மலேசிய நாவல்களை வாசிக்கும்போது பெரும்பாலானவை ஏற்படுத்தும் சலிப்புக்குக் காரணம் அதன் அடிப்படை சாரமாக மறுபடி மறுபடி வரக்கூடிய இரண்டு அம்சங்கள்தான். முதலாவது படைப்பாளிக்கு ஏற்பட்டுள்ள நீதியுணர்வு சார்ந்த கோபம். இரண்டாவது மானுட உறவுகள் சார்ந்த குழப்பம்.
உண்மையில் இந்த ஐயங்கள் நாம் நம் வாழ்நாளில் எதிர்கொள்ளக்கூடியவைதான். நீதி மறுக்கப்படும்போது அடுத்து என்ன என்ற கேள்விக்கு பதில் இல்லாதவர்கள் பொத்தாம் பொதுவான ஒரு கற்பனை அதிகாரத்துக்கு எதிரான போராளிகளாகின்றனர். தாங்கள் எழுதும்போது மட்டும் புகுந்துகொள்ளும் அந்த பாவனைக்குள்ளிருந்து எழுப்பும் கூச்சல்களை ‘கலைஞனின் கலகம்’ என கற்பிதம் செய்துகொள்கின்றனர். அதேபோல நட்பு, காதல், தாய்மை போன்ற உறவுகள் குறித்து அதுவரை ஒருவர் நம்பி வந்த நேர்நிலை விழுமியங்களுக்கு எதிராக, அனுபவம் புதிய அர்த்தம் கொடுக்கும்போது உண்டாகும் அதிர்ச்சியும் பெரும்பாலும் இங்கே படைப்புகள் உருவாகக் காரணிகளாக இருந்துள்ளன.
அரசின் புறக்கணிப்பால் வன்முறை வளர்வது, சிவப்பு அடையாள அட்டையால் தண்டிக்கப்படுவது, கிராணிமார்களால் வஞ்சிக்கப்படுவது, குடும்ப அழுத்தத்தால் காதல் குழைவது, பெண் / ஆண் சபலங்களால் மீறல்கள் நிகழ்வது, நண்பனே உடனிருந்து துரோகம் செய்வது என பல்வேறு கதைக் கருக்களை உருவாக்க இந்த இரு மன உணர்வுகளே அடிப்படையாக உள்ளன. ஒருவகையில் இந்த இரண்டு சாரங்கள்தான் வெற்றிபெற்ற பல ஜனரஞ்சக தமிழ்த் திரைப்படங்களில் ஆதார அம்சமாக உள்ளதைக் காணலாம்.
இவை புனைவாக்கப்படக்கூடாதவை என்பதல்ல. நிலத்தை நாம் எவ்வளவு தோண்டினாலும் வெட்டினாலும் அதனால் நாம் உருவாக்குவது அதன் மேல்பரப்பில் சில மாற்றங்களை மட்டும்தான். ஆனால் பூமிக்கடியில் அழுத்தம் அதிகமாகி அதனால் சக்தி வெளியேற்றப்பட்டு, தளத்தட்டுகள்(Plates) நகர்வதனால் ஏற்படும் நிலநடுக்கம் எவ்வளவு பெரியது. ஒரு படைப்பு மெல்லிய சீண்டல்களை உருவாக்கும்போது நல்ல வாசகன் மனதில் அது மண்வெட்டியால் கொத்தும் நிலமாக மட்டுமே மனதை நெருங்குகிறது. இதே அனுபவங்கள் ஆழமான பாதிப்புகளை உருவாகத்தான் நாவலில் தத்துவங்கள் தேவைப்படுகின்றன.
தத்துவம் என்றதும் இன்னொரு சிக்கல் வருகிறது. எழுத்தாளன் தத்துவம் என்பதை செய்தியாகவும் தரவுமாகவே அறிந்து வைத்துக்கொண்டு அதை கதாபாத்திரம் மூலம் ஒப்புவிப்பதை நான் குறிப்பிடவில்லை. எழுத்தாளன் தனக்குள் எழும் வினாவை விவாதமாக விரித்து நாவலுக்குள் நிகழ்த்தும்போது, தன்னையே பலநூறாக உடைக்கிறான். வாழ்வு குறித்து சில புதிய அவதானிப்புகளை கண்டடைகிறான். அதன்வழி தன்னையும் கண்டடைகிறான். அந்தக் கண்டடைவே நாவலைத் தாங்கிப்பிடிக்கிறது; தனித்துவமாக்குகிறது.
‘செம்மண்ணும் நீல மலர்களும்’ நாவல் மேற்சொன்ன இரு கேள்விகளை ஆதாரமாகக்கொண்ட ஒரு நாவல்தான். ஆனால் இந்தக் கேள்விகள் ஒரு தனி மனிதனுக்கு இருத்தல்சார்ந்த ஐயத்தை எவ்வாறு ஏற்படுத்துகிறது என ஒரு படி மேலே சென்று பேச முயலும்போது அது தன்னை மேம்பட்ட படைப்பாக்கிக்கொள்கிறது. இதன் ஆசிரியர் எம்.குமாரன் அன்றைய இலக்கியச் சூழலில் ‘மலபார் குமாரன்’ என்றே அழைக்கப்பட்டார். தனது பதினைந்தாவது வயதில் மலையாளத்தில் கதை, கவிதை, கட்டுரை என எழுதத்தொடங்கிய இவர் ஜாசின் மலாக்காவைச் சேர்ந்தவர். தனது பன்னிரெண்டாவது வயதிலேயே கல்வி கற்க கேரளம் சென்றவர் நண்பர்களுடன் இணைந்து ‘கலாமாலா’ என்ற கையெழுத்திதழ் ஒன்றை நடத்தியுள்ளார். 1957ஆம் ஆண்டு மலேசியா திரும்பிய அவர் 1960இல் தமிழில் எழுதத் தொடங்கினார். 1970இல் வெளிவந்த ‘சீனக்கிழவன்’ என்ற சிறுகதை தொகுப்பும் 1971இல் வெளிவந்த இந்த நாவலுமே அவரது புனைவு ரீதியான பங்களிப்பு.
சுதந்திரத்துக்கு பிறகு, மலேசியத் தமிழர்களுக்கு ஏற்பட்ட மிகப் பெரிய பிரச்சனை, தோட்டத்துண்டாடல். பெரும்பாலான தமிழர்கள், ரப்பர் தோட்டங்களில் வேலை செய்து கொண்டிருந்தநிலையில், இந்தத் தோட்ட துண்டாடல்களினால் அவர்களது எதிர்காலம் பெரிய கேள்விக்குறியானது. கிழக்கத்திய முதலாளிகளின் பெரிய தோட்டங்களைச் சிறிது சிறிதாகப் பிரித்து விற்றால்தான் ஆசியாவில் இருக்கும் சின்ன முதலாளிகளால் வாங்கமுடியும் என கூறப்பட்டு தோட்டங்கள் கூறு போடப்பட்டன. சின்ன முதலாளிகள் உருவாக வேண்டும் என்பதால் பல்லாயிரக்கணக்கான பாட்டாளிச் சமூகத்தினர் நிராதரவாக விடப்பட்டனர். துண்டாடல் கொடுமை அதிகரித்ததால் கூட்டுறவு மூலம் தோட்டங்கள் வாங்க வேண்டுமென்ற எண்ணம் எல்லோருக்கும் தோன்றியது. இத்தகைய ஒரு சூழலில் தமிழர்களின் அலட்சிய மனப்பான்மை, ஒற்றுமையின்மை, விழிப்புணர்வு அற்றநிலை, பிரிவினைகள், பிரிவினைகளைக் கொண்டு லாபம் அடைந்தவர்கள் என ‘செம்மண்ணும் நீல மலர்களும்’ நாவல் குறிப்பிட்ட வரலாற்றைப் பின்புலமாகக் கொண்டிருந்தாலும் இவை அனைத்தும் ஒரு தனி மனிதனின் (கன்னியப்பன்) பார்வையில் அலசப்படுகிறது.
நாவல் தொடங்கியது முதலே கொந்தளிப்பும் அவநம்பிக்கையும் நிறைந்தவனாகவே கன்னியப்பன் காட்டப்படுகிறான். தற்காலிக ஆசிரியராக இருப்பதில் நம்பிக்கை இழந்து தான் பிறந்த தோட்டத்திலேயே ஏதாவது வேலை செய்து வாழ்வை நகர்த்த எண்ணி மீண்டும் தோட்டத்திற்கே வருகிறான். அதற்கு காதலும் ஒரு காரணம். கன்னியப்பன் வீட்டில் நீலாவை மணப்பதற்கு சாதி, வசதி, குடும்ப சூழல் போன்றவை தடையாக உள்ளன. நீலாவுக்காக எல்லாவற்றையும் எதிர்க்க முனைகிறான். ஆனால், நீலா தன் அத்தை மகனை மணந்துகொண்டது அவன் காதுகளில் விழுகிறது. அந்த ஏமாற்றம் ஏற்படுத்திய வெறுமையிலிருந்து விடுபட, ஒரு பெண்ணை மணந்து அர்த்தம் தேட முயல்கிறான். அவளும் ஒரு குழந்தையைப் பிரசிவித்துவிட்டு இறக்கிறாள். மறுபடியும் வெறுமை. அப்போது அவனுக்கு வேறொரு எண்ணம் தோன்றுகிறது. தோட்டத்துண்டாடலால் பாட்டாளி மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க தோட்ட மக்களிடம் கூட்டுறவு மனப்பான்மையை உருவாக்கி ஒரு லட்சம் ரிங்கிட் திரட்டி, தோட்டத்தை வாங்க வேண்டும் என்ற பொதுநல எண்ணத்துடன் உழைக்கத் தயாராகிறான். பிரச்சாரத்தில் ஈடுபடுகிறான். பல சமூகத் தலைவர்களைப் பார்த்து ஆதரவு கேட்கிறான். அந்த லட்சியத்தைத் தன் மீது வலிந்து செலுத்திக்கொள்வதன் மூலம் தன் இருப்பை திடப்படுத்த முயல்கிறான். அவன் வாழ்வுக்கு ஓர் அர்த்தம் தேவைப்படுகிறது. எதையாவது பிடித்துக்கொண்டால் மட்டுமே தன் இருப்பு அர்த்தமாகும் என நினைக்கிறான்.
தொழிற்சங்கத்தில் சிலரும், அரசியலில் சிலரும், மாற்று கருத்துடையவர் ஒரு சிலரும், எதிலும் நம்பிக்கை இல்லாதவர் சிலருமாக இருந்த அந்தத் தோட்டத்தில் கூட்டுறவு மனப்பான்மையை உருவாக்க முடியாமல் அவன் எதிர்கொள்ளும் தோல்விகள் மனிதர்கள் மீது கசப்பை ஏற்படுத்துகிறது. அவன் நம்பிக்கையுடன் பழகிய மனிதர்களுக்கு எல்லாம் வேறொரு முகங்கள் இருப்பது கொஞ்சம் கொஞ்சமாகப் புரிகிறது. நீலாவை தவறாகக் கணித்தது போலவே தோட்ட மக்களுக்கான போராளிகள் விலைபோவதும் அவன் செயலூக்கத்தை அழிக்கிறது. இறுதியாக தோட்டத் துண்டாடலுக்கு எதிராக மக்கள் நடத்தும் மறியலுக்கு எந்த அர்த்தமும் இல்லை என வீட்டிலே முடங்கிக் கிடக்கிறான். யார் அழைத்தாலும் செல்லாமல் இருளுக்குள் மூழ்கிச்செல்கிறான்.
கு.அழகிரிசாமிக்குப் பிறகு நவீன இலக்கியம் என மலேசியாவில் உரையாடல்கள் தொடங்கிய இரண்டாவது காலகட்டத்தில் உருவான முக்கியமான எழுத்தாளர் எம்.குமாரன். அன்றை நவீன தமிழ் இலக்கியத்துடன் நன்கு பரிச்சயம் உள்ளவராக இருந்தவர். அவ்வகையில் தனிநபர் மைய அணுகுமுறையுடன் இந்த நாவலைப் புனைந்துள்ளார். கன்னியப்பன் என்ற ஒருவனை அடிப்படை அளவாகக்கொண்டு வாழ்க்கையை மதிப்பிட முயல்கிறார் குமாரன். அபத்தம் நிரம்பிய வாழ்க்கை திருப்பங்களால் இருத்தலின் அர்த்தமின்மைக்கு முன் கன்னியப்பனை நிறுத்துகிறது காலம்.
கச்சிதமான மொழிநடை எம்.குமாரனுக்கு வாய்த்துள்ளது. சாகசங்கள், வீரதீர செயல்கள், தலைமைத்துவம் என எதிலும் சோபிக்க முடியாத ஒரு பாத்திரமான கன்னியப்பன், நாவல் இறுதியில் எளிய மக்களோடு தனக்கான வாழ்வினை அமைக்க முயல்கிறான். ஆனால், மிக மோசமான புறக்கணிப்புக்குள்ளாகும் பாட்டாளி வர்க்கத்தில் ஒருவனாக அவன் இல்லை. கன்னியப்பன் பாட்டாளிகளின் நன்மைக்காகச் செயல்பட்டாலும் எந்த நிமிடமும் எதிலிருந்தும் விலகிப் போகும் சுதந்திரத்தை தன்னுள் ரகசியமாகக் கொண்டிருக்கிறான். இன்னும் சொல்லப்போனால் அவன் எதிலுமே தீவிரமானவனாக இல்லை; தான் நினைத்து நினைத்து உருகும் காதலிலும். அவன் தேடித்திரிவது தன் இருப்புக்கான அர்த்தத்தை மட்டுமே.
இப்படி தனி மனிதனின் வழி, காலத்தை அளப்பதால் இயக்கங்களின் சுரண்டல்களையும் அன்றைய சமூகத்தின் மனநிலையையும் தோட்டத்துண்டாடலின் உக்கிரத்தையும் அவரால் நாவலில் விரிவாகக் காட்ட முடியாமல் போகிறது. தனது முன்னுரையில் பாதி உண்மைகளை மட்டுமே சொல்லும் தான் ‘பாதி எழுத்தாளன்’ என்று தன்னைத்தானே வர்ணித்துக்கொண்டது நினைவுக்கு வரவே செய்கிறது. ஒரு மனிதனின் பலவீனங்களை நம்பிக்கையின்மைகளை பயங்களை முக்கியமான ஒரு வரலாற்று நிகழ்வில் காட்டிக்கொண்டே செல்லும் நாவல், ‘வாழ்வு அப்படி ஒன்றும் பெரிதாகச் சொல்ல வரவில்லை’ எனத் தன்னை முடித்துக்கொள்கிறது.
வரலாற்றுப் பின்புலம் மட்டுமல்லாமல் நீலா, அவள் தங்கை செல்லம், கன்னியப்பனின் மனைவி கமலா என நாவலில் வரும் முக்கியமான கதாபாத்திரங்கள் அனைவருமே மங்கலானவர்கள். யாருக்கும் தெளிவான பின்புலம் இல்லை. நீலாவுக்கும் கமலாவுக்கும் நிகழும் மரணம், நீலாவின் தங்கையும் அவள் கணவனால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுவது என அடுத்தடுத்த காட்சிகள் கன்னியப்பனுக்கு எத்தகைய விளைவுகளை உருவாக்குகின்றன என பேச முயல்கிறதே தவிர அந்தப் பெண்களின் மனநிலையைப் பதிவு செய்யவில்லை. கன்னியப்பனுக்குப் பிறக்கும் குழந்தை, அவனது பெற்றோர்கள், உடன் வந்த நண்பர்கள் என எல்லோருமே நாவலின் (குறுநாவல் என சொல்லிக்கொண்டாலும்) கச்சிதத்தன்மையால் பலவீனமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றனர்.
லட்சியவாதத்தையும் (idealism), கற்பனாவாதத்தையும் (romanticism), மிகை உணர்ச்சிகளையும் (sentument) நம்பி எழுதப்பட்ட மலேசிய நாவல்களுக்கு மத்தியில் 1971ல் எழுதப்பட்ட ‘செம்மண்ணும் நீல மலர்களும்’ அதன் இருத்தலியல் (existentialism) தன்மையினால் தனித்துவம் பெறுகிறது. எம்.குமாரன் தொடர்ந்து எழுதியிருந்தால் தரமான புனைவுகளைக் கொடுத்திருக்க முடியும்.
மலேசியத் தமிழ் இலக்கியத்திற்கு அவர் நுழைவு முக்கியமானது. நான் அவரை ‘கோமாளி’ கேலிச்சித்திர இதழின் ஆசிரியர் என்ற வகையில் மட்டுமே அறிந்திருந்தேன். அவ்விதழ் 1985இல் மிகப்பிரபலம். கோமாளி அக்காலக்கட்டத்தில் நிறைய கார்ட்டூனிஸ்டுகளை உருவாக்கியது. அதன் பின்னர் ‘குடும்பம்’ எனும் இதழை நடத்தினார். 1970களில் அவரது இலக்கியச் செயல்பாடுகள் தீவிரமாக இருந்தன. முக்கியமாக மலாயாவில் பிறந்த 52 எழுத்தாளர்களைப் பற்றியும் எழுத்துக்கள் பற்றியும் நீண்ட அறிமுக வரிசை எழுதியுள்ளார். முக்கியமாக ‘இலக்கிய வட்டம்’ சிற்றிதழ் தோற்றுனர்களில் ஒருவர். 1985இல் சுந்தரராமசாமியை மலேசியாவுக்கு அழைத்து வந்த இலக்கியச் சிந்தனை குழுவிலும் எம்.குமாரன் இயங்கியது குறிப்பிடத்தக்கது.
முழுமையாக இலக்கியத்தை விட்டு வெளியே நின்றவரை 2011இல் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நாவலை வாசித்திருந்ததால் ஒரு முக்கியமான எழுத்தாளரிடம் பேசிக்கொண்டிருக்கிறேன் என்ற எண்ணம் அப்போதே இருந்தது. உரையாடலில் அவர் மிக ஆழத்தில் பதுக்கி வைத்திருந்த எழுத்தாளர் மெல்ல மெல்ல எழும்பி வெளியே வந்தார். மலேசிய இலக்கியச் சூழலில் நிகழும் அரசியலும் போலித்தனங்களும் அவரை வெறுப்படைய வைத்திருந்தது. நட்பு உருவாகி, அவர் வல்லினம் விழாவில் கலந்துகொண்டபோது ‘பல ஆண்டுகளுக்குப் பிறகு இலக்கியச் சூழலுக்குள் நுழைகிறேன்’ என்றார். அது மெல்ல வளரும் என்ற நம்பிக்கை எனக்கு சந்தோசத்தைக் கொடுத்தது. 2012ல் அவர் மரணமடையும்வரை அந்த சந்தோசமும் நம்பிக்கையும் என்னிடம் தொடர்ந்துகொண்டுதான் இருந்தது.
தொடர்புடைய பதிவுகள்: