உலகத் தமிழ்ச் சங்கத்தில் கொட்டிய குப்பை

நண்பர் ஒருவர் கு.அழகிரிசாமி மலேசியாவில் பணியாற்றியது குறித்து ஆச்சரியமாகக் கேட்டார். நான் சில விளக்கங்களைக் கூறியபோது குழம்பிப்போய் உலகத் தமிழ்ச் சங்க இணையக் கலந்துரையாடல் யூடியூப் பதிவொன்றை அனுப்பி வைத்தார். அதில் எம்.கருணாகரன் (மலேசியா) தமிழ்ச் சங்க உறுப்பினர்களிடம் மலேசியச் சிறுகதை வரலாறு குறித்து கொடுத்த விளக்கங்களைக் கேட்க முடிந்தது. தொடர்ச்சியாக மலேசிய நாவல்கள் குறித்த ரசனை விமர்சனங்களும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டிருப்பதால் கருணாகரனின் அந்த அபத்த  உரைக்கு மறுப்பு எழுத வேண்டுமா என யோசித்தேன்.

ஒரு குழுவுக்குள் அவரது அசட்டுத்தனமான உளறல்கள் இருந்துவிட்டு போவதில் எனக்கு எந்தச் சிக்கலும் இல்லை. ஆனால், அதைப் பதிவு செய்து பொதுவெளியில் பதிவேற்றம் செய்கையில் மலேசிய இலக்கியம் குறித்த தவறான வரலாற்றையும் பதிவு செய்வதாகிறது. அதுவும் உலகத் தமிழ்ச் சங்கம் எனும் அடையாளத்தின் கீழ் இந்தக் குப்பைகளை அவர் கொட்டும்போது இளம் ஆய்வு மாணவர்கள் மத்தியிலும் தவறான வரலாறுகள் பகிரப்படுகின்றன. அவ்வகையில் எம்.கருணாகரன் உளறியுள்ள கருத்துகளில் காணப்படும் வரலாற்றுப் பிழைகளைச் சுட்டிக்காட்டுவது அவசியம் என நினைக்கிறேன். மலேசிய இலக்கியத்தில் அக்கறை உள்ள ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமையாக இதைக் கருதுகிறேன்.

உளறல் 1: தமிழ் நேசன் 1924லும் தமிழ் முரசு 1930லும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இரு பத்திரிகைகளும் வாரம்தோறும் சிறுகதை வெளியிட்டு மிகப்பெரிய பங்களிப்பை ஆற்றியுள்ளன.

விளக்கம்: தமிழ்முரசு நாளிதழ் 1935இல்தான் வார இதழாகத் தொடங்கப்பட்டது. 1936ஆம் ஆண்டு இறுதியில்தான் அது தினசரியாக வெளிவரத் தொடங்கியது. தமிழ் முரசு தொடக்ககாலம் முதலே சிறுகதைகளை வெளியிடத் தொடங்கினாலும், சிறுகதைப் பெருக்கம், வளர்ச்சி என்பது 1950களில் தான் வீறுகொண்டது.

அதேபோல 1924 செப்டம்பர் 10ல் தமிழ் நேசன் வார ஏடாகவே தொடங்கப்பட்டது. அப்போதே அந்த நாளிதழுக்கு சிறுகதைகள் குவிந்தாலும் நேசனை ஆரம்பித்து நடத்திய கி. நரசிம்ம ஐயங்கார் சிறுகதைகளைப் பிரசுரிக்கவில்லை. எட்டு ஆண்டுகள் கழித்து 1932 மே மாதம் ‘தமிழ்நேசன் கதைப் பகுதி’ தொடங்கப்பட்டது. அதில்தான் முதல் தடவையாக கோ. பார்த்தசாரதி ஐயங்கார் எழுதிய ‘தோட்டக் கொலை மர்மம் அல்லது பத்துமலைக் கள்வன்’ என்ற தொடர்கதை வந்தது. 1932 ஆம் ஆண்டின் இறுதியில் அந்தத் தொடர்கதை 87 பக்க நூலாக வெளிவந்துவிட்டது. தமிழ்நேசனின் முதல் சிறுகதை அது தொடங்கப்பட்ட 9 ஆண்டுகள் கடந்து 1933 ஆகஸ்ட் 2ல் வெளியானது (பாலபாஸ்கரன்).

உளறல் 2: சி.வி.குப்புசாமி – ‘ஜப்பானியர் லாக்கப்பில் ஏழு நாட்கள்’, ‘யுத்தத்தால் வந்த யுத்தம்’ ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். இது அந்தக் காலத்தில் மலேசியாவில் சிறுகதை தொகுப்புகள் வந்ததற்கான அடையாளங்கள்.

விளக்கம்: சி.வி.குப்புசாமி அவர்கள் வருங்கால நவயுகம் (1937), பெரியார் ஈ. வெ. ராமசாமி (1939) முதலான நூல்களைப் புனைந்தவர். 1930ஆம் ஆண்டு முதல் மலாய் நாடு எனும் வார இதழில் கட்டுரைகள் எழுதியுள்ளார். அவர் ஜப்பானியர் ஆட்சியின்போது ஒரு போலிக் குற்றச்சாட்டின் பேரில் ஒரு வாரம் காவலில் வைக்கப்பட்டுக் கொடுமையாக சித்திரவதை செய்யப்பட்டார். அந்தக் கசப்பான அனுபவங்களை ‘ஜப்பானிய லாக்கப்பில் ஏழு தினங்கள்’ எனும் நூலை 1946இல் எழுதினார். அது சிறுகதையல்ல. கட்டுரை நூல். மேலும் நூலின் தலைப்பில் ‘ஏழு தினங்கள்’ என்றே குறிப்பிடப்பட்டிருக்கும். அதுபோல ‘யுத்தத்தால் வந்த யுத்தம்’ எனும் நூலை 1946இல் எழுதியவர் சி.வி.குப்புசாமியல்ல; கே பி சுப்பையா. கருணாகரன் இந்தக் குறிப்பை 2004இல் எழுதப்பட்ட ரெ.கார்த்திகேசு கட்டுரையில் இருந்து எடுத்திருக்கலாம் என நினைக்கிறேன். ரெ.கார்த்திகேசு வேறு எங்கோ பார்த்து அக்கட்டுரையைத் தவறாக எழுதியுள்ளார். இது இப்படியே தொடர்ந்துகொண்டு போகும். 16 ஆண்டுகளில் மலேசியத் தமிழ் இலக்கியத்தில் நடந்த புதிய ஆய்வுகள் குறித்து கருணாகரனுக்கு எந்தத் தேடலும் இல்லை. பாலபாஸ்கரன் இந்நூல் குறித்து விரிவாகவே தனது ‘தமிழ் இலக்கியத் தடம்’ நூலில் குறிப்பிட்டுள்ளார். ஏதாவது ஒரு நூலை வாசித்து அதன் நம்பகத்தன்மையை ஆராயாமல் ஒப்புவிப்பதே எளிய வழி.

உளறல் 3: கதை வகுப்பு ஆறு மாதம் நடந்தது. இதில் 3 மேதை எழுத்தாளர்கள் 32 சிறந்த எழுத்தாளர்கள் எனப் பட்டியலிடப்பட்டனர்.

விளக்கம்: கதை வகுப்பு உண்மையில் ஒன்பது மாதம் நடந்தது. 3 மேதை எழுத்தாளர்கள் என்பது சரிதான். ஆனால் சிறந்த எழுத்தாளர்கள் எண்ணிக்கை 23 என்றே பட்டியல் உள்ளது. இன்னும் தேர்ந்த எழுத்தாளர்கள், நல்ல எழுத்தாளர்கள், ஆர்வ எழுத்தாளர்கள் எனத் தனித்தனியாகப் பட்டியல்களும் உண்டு. (தமிழ் இலக்கியத் தடம் சில திருப்பங்கள்)

உளறல் 4: 1950களில் இந்த மண்ணுக்குரிய மக்களாக நாங்கள் மாறிவிட்டோம். அதை ஒட்டி இந்த மண்ணின் பிரச்சனைகள் எழுதப்பட்டன. அதன் தொடர்ச்சியாக  எ. எம்.எம் இப்ராஹிம் என்கிறவர்  ‘கடை சிப்பந்திகளின் கண்ணீர்’ என்ற சிறுகதை தொகுப்பை 1946இல் வெளியிட்டார்.  இந்திய முஸ்லிம்கள் கடைகளில் வேலை செய்கின்ற சிப்பந்திகள்  எத்தகைய துன்பங்களை அனுபவித்தனர் என  அது பேசுகிறது.

விளக்கம்: உண்மையில் இக்கதைகள் தென்னிந்தியக் கடை உரிமையாளர்கள் தம் ஊழியர்கட்கு இழைக்கும் அநீதிகளைப் புலப்படுத்துபவன. சரி அது ஒருபுறம் இருக்க 1950களில் மண்ணுக்குரிய கதை எழுதத் தொடங்கிவிட்டனர் எனச் சொல்லிய அவர் அதன் தொடர்ச்சி என ஏன் பின்னோக்கி 1946க்குச் செல்கிறார் என்பதுதான் குழப்பம். தொடர்ச்சி என்பது பின்னோக்கியா உள்ளது.

உளறல் 5 : சீ. முத்துசாமி எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர். அவர் அண்மையில்கூட மண் புழுக்கள் என்கிற நாவலை எழுதி வெளியிட்டிருக்கிறார்

விளக்கம்: சீ. முத்துசாமி ‘மண்புழுக்கள்’ நாவலை எழுதி 15 ஆண்டு ஆகிவிட்டன. அதன் பின்னர் அவர்  ஒரு சிறுகதை தொகுப்பையும்,  இருளுள் அலையும் குரல்கள் என்ற குறுநாவல் தொகுப்பையும் மலைக்காடு என்ற நாவலையும் எழுதிவிட்டார். தனக்குப் பிடித்த எழுத்தாளரைக்கூட கருணாகரன் தொடர்ந்து வாசிக்கமாட்டார் என்பதை அறிந்தபோது அவர் வாசிப்புத் திறனை எண்ணி வியக்கவே செய்தேன்.

உளறல் 6: கு.அழகிரிசாமி மலேசியாவிற்கு 1950களில் வந்தபோது ‘எழுத்தாளர் வட்டம்’ என்ற ஒன்றை உருவாக்குகிறார். அவர் அடையாளப்படுத்தியவர்களில் சிலர் மு.அப்துல் லத்திப், எஸ்.வி.சுப்ரமணியம், முத்தையா, இராச.இளவழகன், மா.செ.மாயதேவன், மா.இராமையா, சி.வடிவேல் என ஒரு பட்டியல் போட்டுள்ளார்.

கு.அழகிரிசாமி

விளக்கம்: கு.அழகிரிசாமி உருவாக்கிய குழுவின் பெயர் எழுத்தாளர் வட்டமல்ல ‘இலக்கிய வட்டம்‘. மலாயாவில் தமிழ் எழுத்தாளர்கள் எனும் தலைப்பில் கு.அழகிரிசாமி எழுதியுள்ள கட்டுரையில் வரும் வரிகள் இவை. ‘மலாயாவில் இருபது எழுத்தாளர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். அதில் முதல் தரமானவர்கள், செ.ஆலிவர் குணசேகர், பொ.சா. பரிதிதாசன், சி.வேலுஸ்வாமி, நாகுமணாளன், சி.வடிவேல், இராச இளவழகன், மு.தனபாக்கியம் ஆகியோர்.’  1960இல் தமிழகத்தின் சரஸ்வதி இதழில் வந்த இக்கட்டுரையில் மேலும் சில எழுத்தாளர்களின் பெயர்கள் இருந்தாலும் கருணாகரன் குறிப்பிட்டுள்ள மு.அப்துல் லத்திப், மா.இராமையா, மா.செ.மாயதேவன் பெயர்கள் அவர் கட்டுரையில் இடம்பெறவில்லை. அவர்கள் கு.அழகிரிசாமி உருவாக்கிய குழுவில் பங்கெடுத்திருக்கலாம். கு.அழகிரிசாமி அடையாளம் காட்டினாரா என்பதே இங்கு முக்கிய கேள்வி.

உளறல் 7: இரா.தண்டாயுதம் அவர்கள் 1986ல் மலாயாப் பல்கலைக்கழக தமிழ்ப் பேரவை வழி சிறுகதைப் போட்டி ஒன்றை ஆரம்பித்தார்.

டத்தோ தெய்வீகன்

விளக்கம்: கருணாகரனைக் குறைசொல்லியும் பலனில்லை. மா. இராமையா , எழுத்தாளர் முரசு. நெடுமாறன்  ஆகியோர் தொகுத்திருக்கும் நூல்கள் பேரவைக் கதைகளின் தொடக்கம் 1985 அல்லது 1986ஆம் ஆண்டு என்றே குறிப்பிடுகின்றன. உண்மையில் பேரவைக் கதைகள் நூலின் முதல் தொகுப்பு முயற்சி 1982-1983ஆம் ஆண்டுகளில் தொடங்கப்பட்டது. தமிழ்ப் பேரவையில் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் இதுகுறித்த தகவல்கள் உள்ளன. 1982-1983ஆம் ஆண்டு புதிதாக தமிழ்ப் பேரவைக்குப் பொறுப்பேற்ற மாணவர்களினால், அது அடுத்த தளம் நோக்கி நகர்த்தப்பட்டது. அத்தவணையில் (1982-1983) பேரவைத் தலைவராக இருந்த டத்தோ ஆ. தெய்வீகன் அவர்களின் நிர்வாகத்தின் கீழ் பரிசுக்குரிய சிறந்த மூன்று சிறுகதைகளுடன் மேலும் ஏழு சிறுகதைகளையும் தேர்ந்தெடுத்து நூல்வடிவம் தரப்பட்டது. இத்தொகுப்பிற்கு மலாயாப் பல்கலைகழக இந்திய ஆய்வியல்துறையின் அப்போதைய விரிவுரையாளரும் தமிழ்ப் பேரவையின் ஆலோசகருமான அமரர் டாக்டர் இரா. தண்டாயுதம் ‘பேரவைக் கதைகள்’ என பெயரிட்டார். (ஆழமும் அகலமும்: டத்தோ ஆ.தெய்வீகன்)

உளறல் 8: கருணாகரனின் உரையைக் கேட்டபோது நான் சிரித்த இடம் ஒன்று உண்டு. சை.பீர்முகம்மது தொகுத்த  ‘வேரும் வாழ்வும்’ நூலை தூக்கிக்காட்டி அதில் நூற்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் கதைகள் உள்ளன என்பார். உண்மையில் அதில் இருப்பது மொத்தமே 93 கதைகள் மட்டுமே. அதெப்படி கையில் உள்ள நூலைக்கூட புரட்டிப் பாரக்காமல் இவரால் பேச முடிகிறது என்று ஆச்சர்யமாக இருந்தது. இவரை நம்பி எப்படி எழுத்தாளர் சங்கம் பொறுப்பை ஒப்படைத்தது என்ற வியப்பு மிஞ்சியது.

உளறல் 9: எழுத்தாளர் சங்கத் தலைவர் பட்டியலைச் சொல்லும்போது மன்னர்மன்னன் பெயர் விடுபட்டது.

முஸ்தபா

விளக்கம்:  இதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. எல்லோரும் சொன்னதுபோல அவர் பொம்மைத் தலைவர் என்ற எண்ணம் கருணாகரனுக்கும் இருந்திருக்கலாம். ஆனால் முஸ்தபா அறக்கட்டளை மூலம் வழங்கப்படும் கரிகால்சோழன் விருதுக்கும் எழுத்தாளர் சங்கத்துக்கும் முடிச்சுப் போட்டபிறகு ஏற்பட்ட எரிச்சலால் அதற்கு மேலும் அந்தக் காணொளியைப் பார்க்க முடியவில்லை. கரிகால்சோழன் விருது முஸ்தபா அறக்கட்டளையால் தொடங்கப்பட்டது. இதற்கும் எழுத்தாளர் சங்கத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர்கள் மலேசிய நூல்களைச் சேகரித்து போட்டித் தேர்வுக்கு வழங்கும் பணியைச் செய்கின்றனர். ஆனால், எழுத்தாளர் சங்கத்தின் மூலமாக மட்டுமின்றி தனிப்பட்ட முறையிலும் நூல்களை நேராக முஸ்தபா அறக்கட்டளைக்கு அனுப்பலாம். நூல்களைப் பெற்று வழங்கும் அஞ்சல் சேவையை வழங்குவதால் அந்தப் போட்டியையே அவர்கள் எடுத்துச் செய்வதாகச் சொல்வதெல்லாம் எவ்வளவு பெரிய மோசடி.

முனைவர் கிருஷ்ணன்

எழுத்தாளர் சங்கம் தன் திட்டப்படியும் தனது சக்திக்கு ஏற்பவும் இயங்குவதில் எனக்கு எந்தச் சிக்கலும் இல்லை. அவர்கள் காட்ட நினைக்கும் மலேசிய இலக்கியம் குறித்தும்; கட்டமைக்க நினைக்கும் ஆளுமைகள் குறித்தும்கூட எனக்கு எந்தச் சங்கடமும் இல்லை. அதை அவர்கள் காலம்காலமாகச் செய்வதுதான். ஆனால் பொதுவெளியில் ஒரு நாட்டின் இலக்கிய வரலாற்றை முன்வைக்கத் தகுந்த ஆளுமைகள் பலர் இந்நாட்டில் உள்ளனர். முனைவர் கிருஷ்ணன் மணியம், முனைவர் சபாபதி போன்றவர்கள் மலாயா பல்கலைக்கழகத்தின் நவீனத் தமிழ் இலக்கிய ஆய்வாளர்கள். இன்று வரையில் மலேசியத் தமிழ் இலக்கியம் குறித்து நடக்கும் ஆய்வுகளை அறிந்தவர்கள். முனைவர் கிருஷ்ணன் சமகால இலக்கியப்போக்கோடு மலேசிய இலக்கியத்தை ஒப்பிடும் ஆற்றலைக்கொண்டவர். கோட்பாடு ரீதியில் செய்யப்பட்ட பல ஆய்வுகளை ஆராய்ந்தவர்கள் இவர்கள். எழுத்தாளர் சங்கத்துக்குத் தேவை நம்பகமான தரவுகள் என்றால் இவர்களையோ அல்லது இவர்கள் வழி ஆய்வுகளை மேற்கொண்டவர்களையோ அணுகியிருப்பர். ஆனால் அவர்களின் தேவை தாங்கள் கட்டமைத்த வரலாற்றை ஒப்புவிக்கத் தகுந்த  நத்திப்பிழைக்கும் போலிகள் மட்டும்.

கருணாகரனை கொண்டு மலேசிய சிறுகதை வரலாற்றை உளற வைத்திருப்பது மலேசிய இலக்கியத்திற்குச் செய்யும் அநீதி. இந்த அநீதியை அறிந்தே அனுமதிக்கும் சங்கத்தின் முயற்சியால் விளையக்கூடிய பலனென ஒன்றும் இல்லை. இங்குள்ள குப்பையை உலகத் தமிழ்ச் சங்கத்தில் கொட்டுவதைத் தவிர.

தொடர்புடைய பதிவுகள்:

நூறு தீபங்களின் நடனம்

(Visited 677 times, 1 visits today)