உண்டி முதற்றே உணவின் பிண்டம்

தன் வீட்டில் கூடு கட்டி மூன்று குஞ்சுகள் பொரித்த குருவிகளுடனான அனுபவம் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் நான்கு பதிவுகள் எழுதியிருந்தார். அதுவே என் வீட்டில் குருவிகள் கூடு கட்டியிருந்தால் நான் சிறந்த சமையல் குறிப்புகளை வழங்கியிருப்பேன் என முகநூலில் சொல்லப்போக நண்பர்கள் சிலர் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தார்கள். கிராதகா, பாதகா என வாட்சாப்புகள் வந்தன. இப்படியெல்லாம் விளையாடலாமா என அறிவுரைகள் வேறு. நான் விளையாடவில்லை உண்மையைத்தானே சொன்னேன் என அப்பாவியாய் சொல்லப்போக ‘அடப்பாவி’ என மீண்டும் வசைகள். 

அது என்னவோ உணவின் மீது உள்ள பிரியம் என் வாழ்வில் குறைந்ததே இல்லை.

ஆரம்பப் பள்ளியில் பயிலும்போது காலைப் பசியாறல் என்பதே சலிப்பானதாக இருக்கும். மறுபடி மறுபடி ரொட்டியும் தேநீரும் கொடுத்து சாகடிப்பார்கள். தாவார் ரொட்டியை தேநீரில் நனைத்து வாயில் வைக்கவே கடுப்பாக இருக்கும்.  சில சமயம் அம்பாட் செகி ரொட்டி (Hup Seng) கொடுப்பார்கள். அது சீக்கிரத்தில் ஊறாது. தேநீரில் தொட்டுச் சாப்பிடுவதில் எனக்குப் பிடித்தது டைகர் பிஸ்கட். ஆனால் அதைச் சாப்பிட கொஞ்சம் நுட்பம் வேண்டும். நன்கு ஊறிவிட்டால் தேநீருக்குள்ளேயே பாதி பிஸ்கட் மூழ்கிச் செத்துவிடும். சில சமயம் வாய் வரை எடுத்துவரும்போதே பிட்டுக்கொண்டு சட்டையில் விழுந்து அழுக்காக்கிவிடும்.

மாமா சிங்கப்பூரில் செய்த வேலையை விட்டுவிட்டு எங்களுடன் கம்பத்தில் தங்கத் தொடங்கிய பிறகுதான் வித்தியாசமான உணவுகள் கிடைக்க ஆரம்பித்தன. ஒருவகையில் என் உணவின் மீதான ஆர்வத்தை மாமாதான்  வளர்த்தார்.

அவர் ஒவ்வொரு  சனிக்கிழமையும் தாய்லாந்துகாரன் ஒருவன் விற்கும் சோற்றுப் பொட்டலம்  வாங்கி வருவார். அவன் என்ன கலந்து குழம்பு வைப்பானோ தெரியாது அத்தனை மணம்; அத்தனை ருசி. வீட்டில் உள்ள பழைய சோற்றையும் அதில் கலந்து மெதுவாக ருசித்துச் சாப்பிடுவேன். சோற்றைக் கலக்கும்போது கவனமாக இருக்கவேண்டும். அதிகம் கலந்துவிட்டால் ருசி குறைந்துவிடும். எனவே அளவோடு சேர்க்க வேண்டும்.

கொஞ்ச நாட்களில் மாமா மெல்ல மெல்ல சீன உணவுகளை அறிமுகப்படுத்தினார். kung fu chow, mee curry, wan tan mee என ஒரு சுற்று வந்தேன். இதெல்லாம் இரவு நேர குளிருக்குச் சாப்பிட நன்றாக இருக்கும். ஆம்! உணவு என்பது நாக்குடன் மட்டும் சம்பந்தப்பட்டதல்ல; அது சீதோஷன நிலை மற்றும் அப்போதைய மன உணர்வையும் சார்ந்தது. கவலையான நேரங்களில் kuih chang அல்லது பூலோர் வகைகளைச் சாப்பிட்டால் மனதிற்கு நிம்மதியாக இருக்கும். அது பிசுபிசுவென ஒட்டும்போது லாவகமாக மென்று கைவிரல்களைச் சப்புகையில் கவலையும் சப்பிக்கொண்டு போய் விட்டிருக்கும். மகிழ்ச்சியான நேரங்களில் மீ சூப் வகைகள் சிறந்தவை. ஸ்ரூப் என இழுக்கும்போது உள்ளே குட்டி நாகம்போல பாய்ந்து சென்று பதுங்கிவிடும்.

நான் செட்டிக் கம்பத்தில் இருந்தபோது மூன்று மீ வகைகள் (noodles) மிகப் பிரபலம். முதலாவது  மோட்டார் சைக்கிளில் வரும்  லக்சாகாரர் (laksa). எப்போதாவதுதான் வருவார். எனவே அவர் வருகையை அறிவிக்கும் ஹாரன் சத்தத்துக்குக் காதுகளைத் தீட்டி வைத்துக் காத்திருக்க வேண்டும். (காமம் போலவே உணவுக்கும் ஐம்புலன்களும் உற்சாகமாகச் செயல்படும் தன்மை கொண்டது) அவர் ஒரு மலாய்க் கிழவர். மோட்டாரின் பின்னால் பலகையால் ஆன ஒரு பெட்டி செய்திருப்பார். அதை பின்பக்கம் திறந்து லக்சாவிற்குத் தேவையானவற்றை வெட்டித் தயாரித்து நாம் கொடுக்கும் குழி மங்கில் நிரப்பிக்கொடுப்பார். பெரும்பாலும் நான்தான் குழி மங்குடன் ஓடிப்போய் நிற்பேன். அடுத்தது  கொய்தியாவ் சூப் கடை. அது கம்பத்துக்குள்ளேயே இருந்தது. ஒரு சீனக் குடும்பம் நடத்தி வந்த கடை அது. வஞ்சகமில்லாமல் சூப்பில் கோழித் துண்டுகளை வாரி போடுவார்கள். அதனாலேயே அங்கு அமர முடியாத அளவுக்குக் கூட்டம் நிரம்பி வழியும். மூன்றாவது லுனாஸ் டவுன் ஓரமாக இருந்த wan tan mee கடை. மதியம் மூன்று மணியானால் கடையில் கூட்டம் நிறைந்திருக்கும். சீனர்களின் பாரம்பரிய தயாரிப்பான wan tan இந்தக் கடையில் இறால், கோழி, பன்றி என பொரித்தும் அவித்தும் கிடைக்கும். இன்றும் அது தனது வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக்கொண்டுள்ளது.

மீ கடைகளைத் தவிர லுனாஸ் வாத்துச்சோறு கடைக்குப் புகழ் பெற்றது. எனக்குப் பதினாறு வயதாக இருக்கும்போதே என் நண்பர்கள் சிலர் அங்கு பகுதி நேரமாக வேலை செய்தனர். வெளிநாடுகளில் இருந்து வந்து அங்கு வாத்துக் கறி சாப்பிடுவதை அவர்கள் ஆச்சரியமாகக் கூறுவார்கள். அப்போதெல்லாம் அதை வாங்கிச் சாப்பிட பணம் இருக்காது. எனவே கொஞ்ச நாட்கள் இருக்கட்டும் என விட்டு வைத்தேன்.

அந்த வயதில் உணவுகளைவிட மாமிசங்கள் மீது அதிக ஈடுபாடு வந்திருந்தது. பக்கத்து வீட்டுக்காரரான கொய்தியாவ் மணியம் வேட்டைக்குப் பிரபலமானவர். அவருக்கு இரு பேரன்கள். ஒருவன் பெயர் கமல். மற்றவர் சங்கர். ஏன் உன் பெயரை கமல் என வைத்தார்கள் எனக்கேட்டபோது, வெள்ளைத்தோலுடன் பிறந்ததால் கமல் என வைத்துவிட்டார்கள் என்றான். வேட்டையில் பல்வேறு விலங்குகள் கிடைக்கும். காட்டுக்கோழி, உடும்பு, அலுங்கு என எதையும் விட்டுவைப்பதில்லை. வேட்டையாடி உண்பதென்பது நம்மை மிருகமாகக் கற்பனை செய்ய உதவும். ஒரு உடும்பை துரத்திக்கொண்டு ஓடும்போது நாமும் ஒரு வேட்டை நாயாக மாறிவிடுவோம். அந்த வெறியில் அப்படியே வேட்டையாடிய விலங்கைக் கடித்துத்தின்றுவிடலாம் என வெறியேறும். உடும்பின் வாலைப் பிடித்துச் சுருட்டி அதன் தலையை டமார் என தரையில் அடிக்கும்போது ஏற்படும் ஆனந்தம் கொஞ்சமானதல்ல.

அந்தக் காலப்பகுதி உற்சாகமானது. உடல் என்பது எந்த வலியையும் தாங்கக்கூடியது என நான்  நம்பியிருந்த காலம் அது. என் வீட்டின் முன் பரந்த நிலத்தில் சிராய் செடிகள் நட்டு வைக்கப்பட்டிருந்தன. அதன் இலைகளில் சுனை இருக்கும். வேகமாக ஓடி அந்தப் புதர்களில் தாவி விழுவேன். கைகால்களில் ஏற்படும் கீறல்கள் உற்சாகம் கொடுக்கும். குளிக்கும்போது ஆங்காங்கு எரிச்சல் தொடங்கும். வலியை ஏற்கத் தெரிந்தால் மட்டுமே வலியைக் கொடுக்க முடியும் என நம்பினேன். மனம் எந்த நேரமும் ஒரு வேட்டை விலங்குபோலவே செயல்படும். பள்ளியில் படிகளில் இறங்காமல் மேலிருந்து பன்னிரெண்டு படிகளைத் தாண்டிக் குதிப்பேன். ஆசிரியர்களை எதிர்க்கும் திமிரையெல்லாம் காடு எனக்குள் உருவாக்கிக்  கொடுத்தது.

கமல்தான் எனக்குப் பறவைகளைத் தின்னச் சொல்லிக் கொடுத்தான். அவன் என்னைவிட சிறியவன். பள்ளிக்கே போகாதவன். எப்போதும் வெற்றிலை மென்றபடி இருப்பான். ஆனால் நல்ல உளவியல் மேதையாக இருக்க வேண்டும். நான் மறுத்தபோது ‘கோழியெல்லாம் திங்கிற. அதுக்கும் ரெக்கதான இருக்கு’ என்றான். கொஞ்சநாட்கள் லஸ்டிக்குடன் பறவைகளை வேட்டையாடினோம். ஒருமுறை லஸ்டிக்கின் ரப்பர் அறுந்து கன்னத்தில் பளார் என அறைந்தபோது அதைத் தொடுவதை விட்டுவிட்டேன். 

கொஞ்ச நாளிலேயே லுனாஸ் முழுவதும் உள்ள உணவகங்களில் நான் நன்கு அறிமுகமாகியிருந்தேன். இப்போது சென்றாலும் அதில் பலர் என்னை நினைவு வைத்திருந்தனர். ‘ஒரு வாடிக்கையாளனுக்குக் கடைக்காரரைத் தெரிந்து வைத்திருப்பது பெருமையல்ல. கடைக்காரர் தனித்து வாடிக்கையாளனை அறிந்திருக்க வேண்டும்’ என லுனாஸுக்குப் போகும்போதெல்லாம் என் நண்பன் சரவணனிடம் சொல்வேன். அவன் அங்குதான் இன்றளவும் வாழ்ந்தாலும் கடைக்காரர்களுக்குப் புதியவன்.

அம்மாவைப் பொறுத்தவரை கோழியைத் தவிர வேறு எந்த மாமிசமும் வீட்டுப் பக்கம் வரக்கூடாது. குறிப்பாகப் பன்றி இறைச்சி வந்தால் கடுப்பாகி விடுவார். சீனப்பன்றி அசுத்தமானது என திரும்பத் திரும்ப எனக்குப் போதிக்கப்பட்டது. நான் பன்றி இறைச்சியின் மீது ஈடுபாடாக இருந்ததால் அந்தப் பித்தைப் போக்க நேராகவே பன்றி பன்னைக்கு என்னை அழைத்துச் சென்றார்கள். வெட்டியபோது பத்துக்கு எட்டு பன்றிகளின் வயிற்றில் சலம் ஒழுகியது. அதன் எடையை அதிகரிக்க கொடுக்கப்பட்ட தீனியில் கலக்கப்படும் மண்ணும் கல்லும் அதன் வயிற்றுக்குள் புண்களை ஏற்படுத்தியிருந்தன. எல்லாம் வியாபாரிகளின் தந்திரம். அதைப் பார்த்த சில வருடங்கள் பன்றியைத் தொடாமல் இருந்தேன்.

ஒருமுறை பாலித் தீவுக்குச் சென்றபோது அந்த ஊரின் சிறப்புணவு என்ன என்று கேட்டேன். அது இந்துக்கள் அதிகம் வாழும் தீவு என்பதால் வழிகாட்டி சொல்லத் தயங்கினார். நான் வலியுறுத்திக் கேட்டவுடன்  Babi Guling என்றார்கள். அதை இந்துக்கள் சாப்பிடுவதில்லை என்றார். நான் கடையை நோக்கி விடச்சொன்னேன். ஒரு முழுப் பன்றியை இரண்டு கால்களில் நிற்க வைத்து நெருப்பில் வாட்டிக்கொண்டிருந்தார்கள். ‘என்னைய தூக்கிக்கோ’ எனப் பன்றி மென்புன்னகையுடன் கைகளைத் தூக்கி அழைப்பது போல இருந்தது. அதன் வயிற்றுப்பகுதியினுள் விசேஷமாகத் தயாரிக்கப்பட்ட கலவைகள் திணிக்கப்பட்டு நறுமணம் பரப்பிக்கொண்டிருந்தன. பன்றியைச் சாப்பிடும் மனத்தடை அன்றோடு அகன்றது. இப்படி எந்த ஊருக்குச் சென்றாலும் அந்த ஊரின் உணவெதுவோ அதை தேடிச் சாப்பிடுவது வழக்கமானது.

படிவம் நான்கை முடித்தபோது மாமா தொடங்கிய (இவர் முன்பு சொன்ன மாமாவின் அண்ணன். மண்டை ஓடி எனும் கதையில் வருபவர்) உணவகத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். மீ கோரிங் போடும் நுணுக்கமும் தே தாரிக் கலக்கும் ரகசியமும் அவர் வழி புரிந்தது. கொஞ்ச நாட்களில் வாடிக்கையாளர்கள் என்னை மீ கோரிங் பிரட்டச் சொல்லும் அளவுக்குப் பிரபலம் அடைந்தேன். சமைப்பது ஒரே மாதிரி திட்டமிட்டு உருவாகும் கலையல்ல. அது கண்களால், மூக்கால், சுவையை அளந்து அளந்து வடிவமைப்பது. நாவுக்கு வரும் முன்பே அதன் சுவையைப் பார்வையால் அளக்க முடிபவனே நல்ல சமையல் கலைஞன். படிப்படியாக பலவகையான ஃபிரைட் ரைஸ் செய்யவும் மீகூன், கொய்தியாவ் கோரிங் போடவும் அனுமதி கிடைத்தது. வயதுடன் சேர்ந்து நாக்கும் வளர்ந்தது.

ஆடிய காலும் பாடிய வாயும் மட்டுமல்ல; சமைத்த கையும் சும்மா இருக்காது. கற்ற கலையை விடுமுறை முடிந்த காலங்களில் வீட்டில் செய்து பார்த்தேன். சமைப்பதற்கு முன் உள்ள உற்சாகம் முடிந்த பிறகு இருப்பதில்லை. அடுப்படியை அசுத்தமாக்குகிறேன் என புகார்கள் எழுந்ததால் சமையல் கலை ஆர்வத்தை குறைத்துக்கொண்டேன். கையில் காசு இருந்ததால் வாத்துக்கறி உட்பட கெடா, பினாங்கு மாநிலங்களில் பிரபலமான உணவுகளை வஞ்சகமில்லாமல் சாப்பிட்டேன்.  செண்டோல், நாசி கண்டார், பசும்போர், பூலோட் ஊடாங் என எங்கெல்லாம் உணவுக்கு மனிதர்கள் வரிசையில் நிற்கிறார்களோ அங்கெல்லாம் நானும் நின்றிருக்கிறேன். சில நாசி கண்டார் நள்ளிரவு பன்னிரெண்டு மணிக்குத் தொடங்கும். சில செண்டோல் கடைகள் ஞாயிறு மட்டுமே திறக்கும். எல்லாவற்றுக்கும் ஒரு காலப்பட்டியல் உண்டு. Information is wealth.

இடையில் மாமா திருமணம் செய்தார். அத்தையின் அப்பாவும் வேட்டைக்காரராக இருந்தது என் அதிஷ்டம். நாம் ஒன்றில் உண்மையாக ஈடுபட்டால் இயற்கை நமக்குத் துணையிருக்கும் என ஞானிகள் சொன்னது உண்மைதான். அவரிடம் துப்பாக்கி இருந்தது. எனவே காட்டுப்பன்றி வேட்டை லெங்கோங் காடுகளில் உற்சாகமாக நடக்கும். புலி உள்ள காடு அது. அனுபவம் இல்லாதவர்கள் ஓட முடியாது.

கோலாலம்பூருக்கு வந்தபிறகு பெரும் சோர்வு. உண்மையில் இங்குள்ள உணவுகளில் வடக்கு மாநில சுவையில்லை. நாசி லெமாக் சம்பாலில் கருப்பு சீனியை கலந்திருந்தனர். எந்த உணவும் ஒன்றுபோலவே இருந்தது. ஆனால் எனக்கு ஒரு நம்பிக்கை இருந்தது. எங்குமே சுவையின் உன்னதம் அறிந்த ஒரு சில சமையல்காரர்கள் இருப்பார்கள். அவர்களைத் தேட வேண்டுமென பல்வேறு உணவகங்களில் சாப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்தேன். என் ஊகம் தவறவில்லை. வடக்கு மாநிலத்திற்கு ஈடான சுவையுடன் kung fu chow, mee curry, wan tan mee போன்றவை வெவ்வேறு கடைகளில் கிடைத்தன. ஏறக்குறைய அதே சுவை கொண்ட பூலோட் ஊடாங், நாசி கண்டார் கடைகளைக் கண்டடைந்தேன். 

உணவு நாக்கோடு மட்டும் சம்பந்தப்பட்டதல்ல. மனதோடு சம்பந்தப்பட்டது. மலேசியாவில் மிகச்சிறந்த தங்கும் விடுதிகளில் நான் விருந்துக்கு அழைக்கப்பட்டுள்ளேன். எந்த சுவையும் மனதில் ஒட்டியதில்லை. என் அனுபவத்தில் வாடிக்கையாளனைப் பார்த்து அவன் தேவையைக் கேட்டு அப்போதே சமைக்கப்படும் உணவுகளே சிறந்தவைகள். அல்லது நான் அப்படித்தான் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறேன்.

2009இல் லண்டன் செல்லும்போதுதான் விமானத்தில் மாட்டிறைச்சி அறிமுகமானது. அதை கடிக்கும்போது அம்மாவின் மிரட்டும் கண்கள் வந்துபோனது. ஆனால் தவறுகளை பூமியில் செய்வதுதான் பாவம் என சாப்பிட்டுப் பார்த்தேன். அதன் ருசி தரையில் இறங்கிய பின்பும் இருந்தது. வைரமுத்து வேறு ‘மாட்டு வால் சூப் மன்மத பானம். துரும்பும் அதனால் இரும்பாய் மாறும்’ என கவிதையாகவே சொல்லிவிட்டதால் ‘அதென்ன அப்படி விஷேசம்’ என முயன்று பார்த்தேன். வைரமுத்துவை அந்த வரிகளுக்காகவே அவர் நாவல்கள் எனச் செய்த அட்டகாசத்தை மன்னிக்கலாம் எனத்தோன்றியது. பின்னர் ஆங்காங்கு மாட்டிறைச்சி சாப்பிட்டிருந்தாலும் கேரளத்து மாட்டுக்கறி சுவை எனக்கு நெருக்கமானது. அதுவும் குமரகம் கள் அருந்தும் பாரில்.

இத்தாலிய உணவு வகைகள் எதுவுமே எனக்குப் பெரிதாகப் பிடிப்பதில்லை. Spaghetti, Pizza, Pasta என பெயர்கள் நன்றாக இருந்தாலும் உடலும் மனமும் ஏற்பதில்லை. எனக்கு அதன் பெயர்களே நினைவில் நிற்பதில்லை. நான் பிரான்ஸ் சென்றபோது முதலில் Pastaவைதான் வாங்கிக் கொடுத்தார்கள். மிகவும் கஷ்டப்பட்டுச் சாப்பிட்டு முடித்தேன். இனி வாழ்க்கையில் இதை திரும்பிக்கூட பார்க்க முடியாது என நினைத்துக்கொண்டேன். அன்று மாலை வேறொரு இலக்கிய நண்பரைச் சந்திக்கும் வாய்ப்பு. ‘என்ன சாப்புடுறீங்க’ என்றார். நான் பட்டியலில் இருந்த முதல் பெயரைத் தொட்டேன். Pasta வந்தது. அன்றிலிருந்து அதன் பெயரை நினைவு வைத்துக்கொண்டேன். உணவுகளில் பிடித்ததைவிட பிடிக்காதவற்றின் பெயரை நினைவில் வைப்பதுதான் முக்கியம்.

தமிழகத்தில் மிகப்பெரிய கொடுமை காலை பசியாறல். எந்த உணவகத்துக்குப் போனாலும் ‘அண்ணே தோச, இட்டிலி, பூரி, பொங்கல் இருக்கு’ என்பார்கள். முதலில் அதை ஏன் சொல்கிறார்கள் என நினைக்கும்போது கோபம் வரும். ஏதோ புதிதாக ஒன்றை உணவுப்பட்டியலில் இணைத்திருப்பதுபோல முகத்தில் அத்தனை பரவசத்துடன் பட்டியல் சொல்வார்கள். காலை பசியாறலுக்கு மட்டுமே முப்பது முப்பத்தைந்து ஐட்டங்களை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் தன்னடக்கத்துடன் இருக்கும் நாங்களே பட்டியல் போடாதபோது நாலு ஐட்டங்களை மறுபடி மறுபடி சொல்லி தமிழ்நாட்டு உணவகத்தார்கள் ஏற்படுத்தும் மன பாதிப்பு கொஞ்ச நஞ்சமல்ல.

2010இல் என் பள்ளியில் ஒரு நல்ல நண்பர் குழு அமைந்தது. உணவு மோகம் ஒரு தொற்று நோய். அதை பற்றிப்படர வைக்க பிறரிடம் அதன் ஆசையைத் தூண்ட வேண்டும். அந்தத் தீ மூண்டுவிட்டால் எளிதில் அடங்காது. அப்படி மூட்டப்பட்ட தீயுடன் நானும் எனது நண்பர்களும் உணவு வேட்டையில் அடுத்தடுத்த ஆண்டுகளில் ஈடுபட்டோம். கோலாலம்பூரில் இருந்து நான்கு மணி நேரம் ஜோகூர் சென்று தங்கும் விடுதி எடுத்து நிதானமாக அணில், ஆமை, மான், முயல், எனச் சாப்பிட்டோம். உணவென்பது ஒரு கொண்டாட்டம்.  சில காலம் கோலாலம்பூரில் சுவையான பிரியாணியைத் தேடி அலைந்தோம். சில வகை உணவுகளை விற்பதில் தடை உள்ளதால் அவை எங்கே கிடைக்கின்றன என விசாரித்து அதைத் தேடிச் சாப்பிட ஆரம்பித்தோம். உதாரணமாக முதலை இறைச்சி. நாம் ஒன்றில் ஈடுபாடு காட்டத் தொடங்கும்போது அதற்கான பாதைகள் திறக்கும் என்பது இதைத்தான். மனம் உண்டானால் மார்க்கம் உண்டு என சொன்ன முன்னோர்கள் ஒன்றும் மூடர்கள் அல்ல.

யாழ் தொடங்கப்பட்ட காலகட்டத்தில் அதன் நூல் விநியோகிப்புக்கும் பயிலரங்குகளுக்கும் வெவ்வேறு மாநிலங்களுக்குச் செல்கையில் ஒவ்வோர் ஊரிலும் என்ன உணவு சுவையானது என ஓரளவு தெரிந்துகொண்டு அந்த உணவு கிடைக்கும் இடமாகப் பார்த்துத் தங்கினேன். தொடக்கத்தில் பெரும்பாலும் தனிப் பயணம்தான். உணவுப் பிரியர்களுக்கு நண்பர்கள் முக்கியம். ரசனையற்றவர்கள் நமது கிளர்ந்தெழும் உணர்வுகளைக் கெடுத்து விடுவார்கள்.  சைவக்காரர்களே என் முதல் எதிரி. வெளியூர் பயணங்களில் ஒருவர் சைவமாக இருந்தாலும் அவர் பொருட்டு சைவக் கடைகளைத் தேடும்போது அன்னையிட்ட தீ அடிவயிற்றில் பொங்கும்.

என் மாணவர்களிடம் நான் பிரதானமாக உணவைப் பற்றி பேசுவதுண்டு. முதலில் சொல்லத் தயங்குபவர்கள் என் அனுபவத்தைச் சொன்ன பிறகு மெல்ல வாய் திறப்பார்கள். ஒவ்வொரு பள்ளியிலும் வித்தியாசமான உணவுப் பழக்கம் கொண்ட ஒரு மாணவனாவது இருப்பான். காலையிலேயே புடு பசாருக்குச் சென்று மலைப் பாம்பு ரத்தம் குடிப்பவன், பல்லியை சூப்பில் போட்டு உண்பவன், பாம்பை சமைத்துச் சாப்பிடுபவன் என பலவிதமாகச் சொல்லி சிலிர்க்க வைத்திருக்கிறார்கள். எல்லாரும் வருங்காலக் கலைஞர்கள்.

ஒருமுறை மாணவன் ஒருவன் அவன் அப்பா வியட்னாமியர்களோடு சேர்ந்து நாய் இறைச்சி சாப்பிட்டதாகக் கூறினான். பின்னர்  தானும் சாப்பிட்டதாகவும் அது உடம்பில் அதிக உஷ்ணத்தை உருவாக்கியது என்றும் சொன்னான். எனக்குத் தெரிந்து வியட்னாமியர்கள் நாய் வேட்டை ஆடுவதுண்டு. சில சமயம் வீடுகளில் வளர்க்கும் நாய்களை ரகசியமாகப் பிடித்துச் சென்று வீட்டிலேயே அடித்துச் சாப்பிட்டு விடுவார்கள். உணவுப் பிரியர்கள் உணவைப்பற்றி பேசப் பேச சுவையின் அரூப சக்தி அவர்களை மேலும் பேச வைக்கும். பேச்சின் மூலம் அவர்கள் அந்த ருசியை மூளைக்குள் தேடிச் செல்வர். அப்படித்தான் அன்றும் அவன் பேசினான்.  “நாய் செம்ம ருசி சார்” என்றான் சப்புக்கொட்டியபடி.

எவ்வளவு சுவையாகச் சமைத்துக் கொடுத்தாலும் என்னால் நாய்கறியை மட்டும் சாப்பிட முடியாது என்றே தோன்றுகிறது. எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் நாய்களின் கண்களைப் பார்த்தே வாழ்ந்துகொண்டிருக்கிறேன். எந்த இடத்திலும் அவை என்னை அடையாளம் கண்டுகொள்கின்றன. எந்த முரட்டு நாயும் என்னை நிதானமாக ஒரு தரம் முகர்ந்து பார்க்கும். என் மேல் அதற்கு உவப்பான ஒரு மணம் இருக்கலாம். முகத்தை அசைக்காமல் கண்களை மட்டும் நகர்த்தி அவை என்னிடம் இதுவரை கேட்டதெல்லாம் வாஞ்சையை மட்டுமே. அவை கேட்பதால் என்னால்  அதை மட்டுமே கொடுக்க முடியும்.

(Visited 350 times, 1 visits today)