இளங்கோவுக்குப் பசித்தது.
வயிற்றினுள் அமிலம் ஊற்றியதுபோல கொதித்துக் கொதித்து அடங்கியது. கொதிக்கும்போது கை கால்கள் நடுங்கின. அடங்கும்போது தலை வலித்தது. சிவப்பு வண்ணம் தீட்டப்பட்ட டிராகன் படத்தை சுருட்டி வைத்தான்.
அம்மா இன்னும் வரவில்லை.
எப்படியும் வரும்போது ஏதாவது தின்பதற்கு எடுத்து வருவாள். அதுவரை தாங்கிக்கொள்ள வேண்டுமென நினைத்துக்கொண்டான். பசி தோன்றும்போதெல்லாம் அம்மா நினைவுக்கு வந்துவிடுகிறாள். உடனே அம்மாவைத் திட்டியதும் நினைவுக்கு வரும். நெஞ்சுக்குள் ஏதோ கனத்துத் திரண்டு பின் திரவமாக உதிர்ந்து வயிற்றில் கூடுதலாக வலி அழுத்துவது போல உணர்ந்தான்.
“என்னையாடா தேவடியா சிறுக்கின்னு சொன்ன… என்னையாடா சொன்ன…” என மத்தை எடுத்துக்கொண்டு வந்தவள் அவன் அருகில் அப்படியே அமர்ந்துவிட்டாள். மத்தில் ஒட்டியிருந்த தயிர் தெறித்து அவள் கன்னத்தில் வழிவது வெண் ரத்தம்போல இருந்தது. ஒரு வார்த்தையும் பேச முடியாமல் வாயை அகலத்திறந்து கதறியழுதாள். வண்டியை நோக்கி தவழ்ந்துபோக வலு இல்லாமல் ஒரு பக்கமாக ஒதுங்கிக் கிடந்த தன் கால்களையே பார்த்துக்கொண்டிருந்தான் இளங்கோ. சூம்பிக்கிடந்த அவை பல சமயங்களில் அவனுக்கு வால்போலத் தோன்றும். அவளால் நிறுத்தமுடியவில்லை. முட்டிய மூச்சை வாய்வழியாக விடும் முயற்சியெல்லாம் அழுகையானது.
இது நடந்து ஒரு மாதமாகி விட்டது என்றாலும் இரவுகளில் அம்மாவின் கதறும் குரல் கேட்டு அவன் திடுக்கிட்டு விழிப்பதுண்டு. அம்மா அயர்ந்து தூங்கிக்கொண்டிருப்பாள். முழுமையாக உறக்கம் களைந்து நினைவு தெளிவாகும் வரையில் அந்த அரற்றல் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். பின்னர் அது மெல்ல மறைந்து அம்மாவின் அழுத்தமான சுவாசமாக மாறும். எல்லாவற்றையும் மறந்துவிட்டாள்; நாளை எல்லாமே சரியாகிவிடும் என நினைத்துக்கொள்வான். மறுநாள் இறுகிய முகத்துடன் உலாத்துபவளிடம் ஒன்றும் கேட்க வாய் வராது. அப்பாவை நினைத்துக்கொள்வான். தான் சொன்னதில் தவறு ஒன்றுமில்லை எனத் தோன்ற அவர் நினைவுகள் உதவக்கூடியவை.
கதவில் பிணைத்திருந்த கயிற்றை அவிழ்த்து இழுத்தான். வண்டி ஒரு நாய்க்குட்டிபோல அருகில் பாய்ந்து வந்தது. அது அவன் அப்பா அவனுக்காகச் செய்து கொடுத்தது. புகைக் கொட்டகையில் உடைந்து கிடந்த பாரம் இழுக்கும் வண்டியை பழுது பார்த்து அவரே உருவாக்கினார். வண்டியின் நான்கு கல் சக்கரங்கள் மட்டும் நல்ல நிலையில் இருந்தன. நாற்புறமும் சட்டங்களைப் பிணைத்து வழுவழுப்பான பலகையை அடித்து, வண்டியைத் தயார் செய்தார். அவனுக்கு அப்போது பனிரெண்டு வயது இருக்கும். எவ்வளவு மறுத்து அடம்பிடித்தும் அப்பா அவனைத் தூக்கி வண்டியில் அமர வைத்தார். கால்களை வாகாகத் தூக்கி வைக்க வந்த அம்மாவின் கைகளை மூர்க்கமாகத் தட்டிவிட்டார். வண்டியின் முனையில் ஒரு கயிற்றைக் கட்டி அப்பா செம்மண் சாலையில் அதைக் கடகடவென இழுத்துச் சென்றபோது அவனுடைய உலகின் ஆயிரம் கதவுகள் திறந்துகொண்டன.
“சாமி தேரு மாதிரி இருக்குதுப்பா” என்றான் உற்சாகமாக.
“எஞ்சாமி நீதாய்யா” என அப்பா மூச்சிறைக்க சொல்லியபடி இன்னும் வேகமாக இழுத்துக்கொண்டு ஓடத்தொடங்கினார். அவன் கெட்டியாகப் பலகையைப் பிடித்துக்கொண்டான். அதிர்வில் தன்னிச்சையாக நகர்ந்தோடும் கால்களைப் பிடித்திழுக்கச் சிரமமாக இருந்தது. லயங்களில் நின்றவர்களெல்லாம் அவனுக்குக் கையசைத்தனர். பிடியை விட்டு பதிலுக்குக் கையசைக்க அவனுக்குப் பயமாக இருந்தது.
அடுத்த சில வாரங்களிலேயே வீட்டின் வாசல்படியில் இருந்து சர்ர்ரென கீழே தெருவில் இறங்க பலகை ஒன்றை வாசல் சட்டத்துக்கும் அஞ்சடிக்குமாகப் பொருத்தினார் அப்பா. புகைக்கொட்டகையில் இருந்து தடிமனான துணிக்கையுறையை எடுத்து வந்து, அதன் கீழ் பகுதியில் ரப்பர் டியூப்பை ஒட்டி காலணியின் பாதம்போல உறுதியாக்கினார். இளங்கோவுக்கு அதை அணிவித்தபோது அவருக்கு ஏக திருப்தி. “அவ்ளோதான்ய்யா” என்றார் உற்சாகமாக.
உடலை முன்நோக்கி வளைத்து, கைகளைப் பக்கவாட்டில் அகலமாக்கி மண்ணில் ஊன்றியபோது அவனுக்கு இடுப்பெல்லாம் வலித்தது. தசைகளற்ற பிட்ட எலும்புகள் பலகையில் அடங்க மறுத்தன. கொஞ்ச நேரத்திலேயே தோள்பட்டைகள் கடுகடுக்கத் தொடங்கின. கைகளைத் தள்ளியபோது வண்டி கீய்ங் என கொஞ்சம் முன்னே நகர்ந்து பின்னர் தானே பின்னால் நகர்ந்து வந்து அடங்கி நின்றது. அவனால் வண்டியைத் தள்ளவே முடியவில்லை.
முதல் சில நாட்கள் அவனுக்கு உடல் முழுவதும் வலி ஏற்பட்டது. அப்பாதான் தைலம் பூசி உருவிவிட்டார். தைல எரிச்சலில் உறங்கும் வரை வலி தெரியாமல் இருந்தது. அடுத்தடுத்த நாட்களில் அப்பா அழைக்கும்போது “என்னால முடியலப்பா” என்றான். வண்டியைத் தூர தள்ளிவிட்டான். தூக்கி அமர்த்தும்போது கைகளைக் கடிக்க வந்தான்.
“ராசா… மண்ணு தாயாட்டம். அது நம்மளய தாங்கி புடிச்சிக்கும். தாய் மேல நம்பிக்க இல்லாம ரொம்பவும் கையால அழுத்துறய்யா. மொல்லமா தடவி தள்ளு ராசா. அதுவா உன்னய கொண்டுபோய் சேக்கும்,” என்பார்.
அவன் அவ்வாறு பலமுறை செய்து பார்த்தான். வண்டி நகரமறுத்தது. செம்மண் சறுக்கி, புகையானது. தன் கைகளுக்குச் சக்தியில்லை என்று ஒவ்வொருநாளும் அழுதான்.
“வண்டி சாயாது ராசா. சாஞ்சாலும் அடிபடாது. தகிரியமா ஓட்டு. தோ அவ்வளவோ தள்ளுனா போதும்… அம்புட்டுதான்” என அவரே அமர்ந்து ஓட்டிக்காட்டினார்.
அத்தனை சிறிய வண்டி அப்பாவைச் சுமந்துகொண்டு இலகுவாக உருண்டோடுவது ஆச்சரியமாக இருந்தது. இளங்கோவுக்கு வண்டியின் மீதிருந்த பயம் கொஞ்சம் கொஞ்சமாக அகன்றாலும் கைகளைச் சிலந்திபோல அகல வைத்துத் தள்ளுவதில் சிரமம் இருந்தது. அப்பாவைப்போல அவனுக்கு வலுவான நீண்ட கைகள் இல்லை என நினைத்துக்கொண்டான். ஆனால் அவன் வண்டியில் நகர்ந்து செல்வது அப்பாவுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்ததால் கை வலித்தாலும் மெல்ல மெல்ல ஊர்ந்து செல்ல முயன்றான். உடல் எடை அழுத்தாமல் இருக்க வண்டியில் தன்னைக் கிடத்திக்கொள்ளும் வித்தையைக் கண்டடைந்தான். அதன் நுணுக்கம் தெரிந்தவுடன், உடல்கனத்துடன் கைகளை பூமியில் அழுத்தம் கொடுப்பதுதான் நகர்வதற்குத் தடையாக இருந்தது புரிந்தது. வண்டியில் ஏறியவுடன் நெஞ்சுக்குள் கூசிய பயம் கொஞ்சம் கொஞ்சமாக அகன்றது. ஆனால் அவன் நினைத்த வேகத்தில் வண்டி நகரவில்லை. கைகளை வேகமாகத் தள்ள வேண்டியிருந்தது. இரவில் கைகள் ஓயாமல் கடுத்தன.
அப்பாவுக்கு ஒவ்வொரு சமயத்திலும் இளங்கோவுக்கு என்ன தேவையெனத் தெரிந்திருந்தது. வயது கூடக் கூட இளங்கோவின் தரை வாழ்க்கையை அவர்தான் வசதியாக்கிக் கொடுத்தார். அவனது எல்லா உடைமைகளையும் கைக்கெட்டும் தொலைவுக்கு மாற்றினார். கிணற்றடிக்குச் சென்று அவனைக் குளிப்பாட்டுவதைக் குறைத்து, வீட்டுக்குப் பின்புறமே தகரத்தடுப்பை உருவாக்கிக் கிணற்றிலிருந்து நீரைக் கொண்டு வந்து வாளியில் நிறைத்து அவனுக்கான அந்தரங்க உலகை விஸ்தாரமாக்கினார். இளங்கோ தன்னைத் தனித்த ஒரு மனிதனாக உணர்ந்தது தோட்டத்துக் கழிவறையைச் சொந்தமாகப் பயன்படுத்தத் தொடங்கியபோதுதான். ஒவ்வொரு நாளும் அது அவனுக்கு ஒரு சாகசமாகவே தொடங்கியது.
தோட்டத்தில் ஒன்று முதல் ஐந்து எண் இட்ட கழிப்பறைகள் வரிசையாக இருந்தன. ஐந்தாவது எண் கழிப்பறை சாலையுடன் ஒட்டி இறக்கத்தில் இருக்கும். அப்பா அதை அவனுக்காகத் தேர்ந்தெடுத்தார். யாராவது அதைப் பயன்படுத்திச் சுத்தம் செய்யாவிட்டால் “பையங் கைய ஊனி நவரணும்… அறிவிருக்காடா மசுராண்டிகளா” எனக் கத்துவார். அப்பாவின் பேச்சுக்கு பயந்தே அந்தக் கழிப்பறையைப் பயன்படுத்த பலரும் தயங்கினர். மேலும் தோட்டத்தில் நீர் கிடைக்காத சமயங்களில் தண்டலுக்குத் தெரியாமல் புகைக்கொட்டாயிலிருந்துதான் அவசரத்துக்கு நீர் பிடித்துச் செல்வார்கள். அப்பா புகைக்கொட்டகை பொறுப்பாளர். முறைத்துக்கொண்டால் இழப்பு அவருக்கு இல்லை என அறிந்து வைத்திருந்தனர். கொஞ்ச நாட்களில் ஐந்தாம் எண் மலக்கூடம் இளங்கோவின் தனிக் கழிப்பறையாகவே ஆனது. தொடக்கத்தில் அப்பா அவனுடன் சென்று வெளியில் சுருட்டுப் பிடித்து நின்றபடியே “முடியுந்தானய்யா?” எனக் கேட்டபடியே இருப்பார். கழிவறையின் கதவைத் திறக்கும்போது அவன் உற்சாகமான சிரிப்பைக் கண்டவுடன்தான் மனநிறைவு அடைவார். “ஐயாவால எல்லாமே முடியும்” எனக் கொஞ்சும்போது தன்னால் இன்னும் சாகசங்களை நிகழ்த்த முடியுமென இளங்கோவுக்குத் தோன்றும்.
அப்பா, அம்மாவிடம் பேசி இளங்கோ பார்த்ததில்லை. அம்மாவுடைய தேவை சமையல் செய்வதாக மட்டுமே இருந்தது. ஏதாவது கேட்க வேண்டுமென்றால் தயங்கியபடியே அவனிடம்தான் சொல்லியனுப்புவாள். அப்போதெல்லாம் அவள் முகம் பாறைபோல இறுகி இருக்கும். அப்பாவும் அப்படித்தான். ஆனால் என்றாவது சாராயம் குடித்துவிட்டால் அப்பா பிராஞ்சாவில் அமர்ந்து அழத் தொடங்கிவிடுவார். எல்லா கெட்டவார்த்தைகளும் சரளமாக வரும். அவன் அப்பாவிடமிருந்துதான் அவற்றைப் பழகிக்கொண்டான். வீட்டில் அமர்ந்தபடியே கெட்டவார்த்தைகளை வரைய முயல்வான். அப்பா ஸ்டோரிலிருந்து ஏராளமான காகிதங்களை எடுத்துவந்து கொடுத்திருந்தார். ஒவ்வொரு கெட்ட வார்த்தைக்கும் ஒரு வடிவமும் அதற்கேற்ற வண்ணமும் இருந்தது.
எவ்வளவு குடித்து கோபமாக இருந்தாலும் அப்பா இளங்கோவை அன்பொழுகப் பார்ப்பார். அவன் தலையில் முத்தமிட்டு “ஒனக்காவத்தான் சாமி இருக்கேன்” எனக் கண்கலங்குவார். அதுபோன்ற நேரங்களில் அம்மா அறைக்குள் முடங்கிக்கிடப்பாள். மறுநாள் எல்லாருக்கும் முன்பாக பிரட்டுக்குப் போய்விடுவாள்.
பசிக்குத் தண்ணீரை மொண்டு குடித்தபோது நெஞ்சு கரித்தது. ஏப்பம் திரண்டு வந்து தொண்டையை எரித்தது. குசினிக்கு தவழ்ந்து சென்று ஏதும் தின்னக் கிடைக்குமா எனத் தேடினான். எதையாவது வாயில் வைத்துக் கடிக்க வேண்டும். அதை மெல்ல முடியுமானால் நொறுக்கி தொண்டைக்குள் புகுத்தி வயிறு நிரம்பியதாக நினைத்துக்கொண்டால் போதுமெனத் தோன்றியது. அப்படி ஏதாவது ஒன்று அந்தச் சின்னஞ் சிறிய குசினியில் இருக்குமென நம்பினான். விறகுக்கு அம்மா பொறுக்கி வைத்திருந்த ரப்பர் மரச் சுள்ளிகள் காய்வதற்காக பரப்பிக் கிடந்தன. அவற்றை ஒதுக்கி, தகர டின்களின் பக்கம் சென்றான். ஒவ்வொரு டின்னையும் திறக்கும்போதும் ஒவ்வொரு துவாரங்களில் கைவிடும்போதும் ஒரு அதிசயம் நிகழும் என மனம் உறுதியாக நம்பி அப்படி எதுவும் இல்லையென்றானதும் பசி முன்னிலும் பல மடங்கு கூடியது.
“அம்மா” எனக்கத்த வேண்டும்போல இருந்தது. அப்படிக் கத்தியவுடன் அம்மா உணவுடன் எங்கிருந்தாலும் தோன்றுவாள். அவள் எங்காவது கைவிட்டால் ஏதாவது சமையலுக்குக் கிடைக்கும். அவசரத்துக்கு எதையாவது தின்னக்கொடுப்பாள்.
அப்பா இல்லாத இந்த இரண்டு ஆண்டுகளில் அம்மா தயாரித்துக்கொடுக்கும் உணவுகள் எல்லாமே அவனுக்கு அதிசயமாக இருந்தன. ஒரு மந்திரவாதியைப் போல பின் கட்டுக்குச் சென்று மணக்கும் தட்டுடன் திரும்புவாள். ஆனால் இந்த ஒரு மாதமாக அம்மா சமைப்பது குறைந்துவிட்டது. பப்பாளிப் பழங்கள், காடை முட்டைகள், காளான்கள் என எதையாவது கொண்டுவந்து அவித்துக் கொடுக்கிறாள். அபூர்வமாக எங்காவது அரிசிச் சோறு வேகிறதென்றால், காத்து நின்று சுடச்சுட வடிகஞ்சித் தண்ணீரை வாங்கி வந்து கொடுப்பதும் உண்டு. எப்படியும் ஏதாவதொன்றை எடுத்துவந்து அவனுடைய பசியை அடக்கிவிடுவாள். அம்மாவுக்கு இளங்கோவைப் பற்றிய நினைவுகள் அனைத்தும் பசியென்றே திரண்டிருந்தது. அவளது ஒருநாளைய செயலூக்கம் இளங்கோவுக்கு உணவைத் தேடுவதிலேயே கழிந்தது.
அன்றும் அம்மா உணவுடன் வருவாள் என நினைத்தபோது சந்தோசமாக இருந்தது. மூச்சு நிதானமின்றித் தவித்தது. அப்படியானால் சீன டிராகன் விழித்துக்கொண்டது எனப் பொருள். உடலை அசைக்காமல் சிவப்பேறிய கண்களை மட்டும் திறந்து பார்த்திருக்கக்கூடும்.
மழைத்தூறியது.
ஒரு சில வீடுகளில் மட்டும் அசைவிருந்தது. அவன் இருக்கும் லயனில் அனேகமானோர் ஜப்பானியர்களால் இழுத்துச்செல்லப்பட்டுவிட்டனர். அது நிகழ்ந்த காலைப்பொழுதில் இளங்கோ எப்போதும்போல வீட்டில்தான் இருந்தான். கிராணி ஒரு தாளை வைத்துக்கொண்டு வீடு வீடாகச் சென்று பெயர்களை அழைக்கும்போதெல்லாம் அந்த வீட்டிலிருந்து எதிரொலியாக அழுகைச் சத்தம் வந்தது. அவன் அந்த அழுகையைச் சுருள் சுருளாகக் கருநீலத்தில் வரைந்தான். பக்கத்து வீட்டு ரத்தினம் பாட்டி “சயாமுக்கு போறதும் சாவூருக்கு போறதும் ஒன்னாச்சே” என தன் மகன் மாணிக்கத்தை விடாமல் பிடித்துக்கொண்டு அழுதாள். உடன் வந்த நான்கைந்து ஜப்பானிய வீரர்கள் வாளை உருவி ‘குர்ரா’ எனக் கத்தியதும்தான் கையை விட்டாள். செம்மண் புழுதி பறக்க அவளைப்போன்ற பல உறவுகள் வண்டி மறைந்த முச்சந்தி வரை சென்று அழுதனர். எல்லாம் முடிந்துவிட்டது என பக்கத்துக் கம்பத்தில் நண்பர்களுடன் ஒளிந்திருந்த அப்பா மறுநாள் இரவில் உணவுண்ண வந்தபோதுதான் ஜப்பானிய இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டார்.
கிராணியிடம் இளங்கோவின் கால்களைக் காட்டி ஏதோ விளக்கிக்கொண்டிருக்கும்போதே ஜப்பான்காரன் அப்பாவை அறைந்தான். வாசலில் நின்றபடி பார்த்துக்கொண்டிருந்த அம்மா கதறிக்கொண்டு ஓடினாள். கிராணியின் கைகளைப் பிடித்து வணங்கினாள். ஜப்பானியன் கால்களில் விழுந்தாள்.
“சீ எட்டப்போடி” என அப்பா கத்தியது எல்லாருக்குமே அதிர்ச்சியாக இருந்தது. அம்மாவின் கதறல் ஓயவில்லை.
“நீயே புடிச்சிக்கொடுத்துட்டு பசப்புறியா” என அப்பா கத்தவும் அம்மா ஓவென அழுதுகொண்டு மண்ணில் அமர்ந்தாள்.
இளங்கோவுக்குத் தன்னையும் அம்மா பிடித்துக்கொடுத்து விடுவாரோ என பயமாக இருந்தது. தளர்ந்து தொங்கிய கால்களை அள்ளியெடுத்து அணைத்துக்கொண்டான். ஜப்பான்காரன் அலட்சியமாகக் கத்தினான். கையில் ஒட்டியிருந்த சோற்றோடும் கட்டிய கைலியோடும் அப்பா இழுத்துச் செல்லப்பட்டார். அம்மா மண்ணையள்ளி வீசி மார்பில் அடித்துக்கொண்டாள். ஒன்றிரண்டு முறை கழுத்துப்பிடியுடன் மல்லுக்கட்டி அவனைத் திரும்பிப் பார்த்தார் அப்பா. அவர் கண்கள் தரையைத்தான் நோக்கின. அவனுக்கு அப்பா தன்னைதான் பார்ப்பதாகப் புரிந்தது. அல்லது தன் கால்களைப் பார்த்திருக்கலாம் என பின்னாளில் நினைத்துக்கொண்டான்.
அப்பா சென்றுவிட்ட இரண்டு வருடங்களில் இப்படி பலவிதமான சிந்தனைகள்தான் அவனிடம் குவிந்திருக்கின்றன. மறுபடி மறுபடி ஒன்றையே நினைத்துப் பார்ப்பதும் அதை இன்னொன்றாகக் கற்பனை செய்வதையும் தவிர அவனுக்குச் செய்வதற்குப் பெரிதாக வேறொன்றும் இல்லை.
யாரிடமாவது ஏதும் சாப்பிடக் கேட்கலாம் என வெளியில் வீடுகளை எட்டிப்பார்த்தான். கண் சுழன்றது. முதலிலெல்லாம் அதை உறக்கம் என்றே நினைத்தான். மயக்கம் என தாமதமாகத்தான் புரிந்துகொண்டான். அவன் இதுவரை மயங்கி விழுந்ததில்லை. ஆனால் அதன் எல்லை வரை சென்று மீண்டுள்ளான். உமிழ் நீர் வாயுள் நுரைத்துக்கொண்டே இருந்தது.
எதிர்வீட்டு காளி கிழவி மழையைப் பார்க்க வெளியில் வந்தாள். அவள் அரிதாக வெளியே வருபவள். மகனும் மருமகளும் சயாமுக்குச் கொண்டுசெல்லப்பட்ட பின்னர் தனியாக இருக்கிறாள். உறங்கும்போது யாரோ வீட்டில் புகுந்து இருந்த எல்லா உடைகளையும் எடுத்துப் போய்விட்டிருந்தார்கள். இளங்கோவின் அம்மாதான் வெங்காய சாக்கில் கைகளுக்கும் கழுத்துக்கும் துவாரம் செய்து அணியக் கற்றுக்கொடுத்தாள். பல வீடுகளில் இப்படி அடிக்கடி கொள்ளை போவதுண்டு. கொள்ளைபோன பொருள் இன்னொருவர் வீட்டில் அகப்படுவதும் உண்டு. யாரும் யாரையும் புகார் சொல்வதில்லை. கோபித்துக்கொள்வதில்லை. பொருட்களைத் தெரியாமல் எடுத்துச்செல்வது ஒரு விளையாட்டுப்போல நடக்கத் தொடங்கியது. வலுவில்லாதவர்கள் எல்லாவற்றையும் இழந்து இருக்க வேண்டி வந்தது. தான் இருக்கும் வரை யாராலும் தன் வீட்டுக்குள் நுழைய முடியாது என நினைத்துக்கொண்டான் இளங்கோ.
காளி கிழவி அவனை எப்போதும் குண்டன் என்றுதான் அழைப்பாள். அவன் குண்டனாகாமல் இருக்க எவ்வளவோ முயன்றிருக்கிறான். ஆனால் உடல் பருத்துக்கொண்டே போனது. முதுகெலும்பில் தாளாத வலி உருவாகும் போதெல்லாம் தோட்டத்து மருத்துவர் உடல் எடையைக் குறைக்கச் சொல்வார். அது அவனால் முடிந்ததில்லை. முடிந்தவரை கைகளை அசைத்து உடலை வியர்க்க வைக்க முயல்வான். இப்போது ஒழுங்காக உணவில்லாத காலத்திலும் உடல் இளைத்ததாகத் தெரியவில்லை. உணவு கேட்டால் தன்னைக் குண்டன் என காளி கிழவி கிண்டல் செய்யக்கூடுமெனத் தோன்றினாலும் கிழவியைப் பார்த்துச் சிரித்தான். அவள் ஒன்றும் சொல்லாமல் மெல்ல எழுந்தாள். வெங்காயச் சாக்கு ஒரு கவுன்போல காற்றில் அசைந்தது. உள்ளே சென்று கதவைச் சாத்திக்கொண்டாள்.
“போடி எலித்தின்னி” எனக் கத்தினான். கிழவி எலிக்கறியைச் சமைத்துச் சாப்பிடுவதாகத் தோட்டத்தில் ஒரு பேச்சு இருந்தது. வீட்டின் பின்புறம் எலியின் உரிக்கப்பட்ட தோலை பார்த்ததாக சிவகாமி அவன் அம்மாவிடம் சொன்னதைக் கேட்டுள்ளான். அவன் கண்களிலிருந்தும் காதுகளிலிருந்தும் எதுவுமே தப்ப முடியாது. அப்படி சிக்குபவைகளை அவன் வரைந்து பார்ப்பான். ஆனால் டிராகனை அவன் வரைந்தது தற்செயலானது.
சீனப் புத்தாண்டின்போது அப்பா அவனை சிங்க நடனத்தைப் பார்க்கதான் தோட்டத்துக்குப் பக்கத்தில் இருக்கும் சீனக் கோயிலுக்கு அழைத்துச் சென்றார். அது பிற்பகல் நேரம். அப்பாவின் கைகளில் படுத்தபடி வானத்தைப் பார்த்துக்கொண்டே வந்தான். அந்தநாள் அவனுக்கு இன்னமும் நினைவில் உண்டு. வானில் ஒரு பருந்து சிறு அசைவுகூட இல்லாமல் மிதந்துகொண்டிருந்தது. அதற்கு மேலே மேகங்கள் இன்னும் மெல்ல நகர்ந்துகொண்டிருந்தன. இன்னும் உயரே போனால் எதுவுமே அசையாதோ எனத் தோன்றியது.
அகன்ற வாயும் குழந்தைக் கண்களுமாகக் கோயிலை வளைய வந்தது சிங்கம். அவன் அதை ஒவ்வொரு ஆண்டும் பார்த்திருக்கிறான். ஆனாலும் உற்சாகமாய் இருந்தது. அவ்வருடம் புதிதாக முப்பது அடி நீளத்தில் டிராகன் நடனம் தொடங்கியதும் அவன் மிரண்டுபோனான். உடல் முழுதும் செதில்களோடு கூரிய பற்களும் மீசையுமாக அவனை முறைத்துக்கொண்டிருந்தது டிராகன். நிர்ணயிக்கப்படாத அந்த ஆட்டம் அவனை அச்சுறுத்தியது. அப்பாவை இறுக்கக் கட்டிக்கொண்டான். மறுநாள் அவனுக்குக் காய்ச்சல் கண்டது. கனவுகளில் டிராகன் வந்து மிரட்டியது. நள்ளிரவுகளில் அரண்டு எழுந்தான். முனியாண்டி கோயில் கயிறு கட்டியதும் சில நாட்களில் குணமானது. சில மாதங்களில் மறந்தேபோன டிராகன் ஒரு கொடும் பசி நாளில்தான் மீண்டும் வந்தது. அதை அவன் முதன்முறையாக வயிற்றுக்குள் நெளிவதை உணர்ந்தான்.
அப்பா இருந்தபோது இந்த மிருகத்தை அவன் உணர்ந்ததில்லை. காலையில் எழுந்தவுடன் வரக்கோப்பியுடன் ரொட்டி தயாராக இருக்கும். மதியம் ஏதாவது ஒரு வெஞ்சனத்தோடு சோறு. இரவுச் சோற்றுக்கு மீன், பொரியலாகவோ சம்பாலாகவோ ஏதாவதொரு வடிவத்தில் இருக்கும். அப்பாவுக்கு மீன் என்றால் பிடிக்கும். அப்பா பழக்கப்படுத்தியதால் அவனுக்கும் பிடித்திருந்தது. வேலை முடிந்ததோடு அப்பா குட்டையில் மீன் பிடிக்கச் செல்வார். பெரும்பாலும் விரால் அல்லது அயிரை மாட்டிக்கொள்ளும்.
தோட்டத்து துரை சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிட்ட பின் சில வாரங்களுக்கான உணவு அவன் வீட்டில் இருந்தது. “டவுனுல செட்டிமாருங்க போட்டது போட்டாப்படி கடைய உட்டுட்டு ஓடிட்டாங்க. கொடான் பூராவும் கொள்ள போவுது. ரோடெல்லாம் அரிசி. எத ஒடச்சி எத எடுத்தாலும் கேக்க ஆளில்ல” என அப்பா பக்கத்து வீட்டு மாணிக்கம் அண்ணனிடம் கூறினார். அன்றிலிருந்து அவரும் அப்பாவை போலவே சைக்கிளில் ஒவ்வொரு நாளும் சீனி, பால்டின் என ஏதாவது சமையல் பொருள்களைக் கொண்டுவந்து இறக்குவார். வசதி உள்ளவர்கள் மாட்டுவண்டியில் அரிசி மூட்டைகளைக் கொண்டுவந்து அவரவர் வீடுகளில் இறக்கிக்கொண்டனர். யாரிடம் என்ன உள்ளது என விபரங்கள் தெரிந்துகொண்டு பண்டமாற்றமும் ஜோராக நடந்தது.
“எப்படியும் இன்னுங் கொஞ்ச நாளுல வெள்ளக்காரன் இந்த கட்டயனுங்கள வெரட்டிப்புடுவான். இவனுங்க கீழ என்னா வேல செய்யுறது,” என அப்பா முதலில் வீராப்பாகதான் இருந்தார்.
எடுத்து வந்த அரிசியெல்லாம் தீர்ந்த பிறகு மரவள்ளிக்கிழங்கு இளங்கோவுக்கு வயிற்றை உப்புசமாக்கியது. வேறுவழியில்லாமல் ஜப்பான்காரன் உணவுக்காக வளர்க்கும் மாடுகளுக்குப் புல் வெட்டிப்போடும் குழுவில் சேர்ந்தார் அப்பா. காலை ஆறு மணிக்குச் சென்றால் மாலை ஆறு மணிக்கு மூன்று வெள்ளியுடன் திரும்புவார். இளங்கோவுக்கு அந்த நோட்டுகளைப் பார்ப்பது பிடித்தமானது. அதில் இருக்கும் வாழைத்தாரைப் பார்க்கையில் வாயூரும். வீட்டுக்குப் பின்னால் குலை தள்ளியிருந்த வாழைத்தார்களை ஜப்பானியர்கள் எப்போதோ வெட்டி எடுத்துச் சென்றிருந்தனர். அவர்கள் யாரிடமும் எதுவும் கேட்பதில்லை. தன்னுடைய சைக்கிளைத் தர மாட்டேன் என மறுத்த சீனனின் தலையை வெட்டி ஒரு நீண்ட கழியில் செருகி தோட்டத்து முச்சந்தியில் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள் என பேச்சு அடிபட்டபோது அம்மா பதறிவிட்டார். அவரவர் வளர்ப்பில் இருந்த ஆடுகள், கோழிகள் எல்லாம் ஜப்பான் இராணுவத்தினர் வண்டியில் அவ்வப்போது ஏற்றப்பட்டன. குழம்புக்கு ஒன்றுமில்லை என்றானபோது அம்மா தண்ணீர் கிழங்கு, மரவள்ளிக் கொழுந்து போன்றவற்றைக்கொண்டு சொதி வைக்கத் தொடங்கினாள். கூடவே ஏதாவதொரு கருவாட்டுப் பொரியல் இருக்கும். அப்பா பிடித்துச்செல்லப்பட்டபின் அவர்களுக்கு மாதத்துக்கு ஒருவருக்கு இரண்டு கட்டி என ரேஷன் அரிசி ராவுத்தர் கடையில் கிடைத்தது.
ரேஷன் அரிசி இளங்கோவுக்குப் பிடித்ததே இல்லை. சமைத்ததும் குழைந்துபோனது. “எவனோ மென்னுட்டு வச்ச மாரி இருக்கு” என முதலில் ஒதுக்கினான். வேறு வழியில்லாமல் தம் பிடித்துச் சாப்பிட முயன்றபோது எவ்வளவு கழுவினாலும் போகாத சுண்ணாம்பு வாடை குமட்டலை உண்டாக்கியது. அதைத் தவிர வேறு அரிசி கிடைக்காது எனத் தெரிந்தபோது மெல்ல மெல்ல அதை சாப்பிடப் பழகிக்கொண்டான். நான்கு கட்டி அரிசி பத்து நாட்களுக்குள் தீர்ந்துவிடும். அரிசி முடிந்ததும் முதலில் அம்மா சேமிப்பில் இருந்த பணத்தைக் கொண்டு அரிசி வாங்கினாள். பணமெல்லாம் தீர்ந்ததும் அவளிடம் இருந்த சில பொட்டுத் தங்கங்களைச் சீனன் ஒருவனிடம் குறைந்த விலைக்கு விற்றுக் காசாக்கினாள். அதுவும் தீர்ந்தபின் செடிகளின் கொழுந்துகள், மரவள்ளி, சக்கரைவள்ளிக் கிழங்குகள், மீனா கொடிகள் என உணவுத் தட்டுக்கு வந்தபோது இளங்கோவுக்கு எரிச்சலாக இருந்தது. சாப்பிடாமல் அழுது அடம்பிடித்தான். அவனுக்காகவே கம்பத்தில் வேட்டைக்குச் சென்று வருபவர்களிடம் இறைச்சியும் மீனும் மரவள்ளிக்கிழங்கைக் கொடுத்து மாற்றிக்கொண்டாள். கிழங்குகள் தீர்ந்தபிறகு கடனாகக் கேட்டாள். கடனைத் திரும்பக் கொடுக்காமல் கேட்பது பிச்சையென்பதால் அதன்பிறகு கம்பத்துப் பக்கமே போகாமல் இருந்தாள். கொஞ்ச நாட்களில் வரக்கோப்பியும் நின்றுபோனது. கருப்பட்டியுடன் தேனீர் கொடுக்கத் தொடங்கினாள். கருப்பட்டியைக் கொஞ்சம் கடித்துக்கொண்டு குடித்தபோது இனிப்பிருந்ததால் இளங்கோ அதற்கு பழகிக்கொண்டான் .
மாலை நேரங்களில் அவன் வண்டியில் சாலையில் ஊர்ந்து செல்லும்போது பசியில் வாடியுள்ள பலரையும் பார்ப்பதுண்டு. உடல் ஒட்டி வயிறும் மண்டையும் பெருத்த சிறுவர்கள் செம்பட்டைத் தலையுடன் “திங்க ஏதாச்சும் இருக்காண்ணே” எனக் கேட்பார்கள். அவர்களிடம் கொடுப்பதற்கு அவனிடம் எதுவும் இருந்ததில்லை. கையைப் பாக்கெட்டில் விட்டு துலாவி ஒன்னும் இல்லையென கைக்காட்டுவான். ஒன்றும் இல்லையென தெரிந்தாலும் பாக்கெட்டுக்குள் கைவிடும்போது சந்தோசமாக இருக்கும். உண்மையில் பாக்கெட்டினுள் ஏதாவது கிடைக்கும் என்று ஒரு கணம் அவனும்கூட நம்புவான்.
லயமே முற்றிலும் மாறிப்போனது அவனுக்கு வியப்பாக இருந்தது. குடும்பமாக சயாமுக்குப் பிடித்துச்செல்லப்பட்டவர்கள், ஜப்பானியனுக்குப் பயந்து கம்பங்களில் பதுங்கிக்கொண்டிருந்தவர்களின் காலி வீடுகள் உடைத்து சூரையாடப்பட்டிருந்தன. உழைக்க வலு உள்ளவர்கள் வீட்டைச் சுற்றி மட்டும் மரவள்ளிக்கிழங்குச் செடிகள் தழைத்திருந்தன. வெறிச்சோடிப்போன தோட்டத்தில் திரிந்த நாய்களின் இடுப்பெலும்புகள் தோலைத் துருத்திக்கொண்டு வினோதமாக அலைந்தன. வயசாலிகள் சிலர் இறந்துபோனார்கள். தனிமையான பெண்கள் சிலர் சேர்ந்து கூட்டாக ஒரே வீட்டில் வாழத்தொடங்கியிருந்தனர். கூட்டாக வாழ முடியாதவர்கள் வேறொரு ஆணுடன் சேர்ந்து இருந்தனர். வெங்காயச் சாக்குகளைக் கட்டிக்கொண்டு திரியும் மனிதர்களைப் பார்த்துப் பார்த்து தோட்டம் வண்ணமிழந்துவிட்டதாகவே அவனுக்குத் தோன்றியது. கனவுகளும் சாம்பலும் பழுப்புமாக வண்ணமின்றியே வந்தன.
முன்பு டிராகனின் செதில்கள் வயிற்றில் உரசியதென்றால் இப்போது பற்கள் உரசுவதாக அவனுக்குத் தோன்றியது. கூடவே பயமும் வந்தது. வயிற்றை அழுத்திப்பிடித்துக்கொண்டால் அதன் அசைவை அடக்கலாம் என அவ்வாறே செய்தான். தூறல் நின்றதும் சாலையில் இறங்கினான். புல்லில் மட்டும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்து வண்டியை நகர்த்திவிட்டால் பின்னர் மண் சாலையில் பயணத்தைச் சமாளித்துவிடலாம். தேங்கியிருந்த நீரை தவிர்த்து நகர்த்துவது சிரமமானது. சங்கரங்கள் திரும்பாது என்பதால் மொத்த உடலையும் வளைத்து ஒரு பக்கக் கையால் நகர்த்த வேண்டும். செம்மண்ணின் மணம் அவன் மூக்குக்கு விரோதமானது என்பதால் தூசு பறக்கும்போது சட்டையால் மூடிக்கொள்வான். இன்று மழைத்தூறலினால் மண் அடங்கியிருந்தது. தொலைவில் பெண்கள் பேசும் சத்தம் கேட்டது. கூடவே ‘லொட் லொட்’ என சத்தம். நட்டுக்கொட்டாயை நெருங்கியிருந்தான். அந்தப் பக்கம் பார்க்கக்கூடாது என நினைத்துக்கொண்டான். வண்டியை வேகமாகத் தள்ளினான். அது எப்போதும் உள்ள வேகத்திலேயே நகர்ந்தது.
போன மாதம் வரையில் அவன் அம்மாவும் அங்குதான் வேலை செய்தாள். ஜப்பானியர்கள் அதை ‘குதிரோத்தாய்’ என்றழைத்தனர். அப்படி அழைக்க முயன்று யார் வாயிலும் ஒட்டவில்லை. அதன் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பெரிய தண்டல் செல்லையா சில மாதங்களிலேயே நட்டுக்காரர் என அழைக்கப்பட்டார். அம்மா அங்கு வேலை செய்த வரையில் அவனுக்கு மீண்டும் அரிசிச் சோறு கிடைத்தது. அம்மாவுக்கு மதிய உணவு வேலை இடத்திலேயே கிடைத்தது.
எந்த நேரமும் ‘லொட் லொட்’ என சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும் அந்தக் கொட்டகை உள்ளே இளங்கோ நுழைந்து பார்த்திருக்கிறான். ஒவ்வொரு மூலையிலும் பல்வேறு அளவுகளில் திருகாணி, மரையாணி, மரைகள் என மலைபோல குவிந்து கிடந்தன. அவற்றுடன் வெவ்வேறு அளவிலும் வடிவிலும் இரும்புகள் இறைந்திருக்கும். பெரிய பெரிய தகரப்பெட்டிகள் ஒன்றுக்குள் ஒன்றாகப் புகுத்தப்பட்டு ஒரு ஆள் உயரத்துக்கு அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். குவிந்து கிடக்கும் ஆணிகளை ரகம் பிரித்து அடுக்க வேண்டும். அந்தத் தகரப்பெட்டிகளுக்குள் பல்வேறு அளவில் உள்ள திருகாணிகளைப் பிரித்துப்போட வேண்டும். அப்படி நாலா புறமும் சூழ்ந்திருப்பவர்கள் தகரப்பெட்டியை நோக்கி வீசும்போது எழும் சத்தம் குவிந்து ‘லொட் லொட்’ என வெளியே கேட்டுக்கொண்டிருக்கும்.
அவ்வளவு பெரிய திருகாணிகளையும் அவ்வளவு சிறியவைகளையும் இளங்கோ அதுவரை பார்த்ததே இல்லை. அவையெல்லாம் போரின் ஆயுதங்களுக்கான உபரிப் பாகங்கள் எனக் கூறியபோது இளங்கோவுக்கு அவற்றைக் கையில் எடுத்துப்பார்க்க ஆசை எழுந்தது. அம்மாவிடம் கேட்டு அவனும் சில திருகாணிகளைப் பொறுக்கிப்போட்டான். அவற்றில் இருந்த ஒருவித எண்ணெய், கறையுடன் கைகளில் ஒட்டி நாறியது. எவ்வளவு கழுவியும் நீங்காமல் குமட்டலைக் கொடுத்தது. மண்போல விரல்களில் நரநரத்தது. கொஞ்ச நாளில் அம்மாவின் மேலும் அந்த மணமே வீசுவதாகத் தோன்றிபோது அவன் அம்மாவின் அருகில் படுப்பதைத் தவிர்த்தான். பின்னர் அந்த வாடை வீடு முழுவதையும் நிறைத்தது.
திருகாணி பொறுக்கும் வேலை அந்தத் தோட்டத்திற்குள் புகுந்ததும் சோற்றுக்குப் பஞ்சமில்லாமல் இருந்தது. வாரம் ஒருமுறை இராணுவ லாரி ஒன்று தோட்டத்துக்குள் வரும். குப்பையைக் கொட்டுவதுபோல இரும்புத் துண்டுகளையும் ஆணிகளையும் கொட்டிவிட்டு அரிசி மூட்டைகளையும் இறக்கி வைத்துவிடுவார்கள். அன்று இரவுக்குள் நட்டும் இரும்புத் துண்டுகளும் அவசர அவசரமாக கொட்டாய்க்குள் அள்ளிக் குவிக்கப்படும். மறுவாரம் வரும்போது தகரப்பெட்டிகள் ஏற்றப்படும். அனைத்துப் பணிகளையும் பெண்களே செய்தனர். நான்கு ஜப்பானிய இராணுவ வீரர்களுடன் பெரிய தண்டலும் சத்தம்போட்டு வேலை வாங்குவார்.
திருகாணிகளைப் பொறுக்கும் வேலையாக இருந்தாலும் தகரப்பெட்டிகளைச் சுமக்கும் வேலையாக இருந்தாலும் ஒருநாளைக்கு இரண்டு வெள்ளி சம்பளமாகக் கிடைத்தது. அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு அம்மா அருகில் இருந்த டவுனில் சமையலுக்குத் தேவையான பொருள்கள் வாங்கி வருவாள். பின்னர் பணத்துக்கு பதிலாக தொழிலாளர்களுக்கு மதிய உணவும் வாரம் இரு கட்டி அரிசியும் கொடுக்கப்பட்டது. சில சமயம் திருகாணிகள் குறைவாகக் கொண்டுவந்து இறக்கப்படும். அப்படியான நேரங்களில் வேலைக்கு குறைவானவர்களே அனுமதிக்கப்படுவர். திருகாணிகள் தீர்ந்துவிட்டால் ஐந்து ஆறு நாட்கள் நட்டுப் பொறுக்கும் வேலை இருக்காது. அப்படியான சமயங்களில் சிலர் காட்டில் இருந்த சீனர்களின் பன்றிப் பண்ணையில் வேலைக்குச் செல்வர். அம்மா திறமைசாலி. எவ்வளவு குறைவான நட்டுகள் வந்தாலும் அவளுக்கு வேலை செய்யும் வாய்ப்புக் கிடைத்துவிடும்.
இன்று போல ஒரு பசி மாலை அது. அம்மா மதியம் வேலைக்குச் சென்ற மாலையாகியும் திரும்பாததால் இளங்கோ வண்டியில் ஏறிப் புறப்பட்டான். அப்போது வயிற்றில் இருந்த டிராகனின் வால் மட்டும் உரசிக்கொண்டிருந்தது. தொலைவில் இருந்து பார்க்கும்போது நட்டுக்கொட்டாய் சாத்தியிருப்பது தெரிந்தது. திரும்பிவிடலாம் என நினைக்கையில் கதவின் அடியில் நிழலசைவு தெரிந்தது. அது பூமியில் ஊர்பவர்களுக்கு மட்டுமே தெரியும் அசைவு. அவன் அருகில் சென்றபோது அம்மாவின் குரல் கேட்டது. முனகல்கள், பின்னர் சிரிப்பு. இளங்கோவுக்கு வியர்த்துக்கொட்டியது. வண்டியைத் திருப்பினான். கை நடுக்கத்தில் அதைச் செய்ய அவ்வளவு சிரமமாக இருந்தது. வண்டி நகரவில்லை. பூமியில் எவ்வளவு அழுத்தித் திருப்பினாலும் மண்ணிலிருந்து எழாமல் நின்றது. வண்டியை அங்கேயே போட்டுவிட்டு தன்னால் ஓடிவிட முடியுமெனத் தோன்றியது. கல் சக்கரத்தின் கீச்சு சத்தம் கேட்டவுடன் உள்ளே நிசப்தம். மெல்ல கதவைத் திறந்த நட்டுக்காரர் பட்டென கதவைச் சாத்தினார். ‘யாரும் இல்லை’ எனச்சொல்வது அவனுக்குக் கேட்டது. அம்மா திறந்திருந்தாள் அவனை பார்த்திருக்கக்கூடும். அவளுக்குத் தரையுடனும் மனிதர்கள் இருப்பது தெரியும்.
அன்று இரவு அம்மா சிறிய பை நிறைய அரிசியுடன் வந்தாள். கொஞ்சமும் தாமதிக்காமல் சமையலைத் தொடங்கினாள். சமைத்த எதையும் சாப்பிடக்கூடாது என்ற முடிவில் இருந்தான் இளங்கோ. வயிற்று வலி என படுத்துக்கொண்டவனை சோறு வடிக்கும் சத்தம் துன்புறுத்தியது. கருவாட்டுக் குழம்பின் மனம் அவனுக்குத் தலைவலியை உண்டாக்கியது. வயிற்று மிருகம் தோலை உரசி பின்னர் கோரப் பற்களால் சுரண்டத்தொடங்கியது. வயிற்றைப் பிடித்துக்கொண்டு சுருண்டு படுத்தானே தவிர சோற்றைப் பார்க்கவில்லை. அம்மாவுக்கு அவனைப் பார்க்கக் கவலையாக இருந்தது. “சாப்பிடாம படுக்கக்கூடாதுடா” என்றவர் எங்கோ அலைந்து தயிரை வாங்கி வந்து கடையத் தொடங்கினாள். அது வயிற்று நோவை ஆற்றக்கூடுமென யாரோ சொல்லியிருந்தார்கள். நேரம் ஆக ஆக அவனுக்குள் கொதிப்பு வளர்ந்துகொண்டே இருந்தது. டிராகன் அவன் வயிற்றுக்குள் சுழன்று சுழன்று அவன் குடல்களுக்கிடையில் பின்னிக்கொண்டது. அப்படியே வயிற்றைக் கிழித்துக்கொண்டு தாவிச்செல்ல முட்டி மோதியது.
“அப்பா எப்ப வருவாரு?” என ஆரம்பித்தான்.
அம்மா ஒன்றும் பேசாமல் நெடுநேரம் அமைதியாக இருந்தாள். “வருவாரோ, என்னாவோ” என்றாள்.
“யேன் அப்படி சொல்லுற?” என்றான்.
“போனதுல பொழச்சவங்க கொஞ்சம்தானாம். பேசிக்கிட்டாங்க”. அப்படியே ஓடிச்சென்று அம்மாவின் முடியைக் கொத்தாகப் பிடித்து இழுத்துவர வேண்டும்போல இருந்தது.
“அப்பா வருவாரு!” என்றான் பல்லைக் கடித்தபடி.
“சண்ட ஆரம்பிச்சிருச்சி. எல்லா எடத்துலயும் குண்டு போட்டு கொல்லுறானாம்,” அம்மா தயிரைக் கடைந்துகொண்டே கூறினாள். அவன் நினைவு முழுக்க அவன் வயிற்று வலியிலேயே இருந்தது.
“யாரு சொன்னா… அந்த நட்டுக்காரனா?” என்றான்.
அம்மா அவனைச் சலனமில்லாமல் பார்த்தாள்.
“அப்பா வராம இருந்தா அவனோடவே நீ படுக்கலாமுல்ல!” என்றான்.
அம்மா அவன் அப்படி பேசுவான் என நினைத்தில்லை. உடனடியாக என்ன சொல்வதென தெரியாமல் “என்னடா சொல்லுற?” என்றாள்.
அதன்பிறகு அவன் பேசிய எதுவும் நினைவில் இல்லை. குமுறிக்கொண்டிருந்த எல்லாவற்றையும் கொட்டினான். அவன் உடல் அதிர்ந்தது. அம்மா அழுதபோதுதான் அது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து அடங்கியது. ஊர்ந்து சென்று சோற்றுப் பானையில் காறி உமிழ்ந்தான். அதற்குப்பின் அம்மாவுக்கும் அவனுக்குமான உரையாடல்கள் முற்றிலும் நின்றுபோயிருந்தது. அதோடு அம்மா திருகாணி பொறுக்கும் வேலைக்குச் செல்லவில்லை. வீட்டில் வீசாத எண்ணெய் வாடையில் இருந்து இளங்கோ அதை அறிந்துகொண்டான்.
வண்டி இப்போது லயங்களைத் தாண்டி நிரைகள் பக்கம் சென்றது. சிறுவர்கள் சிலர் மீன் நிறைந்த வாளியுடன் அவனைக் கடந்து சென்றனர். அவர்கள் முகத்தில் தெரிந்த உற்சாகம் அவனுக்கும் சந்தோசத்தைக் கொடுத்தது. முன்பு அவர்களை எலும்பு துருத்திய உடல்களுடன் பார்த்திருக்கிறான். மார்கழி மாதம் என்பதால் இலைகள் முழுவதும் கொட்டி ரப்பர் மரங்கள் மொட்டையாகிக் கிடந்தன. முன்பு இலைகளில் தீப்பிடிக்கக் கூடுமென வேகமாக அவற்றைக் கூட்டிக் குமிக்கும் வேலைகள் நடந்துகொண்டிருக்கும். பழுத்த இலைகள் உதிர்ந்து உதிர்ந்து மெத்தைபோல தரைப்பகுதி காட்சியளித்தது. மொட்டையாக நின்ற மரங்களுக்கிடையில் கருநீல வானத்தை நெடுநேரம் பார்த்துக்கொண்டிருந்தான். நீண்டு செல்லும் சாலையும் நேர் நின்ற நிரைகளும் வானத்தில் சென்று முடிந்தன. தொலைவில் தெரிந்த அவசரமற்ற பறவை ஒன்று அவன் தலைக்கு மேல் கடக்கையில் மட்டும் அவ்வளவு வேகமாகப் பறந்து சென்றது.
கண்ணீருடன் வண்டியைத் திருப்பினான். நிலம் அவனுக்குப் பின்னால் ஒரு பாய்போல மெல்ல மெல்ல எழத்தொடங்கியது. நீர் ரொப்பிய பலூனைத் தொடுவதுபோல கையை பூமியில் மென்மையாக வைத்தான். வண்டி அசைந்தது; பின் வேகமெடுத்து சறுக்கிக்கொண்டு நகர்ந்தது. அவனுக்கு பயம் ஏற்படவில்லை. காற்று முகத்தில் அறையும் வேகம் உற்சாகமாக இருந்தது. முகத்தை மறைத்துத் தொங்கும் முடி அலையலையாக வான்நோக்கி எழுந்தது. வரிசை மரங்கள் விர் விர்ரென கண்களில் கடந்தன. வண்டியை எங்கே நிறுத்த வேண்டுமென நிலத்துக்குத் தெரிந்திருந்தது. சுற்றிலும் பார்த்தான். மண் அடங்கியிருந்தது. வண்டியில் அசைவில்லை. வீட்டின் வாசலில் அம்மாவின் செருப்பு இருந்தது.
அம்மா குசினியில் ஏதோ வெட்டிக் கொண்டிருந்தாள். இளங்கோ வண்டியிலிருந்து இறங்கி மெல்லத் தவழ்ந்து உள்ளே சென்றான். மின்சார இணைப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டுவிட்டதால் மெழுகுவர்த்தி ஒளியில் அம்மாவின் அசைவு பிரம்மாண்ட நிழலாகத் தெரிந்தது. அம்மா மெழுகு வர்த்தியை ஒவ்வொருநாளும் தயாரிப்பதைப் பார்த்திருக்கிறான். உருகி வடிந்தவற்றை சுரண்டி எடுத்துப் பப்பாளித் தண்டுக்குள் உருக்கி ஊற்றி மீண்டும் மீண்டும் அதற்கு உயிர் கொடுத்தாள். அவனுக்கு அம்மாவை நினைக்க ஆச்சரியமாக இருந்தது. அவளால் எல்லாவற்றையும் செய்ய முடிந்தது. ஒவ்வொரு நாளையும் நம்பிக்கையுடன் கடத்த முடிந்தது. அம்மாவின் உருவில் பாதியாகியிருந்தாள். இந்த ஒரு மாதத்தில் அதிகமே மெலிந்திருந்தாள்.
“அம்மா” அழைக்க வேண்டும்போல ஆசையாக இருந்தது. வாயைத் திறந்தான். தொண்டையிலேயே சொல் சிக்கிக்கொண்டது.
அம்மா ஒரு தட்டை அவனருகில் எடுத்து வந்து வைத்தாள். அவள் கன்னம் ஒட்டியிருந்தது. வாய் முன்னே துருத்திக்கொண்டு யாரோபோல் இருந்தாள். மைலோ டின்னில் மெழுகுவர்த்தியை ஒட்டி அருகில் வைத்ததும் தேங்காய் எனத் தெரிந்தது. சிறிது சிறிதாக நறுக்கியிருந்தாள். அவளுக்கு அன்று அதுதான் கிடைத்திருக்க வேண்டும். அள்ளி வாயில் வைத்தான். உள்ளிருந்த மிருகம் வாய் வரை ஊர்ந்து வந்து விழுங்கிச்சென்றது.
அம்மா சாப்பிட்டிருப்பாளா என்று அவனுக்கு முதன்முறையாகத் தோன்றியது. அம்மா என்பவள் உணவை எப்பாடு பட்டேனும் உருவாக்குபவளாக இருப்பதால் அவள் வயிறு நிரம்பியவள் என்றே அதுவரை அவன் மனதில் பதிந்திருந்தது.
அம்மா இருளுக்குள் அமர்ந்திருந்தாள். மூவந்தியின் சாம்பலொளி வாசல் வரை வந்திருந்திருந்தது. இன்னும் கொஞ்ச நேரத்தில் அதுவும் வெளியேறிவிட்டால் முழு இருட்டு. அவனால் உணவை வாயில் வைக்க முடியவில்லை. இருள் படிந்த அம்மா கிழவியாகத் தெரிந்தாள்.
“அம்மா” என்றான்.
அந்த நிசப்தத்தில் அவன் குரல் வானிலிருந்து ஒலிப்பதுபோல் இருந்தது. அம்மா கொஞ்ச நேரம் கடந்தே அசைந்தாள்.
“நீ சாப்புடலயா?” என்றான்.
அம்மா ஒன்றும் பேசவில்லை.
“ஒனக்கும் பசிக்குந்தான. நீ நட்டுக்கொட்டாய்க்கே வேலைக்கு போம்மா” என்றான். அம்மா தலையில் அடித்துக்கொண்டு அழுதபோது டிராகன் மெல்ல மெல்லச் சுருண்டு அவன் உடலுக்குள் அடங்கிபோவதாக உணர்ந்தான்.
புதிய சிறுகதைகள்:
கன்னி