கடிதம்: ராசன்

சிறுகதை: ராசன்

மரியாதைக்குரிய ஆசிரியர் நவீன் அவர்களுக்கு. யாக்கை சிறுகதைக்குப் பிறகு நான் எழுதும் கடிதம். இரு மன்னர்கள் சந்திக்கும் கதை ராசன். ஒருவன் மன்னன் என்பவன் அதிகாரத்தின் ருசியை காண்பவன் என்கிறான். மற்றவர் மன்னர் என்பது தன் உடமையை பாதுகாப்பதும் பாதுகாக்க முடியாதபோது சரணடைவதும் என்கிறார். ஆனால் கீழ்மையை தவறி செய்தாலும் மரணத்தை தேடிச் செல்வது என்கிறார். அதுதான் தீபனுக்கு நடத்தப்படும் வைத்தியம் அல்லவா?

அவனுக்கு பாம்பின் பித்து அவசியமே இல்லை. அவனுக்கு தேவைப்படுவது மன்னனாக இருக்க வேண்டிய தகுதியை அறிவது. அது கிடைத்துவிட்டது. ஆனால் அந்த மருந்தை கொடுத்த அமிர்கான் ஒரு தவறு செய்கிறார். மன்னனின் கடமை உடமையை பாதுகாப்பதுதான். (குடும்பமும் உடமைதானே) அதற்காகவே அவர் எல்லா பொய்யும் சொல்கிறார். ஆனால் திருட்டு அவரை கொல்கிறது. தான் மன்னனின் குணத்தில் இருந்து தவறியப்பின் மடிகிறார்.

உண்மையில் உங்கள் போயாக் சிறுகதைபோல பல நிலைகளில் இருந்து வாசிக்கப்பட வேண்டிய கதை. நாகத்தின் வர்ணனை, வன்புணர்வின் காட்சி சிறப்பாக இருந்தது. அதுதான் அனுபவத்தை நிகழ்த்திக்காட்டுகிறது.

ராம்

வணக்கம் எழுத்தாளர்,

உங்களுடைய ராசன் சிறுகதையும் வாசித்தேன் பிடித்திருந்தது. கதையை வாசித்து கொண்டே போகையில், நான் கேட்டு அறிந்த தோட்டத்து பாம்பு கதைகள் – குறிப்பாக கருநாகம், செந்நிற நாகம், மலை பாம்பு நினைவுக்கு வந்ததது. மணிக்கக் கல் திருட போகும் போது, சாணியைக் கொண்டு செல்வர் எனவும் அதன் வெளிச்சத்தைச் மறைக்க சாணியைக் கொண்டு மூடுவர் எனக் கதையும் கேட்டுள்ளேன். ஒரு தோட்டத்து தொழிலாளி தெரியாமல் கருநாகத்தை மிதித்து விட்டார். பாம்பைத் தீண்டி விட்டாய், அடித்து கொன்றுவிடு என நண்பர் சொல்ல, மம்முட்டியில் கொண்டு கொல்ல போய் வாலில் பட்டு தப்பித்து விட்டது. அதே பாம்பு மறுநாள் அவரைக் கொத்தி, வஞ்சம் தீர்த்தது. என் அப்பாவையும் தோட்டத்து கூட்டிக் கொண்டு போக தயங்குவதும் இம்மாதிரியானக் கதைகளை அறிந்தும் படித்தும் தெரிந்து கொண்டதும் ஒரு காரணம். பாம்பைச் சீண்டி விளையாடும் போது, அதன் தலையை விரித்து காட்டு போது மிக அழகாக இருக்கும் என்பார். வெயில் நேரத்தில், அதன் தோல் மினுமினுக்கும் என்பார். பாம்பைப் பார்த்தால், படை நடுங்கும், நான் எம்மாத்திரம்.

ஒரு பாம்பை மகுடி வாசித்து மயக்குவது போல், அமீர்கான் தீபனை அவருடையப் பேச்சால் மயக்கிவிட்டார் என கதை இறுதியில் புரிந்து கொண்டேன். கதைப் போகிற போக்கில், நானும் இவர்கள் இருவரும் பாம்பு தீண்டி இறக்க போகிறார்கள் என நம்பினேன். நல்ல ஒரு திருப்புமுனை. இறுதியில், தீபன் இடத்தில் நான் இருந்தால், நானும் அமீர்கானை ராசன் என்றுதான் சொல்லுவேன். ஏனென்றால், அமீர்கானை வைத்து நீங்கள் கொடுத்த வர்ணன, இல்லாததையும் இருக்குகிறது என நம்பவைத்தது. வெளிநாட்டு ஊழியர் ஊரில் இருக்கும் உறவினருக்குப் பணம் அனுப்பதான், இப்படி ஒரு நாடகம் எனத் தெரிந்தது. இக்கதையின் வழி கூற வரும் கருத்தும் எனக்குப் புரிந்தவரை மிகவும் அர்த்தமுள்ளது. ஒருவரைக் காப்பாற்றவும், வாழ வைப்பதற்க்கும் ஆசைக்கும் இன்னொருவரைச் சார்ந்தே இருக்க வேண்டும். எவ்வாறு சார்ந்து இருக்கிறார்கள்? அறத்தின் வழியிலா/ நேர்மறையாகவா/அதிகார முறையிலா அல்லது அடக்கு முறையிலா/ அன்பிற்காகவா அல்லது வன்மத்திற்காகவா என்பதே வாழ்க்கையின் சூட்சுமம்……. என உங்கள் கதை வழி புரிந்து கொண்டேன். வாழ்த்துகள்.

பாரதி, ஜொகூர்

(Visited 121 times, 1 visits today)