1
மலேசிய நவீனத் தமிழ் இலக்கியத்தில் எம்.ஏ.இளஞ்செல்வனின் ஆளுமை வலுவானது. மலேசியாவில் முதல் புதுக்கவிதை நூலை (நெருப்புப் பூக்கள் – 1979) வெளியிட்டவர். நவீன இலக்கியச் சிந்தனை எனும் அமைப்பை நண்பர்களுடன் இணைந்து உருவாக்கி மலேசியாவில் முதல் புதுக்கவிதை கருத்தரங்கை (1979) நடத்தியவர். அந்தக் கருத்தரங்கில் இருபத்து இரண்டு கவிஞர்களின் புதுக்கவிதைகளை நூலாகத் தொகுத்து (புள்ளிகளைப் புறக்கணிக்கும் புதுக்கோலங்கள் – 1979) நவீன இலக்கியச் சிந்தனை மூலம் வெளியிட்டார். மலேசியாவில் புதுக்கவிதை வளரத்தொடங்கிய அந்தக் காலத்தில் மரபுக்கவிஞர்களிடமிருந்து வந்த விமர்சனங்களுக்கு கடுமையான எதிர்வினையாற்றியதன் வழி அன்றைய இளைஞர்கள் மத்தியில் கவனம் பெற்றவர். அவ்வகையில் இளைஞர்கள் தொடர்ந்து புதுக்கவிதையில் ஆர்வம் காட்ட ஒரு கவர்ச்சியான முன்னோடியாக இருந்தவர். ஆம்! இளஞ்செல்வனிடம் ஒரு வசீகரம் இருக்கத்தான் செய்தது. ‘இந்தியன் மூவி நியூஸ் எனும் சினிமா இதழில் வெளிவந்த எம்.ஏ.இளஞ்செல்வனின் படைப்புகளுடன் பிரசுரமாகும் அவரது படங்கள் நட்சத்திர முகத்துக்கு ஈடானது’ என கோ.புண்ணியவானின் பதிவு கவனிக்கத்தக்கது (மறக்கப்பட்ட ஆளுமை).
அதேபோல், சிறுகதை, நாவல் துறைகளிலும் அவரது பங்களிப்பு கவனிக்கத்தக்கது. தெருப்புழுதி (1977), முச்சந்தி மலர்கள் (1978), என இரு சிறுகதை தொகுப்புகளையும் பசித்திருக்கும் இளங்கொசுக்கள் (1978), மோகங்கள் (1980), ஆகிய குறுநாவல்களையும் அவர் வெளியிட்டுள்ள காலப்பகுதியை ஆராய்கையில் எழுபதுகளின் இறுதி அவர் துடிப்புடன் செயல்பட்ட காலம் என வரையரை செய்யலாம். நான் அவரைச் சந்தித்தது 1998இல். அப்போது வெல்லஸ்லி தோட்டத்தமிழ்ப்பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். 1999இல் தனது அனைத்து சிறுகதைகளையும் தொகுத்து ஒரு நூலாகவும் (எம்.ஏ.இளஞ்செல்வன் சிறுகதைகள்) குறுநாவல்களைத் தொகுத்து மற்றுமொரு நூலாகவும் (வானம் காணாத விமானங்கள்) வெளியீடு செய்தார். அது அவரது மறுபிரவேசம் என்றே சொல்லப்பட்டது. ஆனால் துரதிஷ்டமாக 2000இல் அவர் மரணமடைந்தார்.
எம்.ஏ.இளஞ்செல்வன் தான் வாழ்ந்த காலத்தில் அதிகம் அறியப்பட்ட எழுத்தாளர். பத்திரிகை ஆசிரியர் ஆதி.குமணனுடன் கொண்டிருந்த நட்பும் வானம்பாடி என்ற ஜனரஞ்சக வார இதழின் தேவையும் அவரை ஒரு நட்சத்திர எழுத்தாளராக உருவாக்கியது. குறிப்பிட்ட சில சிறுகதைகளைத் தவிர்த்து, புனைவிலக்கியத்தில் அவரது இடம் குறித்த காத்திரமான விமர்சனம் இல்லாமல் கொண்டாடப்பட்ட ஒரு நாயகனாகவே என்னால் அவரை கணிக்க முடிகிறது.
எம்.ஏ.இளஞ்செல்வன் பெற்றிருந்த வாசகர் பரப்புக்கு பாலியலை தனது குறுநாவல்களில் ஆதரமாகக் கொண்டிருந்ததும் காரணமெனக் கருதுகிறேன். ‘பசித்திருக்கும் இளங்கொசுக்கள்’ தொடர்கதையாக வானம்பாடியில் வெளிவந்து அவருக்கும் வானம்பாடிக்கும் அதிக வாசகர்களைப் பெற்றுத் தந்தது. அதேபோல ‘மோகங்கள்’ என்ற தலைப்பில் வானம்பாடியின் மாதம் ஒரு குறுநாவல் முயற்சியில் மற்றுமொரு தொகுப்பு வெளிவந்தது. இரண்டுமே பால்கிளர்ச்சியை மையப்படுத்திய புனைவுகள். இவை அன்றைய பொதுவாசகர்கள் மத்தியில் ‘அதிர்ச்சி’யை உருவாக்கியதும் உண்டு. ‘அக்கினி பிரவேகம்’ போன்ற சிறுகதைகள் மூலமாக அதுபோல அதிர்ச்சி அலையை தமிழகத்தில் உருவாக்கிய ஜெயகாந்தனுடன் எம்.ஏ.இளஞ்செல்வன் ஒப்பிடப்பட்டதெல்லாம் துரதிஷ்டமானது. அன்றைய தோட்டப்புற மக்களுக்கு இதுபோன்ற மெல்லிய கிளர்ச்சியை உண்டாக்கும் புனைவுகளிடையே நல்ல வரவேற்பு உண்டு. அவ்வாறு லாபத்தை ஈட்டிக்கொடுத்த எழுத்தாளர்களை பத்திரிகையும், பதிப்பக முதலாளிகளும் அன்போடு பராமரித்தனர்.
பாலியலை நுகர்வாக மாற்றுவதற்கும் இலக்கியமாக புனைவதற்குமான பேதம் தெரியாத கூட்டம் நவீன இலக்கியமென்பது ஆபாசமாக எழுதுவது என தவறான புரிதலைக் கொண்டுள்ளது. இன்றும் ‘நவீன இலக்கியமென்றால் ஏன் ஆபாசமாக உள்ளது?’ எனக்கேட்கும் அறியாமையின் குரல்களை எதிர்கொள்கிறேன். நான் அவர்களிடம் கடந்த அறுபது ஆண்டுகளில் நவீன இலக்கியம் என எழுதப்பட்ட எதை அவர்கள் வாசித்திருக்கிறார்கள் என்ற கேள்வியை எழுப்புவேன். அவர்களிடம் மிகச்சிறிய பட்டியல் இருக்கும். அவர்கள் குறிப்பிடும் புனைவுகள் சர்ச்சைகளால் பொதுவாசிப்புக்கு வந்தவை. புதுமைப்பித்தன் தொடங்கி சுனில் கிருஷ்ணன் வரை மு.தளையசிங்கம் முதல் அனோஜன் வரை எம்.குமரன் தொடங்கி என் வரை ஒவ்வொரு தேசத்திலும் தமிழில் ஏராளமான நவீன புனைவெழுத்துகள் உருவாகி வருகின்றன. இவற்றில் பத்து சதவிகிதம் மட்டுமே பாலியல் சார்ந்தவை. மற்றவை அனைத்துமே வெவ்வேறு மானுட முரண்களை, உச்சங்களை, இழப்புகளை, மேன்மைகளைப் பேசுபவை. அப்படி இருக்க இந்தக் கேள்வி வர வாசகனின் போதாமையே காரணம். வேறு ஏதோ வேலை செய்துகொண்டிருக்கும்போது முயங்கலின் முணகல் கேட்டு ஓடோடி வந்து ஒரு திரைப்படத்தைப் பார்த்து விமர்சனம் செய்யும் அசட்டு ரசிகனுக்கும் இவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
நவீன இலக்கியத்தில் பாலியல் சித்தரிப்புகள் உள்ளதா என்று கேட்டால் ஆம் உள்ளது. வரவேற்பறை காட்டப்படுவதுபோல படுக்கையறையையும் கழிவறையையும் காட்டும் சுதந்திரத்தை புனைவு கொண்டுள்ளது. மனதில் இருக்கும் மேன்மைகளின் மகத்துவத்தை காட்டுவதுபோல கீழ்மைகளின் நியாயங்களையும் அது சொல்லும் சுதந்திரத்தை எடுத்துக்கொள்கிறது. வாழ்வென்பது பாசாங்காக நாம் ஜோடித்துக்காட்டும் முகநூல் பதிவேற்றங்கள் மட்டுமல்ல; யாருக்கும் அதுவரை காட்டாத நாம் நம்முள்ளே என்னவாக இருக்கிறோம் என்பதையும் பரிசீலிக்கிறது. அந்த அந்தரங்கத்தை ஈவிரக்கம் இல்லாமல் இழுத்துவந்து எழுத்தில் கோர்க்கிறது. அதுவரை தன்னுள் எட்டிப்பார்க்கப் பயந்தவர்கள் அதனால் அதிர்ச்சியடைகிறார்கள். இதனால் சமூகத்துக்கேடு என்கிறார்கள். மனிதனுள் இருட்டில் கிடப்பது அங்கேயே கிடக்கட்டுமே என்கிறார்கள். உண்மையில் அவர்கள் அஞ்சுவது அவர்களைப் பார்த்துதான். அவர்களின் அந்தரங்க முகங்களைப் பார்த்துதான்
இதில் ஒரு சிறிய ஆபத்தும் உண்டு. முதிராத வாசகன் தீவிர இலக்கியங்களில் ஏற்றப்படும் பாலியல் காட்சிகளையும் பாலியல் கிளர்ச்சியை உண்டாக்க எழுதப்படும் ஜனரஞ்சக ஆக்கங்களையும் ஒன்றெனக் கருதிவிடுவதுமுண்டு. எளிய உதாரணத்தைத் திரைப்படத்திலிருந்தே சொல்லலாம். Cinema Paradiso பல உலக சினிமா ரசிகர்கள் கொண்டாடும் திரைப்படம். எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய பட்டியலில் வைத்துள்ள திரைப்படம். அப்படத்தின் இறுதிக்காட்சியில் வெற்றிகரமான இயக்குனராக திரும்பியுள்ள நாயகன் தனக்கு கிழவன் கொடுத்துவிட்டுச் சென்ற ஃபிலிம் சுருளைத் தனியாக ஓட்டிப் பார்ப்பான். அந்த ரீல் முழுவதும் சென்சார் செய்த காட்சிகளின் தொகுப்பு ஓடும். நிர்வாணமும் முத்தமும் கலந்த காட்சிகள் சுமார் ஒரு நிமிடத்திற்கு மேல் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். முழுமையாகத் திரைப்படம் பார்க்கும் எவருக்கும் அந்த நெருக்கமான காட்சிகள் பாலியல் கிளர்ச்சியை ஏற்படுத்தாது. உண்மையில் அக்காட்சியே மொத்த திரைப்படத்துக்கான தரிசனம் எனலாம். ஊருக்கு திரும்பி வந்த இயக்குனரின் இளமைக் கால வாழ்வில் நிகழ்ந்திருக்க வேண்டிய காதலை கிழவன் ரகசியமாகத் தணிக்கை செய்திருக்கிறார் என அவன் அறியும் தருணம் அது. நான் எத்தனையோ முறை அக்காட்சியைப் பார்த்து கண்ணீர் வடித்துள்ளேன். இதற்கு முரணான இன்னொரு படத்தைச் சொல்லலாம். நான் சிறுவனாக இருந்தபோது எம்.ஜி.ஆர் நடித்த ‘இதயக்கனி’ என்ற திரைப்படம் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்தது. அதில் எம்.ஜி.ஆர் ‘இதழே இதழே தேன் வேண்டும்’ எனும் பாடலுக்கு கதாநாயகியுடன் உருண்டு புரண்டு மஞ்சத்தில் சாகசம் செய்துகொண்டிருப்பார். அப்போது இடையிடையே ஒரு நிர்வாணப் பெண்ணின் ஓவியம் காட்டப்படும். அதுபோல மற்றுமொரு படத்தில் எம்.ஜி.ஆர் ஒரு பெண்ணின் ஜாக்கெட்டுக்கு கொக்கி மாட்டி விட்டுக்கொண்டிருக்கும்போது அந்த அறையின் பின்புலத்தில் ஒரு நிர்வாண பெண்ணின் ஓவியம் இருக்கும்.
Cinema Paradisoவில் காட்டப்படும் நிஜமான நிர்வாணக் காட்சிகளைவிட மென்மையானதுதான் எம்.ஜி.ஆர் திரைப்பட பாடல் காட்சி. ஆனால் ஒப்பீட்டளவில் எம்.ஜி.ஆர் பாடல் காட்சி ஆபாசமானது. ரசிகனின் பாலியல் கிளர்ச்சியைத் தூண்ட உருவாக்கப்பட்டது. இந்த எளிய வித்தியாசத்தை அறிந்துகொள்ளும் வாசகனால் மட்டுமே ஒரு படைப்பிலக்கியத்தில் வரக்கூடிய பாலியல் காட்சிகளின் தேவை என்ன என்பதையும் அறிய முடியும். அதன் நோக்கத்தைப் பொறுத்தே அதை விமர்சிக்கும் அறிவையும் பெற முடியும்.
பால்கிளர்ச்சி எழுத்து என்பதே வணிக செல்வாக்கு பெறுவதற்கானது. அவற்றின் நோக்கம் உடலை மட்டும் சித்தரிப்பது. அதிகபட்சம் அந்நேரத்தில் கிளர்ந்தெழும் வேட்கையை எழுத்தாக்குவது. இவற்றைத்தாண்டிய மானுட உணர்ச்சிகளைப் புகுத்துவது வாசகனை ஏமாற்றம் கொள்ளச் செய்யும் என்பதால் தவறியும் அதற்கு இடம் கொடுக்காது. பாலியல் வெறும் பாலியலாக மட்டுமே ஒரு காட்சியில் இருக்குமென்றால், அந்த பாலியல் காட்சி இருவரின் இன்பத்தை வாசகனின் கற்பனைக்குக் கொண்டுவருவதற்கு மட்டுமே புனையப்பட்டுமென்றால் அவ்வெழுத்து நுகர்பொருளே. ஆனால் இலக்கியம் மானுட உடலை ஒரு குறியீடாகக் கொண்டு அதன் வழி ஆழமான உணர்வுகளைப் பரிசோதிக்கிறது. கூர்ந்த அவதானிப்புடன் விவாதிக்கிறது. அது இன்பம் கொடுக்கும் காட்சியாக மட்டுமல்லாமல் அந்தப் பாத்திரங்களின் அப்போதைய மனநிலையின் பல அடுக்குகளுக்குள் சஞ்சரிக்கவும் செய்கிறது. வாசகன் தன்னைத்தானே அறிய உதவுகிறது. இந்த ஒப்பீட்டின் அடிப்படையில் இளஞ்செல்வன் தன் குறுநாவல்கள் மூலம் உருவாக்க முயன்றிருப்பது பாலியல் கிளர்ச்சி அனுபவங்களை மட்டும்தான்.
2
‘வானம் காணாத விமானங்கள்’ வசந்தா எனும் பெண்ணைச்சுற்றி நடக்கும் கதை. அவள் வேலை செய்யும் அலுவலகத்தில் கோபால், சந்துரு ஆகிய இரு இளைஞர்கள் அவளுக்கு வலை வீசுகின்றனர். இருவரும் திருமணம் ஆனவர்கள். அவள் அவர்களை அவமானப்படுத்துகின்றாள். அதே அலுவலகத்தில் வேலை செய்யும் ஸ்டெல்லா கொஞ்சம் தாராளமாகப் பழகக்கூடியவள். ஆண்களிடம் குழைபவள். இதற்கிடையில் விஜயன் என்பவன் வேலையில் சேர்கிறான். அவன் அவர்களுக்கு மேலதிகாரி. தவம் செய்யும் ஞானியைப்போல கருமமே கண்ணாய் இருப்பவன். முதல் சந்திப்பிலேயே வசந்தாவுக்கு அவன் மேல் ஈடுபாடு இருந்தாலும் தன் அப்பா, அம்மாவை ஏமாற்றியதுபோலதான் எல்லா ஆண்களும் இருப்பார்கள் என நினைத்து தவிர்க்கிறாள். இடையில் அப்பாவும் இறந்துவிட தனிமையில் இருக்கும் அவளுக்கு விஜயன் பல உதவிகள் செய்கிறான். கடைசியில் தங்கள் ஆசைக்கு இணங்காத அவள் வீட்டின் மீது கோபால் மற்றும் சந்துரு கல் வீசி எறியவும் (எவ்வளவு பெரிய தாக்குதல்) அவர்களிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள சடங்குக்காக விஜயனை திருமணம் செய்கிறாள். ஒரே வீட்டில் வெவ்வேறு படுக்கைகள். அவளைப் பார்க்கும்போதெல்லாம் விஜயனுக்குக் காமம் கிளர்ந்தெழ, வசந்தா அவனை பலவிதங்களில் புறக்கணிக்கும் வார்த்தைகளால் திட்டுகிறாள். ஒருமுறை விஜயனுக்கு அலுவலகத்தில் அவமானம் ஏற்பட அதற்கு வீட்டில் ஆறுதல் சொல்ல முயலும்போது அது கூடலுக்கான சாத்தியங்களை உருவாக்குகிறது. விஜயன் விலகிப்போகிறான். வசந்தா சொற்களால் மனதைப் புண்படுத்தியது ஆறியபிறகே தனது உடல் கூடலுக்குச் சம்மதிக்கும் என்கிறான். அவள் கெஞ்சி அழுது மன்னிப்புக் கேட்கிறாள்.
‘மோகங்கள்’ ஒரு குடும்பத்தின் மருமகளான நிர்மலா என்ற பெண்ணைச் சுற்றி உருவாக்கப்பட்ட கதை. அவள் கணவன் எப்போதும் வியாபாரம் வியாபாரம் என்று அலைபவன். அதனால் குடும்பத்தில் அக்கறைகாட்டாதவன். கணவனின் தம்பி மனோகர் ஆசிரியர். எழுத்தாளர் வேறு. தன் அண்ணியுடன் அறிவுபூர்வமாக உரையாடுபவர். கணவனின் தங்கை மஞ்சுளா மதர்ப்பான உடலழகைக் கொண்ட அழகி. நிர்மலாவின் மாமியார் ஜானகி ஒரு அப்பாவிக் குடும்பத்தலைவி. மாமனார் சிவசங்கரன் ஒரு அரசியல்வாதி. நிர்மலாவின் தம்பி முரளிக்கு மஞ்சுளாவின் மீது காதல். மஞ்சுளாவுக்கு அவனைப் பிடிக்கவில்லை. தன் அண்ணன், அண்ணியை ஒழுங்காக கவனிப்பதில்லை என்ற கரிசனை மனோகருக்கு. அது அண்ணியின் மீது சபலமாக மாறுகிறது. அண்ணி (நிர்மலா) அவன் ஆசையை மறுத்து அவமதிக்க அவன் மூன்று நாள் சாப்பிடாமல் அறையில் சுருண்டு கிடக்கிறான். இதே காலகட்டத்தில் மஞ்சுளாவின் காதலன் அவளைக் கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டுப் போகிறான். இத்தனை அவலங்கள் நடக்கும் அதே தருணத்தில் நிர்மலாவின் கணவன் கற்பழிப்புக் குற்றத்திற்காகச் சிறையில் அடைக்கப்படுகிறான். இப்படி வீடே குழம்பிப் போயிருக்கும்போது அரசியல் கட்சியில் உள்ள சிவசங்கரன் பூசல்களால் தலையில் அடிபட்டு காயத்துடன் தன் ஆதரவாளர்களுடன் வீட்டுக்கு வருகிறார். அந்த நேரத்தில் மஞ்சுளா மயங்கி விழ அவள் கர்ப்பமாக இருப்பது அம்பலமாகிறது. இதைக் கண்டு முரளி கர்ப்பத்திற்குத் தான்தான் காரணமெனச் சொல்லி அந்தக் குடும்ப கௌரவத்தைக் காப்பாற்றுகிறான். அண்ணியிடம் அவமானப்பட்ட மனோகர் அண்ணனை மீட்க காவல் நிலையம் செல்வதோடு நாவல் முடிகிறது.
‘பசித்திருக்கும் இளங்கொசுக்கள்’ நாவலில் சங்கரன் பிரதான பாத்திரம். நடக்கமுடியாமல் போய்விட்ட கணவனுக்குத் தெரியாமல் அவன் அம்மா அவர் நண்பருடன் உறவு வைத்துள்ளார். சங்கரன் தன்னைவிட வயது அதிகம் உள்ள முத்தம்மா என்ற பாலியல் தொழிலாளியுடன் உறவு வைத்துள்ளான். சங்கரனின் தங்கை தன் அண்ணனின் நண்பனுடன் உறவு வைத்துள்ளாள். (இப்படி ஒரு வித்தியாசமான குடும்பம்) சங்கரன் மற்ற வாடிக்கையாளர்களைவிட பல ‘சிறப்பு சலுகைகளை’ முத்தம்மாவிடம் பெறக்கூடியவன். பார்வதி என்ற பெண் ஒருமுறை மாதவிடாயின்போது பாவாடையில் அதன் கறை தெரிய, அவள் மானத்தை தன் சட்டையைக் கொடுத்துக் காப்பாற்றியதால் அவனுக்கு காதலியும் கிடைக்கிறாள். அவன் முத்தம்மாவிடன் செல்வதை அவன் நண்பன் பாலன் பார்வதியிடம் சொல்லிவிட பாலனுடன் சண்டை பிடிக்கிறான். சங்கரனின் தங்கையை ரகசியமாகக் காதலித்த பாலன் அவளைக் கூட்டிக்கொண்டு போய்விடுகிறான். இதற்கிடையில் பார்வதியின் தாத்தா இறந்துவிட அவள் அனாதையாகிறாள். இதே காலக்கட்டத்தில் சங்கரனின் அம்மாவை மாடு முட்டியதால் படுத்தபடுக்கையாகிறாள். பார்வதி சங்கரனை திருமணம் புரிந்து மாமியாருக்குப் பணிவிடை செய்கிறாள். அவனையும் திருத்த முயல்கிறாள். அதற்காக அவன் நேர்த்தியாக முடிதிருத்த வேண்டும் என ஆலோசனை சொல்ல இருவருக்கும் இடையில் மயிரால் பிரச்சனை தொடங்கி பிளவு வருகிறது. அவன் மீண்டும் முத்தம்மாவைப் பார்க்கச் செல்கிறான். முத்தம்மா நோயில் இறக்க அவள் வீட்டை சங்கரனுக்குக் கொடுக்கிறாள். சோகத்தில் போதைக்கு அடிமையான சங்கரனுக்கு மேலும் போதையான விசயத்தை அவன் நண்பன் சொல்கிறான். அதாவது அவரவர் தத்தம் மனைவிகளை முத்தம்மா வீட்டுக்கு அழைத்து வருவது. போதை மாத்திரை கொடுத்து அவர்கள் மயக்கமாக இருக்கும்போது ஜோடியை மாற்றிக்கொண்டு புணர்வது. பின்னர் அந்த மனைவிகளுக்கும் அந்தக் களியாட்டம் பழகிவிடும். எல்லாரும் ஜாலியாக இருக்கலாம் என்பது திட்டம். சங்கரன் தன் மனைவியை அழைத்துச்செல்கிறான். ஆனால் விளக்கு அணைக்கப்பட்டபின் அவன் எடுத்துக்கொண்ட ஜோடி தன் தங்கை என குரல் வழி அறிந்து அதிர்ச்சியில் வெளியே ஓடுகிறான். அங்கே அவன் தன் மனைவி நண்பனிடமிருந்து தப்பிச் செல்வதைக் காண்கிறான். இந்த சம்பவத்துக்குப் பின் அவனைக் கடுமையாக வெறுக்கிறாள். ஆனால் அவள் கர்ப்பமாக இருப்பதால் ஒன்றாகவே வாழ்கிறார்கள். குழந்தை பிறக்கிறது. சங்கரன் முடியை நேர்த்தியாக வெட்டி நல்லவனாகிறான். மயிர் சிக்கல் தீர்ந்தவுடன் மனச்சிக்கலும் தீர்கிறது.
‘கனகாம்பரமும் கிளிஞ்சல் மலர்களும்’ இரு பெண்களைப் பற்றிய கதை. சுகந்தி அடக்கமானவள். வெளியே சென்றால் சேலைதான் கட்டுவாள். விஜி நாகரீகமாக உடுத்துவாள். தொடை மார்பெல்லாம் தெரியும். எந்த ஆணின் ஆசை தூண்டப்பட்டாலும் தன்னை தற்காத்துக்கொள்ள முடியும் என்றும் அப்படியே அது உடல் உறவு வரை சென்றாலும் பெரிய பிரச்சனையில்லை எனவும் நம்புபவள். அவளது நெருக்கமான பழக்கத்தினால் சுகந்தியின் தம்பிக்கும் அவள் மேல் சிறு சலனம் ஏற்படுகிறது. இதற்கிடையில் விநோதன் என்ற ஓவியருக்கு அவள் மாடலாகச் செல்ல உடன் சுகந்தி செல்கிறாள். முதல் சந்திப்பிலேயே விநோதனுக்கும் சுகந்திக்கும் ஈர்ப்பு ஏற்படுகிறது. அது காதலாக மலர்கிறது. இதற்கிடையில் விஜிக்கு பாதுகாப்பாக இருந்த தந்தை இறக்கவும் அவளுக்கு ஒரு திருமண வாழ்வு தேவைப்படுகிறது. அவள் விநோதன்தான் அதற்குப் பொருத்தமானவன் என காதலைச் சொல்லப்போகிறாள். ஆனால் தன் தோழிக்கு அவன் காதலனாக இருப்பதை அறிந்து பின் வாங்குகிறாள். அழுகிறாள். தன் நடை உடைகளை மாற்றி அடக்க ஒடுக்கமாகிறாள். அவள் மாற்றத்தை விரும்பாத அலுவலக நண்பர்கள் இருவர் அத்துமீறி அவள் வீட்டில் நுழைந்து அவளை வன்புணர்ச்சி செய்கின்றனர். அவள் கர்ப்பமாகிறாள். தன் அக்காவின் வளைகாப்புக்காக விஜியை அழைக்க வரும் சுகந்தியின் தம்பி அவள் தனிமையைப் பயன்படுத்திக்கொண்டு தன் காதலைச் சொல்ல, சின்னப் பையன் மனதில் ஆசை வரும் அளவுக்கு நடந்துகொண்டேனே என அழுகிறாள். தன் தவற்றை எண்ணி மன்னிப்புக்கேட்கிறாள்.
3
ஜெயகாந்தனின் வாசகர் ஒருவர் எம்.ஏ.இளஞ்செல்வனின் குறுநாவல்களின் சாரத்தை வாசித்தால் இருவருடனான ஒப்பீடலால் அடையக்கூடிய கசப்பு கொஞ்ச நஞ்சமல்ல. ஜெயகாந்தனிடமிருந்து இளஞ்செல்வன் எடுத்துக்கொண்டது உரத்து எதிர்வினையாற்றும் கலக்கக்குரலை மட்டும்தான். மற்றபடி அவரது குறுநாவல்கள் நல்லொழுக்கத்தை போதிக்கும் இன்னொரு வழித்தடம்தான். அந்த வழித்தடம் முழுக்க வாசக ருசிக்காக பாலியல் கிளர்ச்சியூட்டும் சம்பவங்களைத் தெளித்து வைத்துள்ளார். இது ஒரு வெற்றிகரமான சூத்திரம்தான். ஒரே சமயத்தில் வாசக ருசிக்குத் தீனியைப் போட்டுவிட்டு சமூகத்துக்கு நற்கருத்துகளையும் கூறியதாக இரண்டு பதக்கங்களை ஒரே நேரத்தில் குத்திக்கொள்ளலாம்.
எம்.ஏ.இளஞ்செல்வனில் இந்த நாவல்களில் மறுபடி மறுபடி சொல்லப்படும் நற்கருத்துகள் சில உள்ளன.
ஒரு பெண் தனக்குப் பாதுகாப்பாக உள்ள தகப்பனையோ தாத்தாவையோ இழந்துவிட்டால் உடனடியாக மணமுடித்துவிட வேண்டும். இல்லாவிட்டால் ஆண்கள் தொல்லை தருவார்கள். அவர்களைத் தடுக்க முடியாது. பின்னர் ‘கற்பை’ இழப்பதுதான் ஒரே வழியாகிவிடும். நவீனமாக உடுத்துவது ஆண்களின் காமத்தைத் தூண்டும் செயல். அதை ஒரு பெண் ஒருபோதும் செய்யக்கூடாது. ஓர் ஆண் எவ்வளவு அநீதி இழைத்தாலும் பெண்ணானவள் எப்படியும் இறுதியில் மன்னித்துவிடுவாள். ஆண் செய்யும் தவற்றால் ஆத்திரம்கொண்டு அவனைப் புறக்கணிக்கும் பெண் தனக்கிருக்கும் சபலத்தால் எல்லா அகங்காரங்களையும் விட்டுவிட்டு ஆணிடம் இறங்கியே செல்பவள். அதோடு அடக்கமாக உள்ள பெண்ணுக்கே நல்வாழ்க்கை அமையும். கணவன் வெறும் போகத்துக்காக மனைவியைப் பயன்படுத்தினாலும் அவளுக்கென்று உடல் தேவை என இல்லாமல் இருப்பதே லட்சிய மனைவிக்கான அடையாளம். இப்படி ஏராளமாகச் சொல்லலாம். இவற்றைச் சொல்வது ஓர் எழுத்தாளனின் தனிப்பட்ட உரிமை. ஆனால் இந்த அடிப்படைவாதங்களை முன்வைக்கும் ஒரு படைப்பாளியை ஜெயகாந்தனோடு ஒப்பிடுவதோ, முற்போக்கு எழுத்தாளரென வர்ணிப்பதோ, மலேசிய நவீனத் தமிழ் இலக்கியத்தின் அடையாளமாகச் சொல்வதோ அபத்தம்.
எம்.ஏ.இளஞ்செல்வன் குறுநாவல்களில் வரும் கதாபாத்திரங்கள் மூலம் செய்ய முனைவது எளிய மீறல்களை. சமூகம், அறவியல், ஒழுக்கவியல் உருவாக்கி அளித்த தடைகளை மீறுவதையும் அப்படி மீறுவதால் உண்டாகும் பாதிப்புகளையும் சொல்வதே அவரது சூத்திரம். கட்டற்ற நுகர்வு அல்லது களியாட்டமென மீறலை மையமாக்கி அதையே நாவலின் அடிப்படைச் சிக்கலாக்குவது அவர் பால்கிளர்ச்சி எழுத்தின் வழிமுறை. இவை பாலுணர்வின் அசட்டையான புரிதலை மேலோங்கி எடுத்துச்சொல்லும் கதைகள் மட்டுமே. முழுக்க ஆணின் ஒற்றைப்படையான பார்வையில் சொல்லப்படும் அவர் நாவல்களில் பாலியல் பற்றிய கூர்ந்த அவதானிப்போ, விவாதமோ நிகழவில்லை. மேலும் வெகுசன இலக்கியத்திற்கென்றே உள்ள எல்லைகளாலும் அதன் விவரிப்பு சுருங்கியுள்ளது.
மேற்சொன்ன குறுநாவல்களில் அவர் பயன்படுத்தும் உத்தி உண்மையில் தமிழ்த் திரைப்படங்களில் அதர பழமையானது. மையக் கதாபாத்திரத்தை ஒரே நேரத்தில் பல்வேறு சிக்கல்கள் நெருக்கும். அதிலிருந்து ஒருவர் மீண்டும் வருவதை பரபரப்புடன் காட்டுவார்கள். ‘வானம் காணாத விமானங்களில்’ வசந்தாவுக்கும், ‘மோகங்களில்’ நிர்மலாவுக்கும், ‘பசித்திருக்கும் இளங்கொசுக்களில்’ பார்வதிக்கும், ‘கனகாம்பரமும் கிளிஞ்சல் மலர்களும்’ நாவலில் விஜிக்கும் இவ்வாறு பல கோணங்களில் அழுத்தங்கள் ஏற்படுகின்றன. ஆனால், அவற்றைக் களைய ஓர் ஆணால் மட்டுமே முடிகிறது. வசந்தாவை விஜயன் காப்பதுபோல நிர்மலாவுக்கு மனோகரன் உதவுகிறார். பார்வதியின் வாழ்க்கை கணவனின் மாற்றத்தால் ஒளிர்கிறது. விஜிக்கு ஆண் உதவி கிடைக்காததால் கடைசிவரை அழுதுகொண்டே இருக்கிறாள்.
உண்மையில் நாவல் கலையாக உருவாக வேண்டிய இடத்தை இளஞ்செல்வனால் அடையாளம் காண முடியவில்லை. வானம் காணாத விமானங்களில் மனைவியுடன் உடல் இணங்காமல் போகும் கணவனின் மனம்தான் பாலியல் சிக்கலை ஆராயும் தருணத்தைக் கொண்டது. ஆனால் நாவல் அங்குதான் மொண்ணையாக முடிகிறது. எப்போதாவது வீட்டுக்கு வரும் கணவனை வெறுத்து இருக்கும் நிர்மலாவின் மேல் (மோகங்கள்) கணவனின் தம்பிக்கு உண்டாகும் ஈர்ப்பு அறிவு சார்ந்தது. உடலுக்காக மட்டுமே மனைவியைத் தேடி வரும் கணவன் ஒருபுறம் என்றால் தனது ஆளுமையை அங்கீகரிக்கும் ஒருவனை கற்பு நெறி கூறி விரட்டுகிறாள் நிர்மலா. பசித்திருக்கும் இளங்கொசுக்களில் வரும் சங்கரனின் அம்மா தன் கணவனின் நண்பனிடம் கொண்டுள்ள உறவும் சங்கரன் முதிர்ந்த பாலியல் தொழிலாளியுடன் உறவு வைத்துள்ளதும் விரிவாகப் பேசவேண்டிய பகுதிகள். தோல் சுருங்கிய அந்த பாலியல் தொழிலாளியின் இறுதிச் சடங்கை ஏன் முன்னின்று சங்கரன் நடத்துகிறான் என்பது ஓர் எழுத்தாளன் கேள்வி எழுப்ப வேண்டிய இடங்கள். அது பாலியல் இன்பத்தை மட்டும் கொண்டதல்ல. இந்தக் கேள்விகள் எதுவும் இளஞ்செல்வனிடம் இல்லை. வாழ்வில் நடக்கும் மீறல்களை, காமம் எனும் ஆதி இச்சையை அவர் திடுக்கிடும் எளிய சந்தர்ப்பங்களால் சமன் செய்துகொள்கிறார். ஒரு படைப்பாளன் நுழைந்து பார்க்க வேண்டிய மன இருளுக்குள் நுழையும் சவாலை அவர் ஒரு போதும் எடுத்துக்கொள்ளவில்லை.
எம்.ஏ.இளஞ்செல்வன் என்னை முதன் முதலாக அடையாளம் கண்டவர். என்னை எழுத்தாளனென அங்கீகரித்தவர். என் பதினாறாவது வயதில் அவர் போன்ற ஓர் ஆளுமையின் அருகாமை கொடுத்த நம்பிக்கை அபாரமானது. என்னை புத்தகக் கடையில் சேர்த்துவிட்டு நூல்களை வாசிக்கும் சந்தர்ப்பங்களை உருவாக்கினார். பத்திரிகை ஆசிரியர்களிடம் என்னை அறிமுகம் செய்துவைத்து என் படைப்புகளைப் பிரசுரிக்கக் கூறியவர். தனது கடைசிக் காலங்களில் மலேசிய இலக்கியம் குறித்து விரிவாக என்னிடம் பேசியிருக்கிறார். புதுமைப்பித்தனை எனக்கு அறிமுகம் செய்துவைத்தது அவர்தான். புதுமைப்பித்தனின் சாபவிமோசனம் சிறுகதையை என்னிடம் சொல்லி அவர் சிலாகித்ததெல்லாம் இன்றும் நினைவில் உள்ளது. அவருக்கு மலேசிய இலக்கியத்தில் புதுமைகள் நிகழ வேண்டும் என்பதில் அதீத ஆர்வம் இருந்தது. அவருக்குப் புதுமை பிடித்திருந்தது. ராமு என்ற தன் பெயரை அதனால்தான் இளஞ்செல்வன் என மாற்றிக்கொண்டார் என நினைக்கிறேன். என்றும் இளமையான செல்வன். புதுமைகளை ஏற்றுக்கொள்பவன். அவர் ஆசை நிறைவேற வேண்டும். அதன் பொருட்டேனும் மலேசியாவில் இலக்கிய விமர்சனங்கள் வளரவேண்டும். அதன் வழி அவரும் விமர்சிக்கப்படவே வேண்டும். அவ்வகையில் எம்.ஏ.இளஞ்செல்வன் தகுதிக்கு மீறி கொண்டாடப்பட்ட ஆளுமையென்றே நான் கருதுகிறேன். ஒருவேளை அவர் இருந்திருந்தால் இக்கருத்தை மென்புன்னகையுடன் வரவேற்றிருக்கக் கூடும்.