அன்பான நவின், கன்னி சிறுகதையை வாசித்தேன். இன்றைய எழுத்துகளில் நிலமே இல்லையா என ஏங்கி போயிருக்கும் என் போன்றவர்களுக்கு இதுபோன்ற சிறுகதைகள் வாசிப்பு சுவையை கொடுக்க கூடும்.
பேய்ச்சிக்கு பிறகு நான் வாசிக்கும் உங்கள் புனைவு இது. நுட்பம் உங்கள் எழுத்தின் பலம். பசையை (அது போதை வஸ்துவா?) உட்கொண்ட பின் பைக்கை பூட்டியதை ஆட்டிப்பார்க்கும் சரணின் குழப்ப நிலை தொடங்கி அதை அதிகம் உண்ட மாரி, பெண்கள் மரணம் நிகழ்ந்த ஆண்டை மறப்பதும் மானேஜர் பெண்ணுடைய பெயரை நினைவு படுத்திக்கொள்ள கடவுளின் பெயரைக் கேட்பதும் நுட்பமான சித்தரிப்பு. போதையில் ஒன்றைக்கொண்டே பிரிதொன்றை நினைவுக்குக் கொண்டு வர முடியும். (எல்லாம் அனுபவம்தான்)
எடிட்டர் லட்சுமி கதாபாத்திரத்திற்கு இரண்டு தேவை உண்டு. ஏழாவது கன்னியாக அவர் தோன்றுவார் என்பது ஒன்றென்றால் அவர் வழியாக மட்டுமே சரணை நம்மால் அறிய முடிகிறது. அவன் பயம், பதற்றம், காமம் எல்லாமே எடிட்டர் வழி வெளிபடுகிறது. எவ்வளவு எளிய மனிதன். நன்றாக பார்த்தால் இந்த எல்லா கொலைகளும் எளிய மனிதர்களால்தான் நடத்தப்படுகிறது. அவர்கள் தொழில்முறை கொலைகாரர்கள் இல்லை. போலிஸ்காரர்கூட சிக்கல் தீர ஊர் விட்டு வரும் அளவுக்கு மென்மையானவர்தான். ஆனால் இவர்களுக்குள் கொலை ஆசை பற்ற அதை அறிவதே காரணமாக உள்ளது.
முன்பு ஒரு ஆங்கில கதை வாசித்துள்ளேன். தவறி கையில் கிடைக்கும் துப்பாக்கியை வீச சொல்லி இரண்டாம் உலக போரில் பங்கெடுத்த முன்னாள் இராணுவ வீரன் வலியுறுத்துவான். அவன் துப்பாக்கியின் அபத்தம் குறித்து சொல்வான். அது தன்னை உபயோகிக்கத் தூண்டும் என்பான். அந்த இளைஞன் அவனை நோக்கியே துப்பாக்கியைப் பயன்படுத்துவான். கதை முழுவதும் துப்பாக்கியால் இராணுவ வீரன் செய்த கொலைகள் சொல்லப்படும். அந்த தூண்டுதலே அந்த இளைஞனை அதை செய்துப்பார்க்க வைக்கும். இந்த சிறுகதையும் அவ்வாறான ஆதார குணம் கொண்டது.
தெரிவதால் ஒன்றை செய்துப்பார்க்கின்றனர். அதற்கான காரணங்களை கட்டமைக்கின்றனர். எந்த காரணத்திலும் நீதி இல்லை. கொல்லப்படுவது பெண்கள். தவறு செய்யாதவர்கள். அப்படியானால் எடிட்டர் லட்சுமியும் தவறு செய்யாதவரே. சரண் அவரை தவறாக எண்ணியிருக்க வாய்ப்புண்டு என்ற வாசிப்புக்கும் வாசல் திறக்கும் சிறுகதை இது. தொடர்க நவீன்.
ஶ்ரீபாலா
வணக்கம் அண்ணா ??
நலம் மலர்க…?
கன்னி சிறுகதையை வாசித்தேன்… மிகத் துல்லியமான விவரிப்புகளின்வழி மையக்கதையின் உயிரோட்டத்தில், அதன் ஊடே இழைந்து வரும் இன்னொரு உபகதையைச் சொல்லும் யுக்தி அபாரம் அண்ணா… இந்தச் சிறுகதை பல விவரங்களைக் கொண்டு அடர்த்தியாக நிற்கிறது… கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல், ஒவ்வொன்றையும் பூரணமாய்க் காட்சிபடுத்தியுள்ளீர். நாளிதழ் துறையில் உள்ள அரசியல்கள், அதன் மீதுள்ள விமர்சனங்கள் என வாசிக்கும்போதே ஏதொன்றும் மனதில் “இது போதவில்லையே” என்ற எண்ணம் எழாத வண்ணம் கவனமாய்ப் படைத்துள்ளீர்…
மாரி-யின் பாத்திரப்படைப்பு மிக மிக எதார்த்தமாய் வந்துள்ளது. அவர் குறித்த அக புற விவரிப்பு, மாரி என்ற மனிதரை முற்றிலுமாய்க் காட்சிபடுத்திக் கதையை வாசிக்க வகை செய்கிறது.
தொடர்ந்து நீங்கள் எழுதிவரும் சிறுகதைகளை வாசித்து வருவதால், எல்லா கதையிலும் கையாண்டுள்ள மையக்கதையைத் தாண்டிய இன்னொரு கதையின் வெளிச்சம் எனக்கு விடுகதைக்கு விடை காண்பது போல சுவாரசியமளிக்கிறது.
ஒன்றைச் செய்து பார்க்க மனம் முன்னிறுத்தம் பல்வேறு காரணங்கள், அத்தருணச் செயலுக்கான ஆக்கச் சக்தியாக அமைந்துவிடுகின்றன. செய்தபின், மனிதன் அதிலிருந்து தப்பித்துக்கொள்ளவும் மன இறுக்கத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளவும் வழி அமைத்துக்கொள்கிறான்.. நியாயப்படுத்துதலையும் வெற்றி கொண்ட மனசாட்சி அங்கே தலையோங்கி நிற்கிறது. இந்தக் கோயிலுக்கு 6 கன்னிகள் போதும் என்ற கூற்றும், இதெல்லாம் ஆண்களின் பயம் என்ற கருத்தும் மாரியின் மன இருப்பைப் பட்டும்படாமல் சொல்லிச் செல்கின்றன. இந்தக் கதை மாரியின் வழி நல்ல தெளிவினைத் தந்து செல்கிறது…
நெஞ்சார்ந்த நல்வாழ்த்து அண்ணா ??
ஹரிராஸ்குமார் ஹரிஹரன்