ராசன்: கடிதங்கள் (2)

சிறுகதை ராசன்

அண்ணா, உங்கள் சமீபத்திய சிறுகதைகளுள் அதன் வடிவம் சார்ந்த ஒரு கவனம் கூடியிருக்கிறது. அதன் crafting கலை சியர்ஸ், ராசன் இரண்டிலுமே நன்கு அமைந்துள்ளது. “உண்மையாகவே ரத்தினக்கல்லை எடுக்கதான் அமிர்கான் ராஜநாகத்தை வளர்த்தார் துவான்” சிறுகதையின் சொடுக்கான நடை கச்சிதமாக அமைந்த வரிகளுள் ராசன் சிறுகதையும் ஒன்று.

நாகங்களின் அரசனான ராஜநாகத்தை வளர்க்கும் அமிர்கான் அவனும் ராசனாக தருணம் அல்லது தீபன் அதனை உணர்ந்த தருணம். ராசாங்க படையெடுத்துப் போனதெல்லாம் திருட்டா? என்ற கேள்வியிலிருந்து கதை தன் மறுப்பக்கத்தை காட்டுகிறது அமிர்கானை எப்படி வரையறுப்பது என்ற கேள்வியுடன். அமிர்கான் கிட்டதட்ட ராஜா போலவே வாழ்கிறான் அவன் குருதி ரத்தமும் ராஜா வம்சம் தான். அவனை காணும் தீபன் அவனாக விழைகிறான் அது தீபனுள் உறைந்திருக்கும் ஒரு ராசனை வெளிக் கொண்டு வரத் துடிக்கிறது.

ராஜநாகம் பிற நாகங்களை தன்னிடம் அண்ட விடாமல் தனக்கு தேவையானவையை தன் குடிகளிடமிருந்து பெற்றுக் கொண்டு வாழ்வது போலவே அமிர்கானும் வாழ்கிறார். அமிர்கான் தன் கதைகளின் மூலம் தீபன் உட்பட எல்லாரையும் அப்படி தான் ஆட்டுவிக்கிறார். அந்த பௌர்ணமி இரவு என்பது இரு ராசாக்களும் ஒருவரை ஒரு சந்தித்துக் கொண்ட தருணம். அமிர்கான் புறமுதுகிடாத ராஜ வம்சமென்பதால் ”சொக்கரு பரம்பரையில அச்சப்பட்டாலே அவமானத்தால சாவாங்க. குத்துவாள எடப்பக்கமா சொருவி வலப்பக்கமா இழுத்து கொடலு சரிஞ்சவெனெல்லாம் இருக்கான். ” மற்ற அரசனுடன் போர் புரியவே செய்கிறான்.

மாதம் ஒரு தடவை நீலவேணுவிற்கு பிடித்துக் கொடுக்கும் சித்திர மண்டூகனைப் போல தான் தீபனும் அமிர்கானுக்கு ஆனால் தீபனுள் இருக்கும் வேட்கை நீலவேணுவாக வேண்டுமென்பது. இறுதியில் அவன் உணர்வது உலகில் இலட்சத்தில் ஒரு ராஜ நாகம் தான் நீலவேணு என்பதை.

ஜி.எஸ்.எஸ்.வி.நவின், பெங்களூரு

நவீன், மறுபடி மறுபடி புதிய திறப்புகளைக் கொடுக்கும் சிறுகதை ராசன். அமிர்கான் பணம் வாங்கியது வைத்தியத்துக்காக. அந்த வைத்தியத்தை அவர் செய்துவிட்டார். தன்னை அரசனாக எண்ணிக்கொள்ளும் தீபனிடம் அரசனின் குணங்களைச் சொல்வதுதான் அந்த வைத்தியம். செய்த வைத்தியத்திற்கு கட்டணமும் வாங்குகிறார். அந்த வைத்தியம் அவருக்கானதாகவும் மாறும்போதுதான் கதை மேலும் உயர்ந்து செல்கிறது. ஒரு ஜமீனான அவர் தன்னிடம் ஒட்டியுள்ள அழுக்கை (பயத்தை) அறிகிறார். அவர் பித்தை கொடுப்பதாக சொன்ன பொய்யால் மடிகிறார்.

கதையில் ஜமீன் வரலாற்றை குறைத்திருக்கலாம். நாகம் போலவே அதுவும் ஒரு தொன்மமாக உருவாகும்போது சிறிது விலகிச் செல்கிறது. நாகம் மட்டுமே அதில் மைய படிமமாக இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

நீலவேணு சித்தரிப்பு, பெண்கள் அச்சத்தால் கத்துகின்றனர் போன்ற கவனிப்பு தனித்துவமானது. தொடர்க.

பிரபா

(Visited 77 times, 1 visits today)