பேய்ச்சி: இடி போல் முழங்கும் தாய்மை – நலவேந்தன் அருச்சுணன் வேலு

சித்திரைப்புத்தாண்டில் முதல் பரிசாக வந்தது எழுத்தாளர் ம.நவின் அவர்களின் பேய்ச்சி நாவல். எழுத்தாளரின் முதல் நாவல். நம் நாட்டில் மிகச்சிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ம.நவீன் அவர்களின் படைப்பை நம்பிக்கையோடு வாசிக்கலாம். யதார்தமான சிறுகதை மற்றும் கவித்துவமான நவினக்கவிதைகளை படைக்கும் எழுத்தாளர் என அறிமுகமான இவரின் முதல் நாவலை வாசித்தே ஆக வேண்டும் என்று தோன்றியது. வாங்கினேன் வாசித்தேன். இதற்கிடையில் பலர் போற்றியும் சிலர் தூற்றியும் இந்நாவலை தொடர்ந்து விமர்சனம் செய்துக்கொண்டுயிருந்தனர். இதன் விளைவே இந்நாவலுக்கு நல்ல ஒரு விளம்பரமானது. இவ்வேளையில் அவர்களுக்கு எனது நன்றி

பேய்ச்சி, ஒரு இந்தியக் குடும்பத்தினரின் கதை. அவர்களோடு உறவு கொண்டுள்ளவர்களின் கதை. தமிழகத்தில் ஆரம்பித்து லூனாஸ் தோட்டத்தில் முடியும் கதை. 1980 இன் தந்தை பெரியாரின் கொள்கை, ஆன்மீகம், பால்மரம் மற்றும் செம்பனை மரத்தின் நடவு,தோட்ட மக்களின் வாழ்க்கை முறை,தோட்டத்திருவிழா,எம்.ஜி.ஆர்,சிவாஜி, ரஜினி இரசிகர்கள், சாரயக்கடை, காதல், மோதல், சிலம்பம், மருத்துவம், மூலிகை என இந்நாவல் அப்போதைய சிந்தனைகளை மிக நுட்பமாக எழுத்தாளர் கையாண்டு உள்ளார்.

எனது பார்வையில் தாய்மை இந்நாவலில் இடி போல் முழங்கியுள்ளது. பேச்சியம்மன், கொப்பேரன், காரக்குடி ‘ஆச்சி,’ ராமசாமி, ஓலம்மா, சின்னி, மாலதி என பல கதாபாத்திரங்களின் வழி தாய்மையைக் கலை வடிவமாக எழுத்தாளர் வடித்துள்ளார்.
கோப்பேரன் “ஏய் சனியனே! இப்படி பனியில போட்டா புள்ளைக்கு என்ன ஆவுறது?” என தன் மனைவி காத்தாயிடமே குழந்தைக்காக கடிந்து கொள்கிறார். ஒரு தந்தையின் தாயுள்ளத்தை இவர் மூலம் எழுத்தாளர் சித்தரித்துள்ளார். தான் வணங்கும் தெய்வத்திடம் இருந்தும் தன் மனைவியிடம் இருந்தும் தன் குழந்தையைக் காப்பாற்றுவதற்காக ஊரை விட்டு போகிறார்.

செட்டியார் சமூகம் வாழும் காரக்குடியில் வசிக்கும் ஆச்சி, கோபேரன் குழந்தையை “புள்ளய வச்சிட்டு எப்படிச் சாப்பிடுவீக.கொண்டாங்க” என வாங்கிக்கொண்டு தாயுள்ளத்துடன் பாலாடையில் உணவுகொடுக்கிறார். அவர் பேசும் செட்டியார் சமூகத்தின் அழகு தமிழை மிகவும் சிறப்பாக எழுத்தாளர் எழுதியுள்ளார்.

பிறப்பால் ஆணாகவும் மனதால் பெண்ணாகவும் இருக்கும் ராமசாமி தன் தாயுள்ளதை தனது தோழியான ஓலம்மாவிடம் காண்பிக்கிறார்.
இந்நாவலின் மிகவும் முக்கியான கதாபாத்திரங்களில் ஓலம்மா தன் குழந்தைகளான முனியம்மா மற்றும் குமரனிடம் தாயாக காட்டும் அன்பு. பாட்டியாக அப்போயிடம் வைத்திருக்கும் பேரன்பு இந்நாவலை வாசிக்கும் வாசகர்ளுக்கு தங்களின் பாட்டிகளை நினைவு கூறவைக்கும்.

“என்னைய என்ன வேணுமுன்னாலும் செய்யுங்க. இந்தப் பணத்தமட்டும் எம் பிள்ளைக்கிட்ட சேத்துறுங்க. நானில்லாம அவன் செத்துருவான்,” என இறக்கும் இறுதி நொடி வரை தன் மகனை பற்றியே வேதனைப்படும் சின்னி.
நவீனகாலத்தில் வரும் மாலதி கதாப்பாத்திரம் வழி தாய்மை அடையாமல் அவள்படும் இன்னல் எதிர் நோக்கும் சவால்களை எடுத்துரைகிறார்.

தமிழ் இலக்கிய உலகில் தாய்மையை மென்மையாகச் சொன்ன எத்தனையோ கதைகளை வாசித்து உள்ளோம். ஆனால், இக்கதை முற்றிலும் வேறு ஒரு கோணத்தில் எழுத்தாளர் வழங்கியுள்ளார்.

நாவலின் ஓட்டம் ஆரம்பத்தில் மெதுவாக நகர்ந்தது. சில அத்தியாயம் சோர்வை தந்தது. பல முறை மலேசிய படைப்பில் சொல்லப்பட்ட சூழல், வரலாறே அந்த சோர்வுக்கு காரணம். ஆனால், அத்தியாயம் 4 இல் இருந்து நாவலின் விறுவிறுப்பு மெல்ல தொற்ற ஆரம்பித்தது. இந்நாவலை மேலும் வாசிக்க அவர் எடுத்துக்கொண்ட உத்தி குற்றவியல் நாவலுக்கென உள்ள மர்ம உத்தியைப் பயன்படுத்தியுள்ளார். எனக்கு இந்நாவல் ஒரு பொக்கிஷம். வாசகர்கள் இந்நாவலை நிச்சயம் வாசிக்க வேண்டும்.

(Visited 43 times, 1 visits today)