சிறுகதை : ராசன்

“உண்மையாகவே ரத்தினக்கல்லை எடுக்கதான் அமிர்கான் ராஜநாகத்தை வளர்த்தார் துவான்” தீபன் சொல்வதைக் கேட்டு இன்ஸ்பெக்டர் அமிருல்லா அலி சிரித்தார்.

“பேசாமல் இந்த வேலையை விட்டுட்டு பாம்புப்பண்ணை வைக்கலாம்போல,” அவருக்குச் சிரிப்பு அடங்கவில்லை.

“எல்லா பாம்பிலும் ரத்தினக்கல் கிடைக்காது துவான். அது வேறு மாதிரி நாகம்” என்றான். அதைக்கேட்டு அருகில் நின்ற காப்ரலும் சார்ஜனும் சிரிப்பது எரிச்சலை மூட்டியது.

கோலாலம்பூர் வந்த நாள் முதல் அவன் போலிஸ்காரர்களுடன் புழங்கிக்கொண்டிருக்கிறான். அவனுக்கு அவர்களின் மொழி தெரியும். விசாரிக்கும் பாணி எப்போது தீவிரமாகும் என்ற அனுபவமும் உண்டு. தெரிந்ததை எல்லாம் சொல்லிவிட்டால் ஜாமின் சுலபமாகக் கிடைத்துவிடும். நல்ல பயிற்சி உள்ள போலிஸ்காரர்கள் குற்றவாளி சொல்வதில் பொய் இருந்தாலோ பாதி உண்மையைச் சொன்னாலோ எளிதாகக் கண்டுபிடித்துவிடுவார்கள். அது அவன் நிலையை மேலும் சிக்கலாக்கும் என்பதையும் அறிவான். அவன் தனக்குத் தெரிந்த உண்மையைத்தான் சொன்னான்.

தனது பிரச்சினை தீர முதன்முறையாக அமிர்கானைத் தேடி சென்றபோது குரல் கேட்டதே தவிர அவரைப் பார்க்க முடியவில்லை. கூட்டம் நெருக்கியிருந்தது. இடைவெளிகளில் பார்வையை நீட்டியபோது பிரம்புக் கூடைகள் அடுக்கிக்கிடந்தன. தமிழிலும் கொச்சையான அரைகுறை மலாயிலும் அவர் குரல் கேட்டுக் கொண்டிருந்தது.

“ஐயா கேட்டுக்கோங்க அம்மா கேட்டுக்கோங்க. துவான் புவான் பாய்க் – பாய்க் டெங்கார்.  பாம்புங்கறது தேவம். தேவத்தை பலிக்காத; தேவத்தை அடிக்காத; தேவத்த கொல்லாத. ஐயா, பாம்போட ஒரு பல்லு  பதிஞ்சிருந்தா தோலை தொட்டிருக்கு, ரெண்டு பல்லு பதிஞ்சிருந்தா தசைய குத்தியிருக்கு, ஐயா மூனு பல்லு பட்டிருந்தா எலும்ப நக்கியிருக்கு, நாலு பல்லு பட்டா ஒம்மூளைக்கு முத்தங்கொடுத்துருக்கு. முத்தத்த வாங்கிப்புட்டா ஒங்குடும்பத்துக்கு வேலை கொடுக்காம வெவகாரம் ஏதும் பண்ணாம சத்தமில்லாம குழிக்குள்ளாற போயி சமத்தா படுத்துக்கவேணும்.”

கூட்டம் சிரித்தது.

தீபன் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டு எக்கிப்பார்த்தான். பெரிதும் சிறிதுமாகப் பல மருந்து புட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஒரு சிறுவன் அந்தப் புட்டிகளைத் தட்டில் சுமந்துகொண்டு “செப்புலோ ரிங்கிங்…செப்புலோ ரிங்கிட்…” எனத் திரும்ப திரும்ப கத்திக் கொண்டு கூட்டத்தினரைச் சுற்றி வருவதைப் பார்க்க முடிந்தது. வேண்டியவர்கள் தட்டில் பத்து ரிங்கிட்டைப் போட்டு புட்டிகளை எடுத்துக்கொண்டிருந்தனர். சேர்ந்த நோட்டுகளை அமிர்கான் பக்கத்தில் இருந்த சிறிய மரப்பெட்டியில் போட்டுவிட்டு பவ்யமாக நின்றுகொண்டான். 

“அம்மா அறியாதவன் தெரியாதவன் புரியாதவன் அர வைத்தியம் சொல்வான். வெரலி மஞ்சள சூடாக்கி கடிபட்ட எடத்துல கட்ட சொல்வான். பாம்பு வெசமென்னா ஒம்ம ஊட்டு ஆம்பளயா மஞ்ச வாசத்துக்கு மயங்க?”

மீண்டும் கூட்டத்தில் சிரிப்பொலி கேட்டதும் மலாய்க்கார கிழவன் ஒருவன் புரியாமல் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டான்.

“நம்ம ஊட்டு முன்னுக்கு நெலமே இல்ல. வாழ மட்டையில சாறெடுக்க எங்க போய் தேடுவ? ஆமணக்கோட ஏழு மொளக அரைச்சி கொடுக்கலாமுன்னா யேத்தா நீ ஆமணக்கு தேடுற சந்தடி சாக்குல அவங்கணக்கு முடிஞ்சிடாதா? அம்மா இப்பவே முளிச்சிக்க… எந்த வெசத்தையும் முறிச்சிப்போடும் மருந்து இது. நாகம் கடிச்சா ரத்தம் ஒறையாது மத்தது கடிச்சா ரத்தம் ஒழுகாது. இருக்கும்போதே வாங்கிக்கோ ஒங்கொலத்த காத்துக்கோ.”

சிறுவன் மீண்டும் தட்டில் தைலங்களை அடுக்கிக்கொண்டு சுற்றி வந்தான். அமிர்கான் சொன்னதின் சாரத்தை மலாயில் ஒப்புவித்தான். முன்பிலும் அதிகமானவர்கள் தைலத்தை வாங்கினர். வாங்கியவர்கள் கூட்டத்தை விட்டு களையாமல் நின்றிருப்பது தீபனுக்கு ஆச்சரியமாக இருந்தது. இன்னும் எதற்காகக் காத்திருக்கின்றனர் எனப் பார்த்துக்கொண்டிருந்தான். இப்போது சிறுவன் இருப்பதில் பெரிய கூடையாக எடுத்துவந்து அவரின் முன்பு வைத்தபோது கூட்டம் கொஞ்சம் நெளிந்து அவரை நெருங்கியது. சின்ன சலசலப்பு எழுந்தது.

“சீர நஞ்சு அவ்வளவு லேசுல கெடைக்காதம்மா. நாலு வக பாம்போட வெசத்த சேத்து, அத கொஞ்சங் கொஞ்சமா குதிரைக்கு கொடுத்து, அதோட ரத்தத்துல இருந்து சீரத்த மட்டும் பிரிச்சு எடுக்குறதெல்லாம் சித்தனோட சூத்துரமய்யா. வெவரம் உள்ளவன் வாங்கிக்கோ. வெளங்காதவன் வெலகிக்கோ. மறுபடி வருவனான்னு தெரியாதய்யா. மானமும் உசுரும் போனா திரும்பாதய்யா,” என்றவர் கூடையின் சிறு துவாரம் வழியாகப் பார்த்தார்.

“என்னடா ராசா… வெளிய வர உத்தேசம் இருக்கா?” என கூடையில் உள்ள நாகத்திடம் நேரடியாகவே கேட்டார். பின்னர் வெளிறிய முகத்துடன் “ராசன் கோவமா இருக்கான். வெளிய வந்தா ஒங்கள்ள யாரையாவது நக்கிப் பாத்துகிடுவான்,” கூட்டம் கிசுகிசுத்து ஒரு அடி பின்வங்கியதும் அவர் முழுமையாகத் தெரிந்தார். நல்லா ஆஜானுபாகுவான, கருமையான தேகம். பாத்தேக் சட்டை காற்றில் அலையெழுப்பியது. உறுதியான மூக்கும் தடிமனான மீசையும் புருவங்களும் அவரை முரடராகக் காட்டியது. தலையில் குல்லாய் அணிந்திருந்தார். இரண்டு கரங்களிலும் பல்வேறு வண்ண கற்கள் பதித்த மோதிரங்கள்.  அருகில் நான்குக்கு இரண்டு அளவு பதாகையில் பலவிதமான பாம்புக்கடி காயங்களும் மற்ற விஷ ஜந்துக்களின் படங்களும் சருகான மூலிகைகளும் பாட்டில்களில் இருந்தன. 

தீபன் அந்தக் கூடையில் உள்ள பாம்பைப் பார்க்க முயன்றான். பிரம்பால் நன்கு இறுக்கிப் பின்னப்பட்ட கூடை அது. இரண்டு ஐம்பது காசுகளை ஒரே நேரத்தில் செருகும் அளவுக்கு மட்டுமே துளையிடப்பட்டிருந்தது.

“ஐயா கேளுங்க அம்மா கேளுங்க. என்ன கடிபட்டாலும் நம்ம மருந்த தேச்சிக்கிட்டா வெஷம் முறிஞ்சிடும். கொத்துப்பட யாராவது இருந்தா முன்னுக்கு வந்து நில்லுங்க. கூடைய தொறக்கலாமா சொல்லுங்க. மத்தவங்க எல்லாம் தூர எட்டித் தள்ளுங்க.”

சிறுவன் அதையே மலாயில் சொல்லவும் கூட்டம் மேலும் சில அடிகள் பின் வாங்க நல்ல இடைவெளி கிடைத்தது. “ஹப் ஹா” என சத்தமிட்ட அமிர்கான் கூடையில் ஒரு தட்டுத்தட்டி மூடியில் கைகளை வைத்தார். கூட்டத்தில் சலசலப்பு. சிலர் கைதட்டினர். சிறுவன் இம்முறை எடுத்து வந்த புட்டிகள் அனைத்தும் பரபரப்பாக விற்றன. யாரும் முன்னேறி வரவில்லை.

“ராசா சாந்தம் கொள்ளு ராவானா தவள தாறேன். சீற்றத்த கொரைச்சுக் கொள்ளு சிட்டுக்குருவி தின்னத்தாறேன். படத்த விரிக்காம பத்திரமா படுத்துக்கொள்ளு. ஏதும் தப்பிருந்தா எலி தருவேன் ஏத்துக்கொள்ளு. ஒன்னுடைய முத்தம் வாங்க கூட்டத்துல எவனுமில்ல என்னோட மருந்த தேய்ச்சா நாட்டுல எமனுமில்ல.” அமிர்கான் பாடிக்கொண்டே ஒரு வெள்ளைத்துணியைக் கூடையில் மூடினார். கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாகக் களையத் தொடங்கவும் சிறுவன் எஞ்சி நின்றவர்களிடம் புட்டிகளை விற்பதும் பணம் வாங்குவதுமாக இருந்தான்.

ஏழெட்டுப் பேர் அமிர்கானைச் சுற்றி நின்று ஏதோ ஆலோசனை பெற்றுக்கொட்டிருந்தனர். பெரும்பாலும் மலாய்க்காரர்கள். தீபன் மற்றொரு சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டு அவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தான். பாம்புகள் வீட்டில் படையெடுப்பது, கனவில் நாகம் உதட்டில் கடிப்பது, நாகத்தைப் பார்த்து பயந்து காய்ச்சல் கண்டிருப்பது என பல்வேறு சிக்கல்களுக்கும் மருந்தாக அவரிடம் நாகத்தின் நஞ்சு, தோல், பல் போன்றவற்றால் செய்த தாயத்து குப்பிகள் இருந்தன. ஒவ்வொருவருக்கும் குப்பிகளைக் கொடுக்கும்முன் அவர் விரிவான விளக்கம் சொன்னார். சிலர் குடும்பப் பிரச்சினைகளையும் அவரிடம் கூறி ஆலோசனை கேட்டனர். தன் மகள் பேசினாலே மருமகன் எரிச்சல் அடைகிறான் என அலுத்துக் கொண்டு கூறிய கிழவியிடம் காட்டெருமையை வேட்டையாடும்போது பெண் சிங்கங்கள்தான் எருமையின் உடலைக் கடிக்கும், ஆண் சிங்கம் எருமையின் வாயைக் கடித்து சத்தம் போட விடாமல் மூடிக்கொள்ளும். ஆண்களுக்கு மத்தவனோட சத்தம் பிடிக்காது என்றார். தன் மனைவி எப்போதும் கத்திக்கொண்டே இருக்கிறாள் என சோர்ந்து போயிருந்த இளைஞனிடம், காகம் ஆபத்து நேரத்தில் கரைவது கோபத்தினால்ல. அந்த தருணத்தை நினைவு வைத்துக்கொள்ள முயல்கிறது. அடுத்தமுறை அது ஆபத்தில் சிக்காமல் இருக்க அது ஒரு பாடம். பெண்களும் கத்திகத்திதான் தங்கள் இக்கட்டான தருணங்களை நினைவில் வைக்கிறார்கள் என்றார். தாயத்துகளை ஒவ்வொருவரும் மரியாதையாக வாங்கிச் சென்றனர்.

தீபனுக்கு அவர் பேசுவதெல்லாம் சுவாரசியமாக இருந்தது. எங்கிருந்து இதையெல்லாம் கற்றுவந்து பேசுகிறார் என ஆச்சரியப்பட்டான். நிவாரணம் தேடி வருபவர்களை முதலில் விரிவாகப் பேசவிட்டு அதில் ஒரு இழையைப் பிடித்து இழுத்து அவர் சொற்களால் உருவாக்கும் பெரிய வலைப்பின்னலில் வந்தவர்கள் சிக்குவதும்; அவர்கள் துடிப்பு அடங்கியப்பிறகு தாயத்தைப் பெற்றுச் செல்வதையும் கவனமாகப் பார்த்தபடியே இருந்தான். நோயென வந்தவர்களின் முகத்தில் பரம திருப்தி. தீபனுக்குத் தனது சிக்கலைப் பொதுவில் சொல்ல தயக்கமாக இருந்தது. எல்லாம் முடிந்து அவர் தனது பழைய ‘டத்சன்’ காரில் கூடைகளை அடுக்கத் தொடங்கவும் மெல்ல நகர்ந்து அவர் பக்கம் சென்றான். “மருந்தெல்லாம் அங்க வாங்கனும் தம்பி,” என சிறுவனைக் கைக்காட்டினார் அமிர்கான்.

அவன் ஒன்றும் பேசாமல் சென்றுவிட்டான். அதற்குப் பிறகு ஒவ்வொரு  ஞாயிறும் அவர் தைலம் விற்கும் வெவ்வேறு வட்டாரங்களில் கூட்டத்துடன் கூட்டமாக நின்றுகொண்டிருப்பான். ஒருமுறை போன வட்டாரத்துக்கு மறுமுறை அவர் செல்வதே இல்லை. எந்த வட்டாரத்திலும் அவரது நாகத்தின் கோபம் தணிந்ததில்லை. அவர் அந்தக் கூடையைத் திறந்ததும் இல்லை. ஆனால் அவர் பேச்சினால் கூட்டத்தை வசீகரிக்கும்விதம் அவனுக்குப் பிடித்திருந்தது. அதைவிட தனிப்பட்ட முறையில் சந்தித்துத் தாயத்து வாங்க வருபவர்களிடம் அவர் கதையைக் கேட்கும் லாவகமும் சொற்களைப் பின்னிப்பின்னி அவர் விஸ்தாரமாகப் பதில் சொல்லும் முறையும் சுவாரசியமாக இருந்தது. அன்று தீபன் அவர் அருகில் சென்று மறுபடி நின்றபோதுதான் சுருட்டுப் புகைப்பார் எனத் தெரிந்தது. புறப்படும் அவசரத்தில் இருந்தார்.

“கொஞ்சம் ஒடம்புக்கு முடியல” என்றான்.

“அத கண்ண பாத்தாலே தெரியுது. என்னா சீக்கு?” என்றார். அவர் எதையும் சத்தம்போட்டு பேசுபவராக இருந்ததால் தான் ஏதும் சொல்லப்போக அதை பகிரங்கப்படுத்திவிட்டால் என்ன செய்வது எனத் தயங்கினான். பூத்தை சாற்றியவர்  “அடச்சொல்லுப்பா,” என்றார். அதுவே அதிக சத்தமாக ஒலித்தது.

சற்று தயங்கி “நாகத்தோட பித்து வேணும்,” என்றான். அதை கேட்க தனக்குத் தைரியம் வந்ததே ஆச்சரியமாக இருந்தது.

அவனை ஒரு தரம் கூர்ந்து பார்த்தவர். “நீ என்னா கேக்குறன்னு தெரிஞ்சிதான் கேக்குறியா?” என்றார்.  அவர் வலது கன்னம் துடிப்பதைப் பார்க்க முடிந்தது.

“செந்தாமரை வைத்தியர்தான் சொன்னாரு,” தீபன் மிரட்டலாகப் பேசியே பழகியவன். கடந்த ஆறுமாதமாக அவன் பட்ட பாட்டில் குரலும் மனமும் ஒடுங்கியிருந்தன.

“தம்பி, பித்து ஒன்னும் பீ இல்ல பொறுக்கி எடுத்துக்க. அதுக்கு பாம்ப கொல்லனும். தெரியுமா?” என்றார்.

அவனுக்கு அது தெரியும். ஆனால் ஒன்றும் சொல்லாமல் மௌனமாக இருந்தான். சிறுவன் வியாபாரத்தை முடித்துவிட்டு வரவும் காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார்.

சத்தம் கேட்டு இரவில் கொட்டாவி விட்டபடி கதவைத் திறந்தபோது தீபன் வீட்டின் முன்பு நிற்பான் என அவர் எதிர்பார்க்கவில்லை.

“ஏய்… என்னா?” முதலில் கொஞ்சம் மிரண்டவர் மிரட்டலாகக் கத்தினார்.

அவன் தலையைக் குனிந்தபடியே நின்றுகொண்டிருந்தான். “ஒங்கள உட்டா எனக்கு ஒதவி செய்ய யாருமில்லைங்கய்யா. வைத்தியரு பித்த முழுங்கச் சொல்லி ரெண்டு மாசமாச்சி. நா தேடாத எடமில்ல. பைத்தியம் புடிக்குது,” அவன் கைகள் நடுங்கிக்கொண்டிருப்பதை அவர் கவனித்தார்.

“இங்கன பாம்பு பித்து விக்கிறேன்னு போடு போட்டிருக்கனாக்கும்,” அந்த இரவில் அவர் குரலின் கரகரப்பு யாராக இருந்தாலும் கொஞ்சம் பின்வாங்க வைக்கும். தீபன் அவர் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தான். அப்படிப் பார்ப்பது அவனுக்குப் பழகியிருந்தது.

“நீங்க அடுத்த வாரம் ஊருக்கு பொறப்பட போறீங்க. இந்தப் பாம்புங்களையெல்லாம் சும்மா காட்டுலதான் உடுவீங்க. நா காசு கொடுத்து வாங்கிக்கிறேன்,” என்றான் நிதானமாக.

“ஏய் என்னைய ஃபாலோ பன்னுறியா நீ. எல்லாம் விசாரிச்சுட்டுதான் வர்றியா? ஒனக்கு எதுவும் கெடையாது போடா,” என்றார். குரலில் அத்தனை கடுமை. உண்மையில் அவன் ஒவ்வொரு ஞாயிறும் அவர் வீட்டின் அருகில் இருந்த ஒட்டுக்கடையில் அமர்ந்திருந்து, அவர் போகுமிடமெல்லாம் பின்தொடர்ந்தே சென்றான். மற்ற நாட்களில் அவர் முன்பு வேலை செய்த முஸ்லிம் கடை ஊழியர்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக விபரங்களைச் சேகரித்திருந்தான்.

“பாம்பு வளர்க்க லைசன்ஸ் வேணும். ஒங்ககிட்ட லைசன்சும் இல்ல,” என்றான்.

“ன்னா… இல்லனா… இல்லனா என்னா? தூக்குலயா போடுவானுவ?” அவர் அலட்சியமாகப் பேசினாரே தவிர குரலில் பழைய மிரட்டல் இல்லை. முகத்தில் ஈரப்புள்ளி.

“மருந்து விக்கவும் லைசன்ஸ் வேணும் அதுவும் தாயத்துக்குள்ள நீங்க நாகத்தோட விஷமெல்லாம் கலக்குறதா சொல்றீங்க,” அவன் மீண்டும் அழுத்தமாகவே சொன்னான்.

“அதான் நீயே சொன்னியே அடுத்த வாரம் கெளம்பிடுவேன்னு. நா வித்ததுக்கு என்னா சாட்சி? எவனாவது பூசி தோலெரிஞ்சி அழுதானா? வெசமேறி செத்துருக்கானா? போவியா…” அவர் தீபனின் கண்களைச் சந்திக்கத் தயங்கினார். கதவைச் சாற்றுவதிலேயே குறியாக இருந்தார்.

“உங்க பேரு அமிர்தலிங்கம். இந்த நாட்டுல வேலை கெடைக்க ச்சீட் பண்ணியிருக்கீங்க,” தீபன் அவர் கண்களைவிட்டு பார்வையை அகற்றவில்லை. அவர் அப்படியே தரையில் அமர்ந்தார். வாயில் விட்ட மூச்சு நீராவிப்புகையாக வெளிப்பட்டது.

“இதுக்கெல்லாம் இந்த நாட்டுல என்னா தண்டன தெரியுமா?”

“உள்ள வா,” என்றவரின் குரலில் சுரத்தில்லை.

வீட்டினுள் ஒருவகை மருந்து வாடை எழுந்து அவனுக்குத் தலைசுற்றியது. குறுகி நீண்டிருந்த பலகை வீட்டில் யாரும் இல்லை. மின்சார வசதியில்லாத வீடு. இரண்டு மண்ணெண்ணெய் விளக்குகள் இட,வல மூலைகளில் மாட்டப்பட்டிருந்தன. மையத்திலேயே தொடங்கும் இருள் அந்த வீட்டின் நீளத்தை இன்னும் அதிகரித்துக்காட்டியது. அதற்குள் நுழைந்தால் நெடுந்தூரம் நடக்க வேண்டிவரும் என தீபன் நினைத்துக்கொண்டான். சாயம்போன பிரேமுடன் கறுப்பு வெள்ளையில் ஒரு படத்துக்கு முன் மட்டும் தீபம் எரிந்துகொண்டிருந்தது. அந்தப் படத்தில் இருந்தவர் கையிலிருந்த வாளும் அவரது முறுக்கு மீசையும் மட்டும் வெளுத்துப்போகாமல் இருந்தன.

“மருந்து வித்த பையன் ஒங்க மகனோன்னு நெனச்சேன்.”

“நா கல்யாணம் செஞ்சிக்கிடல,” என்றார்.

அவர் வீட்டில் அமர்வதற்கு நாற்காலி என எதுவும் இல்லை. ஒருவர் படுக்கும் கட்டில் ஹாலிலேயே இருந்தது. ஹாலுடன் ஒட்டியிருந்த அறைக்குள் நுழைந்தவர் “இங்கன வா” என்றார். அவன் தயக்கத்துடன் உள்ளே நுழைந்தான். அது பலகையால் ஆன தரை. காலை வைத்ததும் அமுங்கி ‘உய்ங்க்’ என்றது. அதிகம் அழுத்தாமல் காலை தேய்த்தபடி அறையின் மையத்துக்குச் சென்றான். ஆதிசேஷனில் படுத்தபடி நாராயணனும் வாசுகியைக் கழுத்தில் சுற்றியபடி ஈசனும் அருகருகே இருந்தார்கள். ஓரமாய் ஒரு மண்குடம்.

“நா ரசினி ரசிகன். அவருக்கும் பாம்புனா இஸ்டம் பாத்துக்க. ஏஜண்டு ஒரு பொய் பேரா கேட்டப்போ அமிர்காந்துன்னு சொன்னேன். ரஜினிகாந்த் மாதிரி என்னா. அவன் இந்தி நடிகராட்டம் கான் போட்டுட்டான். சரி எல்லாம் ஆக்டர்தானேன்னு உட்டுட்டேன். என்னா செய்ய? ஒங்க நாட்டுல முஸ்லிமா இருந்தாதான் சொலபத்துல வேல கெடைக்குது. கொஞ்ச காலம் ஒரு ரெஸ்டாரனுல வேல பாத்தேன். மொதலாளி ரொம்ப மொறைச்சான். போடா மசுருன்னு ஓடியாந்துட்டன். கைவசம் தொழில் இருக்கயில நமக்கென்ன கேடு” என்றவர் அங்கிருந்த காமாட்சியம்மன் விளக்கில் தீபமேற்றி வழிபடத் தொடங்கினார்.

சற்றுமுன் அவர் காட்டிய கோபமெல்லாம் நிகழவேயில்லை என்பதுபோல சாந்தமாக இருந்தார். படங்களைத் தவிர சாரைப் பாம்பும், நாகப் பாம்பும் பாலுறவுக்கு இணைவதுபோல செதுக்கப்பட்ட கற்சிற்பம் ஒன்று இருளுக்குள் புதைந்திருந்ததை அப்போதுதான் கவனித்தான். அதில் எண்ணெய் பூசியிருக்க வேண்டும். மின்னியது. வலது பக்க மூலையில் கட்டுக்காட்டாக மூலிகைச் செடிகள். ஒரு பிளாஸ்டிக் கூடை நிறைய இலைகள் மட்டும் குவிக்கப்பட்டிருந்தன, வழிபாடு முடிந்து திரும்பியவர் “என்னடா போலிஸுன்ன ஒடனே பயந்துட்டேன்னு நெனைக்காத,” என்றார்.

“சே சே நான் அப்படியெல்லாம் ஒன்னும் நெனைக்கல,” என்றான்.

“வெளிய பாத்தல்ல. கடம்பூர் ஜமீன். அந்த வம்சம் நானு. எவனுக்கும் பயப்படமாட்டேன்,” என்றவர் மீசையை முறுக்கிவிட்டுக்கொண்டார். ஜமீந்தார்கள் குறித்து திரைப்படங்களில் மட்டுமே அவன் பார்த்திருக்கிறான்.

“எதுக்கு ஒனக்கு இந்த வயசுல நாகப்பித்து,” என்றார். அவன் காலையில் இருந்து காலணியைக் கழற்றாமல் இருந்திருக்க வேண்டும். விரல் இடுக்குகளில் இருந்து வீசிய நெடி அசூசையாக இருக்கவே  தூபக்காலில் சாம்பிராணியைத் தூவினார்.

அவன் தலையைக் குனிந்துகொண்டான். அவர் கேட்பதிலேயே விசயம் தெரிந்தவர்தான் என அனுமானித்துக்கொண்டான்.

“ஒம் பாம்பு சீற மாட்டுதாக்கும்,” என்றவர் சிரித்தார்.  “வேற மருந்தெதுவும் கேக்கலயா?” 

“நெறைய பாத்தாச்சி. மோடர்ன் மெடிசன் எல்லாம் தலைவலியையும் ஒடம்பு நடுக்கத்தையும்தான் கொடுத்துச்சி.”

“ஓமியோபதியும் வேலைக்காகலயா”

“ரெண்டு எடத்துல பாத்தேன். என்னென்னவோ லேகியமும் பவுடரும் கொடுத்தாங்க. மருந்தோட சேத்து முழுங்க பாலும் நெய்யும் வேணும். செல சமயம் கெடைக்கும். எடுத்து வைக்க வீட்டுல வசதியில்ல. பத்தியமெல்லாம் வாய்ப்பே இல்ல.”

“அம்மா அப்பாவெல்லாம்.”

“அவங்க எல்லாம் கெடாவுல இருக்காங்க. கடன் ஜாஸ்தி. கோலாலம்பூர்ல வேல இருக்குன்னு கூட்டாளி சொல்லி வந்தேன். வந்த புதுசுல ஒரு சின்ன ரூம்புல நாலு பேரு தங்கியிருந்தோம்.  முன்ன பெட்டாலிங் ஸ்ட்ரீட்டுல வேல. காலையில ஒரு சூப்பர் மார்க்கெட்டுல ஜாமான் அடுக்குற வேலை. அஞ்சி மணியோட…”

“சொல்லு.”

“ராத்திரியில அங்க செல ரூமா ஊருட்டுங்களுக்கு ஜாகாவா இருந்தேன்.”

“வெபச்சாரமா?”

அவன் தலையை மட்டும் அசைத்தான். காதில் இருந்த கடுக்கண்கள் ஒரே நேரத்தில் கீற்றாக ஒளி விட்டன.

“நாலுந்தெரிஞ்சவன். நாவரீகம் அறிஞ்சவன். கால் வைக்கும் எடமெல்லாம் கணக்குப் போட்டு புரிஞ்சவன். மென்னு முழுங்கினா மேகந்தான் பொழியுமா? ஒன்நோவ தீத்துவைக்க என்நாவால் ஆவுமா?”

அவன் உடல் இயல்பாகக் குனிந்திருந்தது. ஜீன்ஸ் மடங்க மறுத்தது. நிமிர்ந்து அமர்ந்தான்.

“ஆறு மணியிலேருந்து விடியங்கால ரெண்டு மணி வரைக்கும் ஜாகா பாத்துக்கணும். எவனாச்சும் ஏதாச்சும் பெரச்சனை பண்ணுனா அடிய கெளப்பனும். மொத கொஞ்சம் பயமா இருந்துச்சி. அப்புறமா என்னைய பாத்தாலே சேட்ட பண்ணுறவனுங்களுக்கு ஒரு பயம் வரும். எத்தனையோ பசங்கள கூப்புட்டு அறைஞ்சிருக்கேன். பதிலுக்கு அடிக்க மாட்டானுங்க. எனக்குப் பின்னால பெரிய டீமே இருக்குறதா  நெனைச்சிப்பானுங்க. அவனுங்க நெனப்புதான் எனக்கு பலம். பின்னாடி கொஞ்சம் பசங்கள சேத்துக்கிட்டேன். ரெண்டே மாசத்துல அந்த ஜாலான்ல இருக்குற எல்லா மாடிக்கும் நான்தான் ஜாகா! சூப்பர் மார்கேட் வேலையை விட்டுட்டேன். தங்கிக்க அங்கேயே தனியா ஒரு ரூம்பு கொடுத்தானுங்க.” அப்படிச் சொல்லும்போது அவன் கைகள் தன்னிச்சையாக காலரைத் தூக்கின. கைகளில் அணிந்திருந்த இரும்பு வளையங்கள் ‘கிளிங்’ என்றன.

“சொல்லு.”

“பாப்பா ஆயாம் சீனன். நல்ல சம்பளம் கொடுத்தான். கொஞ்ச நாள்ல வேணுங்கற பொண்ண ஃபிரியா எடுத்துக்கலாமுன்னு சொன்னான்.”

“நல்ல உத்தியோகமா இருக்கே. மேல சொல்லு.”

“நாங்கெல்லாம் கீழயேதான் இருக்கணும். பொண்ணுங்கள பாக்கவோ பேசவோ உட மாட்டானுங்க. எனக்கு இந்த வாய்ப்பு கெடைச்சதே பெரிய லக்குனு பசங்க சொன்னானுங்க. ஆனா எனக்கு பணந்தான் முக்கியமா இருந்துச்சி. வீட்டோட கஷ்டம் அப்படி. முடிஞ்ச சைனிஸ் நியூ இயருக்கு ஆள் நடமாட்டமே இல்ல. பசங்களும் வரல. கஸ்டமர்ஸும் பெருசா இல்ல. போர் அடிச்சதால அங்க ஒரு அக்காகிட்ட பேசிக்கிட்டு இருந்தேன்.”

“அக்கான்னா… ஒங்க அம்மாவுக்கு பொறந்தவளா?”

“ச்சீ ச்சீ…”

“ஐட்டம்தானே. அக்கா நொக்கானுக்குட்டு. சொல்லு”

“அவங்களோடதான் மொத ஆச்சி.”

“அக்கான்ன ஒடனே தம்பி ஒழுங்கா வேல பாத்தாருபோல.” 

அவர் பேசும் விதமே தன்னை வெளிப்படுத்தத் தடையாக இருப்பதாக உணர்ந்தான் தீபன். ஆனால் காரியம் ஆக வாயைத் திறந்துதான் ஆகவேண்டும்.

“அது எனக்கு மொத தடவ. ஆனா எனக்கு அது அடிக்டா ஆயிருச்சி. அதுக்குப் பெறகு நா ஒவ்வொருநாளும் ஒவ்வொரு பொண்ணா எடுத்துப்பேன். ஒரு நாளைக்கு எடுத்த பொண்ணோட மறுநாள் போவமாட்டேன். அந்தக்காலத்துல ராஜாங்க அந்தப்புறத்துல அப்படிதான் இருப்பாங்களாம். அந்த அக்கா சொன்னுச்சி. நானும் ராஜாதான். ஒரு ஜாலானோட ராஜா. எனக்கு பொண்ணுங்கள்ள வித்தியாசமே இல்ல. செல சமயம் குடும்ப பொண்ணாட்டம் கெடைக்கும். செல சமயம் வயசு போன கெலவிங்க. எனக்கு எல்லாமே ஒன்னுதான். மூஞ்சிய பாத்த பெறகு சின்ன பல்பகூட எரியவிடமாட்டேன். எவளோட ஒடம்பையும் இதுவரைக்கும் பாத்ததில்ல. ஆனா இது எனக்கு ஒரு பவர கொடுத்துச்சி. நா நெனச்சா அந்த ஏரியாவுல எந்தப் பொண்ணையும் செய்ய முடியுங்கற பவரு. எல்லாமே என் கண்ட்ரோல்ல இருக்குங்கற பவரு.” ஒட்டவெட்டியிருந்த தலைமுடியை முன்னோக்கி தடவினான்.

“தம்பி நல்லாதாண்டா பாத்துருக்கான் வேலைய…”

“ஒருநாளு ஒரு பிலிப்பைன்ஸ் பொண்ண எடுத்தேன். அவ வந்த நாளிலேருந்து ரொம்ப டிமான்ட். எப்பவும் புக்கிங்கிலேயே இருப்பா. அன்னைக்கு ஆச்சரியமா அவ ரூம் திறந்திருந்திச்சு. நா போனப்ப ஒடம்புக்கு முடியல இன்னைக்கு வேணாமுன்னு சொன்னா. காசு கொடுக்காம ஃபிரியா போனா அப்படி சாக்கு சொல்லுவாளுங்க. அந்த நேரத்துல கஸ்டமர் வந்தா அவளுங்களுக்கு லாபம்தானே. நா பிடிவாதமா இருந்தேன். ஆனா அவளுக்கு முடியலன்னு கொஞ்ச நேரத்துலயே தெரிஞ்சிடுச்சி. ஒடம்பு கொதிச்சது. வாடி விழுந்தா. ஆனாலும் நா விடல. எனக்கு கெடச்சிருக்கிற பவரு ஒரு ராஜாவோடது. திடீருனு என்னோட அடிவயித்துல பிசுபிசுன்னு ஏதோ ஒட்டுச்சு. அது என்னைய இன்னும் வேகமா ஆக்குச்சி. அவ ஏதோ பாஷயில சொல்லி என்னைய தள்ளுரா. நா விடல. அவ முடிய என்னோட கையால சுத்தி பின்புறமா இழுத்ததும் அவளால பேச முடியல. அந்தப் பிசுபிசுப்பு என்னைய ஏதோ செஞ்சிச்சி. திடீருனு ஒரு வாட. அவள தள்ளிவிட்டுட்டு வெளக்க போட்டேன். கட்டில் முழுக்க அவளோட வயித்தால. என் ஒடம்பு முழுக்க தெறிச்சிருந்தது. வயிறெல்லாம் பீ ஒழுகி தொப்புளுக்குள்ள நொழஞ்சிருந்தது. அவ அவமானத்தால அழுதுக்கிட்டிருந்தா. என்னைய பாத்து கத்தினா. கெட்ட வார்த்தையில திட்டினா,” தன் முன் அமர்ந்திருப்பவர் வயதில் பெரியவர் என்பதால் முந்தி வந்த வார்த்தைகளைப் பெரும்பாலும் தணிக்கை செய்து பேசினான்.

அமிர்கான் எதுவும் பேசாமல் இருப்பது அவனுக்கு என்னவோபோல இருந்தது. அவர் தன்னைக் கேவலமாக நினைக்கிறாரோ என்று தோன்றியது. அதற்கு மேல் தொடர வேண்டுமா என்பதுபோலப் பார்த்தான். அவர் கையை மட்டும் அசைத்து மேலே சொல்லும்படி கூறினார்.

“ஒவ்வொருநாள் குளிக்கும்போது மணிக்கணக்கா கழுவிக்கிட்டே இருப்பேன். ஞாபகம் வரும்போதெல்லாம் பாத்ரூம்புக்குள்ள ஓடி கழுவுவேன். அந்த வீச்சம், அந்த பிசுபிசுப்பு இன்னும் என்னோட அடிவயிறு முழுக்க தடவியிருக்கு. என்னால எதுவும் முடியல. நான் அதுக்குப் பெறகு மாடிக்கு ஏறுறதே இல்ல. அந்த ஆசையே விட்டுப்போச்சி.”

“அதெல்லாம் கொஞ்ச காலமானா தன்னால வருந்தம்பி. யேன் அவசரப்படுற? ஒரு தாயத்து தரேன் கட்டிக்க எல்லாம் சரியாயிடும்,” சற்று முன் கத்தி கத்தி வியாபாரம் செய்தது அமிர்கானைப் பெரும் சோர்வுக்குத் தள்ளியிருந்தது. கொட்டாவி விட்டால் தீபனை அவமதிக்கும் என்பதால் மூக்கின் வழிவிட்டார்.

“விசயம் அது இல்ல. ஒருநாளு ஒடம்பு முழுக்க முறுக்கி எடுத்துச்சி. பத்து பேர தூக்கிபோட்டு மிதிக்கணுமுன்னு வெறி. ஒடம்பு சூடேறுது. அப்பதான் ஒருமாசத்துக்கு மேல ஆகுதுங்கறதே ஞாபகத்துக்கு வந்துச்சி. சொந்தமா செஞ்சிக்க ட்ரை பண்ணுனப்பதான் என்னால முடியலங்கறதே தெரிஞ்சது. யார் யாரையோ நெனைச்சி பாத்தேன். எதுவும் வேலைக்காகல. அந்த அக்காகிட்ட திரும்பப் போனேன். மத்தி பூச்சோக்குன்னு கேலி செஞ்சி அனுப்புனாங்க. அப்புறம் கிளினிக்குல டாக்டர் சொன்ன மாத்திரை எதுவும் வேலை செய்யாம நாட்டு மருந்து எடுத்தேன். அதுவும் சரியா வரல. கடைசியா மாத்து வைத்தியமுன்னு செந்தாமரை டாக்டர பத்தி ஒரு போஸ்டருல பாத்துட்டு போனேன்”

“அவரு என்னைய வந்து பாக்க சொன்னாரா?” என்றார்.

“நாகத்தோட பித்த பத்தி சொன்னாரு. விந்துக்குள்ளயும் நாகமுண்டுன்னு சொன்னாரு. என்னோட விந்துல இருக்குற நாகமெல்லாம் ஒறஞ்சி போயிடுச்சாம். அத உசுப்பேத்த நாகத்தோட பித்த பல்லுலயும் நாக்குலயும் படாமல் முழுங்கணுமாம். ஆனா அது லேசுல கெடைக்காதுன்னாரு. எங்காவது பிடிபட்டாலோ ரோட்டுல அடிபட்டு கெடந்தாலோ கட்டாயம் எடுத்துவரச் சொன்னாரு. அவரு சொல்லி ரெண்டு மாசம் ஆச்சி. நா சொல்லி வைக்காத எடமில்ல. கேக்காத ஆளில்லை. வெவரம் தெரிஞ்சவங்க கேலி செஞ்சாங்க. சிலபேரு ஸ்டவுட்டு பீருல கம்பத்து முட்டைய கலந்து குடிக்கச் சொன்னாங்க. எல்லாம் செஞ்சாச்சி. அப்பதான் உங்கள பாத்தேன். ஒங்க பொழப்புக்கே நாகந்தான் மொதலுன்னு தெரிஞ்சிக்கிட்டு ஒன்னுங் கேக்கல. ஆனா ஏதாவது வழி கெடைக்குமுன்னு ஒங்கள பத்தி விசாரிச்சேன். நீங்க ஊருக்குப் போகப்போறதா சொன்னாங்க. எனக்கு மொத மொறையா ஒரு சின்ன வெளிச்சம் கெடைச்சது,” அவன் தான் நினைத்தனை ஒருவழியாகச் சொல்லிமுடித்த திருப்தியடைந்தான்.

அமிர்கான் புருவத்தை முறித்து விரலால் அதில் அழுத்திக்கொண்டார். “கடவுளுக்கு காச்ச கண்டா கல்லுக்கு மருந்தூட்டுறோம்; கண்ணுல காயம் பட்டா கதிரவன காணோங்கறோம்.”

அவன் அவரை ஒன்றும் புரியாமல் பார்த்தான்.

“வேற மருத்துவம் சொல்லுறேன். செஞ்சி பாக்குறியா?” என்றார்.

“படாதபாடு பட்டுட்டேன். என் ஒடம்பு நா சொல்றதே கேக்குறதே இல்ல. திமிரெடுத்து அலையுது. சும்மா பொண்ணுங்கள பாத்து சீட்டியடிச்ச பசங்கள தேவையில்லாம மிதிச்சிட்டேன். ஒடம்பு டயடாகுற வரைக்கும் உள்ளேருந்து ஏதோ உலுக்கி எடுக்குது. என்னை மிருகமாக்குது. கொலை செய்யத் தூண்டுது. ஒடம்பு டயடானா மட்டுந்தான் தூங்கமுடியுது. அதுக்காகவே நைட்டெல்லாம் நடக்குறேன். என்னைய இதுலேருந்து காப்பாத்துங்க. எங்கிட்டேருந்து மத்தவங்களயும் காப்பாத்துங்க,” குரல் படபடத்துக் கரகரத்தது.

அமிர்கானுக்கு அவனை முழுமையாகப் புரிந்தது. கொஞ்ச நேரம் யோசித்தவர் “எவ்வளோ கொடுப்ப?” என்றார்.

“சேவிங்குல கொஞ்சம் பணம் இருக்கு.”

“பத்தாயிரம்!”

“அவ்வளோவுக்கு நா எங்க போவ?”

“அப்போ ஒம்பாடு ஒங்குஞ்சி பாடு.”

“பத்தாயிரம் ரொம்ப அதிகம்.”

அமிர்கான் சிரித்தார். “அமாவாசைக்கு இன்னும் மூனு நாளுதான் இருக்கு. அமாவாசைக்கு மறுநா இரவு நான் ஊருக்குப் பொறப்பட்டுடுவேன். அன்னைக்கு காலம்பர வந்தா ஒனக்குப் பித்து கெடைக்கும். இது பித்துக்கான வெலயில்ல. பாவத்துக்கான வெல.”

“என்னால அதுவரைக்கும் காத்திருக்க முடியாது. வேணுமுன்னா இப்பவே நான் அத கொல்லுறேன். பாவம் என்னோட போவட்டும்,” தீபன் தன் காற்சட்டை பையில் இருந்து கத்தியை உருவினான்.

“மயிருல கொல்லுவ.” இடத்தை விட்டு எழ முயன்ற அமிர்கான் கழுத்தில் தீபன் கத்தியை வைத்ததும் ஒரு பெருமூச்சை இழுத்துவிட்டு அசையாமல் அவனையே பார்த்தார்.

“நீங்க கொடுக்கலனாலும் நா எடுத்துக்குவேன்,” என்றான். அவன் கண்களில் கோபமில்லை. பெருந்துயரமும் அலைக்கழிப்பும் நனைத்திருந்தன.

இருவரும் பேசிக்கொள்ளவில்லை. சற்று நேரம் பெரும் அமைதி நிலவியது. அமீர்கான் தீவிரமான யோசனையில் இருந்து வெளிப்பட்டார்.

“எங்கிட்ட ஒரு நாகந்தான் இருக்கு.” சுரத்தில்லாம ஒலித்த குரலுக்குப்பின் அவன் கத்தியை விலக்கி சந்தேகமாகப் பார்த்தான்.

“பொய்”

“கடம்பூர் ஜமீன் மேல சத்தியம்”

“அப்ப அத கொன்னு எடுத்துக்கிறேன்”

“யாராலையும் கொல்ல முடியாத நாகம் அது. நீலவேணு,” அதன் பெயரைச் சொல்லும்போது குரலை ரகசியமாக்கினார். அவர் உடல் அங்கேயே இருக்க கழுத்து மட்டும் ஒரு நாகம்போல வளைந்து அவன் அருகில் வந்தது.

“நீலவேணு,” அவன் ஒருதரம் சொல்லிப் பார்த்தான்.

“லட்சத்துல ஒரு நாகந்தான் நீலவேணுவா பொறக்கும். அதுதான் ரத்தனக் கல்ல வச்சிருக்கிற ராச நாகம். ராசனுக்கெல்லாம் ராசன். நீலவேணுன்னா நீலமா இருக்குமுன்னு நெனைக்காத. கருநாகத்தவிட கருப்பன். அதுக்கு ரத்தம் தச எல்லாமே கருப்பு. ராத்திரியானா அதோட கருந்தோலு நீலமா மின்னும். தேவத்தோட கரும மட்டுந்தான் நீலமாவும் தெரிஞ்சிக்க. அது தேவம். ஆதிசேடனோட அவதாரம். எல்லா நாகத்துக்கும் தான் நாகமுன்னு தெரியாது. ஆனா நீலவேணுவுக்குத் தெரியும். தன்னோட வெசம் ரத்தினமா மாறுமுன்னு தெரியும். அதனால நூறு வருசம் எதையும் கொல்லக்கூடாதுன்னு தெரியும். சித்திர மண்டூகங்கற தவளைய மட்டுந்தான் மாசம் ஒருதடவ கொல்லாம விழுங்கும். மத்த நேரமெல்லாம் விஷ்ணுவ நெனச்சி வழிபாடு செய்யும். எந்த உசுருக்கும் தீங்கு செய்யாது. ரத்தனத்த கக்குன பெறகு விஷ்ணுவ நோக்கி போக தவம் செய்யும். தண்ணி, சாப்பாடு, காத்துன்னு அதுக்கு தேவையான அத்தன சக்தியையும் நாக ரத்தினத்திலேருந்து வர வெளிச்சம் வழியா உறிஞ்சுக்கும். அது தேவத்தோட ஒளி. நீல ஒளி. பகல்ல பாத்தா ஏதோ சீத்தாபழ கொட்டையாட்டம் கருப்பா கெடக்கும். கூறு இல்லாதவன் கையில கெடச்சா தூரமா வீசிருவான். தவம் வளர வளர இருபது அடி நாகம் ஒரு அங்குலத்து சுருங்கும். அப்பதான் அதுக்கு றக்க முளைக்கும். அது வைக்குண்டத்துக்கு போவுற றக்க. அந்த தவத்ததான் நாம கெடுக்க போறோம்.”

அவனுக்கு அதை கேட்கவே விதிர்த்துப்போனது. அவர் சொல்வது ஒரு மன்னனைத் திட்டமிட்டுக் கொல்வதைப் போன்றே இருந்தது. இதனால் தனக்கு மேலும் துன்பம் வரக்கூடுமெனப் பயந்தான்.

“நீலவேணுவ தாய்லாந்துல என்னோட குருநாதருக்குத் தெரியாம எடுத்துக்கிட்டு வந்தேன். போர்டர்ல பெரிய தொக செலவாச்சி. பாவக்கணக்கு ஒழியட்டும் போன்னு கட்டி தொலைஞ்சேன். பரம்பர பரம்பரையா ஆயிரத்து எறநூறு அமாவாசைய கணக்கு வச்சி இத வளத்தவரு என்னோட குரு. நா இத எடுக்கும்போது தொள்ளாயிரம் அமாவாசைய நெருங்கிடுச்சி. ரெண்டு நாள்ள வரப்போறது ஆயிரத்து எறநூறாவது அமாவாச. நா காத்திருந்த அமாவாச. பாம்புக்கு நூறு வயசாவுது. சரியா பன்னண்டு மணிக்கு ரத்தினத்த கக்கும். அப்புறம் பாம்ப ஒங்கிட்ட ஒப்படைச்சிருவேன். கல்லு இல்லாம அதுக்கிட்ட எந்த பவரும் இல்ல. கமண்டலம் இல்லாத ரிஷிபோல. நீ அத கொன்னு பித்த எடுத்துக்க. நீலவேணுவோட பித்து சாதாரணமில்ல. இந்திரனா வாழலாம்.”

தீபனுக்கு அவர் கடைசியாகச் சொன்னது பிடித்திருந்தது. உடம்பு முறுக்கேறியது.

“நாக தோஷம் ஏதும்  வருமா?”

அமிர்கான் சிரித்தார். “நாகங்கள்ள நெறைய வகை இருக்கு. ஆனா இத மட்டும் ஏன் தெரியுமா ராசநாகமுன்னு சொல்றோம். இதுங்க தர்மத்துக்கு கட்டுப்பட்டது. ரெண்டு ராசநாகம் சண்ட போட்டா மூனு அடிக்கு மேல தலையத் தூக்காது.  தலைய மாத்தி மாத்தி தரையில அமுக்குமே தவிர வெசத்தால தீண்டாது. பொம்பள நாகம் இன்னொருத்தனோட கருவ வயித்துல சொமக்கும்போது எந்த ஆம்பள நாகம் வந்தாலும் கடிபட்டு சாவுமே தவிர அவனோட கூடாது. அப்படிப்பட்ட ராசநாகத்துக்கெல்லாம் ராசன் இது. மகாராசாவோட தர்மமென்னா? உசுர கொடுத்தாச்சும் ஒடமையக் காப்பாத்துவான். காப்பாத்த முடியாம தோத்தாலும் கம்பீரம் கொறையாது கேட்டுக்க. மண்ண வாரி தூத்தமாட்டான். ராசனோட தோல்வியும் மகத்தானதுதான். அத கும்புடத்தான் முடியும்.  ரத்தனக்கல்ல எடுத்த அடுத்த நிமிசம் நீலவேணு முழுசா சரணடைஞ்சிடும். ஒன்னையத் தீண்டாது. சபிக்காது. ரத்தினத்த பறிச்சிட்டா  சுருண்டே கெடக்கும். தலையத் தூக்காம சாவ ஏத்துக்கும்.”

அவனுக்குத் திடீரென நீலவேணுவை நினைத்துப் பாவமாக இருந்தது. இவ்வளவு நியாயமான  ஓர் உயிரைக் கொல்வதை நினைக்கும்போது மனநிலை தடுமாறியது. அமிர்கான் தன்னை இக்கட்டான நிலைக்குத் தள்ளிவிட்டிருப்பதாக உணர்ந்தான். தன்னை விரட்டியடிக்க சொல்லப்படும் கதையாக இருக்குமோ என சந்தேகம் வந்தது. குருவை ஏமாற்றி வந்தவர் தன்னை ஏய்க்க எவ்வளவு நேரம் ஆகுமெனத் தோன்றியது. “பாம்ப திருடுனது தப்பில்லையா?”  என்றான்.

“யாரப் பாத்து திருடன்னு சொன்ன?” அமிர்கான் கோபத்தில் கத்துவார் என அவன் எதிர்பார்க்கவில்லை.

“ராசாங்க படையெடுத்து போனதெல்லாம் திருட்டா? அபகரிக்கிறதெல்லாம் வீரனோட தர்மம். அபகரிச்சாதான் காப்பாத்த முடியும். காப்பாத்த வக்குள்ளவன் அபகரிக்கிறான். வக்கில்லாதவங்கிட்டேருந்து புடுங்குறான். கடம்பூருல அப்போவெல்லாம் திருடர்கள் தொல்லை ஜாஸ்தி. திருடனுங்கள அடக்க வரகுனராம பாண்டியன் வல்லாளர் சொக்கர அனுப்பி வச்சாரு. சொக்கரு பெரிய வீரரு. அவரு திருடனோட கொட்டத்தையெல்லாம் அடக்கினாரு. ராஜா சந்தோசப்பட்டுப் பதினெட்டு ஊர்களுக்குச் சொக்கரையே தெச காவலா போட்டாரு. கடம்பூருதான் அப்போ தலைநகரம். சொக்கரு வம்சாவளிதான் அந்த ஜமீனை பரம்பரையா ஆண்டாங்க. ஆளுரதுனா என்னா? அபகரிக்கறதும்தான். பதினெட்டு ஊர் சனமும் சொகமா வாழனுமுன்னா அபகரிக்கத்தான் வேணும். ஆனா ஒரு காலமும் திருட மாட்டாங்க. ஏன்னா திருட்டுக்குள்ளாற அச்சமும் இருக்கு. அச்சங்கறது அழுக்கு. அதான் திருடன் அழுக்குத் தெரியாம இருக்க இருட்டுக்குள்ளாறவே சுத்துறான். சொக்கரு பரம்பரையில அச்சப்பட்டாலே அவமானத்தால சாவாங்க. குத்துவாள எடப்பக்கமா சொருவி வலப்பக்கமா இழுத்து கொடலு சரிஞ்சவெனெல்லாம் இருக்கான். அந்த வம்சத்துல வந்தவன் நான். ஞாயம் சொல்ல வந்துட்டான்…” அவர் பேசி முடித்ததும் மீசையை முறுக்கிக்கொண்டார். தீபனுக்கு பெருமழை பெய்து அடங்கியதுபோல இருந்தது. அந்தக் கேள்வியைக் கேட்டிருக்கக்கூடாதோ எனத்தோன்றியது.

“அரசனா இருக்குறது கிரீடத்துல இல்ல. அது ஒரு கொணம்,” என்றவர் மண்பானையைத் தூக்கி கடகடவென நீரைக் குடித்தார்.

தீபன் ஒன்றும் பேசவில்லை. தன்னால் அந்தத் தொகையைத் திரட்ட முடியுமா என யோசிக்கவே தலைவலித்தது.

“அந்தக் கல்லு நம்மோட இருக்கிறதே விஷ்ணுவோட ஒரு வியர்வைத்துளி இருக்குறது போலதான். அத வச்சி என்னமும் செய்யலாம். பகைவன் கிட்ட வந்தாலே பொசுங்கிப் போவான். அத வெறுங்கையால தொடக்கூடாது. மின்னினாலும் வெசம் வெசந்தானே. இது ராஜ வெசம். கண்ணாடி வழியாத்தான் பாக்கணும். நேரா பாத்தா புத்திய செதைக்கும். சித்தபிரமைய உண்டாக்கும். எனக்கு அத எடுக்குற வித்த தெரியும். நா சொக்கரோட வம்சம். ஆண்ட வம்சம். இப்ப இப்படி பஞ்ச பராரியா சுத்துறேன். ஒன்னாட்டம் ஒன்னும் இல்லாதவனெல்லாம் என்னைய மிரட்டுறான். எல்லாம் கல்லு கெடைக்குற வரைக்கும்தான்.,” அவர் உணர்ச்சிவசப்படுகிறார் எனத் தெரிந்தது. தீபன் பேச்சை வேறு திசைக்கு எடுத்துச்செல்ல நினைத்தான்.

“அப்போ நீங்க மருந்து விக்கிறது. பாம்பு வெசத்துல தாயத்து செய்யுறது”

“எல்லாமே பொய்,” அவர் ஒரு தாயத்தை கடித்து உடைத்து உள்ளிருந்து ஊறிவந்த திரவத்தைப் பருகினார். “வெறுந்தண்ணி. வாரவனுக்குப் பொலம்ப எடம் வேணும். கேக்க கத வேணும். புடிச்சிக்க தொண வேணும். அம்புட்டுதான்” என்றார்.

தீபன் அவரிடம் ஏதோ சொல்ல வாயெடுத்து நிறுத்திக்கொண்டான்.

“ஒரு பெரிய நெசத்துக்காக எத்தனை பொய்யும் சொல்லலாம். ஒன்னும் தப்பில்ல. அதெல்லாம் பச்சிலைகள அரைச்சி நானே தயாரிக்கிற சுத்தமான மருந்து. நீலவேணு இருக்கிற எடத்துல வேற நாகங்கள் அண்டாது. பயந்து ஓடிடும். எந்த வெசமும் வேல செய்யாது. சூரியன் வந்தா நச்சத்திரங்கள பாக்க முடியாது பாரு. எடுத்து வந்த  காலத்துலேருந்து அத நா தொட்டதே இல்ல. மாசம் ஒரு தடவ காடெல்லாம் தேடி அலைஞ்சி சித்திர மண்டூகன கொடுப்பேன். அதை சாப்பிடறதுக்கு முன்ன மேல பாத்து கண்ணீர் விடும். அதுதான் ராசன். தன் குடிகள்ள ஒருத்தன கொல்லுறோமேங்குற கவலை அதுக்கு.”

அவர் கொஞ்சம் அதிகமாகச் சொல்வதுபோல தோன்றியதால் தீபன் புறப்பட்டான். தன் வாழ்நாளில் எப்போதும் உண்மையாக இல்லாத ஒருவர் தன்னிடம் உண்மையாக இருப்பாரா என்ற கேள்வி அவனைத் துருத்தியது. ஆனால் அவனிடம் வேறு திட்டங்கள் இருந்தன. மறுநாள் நண்பகலில் பணத்துடன் சென்றான். நீலவேணுவைப் பார்க்க எவ்வளவு கேட்டும் அமிர்கான் அனுமதிக்கவில்லை. அது வால் நுனியில் நின்றபடி உச்ச வழிபாட்டில் இருப்பதாகவும் அதன் அதிர்வலையில் உள்ள விஷம் அவனைக் கொல்லக்கூடுமென்றும் விரட்டினார். நாளை மறுநாள் அதிகாலை வந்து எடுத்துச்செல்லச் சொன்னார். அவனால் அவர் பேச்சுக்கு எந்த மறுப்பும் சொல்ல முடியாமல் இருந்தது. சேகரித்துச்சென்ற வார்த்தைகள் யாவும் அவர் சொல்லும் கதைகள் முன் உதிர்ந்தன. சொல்லில் கொடுக்கும் உறுதியும் பார்வையில் கொடுக்கும் நம்பிக்கையும் சந்தேகங்களை அசைத்தன. ஆனால் அவனுக்கு அதிக அவகாசம் இருக்கவில்லை.

சீன முதலாளியின் ஆட்கள் அவனைத் தேடி அலைவதாக நண்பர்களிடமிருந்து தகவல் வந்துகொண்டே இருந்தன. பணக்களவாடலை முதலாளியால் போலிசுக்குச் சென்றெல்லாம் முறையிட முடியாது. அவன் அமிர்கானின் பின்னால் சுற்றுவது சில நண்பர்களுக்குத் தெரியும் என்பதால் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் உயிருக்கு ஆபத்தென அறிவான். பித்தை விழுங்கிவிட்டு அடுத்த பஸ்ஸிலேயே கெடாவுக்கு ஓடிவிடலாம் என்று நினைத்துக்கொண்டான். தன்னுடைய படம் இந்நேரம் அவர்களது கேங் முழுக்க பரவியிருக்கும் என்ற எண்ணமே அச்சத்தை அதிகரித்தது. அவர்கள் நாடு முழுக்க இருந்தனர். எங்கிருந்து வேண்டுமானாலும் தாக்குதல் நடக்கலாம். அடிக்க மாட்டார்கள். நேராக வந்து நெற்றியில் ஒரு பொட்டு. தன் நண்பர்கள்கூட தன்னைப் பணத்துக்குக் காட்டிக்கொடுக்கலாம் என இருக்கும் இடத்தைச் சொல்லாமல் மறைத்தான். அச்சம் அதிகரிக்க அதிகரிக்க பணத்துடன் நாகரத்தினத்தையும் அமிர்கானிடமிருந்து அபகரித்தால் என்ன என்று தோன்றியது. தன்னை அதனால் பாதுகாக்க முடியுமென நம்பினான். அந்த எண்ணத்துடன்தான் அவன் அமாவாசை இரவே அவர் வீட்டுக்குச் சென்றான்.

“பிரேத பரிசோதனையில் அமிர்கான் விஷம் அருந்திதான் இறந்துள்ளார் என முடிவாகியுள்ளது,” என்றார் இன்ஸ்பெக்டர் அமிருல்லா அலி.

 ஜாமின் கிடைப்பது சாத்தியமாகிவிட்டதில் தீபன் கொஞ்சம் நிம்மதியாக உணர்ந்தான். அன்று காலையில் இருந்து அவன் எதையும் சாப்பிட்டிருக்கவில்லை. வியர்த்து வடிந்து உடலே நசநசத்தது.

அவன் சொன்ன கதை எதையும் இன்ஸ்பெக்டர் அமிருல்லா அலி நம்பவில்லை என்று மட்டும் தெரிந்தது. அவன்தான் சடலத்தைக் கண்டு போலிசுக்குத் தகவல் சொல்லியிருந்தாலும் பாம்பின் பித்தைப் பெற அந்த இரவில் அவர் வீட்டுக்குச் சென்றதாகச் சொன்ன காரணம் அவர்களுக்கு நம்பும்படியாக இல்லை. அதுவும் அமிர்கானிடம் கொடுத்ததாகச் சொன்ன தொகைக்கு அவன் தோற்றம் பொருந்தாமல் இருந்தது. சோதித்தபோது கால்சட்டை பையில் இருந்த கத்தியும் சந்தேகத்தை வரவழைத்தது. அமிர்கானின் வீட்டை நன்கு ஆராய்ந்ததில் பாம்பு வளர்த்தற்கான சிறிய தடையமோ, அடையாளமோ இல்லை என்பதை போலிஸ்காரர்கள் உறுதியாகச் சொன்னார்கள். அவருடன் வியாபாரத்திற்குச் செல்லும் சிறுவனும் கூடைகளில் இதுவரை பாம்பு எதையும் பார்த்ததே இல்லை என வாக்குமூலம் அளித்திருந்தான். மோப்ப நாய்கள் எந்த பதற்றத்தையும் காட்டவில்லை. காலியான மூங்கில் கூடைகளும் சில தைல பாட்டில்களும் மூலிகைச் செடிகளும் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன. தமிழகத்துக்குப் பணம் அனுப்பிய ரசீதுகள் எரிந்த அரை குறை சாம்பலாகக் கிடைத்தது.

“மருந்தை விற்றே நல்ல பணம் சம்பாரித்திருப்பான் போல. மகா திருடன்” என்றார் இன்ஸ்பெக்டர்.

“இல்லை துவான், அவர் ஒரு ராஜாவாக இருக்கலாம்” என்றபோது இன்ஸ்பெக்டர் அமிருல்லா அலி அவனை விசித்திரமாகப் பார்த்தார்.

புதிய சிறுகதைகள்

கழுகு

உச்சை

சியர்ஸ்

(Visited 249 times, 43 visits today)