஆனால் அதிகபட்சம் 8,000 – 10,000 ‘கிளிக்ஸ்’ வந்துகொண்டிருந்த ஓர் இதழுக்கு இந்த எண்ணிக்கை மாற்றம் நிகழ்ந்தது படைப்பின் தரத்தினால் என்றே முடிவுக்கு வர முடிகிறது. எனில், இவ்வெண்ணிக்கையின் 20% வாசகர்கள் தொடர்ந்து வந்தாலே அது உற்சாகம் கொடுக்கக் கூடிய எண்ணிக்கையே.

அபிராமி கணேசன்

வல்லினத்தின் இளம் படைப்பாளிக்கான விருது செப்டம்பர் 1 அறிவிக்கப்பட்ட போதும் கோவிட் ஊரடங்கினால் அவ்விழாவை நடத்த முடியாமல் போனது. இவ்விருதை கட்டுரைகளில் பங்களித்தமைக்காக அபிராமி கணேசன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. விருதுத் தொகை இரண்டாயிரம் ரிங்கிட். அந்த விழா கோவிட் சூழலை பொருத்து புத்தாண்டில் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

வல்லினம் பதிப்பில் வந்த சை.பீர்முகம்மதுவின் ‘அக்கினி வளையங்கள்’ நாவலுக்கு டான் ஶ்ரீ சோமா அறவாரியத்தின் விருது கிடைத்தது. இந்நாவல் எழுத்தாளர் சங்கம் வழங்கும் மாணிக்கவாசகம் விருதுக்கு செல்லவில்லை. காரணம் இரண்டுமுறைக்கு மேல் ஒரே படைப்பாளிக்கு அந்த விருதைக் கொடுப்பதில்லை என்ற விதியை மாணிக்கவாசகம் விருது வாரியம் கொண்டுள்ளது. ஆனால் அதுவும் ஒரு வகையில் நன்மையாகவே முடிந்துள்ளது. இந்தவருடம் அவ்விருதை பெற்றிருக்கும் நாவலின் தரத்தை ஒப்பிட்டு பார்த்தால் எப்போதோ மதிப்பிழந்த அந்த விருந்து மேலும் தன்னை அசிங்கப்படுத்திக் கொண்டுள்ளதை காணமுடிகின்றது. அப்படியான விருதுக்கு வல்லினம் பதிப்பித்த நாவல் செல்லாதது அதிஷ்டம்தான்.

எழுத்துப்பணி

கோவிட் பெருந்தொற்றுக் காரணமாக நீண்ட விடுப்பு கிடைத்தது. அதைப் பயன்படுத்திக்கொண்டு தொடர்ச்சியாக சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுதினேன். மொத்தம் 9 சிறுகதைகள். வீட்டில் அடங்கிக் கிடந்த மனம் கற்றற்று திரிந்தது. புதிய நிலங்களையும் புதிய மனிதர்களையும் சிறுகதைகளில் உருவாக்க முடிந்தது. சிருஷ்டி அகங்காரம் அவ்வப்போது ஆக்கிரமிக்கவும் செய்தது. அதோடு மலேசியாவில் குறிப்பிடத்தக்க நாவல்களை வாசித்து அவை குறித்த விரிவான விமர்சனங்களை எழுதும் சூழலும் கிடைக்கப்பெற்றேன். மேலும் செப்டம்பரில் வெளிவந்த முதல் ‘நீலம்’ இலக்கிய இதழிலும் என் சிறுகதை ஒன்று வெளிவந்தது. 

EKSENTRIKA எனும் மலாய் கலை இலக்கிய மின்இதழில் என் ‘ஒலிப்பேழை’ எனும் சிறுகதை நண்பர் சரவணன் அவர்களால் ‘Pita Suara Mona Fendey‘ என மொழியாக்கம் கண்டு பிரசுரமானது மலாய் இலக்கிய உலகில் கிடைத்த உற்சாகமான அறிமுகம். இந்த அறிமுகத்தை, என் புனைவுகளை மட்டும் அல்லாமல் மலேசிய தமிழ் இலக்கியச் சூழலைப் பற்றியும் உரையாடலை உருவாக்கும் பெரும் வாய்ப்பாகவே கருதுகிறேன்.

என்  நூல்கள்

இவ்வருடம் எனது மூன்று நூல்கள் வெளிவந்துள்ளன. ‘உச்சை’ சிறுகதைத் தொகுப்பு யாவரும் பதிப்பிலும் ‘மலேசிய நாவல்கள்’, ‘மனசிலாயோ’ ஆகிய இரு நூல்கள் வல்லினம், யாவரும் கூட்டுத் தயாரிப்பிலும் வெளியீடு கண்டன. ‘உச்சை’ சிறுகதைத் தொகுப்பை நண்பர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் வெளியீடு செய்துவைத்தது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. மேலும் நண்பர்கள் சிலரும் ஆய்வு மாணவர்கள் சிலரும் எனது முதல் சிறுகதைத் தொகுப்பான ‘மண்டை ஓடி’யை வாசிப்புக்குத் தொடர்ந்து கேட்டதால் அதனை  மின்நூலாகக் கொண்டு வந்தேன்.

இலக்கிய உரையாடல்கள்

ஜொகூர் மாநில இலக்கியக் கழகம், தமிழியல் பட்டக்கல்வி மாணவர்கள் இணைவில் நவீன இலக்கிய அறிமுகக் கூட்டம் ஜொகூரில் நடந்தது. நண்பர் குமரன் தன் வீட்டிலேயே இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். சுமார் 20 இலக்கிய ஆர்வலர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் நவீன இலக்கிய வாசிப்பு குறித்து அறிமுக உரை ஆற்றினேன். இவ்வருடம் ஆசிரியர்களுக்கான சிறுகதைப் பயிலரங்கு ஒன்றை சுங்கை ரெங்காம் தமிழ்ப்பள்ளியிலும் மாணவர்களுக்கான சிறுகதைப் பயிலரங்கை ஷா அலாமில் உள்ள மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி, ஜொகூர் துன் அமீனா தமிழ்ப்பள்ளி ஆகிய இடங்களில் நடத்தினேன். கோவிட் கட்டுப்பாடுகள் தொடங்கியதும் இணையவழி உரையாடல்கள் பலவற்றைத் தவிர்த்துவிட்டேன். ‘நிலவெளி’ ஒருங்கிணைப்பில் நடந்த உரையாடல் ஒன்றில் மட்டும் கலந்துகொண்டேன்.

பயணம்

19.1.2020இல் நண்பர்களுடன் இவ்வருடத்தின் முதல் பயணம் தொடங்கியது. நண்பர்கள் சரவணன், முருகன், முத்து ஆகியோருடன் ஜொகூரைச் சுற்றி வந்தேன். உண்பதும் ஊர் சுற்றுவதும்தான் அடிப்படைத் திட்டம். அங்கிருந்தபடியே தமிழகம் மதுரைக்கு ஒரு பயணம் செய்யலாம் எனத் திட்டம் வகுத்து விமான டிக்கெட் பதிவு செய்தோம்.

கோவிட் காரணத்தினால் பயணம் தடைப்பட்டது. விமானச் சேவைகள் முடக்கப்பட்டன. சுமார் ஒரு மாதங்களுக்கு முன்பே மதுரையில் என்னென்ன சாப்பிடலாம் எனப் போட்டிருந்த பட்டியல் எல்லாம் பாழானது. அந்தக் குறையைத் தீர்க்க வெறித்தனமான உள்ளூர் பயணங்களை அடுத்தடுத்து ஏற்பாடு செய்தோம்.

13.3.2020 தைப்பிங் நகருக்குப் பயணம் மேற்கொண்டோம். மலேசியாவின் மிக முக்கிய நகரம். வரலாறும் இயற்கையும் இணைந்த நிலம். அங்கு இருக்கும்போதுதான் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ஊரடங்கு முடிந்தவுடன் மறுபடியும் தீவிரமாகப் பயணம் மேற்கொண்டோம். இம்முறை 3.7.2020 அன்று பிரேசர் மலைக்கு ஒரு பயணம். பிரேசர் என் மனதுக்கு நெருக்கமான இடம். நான்கு மாதங்கள் வீட்டிலேயே அடைந்து கிடந்த அழுத்தங்களை அங்கே கொட்டித் தீர்த்தோம். மறுமாதமே 7.8.2020 அன்று பங்கோர் பயணமானோம். மலையைப் பார்த்தால் கடலையும் பார்க்க வேண்டும் என்பது நான் அமைத்துக்கொண்ட விதி. அதை ஒருங்கே நிறைவேற்றினோம். இவ்வருடத்தின் இறுதிப் பயணமாக டிசம்பர் 31 அன்று லங்காவிக்கு பயணத்தை வடிவமைத்தோம்.

யாழ் பதிப்பகம்

யாழ் பதிப்பகத்தை தொடங்கிய காரணம் வேறாக இருந்தாலும் தமிழ்ப்பள்ளிகளின் பயிற்சி நூல் தேவைகளை ஒட்டி மெல்ல மெல்ல அக்கனவுகள் வளர்ந்து உருமாற்றம் பெற்றன. தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு உட்சபட்சமாக எத்தனை தரமான, பிரமாண்டமான நூல்களை வழங்க முடியும் என்ற கனவில் 200 பக்கங்களுக்கு மேல் விளக்க நூல்கள் அடுத்தடுத்து உருவாகின. ஒருவகையில்  ஒவ்வொரு நூலிலும் மலேசியப் பயிற்சி நூல்களின் அதிகபட்ச எல்லைகளை எட்ட  முயன்றோம்.  இவ்வருடம் பதிப்பித்துள்ள ‘யாழ் கணித மேற்கோள் நூல்’ அவ்வாறானதுதான்.

ஆசிரியர் முருகன்

யாழில் கிடைக்கும் லாபத்தின் ஒரு பகுதியை மாணவர்களுக்கான பிற தனி மனிதர்களின் முன்னெடுப்புகளுக்கு உதவுவதுண்டு. அவ்வகையில் பிப்ரவரி மாதத்தில் திரு,பி.எம்.மூர்த்தி, ஆசிரியர் விஸ்வநாதன் ஆகியோர் எழுதி வெளியிட்ட மாணவர் நாவலான ‘முதல் பயணம்’ நூல்களை 100 பிரதிகள் வாங்கி அவற்றை கோலாசிலாங்கூரில் உள்ள 20 பள்ளிகளுக்கு வழங்கினோம்.

வடிவமைப்பாளர் தென்னரசு

நானறிந்து இப்படி ஒரு நூல் ஆங்கிலம், மலாய் மொழிகளிலும் இல்லை. பெரும்பாலும் சாதனைகள் தாமதமாகவே பொதுவெளியில் அறிந்துகொள்ளப்படுகின்றன. பதிப்பாளனாக இந்நூல் குறித்து கனவுகண்டது மட்டுதான் என் பணி. அதை நடைமுறைப்படுத்தியவர்கள் அந்நூலின் ஆசிரியர் நண்பர் திரு முருகனும்  வடிவமைப்பாளர் தென்னரசுவும்தான்.

மேற்கல்வி

ஒரு பணியைத் தொடங்கும்போது அப்பணியை இன்னொருவரால் செய்துவிட முடியுமென்றால் அதை நான் செய்யாமல் இருப்பதே நல்லதென்று நினைப்பேன். எனவே, இந்த முதுகலைப் படிப்புக்காக நான் செய்த ஆய்வேடு எனக்கானதாக இல்லாமல் பொதுவெளியில் எவ்வாறான விளைவுகளை ஏற்படுத்த வேண்டும் என்பதில் எனக்குத் தனித்த கவனம் இருந்தது.

இவ்வாய்வு நடவடிக்கையால் எனக்குக் கிடைத்த தனிப்பட்ட அனுபவங்கள் இரண்டு. முதலாவது, ஓர் ஆய்வை மேற்கொள்ளும் தொழில்நுட்பத் திறனை ஓரளவு அறிந்துகொண்டேன். இரண்டாவது, 2006 முதல் 2016வரை மலேசிய இலக்கிய இதழ்களிலும் தொகுப்புகளிலும் தனிநபர் தளங்களிலும் வெளிவந்த 150க்கும் மேற்பட்ட சிறுகதைகளை வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

மலேசியத் தமிழ் இலக்கியத்துக்கு எனது இவ்வாய்வு சிறிய பங்களிப்பை வழங்கும் என்று நம்புகிறேன். ந. பாலபாஸ்கரன் மலேசிய சிறுகதைகளுக்காக 1980கள் வரை வகுத்திருந்த நான்கு காலகட்டங்களே மறுபடி மறுபடி பிற ஆய்வுகளில் பின்கோடிடப் படுகின்றன. 1980களிலிருந்து 2016வரை உள்ள காலகட்ட இலக்கியப்போக்கை தரவுகளின் அடிப்படையில் ஆய்வு செய்து மேலும் நான்கு காலகட்டங்களை வகுத்தேன். அத்துடன், 2000 முதல் 2016 வரையான ஆண்டுகளில் மலேசிய இளம் படைப்பாளிகளின் சிறுகதைகளில் உள்ள உளவியல் தன்மையை அறிய சிக்மன் பிராய்டு, கார்ல் யாங், மெல்வின் சீமன் போன்றவர்களின் கோட்பாட்டு ரீதியான அணுகுமுறைகள் துணைபுரிந்தன. அனைத்திற்கும் மேலாக வல்லினம் மலேசிய இலக்கியத்தில் எவ்வாறான ஆரோக்கிய விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பதை ஆய்வின்வழி நிரூபணம் செய்ய முடிந்தது.

இந்த ஆய்வை மேற்கொண்டபோதுதான் மலாயாப் பல்கலைக்கழகத்தில், ‘அந்நியமாதல்’ குறித்த எவ்வித தமிழ் இலக்கிய ஆய்வுகளும் இதற்குமுன் மேற்கொள்ளப்படவில்லை என்பதை அறிய முடிந்தது. எனவே, இந்த ஆய்வு கோட்பாட்டு ரீதியாக, உள்ளடக்கம் ரீதியாக புதுமையைக் கொண்டுள்ளதில் எனக்கு மகிழ்ச்சியே. அதோடு, மலேசியச் சிறுகதை இலக்கியத்தின் காலகட்டத்தையும் அதன் உள்ளடக்கத்தையும் வரலாற்றுச் சூழலையும் கணக்கில்கொண்டு காலவரிசைப்படி வகுக்க முடிந்ததில் நிறைவு ஏற்பட்டது.

சர்ச்சைகள்

இவ்வருடத்தின் தொடக்கத்திலேயே ‘பேய்ச்சி’ குறித்த சர்ச்சை எழுந்தது. அதன் விளைவாக எப்போதைக்கும் இல்லாமல் அந்நூல் மலேசியாவில் அதிகம் வாசிக்கப்பட்டு அது குறித்த விரிவான கட்டுரைகள் எழுதப்பட்டன. நாளிதழ்களில் வந்த அறிக்கைகளாலும் வாட்சப்பில் பரவிய செய்திகளாலும் கடைகளில் பேய்ச்சி விற்றுத் தீர்ந்தது. டிசம்பர் 19 பேய்ச்சி நாவல் உள்துறை அமைச்சால் தடை செய்யப்பட்டபின் மறுபடியும் ஓர் அலை எழுந்து வெளிநாடுகளில் பேய்ச்சி விரிவான அறிமுகம் கண்டது. மலாய், ஆங்கில ஏடுகளில் பேய்ச்சி உரையாடல் பொருளானாள். தமிழகத்தில் நண்பர் ஜீவகரிகாலன் இந்தத் தடை குறித்த கவனத்தை பரவலாக்கினார். தமிழின் முதன்மையான எழுத்தாளர்கள், அமைப்புகள், பத்திரிகைகள் என  பல தரப்பும் பேய்ச்சிக்கு ஆதரவான குரலை எழுப்பினர்.

எம்.கருணாகரன் ஓர் அரை வேக்காடு‘ எனும் பதம் தெய்வழக்காகிவிடும் அளவுக்கு இவ்வருடம் கருணாகரனின் செயல்பாடுகள் இருந்தன. அதில் உச்சமாக மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் அனேகமாக அனைத்து தவறான தரவுகளோடு அவர் ஆற்றிய உரை குறித்து ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். வழக்கம்போல அத்தவற்றைத் திருத்தாமல் மௌனம் சாதித்த எழுத்தாளர் சங்கம் தங்கள் சாதனையை நிலைநிறுத்திக்கொண்டது.

2021இல்

சர்ச்சைகளும் வசைகளும் எனக்குப் புதிதல்ல. புறக்கணிப்புகளுக்கும் அவதூறுகளுக்கும் பயந்துதான் இந்நாட்டில் விமர்சனக் கலையும் தீவிர இலக்கியமும் வளராமல் போனது. எனவே இலக்கியம் பொருட்டு எதிர்கொள்ளும் எதுவும் பறிகொடுக்கும் எவையும் அதன் வளர்ச்சிக்கு உதவுமென்றால் எனக்கது சம்மதமே. எனக்கு எப்போதும் ஒரு விடயம் மட்டும் பரிதாபமாக இருக்கும். எப்போது சர்ச்சை எழுகிறதோ அப்போதெல்லாம் ஒரு கும்பல் வந்து ‘2013லே…’ ‘2019லே…’ என முழங்கும். ‘வல்லினத்தை நாங்கள் எதிர்த்த காலத்திலே…’ எனக்கூவும். ஆனால் அந்த எதிர்ப்பினால் ஒரு விளைவும் ஏற்பட்டிருக்காது. பெரும்பாலும் அவரவர் போட்டுக்கொண்ட கூச்சல்களே அவரவர் சாதனைகளாக நம்பப்படுகிறது. நெற்றியில் இரத்தம் வர இரும்புத்தூணை முட்டிக்கொண்டு முறைப்பதெல்லாம் வடிவேலுவுக்கு வேண்டுமானால் சரியாக இருக்கும். இலக்கியச் சூழலுக்கு ஒவ்வாது. இந்தக் கூச்சல்கள் எதிலும் சோர்வடையாமல், முகநூல் அவதூறுகளால் பின்வாங்காமல் தனிப்பட்ட முறையிலும் வல்லினம் நண்பர்கள் இணைவிலும் எங்கள் இலக்கிய முயற்சிகள் பல அடிகள் முன்னேறிச் சென்றிருக்கும். எனவே ஒடுங்கி ஓய்வதெல்லாம் எவ்வருடம்போலவும் இவ்வருடத்திலும் சாத்தியமில்லை.

இந்த உற்சாகத்தோடு இந்த வருடம் என் சிறுகதைத் தொகுப்பை மலாய் மொழியில் வெளியிட உள்ளேன். மலேசிய சிறுகதைகள் குறித்த விமர்சன நூல் ஒன்றும் வெளிவரும். அடுத்த நாவலும் நிச்சயம் உண்டு. மற்றபடி புதிதாக என்னிடம் வந்து சேர்ந்த போப்பியால் கொஞ்சம் வேலையும் அதிகரித்துவிட்டது. குழந்தைகளுக்குக் கொடுக்கும் கவனம் குட்டிகளுக்கும் செலுத்த வேண்டும். இந்த வருட இறுதிக்குள் அவன் முழுமையாக வளர்ந்திருப்பான்.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

நானெனும் பொய்யை நடத்துவோன் நான்

கண்டநற் சக்திக் கணமெலாம் நான்

இயங்கு பொருளின் இயல்பெலாம் நான்!

(Visited 298 times, 1 visits today)