உச்சை: கடிதங்கள் (4)

சிறுகதை: உச்சை

பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த மலேசியாவின் ரப்பர் தோட்டத்திற்கு ஒரு குதிரை வந்து சேர்வதும் அதன் பின் நிகழும் சம்பவங்களுமே கதை.

முத்தண்ணன் தீண்டத்தகாத ஜாதியை சேர்ந்தவன், மிக இள வயதிலேயே அனாதை யானவன், குதிரை மேல் கொண்ட பித்தின் காரணமாக, கிராமத்தில் கோவேறு கழுதையை குதிரை என்று நம்பி அது குட்டி போடும் தனக்கு ஒரு குதிரை கிடைக்கும் என்ற ஆசையில் ஆண்டுக்கணக்கில் கடுமையாக உழைக்கிறான்,அது இறந்துவிடுகிறது அவன் கையாலேயே அடக்கம் செய்துவிட்டு, ரப்பர் தோட்ட வேலைக்கு வந்து சேர்கிறான்.

துரை, பெரும்பாலான பிரிட்டிஷ் துரைகளைப் போன்றே,தோட்டத்து பெண்களிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடுபவர், தோட்டத் தொழிலாளர்களை சுட்டுக் கொல்ல தயங்காதவர், அநீதியாக ஒருவரை கொன்றவர்.

லண்டனிலிருந்து கப்பலிலும் குளிரூட்டிய லாரியிலுமாக “கருப்புக் குதிரை” ஒன்று தோட்டத்திற்கு வந்து சேர்கிறது. ஒவ்வொரு அங்குலத்திலும் சுடர்விடும் கருமையோடு, கருப்பு வைரம் போல் மின்னுகிறது, சிறுவர்கள் ஆண்கள் பெண்கள் என அனைவரையும் மெய்மறக்கச் செய்கிறது ஜொலிக்கும் பேரழகால். ஆண்களுக்கு திறண்டிருக்கும் கண்ணியை போலவும், பெண்களுக்கு அதில் ஏறி வருபவன் ராஜகுமாரன் போலவும் தோன்றச் செய்யும் ராஜகம்பீரம் கொண்ட குதிரை அது.துரையின் கணக்கப்பிள்ளையான ஐயருக்கு மட்டும் வேறு விதமாக இருக்கிறது குதிரை. அதன் சுழி சரியில்லை கருநாகங்கள் அதில் நெளிந்து கொண்டிருக்கிறது மொத்த ஊரையும் அழிக்கப் போகிறது இக்குதிரை என்கிறார்.எல்லோரையும் கவர்ந்திழுக்கும் ஒன்றினுள் பேராபத்தை காண்கிறார் ஐயர்.
குதிரை பராமரிக்கும் ஆள் உடன் வராததால், தோட்டத்தில் வேலை செய்பவர்களில் யாராவது குதிரையை பார்த்துக் கொள்ள முடியுமா என்று கேட்கிறார் துரை, இரு மடங்கு சம்பளம் தனி வீடு என சலுகைகள் அறிவித்தும் உயிர் பயத்தில் யாரும் முன் வராத போது முத்தண்ணன் நான் தயார் என்று கூறி பணியில் இணைகிறான் குதிரையின் உடல் நலக் குறைவை முந்தைய அனுபவத்தை வைத்து சரிசெய்து துரை மனதிலும் நற்பெயர் பெறுகிறான், மிகச் சிறப்பாக குதிரையை கவனித்துக் கொள்கிறான். குதிரையும் துரையும் அவனுடன் சிறிது நட்பாகிநெருங்கி வருகையில் ஜப்பான் ராணுவம் மலேசியாவை தாக்கி கைப்பற்ற தொடங்குகிறது.

லண்டனுக்கு துரை தப்பிச் செல்லும் முன் தான் அவ்வளவு நேசித்த குதிரையின் மேல் தன் அடிமைகளாக இருந்தவர்கள், எரி விடக்கூடாது என்று முத்தண்ணன் கையாலேயே சுடச் சொல்கிறார் துரை. தன் வாழ்நாளையே குதிரை மோகத்தில் கழித்த முத்தண்ணன் குதிரையை சுட்டானா இல்லையா என்பதை வாசகர்களின் யூகத்துக்கு விட்டுவிடுகிறார்.

எனக்கு இதில் மையக்கதை தாண்டி இருவரின் மனநிலைகள் ஈர்த்தது, மேலதிகமாக சிந்திக்கத் தூண்டியது.

துரை

மற்ற விஷயங்களில் வழக்கமான பிரிட்டிஷ் துரைதான்.பிரத்தியேக தங்குமிடமும் குளிப்பதற்கு, நீச்சல் குளமும் கட்டி,
தன் மகளைப் போல இளவரசியை போல நேசித்து வளர்த்த குதிரையை எப்படி கொல்ல அவருக்கு மனம் வருகிறது. மறத்திற்கும் அஃதே துணை என்பதுபோல, திரிந்த அன்பா? பெரும்பாலான ஐரோப்பியர்களை போல உலகை, இயற்கையை ,உயிர்களை, வென்று ஆள்பவன் தான் ஆண்மகன் என்ற மனோபாவமா? அனைத்தையும் ஒரு பொருளாக பார்க்கும் மனோபாவமா?
கிட்டத்தட்ட ஒரு அரசனை போன்ற வாழ்வு தான் அவர் அங்கே வாழ்ந்து வருவது,அவருடைய எந்த அகத் தேவையை குதிரை பூர்த்தி செய்தது?

ஏனெனில் அக்குதிரையை முழு வேகத்தில் அவர் ஒட்டியதே இல்லை நடையை விட சற்று கூடுதல் வேகத்தில் தான் அவரால் பயணம் செய்ய முடியும், குதிரையில் ஏறவும் இறங்கவும் இன்னொருவர் துணை வேண்டும்.

முத்தண்ணன்

சிறு கவனம் பிசகினாலும் துரையினால் கொல்லப்படுவோம் என்று தெரிந்தும் எது அவனை குதிரையை நோக்கி ஈர்க்கிறது?

மிகவும் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவனுக்கு,கிராமத்தில் எவ்வித மதிப்பும் இல்லை உழைப்புக்கு நியாயமான ஊதியம் இல்லை,வீட்டின் உள் நுழையக் கூட அனுமதியில்லை எல்லோரிடமும் சரிசமமாக பழகவும் தடை, பிரிட்டிஷாரின் வருகை உண்மையில் இவர்களுக்கு உயர்வைத் தானே தந்துள்ளது.
கஷ்டப்படுவதும். அடி வாங்குவதும். துன்பங்களுக்கு உள்ளாவதும்,முத்தண்ணன்ங்களுக்கு புதிதல்ல,துரை எவ்வளவு வற்புறுத்தி இருந்தாலும் அடித்து இருந்தாலும் குதிரையை இவர் கொண்றிருக்க மாட்டார் என்றுதான் நினைக்கிறேன்.முத்தண்ணனின் வாழ்வில் மரியாதையையும் அங்கீகாரத்தையும் தேடித்தந்தது குதிரையுடனான நெருக்கம்தான்.

மேலும் குதிரையை ஒரு குறியீடாக, ஆசையின் உருவகமாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

ஐயர் கூறுகிறார்-
“நாகம் படம் எடுக்கறத பாக்கறச்சே நாட்டியமாகத்தான் இருக்கும்”
“ஸர்ப்பம் புத்திய மழுங்கடிக்கறது. ஆசைங்கறது வெஷம். நாள்பூரா அதோடவே ஈஷிண்டு இருக்கியோல்லியோ. வெஷம் ஏறத்தானே செய்யும். அது நோக்குச் சொந்தமில்லாத பொருள் மேலெல்லாம் மோகத்த உண்டாக்கும். மோகம் கண்ணுக்குள்ள இருக்கற காதுகளத் தீண்டும். கண் செவிடாகும். செவிட்டுக் கண்ணுக்கு எல்லாமே தன்னதுன்னு தோணும். தர்மம் தெரியாது. துரியோதனனுக்கு இருந்ததில்லையா… அந்தக் கண்கள் ” என்றார்.”

முத்தன்னனுக்கு ஏற்கனவே இருந்த இழிவான வாழ்க்கையிலிருந்து குதிரை மேல் எழுந்த ஆசைதான் விடுதலையை கொடுத்தது, கூடவே புதிய துன்பங்களையும்.

கதிர், கோவை

ஜெயகாந்தன் அவர்களின் ‘நிக்கி’ சிறுகதை ஒரு நாயைப் பற்றியது என்றால் தகுமா? ம. நவீன் எழுதிய ‘உச்சை’ கதையும் அப்படியே.
தெலுங்கு மொழி தெரிந்த எனக்கு கதையின் தலைப்பு முதலில் சில கேள்விகள் எழக் காரணமாய் இருந்தது. தவிர, அதுவென் அறியாமை மட்டுமே.

சில பணி இடங்களில் சிலர் சில சிறப்புச் சலுகைகள் கிடைக்கும் என்பதற்கு முதலாளிகளின் அடிவருடிகளாக இருப்பார்கள். அப்படியான ஒருவன்தான் முத்தண்ணன். ஊர் மெச்சவும், மாட்டுக்கறிக்கும் தன்னை ஒப்புக்கொடுக்கிறான்.

கழுதை வளர்த்த அனுபவம் உள்ள அவன் இறுதிவரை துறையால் சுடப்பட்டுச் சாவதிலிருந்து தப்புகிறான்.

துறைக்கு அவன் அடிமை, ஐயருக்கு அவன் தாழ்ந்தவன் என்பதுவே முத்தண்ணனின் மனவோட்டம். ஓர் இடத்தில் ஐயரே அவன் கைகளைப் பற்றிக் கொண்டு குமுறும் போதும் முத்தண்ணன் பதிலுக்கு அவ்வாறு செய்யத் தயங்குகிறான்.

மலம் அள்ளுபவன் என முத்தண்ணனை முன்னம் நகைத்துள்ள ஐயர் தீண்டாமையை திடீரெனத் தள்ளி வைத்திருக்கலாம். அதற்கு சப்பான்காரனுக்கே நன்றி சொல்ல வேண்டும்

புராணப் புரட்டுகளை முழுதாய் நம்புகிற, மாட்டிறைச்சி உண்பதால் துறையை உரசி நடக்கவும் மறுக்கும் ஐயரை, வாழ்வு மீதான பீதி பீடித்திக்கொள்கிறது.

அவமதிப்புகள் முத்தண்ணனுக்குப் புதிதன்று. அயிலம்மா, ஐயர், துறை, இவர்களால் முத்தண்ணன் உதாசினப்படுத்தப் படுகிதான். மாறாக, அவனிடமிருந்து எதிர்வினைகள் ஏதும் இல்லை.

துறை உச்சையை கொல்லச் சொல்லும் போதும்கூட மன்றாடியே மறுக்கிறான்.

முத்தண்ணன் உச்சையை அன்பாகவோ, உயிராகவோ வளர்க்கவில்லை. பகட்டுக்காகவே அவன் அதனை வளர்க்க முன்வருகிறான். துறை கொல்ல நினைக்கும் குதிரையை தான் வளர்த்துக்கொள்வதாகச் சொல்லும் தருணத்திலும் மனிதம் வெளிபடுவதுக் கொஞ்சமாகத்தான்.

துறையின் அதிகாரத்துவ உணர்வு, தான் சவாரி செய்த குரிரையை ஓர் ‘அடிமை நாய்’ சாவாரி செய்வதைக் கற்பனை செய்யக்கூட மறுக்கிறது.

உச்சையைக் குறிப் பார்த்தத் துப்பாக்கி துறையை குறிப் பார்த்திருக்கலாம்.

கதை முழுக்க முத்தண்ணனோடு நல்ல எண்ணத்தோடே பயணிக்கிறார் என எண்ணவும் இடம் கொண்ட ஐயர் புகட்டியக் கரும்பாம்பின் கதை, முத்தண்ணன் உச்சையின்பால் பீடை உணர்வு கொள்ள வைக்கிறது.

உச்சை செத்திருப்பது சாத்தியமே.

அதிகாரத்துவம் மற்றும் அடிமைத்துவம் குறித்த இப்புனைவுக்கு புரவி ஒரு கருவி. இக்கதை எல்லா நிலத்திற்கும் தகும்.

கதையில் பரவலாகப் பிரயோகம் செய்யப்படாத அருஞ்சொற்கள் காணக் கிடைக்கின்றன. திரு. நவீன் எப்போதும் இதற்காய் மெனக்கெடுபவர்.

‘உச்சை’ ஆண்டான் அடிமையின் முகம்.

த.குமரன், மலேசியா

(Visited 70 times, 1 visits today)