இலட்சியப் பயணம்: சென்று சேராத முன்னோடி

ஐ.இளவழகு

2005இல் நவீன இலக்கிய வாசிப்புக்குள் நான் நுழையும்போது லட்சியவாத எழுத்துகளின் மேல் நண்பர்கள் வட்டத்தில் பெரும் பரிகாசம் இருந்தது. அதன் நாயகர்களாக இருந்த நா.பார்த்தசாரதி, அகிலன் போன்றவர்கள் பல்கலைக்கழகத் தரப்பில் கவனப்படுத்தப்பட, நவீன இலக்கியவாதிகள் குழு அவ்விருவரும் பொருட்படுத்தத் தேவையற்றவர்கள் என்ற அடிப்படையிலேயே உரையாடல்களை நிகழ்த்தினர். இன்னும் சொல்லப்போனால் ‘லட்சியம்’ என்ற வார்த்தைகூட அப்போதெல்லாம் கேலி செய்யப்பட்ட நினைவு உண்டு. அவ்வகையில் அவர்களை முன்மாதிரியாகக்கொண்டு மலேசியாவில் உருவான படைப்பாளிகளையும் அவர்களின் படைப்புகளையும் நவீன இலக்கியத்தை முன்னெடுத்தவர்கள் கவனப்படுத்தவில்லை.

லட்சியவாத கருத்துகளைக் கொண்டுள்ளதாலேயே ஒரு படைப்பை நிராகரிக்கலாமா எனக்கேட்டால் கூடாது என்றே கருதுகிறேன். அதேசமயம் இந்நாட்டில் லட்சியவாத எழுத்தின் இடம் என்ன என்பதையும் அது இந்தச் சமூகத்தின் மனதை எவ்வாறு உருவாக்கியுள்ளது என்பதையும் ஓர் எழுத்தாளன் அறிந்திருக்க வேண்டியுள்ளது.

ரப்பர் தோட்டங்களில் ஒப்பந்தக்கூலிகளாக வந்து ஆங்கிலேயர்கள், ஜப்பானியர்கள், மலையாளிகள், யாழ்ப்பாணத்தவர்கள், கம்யூனிஸ்டுகள், என பல தரப்பினரிடமும் அடிமைப்பட்டு சிதைந்த ஒரு சமூகம் தன்னை தானே மீட்டுக்கொள்ள வாழ்வில் நம்பிக்கையும் உற்சாகமும் கொடுக்கும் ஓர் இலக்கியத்தின் மேல் தீராத நாட்டத்தை அடைவது கேலிக்குரியதல்ல. சமூகத்தின் பார்வையில் தன்னைத் தானே நிறுவிக்கொள்ளும் பொருட்டு கல்வியிலும் பொருளாதாரத்திலும் 1980களில் துடிப்புடன் இயங்கிய இளைஞர்களுக்கு லட்சியவாத எழுத்துகளின் பங்களிப்பு அளப்பரியது. அகிலனும் நா.பார்த்தசாரதியும் உருவாக்கிய கதாநாயகர்களை மனதில் சுமந்துகொண்டு தங்கள் வாழ்க்கையைத் திட்டமிட்டதாகச் சொன்ன பலரையும் நான் சந்தித்துள்ளேன். இன்றும் கூட முகநூலில் லட்சியவாத நாவலின் கதாநாயகர்கள்போல பாவனை செய்யும்போது சமூகமே அவர்களைப் போற்றிப் புகழ்வதைக் காணலாம். பொதுவாகவே பல முனைகளில் ஒடுக்கப்படும் ஒரு சமூதாயத்துக்கு எழுச்சியைத் தூண்டும் கருத்துகள் தன்மீட்புக்கு அவசியமாக உள்ளன. எனவே இந்நாட்டில் அதுபோன்ற இலக்கியங்களை ஒரு வாசகன் ஆர்வத்துடன் கடந்துவருவது இயல்பான வாசிப்புப் படிநிலைதான்.

லட்சியவாத இலக்கியம் சமூகப் பொறுப்புணர்வை அதிகம் வலியுறுத்துவது; சித்தாந்த பலம் இல்லாத எழுச்சிக்கனவுகளை உருவாக்குவது; அன்பு, கருணை, காதல், மனிதாபிமானம் என அனைத்திலும் மிகையான வெளிப்பாடுகளைக் கொண்டது; வாழ்வை எளிமைப்படுத்திக்காட்டுவது என வரையறை செய்யலாம். இத்தகைய நாவல்களில் வரும் கதாநாயகனும் தன் அந்தரங்க உணர்ச்சிகளை விடவும் சமூகத்துக்கான நன்மை பயக்கும் செயல்களிலேயே அதிகம் இயங்குவான். சமுதாயத்துக்காகச் செயல்பட இயக்கங்களில் பங்கெடுப்பான். உயர்ந்த கருத்துகள் மட்டுமே அவனிடம் வெளிப்படும். எவ்விடத்திலும் கீழ்மை அண்டாமல் மேன்மையை மட்டுமே எல்லா இக்கட்டான நிலைகளிலும் வெளிப்படுத்துவான். அதனாலேயே அவனுக்கு எல்லா நல்லொழுக்கங்களும் நிறைந்த ‘அழகிய’ காதலியும் மனைவியும் வாய்ப்பார்கள்.

பொதுவாகவே லட்சியவாத இலக்கியங்களால் ஆட்கொள்ளப்பட்டவர்களிடம் உரையாடுவது சங்கடமானது. ஆனால் பட்டிமன்றப் பேச்சாளர்களாகவும் வெற்றிகரமான மேடைப்பேச்சாளர்களாகவும் தன்முனைப்பாளர்களாகவும் இவர்களே அதிகம் இருப்பர். வீட்டில் பெண்ணுக்கு மரியாதை கொடுப்போம், கல்வியின் மூலம் வாழ்வை முன்னேற்றுவோம், தனி மனிதன் நினைத்தால் சமுதாயத்தை முன்னேற்றலாம் என இவர்கள் கூற்றுகளுக்குக் கைத்தட்டல் நெடுநேரம் ஒலிக்கும். இந்தச் சத்தத்துக்கு எதிராக ஒரு நவீன இலக்கியவாதி புனைவுக்குள் சொல்லக்கூடிய அந்தரங்க மன உணர்வு, வாழ்வின் சிக்கலான இயங்குமுறை, அதன் உள்முரண்கள் ஆகியவற்றை நோக்கி ‘இவை வாழ்க்கைக்கு என்ன தருகின்றன’ என்ற கேள்வி இன்றுவரை தொடர்கிறது.

ஒருவகையில் பார்த்தால் ‘நவீன இலக்கியம் வாழ்க்கைக்கு என்ன தருகின்றது?’ எனக்கேட்டு நிற்கும் லட்சியவாத இலக்கிய வாசகனும் நவீன எழுத்தாளனும் முரண்பட்டும் இணைந்தும் செல்லக்கூடிய பாதையாகதான் மலேசிய இலக்கியம் இன்றளவும் உள்ளது. கல்வியாளர்களால், இயக்கவாதிகளால், அரசியல்வாதிகளால், பத்திரிகையாளர்களால் ஒவ்வொரு தருணமும் இலக்கியத்தை நோக்கி கேட்கப்படும் கேள்வி இது. இவர்களை உள்ளடக்கிய இலட்சிய வாசகர்களால் மலேசியாவில் அதிகம் கொண்டாடப்பட்ட நாவலென ஐ.இளவழகுவின் ‘இலட்சியப் பயணம்’ நாவலைச் சொல்லலாம்.

‘இலட்சியப் பயணம்’ நாவலை வாசித்து முடித்தபிறகு எனக்கு தோன்றிய முதல் மனப்பதிவு ஐ.இளவழகு நாவல் எனும் வடிவத்தின் சாத்தியங்களை உணர்ந்த முன்னோடி என்பதுதான். 424 பக்கங்களில் விரிவான ஒரு வாழ்க்கையைச் சொல்ல முயன்றுள்ளார். ஒரு கவிஞரான இவரது இந்த நாவல் 1972இல் எழுத்தாளர் சங்கத்தால் நடத்தப்பட்ட நாவல் போட்டியில் முதல் பரிசை வென்றது. பின்னர் சங்கமணி நாளிதழில் தொடராக வந்து வாசகர்களிடம் நல்ல கவனத்தைப் பெற்றது. 1983ஆம் ஆண்டுதான் நூலாக உருப் பெற்ற இந்நாவல், மலேசிய எஸ்.பி.எம் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மலேசிய நாவலாகும். (ஆனால் மாணவர்களின் பிரதிக்காகத் தணிக்கை செய்யப்பட்டு சுருக்கப்பட்டது. )

நாவல் பேரா மாநிலத்தில் உள்ள பாடாங் எனும் தோட்டத்தில் நடக்கிறது. மாதவன் என்ற இளைஞன், தன் குடும்பத்துடன் பால் மரம் சீவும் வேலை செய்து வருகிறான். தனது மூன்று சகோதர, சகோதரிகளின் கல்விக்காக எல்.சி.இ. வரை படித்திருந்த அவன் தன் கல்வியைப் பாதியிலேயே நிறுத்துகிறான். அதே சமயத்தில் தோட்டத் தொழிற்சங்கத்தின் செயலாளராகவும் சேவை செய்கிறான். மாலையில் தோட்டத்துப் பிள்ளைகளுக்கு வகுப்பு நடத்துகின்றான். தண்டல் தர்மலிங்கத்தின் மகள் இராதாவும் இவனும் காதலிக்கின்றனர். அது தண்டல் குடும்பத்தில் தடைசெய்யப்படுகிறது. அவளுக்கு அவளது அத்தானுடன் திருமணம் நடக்கிறது. விரக்தியில் இருக்கும் அவனுக்கு மேட்டுக் கடை லீலாவின் அறிமுகம் கிடைக்கிறது. மாதவன் ஒரு இலக்கியவாதியும்கூட. லீலாவையும் எழுத்தத் தூண்ட அவள் மனதிலும் காதல் மலர்கிறது.

தோட்டத்து மக்களின் அறியாமை, மதுவுக்கு அடிமையாதல் போன்றவற்றால் அவன் துவண்டுபோகிறான். இதற்கிடையே சின்ன கிராணிக்கும் அவனுக்கும் தொடர் பிணக்குகள் ஏற்படுகின்றன. தோட்டம் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்க, தொழிற்சங்க தலைவரும் மாதவனும் தோட்டத்தை விட்டு போகவேண்டும் என கிராணிமார்கள் விரும்புகின்றனர். அது நடக்கிறது.

இதற்கிடையில் தோட்டத்தில் நூலகம் அமைத்தல், கோடை காலத்தில் ஏற்படுகின்ற தண்ணீர் சிக்கலுக்குத் தோட்ட மக்களுக்கு ஆற்று நீர் கிடைக்க ஏற்பாடு செய்தல், காற்பந்துக் குழுவை உருவாக்குதல் என அவன் தன் பணிகளைத் தொடர்கிறான். ஆனால் அவன் லீலாவின் காதலை ஏற்கவில்லை. தமிழகத்தில் நிலத்தை மீட்க தன் தந்தையைப் பணத்துடன் தமிழகம் அனுப்பி வைத்து இங்கு கடன்காரனாகிறான். திரும்பி வந்த தந்தை எலும்புருக்கி நோயால் இறக்கவே குடும்பப் பொறுப்பு அவன் வசம் வருகிறது.

குடும்பத்தோடு தோட்டத்தை விட்டு வெளியேறி நண்பன் தமிழ்ச்செல்வனின் உதவியோடு புத்தகக்கடை ஒன்றை சித்தியவானில் தொடங்குகின்றான். பின்னர் உணவுக்கடை தொடங்குகிறான். துணிக்கடையும் ஆரம்பிக்கிறான். தன்னைக் காதலித்த லீலாவை நண்பனுக்கு மனமுடித்து வைத்து அவள் வாயாலேயே ‘அண்ணா’ எனும் பட்டத்தை ஏற்கிறான். பின்னர் அனைத்தையும் விற்று ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய இரப்பர் தோட்டம் ஒன்றை வாங்கி அதற்கு ‘பாட்டாளித் தோட்டம்’ எனப் பெயரிடுகின்றான். அதை ஒரு முன்மாதிரி தோட்டமாய் மாற்றுகிறான். அவன் அத்தை மகளை மணக்கிறான்.

‘லட்சியப் பயணம்’ நாவலின் சிறப்பாம்சமாக மூன்றைச் சொல்லலாம்.

முதலாவது, தோட்ட வாழ்வின் அத்தனை அம்சங்களையும் விரிவாக சொன்ன பாங்கு. ஒரு தோட்டத்து மண் திருமணத்தில், தீபாவளியில், மரணத்தில், சம்பள தினத்தில், வம்புகளில், திருவிழாக்களில், இலையுதிர்ந்த வரட்சிக் காலத்தில், போராட்டங்களில் என எத்தனை எத்தனை வண்ணங்களாக மாறுமோ அத்தனை மாற்றங்களையும் பதிவு செய்துள்ளது நாவல். தோட்டக்காடு, லயன்கள், திரைப்படம் ஓட்டும் திடல், அடர்காடுகளின் ஓரம் இருக்கும் நிரைகள், மரம் சீவும் நுணுக்கம், பால் நிறுக்கும் விதம், பாலை சீட்டிகளாக்கும் தொழில்நுட்பம், பாட்டாளிகளுக்கு வழங்கப்படும் நூதனமான தண்டனைகள் என பல்வேறு கோணங்களில் தோட்டத்து மக்களின் வாழ்வை முழுமையாக புனைவாக்கியுள்ளார் ஐ.இளவழகு.

இரண்டாவது, மையமாக மாதவன் எனும் கதாபாத்திரம் இருந்தாலும் அவனுக்கு ஈடாக அவன் தந்தை ஆண்டியப்பன் அவனுக்கு முற்றும் முரணான கதாபாத்திரமாக வருவது தொடங்கி பெரிய கிராணி, சின்ன கிராணி, தோட்டத்தின் தொழிற்சங்கத் தலைவர் ஆறுமுகம், தீபாவளிக்கு ஆட்டைத் தோலுரிக்கும் குருசாமி கிழவன், அசாப்புக்கார முனுசாமி, சண்டைபோடும் குடிகாரர்கள், கள்ள உறவு வைத்துள்ளவர்கள், தோட்டத்துச் சிறுவர்கள் என பல்வேறு முகங்கள் விரிவாகவே நாவல் முழுவதும் அறிமுகமாகி ஒரு நிலத்தின் பல்வேறு மனோநிலைகளை வெளிப்படுத்துகின்றனர்.

இவை இரண்டுமே எழுத்தாளரின் தோட்டத்து வாழ்வின் அனுபவத்தில் பெறப்பட்டவை. ஆனால் ஒரு எழுத்தாளராக அவர் வெல்லும் இடம் ஒன்று உண்டு. ஒரு நாவலாசிரியர் தவற விடக்கூடாத தருணங்களை ஐ.இளவழகு சரியாகவே பயன்படுத்தியுள்ளார். தொழிற்சங்க சந்தாவை வசூலிக்கச் செல்லும்போது மாதவன் பார்வையில் தோட்ட மக்களின் ஓய்ந்த பொழுதுகள் கழிகின்ற விதம், பினாங்கில் இருந்து கப்பல் ஏறி தமிழகம் செல்லும் துறைமுகச் சூழல், தோட்டத் திரையிடலுக்கு முன்பான மக்களின் பரபரப்பான மனநிலை, மாதவனின் அப்பா நினைவுகள் வழி இன்னும் பின் சென்று 1940களில் உள்ள தோட்டத்தை காணும் உத்தி என விரிந்து சென்று, நாவல் தனக்கான அகன்ற வாழ்வை உள்ளுழுத்துக்கொள்ள வைக்கிறார்.

லட்சியப்பயணம் கவனமாக வாசிக்கப்பட வேண்டிய நாவல். தேய்வழக்கான உவமைகள், நம்பகமற்ற உரையாடல்கள், இடையிடையே வந்துபோகும் திருக்குறள் அல்லது கவிதைகள் போன்ற சிறு சிறு இடையூறுகளால் நாவலைப் புறக்கணிப்பது நம் வரலாற்றின் ஒருபகுதியைப் புறக்கணிப்பதும்தான்.

இந்த நாவலின் பிரதான பலவீனமே அதன் மையப் பாத்திரமான மாதவனின் பாத்திர வார்ப்புதான். நாவலின் தொடக்கத்தில் அவன் கோழையாகச் சித்தரிக்கப்படுகிறான். அவன் பயம் தோட்டத்திலும் பிரபலம். சின்ன கிராணியின் ஆட்களிடம் அடிவாங்கி முட்டி உடைபடுகிறான். அடர்காட்டில் புலி வருமென சில மரங்களைச் சீவாமல் தண்டனை பெறுகிறான். காதலியின் அப்பாவை எதிர்க்க முடியாமல் மௌனியாகப் பின்வாங்குகிறான். ஊரார் ஏதும் நினைத்துக்கொள்வார்கள் என அவள் திருமணத்திற்கும் செல்கிறான். அவனே நாவலின் பிற்பகுதியில் பெரும் தோட்டத்தை வாங்கும் அளவுக்கு செல்வந்தன் ஆகிறான். இந்த மாற்றம் அவனுக்குள் எப்படி நடந்தது என தெளிவான சித்தரிப்பு இல்லை. தோட்டத்தில் இருந்து பட்டணத்துக்குச் சென்றபின் விவரிக்கப்படும் அடுத்த நூறு பக்கங்களில் புத்தகக் கடை ஆரம்பித்து, உணவகம் ஆரம்பித்து, துணிக்கடை ஆரம்பித்து, சிறு தோட்டம் வாங்கி பெருந்தோட்ட முதலாளியாவதாக நாவல் வேகம் எடுக்கிறது. அந்த நூறு பக்கங்கள்தான் அவனை லட்சியம் கொண்ட மனிதனாக வலிந்து சித்தரிக்கிறது. அந்த நூறு பக்கங்கள்தான் நாவலை கீழ் இழுத்துவிடுகிறது.

நாவலாசிரியர் ஐ.இளவழகுவால் தோட்டத்து மண்ணன்றி பிரிதொரு வாழ்வை புனைவுக்குள் கொண்டு வர இயலவில்லை. மாதவனை தோட்டத்துச் சூழலில் இருந்து காட்டியவரை அந்த வாழ்வில், அந்த மண்ணில் அவன் என்னவாக சஞ்சரிக்கிறான் என விரிவாக எழுதியவர் சிறுநகரத்துக்குள் நுழைந்த பிறகு தடுமாற்றம் அடைகிறார். அவனது நிலையை மட்டுமே அவசர அவசரமாக எழுதிச் செல்கிறார். ரஜினி ஒரே பாடலில் பணக்காரர் ஆவதுபோல எல்லாமே மிகவேகமாக நடந்து முடிகிறது.

மாதவனை மேன்மையானவனாகக் காட்ட வேண்டுமென வலிந்து திணிக்கப்பட்ட நீலா என்ற பெண்ணின் பாலியல் சீண்டல் காட்சி, விட்டுப் பிரிந்த கணவனுடன் அவளை இணைந்து வைக்கும் நாடகபாணி, தன்னைக் காதலித்த லீலா என்ற பெண்ணை தன் நண்பனுக்குத் திருமணம் செய்து வைத்து காதலித்த பெண்ணையே அண்ணன் என அழைக்க வைக்கும் அபத்தம் என எல்லாமே வெகுசனப் படங்களில் பார்த்துப் பார்த்து சலித்துப்போனவை. இவை மையப் பாத்திரத்தை நாயகனாக கட்டமைக்க வெகுசன சினிமாக்கள் செய்யும் மொண்ணையான உத்திகள். அதுபோல அமைப்பின் தலைவர்களை (பி.பி.நாராயணன்) நாவலில் ஒரு பாத்திரமாக உருமாற்றி அவர்களை போற்றிப் புகழ்வதெல்லாம் நாவலில் வரும் அபத்தக் காட்சிகள்.

லட்சியப் பயணம் நாவல் நடக்கும் காலம் தெளிவாகச் சொல்லப்படாவிட்டாலும் தேசிய நில நிதிக் கூட்டுறவு சங்கம் உருவாக்கப்பட்ட காட்சி வருவதால் 1960 என கணிக்க முடிகிறது. அந்த ஆண்டை மனதில் வைத்துக்கொண்டே நாவலின் வாசிப்பை வளர்த்துச்செல்வதும் சாத்தியமாகிறது. அப்போது கம்யூனிஸ்டுகளின் உச்சமான காலக்கட்டம். ஆனால் மாதவன் அந்தக் காலத்தை கடந்து வந்துவிட்டவன் போல பிறர் சொல்லும் கம்யூனிஸ்ட் கதைகளை ஆச்சரியமாகக் கேட்கிறான். நாடு சுதந்திரம் பெற்று, பல்வேறு அரசியல் அழுத்தங்களைச் சந்தித்த எந்த நெருக்கடிகளும் நாவலில் பதிவாகவில்லை. மாறாக தொழிற்சங்க இயக்கத்தில் தலைவர் ஆறுமுகம், அதன் செயலாளராக இருக்கும் மாதவன் என அனைவருமே முதலாளிகள் நெருக்குதல் கொடுத்ததால் வேறு தோட்டத்துக்கு வேலைக்குச் செல்வதாகவும் அல்லது பட்டணத்தில் கடை வைப்பதாகவுமே சித்தரிக்கப்படுகின்றனர். சிக்கல் வந்தால் ஒதுங்கிச் சென்று உன் வாழ்க்கையை மட்டும் கவனி என தொழிற்சங்க நிர்வாகத்தினர் செயல்படுகின்றனர்.

ஐ.இளவழகு, தன் நாவலில் வரும் மாதவனைப் போல தனக்கு மேல் உள்ள தலைமையைப் போற்றுவதிலேயே கவனமாக இருக்கிறார் எனத் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. தோட்டத்துண்டாடலின்போது தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் தோட்டங்களை வாங்கும் முயற்சிக்கு ஆதரவு தெரிவிக்காத தோட்டத் தொழிற் சங்கத்தின் போக்கை ஒரு வாக்கியத்தில் குறிப்பிட்டு பின்னர் அடுத்த பத்தியிலேயே பி.பி.நாராயணனை போற்றத்தொடங்குகிறார். நாவலில் மாதவனும் அதிகாரம் கட்டமைத்துக் கொடுக்கும் பாதையில் சமத்தாகச் சென்று பலனடைவதையே விரும்புகிறான். தன்னைச் சூழ்ந்துள்ள பல்வேறு இடர்கள் குறித்து அவனுக்கு எந்தக் கேள்வியும் இல்லை. உண்மையில் கேள்விகள் இல்லாத நாவல் இது. பி.பி.நாராயணனை ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு கைக்கூலியாக வர்ணிக்கும் ஆய்வாளர்கள் உண்டு. ஆய்வாளர் ஜிவி.காத்தையா போன்றவர்கள் தோட்டப்பாட்டாளிகளுக்கு இடர்கள் வரும்போது தொழிலாளர் சங்கம் காட்டிய அலட்சியத்தை விரிவாகவே பதிவு செய்துள்ளனர். ஓர் எழுத்தாளன் தன் புனைவில் இந்த நுண் அரசியலை எழுதித்தான் ஆக வேண்டுமென்ற அவசியம் இல்லை. ஆனால் போலியான வரலாற்றைக் கட்டமைக்க தன் புனைவுக்குள் நிஜமான கதாபாத்திரங்களுக்கு இடம் கொடுக்கும்போது அந்த எழுத்தாளரின் நோக்கத்தைச் சந்தேகிக்க வேண்டியதாக உள்ளது.

என் வாசிப்பில், வலுவான ஒரு கேள்வியின் வழி நாவலின் மையச் சரடை ஆசிரியர் உருவாக்கியிருக்க முடியுமெனத் தோன்றியது. நாவலில் இரு பக்கங்களில் ஓர் உரையாடல் வருகிறது. ‘தொழிற்சங்கத்தில் கம்யூனிஸ்டுகள் இணைந்துள்ளதாக வரும் தகவல்களால் ஆங்கிலேயர்கள் தொழிற்சங்கத்தை சந்தேகித்தனர். கம்யூனிஸ்டுகள் தங்கள் தேவைக்காகத் தொழிற்சங்க பெயரைப் பயன்படுத்திக்கொண்டனர்’ என்ற சாரத்தை கொண்டுள்ள அப்பகுதியின் வழி தொழிற்சங்கத்துக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் சம்பந்தம் இல்லை என அவர் நிறுவ நினைக்கிறார். உண்மையில் நாவலுக்குள் இந்த அரசியல் மையச்சரடாக பயணித்திருந்தால் நாவலின் வலு இன்னமும் அதிகரித்திருக்கும்.

சீனர்களுக்கும் தமிழர்களுக்கு பத்து காசில் இருந்த சம்பள வித்தியாசத்தைக் கண்டித்து 1941இல் நடந்த இந்தியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தில் மலாயா கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் பங்குண்டு. தொழிலாளர்களின் உரிமைக்காகப் போராடிய தொழிற்சங்கத்துக்கு ஆதரவான குரல் கம்யூனிஸ்டுகளிடம் இருந்தது. பாட்டாளிகளுக்காக உருவாக்கப்பட்ட தொழிற்சங்கத்திடம் பாட்டாளிகளின் கூட்டாளிகள் என சொல்லிக்கொள்ளும் கம்யூனிஸ்டுகளின் இணைவும் எஸ்.ஏ.கணபதி தூக்கிலிடப்பட்ட பின்னர் பி.பி.நாராயணன் தலைவராக இருந்து முன்னெடுத்த தொழிற்சங்கத்தில், கம்யூனிஸ்டுகளின் நிலையும் எவ்வாறு இருந்தன என்று வரலாற்று பின்னணியில் விரிவான தேடல் (தீர்ப்பு அல்ல) நாவலுக்குள் நிகழ்ந்திருந்தால் ரெ.கார்த்திகேசு சொல்வதைப்போல இதை ஒரு செவ்வியல் தகுதிகொண்ட நாவல் என ஒப்புக்கொள்ளத் தடையில்லை. ஆனால் ஐ.இளவழகுவிடம் உள்ளது எளிய கருத்துகள் மட்டுமே. அதனைச் சொல்ல சில கதாபாத்திரங்களை உருவாக்குகிறார். இலக்கியம் பற்றியும், நூல் வெளியீடுகள் குறித்தும், வாசிப்புப் பழக்கத்தின் தேவை குறித்தும், கம்யூனிச எதிர்ப்புக் குறித்தும் அவர்கள் அவ்வப்போது பிரதிநிதித்து பேசிவிட்டுச் செல்கிறார்கள்.

இலட்சியப் பயணம் மலேசிய நாவல் இலக்கியத்தில் ஒரு முன்னோடி முயற்சி எனச் சொல்லத் தகுதி கொண்டது. அதற்கான அத்தனை கச்சா பொருள்களும் அதற்குள்ளாகவே உள்ளன. ஆனால் கலை என்பது கச்சா பொருட்கள் மட்டுமல்ல. அவற்றைக்கொண்டு சமைக்கத் தெரியவேண்டும். ஒருவேளை தன் அனுபவங்கள் வழியே பாடாங் எனும் தோட்டத்தின் கதையை இன்னும் நுணுக்கமாகச் சொல்லியிருந்தால் இது மலேசியாவில் மிகச்சிறந்த நாவல் எனும் இடத்தை அடைந்திருக்கும். ஆனால் ஐ.இளவழகு யாருக்கோ கடமை பட்டவர்போல நாவலுக்குள் அரசியல் சார்பு நிலை எடுக்கும்போது வரலாற்றை திரித்து எழுதத் தொடங்குகிறார். அது அவர் எழுத்தை நாளிதழ் வழி பிரபலப்படுத்த உதவியிருக்கலாம். நாவலாக அச்சேறியபோது அமைப்புகளால் கொண்டாடப்பட்டிருக்கலாம். ஆனால் அது ஒரு வரலாற்று மோசடி. அதை எண்ணி எழுத்தாளன் தலை குனிந்துதான் ஆகவேண்டும்.

மலேசிய நாவல்கள் விமர்சனம் :

செலாஞ்சார் அம்பாட்: புனைவின் துற்கனவு

ரெ.கார்த்திகேசு நாவல்கள்: மெல்லுணர்ச்சிகளின் பூஞ்சணம்

எம்.ஏ.இளஞ்செல்வன் நாவல்கள் : பாலுணர்வின் கிளர்ச்சி

செம்மண்ணும் நீல மலர்களும்

துயரப்பாதை: நெடுநாள் உயிர்த்துள்ள நெகிழிப்பூ

(Visited 528 times, 1 visits today)