ஆர்.சண்முகம், ஆ.ரெங்கசாமி மற்றும் மரண ரயில்

ஆர்.சண்முகம்

அண்மையில் ஒரு பல்கலைக்கழக ஆய்வு மாணவர் என்னைச் சந்தித்தார். வரலாற்றில் ஆர்வம் உள்ளவர் என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். வரலாற்றை ஒட்டியே தனது ஆய்வு இருக்கப்போவதாகக் கூறிய அவர், மலேசிய வரலாற்று நாவல்களைச் சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகச் சொன்னார். என்னுடைய ‘பேய்ச்சி’ நாவல் வேண்டுமெனக் கேட்டார். நான் ‘பேய்ச்சி’ வரலாற்று நாவல் இல்லை எனச்சொன்னேன். தான் அந்நாவல் குறித்த விமர்சனங்களை வாசித்ததாகவும் அதில் லுனாஸில் நடந்த சாராய மரணங்கள் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன என்றும் கூறினார். இருக்கலாம், ஆனால் அந்த நாவல் அதன் பொருட்டு எழுதப்பட்டதல்ல. அதற்குள் வரலாற்றின் சில தருணங்கள் உள்ளன; ஆனால் அது வரலாற்று நாவலல்ல என விளக்கினேன். இருந்தாலும் வாங்கிக்கொண்டு சென்றார். என்ன ஆகுமோ என பயமாகத்தான் இருக்கிறது.

மலேசியாவில் ‘வரலாற்று நாவல்’ என்ற சொல்லாடல் ஆய்வுலகில் படும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல. கொலையாளியைக் கண்டுபிடிக்கும் துப்பறியும் தொடர் ஒன்றை எழுதிவிட்டு,  இடையில் கொலையாளி பயன்படுத்தியது ‘பரமேஸ்வராவின் கிரிஸ்’ என்றும் பரவேஸ்வரா யார் என்றும் கொஞ்சம் விளக்கும்பட்சத்தில் அது மலேசியாவில் வரலாற்று நாவலாகி விடுகிறது. வரலாற்று நாவலின் முன்மாதிரிகளையும் அதன் தன்மைகளையும் அறியாத சில ஆய்வாளர்கள் தங்கள் தேவைக்கும் அறிவாழத்திற்கும் ஏற்ப ஒருசில வார்த்தைகளை நாவலில் தேடுகின்றனர்.  சட்டையை முன்பே தைத்துவிட்டு பிள்ளையை அதற்குள் திணிப்பதுபோல அப்புனைவை அவர்கள் தங்களது ஆய்வுத் தலைப்புக்கு ஏற்ற வகைமைக்குள் அடக்கிவிடுகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, சில எழுத்தாளர்கள் தாங்கள் வரலாற்று நாவலை எழுதுவதாகவே நம்பி நன்கு அறியப்பட்ட வரலாற்றுப் பின்புலத்தில் தங்களுக்குச் சாத்தியமான எளிய வாழ்வை புனைவதும் உண்டு. புனைவின் தன்மைக்கு ஏற்ப வரலாற்று நாயகர்களும் அதில் பங்கெடுத்து சில வசனங்களைப் பேசிவிட்டுச் செல்வர். அந்த வசனத்துக்கும் அப்பாத்திரங்களின் பங்கேற்பிற்கும் வரலாற்றுத் தேவை எதுவும் இருக்காது. உதாரணமாக ‘வானத்து வேலிகள்’ (ரெ.கார்த்திகேசு) நாவலைச் சொல்லலாம். ஆங்கிலேயர் ஆட்சி, ஜப்பானியர் ஆட்சி என பல்வேறுபட்ட பின்புலங்களில் குணசேகரன் என்பவன் படித்து பணக்காரன் ஆவதுதான் கதை. அதில் துங்கு அப்துல் ரகுமான் அவ்வப்போது வந்து போவார். குணசேகரனுடன் பேசுவார். அன்றைய அமைச்சர் சாமிவேலுவும் ஒரு விருந்தில் கலந்துகொள்வார். இந்தக் கதாபாத்திரத்துக்குப் பதில் வேறு எவரையும் நாவலில் கொண்டு வரலாம். அதனால் கதை ஓட்டத்தில் எந்த மாற்றமும் நடந்துவிடப்போவதில்லை. வரலாற்றுப் பின்புலமும் உண்மை பாத்திரங்களும் வருவதாலேயே ஒரு புனைவு வரலாற்று நாவலாகி விடுவதில்லை.

தித்திக்கும் காதல் கதையை எழுதும் பொருட்டு ஆர்.சண்முகம் தன் புனைவை சயாம் மரண இரயில் பின்னணியில் வைத்த அபத்தத்தைதான்  வரலாற்று நாவலென கடந்த இருபத்து ஐந்து வருடங்களாக மலேசியாவில் சொல்லி வருகிறோம். தலைப்பே ‘சயாம் மரண ரயில்’ என இருப்பதால் மலேசிய நாவல் இலக்கியம் பற்றி பேசும்போதெல்லாம் அப்பெயர் வலுவாக உச்சரிக்கவும் படுகிறது. விமர்சன மரபில்லாத மலேசியத் தமிழிலக்கியச் சூழலில், இந்த நாவலின் பெயர் மறுபடி மறுபடி உச்சரிக்கப்பட்டு வாசிக்கப்படாமலேயே தன் ஆயுளை நீட்டிக்கொண்டே வருகிறது.

‘சயாம் மரண ரயில்’ எனப் பொதுவாக அழைக்கப்படும் தாய்லாந்து – பர்மா இரயில் பாதை, இரண்டாம் உலகப்போரில் போது கட்டப்பட்ட 415 கி.மீ  ரயில் பாதை. தாய்லாந்தையும் பர்மாவையும் இணைக்கும் நோக்கத்தில் ஜப்பானியர்களால் மேற்கொள்ளப்பட்ட இந்த ரயில் பாதை அமைக்கும் திட்டப்பணியில் ஏறக்குறைய 180,000 ஆசியத் தொழிலாளர்களும், 60,000 போர்க் கைதிகளும் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டனர். தாய்லாந்து, பர்மா வழியாக இந்தியா வந்து, இந்தியாவைக் கைப்பற்றி ஆசியா முழுமைவதையும் தன் வசப்படுத்த திட்டம் தீட்டியது ஜப்பான். அந்த நேரத்தில்தான் சுபாஷ் சந்திரபோஸ் காங்கிரஸை விட்டு விலகி இங்கிலாந்துக்கு எதிரணியில் நின்ற நாடுகளின் உதவியை நாடினார். அவரது இந்திய தேசிய இராணுவம் சிங்கப்பூரில் இருந்து இயங்கிக் கொண்டிருந்தது. இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்க்க ஜப்பானுடன் நட்புக்கொண்டார் நேதாஜி. ரப்பர் தோட்டத்தில் வேலை செய்தவர்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்தவர்கள், தோட்டங்களையும் வயல்களையும் கவனித்துக்கொண்டிருந்தவர்கள் என பல ஆயிரம் மக்கள் கடுமையான உடல் உழைப்பு வேலைகளுக்கு பல்வேறு பொய்களால் ஏமாற்றப்பட்டு கொத்தடிமைகளாக்கப்பட்டனர். நோயாலும் பசியாலும் விபத்தாலும் கொலைத் தண்டனைகளாலும்  ஆயிரக்கணக்கில் மக்கள்  இறந்துகொண்டிருக்க, தண்டவாளம் போடும் முயற்சியை நிறைவு செய்யும் தீவிரத்துடன் சாலைகளில் சென்று கொண்டிருந்தவர்களும் வலுக்கட்டாயமாகப் பணியவைத்து ரயில் பாதை போடும் வேலைக்குப் பிடித்துச்செல்லப்பட்டனர்.

இரண்டாம் உலகப்போரில் நடந்த மிகத் துயரமான மனித வதை இது. இந்த வரலாற்றைக் கூறுவதாக எழுதப்பட்ட ஆர்.சண்முகத்தின் நாவல் இன்றும் ஏதோ ஆவண நாவல்போல கவனப்படுத்தப்பட்டு வருகிறது. விக்கிபீடியா போன்ற தளம், இந்தக் கொடும் வரலாற்றை பதிவு செய்துள்ள பக்கத்தில், இந்நாவல் வரலாற்றை ஆவணப்படுத்தியுள்ளது எனப் பரிந்துரை செய்துள்ளதெல்லாம் அறியாமை.

மாயாகிருஷ்ணன் (மாயா) எனும் இளைஞன் ஜப்பானிய காலத்தில் ஏற்படும் பஞ்சத்தால் தோட்டத்தில் சிரமப்படுகிறான். சயாம் சென்ற தன் தந்தையைத் தேட வேண்டிய கடமை அவனைத்  துரத்துகிறது.  பஞ்சத்தின் காரணமாக வேறொரு ஆணுடன் சேர்ந்து வாழ்ந்தால் மட்டுமே இனி பிழைப்பது சாத்தியம் என்ற அம்மாவின் முடிவு அவனை வருத்துகிறது. சயாம் செல்லும் ரயிலில் ஏறுகிறான். அதிஷ்டவசமாக மாயாவுக்கு ‘கேபி’ பதவி கிடைக்கிறது. அப்பதவி உள்ளவர்கள் உடல் உழைப்பு வேலை செய்ய வேண்டியதில்லை. காலையில் தனக்கு கீழுள்ள நூறு தொழிலாளர்களில், வேலைக்குச் செல்பவர்கள் – செல்லாதவர்களின் பெயர்களைப் பட்டியல் போட்டு  மேலாளரிடம் கொடுக்க வேண்டும். பின்னர் வேலை முடித்து வருபவர்களின் பெயர்களைச் சரிபார்த்து மேலாளரிடம் கொடுத்தால், அவர் கணக்கிட்டு சம்பளம் கொடுப்பார். அதை தொழிலாளிகளுக்குப் பிரித்துக்கொடுக்க வேண்டும். ஆனால் மாயா எவ்வளவு தேடியும் அவனது அப்பா மட்டும் கிடைக்கவில்லை.

இவ்வளவு எளிமையான வேலையைச் செய்யும் இளைஞனுக்கு நேரம் அதிகம் இருப்பதால் அவனது இருப்பிடத்தை ஒட்டி உள்ள ஆற்றின் ஓரம் கடை வைத்துள்ள சயாம் இனப் பெண் மீது காதல் எழுகிறது. அவளுக்குத் தமிழ் தெரிகிறது. காரணம் அவளது தந்தை தமிழர். மாயா தனது கேம்பிலிருந்து கடைக்குச் செல்வதையும் சயாம் பெண்ணுடன் முயங்குவதையும் சிற்சில பொய்கள் கூறியும் சீண்டியும் அவளைக் கோபப்படுத்துவதையுமே கடமையாகக் கொண்டுள்ளான். இருவருக்கும் திருமணம் நடக்கிறது. பிரசவத்தில் அவன் குழந்தை இறந்தே பிறக்க மனைவி சோர்வடைகிறாள். பிற  பெண்களிடம் அவன் பேசுவதை விரும்பாதவள்,  அவன் வேறு பகுதிக்கு வேலை மாற்றலாகிப் போவதை எண்ணித் துடிக்கிறாள்; தடுக்கிறாள். அவன் மனைவியைத் தவிர வேறு யாரையும் ஏறெடுத்துப் பார்க்காதவன். எனவே மாதம் ஒருமுறை அவளை வந்து பார்த்துவிட்டுச் செல்கிறான். அதன் விளைவாக, இனி குழந்தை பிறக்காது என்ற மருத்துவர்களின் கூற்றெல்லாம் பொய்யாகி அவள் மீண்டும் கர்ப்பமாகிறாள்.

இதற்கிடையே மாயாவின் உடன்பிறவாத அண்ணனாக வரும் வேலுவுக்கும் படகு கடை வைத்துள்ள சயாம் பெண்ணுடன் நெருக்கம் ஏற்படுகிறது. உறவு கொள்கின்றனர். வேலு முரடர். மலேசியாவில் இருக்கும்போது ஒரு கைக்கலப்பில் கொலை செய்துவிடுகிறார். வேலுவைப் பழிவாங்க கொலையுண்டவரின் அண்ணன் மன்னார்சாமி சயாமுக்கு வருகிறார். இருவருக்கும் அவ்வப்போது புகைகிறது. இடையில் மாயாவின் காதலியைச் சீண்டிய மொட்டை சிங்காரம் என்பவனுடனும் வேலுவுக்குப் பகையாகிறது. ஒருசமயம் இருவரும் வேலுவுடன் சமாதானம் செய்துகொண்டு, அதற்கு சான்றாக சாராயம் குடிக்கின்றனர். சாராயத்தில் எதையோ கலந்துகொடுத்து வேலுவை மயக்கமுறச் செய்கிறார்கள். இதற்கெல்லாம் துணை நிற்பவர் ஒரு சயாம் பெண்ணை திருமணம் செய்துக்கொண்டு அசல் சயாமியன்போல வேடமிட்டு வாழும் ஒரு தமிழர்தான். வேலு கொல்லப்படுகிறார். உடல் கிடைத்தவுடன் குற்றவாளிகள் பிடிபடுகின்றனர். மொட்டை சிங்காரத்துக்கும் மன்னார்சாமிக்கும் உதவியவர் காணாமல்போன தன் அப்பா என அறிந்த மாயா அதிர்ச்சி அடைகிறான். அண்ணனைக் கொன்ற அப்பாவை காப்பாற்றாமல் மௌனிக்கிறான். குற்றவாளிகள் கொல்லப்படுகின்றனர். மாயா தனது சித்தியின் பிள்ளைகளை தன் சகோதரர்களாக ஏற்கிறான்.

ஜப்பான் சரணடைந்ததும் மீண்டும் மலேசியா செல்கிறான். அங்கே அம்மாவும் தம்பியும் மரணமடைந்தது தெரிய வருகிறது. தங்கை, தந்தை ஸ்தானத்தில் இருக்கும் முத்தையாவுடன் (அம்மாவைச் சேர்த்துக்கொள்ள விரும்பியவர்) தமிழகம் போய்விடுகிறாள். இனி மலேசியாவில் என்ன வேலையென மாயா மீண்டும் தாய்லாந்து சென்று பாங்காக் நகரில் தன் எஞ்சிய வாழ்நாளை குடும்பத்துடன் இன்பமாகக் கழிக்கிறான்.

நாவலைப் படித்து முடித்த பிறகு நாமும் சயாம் ரயில் போடச் சென்றிருக்கலாமே என ஏக்கம் தோன்றுவதைத் தவிர்க்கமுடியாது. வேலை நேரத்திற்குப் பிறகு பாட்டாளிகள் சயாமின் சிறுநகரங்களுக்குச் செல்கின்றனர். வேட்டையாடி விரும்பியதைச் சாப்பிடுகின்றனர். தேவையானவற்றை வாங்கிக்கொள்கின்றனர். உடல்நலமில்லாதவர்கள் வேலைக்குச் செல்ல வேண்டியதில்லை என்பதால் மாயா குழுவில் ஒருவர் நிரந்தர சமையல்காரர் ஆகிறார். அவர் வகைதொகையாக தன் குழுவினருக்குச் சமைத்துக் கொடுக்கிறார். வேலுவுக்கும் மாயாவுக்கும் கடை வைத்திருக்கும் சயாம் பெண்கள் நெருக்கமாகிவிட்டதால் அவர்களிடம் மலிவாகப் பொருட்களை வாங்கி கேம்பிலேயே குறைந்த லாபத்துக்கு விற்று லாபமும் அடைகின்றனர். ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் கடுமையான உடல் உழைப்புக்கு மத்தியில் எம்.ஜி.ஆர் ஓடி ஆடிப் பாடுவார் அல்லவா? மாயா இந்த நாவலில் அப்படியானவன்தான். அவனைச் சுற்றியே நாவல் சுழல்கிறது பின்னணியின் ரயில் பாதை அமைக்கும் கொடூரங்கள் மங்கலாகப் பதிவாகியபடியே வருகிறது.

நாவலில் பெரும்பாலோருக்கு தமிழ் பேசத் தெரிகிறது. அங்சாலா (மாயாவின் காதலி), பிணம் சுமக்கும் சீனர்கள், அவ்வப்போது சந்திக்கும் வெள்ளைக்காரர்கள் என அனைவருமே தமிழ்  அறிந்தவர்கள் என்று ஆசிரியர் கூறுகிறார். இடையிடையே ஆசிரியர் நாவலில் புகுந்து ‘அதை ஏன் அப்படிச் சொல்வார்கள் என்றால்’ என விளக்கமும் கொடுக்கிறார், ‘இதன் வரலாறு என்னவென்றால்’ என்று பாடம் நடத்துகிறார். ஏழாம் பாகம் முழுவதும் ஐ.என்.ஏ தோற்றம் தொடங்கி சயாம்- பர்மா ரயில் பாலம் போடுவதில் தமிழர்களின் தியாகம் வரை தனியாக ஒரு வரலாற்றுக் கட்டுரை எழுதி இணைத்துள்ளார். 

இக்கதை தண்டவாளம் போடும் களத்தில்தான் நிகழ வேண்டும் என்பதில்லை. ஒரு தோட்டத்திலும் நடக்கலாம். சாதாரண ஜனரஞ்சக நாவலில் வேறு இனப் பெண் என்பதால் காதலில் ஏற்படக்கூடிய சிறிய இடர்கள்கூட இல்லாமல்தான் இந்நாவலில் காட்சிகள் நகர்த்தப்பட்டுள்ளன. கதாபாத்திரங்களும் திட்டவட்டமான குணங்களுடன் நடமாடுகின்றனர். வறுமையும் கொடுமையும் மரணமும் அவர்களைத் துளியளவும் மாற்றவில்லை. முதல் சந்திப்பிலேயே மாயாவைக் கண்டதும் வெட்கப்பட்டுத் துள்ளி ஓடும் அங்சாலா கடைசி வரை அப்படியே வெட்கப்பட்டு ஓடிக்கொண்டே இருக்கிறாள். மாயா மேலும் மேலும் பதவி உயர்வு அடைந்து வளர்கிறான். வேலு கடைசி வரை வீரனாக இருந்து மடிகிறார். தோட்டத்தில் உள்ளதுபோலவே அங்கு வேலைக்குச் செல்லும் மக்களும் ஒருபுறம் சாராயத்தில் மூழ்கியிருக்கிறார்கள் என்றால், மறுபுறம் அடிக்கடி வந்துபோகும் சயாம் பாலியல் தொழிலாளிகள் மூலம் உடலின்பமும் பெறுகின்றனர். சீட்டாடுகின்றனர். உற்சாகத்துக்குக்  குறைவே இல்லை.

436 பக்கங்களைக் கொண்ட இந்த நாவல் 1993இல் எழுதப்பட்டது. இதை எழுதிய ஆர்.சண்முகத்தில் நடை சுவாரசியமானது. அது ஜனரஞ்சக எழுத்துக்கான நடை. ஆனால் தேர்ந்த நாவலாசிரியருக்கு இருக்கவேண்டிய பார்வையென அவரிடம் எதுவும் இல்லை. அடுத்து நடக்கப்போகும் திடுக்கிடல்களுக்கு மட்டுமே அவரது கவனம் உள்ளது. மற்றபடி நாவல் எனும் கலை வடிவத்துக்கு இருக்க வேண்டிய நுண்தகவல்களின் போதாமை, ஓராண்டு கொடும் வாழ்க்கையில் மனித மனம் அடைந்திருக்கக்கூடிய மாறுதல்களை உள்வாங்காத பார்வை, கூர்மையற்ற வசனங்கள் என முதிர்ச்சியற்று இந்நாவல் பதிப்பாகியுள்ளது. பெரும்பாலும் தகவல்கள் வசனங்களில் சொல்லப்படுகின்றன. சயாம் காட்டின் அடர்த்தியோ, அச்சமோ நாவலில் எங்குமே காட்சிப்படுத்தப்படாமல் தகவல்களைச் செருகுவதன் வழியே நாவலை நகர்த்தியுள்ளார் ஆசிரியர்.

 இதே சயாம் மரண இரயில் போடும் வரலாற்றைச் சொன்னதில் அ.ரெங்கசாமியின் ‘நினைவுச்சின்னம்’ மேம்பட்ட படைப்பு என்பேன்.

1943ஆம் ஆண்டு தோட்டத்தில் வாழ்ந்த தமிழர்கள் சயாமுக்கும் பர்மாவுக்கும் இடையில் இரயில் பாலம் அமைக்க விலங்குகளைப்போல மேல் கூரையில்லாத மொட்டை இரயில் வண்டிகளில் அடைக்கப்பட்டு இழுத்துச்செல்லப்படுவதிலிருந்து ‘நினைவுச்சின்னம்’ நாவல் தொடங்குகிறது. அதிகபட்சம் பதினைந்து பேர் மட்டுமே அமரக்கூடிய ஒரு பெட்டியில் முப்பது பேர் வரையில் அடைக்கப்படுகின்றனர். இரவின் குளிரும், பகல் புழுக்கமும், மழையின் சாரலும் உடலை வதைக்க வழி நெடுகிலும் மரணங்களைச் சந்தித்தபடியே நிகழும் நெடிய பயணம் அது. இரயில் பயணம் ஒரு கட்டத்தில் முடிய, ‘போம் போங்’ எனும் இடத்திலிருந்து இருவர் ஒரு அரிசி மூட்டையைச் சுமந்து செல்ல வேண்டும் என்ற கட்டளையோடு. அவர்களின் நடைப்பயணம் ஏழு நாட்கள் தொடர்கிறது. ஆங்காங்கே ஜப்பானியர்களால் கொடுக்கப்படும் புழுக்கள் நெளியும் உணவை நிராகரித்தபடியும் நிராகரிக்க முடியாத பசியில் சிரமப்பட்டு விழுங்கியபடியும் நகரும் அவர்களுக்கு ஒரு தருணத்தில் அது பழகிப்போக புழுக்களை பொறுக்கி எறிந்துவிட்டு உண்ணும் அளவிற்கு துயரம் பழக்கமாகிவிடுகிறது.

ஏறக்குறைய 150 பக்கங்கள் வரை இந்தக் கொடிய பயணத்தைப் பற்றியே சொல்லிச் செல்கிறார் ரெங்கசாமி. தாங்கள் சென்று கொண்டிருப்பது எங்கே என்றுகூட தெரியாமல் சந்தேகங்களோடும் பயங்களோடும் அவர்களுக்கே உரிய சின்னச் சின்ன கிண்டல்களோடும் பயணம் நெடுகிலும் தங்கள் இயலாமையை வெவ்வேறு உணர்வுகள் கொண்டு பூசி மூடியபடியே செல்கின்றனர் பாட்டாளிகள். நோயாளிகளும் முதியோர்களும் தொடர்ந்து நடக்க முடியாமல் தவிக்கையில் அவர்களைப் பாதை நெடுகிலும் விட்டுச்செல்லும் கொடும் பயணமாக அது அமைகிறது. சோர்ந்து நிற்பதும் தூங்க முயல்வதும் குற்றமாகக் கருதப்படுகிறது. இக்குற்றத்தைச் செய்பவர்கள் அடித்தே சாகடிக்கப்படுகிறார்கள்.

ஏழு நாள் பயணத்தின் பின் பாட்டாளிகள் வேலை செய்ய வேண்டிய இடத்தை அடைகின்றனர். ஏற்கனவே பல ஆயிரம் பேர் தங்கிச் சென்ற அல்லது மாண்ட பூத்தாயான (தங்குமிடம்) அதில் துர்வாடையும் மலத்தின் மிச்சங்களும் பிசுபிசுக்கின்றன. களைப்பில் வேறுவழியில்லாத பாட்டாளிகள் அதிலேயே உறங்குகின்றனர். கடுமையான மழைக்காலங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு பூத்தாய்க்கு கீழ்ப் பகுதியில் புதைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பிணங்கள் வெளியேறுகின்றன. அடுத்த நிமிடமே பிணத்தின் மேல் மிதக்கின்ற நிலமாக அது தோற்றம் தருகிறது.

ஜப்பான் மொழியைக் கற்றுள்ள தமிழர்களுக்கு மட்டும் சில விஷேட உதவிகள் கிடைக்கின்றன. மரணத்திலிருந்து தப்பவும் இந்த மொழி கைகொடுக்கிறது. இந்தச் சலுகையால் ஜப்பானியர்களோடு இணைந்து வேலை செய்யவும் அவர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கிறது. ஜப்பானியன் கூறுவதை மொழிபெயர்த்து பாட்டாளிகளிடம் தமிழில் கூறுவதே அவர்களின் தலையாய பணி.

ஏறத்தாழ மூன்று வருடங்கள் இந்தக் கொடுமையை அனுபவித்தவர்கள் ஆங்கிலேயர்களின்  ஜப்பானியர்களைத் தாக்கத் தொடங்கியதும் இறந்தவர்களையும் காணாமல் போனவர்களையும் மறந்துவிட்டு ஊர்  திரும்புகின்றனர். இரப்பர் காடு மீண்டும் அவர்களை வரவேற்கிறது.

நாவல் முழுதுமே இரத்தத்தின் வாடை பரவிக் கிடக்கிறது. அதிகாரம் எப்படியெல்லாம் காலம் தோறும் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதற்கு நாவல் முழுதும் வரும் சம்பவங்களையே உதாரணமாகச் சொல்லலாம்.

அ,ரெங்கசாமி

உழைப்பவர்களின் தலைகள் சதா மூங்கில் களிகளால் தட்டப்பட்டுக்கொண்டே இருக்கிறது. மழைக் காலங்களிலும் நனைந்தபடியே வேலை செய்ய வேண்டியிருக்கிறது. காலராவில் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இதற்கு முன் இறந்தவர்களின் பிணங்களோடு சேர்த்து அடுக்கப்படுகின்றனர். வேலையில் பழுதான உடல் பாகங்கள் எவ்வித கேள்வியும் இல்லாமல் இரம்பத்தால் அறுக்கப்பட்டு அகற்றப்படுகிறது. மரணத்தின் தீ நாக்குகள் நாலா புறங்களிலும் சுற்றிச் சூழ்ந்து பாட்டாளிகளைத் தீண்டிக்கொண்டே இருக்கிறது. மரணம் அனைவருக்கும் பழக்கமாகிறது. இன்றும் மரணம் நடக்குமா என்ற கேள்வி மெல்ல அழிந்து, இன்று இறக்கப் போவது யார் என்றே எல்லோர் வாயிலும் தொனிக்கிறது.

ஏறக்குறைய பாட்டாளிகள் இந்த நாவல் முழுவதும் சந்தேகங்களோடும் குழப்பங்களோடுமே வாழ்கின்றனர். தங்களைச் சுற்றி இவ்வாறு நடப்பதற்கான நியாயங்களையும் காரணங்களையும் அவர்கள் தேடுகின்றனர். தமது வாழ்வை தங்களால் தீர்மானிக்க முடியாமல் போகும் அவலம் நாவல் முழுதும் வியாபித்துள்ளது.

எனினும், ஒரு வரலாற்று நாவலுக்குரிய நியாயத்தை அ.ரெங்கசாமி ‘நினைவுச்சின்னம்’ நாவலில் செய்துள்ளாரா எனக்கேட்டால் இல்லையென்பதே பதில். அவர் சயாம் மரண இரயில் போடச் சென்ற தமிழ்ப் பாட்டாளிகளின் சோகக் கதைகளை மட்டுமே தொகுக்க முயன்றுள்ளார். வரலாறு என்பது ஒற்றைப்படையானது அல்ல. அதன் ஆசிரியர் நாவல் வழி பல்வேறு தரப்பினரின் மனங்களில் ஊர்ந்து செல்ல வேண்டுமே தவிர குறிப்பிட்ட ஒரு நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டு அதற்கேற்ப மொத்த வரலாற்றையும் கணிப்பது புனைவில் உள்ள ஒரு குறைபாடுதான்.

தண்டவாளம் போடச் சென்ற தமிழர்களுக்கு இவ்வாறான நிலை ஏற்பட்டதென்றால் அதே காலத்தில் ஐ.என்.ஏவில் சேர்ந்த தமிழர்கள் யார்? தண்டவாளம் போடச்சென்ற லட்சக்கணக்கான தமிழர்களால் ஏன் எங்குமே ஒன்று திரள முடியவில்லை? அவர்களைப் பிரித்து வைத்தது எது? நாவல் முழுவதும் அப்பாவிகள் எனச் சித்தரிக்கப்படும் தமிழர்கள் உண்மையில் அப்பாவிகள்தானா? வெள்ளையனைவிட ஜப்பானியன் கொடுமைக்காரன் எனும் கூற்றை முதலாளித்துவ சுரண்டல் X போர்க்கால அவசரம் ஆகிய இரு வேறு பின்னணியில் ஒப்பிடுதல் முறையா? அதே துன்பங்களை மலாய்க்காரர்களும் சீனர்களும் சயாமிய மக்களும் அனுபவித்தனர். எண்ணிக்கையில் அதிகமாக இருந்ததால் இக்கொடுமை தமிழர்களுக்கு மட்டுமே உரியதாகிவிடுமா? இத்தகைய கேள்விகள் எதுவும் ரெங்கசாமியிடம் இல்லை. அவரிடம் உள்ளது இறந்த தமிழர்கள் குறித்த ஒரு பரிதாப உணர்ச்சி. அதன்பொருட்டு அவர்களின் உழைப்பு வரலாற்றில் மறக்கடிக்கப்பட்ட சோகத்தை அவர் சொல்ல முனைந்துள்ளார்.

இருபத்தோரம் எண் கொண்ட இரயில் பெட்டியில் ஏறுபவர்கள்தான் நாவலின் முக்கிய பாத்திரங்கள். அவர்களின் உரையாடலின் வழியே நாவலை நகர்த்தியுள்ளார் ரெங்கசாமி. அவர்களின் பேச்சு மொழி பெரும்பாலும் நெறிப்படுத்தப்பட்டதாக உள்ளது. அவர்களின் வாழ்வும் அவ்வாறே உள்ளது. 1943க்கான பாட்டாளிகளின் மொழியாக என்னால் அதை கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. மரணமும் நெருக்கடியும் தொடர்ந்து மனித மனத்தை இப்படியா கட்டுக்குலையாமல் வைத்திருக்கும் என்ற கேள்வி நாவல் முழுதுமே எழுகிறது.

2005இல் வெளிவந்த ‘நினைவுச்சின்னம்’ 530 பக்கங்களைக் கொண்டது. ஆனால் 2005 வரையில் தமிழ் இலக்கியத்தில் நடந்த வளர்ச்சி, அதில் நடந்துள்ள மாற்றங்கள், பல்வேறு படைப்பிலக்கிய முயற்சிகள் என எதையும் உள்வாங்காமல்தான் அ.ரெங்கசாமியின் நாவல் மொழி உருவாகியுள்ளது.

வசனங்களில் நெறிப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌தொரு மொழியை ஆசிரிய‌ர் ப‌ய‌ன்ப‌டுத்துவ‌து போல‌வே பாட்டாளிக‌ளின் வாழ்வும் நெறிப்ப‌டுத்த‌ப்ப‌ட்டுள்ள‌து. ஒவ்வொருநாளும் ம‌ர‌ண‌த்தை எதிர்கொள்ளும் வாழ்வில் பாட்டாளிக‌ள் க‌டைப்பிடிக்கும் நேர்மையும், ஒத்துழைப்பும், விட்டுக்கொடுத்த‌லும் சாத்திய‌ம்தானா என‌க் கேள்வி எழுப்ப‌ வைக்கிற‌து. ஜப்பானிய‌ர்க‌ளின் கொடுமையிலிருந்து த‌மிழ்ப் பெண்க‌ள் கெட்டிக்கார‌த்த‌ன‌மாய் த‌ப்பிப்ப‌தும் த‌ங்க‌ளைத் த‌ற்காத்துக்கொள்ள ஜப்பானியர்களைக் கடித்து தாக்குவதும் அந்த‌ ம‌ர‌ண‌ பூமியில் எவ்வ‌கையான‌ சாத்திய‌ங்க‌ளைக் கொண்ட‌தென‌ குழ‌ப்ப‌மாக‌வே உள்ள‌து. ம‌ன‌மும் உட‌லும் ந‌ம்பிக்கையும் சிதையும் ஒரு பூமியில் ம‌னித‌னின் வாழ்வும் எண்ண‌மும் எத்த‌கைய‌ அப‌த்த‌ம் நிர‌ம்பிய‌தாக‌ இருக்கும் என‌ நினைக்கும்போது ஏற்ப‌டும் ப‌ய‌ங்க‌ர‌ம், நாவ‌லில் துளியும் இல்லை. ‘தமிழன்டா’ எனும் கோஷம் அவர்கள் மனதில் எழுந்துகொண்டே இருக்கிறது. அது ரெங்கசாமியின் கோஷம் என்பதால் நாவலில் எங்குமே ஒட்டாமல் உள்ளது.

சயாம் – பர்மா ரயில் பாதை அமைப்பது குறித்து எழுத்தப்பட்ட இவ்விரு நாவல்களிலும் காணப்படும் ஒற்றுமையாக, காரியத்தைச் செய்து முடிக்கும் தீவிரத்தில் ஜப்பானியர்களிடம் இருந்த கோரமுகத்தைச் சொல்லலாம். தலைவெட்டிகள் என அவர்களைப் பல இடங்களில் இரு நாவலாசிரியர்களும் சித்தரிக்கின்றனர். தங்கள் கட்டளைக்கு அடிபணியாவிட்டால் வாளை எடுத்து தலையைத் துண்டாக்கும் செயல் சர்வசாதாரணமாக நடந்துள்ளது. அதோடு காட்டை அழிக்கவும் நிலத்தைச் சமப்படுத்தவும் மட்டுமே தமிழர்கள் அதிகம் உழைத்துள்ளனர். தண்டவாளங்களை அமைப்பதை ஆங்கிலேயர்கள் செய்துள்ளனர். ஆனால் போர்க் கைதிகளாக இருந்த ஆங்கிலேயர்கள், அப்போது ஜப்பானுக்கு நேரடி எதிரிகளாக இருந்த சீனர்கள் ஆகியோரின் நிலை குறித்த விரிவான சித்திரங்கள் இல்லை. துரைகளாக இருந்தவர்கள் துன்பப்படுகிறார்கள் என மறுபடி மறுபடி தமிழர்கள் பார்வையில் மட்டுமே அவர்கள் கணிக்கப்படுகிறார்கள்.

மழைக்காலக் கொடூரங்கள், மலேரியா காய்ச்சல், பிணங்களை புதைக்கும் விதம், சீலைப்புழு தாக்கம் என இருநாவல்களிலும் பேசப்பட்டாலும் அ.ரெங்கசாமி அனைத்தையும் ஒருபடி மேல் சென்று வர்ணனைகளாக்குகிறார். உவமைகள் வழி காட்சிப்படுத்துகிறார். எனினும், தன் வாழ்வுடன் நெருக்கமான மழையையும் குளிரையும் வெயிலையும் காயங்களையும் வலியையும் வர்ணிக்க முடிகின்ற அளவுக்கு போர்க்காட்சிகளையும் தண்டாவளம் போடும் கொடும் பணிச்சுமையையும் உக்கிரமான குண்டுவெடிப்புகளையும் மனதிற்குள் நிகழ்த்திப் பார்க்க அவரால் முடியவில்லை. பாட்டாளிகளின் வாழ்வையும் வனத்தின் சூழலையும் நெருக்கடியான நிலையில் அவர்களின் சுய கைத்தயாரிப்புகளையும் எழுத்தில் நெருக்கமாகக் கொண்டு வர முடிகின்ற அவரால், போர்ச்சூழல் எனும் இன்னொரு கோணத்தில் இருந்து அச்சூழலை நெருங்க முடியவில்லை.

ஜப்பானியர்கள் கெட்டவர்கள். தமிழர்கள் அப்பாவிகள். ஆங்கிலேயர்கள் பரிதாபத்திற்குரியவர்கள் எனும் முன்முடிவுகளுடன் எழுதப்பட்டதால் வரலாற்று நாவல் ஆசிரியர்  ஒருவர், தன் புனைவின் வழி  அடையக்கூடிய வாழ்வின் தரிசனம் இரு நாவல்களிலும் கிடைக்காமல் போகிறது. இரண்டாம் உலகப்போரின் மிகப்பெரும் துயர வரலாற்றை எழுதும் ஆசிரியரிடமிருந்து திரட்டப்பட்ட தகவல்களுக்கு அப்பால், அவர்களாக அறிந்துகொண்ட தனித்த உண்மைகள் என்று நாவலில் எதுவும் இல்லாமல் இருப்பது ஏமாற்றமே. 

வரலாறு ஒரு ஜாதிக்கும், இனத்துக்கும், மதத்துக்கும் ஏற்றார்போல மடங்கி வடிவம் கொள்வதல்ல. வரலாற்றைக் கையிலெடுக்கும் ஓர் எழுத்தாளனுக்குத் தனிப்பட்ட முறையில் அவற்றில் பற்றிருப்பது குறித்து கேள்வி எழுப்ப வேண்டியதில்லை. ஆனால் அப்பற்றுடன் அவன் புனைவை அணுகும்போது முன்முடிவுகளுடன் கூடிய மழுங்கிய வாழ்க்கை மட்டுமே அவனுக்குப் புலப்படும். பலசிகரங்களைக் கொண்ட மலைத்தொடரின் பிரம்மாண்டத்தை அவனால் ஒருபோதும் தரிசிக்க முடியாது. அவன் மீண்டும் மீண்டும் சிலாகிப்பது அவனைப்போல சிலர் சேர்ந்து கொட்டி உருவாக்கிய மண் மேட்டை மட்டுமே. இங்குள்ள வாசகர்களும் அந்த எளிய மண்மேட்டை மலைகளாக வியந்துகொண்டிருக்கும் வரை மலேசிய நாவல் இலக்கியத்தில் மாற்றம் ஒருபோதும் நிகழாது.

மலேசிய நாவல்கள் விமர்சனம் :

செலாஞ்சார் அம்பாட்: புனைவின் துற்கனவு

ரெ.கார்த்திகேசு நாவல்கள்: மெல்லுணர்ச்சிகளின் பூஞ்சணம்

எம்.ஏ.இளஞ்செல்வன் நாவல்கள் : பாலுணர்வின் கிளர்ச்சி

செம்மண்ணும் நீல மலர்களும்

துயரப்பாதை: நெடுநாள் உயிர்த்துள்ள நெகிழிப்பூ

இலட்சியப்பயணம்: சென்று சேராத முன்னோடி

(Visited 919 times, 1 visits today)