
நேற்று நீலகண்டம் குறித்து திரு. காளி பிரசாத் பேசியதை கேட்டேன். அதில் நஞ்சிற்கும் அமுதத்திற்கும் இடையே தோன்றிய சில உயிர்களை பற்றி கூறினார். இன்று தான் தெரிந்து கொண்டேன் உச்சை சிரவஸ் என்ற வெள்ளை குதிரையும் சமுத்திர மந்தனத்தின் போது பாற்கடலில் இருந்து தோன்றியது என.
பந்தய குதிரைகள் செயல்பட இயலாத நிலை வரும் போது அவை சுட்டு கொல்லப்படுவதே வழக்கம் என்று கேள்விபட்டிருக்கிறேன். தகுதிக்கு மீறியதாக தோன்றும் உறவுமுறைகள் ஏற்படுவதை தடுக்க செய்யப்படுவதாக அறியப்படும் கவுரவ / ஆணவக்கொலைகள் நினைவிற்கு வந்தது.
அதிஷ்டம் அற்ற இந்த குதிரையும் பெண்ணாகவே புனையப்பட்டது எதார்த்தமா? பிளாக்கி என கூப்பிட அனுமாதிக்கவர் சவாரி செய்ய விட்டுவிடுவாரா?
மனிதர்களுக்கு அவரவர்க்கு தக்கவாறு அதிகார பசியும் ருசியும் இருந்து கொண்டே தான் இருக்கிறது. தாசில்தார் வீட்டு நாயை வாக்கிங் கூட்டி கொண்டு போகிறவனுக்கு இருக்கும் செருக்கை போன்றது இங்கும் உண்டு. அயிலம்மாவோ துரையோ , வெள்ளையோ கருப்போ அவனால் சவாரி செய்ய முடியாது சேவகம் மட்டுமே செய்ய முடியும்.
தனக்கு கிடைத்தது அடுத்தவருக்கு கிடைக்க கூடாது என்று நினைப்பது ஒரு குரூரம் தான். மலையாண்டிக்கு கொடுக்கப்படாத நியாயம் , ஐயரின் ஊர் திரும்புதல் எல்லாமே மனதை கனக்கச்செயவது தான்.
மனிதர்களே கனவில் வராத அளவிற்கு உச்சையுடன் ஒன்றி போன முத்தண்ணனுக்கு அதை கொல்ல விடாமல் தடுப்பதற்கு தோட்டத்தை அழிக்கும் கருநாகங்கள் வராமல் செய்யும் நியாயப்படுத்தல் போதும். ஆனால் துரையின் கவுரவத்தின் முன் அது இயலுமா ? உணர்வுகளால் இணைந்துள்ள இருவரும் துரையிடம் தப்பித்திருப்பார்களா?
முத்தண்ணனின் மோகம் உஞ்சையை காப்பாற்றிஇருக்கும் என்பதே எனக்கான ஆசையாயிருக்கிறது.
ஆசை அறுமின்.
சரவண குமார், திருச்சி
குதிரை என்பது செல்வாக்கு என்கிறார் ஐயர். பிளாக்கி எனக்கு மகள், இளவரசி என்கிறான் துரை. அந்தக் குதிரையை தனக்குக் கீழே உள்ள ஒருவன் ஆக்கிரமிப்பதை துரையால் உருவகிக்கவே முடியவில்லை.
முத்தண்ணனுக்கோ குதிரையில் ஏறுவது என்பது வாழ்நாள் லட்சியம். அவனுடைய உயிரை தவிர அனைத்தையுமே அதற்காக அவன் தியாகம் செய்கிறான். இதை துரையும் உணர்ந்தே இருக்கிறான். முத்தண்ணன் ஆசை நிறைவேறி விட்டால் அவன் வென்று விடுவான் அவனுடைய வெற்றியே தன்னுடைய தோல்வியாக ஆகிவிடும் என்பதற்காகவே பிளாக்கியை பலி கொடுக்கிறான் துரை. குதிரை கொல்லப்பட்டு இருந்தாலும் இங்கு வென்றது என்னவோ முத்தண்ணன் தான் என்று எனக்கு படுகிறது.
நினேஷ், பங்களுரு
ஒரு பெரும் சாம்ராஜ்ஜியம் சரிந்தாலும் கம்பீரமாகவே சரியும். முதண்ணனால் இறுதி வரை அதை ஆளவே இயலவில்லை. ஒரு வேளை இந்தியாவில் இக்கதை வேறு மாதிரி எழுதப் பட்டிருக்கும். துரையின் கீழ் இல்லை என்றால் அது அதன் அசல் விசையுடன் ஒடியிருக்கும். ஐயருக்கு தான் அது சற்பம், தோட்ட தொழிலாளர்களுக்கு அது தெய்வம்.
உச்சை சிரவஸ் தொன்மம் அதன் அசல் நிறத்தை இக்கதையில் பரிசீலிக்க வைத்தது. கண்ணுக்குள் உள்ள காதை செவிடாக்கி விடும் என ஐய்யர் கூறுவது நல்ல பிரயோகம்.
போது குதிரை கொல்லப் பட்டது, இந்தியா இரண்டாக பிரிந்தது. நல்ல வாசிப்பு அனுபவத்தை வழங்கிய கதை.
இருந்தாலும், பொதுவாக சிறு கதைகளில் குதிரை என்றாலே உருவகம் (metaphor) தான். டால்ஸ்டாயின் கஜக் கோல், குப்ரினின் ஏமெரால்டு என. குற்றமும் தண்டனையும் இல் கூட ஒரு காட்சி வரும். உருவகத்தை முடிக்காமல் திறந்த படியே விடுவது பொருந்தாது.
இந்திரனின் உச்சை சிரவஸ் அசல் நிறம் வெண்மை, இங்கு கருப்பு ஆகவே முரணான புராணக் கதையில் கோர்கப் பட்டுள்ளது.
அய்யரின் பார்வையில் தான் அது சர்பம் அவரின் இடத்தை அழிக்கும், ஆனால் பிறரின் பார்வை சொல்லப் படவில்லை அவர்களுக்கு அது புதிய தகுதி கொடுக்க கூடும்.
கோவேறு கழுதையின் பங்களிப்பு இக்கதைக்கு பெரிதாக எதுவும் ஆய்றவில்லை, அவ்வளவு பெரிய சரித்திர பின்னணியை இக்கதை கையாளவில்லை. கோவேறு கழுதை ஜப்பானியரை குறிக்கிறது என வழி மாறி சிந்திக்க வைக்கும் வாய்ப்புண்டு.
ஒரு கதை முடிக்காமல் விடப் படுத்தல் மாறா விதி அல்ல என நினைக்கிறேன். உண்மையிலேயே அங்கு ஆசிரியன் செய்வது அறியாமல் திகைத்து நின்று அந்த திகைப்பை நமக்கு தர வேண்டும். இக்கதையில் அப்படி எதுவும் இல்லை. இன்றைய இலக்கிய சூழலின் அழுத்தம் இப்படி முடிவுறா கதையை எழுத வைக்கிறது.
கிருஷ்ணன், ஈரோடு
உச்சை இந்திரனின் புரவி.அது எப்போதும் மானுடர் ஏறமுடியாது என்றும் உச்சைவசிரசில் மானுடன் ஏறக்கூடுமானால் ஏறியவன் இந்திரன் ஆகிவிடுகிறான் என்பதும் தொன்மம்.அரசனுடைய புரவி யானை அனைத்தும் குறியீடுகளே. அவைகள் மாற்றப்படக்கூடியவை அல்ல என்பதே உலகம் முழுக்க இன்றுவரை உள்ள நியதி.
உச்சை இதில் அழிவாற்றலாகவே ஐயரால் குறிக்கப்படுகிறது.அது பழைய மரபில் உண்மையும் கூட.இன்றுவரை கிராமங்களில் சுழி பார்க்காமல் பசு வாங்கமாட்டார்கள். குதிரைக்கும் யானைக்கும் ஜாதகமே உண்டு.ஆகவே ஐயர் சொல்வது அவர் பார்வையில் சரியானதுதான்.
ஆகவே அது அழிவைக் கொண்டு வருமென்று நம்புகிறார்.அது தற்செயலாக அப்படியே நடக்கிறது.ஆகவே அழிவுக்கு பதிலாக குதிரை கொல்லப்படுகிறது.
அது அதிகாரம் மாறும்போது முந்தைய அதிகாரத்தின் அடையாளங்கள் அழிக்கப்படவேண்டும் என்பதைச் சுட்டுகிறது.
குதிரை துரை சென்றபின்பும் அங்கிருந்தால் தோட்டத்தில் உள்ள அனைவரையும் சுமக்கும் சுமைதாங்கியாக மாறும்.அது கடவுளாக தோட்டத்தில் நினைவுகொள்ள கொல்லப்பட்டே ஆகவேண்டும்.
சற்று தேவையில்லாத விளக்கங்களைத் தவிர பெரிய குறையேதும் இல்லாத நல்ல சிறுகதை.
மணி, அந்தியூர்