கன்னி: கடிதங்கள் 3

சிறுகதை: கன்னி

அன்புள்ள நவீன்
ஒரு நாட்டின் வரலாற்றை இப்படியும் எழுதலாம் என கோடிட்டு காட்டியிருக்கும் கதை கன்னி.

புதர் மண்டி கிடக்கும் வரலாற்று பாதையில் சரண் போன்ற பத்திரிக்கையாளர்கள் கையில் வரலாறு என்று சொல்லப்படுவது மீட்டரு வாக்கம் செய்யப்படுகிறது .

ஆதி குடிகள்,வெள்ளைக்காரர்கள் ,மலையக தோட்டங்களின் குடியேற்றம், சீனர் மலாய் இந்து, தமிழர், முஸ்லீம் என ஒவ்வொரு குடிகளுக்கும் இங்கு ஒரு கல் ஊனப்படுகிறது , ஒரு வரலாற்று நிகழ்வும் அதன் நிழலும் உள்ளது – நீங்கள் இன்னும் இவ்வடிவத்தை நேர்கோட்டிலோ அல்லது இதே வடிவத்திலோ ஒரு நாவலாக எழுதலாம்.

தற்போதைய வடிவத்தில் இது பதட்டப்பட்ட ஓரு நிருபரின் கோணத்தில் எழுதப்பட்டுள்ளது அது தங்களின் அழகியல் தேர்வு என்றாலும் அவனது கோணம் சரியாக உள்ளது என்றாலும் அவனது பதட்டத்தில் ஆறு கன்னிகளின் ஆதி கதையின் வீச்சு சற்றே ஒளி குன்றுகிறது

என்னளவில் சரி எது தவறு எது என்று சொல்ல தெரிந்தவனே எழுத்தாளன் ஆகிறான் பல்வேறு grey area க்கள் இருப்பினும் அவன் பார்வையில் அறம் குறித்த பார்வை சார்பின்றி நடு நிலையாக இருக்கும். இந்த கதையின் வலுவும் அதுவே.

வட்டத்தில் சிக்குவதோ யார் யாரை கொலை செய்தார்கள் என்பதை விட ஏன் கொலை செய்யும் உணர்வு நீடிக்கிறது என்பதை அறிந்து கொள்வதிலேயே வாசகன் கவனம் கொள்ள வேண்டும் – புற அக காரணங்ள் அவன் முன்னே கொட்டப்பட்டாலும் அவன் இலக்கியத்தின் முன்னே விடை கேட்டு நிற்கிறான்.

ஆதிக்க வரலாறு எழுதப்படுகையில் துப்பாக்கி ஆணுறுப்பு போன்றவை மிகவும் காலாவதியான பாதிப்பை ஏற்படுத்தாத சொற்களாக மாறிவிட்டன , வேறு கோணங்கள் இருக்கலாம் – நீங்கள் தாண்டவராயன் கதை வாசித்திருக்க கூடும், நீங்கள் மாரி அங்கிள் அவர்களிடம் மேலும் கேள்விகளுடன் உரையாட தொடங்குங்கள். உண்மை நீளமானது பின்னி பிணையும் உண்மையும் முழுமையையும் ஒரு நாவலே அளிக்க முடியும்.

அன்புடன்
மணிகண்டன்

ம.நவீனின் சிறுகதை எனக்கு ஒரு சுவாரசியமான எண்ணத்தை உருவாக்கியது. ஒவ்வொரு பண்பாட்டிலும் ஒரு ரகசியக்கிடங்கு உள்ளது. அதை பாவங்களின் கிடங்கு என்று சொல்லலாம். ஒருவகையான கழிப்பறை அது. மனிதர்கள் அவர்கள் செய்யும் பாவங்களை எல்லாம் தொன்மமாக உருமாற்றி அங்கே கொண்டுசென்று சேகரித்துக்கொள்கிறார்கள். அதிலிருந்து தேவையானபோது திரும்ப எடுத்து புழங்குகிறார்கள்.

இது ஒரு பிசின் போல. இதைக்கொண்டு பண்டைய பாவங்களையும் நிகழ்காலப் பாவங்களையும் இணைத்து ஒரே படலமாக ஆக்கிக்கொள்கிறார்கள். ம.நவீனின் கதையில் எதிர்காலப்பாவங்களையும் அதிலே சேர்த்துக்கொள்ள முயல்கிறார்கள் என்று தோன்றியது. இனி நிகழப்போகும் பாவத்தின் தொடர்ச்சியையும் சேர்க்கும்போது அது நிரந்தரமாக வளரும் என்பது உறுதியாகிறது

மகாதேவன்

(Visited 41 times, 1 visits today)