பேய்ச்சி: தமிழ்ப்பிரபா

ஒரு நல்ல நாவலுக்குள் நுழைந்து விட்டோம் என்கிற உணர்வென்பது தூரத்து அருவியின் சலசலப்பு ஏற்படுத்தும் பரவசத்திற்கு ஒப்பானது. ம.நவீன் எழுதிய ‘பேய்ச்சி’ என்கிற இந்நாவல் படிக்கத் துவங்கிய முதல் சில பக்கங்களிலேயே அவ்வுணர்வை எனக்களித்தது.

உண்மையை எழுத வேண்டுமென உட்கார்ந்து தன்னை மீறிய புனைவுமனம் அவ்வுண்மைக்கு வேறொரு சிருஷ்டிமுகத்தை அளிக்கும்போது அவ்வெழுத்தில் இயல்பாகவே ஒரு வசீகரம் தோன்றும். நவீனுக்கு அது வாய்த்திருக்கிறது.

மலேசிய ரப்பர் தோட்டத்தில் தன் இருப்பைப் பற்றிக் கொண்டிருக்கும் தமிழர்களைப் பற்றிய இந்நாவல். அவர்களின் பாடுகளை கூறியதை விடவும், அம்மக்களின் சடங்குகள், நம்பிக்கைகள், அவ்வூரின் நிலப்பரப்பு போன்றவற்றை தோய்த்தெடுத்து எழுதப்பட்டிருக்கிறது.

பேய்ச்சி அம்மனின் ஆங்காரத்தின் நெடி நாவல் முழுக்க வீசிக் கொண்டே இருக்கிறது. பகுத்தறியும் குணமும், அறிவியலும் தான் தர்க்கரீதியாக இவ்வுலகின் இயங்கியல் விதிகளாக இருப்பினும், மக்களின் மனமென்பது சாமி, பலி, பாவம், கடவுளின் உக்கிரம், பரிகாரம் என தொன்மங்களில் தஞ்சமடைந்து இளைப்பாறவே விரும்புகிறது. அந்த இளைப்பாறுதலின் இலக்கிய வடிவமாகத்தான் இந்நாவலைப் பார்க்கிறேன்.

இந்நாவலின் உச்சமான பகுதியென்பது, கோப்பேரேன், காத்தாயி ஆகியோரின் கதை. கொப்பேரேன் ஆட்டை பலியிடுகையில் அரிவாள் ஆட்டின் கழுத்தின் மீது பட்டு அரிவாள் தெறித்து விழுவதிலிருந்து கொப்பேரேன் தன் கைக்குழந்தையுடன் மலேசியாவில் வேலைக்கு வந்து அமரும் வரை நடுக்கமும் அதே சமயம் ஒரு நல்ல பிரதியை வாசித்துக் கொண்டிருக்கிறோம் என்கிற திளைப்பும் அளப்பெரியதாக இருந்தது.

கடந்த பத்தாண்டுகளில் எழுத வந்த நாவலாசிரியர்களின் எழுத்து நடை என்பது முன்னோர்களின் நீர்த்துப் போன வடிவமாகவே இருக்கிறது. தன் சொந்த வாழ்வியல் அனுபவங்களிலிருந்து தனக்கான மொழியைக் கண்டறியும் லாகவம் கைவரப்பெற்றிருக்கும் வெகுசிலரின் நவீனும் ஒருவர் என இந்நாவல் உணர்த்தியிருக்கிறது.

ஆனாலும், கதையை இவர் சொன்ன விதத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. மலேசிய தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வியல் என்பது தமிழிலக்கியத்திற்கு புதிது. ஆகவே, ஓரளாவாகிலும் அம்மக்களின் உரையாடல் வழியாக இந்நாவல் சென்றிருந்தால் அவர்களை இன்னும் நெருக்கமாக உணர்ந்திருக்க முடியும். மாறாக ஆசிரியரின் குரலிலேயே கதை நகர்வதால், அம்மக்கள் ஒரு கண்ணாடிக் கூண்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டு, ஒருவர் அவர்களைப் பற்றிய விளக்கும் குறிப்புகளாவே நாவல் அமைகிறது.

இப்படி ஆசிரியரே கதையைச் சொல்லிக் கொண்டிருப்பதால் புதியதாய் வரும் சின்னஞ்சிறிய கதைமாந்தர்களைப் பற்றி தகவல்கள் நிறைந்த முன்பின் கதைகளும் அனேக இடங்களில் வருவதால் நாவலின் வடிவமே சிதைகிறது.

நாவலென்பது தகவல்களின் களஞ்சியம் என்பதில் மறுப்பேதுமில்லை. ஆனால், அத்தகவல்கள் கதையில் முகிழும் தருணம் கவனிக்க வேண்டியது. சொல்லப்போனால் ஒரு நாவலில் நடமாடும் எல்லோரைப் பற்றியும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. வாசகர்களை நம்பி நாவலாசிரியர் நிறைய இடங்களில் ஓய்வெடுத்திருக்கலாம் என்கிற அக்கரையினால்தான் இதைக் கூறுகிறேன்.

நவீன் எனக்கு முன்பின் அறிமுகம் இல்லாதவர். மலேசியாவிலிருந்து சென்னைக்கு வந்தபோது அவர் பயணத்தின் ஒரு பகுதியாக நண்பர். பா.இரஞ்சித்தை சந்தித்து நாவல் அளிக்க வந்திருந்தார். அப்போது நானும் அங்கிருந்ததால் இருவரும் அறிமுகம் செய்துகொண்டோம். எனக்கும் ஒரு பிரதியை அளித்தார். கல்யாண மண்டபத்தில் வெளிவரும்போது ஒரு மரியாதைக்காக தேங்காய்ப்பையை வாங்குவது போல நானும் வாங்கிக் கொண்டேன். அதை வாசிக்கக் வேண்டுமென்கிற தூண்டுதலை இந்த வீட்டுச் சிறைக் காலம் அளித்தது. இப்படியொரு நல்ல படைப்பைக் கொடுத்த நவீனுக்கும் வாசிக்கத் தூண்டிய கொரொனோவுக்கும் நன்றி!

(Visited 66 times, 1 visits today)