ரெ.கார்த்திகேசு நாவல்கள்: மெல்லுணர்ச்சிகளின் பூஞ்சணம்

பொழுதுபோக்கு இலக்கியம் இருப்பதை விமர்சிக்கவில்லை. அவற்றை உயர்வாக மதிப்பிடுவது, அவற்றைச் சார்ந்த சமூக மதிப்பீடுகளை உருவாக்குவது – இந்த அணுகுமுறையைத்தான் நான் விமர்சிக்கிறேன் – சுந்தர ராமசாமி

பறை இரண்டாவது இதழுக்காக ‘கூலிம் நவீன இலக்கிய களம்’ 2014இல் ஓர் அறிமுகக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. அவ்விதழின் முன்னுரையில் மலேசிய இலக்கிய உலகம் ரெ.கார்த்திகேசு போன்ற ‘மீடியோக்கர்’களை (mediocre) முன்னிலைப்படுத்துவதன் அபத்தங்களை எழுதியிருந்தேன். அக்கட்டுரை குறித்து மேடையில் தனது கருத்தைக் கூறிய எழுத்தாளர் கோ.புண்ணியவான், ‘ரெ.கார்த்திகேசு வணிக இலக்கியவாதிதான். அவர் தன்னை தீவிர இலக்கியவாதியென எப்போதும் சொல்லிக்கொண்டதில்லை. அப்படியிருக்க அதை ஏன் மறுபடி மறுபடி  பதிவு செய்யவேண்டும்?’ எனக்கேட்டார்.

அவர் சொன்னது உண்மைதான். வல்லினம் தொடங்கியது முதலே நான் ரெ.கார்த்திகேசுவை வணிக எழுத்தாளர் என்றே பல தருணங்களில் குறிப்பிட்டு வந்துள்ளேன். இது அவரை அவமதிக்கும் நோக்கமல்ல. ஒருவர் வணிக எழுத்தாளராக இருப்பது அவரது தேர்வு. அது குறித்து கேள்வி எழுப்புவதோ கிண்டல் செய்வதோ இலக்கிய விமர்சனத்தில் அவசியமற்றது. ஆனால் நான் அவரை அவ்வாறு  வணிக எழுத்தாளர் தரப்பில் நிறுவ சில காரணங்கள் உண்டு. அதற்கு முன் தீவிர எழுத்து, வணிக எழுத்து என்பதன் வேறுபாடு குறித்து எளிய அறிமுகம் தேவையென நினைக்கிறேன்.

ஓரிரு ஆண்டுகளுக்கு முன் ஒருவர் தொலைபேசியில் இவ்வாறு கேட்டார். “எனக்கு வரலாற்றில் ஆர்வம் இருக்கு. நான் அது சார்ந்த நூலை தூக்கத்தையெல்லாம் துறந்து சீரியஸாக வாசித்தால் அது தீவிர வாசிப்புதானே” என்றார்.  நான் அவரிடம், “இலக்கியத்தில் பல்வேறு கலைச்சொற்களின் பயன்பாடு உள்ளது. ஒவ்வொரு சொல்லும் தன்னளவில் விரிவான அர்த்தம் கொண்டது. எனவே அவற்றை அறிய முயலுங்கள்,” என்றேன்.

இது இங்கு எப்போதும் உள்ள சிக்கல். அதற்கு காரணம் தமிழகத்தில் கா.ந.சு, சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன், ஜெயமோகன் போன்று இலக்கியத்தில் உள்ள அடிப்படையான பேதங்களை, அவற்றின் அழகியல் தன்மைகளைப் பேசும் ஆளுமைகள் மலேசியாவில் உருவாகவில்லை. சண்முகசிவா போன்றவர்கள் அவ்வப்போது பேசியிருந்தாலும் அது தீவிரமடைந்து மலேசியப் படைப்புகள் குறித்த மதிப்பீடாக உருவாகவில்லை.

வணிக எழுத்துகள்

வணிக எழுத்துகளை சாகசக் கதைகள், குற்றவியல் கதைகள், மெல்லுணர்ச்சிக் கதைகள், லட்சியவாதக் கதைகள் என நான்காக வகுக்கலாம். பொதுவாக வியாபார நோக்கம்கொண்ட அவை மக்களுக்குப் பிடித்ததை அவர்களின் ரசனைக்கு ஏற்றவாறு மட்டுமே எழுதுவதால் ஜனரஞ்சக இலக்கியம் என்றும் சொல்லப்படுகிறது. சாகசக் கதைகளுக்கு கல்கி, சாண்டில்யன் போன்றவர்களையும், குற்றவியல் கதைகளுக்கு ராஜேஷ்குமார், புஷ்பா தங்கதுரை போன்றவர்களையும், மெல்லுணர்ச்சி கதைகளுக்கு சிவசங்கரி, லட்சுமி என ஒரு வரிசையையும், லட்சியவாத எழுத்துகளுக்கு அகிலன், நா.பார்த்தசாரதி போன்றவர்களையும் உதாரணமாகக் கொள்ளலாம்.  இவ்வகையான புனைவுகள் நிராகரிப்புக்கு உரியவை அல்ல. தமிழ் இலக்கிய வாசகராக உருவாகும் பலரும் கடந்துவரும் படைப்பாளிகள்தான் இவர்கள். சாண்டில்யன் வழி இளவயதில் அதீத வல்லமை கொண்ட மனிதர்களையும், ராஜேஷ்குமார் வழி துப்பறிதல் சுவாரசியத்தையும், சிவசங்கரி வழி மேலோட்டமான கிளர்ச்சிகளையும் அகிலன் வழி கவர்ச்சியான கதாநாயக மையங்களையும் தன் வாசிப்பு பயணத்தில் கடந்து வரும் ஒரு மலேசிய வாசகன் அதைத்தாண்டிச் செல்ல இங்கு தீவிர இலக்கியத்திற்கான பேரலை கடந்தகாலங்களில் உருவாகவில்லை. விளைவாக வணிக எழுத்துகளை முன்னிலைப்படுத்தி, மலேசிய அச்சு ஊடகங்கள், எழுத்தாளர் சங்கம், கல்வித்துறைகள் போன்ற அமைப்புகள், இயங்கின.

கடந்த காலங்களில் மலேசிய இலக்கியம் குறித்த வடிவமைப்புகளில் மேற்கண்ட மூன்று தரப்பினரும் மிக அதிக செல்வாக்கு பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆகவே, இலக்கியம் குறித்த தேடலுடன் வரும் புதியவர்கள் இத்தரப்பினரின் பிழையான வழிகாட்டுதலுக்கு ஆளாகவேண்டியிருந்தது.

வணிக கதையமைப்பின் ஆதாரமாக இருப்பது ஒரு நல்ல கதாநாயகன் அல்லது நாயகி. ஆர்வத்தைத் தூண்டும் கதைப் பின்னல். வாசகரை தொல்லைப்படுத்தாத மகிழ்ச்சியான விளைவு. வாசகர் மனதில் வைத்துள்ள உலகத்தோடு ஒன்றிச்செல்லும் கருப்பொருள். கதையில் தீமை, வறுமை, அபாயம் போன்றவை கதையை வளர்த்தெடுக்க மட்டுமே இடம்பெறும். ஆனால் அவை தீவிரம் அடையாமல், வாசகனின் மகிழ்ச்சியைக் கெடுக்காமல் தொல்லையற்ற நிறைவைத் தரும். முதிர்ச்சியற்ற வாசகர்கள் மீண்டும் மீண்டும் இவ்வகையான படைப்புகளையே தேடிச்செல்வர். அவர்களுக்கு அது ஒரு நுகர்பொருள்.

இவற்றுக்கு மாற்றாக தீவிர இலக்கியம் வாழ்வை காத்திரமாக ஆராய்கிறது. வாழ்க்கைச் சிக்கலை ஆழமாக விவாதிக்கிறது. வாழ்க்கையில் அனுபவிக்கும் உண்மைகளை ஒரு விசாரணையின் மூலம் தேடிக் கண்டுபிடிக்க முயல்கிறது. வாசகனிடம் உழைப்பைக் கோருகிறது. 

உண்மையில் வணிக இலக்கியம் மற்றும் தீவிர இலக்கியத்திற்கான வித்தியாசம் புறக்கூறுகளால் மட்டும் ஆனதல்ல. அதன் பேதம் நுணுக்கமானது. வணிக எழுத்தின் அடிப்படை நோக்கமே வாசக இன்பத்திற்கானது. நல்ல வகையில் பொழுதைக் கழிக்க உதவுவது. தீவிர இலக்கியம் மனித வாழ்க்கையின் ஏதோ ஒரு கூறின்மீது ஒளி பாய்ச்ச முனைவது. நமது இருத்தல் நிலையில் வேறொரு ஆழ்நோக்கை அளிக்க முயல்வது. வாழ்க்கையை கலை ரீதியாக ஆராய தீவிர இலக்கியம் முயல்கிறதென்றால் வாழ்க்கை சார்ந்த மயக்கங்களை ஜனரஞ்சக எழுத்து சில தொழில்திறன் வழி உருவாக்குகிறது. அதுபோலவே எழுத்தாளர்களை அடிப்படையாகக் கொண்டும் இலக்கியத் தரத்தை பட்டியலிட முடியாது. சுஜாதா, பாலகுமாரன் போன்றவர்கள் ஜனரஞ்சக தளத்தில் இயங்கினாலும் தரமான சில இலக்கியங்களையும் புனைந்துள்ளனர். ஆக, ஒரு இலக்கியத்தின் தரத்தை வாசகன் வாசித்தே அறிய வேண்டும். தொடர் உரையாடல்கள், விமர்சனங்கள் வழியே ஒவ்வொரு காலத்திலும் படைப்புகள் முன்னெடுக்கப்படுகின்றன; விவாதிக்கப்படுகின்றன.

தொலைக்காட்சித் தொடர்கள் வந்தபிறகு தமிழகத்தில் ஜனரஞ்சக இலக்கியங்களின் செல்வாக்கு குறையத்தொடங்கியது. தொடர்கதைகள் வாசித்த பெண்கள் சீரியல்களை நோக்கிச் சென்றனர். வேறெந்த மாற்றுக் கலையைக் கொண்டும் நிரப்ப முடியாத தீவிர இலக்கியத்தின் போக்கு தொடர்ந்து வளர்ச்சி கண்டது. ஆனால் மலேசியாவில் அம்மாற்றம் ஒரு அடுக்கில் மட்டுமே நடந்தது. 1990களில் இறுதியில் வானம்பாடி, நயனம் போன்ற இதழ்களில் தொடர்கதைகள் வாசித்த பெண்கள் கொஞ்சம் கொஞ்சமாக சீரியல் பக்கம் திரும்பினர். அக்காலகட்டத்தில் தீவிர இலக்கியம் சார்ந்த முன்னெடுப்புகள் எதுவும் நிகழாமலும் விமர்சகர்கள் உருவாகாமலும் ரெ.கார்த்திகேசு வகை வணிக எழுத்தாளர்கள் மலேசிய நவீன இலக்கியத்தின் அடையாளம்போல காட்டப்படத் தொடங்கினர். மேலும் எளிய மதிப்பீடுகளை எழுதியதன் வழி தன்னை விமர்சகராகவும் அடையாளப்படுத்திக்கொண்ட ரெ.கார்த்திகேசு, இரு விமர்சன நூல்களும் ஏராளமான புனைவிலக்கிய நூல்களுக்கு முன்னுரைகளும் எழுதியிருப்பதுடன் பல்வேறு இலக்கியப் போட்டிகளுக்கு நீதிபதியாகவும் தன் இடத்தை திடப்படுத்திக்கொண்டார். 

பேராசிரியரான அவர் தொடர்ந்து படைப்பூக்கத்துடன் செயல்பட்டதாலும், மாணவர் மணிமன்றம் காலம் தொட்டே இலக்கியச் செயல்பாடுகளில் இயங்கியதாலும் பரந்த கவனத்தைப் பெற்றிருந்தார். புலம்பெயர் நாடுகளில் மலேசிய இலக்கியம் குறித்து அவரே அபிப்பிராயம் சொல்லும் நபராக விளங்கினார். 1990களில் மலேசியாவைத் தாண்டி அறியப்பட்ட எழுத்தாளர்களில் ஒருவராக ரெ.கார்த்திகேசு விளங்கி தனக்கான தனித்த அடையாளத்தை தேடிக்கொண்டார். அந்த அடையாளம் எவ்வித பெரிய இலக்கிய அந்தஸ்தும் இல்லாமல் இருந்த எழுத்தாளர் சங்கத்துக்குத் தேவைப்பட்டது. தனது புனைவிலக்கிய பலவீனங்களை அறிந்துகொண்டபோது கார்த்திகேசுவுக்கும் பின்னாட்களில் இயக்கம் தேவைப்பட்டிருக்கலாம்.

இவ்வாறு மலேசிய இலக்கியத்தில் ஆதிக்கம் செலுத்தியுள்ள ஒரு படைப்பாளியின் இலக்கியத் தரம் குறித்த தீவிரமான உரையாடல்கள் இந்நாட்டில் நிகழாத பட்சத்தில் என் போன்ற வாசகர்கள் மறுபடி மறுபடி அவர் படைப்புகளின் நிஜத்தன்மை குறித்து பேச வேண்டியது அவசியமாகிறது. அப்படைப்புகளைச் சுற்றி எழுப்பப்பட்டுள்ள போலியான பிம்பங்களை உடைக்க வேண்டியுள்ளது. அதன் வழி ரெ.கார்த்திகேசு படைப்புகளை முன்வைத்து உருவாகும் சமூக மதிப்பீடுகளையும் கேள்விக்குட்படுத்தவேண்டியுள்ளது.

ரெ.கார்த்திகேசுவின் நாவல்கள்

கார்த்திகேசு  வானத்து வேலிகள், தேடியிருக்கும் தருணங்கள், அந்திமக் காலம், காதலினால் அல்ல, சூதாட்டம் ஆடும் காலம் எனும்  ஐந்து நாவல்களை எழுதியுள்ளார். இவற்றில் சில பத்திரிகைகளில் தொடராக வந்தவை. எனவே தொடர்கதைகளுக்கே உரிய ‘சன்பென்ஸ்’ தன்மையை ஒவ்வொரு பாகத்திலும் கொண்டவை. புனைவிலக்கியத்தில் நடக்கும் திருப்பம் ஒரு உத்திதான். நல்ல படைப்புகள் அந்த திருப்பத்தின் வழி புதிய வெளிப்பாடுகளை உருவாக்குகின்றன. கார்த்திகேசு வாசகனின் ஊகங்களையும் எதிர்பார்ப்புகளையும் எழுப்ப மட்டுமே இவற்றைப் பயன்படுத்துகிறார். அது வணிக எழுத்தாளர்களுக்கே உரிய பண்பு.

வானத்து வேலிகள் (1981). குணசேகரன் எனும் சிறுவன் தோட்டத்தில் மதுவுக்கு அடிமையான தன் அப்பாவைவிட்டும் கையாலாகாத தன் அம்மாவைவிட்டும் ஓடிச்சென்று கல்வியாளனாகி, கொடை நெஞ்சராகி, முப்பது மாடிக் கட்டடம் ஒன்றை பினாங்கில் கட்டும் பெரும் செல்வந்தனாகி, ஒரே வீட்டில் இருந்தும் தன்னிடம் படுக்கையில் மட்டும் விலகியிருக்கும் மனைவியுடன் எப்படி இணைகிறார் என்பது கதை. குணசேகரனும் அவர் மனைவியும் தாங்கள் பெற்ற ஒரே மகன் இறக்கப்போகும் தருவாயில், அவன் கேட்டுக்கொண்டபடி பல ஆண்டுகளுக்குப் பிறகு தேனிலவுக்குப் போவதுதான் கதையின் முடிவு.

தேடியிருக்கும் தருணங்கள் (1993). சூரியா அப்பாவை மரணப் படுக்கையில் காண வெளிநாட்டிலிருந்து வருகிறான். தான் தத்துப்பிள்ளை என அப்போதுதான் தெரியவர மனமுடைகிறான். அப்பா இல்லாத வீட்டில் அவனுக்கு உதாசினம் நிகழ அம்மாவைத் தேடுகிறான். ஆனால் 254 பக்க நாவலில் அம்மாவை தேடும் படலம் அதிகபட்சம் முப்பது பக்கம் இருக்கலாம். மற்றவை அவனது தமிழறிவின் பறைசாற்றல், காதலியுடன் குலாவல், பினாங்கு மாநில சுற்றுலா விவரணைகள் எனச் சென்று மீண்டும் அவன் லண்டனுக்குச் செல்வதோடு முடிகிறது நாவல்.

அந்திம காலம் (1998). ஓய்வு பெற்ற ஆசிரியர் சுந்தரத்திற்கு மூளையில் புற்றுநோய். அந்தத் துன்பத்தில் அவர் இருக்கும்போது மகள் கணவனுடன் சண்டை போட்டுவிட்டு தன் மகனை பெற்றோர் பாதுகாப்பில் விட்டுவிட்டு வெளிநாடு செல்கிறாள். கொஞ்ச நாளில் தன் பேரனுக்கும் புற்றுநோய் எனத் தெரியவர சுந்தரம் சோர்ந்து போகிறார். ஆனால் அவர் பிழைத்துக்கொள்ள பேரன் இறக்கிறான். கொஞ்ச நாளில் அவர் மனைவியும் ஆஸ்த்துமாவினால் இறக்கிறார். சுந்தரம் ஒரு ஞானியின் மனநிலைக்குச் செல்கிறார்.

காதலினால் அல்ல (1999). முதல் பருவ மாணவியாக வரும் அகிலாவை வன்பகடியில் இருந்து காப்பாற்றும் கணேசனுக்கு அவன் சக மாணவர்களால் வீண் பழிகள். அதைக் கடக்க அகிலா உதவுகிறாள். இருவருக்கும் காதல். அந்தக் காதல் இரு குடும்பத்துக்கும் பிடிக்கவில்லை. பிரிகிறார்கள்.

சூதாட்டம் ஆடும் காலம் (2005). வெளிநாட்டில் முனைவர் படிப்பை முடித்துவிட்டு பல்கலைக்கழக விரிவுரையாளராக பணிக்கு வரும் டாக்டர் கதிரேசன் தன் முன்னாள் காதலியைச் சந்திக்கிறான். அவள் திருமணமாகி, விவாகரத்து செய்து மேலும் அழகு கூடியிருக்கிறாள். சின்ன வயதில் தன்னை அனாதையாக விட்டுவிட்டுபோன அம்மா அவனைப் பார்க்க ஏங்க அவன் மறுக்கிறான். பின்னர் அம்மாவின் மீது குற்றம் இல்லையென தேடிப்போகும்போது அம்மா மரணப் படுக்கையில் இருக்கிறார். அம்மாவுக்கு இறுதிச்சடங்கு செய்துவிட்டு திரும்புகிறார் கதிரேசன்.

இவரது அனைத்து நாவல்களிலும் ஒற்றுமைகள் சில உள்ளன. நாவலின் மையமாக கதாநாயகனே இருக்கிறான். அவன் படித்தவன். ‘வானத்து வேலிகளில்’ குணா, ‘தேடியிருக்கும் தருணங்களில்’ சூரியா, ‘சூதாட்டம் ஆடும் காலத்தில்’ கதிரேசன் ஆகிய மூவருமே லண்டனின் படிப்பை முடித்துவிட்டுதான் மலேசியாவுக்கு வருகிறார்கள். ‘அந்திம காலத்தில்’ சுந்தரம் ஆசிரியர். அவர் லண்டன் போகாவிட்டாலும் அவரது மகள் ராதா கணவனுடன் கோபித்துக்கொண்டு லண்டனுக்குதான் போகிறாள். ‘காதலினால் அல்ல’ கணேசன் பல்கலைக்கழக மாணவன். (வருங்காலத்தில் லண்டன் போகக்கூடும்).

இவ்வாறு லண்டனில் இருந்து வரும் படித்த கதாநாயகர்கள் மிக உயர்ந்த பண்புகளைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். சொத்தை விட்டுக்கொடுப்பது, எதையும் இழக்கத் துணிவது, தியாகங்கள் செய்வது, அதிர்ந்து பேசாமல் இருப்பது, எவ்வளவு இக்கட்டான நிலையிலும் பெண்களிடம் மாண்புடன் நடந்துகொள்வது, தன்னை தண்டித்தவர்களை மன்னிப்பது என பூலோகத்தில் பவனி வரும் அவதார புருஷர்களாகவே வாழ்கின்றனர். இந்த அவதார புருஷர்களுக்கு ஏற்ற உன்னதமான நண்பர்களும் கிடைத்து விடுகிறார்கள். அந்த நண்பர்களுக்குத் தனிப்பட்ட வாழ்க்கையென ஒன்றுமே இல்லை. பிறந்தவுடனே கதாநாயகனுக்கு நேர்ந்துவிட்டதுபோல எப்போது அழைத்தாலும் வீட்டுக்கு வருகிறார்கள், குடிக்கக் கொடுத்தால் குடிக்கிறார்கள், வாகன ஓட்டியாய் பணிவிடை செய்கிறார்கள், எல்லாத் துன்பங்களிலும் துணையிருக்கிறார்கள்.

நாயகர்களின் இள வயது வாழ்க்கை கொடுமையானதாக இருப்பதுதானே நியாயம். ‘வானத்து வேலிகளில்’ குணா தோட்டத்து தண்டலை கொலை செய்ய முயன்று தப்பி ஓரிடத்தில் அடைக்கலம் பெறுகிறான். ‘தேடியிருக்கும் தருணங்களில்’ சூரியா தத்துப்பிள்ளையாக வளர்கிறான், காதலினால் அல்ல கணேசனும் தோட்டத்துப் பாட்டாளி மகன்தான். பொறுப்பில்லாத குடிகார அப்பா அவனுக்கு. சூதாட்டம் ஆடும் காலம் கதிரேசனின் அப்பாவும் குடித்துவிட்டு அடிக்கும் தோட்டப் பாட்டாளி. இந்தக் கொடுமையான சூழலில் வளரும் நம் நாயகன் எப்படி வாழ்க்கையில் பொருளாதாரத்தில் உயர்ந்தான் என்பதும் அப்படி உயரும்போது ஏற்பட்ட சிக்கல்களும் உயர்ந்தபின் சந்திக்கும் சவால்களுமே ரெ.கார்த்திகேசுவின் கதைக்கரு.

இப்படி உன்னதமான கதாநாயகர்களின் தோற்றம் ராஜகுமாரனைப்போல இருப்பதாக கார்த்திகேசு ஆங்காங்கு வர்ணிக்கிறார். இப்படிப்பட்ட நாயகனுக்கு வரக்கூடிய காதலிகள் சாதாரணமாக இருப்பார்களா என்ன? குணா ஒரு பணக்காரப் பெண்ணை மணமுடிக்கிறான். சூரியாவின் காதலி பூங்கொடி சீனப் பெண்ணின் தோற்றம்கொண்ட பேரழகி. கணேசனை ஒரு சீனப் பெண்ணும் தமிழ்ப் பெண்ணும் போட்டி போட்டு காதலிக்கிறார்கள் போதாததற்கு அத்தை பெண்ணும் அவனுக்காக விஷம் குடித்து தற்கொலைக்கு முயல்கிறாள். பாரதி என்ற அழகுநிலையம் வைத்துள்ள பணக்காரப் பெண் கதிரேசனை காதலிக்கச் சொல்லி அழுகிறாள். இப்படி நாயகனை துரத்தி துரத்திக் காதலிக்கும் அழகுமிக்க நாயகிகளைக் கொண்டவர்கள் நிரம்பிய நாவல்கள் ரெ.கார்த்திகேசுவுடையவை.

எல்லாவித நற்குணங்களும் ஒருங்கே பெற்ற கதாநாயகனுக்கு ஏற்படும் சிக்கல்களும் அதில் வாசகனுக்கு மெல்லுணர்ச்சியை வழங்க மெனக்கெடும் வர்ணனைகளுமே ரெ.கா நாவல்களின் அழகியல் எனலாம். ‘வானத்து வேலிகள்’ நாயகனுக்கு அவர் மகன் தன் வியாபாரத்தை கவனிக்க வேண்டுமென ஆசை. ஆனால் மகனுக்கு புற்றுநோய். ‘அந்திம காலம்’ நாவலின் மைய கதாபாத்திரமான சுந்தரத்துக்கும் அவர் பேரனுக்கும் ஒரே சமயத்தில் புற்றுநோய். ‘தேடியிருந்த தருணங்கள்’ நாவலில் லண்டனில் இருந்து வந்த நாயகன் தான் வளர்ப்பு பிள்ளை என அறிந்து தன்னை பெற்ற அன்னையைத் தேடுகிறார். ‘சூதாட்டம் ஆடும் காலம்’ நாவலில் ஓடிப்போன அம்மாவை தவறாக எண்ணிய மகன், தாய் நல்லவள் என உண்மை தெரிந்து  தேடிக் கண்டுபிடித்து, அவரை மரணப்படுக்கையில் சந்திக்கிறான். ‘காதலினால் அல்ல’ நாயகனுக்கோ வேறு சிக்கல். தன்னைக் காதலிக்கும் சீனப் பெண்ணை நிராகரித்து தமிழ்ப் பெண்ணிடம் காதலைச் சொல்லி அத்தை பெண்ணை மணக்க முடிவு செய்கிறார். இவ்வாறு ஒரு நாவலில் ஒரு எளிய சிக்கலை எடுத்துக்கொண்டு அந்தச் சிக்கலின் பதைபதைப்புடன் உலாவும் நாயகன் கண் வழி, கல்லூரியின் அழகு, பினாங்கின் கவர்ச்சி, நாட்டின் வளர்ச்சி, சமுதாயத்தின் போக்கு என அனேகமாக அனைத்து நாவல்களிலும் சொல்லிச்செல்கிறார் கார்த்திகேசு.

பெரும்பாலும் மலேசிய எழுத்தாளர்கள் செய்யும் அடிப்படைத் தவறுகள் இல்லாமல் கார்த்திகேசுவின் நாவல்கள் உள்ளன. வசனங்களில் இயல்பு மொழி, பிற இன மக்களிடம் பேசும் வசனங்களில் நேர்த்தியான மொழி, காலங்களில் குழப்பம் இல்லாமை என தன்னை ஒரு சிறந்த பேராசிரியர் என நிரூபித்துள்ளார். அதேபோல ஆசிரியரின் தலையீடு இல்லாமலேயே நாவல்களை நகர்த்தியுள்ளார். ஆனால் நாயகன்களைக் கருத்து பிரதிநிதிகளாக மாற்றி ஆங்காங்கே பேசவிடுவது குறைந்தபட்சம் கிடைக்கும் வாசிப்பு சுவையையும் மலுங்கடிக்கச் செய்கிறார். குறிப்பாக ‘அந்திம காலம்’ நாவலின் கருவே மரணமாக இருப்பதால் எல்லாவித தத்துவங்களையும் நாயகன் சொல்லிச் செல்கிறார். ஆங்காங்கே புத்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர் என தனியாக நாயகன் வாசிக்கும் நூல்களின் வரிகளும் வந்து வாசகனுக்கு தத்துவ போதனை வழங்குகின்றன. நாவலை தத்துவத்தின் கலை வடிவம் எனச் சொல்வதுண்டு. ஆனால் அந்தத் தத்துவம் ஆசிரியர் நாவலில் காட்டும் வாழ்க்கையில் நுழைந்து அனைத்து சிடுக்களின் வழி தான் கண்டடையும் தரிசனமாக இருக்க வேண்டுமே தவிர தத்துவ கருத்துகளை புகுத்திச்செல்வதல்ல.

கார்த்திகேசுவின் நாவல்களில் உள்ள அடிப்படைச் சிக்கலே அவர் நாவல் என  நம்பி எழுதும் எளிய வாழ்க்கை சித்திரிப்புகளையும் (வானத்து வேலிகள், காதலினால் அல்ல, சூதாட்டம் ஆடும் காலம்) அல்லது ஓர் உணர்வெழுச்சியை மையப்படுத்தி உருவாக்கும் கதைகளையும் (தேடியிருக்கும் தருணங்கள், அந்திம காலம்) சாரமற்ற தனது அன்றாட அனுபவங்களில் புகுத்தி புனைவதுதான். இந்தப் பகுதிகள் எவ்வகையிலும் வாசகனுடன் அறிவு ரீதியாகவோ அல்லது உணர்வு ரீதியாகவோ உரையாடாதவை.

நாவல்களின் பெரும்பாலான களங்கள் அவர் பணியாற்றிய பல்கலைக்கழக வாழ்க்கை, ஆய்வுகளைச் சமர்ப்பிக்கும் மாநாடுகள், பினாங்கின் சுற்றுவட்டாரம் எனச் சுழல்பவை. அவருக்கு அதை மறுபடி மறுபடி சொல்வதில் திகட்டவே இல்லை. பல்கலைக்கழகத்தில் ஒருவன் காலடி வைப்பதுதான் வாழ்வின் வெற்றியென ஒற்றை நம்பிக்கை உடைய எளிய சிந்தனையாளராகவே கார்த்திகேசுவை அவரது நாவல்கள் வழி அறிய முடிகிறது.

1990களில் பல்கலைக்கழகத்தில் சேர்வதுதான் வாழ்வின் வெற்றி என நம்பிய தலைமுறை  மலேசியாவில் வாழ்ந்தது. அந்த நம்பிக்கையை எழுதுவது படைப்பாளனின் வேலையல்ல. அவன் அந்த நம்பிக்கையின் மீது பல்வேறு கேள்விகளை எழுப்ப வேண்டியவன். அந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முயலும்போதே அவன் சிந்தனை ஆழமாகிறது. ஆனால் கார்த்திகேசு கேள்விகள் இல்லாதவர். அகவயமாக மட்டுமல்ல, புறவயமாகக்கூட அவரிடம் கேள்விகளே இல்லை.

‘மருத்துவம் பயில இடங்கிடைக்கலன்னாலும் உயிரியல் பயில இடங்கொடுத்துத்தானே இருக்கிறாங்க? நீங்கதான் அத வேணாமுன்னு ஒதுக்கியிருக்கீங்க… மாற்றிக்கொள்ள முடியாத ஒரே மூச்சான லட்சியம் உள்ளவங்க அதுக்கு உரிய விலையையும் கொடுக்கத் தயாராக இருக்கத்தான் வேணும். அரசாங்க தயவில்தான் அதை நிறைவேற்றிக் கொள்ளனும்னு இருக்கக் கூடாது’ ‘தேடியிருக்கும் தருணங்களில்’  சிறந்த தேர்ச்சி பெற்ற மாணவி மருத்துவம் பயில அரசாங்க பல்கலைக்கழகத்தில் இடம் கிடைக்காமல் ஆலோசனை கேட்கும்போது கதையின் நாயகன் சொல்லும் உபதேசம் இது.

அதுபோல, ‘சூதாட்டம் ஆடும் காலம்’ நாவலில் வரும் நாயகன் “இருக்கின்ற கட்டுப்பாடுகளிடையே உருப்படியா ஏதாகிலும் செய்யமுடியும் என்ற நம்பிக்கையோடுதான் நானும் இந்த விரிவுரையாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கிறேன்,” என அரசாங்க கெடுபிடிகள் பற்றி பேசுகிறார்.

இரு நாவல்களுக்கும் இடையில் உள்ள 13 ஆண்டு கால இடைவெளியில் ரெ.கார்த்திகேசு சிந்தனையில் எந்த மாற்றமும் இல்லை. எதையும் எதிர்க்காமல், எந்தக் கேள்வியும் கேட்காமல் இருப்பதைக்கொண்டு சிறப்புடன் வாழப் பழகிக்கொள்ளும் மனநிலையில்தான் கேள்விகள் அற்று அவரது மைய கதாபாத்திரங்கள் கருத்துகளைச் சொல்லித் திரிகிறார்கள்.

‘அந்திம காலம்’ நாவலில் புனைவின் சாத்தியங்கள் எல்லையற்று இருந்தாலும் கார்த்திகேசு அதில் எதையும் பயன்படுத்திக்கொள்ளவில்லை. மூளையில் புற்று என்றால் எந்தப் பகுதியில் புற்று? அது மூளையின் செயல்பாடுகளை எப்படிப் பாதிக்கும்? அதன் விளைவுகள் உடலில் எவ்வாறு தெரியும் என எந்த நுண் தகவல்களும் இல்லை. வலி என்பது சொல். நாவல் முழுவதும் ‘வலி வலி’ என வருகிறதே தவிர வலியின் துடிப்பை, அதன் விஷமத்தனத்தை அவரால் துளியளவும் வாசகனிடம் குறியீடுகளால் கடத்தமுடியவில்லை. இந்த நாவல் வந்தபோது அது பலரையும் பாதிக்க காரணம் வாசகனுக்குள் இயல்பாக இருக்கும் மரண பயம்தான். ஒரு குழந்தைக்கும் ஒரு கிழவனுக்கும் ஒரே நேரத்தில் புற்றுநோய் வருவதை வாசிக்கும்போது வாசகனுக்கு உள்ளுக்குள் எழும் சுயபட்சாதாபத்தை பிரதியில் ஏற்றி வைத்து பயப்படுகிறான். ஆனால் நாவலின் ஒரு இடத்திலும் மருத்துவமனையின் பரந்த காட்சிகளோ, மரணத்தின் பரிதவிப்புகளோ இல்லை. மாறாக மருத்துவர், அவரிடம் தண்டனை பெற்ற முன்னாள் மாணவர் என்பதால் அவரது வைத்தியத்தை சந்தேகக் கண்கொண்டு பார்ப்பதாக ஜனரஞ்சக புனைவுக்கான அத்தனை சாகசங்களையும் செய்து பார்க்கிறார் ரெ.கா. சிறுவன் புற்றுநோயால் இறந்தபிறகு அவரது மகளும் மருமகனும் சேர்ந்துவிடுகின்றனர். மீண்டும் மகள் கர்ப்பமாகிறாள். இதுதான் ஜனரஞ்சக படைப்பின் வெற்றிபெற்ற சூத்திரம்.

‘தேடியிருக்கும் தருணங்கள்’ நாவலிலும் கார்த்திகேசு தன்னைச் சுருக்கிக்கொள்கிறார். அவரால் புனைவுக்குள் விசாலமாக இயங்க முடியவில்லை. காணாமல்போன அம்மாவைத் தேடிச்செல்வதை மையமாக வைத்துக்கொண்டு அதை சுற்றி காதல், பினாங்கின் அழகு, கல்வி, தமிழின் சிறப்பு என சுற்றிச் சுற்றி வருகிறார். ஒரு தாயைத் தேடும் படபடப்பை நிகழ்த்தும் புனைவுக்கான கற்பனை மனம் கார்த்திகேசுவிடம் இல்லை. தனக்கு எது தெரியுமோ அதற்குள் ஒரு எளிய தருணத்தை வைத்து சுழற்றி சுழற்றி நாவலாக்குகிறாரே தவிர தெரியாத ஒன்றுக்குள் கற்பனையால் நுழைந்து பார்க்க அவர் தயாராக இல்லை.

உண்மையில் ரெ.கார்த்திகேசுவிற்கு அத்தகைய கற்பனைகள் சாத்தியமற்றவை. வல்லினம் முதல் இதழுக்கு அவரை நேர்காணல் செய்தபோது ‘உங்களை மீறிய படைப்புகள் எழாதா?’ என்ற கேள்வியையே முன்வைத்திருந்தேன். ‘என்னை மீறி எப்படி எழுதுவது என்று எனக்குத் தெரியவில்லை’ என்றார். அதுவே நேர்காணலின் தலைப்பானபோது கொஞ்சம் வருத்தமும் பட்டார். அவர் மனம் கல்வியாளருடையது. புனைவுகளின் முன்மாதிரிகளை மு.வா, அகிலன், நா.பவிடன் பெற்றுக்கொண்டார். தன் வாழ்நாளில் எவ்வளவு இலக்கியங்கள் வாசித்தாலும் அவர் மனம் புனைவுகளின் கலைசெயல்பாடுகளை உள்வாங்கவே இல்லை.

ஒப்பீட்டளவில் ‘வானத்து வேலிகள்’ நாவல் கொஞ்சம் மேம்பட்டது எனக் கருதுகிறேன். அடிப்படை காரணம் குணசேகரனின் அனைத்துச் செயல்களுக்கும் பின்னால் மௌனமாக சுடர்ந்துகொண்டே இருக்கும் வன்மம். வன்மத்தைக் காட்டாமல் காதலையும் காமத்தையும் கருவியாகப் பயன்படுத்தும் குரூரம். இன்னும் கொஞ்சம் வளர்த்தெடுத்திருந்தால் அது அற்புதமான கதாபாத்திரமாக வந்திருக்கும். அதற்கெல்லாம் இடம் கொடுக்காமல் அவர் வளர்ந்து டத்தோ குணாவாக முப்பது மாடி கட்டடம் கட்டச் சென்று விடுகிறார்.

ஐந்து நாவல்களையும் அடுத்தடுத்து வாசிக்கையில் கார்த்திகேசு தானறிந்த தகவல்களால் நாவலை நிறைக்க முயன்றுள்ளதை உணர முடிகிறது. வலிந்து கதாமாந்தர் பார்வை வழி  பினாங்கில் உள்ள இடங்களைப் பற்றிய தகவல்களை சிறந்த சுற்றுலா வழிகாட்டிபோல பட்டியலிடுகிறார். கேமரன் மலையில் தேயிலை பறிக்கும் தொழில்நுட்பங்களை விவரிக்கிறார். பினாங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் உள்ள சலுகைகளையும் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு வெளிநாடுகளில் எப்படி ஆய்வுகளை சமர்ப்பிப்பது என்பன போன்ற தகவல்களையும் பல்கலைக்கழக நூல்களில் ஆய்வுக்கட்டுரைகள் வரவேண்டியதன் முக்கியத்துவத்தையும் சொல்வதற்கென்றே காட்சிகளை அமைக்கிறார். இவை நாவலின் சூழலுடன் ஒட்டாமல் உள்ளன.

ரெ.கார்த்திகேசு ஒவ்வொரு காலகட்டத்திலும் தன்னை இலக்கியத்துடன் பிணைத்துக்கொண்டவர். ‘இலக்கிய வட்டம்’ சிற்றிதழ் ரெ.கார்த்திகேசுவின் உழைப்பின்றி உருவாகியிருக்காது. அதுபோலவே குறிப்பிடத்தக்க சிறுகதைகளை அவர் எழுதியுள்ளார். தன் இறுதிக் காலத்தில் ‘புயலிலே ஒரு தோணி’ நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததெல்லாம் போற்றத்தக்க உழைப்பு. இலக்கியத்தின் மீது அவருக்கு இருந்த தீராத ஆசையில்தான் முகில் பதிப்பகம் முயற்சிக்குத் துணை நின்றதோடு ‘முகம்’ எனும் சிற்றிதழ் முயற்சியும் தொடங்கினார். தன் வாழ்நாளின் பெரும்பகுதியை இலக்கியத்துக்காக செலவிட்டவர் ரெ.கார்த்திகேசு. அந்தக் காலக்கட்டத்தில் பல படைப்பாளிகளிடம் இல்லாத அழகுணர்ச்சி அவரிடம் இருந்தது. தனது நூல்களை தரமான முறையில் கொண்டுவந்தார். தனது இறுதி காலத்தில் தன் சேமிப்பில் இருந்த நூல்களை நூலகங்களுக்கு நன்கொடையாகவும் வழங்கினார். ஆனால் இலக்கிய விமர்சனம் இவை எதையும் பொருட்படுத்துவதில்லை. அது புனைவின் தரத்தை மட்டுமே  ஆராய்வது. கார்த்திகேசுவின் இந்த விரிந்த செயலூக்கத்தினால் உருவாகும் ஆளுமையைக்கொண்டு அவரது புனைவுகளை மதிப்பிடுவதும் உயர்த்திப்பிடிப்பதும் மலேசியப் படைப்பிலக்கியத்திற்குச் செய்யும் துரோகம்.

(Visited 934 times, 1 visits today)