உச்சை: கடிதங்கள் (3)

சிறுகதை: உச்சை

இந்திரனின் வாகனமான உச்சைசரவஸ் தொன்மத்தில் அதன் மேல் யாரமர்ந்தாலும் அவரே இந்திரன் எனக் கொள்ளப்படும். அத்தொன்மத்தை ஆட்சி அதிகாரத்துடன் இணைத்து புனைந்திருப்பது ஒரு தொன்மம் அரசியல் என புது வித வாசிப்பனுபவத்தை உருவாக்குகிறது. இந்திரனால் தன் உச்சைசர்வஸில் யாரையும் அனுமதிக்க முடியாதது போலவே துரையாலும் முத்தண்ணனிடம் அதனை குடுக்க இயலவில்லை ஆனால் அதனை விட்டுச் செல்லும் தருணத்திலும் அவரால் கொல்லவும் இயலவில்லை.

அதிகார வர்க்கத்தில் மேலும் கீழுக்குமான மோதல் இவை. என்றுமே மேலுள்ளவன் தன் கீழுள்ளவனை அஞ்சிக் கொண்டே இருக்கிறான். முத்தண்ணன் தன் நிலையை அடையும் தருணமெதுவென துரை அறிவான் அத்தருணத்தை நோக்கி அஞ்சியே அவன் வாழ்கிறான். அந்த கற்பனைகளை மீறவே துரை அவனை சிறுமை செய்கிறான் நாயெனத் தூற்றுகிறான்.

இது இயல்பாகவே அதிகாரம் அடிமை கதைகளில் வரும் இமேஜ் ஆனால் அதனையும் மீறிய ஒன்று உச்சை கதையில் வருகிறது முத்தண்ணனின் வெகுளி தனம் அந்த வெகுளி தனமே துரையை மேலும் காயப்படுத்துகிறது.

அயிலம்மா வளர்த்த கோவேறு கழுதை குட்டியிட்டு அதன் மேல் தான் பயணம் செய்யலாம் என்பதிலிருந்து தொடங்கி ஒரு குதிரை மேலேறி பயணம் செய்ய வேண்டுமென்ற விசை அவனுள் எழுகிறது. அதுவே அவன் வெகுளி தனத்தின் முதல் வெளிப்பாடு. அங்கிருந்து முதிர்ந்த ஒரு முத்தண்ணன் வளர்ந்து வருகிறான் வெகுளி தனமான ஒரு சிறுவனிடமிருந்து உலகமறிந்த ஒருவனாக அந்த ஒருவனால் மட்டுமே துரையிடம் தன் ஆசையை சொல்லாமல் இருக்க முடிந்திருக்கிறது. ஆனால் அதனை அடக்கிக் கொண்டு அவனிடமிருந்து ஒரு வெகுளி தனத்தை துரையால் உணர முடிகிறது அதுவே துரையை அவனிடம் மேலும் எரிச்சல் கொள்ள செய்கிறது.
ஐயருக்கு சர்பமாக தெரியும் அக்குதிரை இவனுக்கு ஆற்றலாகவே படுகிறது. இறுதி வரை அதனை ஆற்றலென்றே அவன் நம்பவும் செய்கிறான். அது ஊர்மக்களிடம் அவனுக்களிக்கும் இடம் அவன் நம்பிக்கைக்கு மேலும் வலு சேர்க்கிறது. ஆனால் துரை முத்தண்ணன் அறியாமலே அவனை நிறுத்துமிடமொன்றுள்ளது அதுவே வரலாற்றில் என்றும் ஆதிகாரம் * அடிமை என்ற நிலையைத் தீர்மாணிக்கிறது.

ஜி.எஸ்.எஸ்.வி.நவீன், பெங்களூரு

இக்கதையில் துரை-முத்தண்ணன் உறவு உருவாகி வரும் இடங்கள் ஊமைசெந்நாயை நினைவூட்டியது. ஆனால் ஊமையன் அதிகம் சிந்திப்பவன், முத்தண்னனோ வெகுளி.

முத்தண்ணன் வெகுளியாக இருப்பினும் கழுதை, கோவேறு கழுதையிலிருந்து உச்சையை அடைவது வரை அவனது வாழ்வில் ஒரு வள்ர்ச்சிநிலை உள்ளது. உயிராபத்து இருந்தாலும் குதிரை வளர்க்க முடிவெடுக்கும் இடம் அவனளவில் பெரும் பாய்ச்சல். இனி அவன் தெய்வத்தின் பாதையில் சென்றேயாக வேண்டும். உச்சையை அடைவதில் ஆள்வதில் வெற்றி பெற்றது துரையா முத்தண்ணனா என்று வாசிப்பது போலவே உச்சை ஏற்றுகொண்டது யாரை என்ற கோணத்திலும் வாசிக்கலாம் என்று பட்டது. பராமரிப்பின் முதல் சில நாட்களுக்குபின் உச்சை முத்தணனை அனுமதிக்கிறது. பயிற்சியின் போதும் வேகம் கூட்டுகிறது. துரையை அது எந்தளவு ஏற்றுகொண்டது? ஒருவேளை முத்தணன் சவாரி செய்தால் முழு வேகம் அடையும் சாத்தியம் உண்டு.

துரை முத்தண்னன் மேல் அடையும் வன்மம் அடிமையான அவன் உச்சையை அடைவான் என்பது மட்டுமல்லாமல் உச்சையும் அவனை மட்டுமே ஏற்றுக்கொண்டது என்பதாலா?
ஐயர் குதிரையை பார்ப்பது சர்ப்பத்தின் நஞ்சின் வடிவில். முத்தண்ணன் காண்பதோ ஐஸ்வர்யத்தின் ஆற்றலின் வடிவில். துரையுடனான ஆடலில் வெற்றி பெற்றாலும் இறுதியில் ஐயர் சொன்ன வடிவிலேயே அவன் உச்சையை பார்க்கிறான். அது அழிவையும் கொண்டு வருகிறது. நஞ்சு எப்போதும் இறுதிக்கணத்திலேயே தன்னை வெளிக்காட்டுகிறது.
நல்ல வாசிப்பனுவன் தந்த சிறுகதை.

பாரி, பெருந்துறை


அதிகாரத்தை சுற்றி பினைந்திருக்கும் அந்த கருநாகங்கள் என்ன என்பது சிந்தையை தூண்டுகிறது.
நல்ல வாசிப்பனுபவம் அளித்த கதை.

அருள், கொச்சின்

துரையால் மாண்பு இழந்து மட்டிக்குதிரையைப்போல ஆகப்போகும், முத்தண்ணனை சுமந்து செல்லும் “பிளாக்கியை”, நினைத்துப்பார்க்கவே முடியவில்லை. முத்தண்ணனுக்கு உச்சையில் ஏறுவது வாழ்நாள் லட்சியம். ஏறமுடியாவிட்டாலும் கூட தோட்டத்திலுள்ள மற்றவர்கள் முன் தான் தனித்து தெரிவது, ஒரு அதிகாரத்தோரணை வருவது எல்லாவற்றிற்கு குதிரைதான் காரணம். அவனது கனவுகளில் கூட முழுமையாக நிறைந்திருப்பது உச்சைசிரவஸ். குதிரையைக் கொல்வது தன்னையே கொல்வதுகூடத்தான். அவனது இருப்புக்கே பின்னர் பொருளில்லாமல் ஆகிவிடும். அந்த இரவுதான் உச்சைசிரவஸின் வசீகரத்திற்கு காரணமான நஞ்சை முத்தண்ணன் முதன்முதலாக கண்டுகொள்கிறான்.

மணவாளன், பெருந்துறை

உச்சை வாசித்துவிட்டேன். ஆண்டான் அடிமை இருமையின் வெளிப்பாடு அடையாளங்களைக் கட்டமைப்பதன் மூலம் வலுவாக நிறுவப்படுகிறது. கோவேறு கழுதைமீது ஏறக்கூடாது என்பதும் , உச்சை மீது ஏறக்கூடாது என்பதும் அடையாளங்களே. அவற்றை விட்டுவிட அதிகார வர்க்கத்தின் ஆணவம் இடம் கொடுப்பதில்லை. ஜப்பானியர்களிடம் தோற்று ஓடினாலும் இங்கு துரையின் பிம்பம் மாசடையாமல் நீடிக்க வேண்டுமெனில் உச்சை வேறு யாரையும் தன்மீது ஏற்றிவிடக்கூடாது. கொல்வது ஒன்றே வழி.
அதைக்கொன்றால் அதிலிருந்து வெளிப்படும் நாகங்கள் எவற்றைக் குறிக்கின்றன என்று அருள் கேட்டிருப்பது முக்கியமான கேள்வி. எனக்கு இன்னும் விடை சிக்காத கேள்வியே.

விஜய பாரதி, சென்னை

(Visited 106 times, 1 visits today)