அண்ணா, வாசித்தேன். நல்ல மொழிநடை. வாசிபின்பம் அமைந்த கதை. ஆனால் கதையின் மைய முடிச்சு வலிமையாக உருவாகி வர வில்லை. புராணகதை அதில் ஒன்றினை மாற்றி அமைக்கும் ஆளுமை. அது மிஸ்டிக் உரு கொண்டு மண்ணில் இறங்கி வரலாற்று தருணம் ஒன்றினை மாற்றி அமைக்கும் இந்த தொடர் பின்னல் வலிமையாக உருவாகி இல்லை. காரணம் புராண கதையில் அந்தக் குதிரைக்கு எந்த role ம் இல்லை. கத்ரு அவள் பொறாமை மற்றும் அவள் ஏவும் பாம்புகள் சதி இவைதான் அங்கே வினையாற்றிக் கொண்டிருக்கிறது.
புராணத்தில் வினையாற்றி சிலவற்றை மாற்றி வைக்கும் கூறுகள் எதுவோ அதுவே வரலாற்றில் வினை புரிகிறது எனும் பார்வையில் இக்கதையில் புராணத்தில் இயங்கும் கத்ருவின் பொறாமை போன்ற ஒன்றோ அதன் நேரடி வடிவான பாம்புகள் போல இக் கதையின் வரலாற்று உடைவு மாற்ற தருணத்தில் தொழில்படவிலை.
இக்கதைக்குள் துரையும் முத்தண்ணனும்தான் வினதை கத்ரு எனக் கொண்டாலும் கதையின் மையம் குலைந்தது போகிறது
காரணம் வாசக மனம் இயல்பாகவே முன் சொன்ன புராணக் கதையின் தொடர்ச்சியாக நிலத்தை குதிரையாகவும் அந்நிய படையெடுப்பை அக் குதிரையை பின்னிப் பரவி மூடும் பாம்புகளாகவும் கற்பனை செய்து விடுகிறது. ஆகவே கதைக்குள் அது பேசும் துரைக்கும்குதிரைக்காரனுக்கும் இடையிலான முரண் கதையின் குவிமையம் வேறு பக்கம் நகர்ந்துவிட்ட உணர்வை அளிக்கிறது.
என் நோக்கில் இக் கதை இலக்கை தவறவிட்ட கதை. பல்வேறு புதிய வாசிப்பு சாத்தியங்களை முன் வைத்து வரும் இளம் வாசக பார்வை ஏதேனும் என் பார்வயை மாற்றி அமைக்கும் சாத்தியம் இருக்கலாம் எனும் போதத்துடன்தான் இதை சொல்கிறேன். இலக்கிய வாசிப்பில் மட்டும் உள்ளே வரும் புதிய வாசிப்பு சாத்தியங்கள் வழியே சில முடிவுகள் பரிசீலனைக்கு உட்படலாம்.
கடலூர் சீனு
மனிதனுக்கு எப்பொழுதுமே அதிகாரம், அதைச் செலுத்துவதற்கான இடமும் தேவைபடுகிறது. இந்தக் கதையில் முத்தண்ணன் தனக்கு சமூகம் அளித்திருக்கும் படிநிலையிலிருந்து விடுபடுவதற்கு அல்லது மேலெழுவதற்கான வாய்ப்பை உச்சை அளிக்கிறது. அது அவன் மனத்தில் புனைந்து கொண்ட பாவனையாகவே இருக்கலாம். இதற்கு முன்னர் தமிழிலே வெளிவந்த்கிருக்கும் ஊமை செந்நாய் போன்ற கதைகள் பேசிய அடிநாதம் இதில் இருக்கிறது. ஆனால், மலேசியாவில் இம்மாதிரியான கதைக்களங்கள் அறவே தீண்டப்படாதச் சூழலில் இக்கதை தனியிடம் பெறுகிறது. மேலும், மரபிலிருந்து கொள்ளப்படுகிற வேர் என்பதும் முக்கியமானது. உச்சைசிரவஸ் எனப்பெயரிட்டிருப்பது, தொன்மத்தைப் பயன்படுத்தியிருப்பது முக்கியமானது. மரபைப் பயன்படுத்தியிருப்பது மட்டில் அது சிறந்த்தாக இல்லை. ஆனால், மரபு இங்கு ஒருவகையில் கேள்விக்கும் உட்படுத்தப்படுகிறது. காசியபர் பிரஜாபதிகளுள் ஒருவர். பிரம்மாவின் மகன்களில் ஒருவர். அவர்களில் இருந்தே குடிநிரைகள் தொடங்கும். அப்படிப்பட்ட முனிவரின் காலத்திலே விநதை அடிமையாகியிருக்கிறாள். அந்த அடிமைத்தனம் என்பது மரபில் தொடங்கும் சாதிப்படிநிலைகளின் கீழோருக்கான தொடக்கமாக இருக்கலாம். அந்தக் குதிரையாக கூட பிளேக்கி இருக்கலாம். தொன்மத்திலிருக்கும் இந்தக் கதை மீண்டும் நிகழ்கிறது. இப்பொழுது கத்ருவின் மைந்தர்கள் சூழ்ந்த உச்சை மீள பிறக்கிறது. விநதைக்கு மீளாக முத்தண்ணனும் கத்ருவின் மீளாக துரையையும் கற்பனை செய்து கொள்கிறேன். இப்பொழுது உச்சை விநதையை மீட்கிறது. இப்படியாகக் கற்பனை செய்து கதையை வாசிக்க முடிகிறது.
அர்வின் குமார்