சிறுகதை: கன்னி

“இழுக்குற நேக்கு தெரிஞ்சிட்டா அப்பறம் அத தனியா செஞ்சி பாக்க தோணும்,” சரண் கையில் இருந்த பையைப் பிடுங்கினார் மாரி. பசையின் காட்டம் மூக்கில் ஏறியவுடன் அவனுக்கு கிர்ர் என்றது. மோட்டார் சைக்கிளை தோட்ட வாயில் காவலர் குடிலுக்கு எதிர்புறம் இருந்த விளக்குக் கம்பத்தை ஒட்டி நிறுத்தி, ஹேண்டல் பூட்டப்பட்டதை ஓரிருமுறை ஆட்டிப்பார்த்து சோதித்துக்கொண்டான்.

இனி செம்மண் சாலையில் நடக்க வேண்டும் என்றபோது கைக்குட்டையைத் தேடினான். 

“சாயங்காலம் ஆச்சி. தூசுக்கு  பயப்படாத,” என்றார் மாரி.

மூன்றாவது ஸ்டவுட்டுக்கு பின்னர் பசை கொடுக்கும் போதையுடன் அவர் நிதானமாக நடப்பது சரணுக்கு ஆச்சரியமாக இருந்தது. கோலாசிலாங்கூர் முழுக்க கன்னி கோயிலைத் தேடித்தேடி அலுத்தபின் புறப்பட்டுவிடலாம் என்று முடிவெடுத்தபோதுதான் மாரியைச் சந்தித்தான். காடை வறுவலால்தான் அந்தச் சந்திப்பு நிகழ்ந்திருந்தது.

“கொஞ்சம் பொறுத்தா மாரி அங்கிள புடிச்சிடலாம். இங்கதான் எங்கனயாவது கடைத்தெருவோரமா படுத்துகெடப்பாரு,” எனப் பரிமாறியவர் கூறியபடி புகை மணந்த காடையைத் தனியாகத் தட்டில் வைத்தபோதுதான் எடிட்டர் லட்சுமியிடம் இருந்து அழைப்பு வந்தது. எடுக்கவில்லை என்றவுடன் வாட்ஸ்அஃப் குரல் பதிவு ‘டிங்’ என்றது.

“இன்னிக்கு ராத்திரிக்குள்ள ஆர்டிக்கல அனுப்புனாதான் லே அவுட் செஞ்சு சண்டே எடிஷனில போட முடியும். நேத்தே இந்த வேலய முடிக்கச் சொன்னேன். புக் லாஞ்சிங்க கவர் செய்யணுமுன்னு கரிபாப் தின்ன போயிட்டீங்க. பாலிடிஷன்கிட்ட கவர் வாங்க ஈன்னு இளிச்சிக்கிட்டு…” அதற்கு மேல் கேட்கப் பிடிக்காமல் அடைத்துவிட்டான்.

“பிட்ச்” சத்தமாகச் சொல்லிவிட்டோமா என சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டான். அவரவர் வான்கோழி கறியைத் தின்பதிலும் நாட்டுக்கோழியைக் கடிப்பதிலும் மும்முரமாக இருந்தனர். பெரும்பாலும் லாரி ஓட்டுனர்கள் என பார்த்தவுடனேயே அடையாளம் தெரிந்தது. இப்படிக் காட்டோராமாக, திறந்த வெளியில் சாப்பிட்டு அவனுக்கும் பல நாட்களாகிவிட்டன. காகங்கள் மிச்சம் வைக்கப்போகும் தட்டுகளுக்குக் காத்திருந்தன. கோலாலம்பூர் திறந்தவெளி கடைகளில் தூசு பறக்கும். எண்ணெய் கோர்த்து கல்போல இறுகிப்போயிருக்கும் மிச்சப்பட்ட காடையை மறுபடி மறுபடி பொரித்து வைப்பார்கள்.   

“என்னாத்துக்குடா ஆள உட்டு அனுப்புன?” என சத்தம் கேட்டதும் எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள். அழுக்கேறிய உடையுடன் ஒருவர் நின்றுகொண்டிருந்தார்.

“சாரே இவருதான் மாரி அங்கிள். இவர புடிச்சா கன்னி கோயில புடிச்ச மாதிரிதான்,” கடைக்காரர் விலை சிட்டையை வைத்துவிட்டு அவரைக் காட்டினார். சரண் ஒரு தரம் அவரை நேராகப் பார்த்தான். சிவந்த, தொப்பை விழுந்த கண்களும் வெற்றிலைக் கறை ஏறிய வாயும் சுருள் விழுந்த பரட்டைத் தலையுமாக  இருந்தார். பார்வையில் அலட்சியம்.

“எதுக்கு அத தேடுற?” என மாரி கேட்டபோது அவரிடம் சொல்ல வேண்டுமா எனத் தோன்றியது.

“சொல்லு!” என அருகில் அமர்ந்துகொண்டார். வளர்ந்து சுருண்ட புருவ உரோமங்கள் அவர் கண்களை மிரட்டலாகக் காட்டின.

“இருவது வருஷத்துக்கு முன்னாடி அங்க நெருப்புல வெந்துபோயி பொணம் ஒன்னு கெடைச்சதுல்ல,” என்றான் சுருக்கமாக.

“அத தின்ன வந்தியா?”

கைப்பேசியில் ஒளி எழுந்தது. அழைப்பு ராகத்தைக் கேட்டாலே பதற்றம் வருவதால் ஒலியை முடக்கி வைத்திருந்தான். இப்போது வெளிச்சமும் கடுப்பை மூட்டியது. பல்லைக்கடித்துக்கொண்டே “அத பத்தி எழுத,” என்றான்.

“பேய் படமா? மசுர புடுங்குனாலும் பேய் மசுரத்தான் புடுங்குவானுங்க.”

அவனுக்கு எரிச்சலானது. “இது நியூஸ் பேப்பருக்கு!” அதைச் சொல்ல வேண்டாம் என்றுதான் ஒவ்வொருமுறையும் நினைப்பான். வாய்தவறிச் சொல்லிவிடுவான்.

“இருவது வருஷத்துக்கு முன்ன உள்ள தற்கொல சேதிய போடுற அளவுக்கா காஞ்சிபோயி கெடக்குறாய்ங்க!” என்றார். காதில் செருகியிருந்த ஒரு பீடியை எடுத்துப் பற்ற வைத்தவர் “எவனோ அந்த பொண்ண பாவிச்சி ஏமாத்திட்டான். கொளுத்திக்கிட்டா. அஞ்சி வெள்ளி இருந்தா கொடேன். தல கிறுகிறுங்குது,” அவர் கையை நீட்டினார்.

அதற்கு மேல் பேச்சை வளர்க்க விருப்பம் இல்லாமல் சாப்பாட்டுக்கான பணத்தைச் செலுத்தினான். பாக்கெட்டில் இருந்த கைப்பேசி நீண்ட நேரம் அதிர்வதும் அடங்குவதுமாக இருந்தது.

“அங்கிளுக்கு எல்லாம் தெரியும் சாரே. ஊருலயே பழைய ஆளு!” எனக் கடைக்காரர் மீண்டும் சொன்னார்.

“நீ என்னா தெரிஞ்சி வச்சிருக்கேன்னு சொல்லு. மிச்சத்த நா சொல்லுறேன்,” என்றவர் கால்மேல் காலை போட்டுக்கொண்டார்.

“ஒன்னுமில்ல. கோயில காட்டுனா போதும்,” என்றான்.

“அவள பத்தி தெரிஞ்சிக்க யேன் அம்மாந்தூரம் போவனும். அவ பேரு புவனா. நல்லா தளுக்கா இருப்பா. எவனோ நல்லா செஞ்சி உட்டு ஏமாத்திப்புட்டான்னு கொளுத்திக்கிட்டா. கேஸ் நடந்தப்ப போலிஸ்காரன் கோயில சுத்தி ரிப்பன கட்டி உட்டுட்டான். எவனயும் அந்த பக்கம் போவ உடல. அப்புறமா அது தற்கொல செஞ்சிக்கிச்சின்னு முடிவான பின்னாலயும் பயந்துகிட்டு எவனும் போறதில்ல,” என்றார் அலட்சியமாக.

பணிந்து போவதைத் தவிர சரணுக்கு வேறு வழியில்லை. ஸ்டைலாக பீடி பிடித்துக்கொண்டிருந்தவரிடம் சம்பவம் நடந்த இடத்தைப் புகைப்படம் எடுக்க வேண்டிய தேவைகளை விரிவாக விளக்கிய பிறகுதான் தயங்கியபடி பயணத்துக்கு ஒப்புக்கொண்டார்.

பைக்கில் ஏறியவுடன் “பத்தாங் பெர்ஜுந்தாய் டவுனத் தாண்டித்தான் போவனும். செவன் இலெவனுல நாலு ஸ்டவுடும் பக்கத்து வொர்க் ஷாப்புல பஞ்சருக்கு ஒட்டுற கம்மும் வாங்கிக்கோ,” என்றவரை அங்கேயே இறக்கிவிட வேண்டும் போல்தான் தோன்றியது. ஆனால் அவன் கன்னி கோயிலுக்குப் போயாக வேண்டும். காலையிலிருந்தே எடிட்டர் லட்சுமி ஃபோனில் துரத்திக்கொண்டே இருக்கிறார். அவர் பத்திரிகை ஆசிரியராக வந்த  ஒரு மாதத்தில் அவன் தலைதான் அதிகம் உருண்டது.  பத்திரிகை விற்பனை சரிவை  அமானுஷ்ய கதைகளைப் போடுவதன் வழிதான் உயர்த்த முடியும் என கடந்த சந்திப்பில் உறுதியானதிலிருந்தே அவனிடம் பேய்போல கத்திக்கொண்டிருக்கிறார்.

வாராந்திர சந்திப்புக் கூட்டத்தில் அவன் தன் திட்டங்களைச் சொல்ல முயன்றபோதெல்லாம் வாயை மூடச்சொல்லி அடக்கினார். அந்த அவமானத்தை  நெஞ்சில் பெருந்தீயாக வளர்த்து, பதிலுக்கு எதிர்த்துப் பேசிவிடலாம் என்றுதான் வீராப்பாக அவர் அறைக்குள் நுழைவான். ஆனால் அவரிடம் பேசத்தொடங்கும்போது நாக்கு அன்னத்தில் ஒட்டிக்கொள்ளும். அவருக்கு ஈடாக ஆங்கிலம் பேசமுடியாதது காரணமாக இருக்கலாம். இரண்டு வாரங்களுக்கு முன்பு தலைப்பில் பிழைவிட்டதால் “பாஸ்டட்” எனக் கத்தினார். அவன் தன் இடத்தில் வந்தமர்ந்தபோதுதான் அதை தமிழில் நினைத்து நினைத்துப் புழுங்கினான். பதிலுக்கு ஏசிவிடலாம் என எழுந்தால் கால்கள் சக்தியே இல்லாமல் தளர்ந்து சரிந்தன. கோயிலை நோக்கி சென்றுகொண்டிருப்பதாக ஒரு தகவல் மட்டும் அனுப்பிவிட்டு கைப்பேசியை ‘ஃபிளைட் மூட்’டில் போட்டான். இந்த தைரியமெல்லாம் அவனுக்கு கடந்த ஒருவாரமாகத்தான் வந்திருந்தது.

“செம்மண்ணு பொம்பளையாட்டம். காலையில பனிபட்டு அப்படியே அடங்கி கெடக்கும். வெயிலேற ஏற பிசாசாட்டம் புழுதிய கெளப்பி பறந்து ரோட்ட மறைக்கும். ராவு நெருங்கறப்போ சீண்டுனா மட்டுந்தான் சிலுக்கும்,” என்றவர் சிரித்தார்.

எடிட்டர் லட்சுமியை அவன் எப்போதுமே சாந்தமாகப் பார்த்ததில்லை. ‘அவளுக்கு எப்பவும் வெயிலுதான்’ என நினைத்துக்கொண்டான். ஒருமுறை ஞாயிறு இதழின் சினிமா பக்கத்தைப் போடும்போது “நடிகையோட மார அர பக்கம் போட்டாதான் சண்டே இஷூ ஓடுமா? அவ்வளவு அலைஞ்சா கொழந்தையில பால குடிக்கும்போதே கடிச்சித்தின்ன வேண்டியதுதானே!” என  கத்தவும் சப்த நாடிகளும் சுருண்டன. வீட்டுக்குப் போய் அம்மாவின் முகத்தைப் பார்த்தபோது அழுகை அழுகையாக வந்தது. அப்போதே போனில் அழைத்தான். எல்லா கெட்ட வார்த்தைகளையும் சொல்லிக் கத்த வேண்டும்போல உடல் நடுங்கியது. எடிட்டர் லட்சுமி போனை எடுக்கவில்லை. மறுநாள் “எதுவா இருந்தாலும் வேலை நேரத்துல சொல்ல முடியாதா? அப்படி என்னா ராத்திரிக்கு அவசரம்?” எனக் கத்தியபோது முதல்நாளின் கோபமெல்லாம் பயமாக மாறிப்போயிருந்தது. 

வயது முதிர்ந்தும் திருமணம் ஆகாத பெண்கள் அப்படித்தான் எரிந்து விழுவார்கள் என கோபால் கடந்த வாரம் சொன்னபோது அவனுக்கு முதலில் அர்த்தம் புரியவில்லை. “நீ வேணுமுன்னா ஹெல்ப் பண்ணேன்” என அவன் கண்ணடித்துச் சொல்லிய பிறகுதான் ஞாயிறு இணைப்புப் பக்கங்களை பிளேட் செய்யும் பகுதிக்கு மின்னஞ்சல் அனுப்பும் இரவுகளில் எடிட்டர் லட்சுமியின் அருகாமை குறுகுறுப்பாக இருந்தது. எலியனை உருட்டி அவர் பக்கங்களைச் சரிபார்க்கும்போது வியர்வை கலந்த வாசனைத் திரவியம் கிரங்கச் செய்தது. உரோமம் அடர்ந்த அவரது வெண் கரங்களையே பார்த்துக்கொண்டிருந்தான். அப்படியொன்றும் அவருக்கு வயதாகிவிடவில்லை எனத்தோன்றியது. எழும்போதும் அமரும்போதும் தோளையும் பிட்டத்தையும் மெல்ல உரசினான். எதற்குமே சலனம் காட்டாத எடிட்டர் லட்சுமியின் முகம் முதலில் தயக்கத்தைக் கொடுத்தாலும் பின்னர் அதுவே உற்சாகமான விளையாட்டானது. உரசலின் அழுத்தத்தை அதிகரித்தான். எடிட்டர் லட்சுமியின் கண்கள் கணினியை விட்டு அகலவில்லை. அது அவனுக்குப் பெரும் உத்வேகமானது. அடுத்தடுத்து  என்ன செய்யலாம் என நினைக்கும்போதே உணர்ச்சி கிளர்ந்தது. அவரும் அதில் ரகசியமாகப் பங்கெடுக்கிறாரோ என்ற குழப்பமே மெல்லிய கம்பீரத்தைக் கொடுத்தது

நீண்டு செல்லும் பொன்னிறமான மண் சாலை மாலை வெய்யிலில் தகதகத்தது. செம்பனை இலைகளில் ஒட்டியிருந்த செம்மண் துகள்கள் மினுங்கின. டிரக்டர்களும் லாரிகளும் ஓடி ஓடி சாலை சமநிலை இழந்து கிடைந்தது. ஒரு சிறிய ஓடையைத் தாண்டி எட்டடி மட்டுமே வளர்ந்திருந்த செம்பனைக் கன்றுகளின் மத்தியில் நடந்தபோது தலைக்கு மேல் கூரைபோல மட்டைகள் இருபக்கமும் அடர்ந்திருந்தன.

“கோலாசிலாங்கூர் முழுக்க கோயிலுதான்,” என்ற மாரி பசை பையினுள் ஆழ மூச்சை இழுத்து பார்வையைக் கொஞ்ச நேரம் ஆகாயத்தை நோக்கி வைத்திருந்தார். அது பூமிக்குத் திரும்பியபோது பையைத் தூக்கி வீசினார்.

சரணுக்கு எல்லாம் வினோதமாக இருந்தது. “காலையிலேருந்து ஆளுங்க தப்புத்தப்பா பாதைய காட்டி, அதுல பாதி கோயில பாத்திருப்பேன்,” என்றான்.

“கன்னி கோயில அவ்வளோ சீக்கிரமா பாத்திட முடியாது. வெள்ளைக்காரன் காலத்திலேருந்தே அது இருக்குற தடத்தையே மறைக்கணுமுன்னு முக்குறானுங்க. பாதைய மாத்துறான், கோயில சுத்தீலும் காடு மண்ட உடுறான். கோயிலு மேல மட்டும் கைய வைக்க எவனுக்கும் கொட்ட இல்ல. உள்ளூர்க்காரன் எவனும் வாரதில்ல. பொம்பள சாபம் இருந்தா மட்டும் வெளியூர்லேருந்து எவனாவது தேடி வருவான்,” என்றார்.

எடிட்டர் லட்சுமி அவனுக்குக் கொடுத்திருந்த வேலை மிகவும் சுலபமானதுதான். கோயிலையும் அதன் வளாகத்தையும் சில படங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். கோயிலைப் பற்றிய சிறிய வரலாற்றுக் குறிப்புடன் புவனா மரணத்தில் மர்மம் உள்ளதாக எழுத வேண்டும்.  இந்தக் கோயிலுக்கு அவன் வந்தபோது அமானுஷ்யமான அனுபவம் ஏற்பட்டதாகக் குறிப்பிட வேண்டும். கோயிலை ஒட்டி இருண்ட புதர்கள் இருந்தால் அதையும் படம் எடுத்து வைத்துக்கொண்டு ‘அங்குதான் அந்த உருவத்தைப் பார்த்தேன்’ என போட்டுவிட்டால் கிராபிஃக் டிசைனர் வட்டம் போட்டு காட்டிய பகுதியை மக்கள் உற்று உற்றுப் பார்த்துக் கற்பனையால் பயப்படுவார்கள். மக்களுக்கு பயம் கொள்ளவும் பக்தி கொள்ளவும் கற்பனையைத் தூண்டி விடுவது போதுமானது என்பது அவர் கொள்கை.

“அப்படியெல்லாம் நம்ப மாட்டாங்க. இப்ப எல்லாமே எடுகேட்டட்!” என்றான்.

“நம்புற மாதிரி சொல்லணும். அதுல ஒரு உண்மை கத இருக்கணும். அத தேடு. இதுக்குதான் தமிழ்ல டிகிரி முடிச்ச பசங்கள வேலைக்கு எடுக்கக்கூடாதுங்கறது. கிரேயிட்டிவிட்டியே கெடையாது!” எனக் கத்தினார் எடிட்டர் லட்சுமி.

அவர்கள் ஒரு சிறு மேட்டுநிலத்தின் சரிவின் முன்வந்து நின்றனர். “இதுக்கு மேலதான் கோயிலு!” என்றவர் ஏறத்தொடங்கினார்.

“அதென்னா பொண்ணுங்க சாபம்?” அவனுக்கு மூச்சு வாங்கியது.

“இதெல்லாம் தெரியாமதான் பேப்பருல இருக்கியா?” என்றபோது எடிட்டர் லட்சுமி ஞாபகம் வந்தது. பின்னால் வருகிறாரா எனத் திரும்பிப் பார்த்துக்கொண்டான். அவர் செண்ட் மணம் நினைவில் வீசியது.

“சாபத்துல மொத்தம் பதிமூனு வக இருக்கு. கொல தெய்வ சாபம், சாமியாருங்க சாபம், பாம்போட சாபம் இப்படி கெடக்குது ஏராளம். அதுல பொண்ணுங்க சாபம் பொல்லாதது. பரம்பரையே பாதிக்கும்.”

“ஒங்களுக்கு எப்படி இதெல்லாம் தெரியும்?” என்றான்.

“ஒனக்கு தெரியலயில்ல. அதான் எனக்கு தெரியுது!” என்று சிரித்தார்.

‘மூடிக்கிட்டு போடா. நானே பாத்துக்கிறேன் கோயில’ எனச் சொல்லவேண்டும்போல இருந்தது. ஆனால் எந்தப் பாதையில் நுழைந்து வந்தான் என்பதையே மறந்திருந்தான். மேலே ஏற ஏற கீழே எல்லாமே ஒன்றுபோல இருந்தது. வழித்தடம் பெரும்பாலும் புற்கள் மூடி மறைந்திருந்தது. ஆங்காங்கு சாணக் குவியலைப் பார்க்க முடிந்தது. முழங்காலுக்கு மேல் எந்தச் செடியும் வளர்ந்திருக்கவில்லை.

“பொணமெல்லாம் கூட சாபம் கொடுக்கும். ஆனா ஆம்பளைங்க சாபத்துக்கு மட்டும் பவர் இல்ல கேட்டுக்க. நமக்கெல்லாம் குஞ்சு மட்டும் இல்லனா பொறப்பே அசிங்கம்,” எனச் சிரித்தார். மூச்சு வாங்கியபோது இனியாவது உடற்பயிற்சி செய்து இளந்தொப்பையைக் குறைக்க வேண்டுமென நினைத்துக்கொண்டான்.

தகரக்கூரை தெரிந்ததும் நடையை இருவரும் வேகப்படுத்தினர். ஒவ்வொரு அடிக்கும் கோயில் பார்வையில் முழுமையாகி வளர்ந்தது. மேட்டு நிலத்திலிருந்து பார்க்க செம்பனைத் தலைகள் பசுமை பொங்க காட்சி கொடுத்ததால் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டான். கோயிலின் முன் நேராகப் போய் நின்றபோது கைகள் எழுந்து வணங்கின. பூமியில் செங்கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. அவற்றில் எப்போதோ பட்டுத்துணிகள் சுற்றப்பட்டிருக்க வேண்டும். நைந்து வண்ணமிழந்திருந்தன. சில பட்டுநூல்கள் மட்டும் மின்னின. நான்கு பக்கமும் மரத்தூண். கூரையாக அடிக்கப்பட்ட தகரம் துருவேறி சேதமடைந்திருந்தது. ஒரு பக்கம் ஆணி கழன்று காற்றில் அவ்வப்போது அடித்துக்கொண்டு ஒலியெழுப்பியது. தேவையான அளவு கைப்பேசியிலேயே புகைப்படம் எடுத்துக்கொண்டான்.

“இப்ப எல்லாத்துக்கும் இதுதான். கொஞ்ச நாள்ல ஊம்புறதுக்கும் இதத்தான் புடிச்சிக்கிட்டு சுத்துவீங்க” என்றார். சரண் ஒன்றும் பேசவில்லை. காற்றில் சரிந்து கிடந்த தகரத்தைத் தூக்கியபோது ஏதோ புதருக்குள் வேகமாக ஓடியதும் சட்டென தகரத்தைக் கீழே போட்டான்.

“அரணையா இருக்கும். கண்டத தொடாத.” என்றவர் புதரின் பக்கம் பார்வையை ஓடவிட்டார். “ந்தா… எவனோ பொங்க வச்சி பானையை அப்படியே உட்டுட்டு போயிருக்கான். கொரங்கு மோப்பம் புடிச்சி வந்து மிச்சத்த தின்னுப்புட்டு அதம்  பண்ணி வைச்சிருக்கு. ஆனா சாமிய ஒன்னும் பண்ணல பாத்தியா!” என்றார்.

“இன்னமும் இங்க ஆளுங்க வராங்களா?”

“அதான் சொன்னனே. பொம்பள சாபம் இருந்தா வருவாயிங்க. வலி வந்தா மருத்துவச்சிய தேடத்தானே வேணும்,” என்றபடி பொங்கல் பானையை எடுத்தார். அதன் உட்புறம் உற்றுப் பார்த்தவர் “மூனு மாசமாச்சும் ஆயிருக்கும்,” என்றபடி தொலைவாக வீசினார்.

சரண் அப்போதுதான் கவனித்தான். கோயிலில் ஆறு கன்னிகள் மட்டுமே இருந்தனர்.

“இதென்ன ஆறு கன்னிகள்தான் இருக்கு?” என்றான்.

“இங்க ஆறுதான்!”

“கன்னி கோயிலுன்னா ஏழுதானே இருக்கணும்?”

“இந்த கோயிலுல இப்போதைக்கு ஆறு கன்னிங்கதான்.”

“இப்போதைக்குன்னா?” சரணுக்கு தான் தவறான கோயிலுக்கு வந்துவிட்டோமோ எனத் தோன்றியது. கன்னி கோயிலென்றால் ஏழு சிலைகள்தான் இருக்க வேண்டும். அவன் அப்படித்தான் கூகுளில் வாசித்திருக்கிறான்.

“இந்த ஊருலயே  கன்னி கோயிலுனா இது மட்டுந்தான் இருக்கு,” என்றார்.

காற்று பலமாக வீச, தகரம் படபடவென அடித்தது. புழுதி பறந்தபோது இருவரும் கண்களை மூடிக்கொண்டனர். அவன் கண்களை நுணுக்கிப் பார்த்தான். செம்பனைகள் ஒன்றுபோல அசைவது மேலிருந்து பார்க்க அழகாக இருந்தது. ஒன்றும் பேசாமல் அமர்ந்தான்.

“கருவுல உருவாகாத பொண்ணுங்களாலதான் அரக்கன அழிக்க முடியுமுன்னு பார்வதி ஏழு கன்னிகள படைச்சதா படிச்சேன்.”

“பொராணத்த பாத்தா சாமி பூமிக்கு வருது? இந்தக் கோயில்ல எப்பவும் ஏழு கன்னிங்க இருந்ததில்ல. முன்னயெல்லாம் ஒன்னுதான் இருந்துச்சி,” என்றார்.

“ஒன்னா?”

“அது வெள்ளைக்காரன் காலத்துக்கு முன்ன.  நா பாத்ததில்ல. அஸ்லிகாரைய்ங்க வேட்டைக்கு போவ நல்ல நேரம் சொல்லுற பொண்ண புலி அடிச்சிருச்சி. அவைங்களுக்கு நல்லது கெட்டதெல்லாம் அதுதான் குறிபாத்து சொல்லுமாம். அந்தப் பொண்ணு வலியோட அலறுன அலறல்ல மரமெல்லாம் விழுந்து அவனுங்க ஊடெல்லாம் அழிஞ்சி போயிடுச்சாம். ஆத்துல கெடக்குற மீனெல்லாம் கரைக்குத் தாவி துள்ளிச்சாம். சொல்லுவாய்ங்க கதயா. இருவத்தோரு நாளு வச்சி வைத்தியம் பாத்திருக்காய்ங்க. உசுரும் போவாம வலியும் தீராம கதறிக்கிட்டே இருந்திருக்கா. பொண்ண காப்பாத்தவும் முடியாம சாவடிக்கவும் முடியாம அர உசுரா இருக்கிறப்பயே பொதைச்சிடலாமுன்னு மேட்டு நெலமா தேடியிருக்காயிங்க. சாமி பொண்ணு. அதான் அவைங்களுக்கு அப்படி ஒரு சடங்கு.  தோதான நெலம் எஸ்டேட்டுலதான் இருந்திருக்கு. மேனஜரு அவைங்க கதையில பாவப்பட்டு, போனாபோவுதுன்னு உட்டுட்டாரு. அந்தப் பொண்ணோட சமாதிதான் இது. அவனுங்க செதுக்கி அடையாளத்துக்கு ஊனி வச்ச கட்ட கரையான் அரிச்சி மக்குன பெறகு, மேனஜர் ரெண்டு செங்கல்லா ஊனி வச்சாரு. முன்னயெல்லாம் அஸ்லிகாரனுங்க வருஷம் ஒரு தடவ காட்டுப் பன்னிய இங்க கொண்டு வந்து பலி கொடுப்பாய்ங்கலாம். மா மெரி சாதி. கடலு எங்க இருக்கோ அந்த எடத்துல கொஞ்ச காலம் இருப்பாய்ங்க. இப்ப அவனுங்க எனமே இந்த ஏரியாவுல இல்ல பாத்துக்க.”

சரணுக்கு அந்தக் கதை பிடித்திருந்தது. இருபது வருடத்துக்கு முன் நடந்த கொலையைவிட இந்தக் கதையைச் சரியான ஓவியங்களுடன் பிரசுரித்தால் பத்திரிகை சூடு பறக்கும் என நினைத்தான். ஃபோனில் குரல் பதிவை முடுக்கி அவரைப் பேச விட்டான்.

“மேனஜர் யேன் இங்க வந்து செங்கல்ல ஊனினாரு?”

“அந்தாளோட பொண்ணுக்குப் பைத்தியம் புடிச்சிருக்குன்னு ஏதேதோ வைத்தியம் பாத்து எதுவும் கேக்காம வீட்டுலயே அடைச்சிப் போட்டு வச்சிருந்திருக்காரு. அது தற்கொல செஞ்சிகிடுச்சி. ஆனா பொண்ணுக்குப் பைத்தியமெல்லாம் இல்ல. அப்பன பாக்க பங்களாவுக்கு போகவும் வரவும் இருக்க, தொர பையனோட பழக்கமாயிடுச்சி. தொரைய பகைச்சிக்கிட்டா தல போயிரும். கட்டிக்கொடுத்தா மாட்ட தின்னுறவனுக்குப் பொண்ண கொடுத்துட்டான்னு மானம் போயிரும். மவள ஊட்டிலேயே அடைச்சி வைக்கவும் அது எகிறியிருக்கு. மனசக் கட்டுப்படுத்த எவங்கிட்ட மருந்து இருக்கு சொல்லு. தொங்கிருச்சி!” நான்காவது பாட்டிலைப் பல்லால் கடித்துத் திறந்தார் மாரி.

“ஒங்களுக்கு எப்படி தெரியும்”

“தெரியும். அந்த ஆளு பைத்தியம் புடிச்சி சுத்துனான்னு எங்கப்பா சொல்லியிருக்காரு. வேற வழியில்லாம வீட்டுக்காரி அஸ்லிகாரனையே தேடிப் போய் பாத்திருக்கா. அவனுங்கதான போமோவுல கெட்டி. மேட்டு சமாதியில படையலு வச்சு மூனு சனிக்கெழம கும்புடச் சொல்லியிருக்காய்ங்க. படையலுன்னா சும்மா இல்ல. உசுரோட கடாய சமாதியாண்ட கட்டிப் போட்டுடனும். மறுநா பாத்தா அதோட செதஞ்ச ஒடம்ப புலியோ கரடியோ தின்ன மாதிரியெல்லாம் இருக்காதாம். அதெல்லாம் வேற சங்கதி,” பியரை ஒரு மொடக்குக் குடித்தார்.

“நாலாவது சனிக்கிழம கல்ல ஊனி குடும்பமே உழுந்து கும்புட்டுச்சாம். ஒன்னில்ல ரெண்டில்ல… முப்பது கிடாய் வெட்டி ஊருக்கே சோறு போட்டாய்ங்களாம். சின்ன திருவிழா மாதிரின்னு வச்சிக்கயேன். அப்பவெல்லாம் இந்த பக்கம் உள்ள நெரையாண்ட  ஆம்பளைங்கள அனுப்ப மாட்டாய்ங்களாம். மண்டோரு கூட வர மாட்டாருன்னா பாத்துக்கயேன். மீறி வந்தா ஏதோ நடமாட்டத்த பாத்ததா அலறியடிச்சிக்கிட்டு ஓடுவாய்ங்களாம்.”

சரணுக்குக் குளிர் காற்றுப் பட்டு சிலிர்த்தது. திரும்பிக் கோயிலை நோக்கினான். மாரி பார்க்காதபோது ஒருதரம் மெல்லக் கையெடுத்துச் சட்டென வணங்கிக்கொண்டான்.

“அவரு என்னா ஆனாரு?”

“அந்த மேனஜரா? பைத்தியமெல்லாம் தெளிஞ்சுது. ஆனா  கன்னி பொண்ணு  சாபம் சும்மா இருக்குமா? ஆச வச்ச மனசாச்சே. நெருப்புல எத எரிச்சாலும் ஆச வச்ச மனசு எரியுமா?” ஏப்பம் விட்டவர் நெஞ்சை வருடிக்கொண்டார். “ஆச நெருப்பாட்டந்தான். நெருப்பத் தின்னுதான நெருப்பு வளரும். அதோட ஆங்கார ஆட்டத்துல அந்த ஆளு மனசு ஊட்டுக்குள்ள ஒக்காரல. ராவெல்லாம் பேயாட்டம் டவுனு பூரா அலைவாரு. அப்படி எத்தனையோ வருசம் அலைஞ்சாரு. எனக்கு வெவரம் தெரிஞ்சே பாத்துருக்கேன். நா மாடு மேச்சிக்கிட்டு காட்டுக்குள்ள போவும்போது ஒலாத்திக்கிட்டு கெடப்பாரு. மொகமே நரைச்சிபோயி ஒட்டட மண்டுன மூஞ்சாட்டம் இருக்கும். அப்படியே செத்திருந்தாலும் பரவாலயே. ரெண்டு சாவுக்கு சங்கூதிட்டுல போனாரு.”

“ரெண்டு சாவா?” சரணின் குரல் நடுங்கியது.

“அப்ப நீயெல்லாம் பொறந்திருக்கவே மாட்ட. பேப்பருலயெல்லாம் வந்துச்சி.”

“எந்த வருசம்”

“சாமிவேலு எந்த வருஷம் மொத தடவ  ஜெயிச்சாரு?”

“எழுவத்து மூனு, எழுவத்து நாலு இருக்கும்.”

“அப்பதான். ஒரு பக்கம் சாமிவேலு ஜெயிச்ச சேதின்னா, இன்னொரு பக்கம் ரெட்ட கொல சேதின்னு பரபரப்பா வருது. சாதாரண ஆளு மேலயா கைய வச்சான். புதுசா வேல மாறி வந்த போலிசு குடும்பம். ராவெல்லாம் ஊர சுத்துற இந்த ஆளு மேல ஏதோ சந்தேகம் இருக்கவும் கூப்புட்டு என்னா ஏதுன்னு விசாரிச்சிருக்காரு. ஆள பாக்க ஒரு மாதிரி இருந்தாலும் படிச்சவன் இல்லையா. செரி ஊட்டுக்கு ஒத்தாசையா இருக்கட்டுமேன்னு தோட்ட வேலைய பாத்துக்கச் சொல்லி கை செலவுக்கு காசு கொடுத்திருக்காரு. வாசல்லயே நாயாட்டம் காவ கெடக்கணும். பொண்ணுங்கள பாத்துக்கணும். போலிஸ்காரனுக்கு ரெட்ட பொண்ணுங்க. ரெண்டு பேரையும் இதே எடத்துல கழுத்தறுத்து பொணமா போட்டிருந்தான்.”

“ஏங் கொன்னாரு?”

“அது தெரியல. அந்த மேனஜரு கடைசி வரைக்கும் எதையுமே பேசல. அந்த ஆளோட மவ பேரச் சொல்லி அழுதுகிட்டே இருந்தாராம். நல்ல பேரு. சாமி பேரு. தாமரையில ஒக்காந்திருக்குமே?”

“சரஸ்வதியா?”

“அது வெள்ளையில்ல. செவப்பு தாமர.”

“லட்சுமி” அதைச் சொல்லும்போது அவனுக்கு எடிட்டர் லட்சுமியின் நினைவு வந்தது. கைப்பேசியை ஃபிளைட் மூட்டில் இருந்து நீக்கினால் அவரிடமிருந்து வட்சாப்புகள் வந்து குவியும் என நினைத்துக்கொண்டான்.

“அதுதான். அந்தாள தூக்கி ஜெயில்ல போட்டுட்டாய்ங்க. லட்சுமிய கொன்னது மேனஜர்தான்னு போலிஸ்காரன் பாயின்ட தூக்கிப் போடுறான். இருவது வருசத்துக்கு அப்புறமா அந்த மனுசன் கோட்டுல சிரிச்சாராம். சந்தேகம் மேனஜரு பக்கம் ஸ்ட்ராங்கா இருந்ததால உள்ளுக்குப் போட்டுட்டாய்ங்க.”

“மாரி, கொஞ்சம் கொடுங்களேன்!”

“எச்சயாச்சே… பரவாலய்யா?”

சரணுக்கு அப்போது குடித்தே ஆக வேண்டும்போல இருந்தது. வாங்கி மடமடவெனக் குடித்து ஏப்பம் விட்டபோது கொஞ்சம் தைரியம் வந்ததாக உணர்ந்தான்.

“ரெண்டு பொணமும் இங்க விழுந்து கெடந்ததால சாமிக்குத் தீட்டாச்சின்னு அந்த போலிஸ்காரந்தான் இந்த கூடாரத்த போட்டுக்கொடுத்தான். சின்னதா ஒரு பூச நடந்துச்சு. பண்டாரம் சொன்னதால மகளுங்க பேர சொல்லி ரெண்டு கல்ல ஊனினாரு. அப்பவெல்லாம் தென்ன மட்டையில கூர பின்னியிருப்பாயிங்க. எனக்கு அப்போ எள வயசு. இங்கதான் சீட்டாடுவோம். தண்ணியடிப்போம். அப்புறமா ஒருநாளு அழுவுற கொரலு கேட்டதிலேருந்து சாமான்யமா வாரதில்ல.”

“அழுவுற கொலலா… செ… கொரலா?”

“பின்ன. அந்த அஸ்லி பொண்ண உசுரோட பொதைச்சாங்களே. அவ இன்னமும் வலியால அழுதுகிட்டுதான கீழ கெடக்கா. இன்னும் சித்த பொறுத்தா நீயும் கேக்கலாம். அதயும் பேப்பருல எழுது,” என்றார்.

சரணுக்கு அங்கிருந்து புறப்படத் தோன்றியது. பயத்தைக் காட்டிக்கொள்ளாமல் மெல்ல எழுந்தான். “வாங்க போய்ட்டே பேசுவோம்,” என்றான்.

“தெ இன்னும் கொஞ்சம் இருக்கு முடிச்சிடுறேன்,” என்றவர் பாட்டிலைக் கவிழ்த்து ஒரு மடக்குக் குடித்தார். சூரியனின் தலை மட்டும் மட்டைகளுக்கு அடியில் சென்று மறையக் காத்திருந்தது. அதன்பின் இருள் வரும். பயத்தைப் போக்க ஏதாவது பேச வேண்டும்போல இருந்தது.

“அந்த பொண்ணுங்கள போலிஸ்காரனே கொன்னுருக்கலாம் இல்லையா?”

“அட சக்கன்னா… செம பத்திரிககாரன் நீயு. அப்படியும் ஒரு பேச்சு இருக்கு. போலிஸ்காரன் அதுக்கு முன்ன வேலை பாத்த ஊருல பொண்ணுங்க ஊட்ட உட்டு ஓட பாத்ததாவும் அதுக்கு பயந்துகிட்டுதான் வேல மாறி இங்க வந்தாருன்னும் பேச்சு. போலிஸ்காரனுக்குப் பயங்கர ஜாதிப் புடிப்பாம்.”

“அப்படினா அவரு தப்பிக்க ப்ளான் பண்ணியே மேனஜரக் கோத்து விட்டுருக்கலாம்  இல்லையா? அதுக்காகவே அவர வேலைக்கு சேத்திருக்கலாம். மேனஜர் மேல ஏற்கனவே அவருக்கு சந்தேகம் இருந்திருக்கணும். அவரு வாயால விசயத்தை வாங்கிட்டா பலி போட வசதியா இருக்குமுன்னு நெனச்சிருக்கலாம்.”

“கதைக்கு என்னாவும் நெனைக்கலாம். நமக்கு என்னா தெரியும். கேட்டுப் பாக்க அவனும் உசிரோட இல்ல. சும்மா இல்ல. காயு பாலாக் லாரி. ஒரு வளவு போட்டுருக்கான். லாரியோட வாலு அடிச்சி காரோட தூக்கி போட்டுடுச்சி.”

“செத்துட்டாரா?”

“ஒடன செத்தாதான் நிம்மதியாச்சே. பொண்டாட்டியும் இல்ல. புள்ளைங்களும் இல்ல. நாறபொழப்பு. நாறிகெடந்துதான் போனான்.”

சரணுக்குப் போதுமான கதைகள் கிடைத்ததுபோல இருந்தது. இந்தப் போலிஸ்காரர் கதையையே துப்பறியும் பாணியில் மூன்று பகுதிகளாக எழுதினால் ஞாயிறு பதிப்பு நன்றாக ஓடக்கூடும். மேல் மட்டத்திலிருந்துகூட அழுத்தம் வரலாம். எல்லாமே அவன் வளர்ச்சிக்கு நல்லதுதான் என நினைத்தான். வருடக் கடைசியில் இப்படி ஏதாவது செய்தால்தான் எடிட்டர் லட்சுமி நிர்வாகத்திடம் பரிந்துரை செய்து போனசுக்கு ஏற்பாடு செய்வார். போனஸில் அவனுக்கு  நண்பர்களோடு பேங்காக் செல்லும் திட்டம் இருந்தது. நன்றாகக் குடிக்க வேண்டும். டைகர் ஷோ பார்க்க வேண்டும். இருநூறு ரிங்கிட்டுக்கு நாற்பத்து எட்டு மணி நேரம் தாய்லாந்துப் பெண் உடன் இருப்பாளாம். அவ்வளவு நேரம் அவளுடன் என்ன செய்வது என்றுதான் அவனுக்குக் குழப்பமாக இருந்தது. போதையிலேயே மூழ்கியிருந்தால் என்னவும் செய்யலாம் என நண்பன் சொல்லியிருந்தான். பட்டர்ஃபிளை என்றொரு வஸ்துவைப் பற்றிச் சொன்னான். விழுங்கிவிட்டால் வயிற்றில் பட்டாம் பூச்சி பறக்குமாம். என்னவாவது பறக்கட்டும். ஒரு வாரம் அலுவலகத் தொடர்பு இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே அவனின் முதல் திட்டம்.

“கத கெடைச்சிருச்சி. போலாமா?”

மாரி பாட்டிலைப் போட்டு உடைத்தார். கண்ணாடித் துண்டுகள் சிதறின. “கதையா? நா என்னா கதையா சொல்லுறேன். இது பொராணத்துல உள்ள கன்னி இல்ல. ஆங்காரா தேவத. அவ இன்னும் உள்ளார அழுதுகிட்டே இருக்காங்கறேன். நீ கதங்கற?”

மாரியின் குரல் நாலாபுறமும் படர்ந்து எதிரொலித்தது. போதை தலைக்கேறி கண்கள் சிவந்துள்ள அவரைவிட்டு சில அடிகள் பின்வாங்கி நின்றான். கைகால்கள் தொளதொளவென தளர்ந்து தொங்கின. தன்னால் ஓடமுடியாது என்றும் அப்போதே மயங்கி விழக்கூடுமென்றும் தோன்றியது. தூணை இறுக்கிப் பிடித்துக்கொண்டான். எது பேசினாலும் திக்கும் என்பதால் மௌனமாக இருந்தான்.

“கன்னி கழியாத ரெட்ட பொண்ணுங்க சாவு எஸ்டேட்டுக்கு ஆவாதுன்னு ஆளுக்கு கொஞ்சம் காச போட்டு சாமியாடி ஒருத்தன கூட்டியாந்தாங்க. நம்ம அங்காளம்மன் இருக்காள, அவ வருசா வருசம் அந்தாளோட ஒடம்புலதான் பூந்து கடாய் கழுத்த கடிச்சி ரத்தம் குடிப்பாளாம். ரொம்ப கெஞ்சன பெறகு சாமியாடிக்கிட்ட மட்டுந்தான் போலிஸ்காரன் பேசுனான். எளம் பசுவ பிரம்மச்சாரி ஒருத்தன் வெட்டி பலி கொடுத்தாதான் இந்த பெரச்சனையெல்லாம் தீருமுன்னு அந்த சாமி சொல்லிருச்சி. அன்னைக்கெல்லாம் ஐயாயிரம் வெள்ளி பெரிய காசு. கழுத்துல, காதுல இருக்கிறத வச்சி தோட்ட சனங்களே தட்சண கொடுத்தாங்க. ஒரு அமாவாசைக்குப் பலி கொடுக்குற சடங்கு நடந்துச்சி.”

“இங்கயா?”

“த்தோ. இந்த தூணோரம்.” ஒரு பீடியை எடுத்துப் பற்ற வைத்தார்.

மொத தோட்டம் மட்டுந்தான் பாதிக்குமுன்னு பேச்சு. ஆனா போவ போவ  ஊருல ஒன்னுமே சரியில்ல. தஞ்சோங் காரங் வயலெல்லாம் வறண்டு போச்சி. மழையில்ல. பாசிர் பெனாம்பாங் ஆத்துல மீன் கெடைக்கல. மினுக்கட்டான் பூச்சியெல்லாம் வீட்டுல குமியுது. “

போதையில் எல்லாரும் உண்மையைச் சொல்வார்கள் என்பதையெல்லாம் சரண் நம்பியதில்லை. சில சமயம் அது புதிய கற்பனைகளை உண்டாக்கும். உண்மையை மிகைப்படுத்தும். அவன் சிலந்திகளுக்குப் போதை வஸ்துவை கொடுத்து அதை வலை பின்ன வைக்கும் டாக்குமண்டரியைப் பார்த்துள்ளான். பல கோணங்களில்  அழகான வலைகளை உருவாக்கும். அதில் பூச்சிகளைப் பிடிக்க முடியாது. சிலந்தியும் வாழ முடியாது. ஆனால் அவை அழகானவை.

“நீ நம்பல இல்லையா. இந்த கோலாசிலாங்கூருல நாப்பது வருசத்துக்கு முன்னாடி வாழ்ந்தவய்ங்கள கேட்டுப்பாரு. அப்போ கிளாப்பா சாவிட் இல்ல. சுத்தீலும் கித்தா காடுதான். பலி கொடுக்குறப்ப யாரும் வரக்கூடாதுன்னு சொன்னாய்ங்க. ஒரு ஞாயித்துக்கெழம பூசாரி எளம் பசுவ தோட்டத்து பட்டியில தேடுனாரு,” புகை திட்டுத்திட்டாய் குவியவும் சரண் கூர்ந்து பார்த்தான். மாரி அழுவது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆஸ்த்துமா போல வாயால் காற்றை கனைத்து வெளியிட்டுக் கொண்டிருந்தார்.

“வந்தவன் பட்டியில இருக்கிற மாட்டோட சுழியெல்லாம் பாத்தான். என்னோட பொண்ணுக்கு கருநாகச் சுழி இருக்குன்னு புடிச்சிக்கிட்டான். அவ கழுத்தைச் சுத்தி மணிக்கயித்த கட்டுன மாதிரி சுழி இருக்கும். அதான் அதுக்கு அழகே. கெட்ட சுழியுள்ள மாட்டத்தான் பலி கொடுக்கணுமுன்னு அவள புடிச்சிட்டுப் போயிட்டான். தோட்டமே சேந்து என்னைய புடிச்சி அமுத்திக்கிட்டாய்ங்க. ஊருக்காக செய்யச் சொல்லி நாறப் பயலுக கால்ல உழுந்து கெஞ்சினாய்ங்க. எல்லாருமா சேந்து அவளுக்கு வெல கொடுத்தாய்ங்க. எவனுக்கு வேணும் காசு!” அவர் அழுவது என்னவோபோல இருந்தது. மெல்ல அருகில் சென்று தோளில் கைவைத்தான். “போய்ட்டே பேசலாம்,” என்றான். அவன் கை நடுங்குவதைத் தடுக்க முடியவில்லை.

“அன்னைக்கு யாருக்கும் தெரியாம நா எம்மவள பாக்க வந்தேன். கொசுக் கடியில சாயங்காலமே வந்து பொதருக்குள்ள ஒக்காந்துகிட்டேன். பூசாரி தனியாதான் அவளக் கூட்டி வந்தான்.  தோ இம்புட்டுதான் கொம்பு வளந்திருக்கும். கொய்யாக்கா கொடுக்கலனா அதாலயே செல்லமா குத்துவா. பாசக்காரி. அந்த இருட்டுல அவளோட ஒடம்பே வெள்ளியாட்டம் மின்னுச்சி. மறவா நின்னு பாத்துக்கிட்டு இருந்தேன். ஏதாச்சும் ஒரு சந்தர்ப்பத்துல அவளக் கூட்டிக்கிட்டு ஓடிடலாமுன்னு இருந்தேன். இல்ல அந்த ஆளோட கால்ல உழுந்து கெஞ்சலாமுன்னு நெனைச்சேன். அவ அழகா மால போட்டிருந்தா. பயத்துல சுத்தி சுத்தி பாத்தா. எல்லாமே அவளுக்கு புதுசு. என்னைய பாரும்மான்னு மனசு சொல்லுது. பாத்தா காட்டிக்கொடுத்துடுவாளேன்னு பதறுது. சாமி பூச போட்டுக்கிட்டே இருக்கான்.  நாலு கல்லுக்கும் பூ போடுறான். கருப்பு துணிய முழுசா சுத்தி சாமி கண்ண மறைக்கிறான். அப்பதான் அவ கத்துனா. நீ மாட்ட வளத்துருக்கியா?”

அவன் பலவீனமாக ‘இல்லையென’ தலையாட்டினான்.

“மாட்ட வளக்குற ஒவ்வொரு ஆம்பளயும் ஆத்தாதான். அது அழுதுகிட்டே கூப்புடுறப்ப மாருல பாலு சொரக்கராப்படி இருக்கும். எனக்கு அன்னைக்கு சொரந்துச்சி” அவர் அழுவதை அவன் தடுக்கவில்லை. தோளில் இருந்த கையை வலுவாக்கினான்.

“தல துண்டானதும் என்னா செஞ்சா தெரியுமா? அவ ஒடம்பு மட்டும் என்னையத் தேடி அலையுது. ஆத்தாள இப்பதான பாத்தோமுன்னு ரத்தத்தோட துள்ளிக்கிட்டு தேடுறா!” அவர் நெஞ்சில் அறைந்துகொண்டு அழுதார்.

“நா ஓடிபோயி புடிச்சிருக்கனும். நா இருக்கண்டி ஆயின்னு சொல்லியிருக்கனும். சொல்லல. பூச தீட்டாச்சின்னு சொல்லிப் போடுவாய்ங்க,” மூக்கைச் சிந்தி தூர வீசினார். சரணுக்கு மூச்சுவிடச் சிரமமாக இருந்தது. உள்ளுக்குள் ஏதோ பொங்கி வருவதை கமரியபடி அடக்கிக்கொண்டான்.

“எம்மவளோட ரத்தத்துல நனைஞ்ச கல்லுதான் அஞ்சாவது. அங்க இருக்குறதெல்லாம் என்னாங்கற… பூராவும் ஆம்பளைங்களோட பயம். குத்தத்தோட பயம். பயத்த கல்லாக்கி கட்டிப்போட்டு வச்சிருக்காய்ங்க!” அவர் சொல்லிவிட்டு எழுந்தார். சரணுக்கு இப்போது அவரிடம் நெருக்கம் கூடியிருந்தது. ஏதாவது ஆறுதல் சொல்ல வேண்டும்போல தோன்றியது. ஆனால் பேச்சு நீண்டால் மேலும் இருட்டிவிடலாம் என வந்த பாதையில் மாரியுடன் பின் தொடர்ந்தான்.

தரையை மட்டுமே பார்த்து நடந்தாலும் தோட்ட நிர்வாகம் எலிகளை அடக்க விட்டிருந்த ஆந்தைகளின் பறக்கும் ஓசை தூக்கிப்போட்டது. அவன் முன் நடந்து செல்லும் மாரியின் நிழலை மட்டுமே தரையில் பார்த்தபடி நடந்தான். பின்னால் ஏதோ நடந்து வருவதுபோலவும் அவன் கழுத்தை இன்னும் சற்று நேரத்தில் கைவைக்கக் காத்திருப்பது போலவும் உருவாகும் கற்பனைகளைத் தடுக்க முடியவில்லை. பின் கழுத்து சிலிர்த்துக்கொண்டே இருந்தது. அலுவலகக் கழிவறைக்குத் தனியாக இருட்டில் செல்லும்போதுகூட அவனுக்கு அப்படியான கற்பனைகள் வருவதுண்டு.

பயமாக இருக்கும்போதெல்லாம்  பிரச்சனையானவற்றை நினைத்தால் அவனுக்குப் பயம் மறந்துவிடுவதுண்டு. கைப்பேசியை ‘பிளைட் மூட்’டிலிருந்து மீட்டான்.  பதினேழு விடுபட்ட அழைப்புகளும் சில குறுந்தகவல்களும் எடிட்டர் லட்சுமி பெயரைக் காட்டின. கடைசியாக அனுப்பிய தகவலை மட்டும்  வாசித்தான். முதலில் என்ன திட்டியிருந்தாலும் அதுதான் இறுதி முடிவாக இருக்கும். எத்தனை மணியாக இருந்தாலும் அலுவலகம் வந்து கட்டுரையை முடித்துக் கொடுக்கச் சொல்லியிருந்தார். இப்போதெல்லாம் அவரது சின்ன அதிகாரத் தோரணைக்கூட அவனை கோபமாக்கியது. அவர்களுக்குள் எதுவுமே இல்லையென்பதுபோல காட்டும் பாவனை கடுமையாகச் சீண்டியது. மணியைப் பார்த்தான். அலுவலகத்தில் நுழையும்போது இரவு எட்டாகியிருக்கும். குற்றவாளியைப் போலப் பார்ப்பார். யாருமில்லாத நிசப்தத்தில் கூர்மையான எடிட்டர் லட்சுமியின் குரல் காதுகளைக் கிழிக்கும். சொற்களால் மனதைப் புண்ணாக்க நினைப்பார். அந்த மனநிலையில் கட்டுரை எழுதுவதே சங்கடமானது. ஆனாலும் அவனுக்குப் போகவேண்டுமென தோன்றியது. ‘ஓகே’ என பதில் அனுப்பிவிட்டுக் கைப்பேசியை அணைத்தான்.

வாயிலின் விளக்கொளியில் மோட்டார் சைக்கிளைப் பார்த்தபோதுதான் நிம்மதி வந்தது. வேகமாக முன்னேறி அவருக்கு பக்கத்திலே நடக்கத் தொடங்கினான். சுவாசம் இலகுவானது.

“நா புவனாவோட சாவ பத்திதான் எழுத நெனைச்சேன். ஆனா அதப்பத்தி நீங்க எதுவும் சொல்லவே இல்ல. அதுதான ஆறாவது கல்லு, அத யாரு நட்டா?” என்றான்.

“அதான் மொதல்லயே சொல்லிட்டேனே. எவனோ நல்லா செஞ்சி உட்டு ஏமாத்திப்புட்டான்னு? அவ கொளுத்திக்கிட்டா,” என்றார்.

தோட்டத்து வாயிலில் உள்ள பாதுகாவலர் அறையில் அசைவு தெரிந்தது. கொஞ்ச நேரத்திற்கு முன் இருந்த அச்சமெல்லாம் ஒன்றுமே இல்லையென நினைத்துக்கொண்டான்.

“அவங்கள கொன்னுட்டதாவும் பேச்சிருக்கே?”

“அத பத்தி என்னா? ஒருவேள அவள செஞ்சவனே கொளுத்திப் போட்டிருக்கலாம். கல்ல அவனே நட்டுருக்கலாம்,” மாரி எந்த உணர்ச்சியும் இல்லாமல் பேசினார்.

“போலிஸ் ரிப்போட்டுல அவங்க ரேப் செய்யப்படலன்னு சொல்லியிருக்காங்க இல்லையா?” என்றான்.

“அதெல்லாம் இப்ப எதுக்கு.  நீ நல்லபடியா போயி வேலையப் பாரு!”

“நா அதையெல்லாம் எழுதமாட்டேன். ஒங்களுக்கு ஏதும் தெரிஞ்சா சொல்லுங்க,” என்றான்.

“எழுதாம எதுக்கு?” மாரி நடையில் அவசரம் தெரிந்தது.

“சும்மா தெரிஞ்சிக்க,” என்றான்.

“நா இப்படியே நடந்து போயிடுறேன்,” அழுத்தமாகச் சொன்னார்.

விளக்கின் வெளிச்சம் உருவாக்கிய வட்டத்திற்குள் வந்ததும் கொஞ்சம் தைரியம் எழுந்தது. “பசுவ பலி கொடுத்த சாமி பிரம்மச்சாரி இல்ல. ஆனா அப்படி சொல்லி ஏமாத்திக்கிட்டு இருந்திருக்காரு. கல்யாணம் செய்யாம ஒரு பொம்பளய வச்சிருந்திருக்காரு. அவளுக்குப் பொறந்தவதான் புவனா. அவ செத்ததும் வெளிய சொல்லி அழ முடியாம சாமியாடியும் சீக்காயி செத்துட்டாருல்ல?”  

மாரி அவனை சாந்தமாகத் திரும்பிப் பார்த்தார். அவன் கண்களைக் கூர்ந்து நோக்கியவர் “எதுவுமே தெரியாதுன்னு மத்தியானம் சொன்ன?” என்றார்.

“அப்படினா சாமியாடிய பழி வாங்க யாரோ புவனாவ கொன்னதாவும் இருக்கலாம்!”

“நீ இந்த வளையத்துல மாட்டிக்க வேணாம் தம்பி. பேசாத போயிரு!” அவர் குரலிலும் பேச்சிலும் மதியம் பார்த்த மிடுக்கு இல்லை.

“பிரம்மச்சாரின்னு ஏமாத்தி ஒங்க பசுவயும் அவருதான கொன்னாரு?” கண்களைத் தீர்க்கமாகப் பார்க்கவும் அவர் விலகி நடந்தார்.

“சொல்லுங்க!” மீண்டும் எதிரில் வந்து நின்றான்.

மாரி அவனைக் கனிவுடன் பார்த்தார். அப்படி ஒரு பார்வை அவர் கண்களுக்குள் உண்டு என்பது சரணுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் தன் பசுவை அப்படித்தான் பார்த்திருப்பாரோ எனத் தோன்றியது.

“தெரிஞ்சிக்கிட்டா அத எப்பவாவது செஞ்சி பாக்க தோனும். மனசு ஆயிரம் காரணங்கொடுக்கும். அந்த கோயிலுக்கு ஆறு கன்னிங்க போதும்பா” என்றவர் விளக்கு உருவாக்கிய ஒளிவட்டத்தைக் கடந்தவுடன் மிக விரைவாகவே இருளுக்குள் சென்று மறைந்தார்.

புதிய சிறுகதைகள்

கழுகு

உச்சை

சியர்ஸ்

ராசன்

(Visited 2,942 times, 1 visits today)