டிரேகன் சிறுகதையை வாசித்தேன். இந்தக் கதையை இரு கோணத்திலிருந்து அணுகத் தோன்றுகிறது. உடற்குறையுள்ள மகனை ஈன்றதற்காக மனைவி மீது கோபம் கொள்வகிறார் இளங்கோவின் அப்பா. அந்தக் கோபத்தை அவன் தாயின் கற்பின் மீதான வெறுப்பாக ஐயமாக மாற்றிக் கொள்கிறார்.
இன்னொரு புறத்தில் இளங்கோ மீது அன்பையும் கொள்கிறார். அவள் மீதான வெறுப்பே இளங்கோ மீது அன்பாக நிகர் செய்யப்படுகிறது. மற்றொரு கோணத்தில், தன் தாய் உணவுக்காகக் கற்பிழந்து இருப்பதைப் பார்த்து வெறுப்படைகிறான் இளங்கோ. பெருந்தழலாக வயிற்றுக்குள் நின்றெறியும் பசியின் முன் தன் தந்தை எழுப்பியிருந்த தாயின் மீதான ஒழுக்கக்கற்பிதங்களை உடைக்கவும் முன்வருகிறான். புறவயத் தருக்கத்துடன் அணுகும் போது பேரிடர் நேரங்களில் ஒழுக்கக் கற்பிதங்கள் மீறல் ஏற்படுத்தும் அனுபவங்களாக இந்தக் கதையைத் தொகுத்துக் கொள்ள முடியும். தந்தையை மீறி தாயைப் புரிய முயற்சி செய்யும் ஒரு மகனின் கதையாகவும் புரிந்து கொள்கிறேன். தாயின் ஒழுக்க மீறலை ஏற்றுக் கொள்ளும் இளங்கோவின் மனத்தில் எழுந்திருக்கும் தந்தையென்னும் சித்திரமும் உடைபடுகிறது.மிக அற்புதமான நடையில் மிகச்சரளமாகக் கதை அமைந்திருந்தது.
அர்வின் குமார்
நவின், டிராகன் சிறந்த கதைதான் ஆனால் உங்களின் சிறந்த கதையாக சொல்ல முடியவில்லை. கதை எடுத்துக்கொண்ட கருவின் அடிப்படையில் உச்சமாகச் சென்றுள்ளது. அது வென்ற இடம் அப்பாவிடம் இருந்து இளங்கோ எல்லாவகையிலும் விடுதலையாகி அம்மாவை அறியும் இடம்தான்.
ஜப்பான் கால வறுமை, பசி, பஞ்சம் ஆகியவற்றை நெருக்கமான காட்சியாக உங்கள் எழுத்தின் வழி காட்டியுள்ளீர்கள். மேலும் அணுகி சென்று போலியோ நோய் கண்ட இளங்கோவின் பசியிலும் அவன் உருவாக்கிக்கொள்ளும் டிராகன் உலகத்திலும் நிலைக்கிறது. அது அவன் பயந்த டிராகன். காய்ச்சல் காண வைத்த டிராகன். டிராகனுக்கு பயந்ததை போல பசிக்கு பயப்படுகிறான் இளங்கோ.
பசி என்ற ஒன்றை அவன் காணாதவரை அவனுக்கு அப்பாவே அனைத்துமாக இருக்கிறார். அதனால் டிராகனும் அவனை நெருங்கவில்லை. அப்பா இல்லாதபோது பசியும் நெருங்கி வருகிறது. அவன் அம்மாவை கண்டுக்கொள்கிறான். அந்த வீட்டில் அம்மா எனும் ஜீவன் நடமாடுவதை அவன் அணுக்கமாக அறிகிறான்.
இன்னொரு கோணத்தில் இருந்து அம்மாவின் கதையும் வருகிறது. அப்பா அணுக்கமில்லாத அம்மா. தன்னை வீட்டில் தனிமை படுத்திக்கொள்ளும் அம்மா. இறுகிப்போன அம்மா. முதலாளியுடன் கொஞ்சும் அம்மா. எதன் காரணமாக அம்மாவிடமிருந்து இளங்கோ விலகி போகிறானோ அதற்காகவே அப்பாவும் போயிருக்கக் கூடும். ஆனால் அப்பா அறியாத ஒன்று அவனுக்குத் தெரிந்துள்ளது. அது பசி.
அழுத்தம் கொடுத்தால் நகராத வண்டியை அவன் பசியில் நகர்த்த கற்கிறான். அவன் வயது சிறுவர்கள் உணவைத் தேடிவர ஆரம்பிக்கிறார்கள். அவனால் எதுவும் முடியவில்லை. அவன் வாழ்வை அழுத்திக்கொண்டிருக்கிறான். அழுத்தத்தில் இருந்து விடுபட்டால் மட்டுமே வாழ்வையும் நகர்த்த முடியும் என அறிகிறான்.
முடிவு மனதை பிழியக்கூடியதுதான். அவன் அம்மாவுக்குப் பசிக்கும் என அறிந்துகொள்ளும் இடமது. ஆனால் அம்மா அழ வேறு காரணம் உண்டு. ஒரு மகனால் தன் பசியை அறிய முடியும் என்பதை அம்மா முதன் முறையாக அறிந்துகொண்டபோது எழும் அழுகை. அது எந்த பசியாகவும் இருக்கலாம்.
மலேசியாவில் இலையுதிர் காலம் உண்டா? வாசித்து முடித்தபோது சீனர்களின் டிராகன் நடனத்தைப் பார்க்க எண்ணம் வந்தது. வாழ்த்துகள்.
ராம்
மலேசியாவில் பருவகாலங்கள் இல்லை. ஆனால் இரப்பர் மரம் டிசம்பரில் இலைகளை உதிர்க்கும்.
ம. நவீன்