சிறுகதை: பூனியான்

“இங்குதான் அவனை முதன்முறையாகப் பார்த்தேன்.”

ரீத்தா காட்டிய மரங்கள் அடர்ந்த பகுதியை ஆர்வமில்லாமல் பதிவு செய்துகொண்டே  மெல்ல கைப்பேசியை அவள் பக்கம் திருப்பினேன். பசுமை பின்னணியில் கருஞ்சிவப்பு உடை காமிராவில் தூக்கலாகத் தெரிந்தது. காற்றில் அவளது பஹால்புரி குர்தி, உடலோடு ஒட்டிக்கொண்டபோது நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டவள் என நினைத்துக்கொண்டேன். கழுத்தோடு ஒட்டியிருந்த மெல்லிய பிளாட்டின சங்கிலி ஒன்றிரண்டு முறை மின்னியது. 

“ஒரு இளவரசனைப் போல இருந்தான். போல என்ன, அவன் பூனியான் ராஜியத்தின் இளவரசன்தான்” அவளது ஆங்கிலம் பிசறில்லாதது. எப்போதுமே தேர்ந்தெடுத்த வார்த்தைகளால் பேசினாள். 

“ஓ” என்றேன். 

“அதோ… அந்த விழுதில் ஊஞ்சல் கட்டி ஆடிக்கொண்டே என்னை வழியனுப்பி வைத்தான்.”

நான் அந்த ஆலமரத்தையும் பதிவு செய்தேன். பிரம்மாண்டமாகக் கிளை விரித்து பேரிடத்தை ஆக்கிரமித்திருந்தது. பல ஆண்டு மரமாக இருக்க வேண்டும். விழுதுகள் பூமியில் ஊன்றி மரத்தின் தண்டுகள்போல பெருத்திருந்தன. கருநீல வண்ணத்துப்பூச்சியொன்று காற்றுக்கு இசைவாக பறந்து சென்று இருளுள் மறைந்ததும் காமிராவில் பதிவானது.

“ஆலமரம் ஒரு வினோதமான ஆண்மகன். மரத்துடன் பிணைந்த விழுதுகள் அதன் உடலில் முறுக்கை ஏற்படுத்தி அதை இளைஞனாக்குகிறது. தளர்ந்து தொங்கும் விழுதுகள் சடைமுடி கொண்ட துறவிபோல காட்டுகிறது,” என்றவள் சிறிது நேரம் கழித்து “அவனும் அப்படியானவன்தான்” என்றாள். அவள் கண்கள் பனித்திருக்கக்கூடும் என நினைத்துக்கொண்டேன். குரல் உடைந்திருந்தது.

நாங்கள் மரத்தை ஒரு தரம் சுற்றி வந்தோம். சுற்றிலும் அழகான மலர் செடிகள். மர உச்சியில் அசைவின் ஒலி கேட்டதும் இருவரும் மேலே பார்த்தோம். அவ்வளது நிசப்தத்தில் அதுபோன்ற ஒலி அச்சம் தரக்கூடியதுதான். கண்களிலிருந்து அதை  மறைக்க முயன்றேன்.

மரத்தின் பின்புறம்தான் அவள் சொன்ன கிணறு தரையோடு தரையாக இருந்தது. குறுகலானது. கிணறு இருக்கும் அடையாளத்திற்காக சுற்றிலும் கற்களை அடுக்கி வைத்திருந்தார்கள்.

“நான் இங்கு வந்தபோது மாலை நேரம். கருமேகங்கள் இவ்விடத்தை மேலும் இருளாக்கியிருந்தன,” என்றாள்.

“இருளில் எப்படி அவரைப் பார்க்க முடிந்தது?” என்றேன்.

“பூனியான்களுக்கு உடலில் இயற்கையான ஒளி உண்டு. அதனாலேயே அவர்களால் வனங்களின் இருண்ட பகுதியில் வாழ முடிகிறது. ஆழ்கடல் மீன்கள்போல,” என்றாள். காற்றில் களைந்து பறந்த கூந்தல் இப்போது இயல்பாக அவள் தோள்களில் சுருண்டு அமர்ந்துகொண்டது.

இன்னும் பதினைந்து சதவிகிதம்தான் சக்தி உள்ளது என அணைந்து எரியும் சிவப்பு மின்கலம் கைப்பேசி திரையில் எச்சரித்தது. அவனைத் தேடிக்கொண்டு அவள் மேலும் உள்நோக்கி நடக்கக்கூடும் என்பதால் “போகலாம்” என்றேன். அவள் மறுப்பெதுவும் சொல்லாமல் நடந்தது நம்பிக்கையைக் கொடுத்தது.

உயர்ந்து செல்லும் ஒற்றையடிப் பாதை நெடுகிலும் பெரிய வேர்களைக் கவனமாகத் தாண்டிச் செல்ல வேண்டியிருந்தது. அவள் அடிக்கடி நின்று காட்டை திரும்பிப் பார்த்தாள். கண்கள் ஏக்கமாக அலைந்துகொண்டிருந்தன. நடையில் எந்தத் தடுமாற்றமும் இல்லை. சின்னச் சின்ன பள்ளங்களைத் தாண்டும்போது மட்டும் இரு கைகளையும் பக்கவாட்டில் பறவைபோல தூக்கிக்கொண்டாள்.

சமவெளியை அடைந்தபோது ஒருசேர நின்று மூச்சு வாங்கினோம். மூச்சுவாங்குவதை எண்ணிச் சிரித்துக்கொண்டோம்.

“முன்பு இது பெருங்காடு. இத்தீவை நிறைய பேர் மேம்படுத்த முயற்சி செய்து தோற்றுப்போனார்கள். எழுபதுகளில் சில பெருமுதலாளிகள் ஆயிரம் எருமைகளை வளர்க்கும் திட்டத்தை இத்தீவில் உருவாக்கி பெருநட்டம் அடைந்தார்கள். அனைத்தும் வினோத நோயால் இறந்துபோய் இத்தீவே எருமைகளின் பிணங்களால் நிரம்பிக் கிடந்ததாகச் சொல்வார்கள். பூனியான்களை மீறி யாராலும் எதையும் இங்கே செய்ய முடியாது. ஒருவகையில் இப்போது இது திருத்தப்பட்ட காடு. இல்லாவிட்டால் இவ்வளவு எளிதாக நம்மால் நடக்க முடியாது,” என்றாள்.

மேலும் கொஞ்ச தூரம் நடந்தபோது கடல் தெரிந்தது.  பாதை தொண்ணூறு பாகை சரிவில் இறங்கியது. அதன் விளிம்பில் இருந்த பெரும்பாறைகளில் ஏறி, மெல்ல சறுக்கி இறங்கினால் மணல் பரப்பு. நான் பாறையில் ஏறியவுடன் இறங்க மனம் வரவில்லை. கடல் நீரின் பச்சை நிறம் மனதை ஆசுவாசப்படுத்தியது. அவள் ஒரு சிவப்புப் பறவையைப்போல தாவிக் குதித்தாள். காலணியைக் கையில் பிடித்திருந்தாள். மாசில்லாத கணுக்கால்கள். என்னிடம் ஒன்றும் சொல்லாமல் பாறையில் சறுக்கிச் சென்று இன்னொரு பாறையில் இறங்கினாள். அங்கிருந்து, விழுந்து கிடந்த தென்னை மரத்தண்டில் தாவினாள். நேராக ஓடி கடலுக்குள் கால் வைத்தாள். ஓடும்போதே காலணிகளை மணல் பரப்பில் வீசியெறிந்தாள். உடை நனைவது அவளுக்கு பொருட்டாகவே இல்லை. பச்சைநிறக் கடல்நீரில் இடை வரை உள்நோக்கி நடந்து கடலின் பிரம்மாண்ட வெளியைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அலை அவளை முழுமையாக நனைத்தபோது உடை கருமையாகத் தெரிந்தது.

அவளுடன் நான் வந்திருக்கக்கூடாதோ என இப்போது தோன்றியது. டாக்டர் கோதண்டத்துக்குத் தெரிந்தால் கோபித்துக் கொள்வார். பல்கலைக்கழகத்துக்கு புகார் கடிதம் எழுதவும் செய்யலாம். ரீத்தா அவரிடம் சொல்லப் போவதில்லைதான். அவள் அண்ணனை நினைத்தால்தான் பயமாக இருந்தது. ரீத்தாவுடன் இருக்க வேண்டுமென விரும்பியே  இந்த சிக்கலான முடிவை எடுத்திருந்தேன். மேலும் அவளை நோயிலிருந்து மீட்க இதுவே இறுதித் தீர்வாக இருக்குமெனவும் நம்பினேன்.

“அவளுக்கு பிக்ஸ் டெலூஷன். ரெண்டு வாரம் கௌன்சலிங் கொடுத்து பாத்துட்டு ரிப்போட் அனுப்புங்க,” என டாக்டர் கோதண்டம் கோப்பைக் கொடுத்தபோது நான் ஆர்வமாக வாங்கிப் பார்த்தேன்.

“பிராக்டிக்கல்ல இந்த ஆர்வமெல்லாம் இருக்கும். அப்புறமா சலிச்சிடும்,” என்றார்.

மரியாதை காரணமாக நான் அவரிடம் எதிர்த்துப் பேசுவதில்லை என்பதால் சிரித்து வைத்தேன். யு.கே.எம்மில் மருத்துவ உளவியல் படிக்கும்போதே டாக்டர் கோதண்டத்தைத் தெரியும். இந்திய மாணவர்களின் இயக்கம், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நடத்திய கெளன்சலிங் பற்றிய விழிப்புணர்வு கூட்டத்தில் கலந்துகொண்டு சிக்மண்ட் பிராய்ட், கார்ல் யங்  எனத் தொடங்கி பி.எஃ.ஸ்கீன்னர் வரை உளவியல் மேதைகளை எவ்வாறு விமர்சனத்தோடு அணுக வேண்டுமென ஒரு மணி நேரம் உரையாற்றினார்.

முதுகலை முடித்தவுடன் ஆறு மாத பயிற்சிக்காக அவரிடம் விண்ணப்பித்தபோது மலாக்காவில் இருக்கும் தனது கிளினிக்கில் செய்ய விருப்பமா என்று கேட்டார். முதலில் குடும்பத்தை விட்டு விலகியிருக்க வேண்டுமென தோன்றினாலும் அவரிடம் பயிற்சி பெறுவதால் கற்றுக்கொள்ளும் வாய்ப்புகளை எண்ணிச்  சம்மதித்தேன். ஆனால் அப்படியொரு வாய்ப்பு அமைந்ததே இல்லை. வாரம் இருமுறை மட்டுமே டாக்டர் கோதண்டம் வருவார். நோயாளிகளைச் சோதித்துவிட்டு கௌன்சலிங் தேவைப்படுபவர்களை மட்டும் என்னிடம் அனுப்பி வைப்பார். முதலில் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தாலும் அவர் அடிக்கடி வராததால் நிதானமாக வேலை செய்யப் பழகியிருந்தேன். ஒவ்வொரு நாளும் பல்கலைக்கழகத்துக்கு அனுப்ப வேண்டிய அறிக்கைகள் ஏராளம் இருந்தன.

அதுநாள் வரை மணமுறிவினாலும் வணிக வீழ்ச்சியாலும் மனச்சிதைவு ஏற்பட்டு ஆலோசனைக்கு வந்தவர்களே அதிகம். அவர்களைக் கையாள்வதும் சுலபமாக இருந்தது. முதல் காரணம் தங்களுக்கு ஏதோ சிக்கல் ஏற்பட்டிருக்கிறது என அவர்களே அறிந்து வைத்திருந்தார்கள். அந்த அறிதலே அவர்களை மீட்க உதவும் வாசல். எளிதாக அதன்வழி மனதுக்குள் நுழைந்து  மெல்ல மெல்ல பேசி சரிப்படுத்த முயல்வேன். மனம் தெளிவாகப் பிரச்சினையைப் புரிந்துகொண்ட பின்னர் அவர்களிடம் எஞ்சியிருப்பதெல்லாம் பயம், கவலை, கோபம் போன்ற ஆதி உணர்வுகள்தான். அதைக் கட்டுப்படுத்தும் மருத்துகளை டாக்டர் கோதண்டம் கொடுத்து முழுமையாக குணப்படுத்தும் முயற்சியில் இறங்குவார்.

ரீத்தாவின் நிலை அதுவல்ல.

முதல் அமர்வில் என் மேசையில் இருந்த பெண்டுலத்தை ஆடவிட்டு நெடுநேரம் பார்த்துக்கொண்டிருந்தாள். வலது மணிக்கட்டில் கட்டுப் போடப்பட்டிருந்தது. வழக்கமான விசாரிப்புகளுக்குப் பின் “எப்போ அவர மொதல்ல பாத்தீங்க?” என்றேன்.

“தோழியோடு பூலாவ் கெசீல் தீவுக்குச் சென்றபோது,” என்றாள். அது மலாக்காவை ஒட்டிய தீவுதான். அவள் ஆங்கிலத்தில் பேசியதால் நானும் அப்படியே தொடர வேண்டியிருந்தது.

“அவர் தனியாக இருந்தாரா?” என்றேன்.

“அங்கு பூனியான்களுக்குத் தனியாக கம்பம் உண்டு தெரியுமா?” என்றாள்.

“நான் மலாக்காவுக்கு புதியவன்” என்றபோது “மலேசியாவுக்கு இல்லையே” என்றாள். நான் சிரித்து சமாளிக்க முயன்றபோது அதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது என்பதைப்போல பார்த்தாள்.

“அந்தக் கம்பத்துக்கு நீங்கள் போனீர்களா?” என்றேன்.

“அது தற்செயலாகத்தான் நடந்தது. துரதிஷ்டங்களைப் போக்கும் பூக்குளியல் அங்குப் பிரபலம். திருமணம் தள்ளிப்போனதால் தோழி பூக்குளியல் பிரார்த்தனைக்குச் சென்றுவிட்டபோது நான் பருத்த மரத்தண்டுகளை வேடிக்கை பார்த்துக்கொண்டே காட்டு வழியாக நடக்கத் தொடங்கினேன். அதை அடர்க்காடென சொல்ல முடியாது. தொலைவில் கேட்ட சத்தம் மரங்கொத்தியுடையது என அறிவேன். அது மரத்தின் பசையைத் திண்ணும் அழகை பார்க்க வேண்டும்போல இருந்ததால் மர உச்சியை ஆராய்ந்துகொண்டே மேலும் மேலும் உள்நோக்கி நடந்தேன்.”  

“பின்னர்?”

“சத்தம் நின்றபோதுதான் நான் காட்டினுள் மிக அழகிய இடத்துக்கு வந்ததை உணர்ந்தேன். சுற்றிலும் பலவண்ண பூச்செடிகள். காட்டில் அப்படி இருப்பது அபூர்வம். இருந்தால், அது பூனியான்களுடைய இடம் என நினைவுக்கு வந்தது” என்றாள்.

“அப்படியானால் பூனியான்களைப் பற்றி உங்களுக்கு முன்னமே அறிமுகம் உண்டு. இல்லையா?” நான் குறிப்பெடுத்துக்கொண்டேன்.

“யாருக்குதான் இல்லை?” என்று கிண்டலாகச் சிரித்தாள். “அங்கு ஒரு கிணறு இருந்தது. சொல்லப்போனால் அந்தத் தீவில் நிறைய கிணறுகள் உள்ளன. குடிநீருக்காக முதலில் தோண்டப்பட்ட கிணறு காட்டினுள் இருப்பதாகச் சொல்லியிருந்தார்கள். என் மனம் அக்கிணறுதான் அது என்றது. நான் அந்த நீரைப் பருக நினைத்தேன். அது புனித நீர். அதன் அருகில் சென்றபோதுதான் அங்கு நடமாட்டம் இருப்பதை என்னால் உணர முடிந்தது. உடல் சிலிர்த்தது. கொஞ்ச நேரம் ஒவ்வொன்றையும் நிதானமாகக் கவனித்தேன். என்னால் அவர்களை நுகர முடிந்தது.”

“நுகர்ந்தீர்கள் என்றா சொல்கிறீர்கள்?”

“ஆம். எனக்கும் அது புதிய அனுபவம்தான். அப்படி முடியும் என்று எனக்கும் அன்றுதான் தெரியும். பன்றிகள் நுகர்வதன் வழி சூழலை அறியும் அல்லவா அப்படித்தான்,” என்றாள்.

“நாய்கள்போல” அவள் ‘டாக்’ என்பதற்கு பதில்  ‘பிக்’ என சொல்லிவிட்டதாக நினைத்தேன்.

“இல்லை. பன்றிகள்தான். நாய்களைக் காட்டிலும் பன்றிகளின் மோப்ப சக்திதான் நுட்பமானது. மேலும் எனக்கு நாய்களைப் பிடிப்பதில்லை,” என்றாள்.

“சொல்லுங்கள்,” நான் குறிப்பெடுப்பதுபோல தலையைக் குனிந்து கொண்டேன். அது டாக்டர் கோதண்டம் சொல்லிக்கொடுத்ததுதான். நோயாளிகள் தாராளமாகப் பேச நாம் அவர்கள் பேசுவதை கவனிக்கிறோம் என முகத்தை வைத்திருந்தால் போதுமானது. ஆர்வம் காட்டுவது தெரிந்தால், கூட்டி குறைத்துச் சொல்லத்தொடங்குவார்கள்.

“கொஞ்ச நேரத்தில் எனக்கு அவர்கள் சிரிக்கும் ஒலிகேட்டது. மிக அருகிலும் மிக மிகத் தொலைவிலும். நான் அசையவில்லை. நான் அவர்களது குடியிருப்பு மையத்தில் நிற்கிறேன் என்பதை உணர்ந்தேன். அவர்கள் உடமைகள் எதுவும் சீண்டப்பட்டு தீட்டாகிவிடுமோ என பயமாக இருந்தது. அது இன்னொரு உலகம். ஏதும் தகாதவற்றைப் பேசினாலோ செய்தாலோ அவர்கள் உலகத்திலேயே மாட்டிக்கொள்வோம். மீண்டு வர முடியாது.”

“பூனியான்கள் வானத்தில்தான் இருப்பார்கள் அல்லவா?”

அவள் இருக்கையில் நிமிர்ந்து அமர்ந்தாள். குறுக்கிட்டு கேள்வி கேட்டது அவளுக்குப் பிடிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் நான் காரணமாகத்தான் கேட்டேன்.

“பூனியான்களில் மூன்று பிரிவினர் உண்டு. அதில் இறக்கை முளைத்தவர்கள் மட்டுமே வானில் இருக்கிறார்கள். அடுத்த பிரிவினர் விலங்குகளின் ரூபத்தில் நடமாடுவார்கள். நான் குறிப்பிடுபவர்கள் நம்மைப்போல மனைவி, பிள்ளைகளென குடும்பமாக வாழக்கூடியவர்கள்.”

ரீத்தாவுக்கு பூனியான்கள் குறித்த துல்லியமான தகவல்கள் தெரிவதாகக் குறிப்பெடுத்துக்கொண்டேன். சிலசமயம் வினோதமான ஒன்று குறித்து அதிகம் தெரிந்து வைத்திருப்பதால்கூட பிக்ஸ் டெலூஷன் வர வாய்ப்புண்டு.

“வந்த பாதையிலேயே திரும்பிப் போய்விடலாம் என நினைத்தபோதுதான் அவன் என் முன் வந்து நின்றான்,” ஹேண்ட் பேக்கிலிருந்து நீர் புட்டியை எடுத்து குடித்தாள். அவளின் பார்வை சகஜமாக இருந்தாலும் மூச்சு வாங்குவது தெரிந்தது.

“பயமாக உணர்கிறீர்களா?” என்றேன்.

“இல்லை இது பயமில்லை. சொல்லப்போனால் அன்றும் எனக்கு துளியும் பயம் வரவில்லை. நீங்கள் ஒரு புனியானைச் சந்திக்கும் கணமே அவர்களின் தூய ஆன்மாவைப் புரிந்துகொள்வீர்கள். பரவச உணர்வை மட்டுமே அடைவீர்கள்.”

“நல்லது. சொல்லுங்கள்,” என்றேன். எனது ஒவ்வொரு உடலசைவும் அப்போது முக்கியமென அறிவேன்.

“அவன் நல்ல உயரம். தூய வெண்மை நிற உடை அணிந்திருந்தான். இடுப்பைச் சுற்றி தங்க ஜரிகையால் ஆன சாரம். தலையில் மலர்களால் ஆன கிரீடம். கழுத்தில் அறிய கற்கள் கோர்த்த மாலை ஒன்று அணிந்திருந்தான். சாந்தம் பொருந்திய  முகம். பூரணமான பேரழகன். அந்த நிமிடமே நான் அவனைக் காதலிக்கத் தொடங்கிவிட்டேன்.”

“காதலா?” நான் உதடுகளை மடித்து உள்ளிழுத்துக்கொண்டேன். அப்படிச் செய்வதால் முகத் தசை இறுக்கிவிடும். எந்த உணர்ச்சியும் தெரியாது.

“ஆம் அவனும்தான்,” அவள் குரல் உறுதியானது.

“ஏதும் பேசினாரா?”

“அவனுக்கு என்னைப் பற்றி எல்லாமும் தெரிந்திருந்தது. என் பெயரைச் சொல்லியே அழைத்தான். உங்களுக்குத் தெரியுமா? என் பெயரை அதுவரை யாருமே அவ்வளவு இனிதாய் அழைத்ததில்லை. அவனது கனிவான பார்வையில் ஆண்மை இருந்தது. ஆண்மை அவ்வளவு மென்மையானதும் கூட என அன்றுதான் நான் உணர்ந்தேன்.”

“பிறகு?”

“பேசிக்கொள்ளாமலேயே எல்லாமே புரிந்தது. ஒருவரை ஒருவர் நெடுநேரம் பார்த்துக்கொண்டிருந்தோம். என்னால் பார்வையை விலக்க முயலவில்லை. அந்தக் கணம் அப்படியே நீடிக்க வேண்டுமென விரும்பினேன். நான் என்பது மறந்துபோய் அங்கு பார்த்தல் எனும் நிகழ்வு மட்டுமே இருந்தது. அதற்கு முன் பல யுகங்களாக அப்படியே பார்த்துக்கொண்டிருப்பதாகத் தோன்றியது. அவன் பேரொளியில் என்னைச் சுற்றி இருந்த எதையும் உணர முடியவில்லை. அவன் மட்டுமே தெரிந்தான். அது நம் கண்ணால் நமது கருவிழியை உள்ளிருந்து பார்க்கும் அனுபவம். என்னால் வேறொன்றும் செய்ய முடியவில்லை. அவனுடன் பலநூறு ஆண்டுகளாக வாழ்ந்ததை என்னால் உணரமுடிந்தது.  அவன் என்னை அப்போதே அக்கனமே திருமணம் செய்துகொண்டான்.”

“திருமணமா? எப்படி?”

“எப்படியென்றால் என்ன சொல்வது? நாங்கள் திருமணம் செய்துகொண்டுவிட்டதாக எங்களுக்குத் தெரிந்தது. அதுபோதுமல்லவா?” என்றாள்.

“ஆமாம் போதும்தான். ஆனால் அவ்வளவு சீக்கிரமா?” என்றேன்.

“மிஸ்டர் அருண், பூனியான்கள் உலகில் காலம் என்பதை  உங்களால் புரிந்துகொள்ள முடியாது. ஐந்து நிமிட கனவில் நீங்கள் ஐந்து வருடம் வாழ்ந்த அனுபவம் பெறுவதில்லையா?”

“உங்களுக்கு நடந்தது கனவுபோல என்கிறீர்களா?”

“ஓ மிஸ்டர் அருண்!” அவள் நாற்காலியில் சாய்ந்து சுவாசத்தை இழுத்துவிட்டாள். ஏறி இறங்கிகொண்டிருந்த விரல்களில் நகப்பூச்சு அழுத்தமாக இருந்தது. நேற்றோ இன்று பூசியிருக்க வேண்டும். மன உளைச்சலில் உள்ளவர்கள் அதை செய்வார்கள்.

“அவர்களது உலகில் நாம் சொல்லும் காலங்களுக்கும் இடைவெளிகளுக்கும் அர்த்தமில்லை. சிந்தனைகள், ஊகங்கள் என எதுவும் இல்லை. செயல்கள் மட்டும் சிந்திக்கும் வேகத்தில் நடந்துகொண்டிருக்கும்.”

“புரிகிறது,” என்றேன்.

“அப்போது அவன் எனக்கொரு வாக்களித்தான். நான் அழைக்கும்போதெல்லாம் என்முன் தோன்றுவதாக. என் முன்னேற்றங்களுக்குத் துணையிருப்பதாக. மிஸ்டர் அருண், பூலாவ் கெசில் பூனியான்களின் தீவு. மொத்தம் நூற்று முப்பத்தாறு பூனியான் கம்பங்கள் அங்கு உள்ளன. அவை மொத்தத்துக்கும் அவன்தான்…”

“அரசன்”

“இல்லை இளவரசன்.”

சொல்லி முடித்ததும் அவள் முகத்தில் சந்தோஷம் மலர்ந்தது. தானொரு இளவரசி என்பதால் இருக்கலாம். அது மெல்ல வெட்கமாக மாறியபோது ரீத்தா அபூர்வமான அழகுடன் தெரிந்தாள். அவள் கன்னங்கள் பிரகாசித்தன.

“அங்கு வேறு யாரையும் பார்க்கவில்லையா?”

“பூனியான்கள் விரும்பினால் மட்டுமே அவர்களை நம்மால் பார்க்க முடியும். ஆனால் அங்கு நிறைய பெண்கள் சிரிப்பதையும் குழந்தைகள் ஓடி விளையாடுவதையும் என்னால் உணர முடிந்தது.”

“சொல்லுங்கள்”

“அவனால்தான் எனக்கு நிறைய காப்புறுதிதாரர்கள் கிடைத்தார்கள். மிஸ்டர் அருண், நீங்கள் இப்போது என்ன கிறுக்குகிறீர்கள் எனத் தெரியும். காப்புறுதி முகவர்களின் பொதுவான குணநலன்களுடன் என்னைப் பொறுத்திப் பார்க்க நினைக்கிறீர்கள். அவசியமில்லை. நான் என் தொழில் முன்னேற்றத்துக்காக மெனக்கெட்டதே இல்லை. யாரிடமும் போலியாக அன்பு காட்டவும் அவர்கள் உயிரைப் பாதுகாக்க விரும்புவதாகச் சொல்லவும் அவசியம் வந்ததே இல்லை. ஒவ்வொருநாளும் நான் யாரைச் சந்திக்க வேண்டுமென அவன்தான் சொல்வான். அவன் சொல்வதுபோலவே பேசச் சொல்வான். ஒருநாளைக்கு ஐந்து பேரிடமெல்லாம் காப்புறுதியை விற்றுள்ளேன். அவன் என்னுடன் இருந்ததால் நான் எதிர்பார்த்த ஒவ்வொன்றும் என் காலடியில் விழுவதைப் பார்த்தேன்.”

அவள் முகத்தில் சட்டென மிடுக்குத் தோன்றி மறைந்தது. தோரணையாக முடியை இழுத்து பின்னால் விட்டுக்கொண்டாள்.

“சில மாதங்களிலேயே ஜி.எஸ்.எம் ஆனேன். நிறைய வெளிநாட்டுப் பயணங்கள். நிறைய விருதுகள். எல்லாமே கனவுபோல இருந்தது. அப்போதுதான்…” அவள் குரல் உள் சென்று அடங்கி அமைதியானாது.

நான் குறுக்கிடாமல் அந்த நிமிடங்களை மௌனத்தின் வழி அவளுக்குச் சாதகமாக்கிக்கொடுத்தேன். எப்படிப் பார்த்தாலும் அழகாகத் தெரிந்தாள். கண்களை மூடியிருந்தாள். அவள் கருவிழியின் உருள் வடிவம் இமையில் அசைவது தெரிந்தது. ஒரு சொட்டு நெய் வழிந்து விழத் தயாராக நிற்பதுபோல மூக்கின் நுனி. அவ்வளவு சிறிய குமிழ் உதடுகளை நான் ஜப்பான் கார்ட்டூன்களில் மட்டுமே பார்த்துள்ளேன்.

“ஆம் மிஸ்டர் அருண். நான் அவனால் கர்ப்பமாக இருக்கிறேன்” என்றாள்.

நான் இயல்பாக முகத்தை வைத்துக்கொள்ள முயன்றேன்.

“இதை நான் டாக்டர் கோதண்டத்திடம் சொல்லவில்லை. அவருக்கு என் அப்பா வயது இருக்கும். சொல்லத் தயக்கமாக இருந்தது,” என்றாள்.

“அது குறித்து மருத்துவ அறிக்கை உள்ளதா?” என்றேன்.

அவள் ஒருமுறை பெருமூச்சுவிட்டாள். “அதில்தான் பிரச்சனை தொடங்கியது,” என்றபோது கண்களில் நீர் விடாமல் வழியத்தொடங்கியது. நான் டிஷ்யூவை அவளிடம் நீட்டினேன்.

“நான் கர்ப்பமாக இருப்பதை அவன்தான் என்னிடம் சொன்னான். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் அடுத்து என்ன செய்வதென்ற குழப்பம். வீட்டில் என்ன சொல்வது என முதன்முறையாகப் பயப்படத் தொடங்கினேன். அதற்கான கருவியை வாங்கி வந்து சிறுநீரை சோதித்தேன். கர்ப்பத்துக்கான அறிகுறி இல்லை. மனம் ஆறவில்லை. மறுநாளே மருத்துவ பரிசோதனைக்குச் சென்று ஸ்கேன் செய்துப்பார்த்தேன். அப்படியெல்லாம் இல்லையென டாக்டர் கூறினார். வீட்டுக்கு நிம்மதியாக வந்தபோது அவன் கோபத்தில் இருப்பது தெரிந்தது. பொதுவாக பூனியான்கள் கோபப்பட மாட்டார்கள். அவர்கள் இயல்பில் அவ்வுணர்வு இல்லை. ஆனால் கோபத்தின் வெளிப்பாடுபோல அவனிடம் இருந்து நிதானமான சொற்கள் வெளிப்பட்டன. கொஞ்சம்கூட முகம் சுளிக்காமல்தான் என்னிடம் பேசினான். பூனியான்களின் குழந்தைகள் கர்ப்பப்பையில் வளர்வதை மருத்துவ சோதனைகள் காட்டாது என்றான். அதை அறியும் கருவிகள் மனிதர்கள் உலகில் இல்லை என்றான். அவன் சொல்லை சந்தேகித்ததால் இனி இணைந்து வாழ்வது சாத்தியமில்லை என சாந்தமாகக் கூறினான். என்னால் ஒரு வார்த்தைகூடப் பேச முடியவில்லை. சந்தேகிப்பது அவர்கள் உலகில் பெருங்குற்றம் என்றவன் அப்பொழுதே அக்கணமே என்னை விட்டுப் போய்விட்டான்,” அவள் முகத்தை முழுவதுமாகத் தன் மடியில் கிடத்தி அழுதாள். உடல் குலுங்கியது. நர்ஸ் வந்து எட்டிப் பார்த்தபோது ஒன்றுமில்லை என ஜாடை காட்டி அனுப்பிவிட்டேன்.

அவள் நிமிர்ந்தபொழுது முகம் வீங்கியிருந்தது. “இப்போது அவன் குழந்தை அசைவதை நான் என்னுள்ளே உணர்கிறேன்,” என்றாள்.

“பிரசவமாவது நடக்குமா?” என்றேன்.

“அதற்கு கணவனின் அருகாமை இருக்க வேண்டும். அப்போதுதான் குழந்தை வளரும். அதுவரை அது ஓர் உணர்வாக உள்ளேயே இருக்கும்,” என்றாள்.

‘இருக்கட்டுமே’ எனச் சொல்ல நினைத்தேன். அது அவளைச் சீண்டக்கூடும் என்பதால் கவனமாகச் சொற்களை தேர்ந்தெடுக்கத் தொடங்கினேன்.

“பலமுறை அவனை அழைத்துவிட்டேன். நான் அவன் சொல்லில் சந்தேகித்து மருத்துவ சோதனை செய்யவில்லை. பயத்தில் அதை உறுதி செய்ய நினைத்தேன். பயப்படவும் ஒரு அர்த்தம் வேண்டுமல்லவா? ஆனால் எப்படியும் அது தவறுதான்,” அவள் மீண்டும் அழத் தயாரானாள்.

“எங்கு போனார்?” எனக் குறுக்கிட்டேன்.

“தெரியவில்லை. அவனிடம் என் தவறுக்கு மன்னிப்புக் கேட்க ஆயிரம் முறை அழைத்திருப்பேன். வரவில்லை. அப்போதுதான் முதல் தற்கொலை முயற்சிக்கு முயன்றேன். அவன் என்னை நிச்சயம் காப்பாற்ற வருவான் என நினைத்துத்தான் அதை செய்தேன்.”

“அண்ணன் சொன்னார். காற்றாடி உடைந்துவிழாமல் இருந்திருந்தால் கயிறு கழுத்தை இறுக்கியிருக்கும்,” என்றேன்.

அவள் சிரித்தாள். “காற்றாடி எப்படி உடையும் மிஸ்டர் அருண்டாக்டர். நான் கயிற்றை மாட்டியது காற்றாடியின் இணைப்பு இரும்பில். காற்றாடி தானாக உடையவில்லை. அவன் வந்தான். அவன் வருகையை நான் உணர்ந்தேன்.”

“அவர் வருவது உங்களுக்கு எப்படித் தெரியும்?”

“தெரியும்.”

“அது உங்களுடைய கற்பனை என என்றைக்காவது உங்களுக்குத் தோன்றியதுண்டா?”

“இதனால்தான் நான் இதுபோன்ற மருத்துவ சோதனைக்கு வருவதில்லை. என் அம்மா நான் தூக்க மாத்திரை உட்கொட்டிருந்தபோது வராதிருந்தால் எல்லாமே சுலபமாக முடிந்திருக்கும். இப்படி முட்டாள்தனமான கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டியிருக்காது. நாம் முடித்துக்கொள்ளலாம்,” அவள் சட்டென எழுந்தாள்.

“மன்னியுங்கள். உங்கள் மனம் என்ன சிந்திக்கின்றது எனத் தெரிந்துகொள்ள வேண்டியது என் கடமை. அதற்கு சில கேள்விகளைக் கேட்டுதான் ஆக வேண்டும்,” என் குரல் நடுங்கியது. டாக்டர் கோதண்டத்திடம் ஏதாவது புகார் கொடுத்துவிட்டாள் என்றால் பெயர் கெட்டுவிடும்.

“உங்களுக்கு என்ன தெரியவேண்டும்?”

“நீங்கள் சற்றுமுன் சொன்னதுதான். ஏன் இரண்டாவது முறை தூக்க மாத்திரைகளை உண்டு தற்கொலைக்கு முயன்றீர்கள்?”

“அவன் வருவான் என்ற நம்பிக்கை எனக்கு முழுமையாக இருந்தது. என்னைக் காப்பாற்றுவான். அப்போது அவன் கால்களைப் பிடித்துக்கொள்ளலாம். மன்னிப்புக்கேட்கலாம் என நினைத்தேன்.”

“ஆனால் அம்மாதானே காப்பாற்றினார்?”

“இல்லை.” அவள் நாற்காலியில் அமர்ந்தாள். “நான் மாத்திரைகளைச் சாப்பிட்டபோது அறையின் கதவைச் சாத்தினேன். எனக்கு நன்றாக நினைவுண்டு. கீழ் அறையில் இருந்த அம்மா பதற்றமாக ஓடிவந்து பார்த்து ஆம்புலன்சுக்கு அழைத்தார். கதவு திறந்தே கிடந்ததாம். யாரோ அழைக்கும் குரல் அவருக்குக் கேட்டதாம். உண்மையில் நான் நிம்மதியான உறக்கத்துக்குள் சென்றுகொண்டிருந்தேன்”

“ஆம் அந்தக் குரல் குறித்து அண்ணன் சொன்னார்”

“அது அவன் குரல்தான்”

“எப்படிச் சொல்கிறீர்கள்?”

“அவன்தான். அவன் இன்னும் என்னைக் காதலிக்கிறான். அவன் உலக சட்ட திட்டங்களுக்காக என்னை நிராகரித்து நெடிய அமைதியில் இருக்கிறான். பூனியான்கள் அவ்வளவு உன்னதமானவர்கள். அந்த உறக்கத்தில் என் நாசி அவன் வாசனையை அறிந்தது. அவன் அங்குதான் இருந்தான். ஆனால் என்னால் என்னை எழுப்ப முடியவில்லை.”

இருவரும் அமைதியாக இருந்தோம். நான் எது பேசினாலும் தவறாகும் என மௌனமாகக் காத்திருந்தேன்.

“மிஸ்டர் அருண் சிலந்திகள் பறக்குமா?” என்றாள்.

“தாவும்”

“இல்லை. பெரும்பாலான சிலந்திகளால் பறக்க முடியும். அதை பலூனிங் என சொல்வார்கள். அதன் உடலில் உள்ள மெல்லிய உரோமம் வழி பூமியில் உள்ள காந்த அதிர்வை அறிந்து அதன் திசையில் எச்சிலை பீச்சும். பின்னர் அதை பிடித்துக்கொண்டே பல மைல்கள் பறக்கும். கடல் மட்டத்தில் இருந்து ஆயிரம் அடி கூட அதனால் பறக்க முடியும். என்னாலும் அப்படி அவன் வருகையை உணரமுடியும். எனது ஒவ்வொரு புலன்களும் அதை அறியும். அவன் இருப்பை உணர்ந்தவுடன் நான் அவ்வுலகினுள் சென்று அவனுடன் கலக்கத் தொடங்கிவிடுவேன்.”

என்றாவது கெட்டிக்கார நோயாளியை எதிர்கொள்ளும்போது நான் திணறுவேன் என டாக்டர் கோதண்டம் சொன்னது சரியென்றேபட்டது. கெட்டிக்காரர்கள் தங்களுக்கு ஏற்ற அத்தனை நியாயங்களையும் சேகரித்து வைத்திருப்பார்கள். அதன் வழி நோயை மேலும் மேலும் சிக்கலாக்கிக் கொள்வார்கள். ரீத்தா அமெரிக்காவில் விலங்கியல் படிப்புக்காகச் சென்று அங்கேயே ஈராண்டுகளைக் கழித்தவள். தந்தை இறந்தபின்னால் ஊர் திரும்பி குடும்பச் சிக்கல்களால் தன் ஆர்வத்தை முடக்கிக்கொண்டவள். உள்ளூரில் படிப்பைத் தொடரப் பிடிக்காமல் விளையாட்டாக காப்புறுதி முகவராகி அதில் நல்ல வளர்ச்சியையும் கண்டுள்ளாள்.  எந்தத் தருணத்திலும் அவளது ஆளுமை பிறழ்ந்ததை தான் கண்டதில்லை என அவள் அண்ணன் சொல்லியிருந்தார். இவ்வளவு சிக்கலிலும் வீட்டிலிருந்தபடியே பிசிரில்லாமல் தனக்குக் கீழ் உள்ளவர்களை இயக்குகிறாள் எனப் பெருமையாகக் கூறினார். அவளைக் கவனமாகத்தான் கையாள வேண்டுமென நினைத்துக்கொண்டேன்.

“மிஸ்டர் அருண், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என எனக்குப் புரிகிறது. உங்களைச் சொல்லிக் குற்றமில்லை. அறிவியல் நமக்கு நிரூபணத்தைதானே சொல்லித் தருகிறது. நான் சொல்வதும் அறிவியல்தான்,” என்றாள்.

“கையில் உள்ள கட்டும் மூன்று நாளைக்கு முந்தையது அல்லவா?”

“ஆம். அவன் எனக்கு ஆபத்தென்றால் உடனடியாக உதவிக்கு வருகிறான் என்பதை அம்மாவும் அண்ணனும் நம்பவில்லை. நான் அதை நிரூபிக்க நினைத்தேன்.”

“ஆனால் நீங்கள்தானே உங்கள் தோழிக்கு மீண்டும் தற்கொலைக்கு முயலப்போவதாக வாட்சப் அனுப்பியிருந்தீர்கள்” என்றேன்.

“மிஸ்டர் அருண், என்னைப் பைத்தியம் என்று முடிவே செய்துவிட்டீர்களா? யாராவது கையை அறுத்துக்கொண்டு தகவலும் கொடுப்பார்களா? சொல்லப்போனால் வலி தாங்காமல் அழைத்துவிடுவேன் என கைப்பேசியை அடைத்துவிட்டு அலமாரிக்குள் வைத்துப் பூட்டியிருந்தேன். சாவியை சன்னலுக்கு வெளியே வீசிவிட்டேன். அலமாரியை உடைத்துதான் முன் தினம் கைப்பேசியை அண்ணன் எடுத்தார். இதோ!” என என் முன் போட்டாள்.

“அவன் வந்தான். இம்முறை நான் அவனை நன்கு உணர்ந்தேன். நேராக என் அலமாரிக்குள் அவன் நுழைந்தபோதே அவன் என்ன செய்யப் போகிறான் என எனக்கு தெரிந்துவிட்டது. நிதானமாக அறையில் போட்டிருந்த தாழ்ப்பாளை திறந்துவிட்டு என்னைப் பார்த்து ஒரு தரம் சிரித்தான். நான் சிரித்துக் கொண்டிருக்கும்போதே அறைக்குள் தோழி ஓடி வருவது தெரிந்தது.”

நான் அவள் சொல்லும் அனைத்தையும் ஏற்றுக்கொள்வதாக சமாதானம் சொல்லி, இரண்டாவது சந்திப்புக்கு திகதி கொடுத்தபோது அவள் வரமாட்டாள் என்றே நினைத்தேன். இடைப்பட்ட நாட்களில் டாக்டர் கோதண்டத்திடம் நான் எதிர்கொண்டுள்ள சிக்கலைப் பற்றி கூறியபோது சிரித்தார்.

“மொத செக்‌ஷனுல உன்னைய யாரு பேஷண்டுக்கு அகேய்ன்ஸா பேசச் சொன்னா? நீ சீக்கிரமா கல்யாணம் பண்ணுறதுதான் நல்லது. பொண்ணுங்க எப்பவும் தாங்க ஜெயிச்சிட்டதா நம்பனும். அப்படி நம்ப வைக்கிறது ஒரு கலை.  யூ சி, நம்ப வைக்கிறது மட்டும்தான். ரிசல்ட் நமக்கு சாதகமா இருக்கனும். அந்த டிரெயினிங் எல்லாம் ஒய்ஃப் கிட்டதான் கெடைக்கும்.”

“நா என்ன செய்யனும் டாக்டர்?” எனப் பரிதாபமாகக் கேட்டேன்.

“ஃபிக்ஸ் டெலூஷன் பேஷன்ட்ஸ் மற்ற நோயாளிங்க போலில்ல. அவங்க மொதல்ல முடிவ எடுக்குறாங்க. அப்பறமா அவங்க மூள அதுக்கேத்தா போல  சம்பவங்கள கோர்த்து வடிவமைக்குது. அது நோயாளியோட இன்டலிஜன்ஸுக்கு ஏத்தா மாதிரி ஸ்ட்ராங்கா இருக்கும். அதனாலேயே அந்த பின்னலை அவ்வளவு சீக்கிரமா பிரிக்க முடியாது. பிரிக்க நெனைச்சா பேஷண்டுக்கு பெரிய பிரச்சனையாகும். ஏன்னா நீ அவங்களோட காலத்துக்குள்ள நுழையிற.”என்றார்.

அவர் சொல்வதெல்லாம் எனக்குப் புரிந்தது. எல்லாமே நூல்களில் உள்ளவைதான். ஆனால் அனுபவத்தின் வழி அவராகக் கண்டடைந்த புதிய உண்மை கிடைக்குமா எனக் கூர்மையாகக் கேட்டுக்கொண்டிருந்தேன்.

“அவ சொல்லுறதெல்லாம் அதிசயமா இருக்கு. அவ அண்ணனும் குழம்பிப் போயிருக்காரு,” என்றேன்.

“யூ சி அருண். ரீத்தா எதையும் திட்டமிட்டுச் செய்யல. விவாதம்தான் ஒரு கருத்த உறுதியாக்குது. ஒரு விசயத்த பத்தி சந்தேகமோ, கேள்வியோ இல்லாதவங்க அதப் பத்தி தனக்குள்ள விவாதிக்கவே மாட்டாங்க. எதிர்க் கருத்து இருந்தா மட்டும்தான் விவாதம் நடக்கும். விவாதிச்சி, விவாதிச்சி அவங்க தன் பக்க கருத்த ரொம்ப உறுதியா ஆக்கிடுறாங்க. ஒரு கருத்துல அசைக்க முடியாத உறுதியோட இருந்தாங்கன்னா அவங்ககிட்ட அதப் பத்தின சின்ன சந்தேகமும் இருக்கும். சொல்லப்போன, அந்தச் சின்ன சந்தேகத்த மலுங்கடிக்கத்தான் அவங்க நிறைய தருணங்கள உருவாக்கி சந்தேகத்துமேல வாரி வாரி போட்டு மூடுறாங்க. சொ… அந்த சந்தேகத்தத் தேடு. சிம்பிள்,” என்றார்.

நான் அந்தச் சவாலை ஏற்றுக்கொண்டேன். அதீத மன எழுச்சியில் மருள் வந்து ஆடுபவர்களின் குரலில் ஏற்படும் மாற்றங்களை ஒட்டி செய்யப்பட்ட ஆய்வுகளை வாசித்தேன். பிறழ்வாளுமையின் உச்சமான சாத்தியங்கள் இணையத்தில் நிறையவே இருந்தன. அவள் வருகைக்காக மறு வாரம் தொடங்கியது முதலே அந்தரங்கமாகக் காத்திருக்கத் தொடங்கினேன். ஆனால் தாதிகளிடம் அவள் வராமலிருந்தால் பரவாயில்லை எனக் கூறிக்கொண்டேன். என் ஆர்வம் யாருக்கும் தெரியக்கூடாது என விரும்பினேன்.

இரண்டாவது சந்திப்பில் ரீத்தா மேலும் பிரகாசமாகத் தெரிந்தாள். அவளது உற்சாகமே சுலபமாக அனைத்தையும் சரிகட்டிவிட முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது. கைகளில் கட்டு இல்லை. கறுநிறத் தழும்பு மட்டும் மிச்சமிருந்தது.  அமெரிக்காவில் இருந்துகொண்டே தமிழ்ப் படம் அதிகம் பார்த்திருப்பாள் என நினைத்துக்கொண்டேன்.

“நன்றாக யோசித்துப் பார்த்தேன் மிஸ்டர் அருண். அவனை நினைத்து என்னை அழித்துக்கொள்வதைவிட அவனை மறப்பதுதான் சரியாகத் தோன்றியது.” என்றாள்.

“வெரி குட்!” என சமாதானமாக நாற்காலியில் சாய்ந்தேன்.

“அவன் திரும்ப வந்தாலும் எப்போதாவது போய்விடுவானோ என்று பயமாக இருக்கும். என்னால் பயந்து பயந்து வாழ முடியாது,” அவள் உறுதியாகப் பேசியது எனக்கு புத்துணர்ச்சியைக் கொடுத்தது. நான் சேர்த்து வைத்திருந்த கேள்விகள் எதற்கும் வேலையில்லை. நான் அப்பொழுதே புதிய அணுகுமுறையுடன் தயாராக வேண்டும் என்ற எண்ணம் பதற்றத்தைக் கொடுத்தது. டாக்டர் கோதண்டம் சொன்னதுபோல இது சிக்கலான நரம்பு முடிச்சுதான். அதைப் பிரித்து சிக்கலாக்குவதைவிட  திட்டமிட்ட இன்னொரு நரம்பு பின்னலை உருவாக்கி அதன் வழியிலேயே அழைத்துச்சென்று வெளியேற்றிவிடலாம். எனவே அவள் சொல்வதை முழுமையாக ஏற்பது மட்டுமே சரியெனப்பட்டது.

“ஆமாம் இந்த மாதிரி ஆம்பளைங்கள நம்பவேகூடாது. அது யாரா இருந்தா என்ன?” அழுத்தமாகக் கூறினேன்.

“அதனால… குழந்தையையும் களைச்சிடலாமுன்னு இருக்கேன்,” அவள் அழவில்லை. கண்களை மட்டும் தாழ்த்திக்கொண்டாள்.

“ஆனா அதுக்கும் அவனோட அருகாமை வேணும். அவனில்லாம இந்தக் கருவ அழிக்கவும் முடியாது.”

எனக்கு மீண்டும் அவள் சிக்கலுக்குள் இன்னொரு சிக்கலை இணைத்து இறுக்குவதாகத் தோன்றியது.

“மாதவிடாய் உங்களுக்கு நின்று எத்தனை மாதங்கள் ஆகின்றன?”

“மிஸ்டர் அருண், தூமையாக வெளியேற இது மனுஷக் குழந்தையா? புரிஞ்சிக்கிங்க.”

அப்போது நான் ஒன்றை கேட்க நினைத்தேன். மிக அந்தரங்கமானது என விழுங்கிக்கொண்டேன்.

“சரி, உங்களுக்குதான் ஏதேனும் திட்டங்கள் இந்நேரம் தோன்றியிருக்குமே?” என்றேன்.

“இருக்கிறது. நான் மீண்டும் பூலாவ் கெசில் போகவேண்டும். அவனைத் தேடவேண்டும். என் வீட்டில் அதற்கு அனுமதி கொடுக்கமாட்டார்கள். மூன்று முறை என் தற்கொலை முயற்சி அவர்களைக் கலங்கடித்துவிட்டது. அம்மா தினமும் அழுகிறார். போமோ, கறுப்பு சாமி கோயில், தாயத்து, ஹோமம் என அண்ணன் சாகடிக்கிறான். இத்தனைக்கும் நான் அவர்களிடம் முழு உண்மையையும் சொல்லவில்லை”

“கர்ப்பமாக உள்ளதைதானே?”

“என் தோழிக்குக்கூடத் தெரியாது. உங்களுக்கு மட்டும்தான். ”

எனக்குக் கொஞ்சம் கௌரவமாக இருந்தது. முகத்தை சீரியஸாகவே வைத்திருந்தேன்.

“நீங்கள் எனக்கு ஓர் உதவி செய்ய வேண்டும். என் அண்ணன் எந்த நேரமும் காவல் நாய்போல கூடவே வருகிறான். தனியாக விடுவதில்லை. அறையில் இருந்த அனேகமான பொருள்களை எடுத்துவிட்டான். மின்சாரத்தின் வழி தற்கொலை செய்துகொள்வேன் என அதன் மூலங்களை அடைத்துவிட்டான். இரவில் அம்மா என்னுடன் படுத்துக்கொள்கிறார். சின்ன சத்தம் கேட்டாலும் பேயைக் கண்டவர்போல பார்க்கிறார். எனக்கு மூச்சடைக்கிறது. என் அண்ணன் உங்களை நம்புகிறார். நான் ஒரு தரம் பூலாவ் கெசில் செல்ல அனுமதி வாங்கிக் கொடுக்க வேண்டும்,” என்றாள்.

அது ஆபத்தான பரிந்துரை என அறிவேன். அவளுக்கு என்ன நடந்தாலும் பின்னர் நானே பொறுப்பெடுக்கும்படி ஆகிவிடும். நான் எவ்வளவு சொல்லியும் அவள் அத்தீவுக்குச் செல்வதில் பிடிவாதமாக இருந்தாள். அவள் கெஞ்சுவது அவ்வளவு இனிய அனுபவம். எப்படி முகத்தின் ஒவ்வொரு அசைவையும் நடனம்போல ஆக்குகிறாள் என வியந்துகொண்டேன்.

மறுவாரம் தீவுக்குள் சென்றபின் தொலைபேசி இணைப்பு கிடைக்காது என்பதால் கைப்பேசியை வீட்டிலேயே விட்டுவிட்டு வந்திருந்தாள். நானும் ரீத்தாவை சந்திக்க வெளிநாட்டு மருத்துவர் வருகிறார் என வாய்கூசாமல் பொய் சொல்லியிருந்தேன். மாலைக்குள் திரும்பிவிடலாம் எனத் திட்டம். உண்மையில் எனக்கு அவளுடன் இருக்க பிடித்திருந்தது. பொதுவாகவே மலேசியர்களில் கோர்வையாக ஒரு கருத்தை பேசுபவர்களைப் பார்ப்பது அறிது. அதிலும் பெண்களிடம் திட்டுத்திட்டான கருத்துகளே இருக்கும். ரீத்தாவின் சிந்தனை முறையும் அதைச் சொற்களாக்கும் விதமும் ஈர்ப்பானது. மேலும் ஒரு மருத்துவராக இருந்து அவள் உடல்வாகு குறித்து இங்கு எழுதுவது தொழில் துரோகம்.

பூலாவ் கெசிலை சமாதிகளின் தீவு என தாமதமாகத்தான் புரிந்துகொண்டேன். பார்க்கும் இடமெல்லாம் சமாதிகள். பல்வேறு மதத்தைச் சார்ந்தவர்களும் ஒரு காலத்தில் தவம் செய்ய அத்தீவுக்கு வந்துள்ளார்கள் என குறிப்புகள் எழுதப்பட்டிருந்தன. மதுபானம் விற்கவோ எடுத்துவரவோ அனுமதிக்கப்படாததால் வெளிநாட்டினர் என யாருமே இல்லை. தீவில் மொத்தம் இருபது பேர் இருந்தாலே ஆச்சரியம்போல வெறிச்சோடிக் கிடந்தது.

வருபவர்களுக்கு நான்கு வேளையும் இலவச உணவு வழங்கும் பொறுப்பை ஒரு மதக் குழு ஏற்றிருந்தது. யாரும் யாருடனும் அதிகம் பேசிக்கொள்ளவில்லை. இயல்பாகவே ஓர் ஆன்மிக உணர்வு அத்தீவில் இருப்பதாகத் தோன்றியது. உணவுக் கடைகள் ஒன்றிரண்டு இருந்தன. ஆனால் அவர்கள் வாடிக்கையாளர்களுக்குக் காத்திருப்பதாகத் தெரியவில்லை. எனக்கு எல்லாமே புதுமையாக இருந்தது.

எதையும் நின்று கவனிக்க ரீத்தா எனக்கு அவகாசம் தரவில்லை. சமாதிகள் இருந்த இடத்தைத் தாண்டி நெடுந்தூரம் அழைத்து வந்தாள். தன் காதலனைப் பாத்துவிட வேண்டுமென்ற ஏக்கம் அவளை வாட்டியது. அந்த அனுபவத்துக்காக நானும் காத்திருந்தேன். எங்கும் நிறைந்திருந்த அமைதி ஒருவித அச்சத்தையும் ஆர்வத்தையும் இணைந்தே கொடுத்தது. இனி என்ன செய்யப் போகிறாள் என்ற கேள்வியே எழுந்துகொண்டிருந்தது.

ரீத்தா கைகளை நீட்டி என்னை மீண்டும் பாறையில் ஏற்றிவிடச் சொன்னபோது தயங்கியபடியே நீட்டினேன்.  கை கடல் நீரில் குளிர்ந்தது.

“இப்படியே போகமுடியாது; காய வைக்க வேண்டும்,” என்றாள். அவள் பாறையில் அமர்ந்து கொண்டாள்.  உடை காயக்காய கருமையிலிருந்து மெல்ல செந்நிறம் எட்டிப் பார்த்தது.

“இனி என்ன செய்வதாக இருக்கிறாய்?” என்றேன். அவள் எந்தக் கவலையும் இல்லாதவளாகத் தெரிந்தாள்.

“அவன் இங்கு இல்லை. இருந்தால் என்னால் உணர முடியும். இனித் தேட இடமும் இல்லை,” என்றாள்.

“நீ விரைவில் யாரையாவது திருமணம் செய்துகொள். இது குறித்தெல்லாம் உன் கணவனிடம் சொல்ல வேண்டியதில்லை,” என்றேன். துணியின் ஈரம் காய்ந்தபோது காற்றில் அவள் உடை அலையென அலைந்தது. அவள் பாறையில் அப்படியே படுத்துக்கொண்டு வானத்தைப் பார்த்தாள்.

“இலைகளுக்கு இடையில் தெரியும் வானம் அழகானது,” என்றாள்.

“ஒரு குழந்தை பிறந்தால் எல்லாமே சரியாகிவிடும்,” என்றேன். அப்போது அவள் கைகளை மெல்லப் பற்றினேன். அதை உண்மையில் ஆறுதலுக்காகத்தான் செய்தேன். நான் சொன்னதைத் தவறாக எடுத்துக்கொள்ளாதே என்பதைச் செய்கையால் காட்ட முயன்றேன். அவளாக என் கரங்களை எடுத்து தன் வயிற்றில் வைத்துக்கொண்டாள்.

“பூனியான் அனுமதியில்லாமல் நான் எதையும் செய்ய முடியாது. அப்படிச் செய்தால் என்னைத் திருமணம் செய்பவனுக்கோ என்னுடன் உறவு கொள்பவனுக்கோ உடனடியாக உயிருக்கு ஆபத்து ஏற்படும். அவன் நேரில் தோன்றிக் கொல்வான். சிரிப்பு மாறாமல் முன்பு சொல்லியிருக்கிறான்,” என்றாள். நான் மெல்ல கைகளை மேலேற்றினேன். ஒரு வேட்டையாடும் சிலந்தியைப்போல. அவ்வளவு நிதானமாக. அவ்வளவு கவனமாக.

“உண்மையில் மலாய் மொழியில்தான் இதற்கு சரியான பெயர் உண்டு. நுண்மையான உயிர் எனச் சொல்கிறார்கள். கிருமிகள்கூட நுண்மையான உயிர்தானே. தாக்கும் வரை நாம் அவற்றை அறிவதில்லை அல்லவா?” என்றபடி என் கண்களைப் பார்த்தாள். நாலாபுறமும் விரிந்து பரந்து கிடந்த கூந்தலுக்கு மத்தியில் அவள் முகம் வசீகரித்தது.

“அதைப் பார்க்கும் கருவிகள் உண்டு,” என்றேன். உண்மையில் நான் பேசும்போதுதான் இயல்பாக கைகளை நகர்த்த முடிந்தது. பேச்சின் இணையசைவுபோல. அவள் உடல் கொதிப்பது தெரிந்தது. அந்தக் கொதிப்பிலேயே உடை விரைவாக காய்ந்தது.

“கருவிகள் கண்டுபிடிக்காதது மனிதனின் குற்றமில்லையா? இந்த உலகில் ஏராளமான நுண்மையான உயிர்கள் உள்ளன. இன்னும் மனிதன் பார்க்காதவைகள், பெயர் வைக்கப்படாதவைகள் என நீரிலும் நிலத்திலும் எவ்வளவோ உள்ளன. அதுபோலதான் முயன்றாலும் கண்ணுக்கு அகப்படாதவைகள்,” என்ன நினைத்தாளோ என் கைகள் அதற்கு மேல் நகராமல் இறுக்கப் பற்றிக்கொண்டாள். ஆனால் அகற்றவில்லை.

நான் ஏதோ சொல்ல வாயெடுத்து அமைதியானேன்.

“முன்பு மரத்தின் உச்சியில் ஏதோ அசைவதை பார்த்து பயந்தீர்கள் அல்லவா?” அவள் கேட்டபோது நான் முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டேன்.

“நான் கவனித்தேன். அது ஓராங் ஊட்டான். பச்சைப் பசேல் என்ற மரத்தில் செந்நிறமான உரோமங்கள் கொண்ட அதை ஏன் உங்களால் பார்க்க முடியவில்லை? உண்மையில் பார்க்க முடிய வேண்டுமல்லவா?” என்றாள்.

“உச்சியில் இருப்பதால் பார்வைக்கு அகப்படவில்லை,” என்றேன். நான் நினைத்தாலும் அசைக்க முடியாத பிடியாக இருந்தது.

“இல்லை. சூரிய ஒளியில் உள்ள ஆரஞ்சு, சிவப்பு நிறங்களை மரத்தின் இலைகள் உரிஞ்சிக்கொள்வதால் அதன் உரோமம் நிறக்கவில்லை. நம் கண்களுக்கு உரோமத்துக்கு அடியில் உள்ள கரும் தேகம் மட்டுமே தெரியும். அது கிளையுடன் கலந்துவிடும். எனக்கு ஓராங் ஊத்தான்களின் அந்த இயல்பு தெரிவதால் அது மரத்தில் இருப்பதையும் கண்டுகொண்டேன்,” என்றாள்.

நான் ஒன்றும் பேசவில்லை.

“ஒரே நிமிடத்தில் நீங்கள் நினைப்பதுபோலவே என்னால் சிந்திக்க முடியும். இதெல்லாம் என் கற்பனை. எல்லாமே பொய். நானாக உருவாக்கிக்கொண்ட பயங்கள். இப்படி என்னை நானே நம்ப வைக்க முடியும். ஆனால் அதற்கு சான்றாக ஏதாவது ஒன்று நிகழ வேண்டாமா? இதுவரை அப்படி ஒன்றும் நிகழவில்லையே!”

“என்ன நிகழ வேண்டும்?” என்றேன்.

“அதுதான். நான் திருமணம் செய்துக்கொண்டால் என் கணவர் இறக்கமாட்டார் என எனக்கு நம்பிக்கைத் தோன்ற வேண்டுமல்லவா? அதைப் பற்றிக்கொண்டுதானே நான் மீள முடியும்?” அவள் கைப்பிடியை விடுவித்தாள். உடல் முன்பிலும் உஷ்ணமாக இருந்தது. மார்பு அதீதமாக ஏறி இறங்கியது.

“அதற்கு?” என்றேன். மனம் உதறிக்கொண்டு எழுந்தது. நான் ஒரு மருத்துவனாக யோசிக்கத் தொடங்கினேன். ரீத்தா என்னைத் தீவுக்கு அழைத்து வர உண்மையான காரணம் என்னவாக இருக்குமென்று மூளை ஆராய்ந்தது.

“எது உண்மை எனச் சோதிக்க நம் இருவருக்கும் இருப்பது ஒரே வழிதான்” என்றவள் கண்களை மூடினாள்.

இது நடந்து நான்கு வருடங்களில் என் பயிற்சியை முடித்துவிட்டு டாக்டர் கோதண்டம் கிளினிக்கிலேயே வேலைக்கும் சேர்ந்தேன். இந்தப் பணிக்காலத்தில் நூற்றுக்கணக்கான நோயாளிகளைப் பார்த்துவிட்டேன். குணமானவர்களும் மன அவஸ்தையில் உள்ளவர்களும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் என்னை அழைத்து தங்கள் அப்போதைய நிலை குறித்து பேசுவதுண்டு. ஆனால் ரீத்தாவிடம் இருந்து இப்போது வரை எந்தத் தொடர்பும் இல்லை.  அவள் அண்ணனும் தொடர்புகொள்ளாதது என்னை கொஞ்சம் கொஞ்சமாக பயத்திலிருந்து மீட்டது. அவள் கைப்பேசி எண்ணையும் மாற்றியிருந்தாள். டாக்டர் கோதண்டம் ஒன்றிரண்டு முறை குடைந்து கேட்டுவிட்டு, பின்னர் அவளைப் பற்றி பேசுவதை மறந்துவிட்டார். பயிற்சிக்கு வரும் இளம் மனோவியளாலர்களிடம் பேசும்போதெல்லாம் நான் ரீத்தாவுக்கு ஏற்பட்ட அனுபவத்தை மேலோட்டமாகப் பகிர்வேன். எல்லாமே மனதின் சூட்சுமம்தான் என நிரூபணங்களுடன் போதிப்பேன். ஆனால் ஏன் அந்தத் தருணத்தை அவ்வளவு அச்சத்துடன் விலகிக் கடந்தேன், ஏன் அவளை அங்கேயே விட்டுவிட்டு துறைமுகத்தை நோக்கி ஓடினேன் என்ற அந்தரங்கமான கேள்விகளுக்கு மட்டும் என்னிடம் இன்றுவரை உறுதியான பதில் இல்லை.

புதிய சிறுகதைகள்:

கழுகு

உச்சை

சியர்ஸ்

ராசன்

கன்னி

(Visited 644 times, 1 visits today)