கடிதம்: கன்னி

சிறுகதை:கன்னி

நவீன், கன்னி சிறுகதையை வாசித்தவுடன் எனக்கு திருப்பரங்குன்றத்தின் பின்புறம் உள்ள ஞாயிறுக்கிழமை கோயில் நினைவுக்கு வந்தது. சோழர்காலம் முதலே இருக்கும் சப்த கன்னியர் கோயில் தமிழகம் முழுவதுமே இருப்பதுதான். மாமல்லபுரத்திற்கு நீங்கள் வந்தாலும் பார்க்கலாம்.

சிறுகதையினூடே நீங்கள் சொல்லும் ‘ஒருவரி’ புராணத்தைத் தவிர்த்தும் பரவலாக அறிந்த மற்றுமொரு புராணம் உண்டு. சிவன் அம்பினால் காயமுற்ற அந்தகாசுரன் என்ற அசுரன் சிந்திய ஒவ்வொரு துளி உதிரமும் ஒரு அரக்கனாக மாற, அவர்களை அடக்க சிவன் தனது வாயைத் திறந்து தீ பொறியினால் ஒரு பெண்ணுருவைப் படைத்தார். மற்ற கடவுள்களும் இவ்வாறே செய்ய ஏழு மாதர் உருவாயினர் என்பதே அது.

‘கன்னி’ கதை அந்த மலேஷிய கோயிலுக்கான புனைவாக ஒரு புராணத்தை உருவாக்குகிறது. இந்த மலேஷிய கோயில் ஆண்களின் குற்ற உணர்ச்சியால் பெண்களுக்கு எழுப்பப்படும் கோயில். குற்ற உணர்ச்சி தொடர தொடர கோயிலும் வளர்கிறது. அந்த கோயிலுக்கு ஏழாவது கன்னியைக் கொடுக்கக்கூடியவன் சரண். புராணத்துடன் இணையான தேவியர்களைக் கொண்டபிறகு இது சப்த கன்னியர் கோயிலாக மாறும்.

சிறுகதையின் தொடக்கத்திலும் முடிவிலும் மாரி ஒன்றை அறிவதே அதை செய்யும் உந்துவிசை என்கிறார். சிறுகதையின் பின்னலை அறிந்துகொள்ள உதவும் வரி இது. பூரான்பட்டி பின்னலை போன்று மொத்த கதையையும் ஆதாரமாக இணைக்கிறது இந்த வரி. அஸ்லியின் கொடூரத்தை அறியும் மேனஜர் தன் மகளை கொல்கிறார். தன் கடவுளையும் கொல்லலாம் எனும் கொடூரத்தை அவர் அஸ்லி மூலம் அறிகிறார். போலிஸ்காரர் மேனஜரிடம் மகளைக் கொல்லலாம் என அறிந்துகொள்கிறார். போலிஸ்காரரிடம் பெற்ற தகவலால் சாமியாடி இன்னொருவர் மகளை (பசுவை) கொல்கிறார். மாரி, சாமியாடி மகளை கொல்கிறார். அறிதல் ஒரு தொற்று நோய்போல பரவுகிறது. இது பரவாமல் தடுக்க மாரி உண்மையை சரணிடம் மறைத்தாலும் அவனிடம் அறியும் ஆர்வம் குன்றவில்லை. அவன் அதை முழுமையாக அறியும்போது அதை செய்யும் காரணங்களையும் அடைவான். ஏழாவது கன்னியையும் உலகுக்கு வழங்குவான்.

சரண் – மாரி இருவரும் முரண்பட்ட மனிதர்கள். வன்மத்தின் அறிகுறி அவனிடம் வெளிபட்டாலும் அப்பாவியாகக் காட்டிக்கொள்கிறான். மாரி அன்புதோய்ந்த மனிதர். அதை சொற்களால் வன்மமாக காட்டி மறைக்கிறார். முடிவில் இருவரும் தங்கள் இயல்பு நிலைக்கு கொஞ்சம் கொஞ்சமாக செல்லக்கூடும்.

நவீன், வழக்கம்போல உங்கள் கதையின் பலம் மொழியும், வசனமும்தான். பசு இறக்கும் காட்சி உருக்கியது. எடிட்டர் லட்சிமிக்கும் சரணுக்கும் உள்ள இணக்கம் – பிணக்கத்தை இன்னும் தீவிரமாகக் காட்டியிருக்கலாம். வழக்கமான அலுவலக சிக்கலாக உள்ளது. ஆனால் கதை முடிவுக்குப் பின் மீண்டும் ஒருதடவை வாசிக்க வைத்தது.

ராம்


கன்னி கதையை வாசித்தேன். பாசம் நெருப்பைப்போல. நெருப்புக்கு ஈடாக இன்னொரு நெருப்பைத்தான் முன்வைக்கவேண்டும். அந்த அழுகுரலும் நெருப்பைப் போன்றதுதான். ஒன்றிலிருந்து ஒன்றென பற்றிப் பெருந்தழலாகி கனன்று கொண்டிருக்கிறது. அந்தப் பெருந்தழலில் வெம்மையை மாரி தன்னுள் இருத்திக் கொள்கிறான். பெண் வழிச் சமூகமாக இருந்த தமிழ்ச்சமூகத்தின் அடையாளமாகவே கன்னி வழிபாட்டைப் பார்க்க முடிகிறது.

கன்னியர்களின் அபோதத்தன்மையோடு தொடர்புபடுத்தப்படுகின்றனர். அதனாலே அவர்களின் இறப்பு மிக முக்கியமானதாகவும் தெய்வ நிலைக்குக் கொண்டு செல்லப்படுவதாகவும் உள்ளது. அதன் நீட்சியாக மலேசியாவிலும் அதன் கண்ணிகளைக் கண்டடைந்திருப்பது மரபு மீளாக்கமாக இருக்கிறது. இந்த வழிபாடுகளுக்குப் பின் உறைந்திருக்கும் ஆழமான பெண் வெறுப்பையும் தொட்டுக் காட்டப்பட்டிருக்கிறது. அந்த வெறுப்புணர்வினைப் பலியிட்டுத்தான் தெய்வங்கள் அமர்ந்திருக்கின்றன போலும்.

உயிர்ப்பான இயல்பான உரையாடல் இச்சிறுகதையின் பலம். மாரியின் பசு பலியிடலைப் பற்றிய உரையாடல் எல்லாம் சிறப்பாக அமைந்திருந்தன. தொட்டெழுப்ப காத்திருக்கும் தழலில் கைவைக்கிறான் சரண்.

அரவின் குமார்

(Visited 112 times, 57 visits today)