கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், நவீன இலக்கிய முகாமில் கலந்து கொண்டேன். எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் ‘இன்றைய உலக இலக்கியம் அறிமுகம்’ எனும் தலைப்பில் உரை ஆற்றினார். உலக இலக்கியப் படைப்புகளைச் சில கட்டமைப்புக்குள் வகைப்படுத்திக் கூறினார். அந்த வகையில், டிராகன் சிறுகதை இடப்பெயர்ச்சி சார்ந்த புனைவா (exodus writing) அல்லது புலம்பெயர்தலைச் சார்ந்த புனைவா (diaspora writing) ஒழுக்கச் சிக்கலை மையப் படுத்தும் புனைவா என கதையை வாசித்தவுடன் என்னை யோசிக்க வைத்தது.
மலேசியாவுக்குப் புலம் பெயர்ந்த தமிழின மக்கள் பல இன்னல்களை எதிர்நோக்கினார். குறிப்பாக, ஜப்பானியர் ஆட்சிக் காலத்தில் தமிழர் கடந்து வந்த பாதைகளில் நிறைய கூர்மையான முட்கள் இருந்தன. ஜாப்பானியர்கள் தமிழ் மக்களுக்கு ரணத்தையே கொடுத்தனர். ஜப்பானியர்கள் குறுகியக் காலத்திற்கு மலேசியாவை ஆட்சி புரிந்தாலும், சிறுகதையில் புனைந்து உள்ளது போல், சியாம்-பர்மா மரண ரயில் தண்டவாளம் கட்டமைப்பு மூலம் நிறைய தமிழர்களின் உடல்களைப் பூமி தாயிக்கு தாரை வார்த்தனர். அந்த ரணங்களில் மிக முக்கிய கூறாகப் பசி கொடுமையை கருவாக எடுத்து மிக நேர்த்தியாக எழுத்தாளர் புனைந்தும் வடிவமைத்தும் உள்ளார்.
மனிதனின் குடல் வடிவம் ஒரு டிராகனைப் போல் வளைந்தும் நெளிந்தும் உள்ளதை கற்பனை செய்த அவரது கற்பனை ஆற்றலுக்கு வாழ்த்துக்கள். இக்கதை வாசிப்பின் மூலம் அக்காலக்கட்டத்தின் மக்களின் வாழ்வியலை நன்குப் புரிந்து கொள்ளவும் கற்பனை செய்து பார்க்கவும் வழிவகுத்தது. குறிப்பாக, லயங்கள், உணவுமுறை, உடை, பேச்சு வழக்கு, அதிகாரம், வன்மம் எனச் சொல்லிக் கொண்டே போகலாம். தாய் பாசக் கயிறு மிகவும் உறுதியானதா அல்லது தந்தையின் பாசக் கயிறு மிகவும் உறுதியானதா என ஒரு குழந்தையை வைத்து எழுத்தாளார் ஆடிய ஆட்டம், கதை வாசிக்கும் அனைவரின் நெஞ்சையும் உருக்கும். இவ்வுலகம் நிலம், தீ, நீர், வளி, விசும்பு ஆகிய ஐம்பெரும் பூதங்களால் உருவாக்கப்பட்டது என தொல்காப்பியங்களிலும் புறநானூறிலும் சொல்லப்பட்டுள்ளது. உலகம் மட்டும் மல்ல, ஒரு பாமர தோட்டத் தொழிலாளியின் வாழ்வும் பஞ்ச பூதங்களோடு வேரூன்றியுள்ளது என உங்கள் புனைவுக் காட்டுகிறது.
வரலாறு பாடப் புத்தகங்களில் படிக்கும் போது, அது ஒரு உண்மையில் நடந்த நிகழ்வாகதான் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அதே நிகழ்வை இலக்கியக் கண்ணோட்டதோடும் ஒரு தனி மனிதனின் ரணமாகவும் வாசிக்கும் போது, அந்நிகழ்வுக்கு உயிரும் உணர்வும் எழுத்தாளரால் உருவாக்க பட்டது போல தோன்றுகிறது
மறந்தும் மறைக்கப்பட்டும் இருக்கும் தோட்டத்து வாழ்விலை எழுத்து வடிவமாக்க என்னுடைய வாழ்த்துக்கள். ஜப்பானியர்களின் ஆயுதங்களையும் கட்டையன் தவிர்த்து தோற்றதையும் சீருடையும் விவரிந்திருந்தால் இன்னும் சிறப்பு.
பாரதி
அன்பான நவீன், நலம் மலர்க.
டிராகன் பசியி நல்ல உருவகம். பசி கதையின் கரு. எனவே டிராகன் பொருத்தமான தலைப்பு. கதையில் எனக்கு ஒரு சிக்கல் தோன்றியது. ஒன்றுக்கும் மேற்பட்ட குறியீடுகள் ஒரு சிறுகதைக்குள் இருக்கையில் அதை முழுமையாக புரிந்துகொள்வதில் சிக்கல் வருகிறது. டிராகன் ஒரு குறியீடுபோல அந்த சக்கர வண்டி, வானத்தில் நிதானமாக பறக்கும் பறவை என வெவ்வேறு இடங்களில் கதையில் தோன்றும் குறியீடுகள் வாசிப்பில் சரளத்தைக் குறைத்தது. அது என் போதாமையாகவும் இருக்கலாம். ஆனால் நிறைவான கதை.
ஶ்ரீபாலா