டிராகன்: கடிதம் 3

நவீன்,
பசியின் உக்கிரத்தில் விழுமியங்கள் கரைந்து போய் பின் தலை தூக்கி மீண்டும் பசியிடம் சரணடைவது இக்கதை. இறுதியில் இளங்கோ தனது தாயை பழைய வேலைக்கே செல்ல சொல்லுதல் இயலாத ஒருவனின் பாச வெளிப்பாடு. சூழலின் நெருக்கடியில் விழுமியங்கள் சரியும் போது அதனினும் உயர்ந்த உணர்வின் எழுச்சி அபாரமானது. இது இக்கதையில் சாத்தியமாகி உள்ளது. உண்மையில் இலக்கியம் இயங்க வேண்டிய விசேஷ தளம் இதுதான். 

அதி அழுத்தத்துக்கு உள்ளாகும் மானுட உணர்வுகள் மதிப்பீடுகள் ஆகியவை ஒன்று கலந்து ஒரு விநோத வெளிப்பாட்டை படைக்கும். டிராகனில் ஜப்பானியர் கைப்பற்றிய மலேயா அதில் தகப்பனில்லா முடமானவனின் தாயும் அவர்களின் பசியும் எனும் கதை களம் ஒரு கொதிகலன். அங்கு இடப்படும் மானுடம் தனது தாயின் பசியை நோக்கி விபச்சாரத்திற்கு பரிந்துரைப்பது என்பது எனக்கு புதிதாக வெளிப்பட்ட உயர் விழுமியமாகவே பட்டது. 

லாகர்கவிஸ்ட்டின் ” அடித்தளம் ”  எனும் சிறுகதை எனக்கு மிகவும் பிடித்தமானது. அதில் உருளை வண்டியில் நகரும் கால்களற்ற ஒரு பிச்சைக்காரான் பார்வையில் சுமார் 3 அடி உயர உலகம் விவரிக்கப்பட்டிருக்கும், அவன் அறையும் அவ்வாறு இருக்கும். அதை நினைவூட்டியது இக்கதை.

இளங்கோவனின் முதல் பயணம் அவன் காணும் புற உலகம், நன்றாக சொல்லப் பட்டுள்ளது ஆனால் ‘ அடித்தளம் ‘ அளவுக்கல்ல. வெங்காய சாக்கே உடையாவது, நட்டு பிரிக்கும் தொழில் அதன் தேவை எழும் போர் கால விவரணை என இக்கதை அடர்த்தியாகவே உள்ளது. 

இரண்டு கடு வண்ணங்கள் ஒரு கொதிகலனில் கலங்கி ஒரு மென் நிறத்தை வெளிப்படுத்திய கதை   “டிராகன் “. என் வாசிப்பில் இது உக்கிரமான முக்கியமான கதை. 

கிருஷ்ணன்,ஈரோடு.

நீங்கள் அன்னையருள் பெற்றவர். தாய்மை குறித்து எழுதும்போதெல்லாம் அதன் மணம் நாசிகளில் அடர்கிறது. பேய்ச்சி, கன்னியில் பசு என இப்போது டிராகன். ஒரு குருவியைப் போல தீனியை எடுத்து வரும் அன்னையின் பரபரப்பு. தான் பிறந்ததே பிள்ளையின் பசி தீர்க்க வென்ற தீர்க்கம். தன்னை கொன்று மகனின் வயிற்றை நிரப்பும் தாய்மை. தன் தாய்மையை அறிந்துகொண்ட மகனிடம் துடிக்கும் துடி.

தாய்மை பற்றி அப்பாவும் பேசுகிறார். ஆனால் அது அவர் அம்மாவின் நினைவு. எல்லா கணவரும் தனது தாயை மட்டுமே தாயாக நினைக்கின்றனர். மனைவியும் ஒரு தாய் என்பதை மறக்கின்றனர். தன் கணவனின் நிழலாக உலாபுபவன் மகனாக பரிணாமம் எடுக்கிறான். மகனால் மட்டும்தான் வண்டியைத் தள்ள முடியும். மண் தாயென அறிய முடியும். மண்ணை அறியும்போது தாயை அறிகிறான்.

நவீன் நீங்கள் அன்னையின் ஆசி பெற்ற எழுத்தாளர். வாழ்க.

மதி

(Visited 57 times, 1 visits today)