செலாஞ்சார் அம்பாட் : புனைவின் துர்க்கனவு

நாவல் எனும் கலைவடிவம் குறித்து விரிவாகவே தமிழ் இலக்கியச் சூழலில் பேசப்பட்டுவிட்டது. நாவல் என்பது கயிறு திரிப்பதுபோல முறுக்கிச் செல்வதல்ல; அது கூடை முடைவது போன்ற பின்னல் என்ற ஜெயமோகனின் உவமை நாவலின் கலைவடிவம் குறித்து எளிமையாகப் புரிந்துகொள்ளும் சித்திரம். இது நாவலின் வடிவம் குறித்த சட்டகமல்ல. நாவலின் சாத்தியம் குறித்தது. எளிமைப்படுத்தியும் குறுக்கியும் வாழ்வின் சிக்கலை நாவலில் காட்டுவதென்பது நாவல் கலை கொடுத்துள்ள சலுகைகளை ஓர் எழுத்தாளன் எவ்வகையிலும் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதே. சிறுகதைகளுக்கே உரிய ஒருமையும்  நாவலில் இருக்க வேண்டிய உள்இழைகளும் கொண்ட குறுநாவல்கள் மலேசியாவில் நாவல்களாக பல காலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ‘செலாஞ்சார் அம்பாட்’ அதில் ஒன்று.

எழுத்தாளர் கோ.புண்ணியவானின் இந்த நாவல் 1983இல் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்டுள்ளது. தோட்டத்தை விட்டு பிரிந்து செல்லும் பாட்டாளி மக்களின் மனநிலையில் இருந்து தொடங்குகிறது நாவல். வெளிநாட்டு நிறுவனம் ஒன்றால் அம்மக்கள் வாழ்ந்த தோட்டம் அதிக விலைக்கு வாங்கப்பட்டு அங்குத் தொழிற்சாலையும் கட்டப்படுவதால் தோட்டத்தை நம்பி வாழ்ந்த அவர்களை நிர்வாகம் காலி செய்யச் சொல்கிறது. தொழிற்சாலை கட்டும் பணிக்கும் இந்தோனேசிய தொழிலாளர்கள் குறைந்த கூலிக்கு வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள். வேறு தோட்டங்களுக்கோ அல்லது தொழிற்சாலைகளுக்கோ போக முடியாத நாற்பது பாட்டாளிகளும் சிவப்பு அடையாள அட்டை உள்ளவர்கள். வேலை கிடைப்பது சாத்தியமற்றது. எனவே கங்காணியின் ஆலோசனையில் ‘செலாஞ்சார் அம்பாட்’ என்ற இடத்தில் அமைந்துள்ள செம்பனைக் காட்டுக்குள் வேலை செய்து வாழ்வை ஓட்ட லாரியில் புறப்படுகிறார்கள். விடுமுறையும் சம்பளமும் இல்லாத கொத்தடிமைகளாக எந்த வசதியும் சுகாதாரமும் இல்லாத வாழ்க்கை அவர்களுக்கு வாய்க்கிறது. பத்து மணி நேர உழைப்புக்கு மருந்தாக சாராயம் நிவாரணியாகிறது. அடி, பாலியல் வல்லுறவு, மரணம், எனத் தொடரும் கொடுமையில் இருந்து ஒரு பெண் தப்பித்துச் சென்று எப்படி தன் சனங்களை மீட்டாள் என நாவல் முடிகிறது.

சில வருடங்கள் நடக்கும் இந்தச் சம்பவத்துக்குள் சிவப்பு அடையாள அட்டையினால் ஏற்படும் விளைவுகள், நீல நிற அடையாள அட்டை கிடைப்பதில் உள்ள சிக்கல்கள் ஓர் இழையாகப் பேசப்படுகிறது. இடையில் ரப்பர் தோட்ட வாழ்க்கையின் நினைவுகள் வந்துபோகின்றன. நாவல் என்பது அதன் மையக்கருவைச் சார்ந்த அனைத்தையும் தொகுத்து ஒட்டுமொத்த பார்வையையும் வழங்க வேண்டும். அப்படி தொகுக்க ‘செலாஞ்சார் அம்பாட்’ மையக்கருவில் மிகப்பெரிய வாய்ப்புண்டு. உதாரணமாக, குடியுரிமை கொள்கைகளில் இருந்த தளர்வுகள் மெல்ல அகற்றப்பட்டு அதில் கொண்டுவரப்பட்ட நெருக்குதல்கள் குறித்த விரிவான சித்திரம், சிவப்பு மற்றும் நீல அடையாள அட்டையினால் மக்களுக்கு அன்றாட வாழ்வில் ஏற்பட்ட தாக்கங்கள், மலாய்க்காரர்களை நிலவுடமையாளர்களாக மாற்றவும் கம்யூனிஸ்டுகளின் பதுங்கு இடங்களை அழிக்கவும் உருவான பெல்டா நிலத்திட்டத்தின் நோக்கு, பின்னடைந்துள்ள மலாய்க்காரர்கள் முன்னேற்றம், நாட்டின் பொருளாதார முன்னேற்றம் என அரசாங்கம் உருவாக்க விரும்பிய அடிப்படை மாற்றங்கள் குறித்த தர்க்கங்கள் வலைபோல படர்ந்து விரிந்திருக்க வேண்டிய கருவை அவர் சுருக்கி எழுதியுள்ளார். இந்தச் சுருக்கம்தான் நாவலுக்கு எதிரான சொல்.

தொழில்நுட்பக் குறைபாடு

‘செலாஞ்சார் அம்பாட்’ குறுநாவல் என்ற அளவிலும் ஒரு பலவீனமான புனைவுதான். அரை நூற்றாண்டுகளாக இலக்கியத்தில் இயங்கும் ஒருவர் ஆரம்பநிலை எழுத்தாளன் செய்யக்கூடிய தவறுகளை நாவல் நெடுகிலும் படரவிட்டுள்ளது வாசிப்பில் ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. முக்கியமாக ஆசிரியர் தலையீடு. நாவலில் ஏறக்குறைய 28 பக்கங்களை வாசித்த பின்னர்,

‘காலங்காலமாய் இதுதான் வாழ்க்கை சூழல். இதுதான் உணவு. இதுதான் உடை என்று அதிகார வர்க்கம் இந்த சனங்களைப் பழக்கப்படுத்தி வைத்திருக்கிறது. அதற்கு மேலான வாழ்க்கை நிலையை எட்டிப்பார்க்கக்கூட சிந்தனை எழாதவாறு ஆடுமாடுகளாய் அடைத்துப்போட்டு வளர்க்கப்பட்ட சனக்கூட்டம். இப்போது அவர்களுக்கு இருந்த இயல்பு வாழ்க்கை களவாடப்பட்டிருந்தாலும், அதன் மூல காரணம் என்ன என்ற அறிவு அவர்களுக்கு இல்லாமலாக்கியதும் இந்த அதிகார வர்க்கம்தான்.’ என்று அதுவரை வாசித்து வாசகன் உள்வாங்கிய உணர்வை சுருக்கித் தருகிறார்.

இடையிடையே புகுந்து தன்னுடைய தாளமுடியாத கோபத்தையும் கொடுக்கிறார். 

‘அவரவரின் உடமைகள் இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டனர். பொல்லாத உடமைகள்! நிலப் பத்திரமும், கட்டுக்கட்டாய் பணமுமா இருக்கிறது?’ (பக் 31)

வாசகனுக்கு தானே முன்வந்து மேலும் விரிவான பார்வையைக் கொடுக்கிறார். 

‘எப்போதும்போலவே தன்னைக் காட்டிக்கொள்ள வேண்டிய அவசியமில்லாமல் திரைக்குப் பின்னால் இருந்தான் தவுக்கே. தன்னை பாதுகாத்துக்கொள்ளும் தந்திரம் தெரியாதவனா என்ன தவுக்கே? அப்புறம் தமிழனுக்கு தவுக்கேவாக இருப்பதில் என்ன அர்த்தம்?'(பக் 112)

மலேசியாவுக்கென பிராந்திய சொல்லாடல்கள் உள்ளன. ஆனால் அச்சொல் வசனங்களில் வருகிறதா அல்லது எழுத்தாளரின் நாவல் சித்தரிப்பில் வருகிறதா என்பது முக்கியம். சு.வேணுகோபால், பூமணி போன்ற எழுத்தாளர்கள் கச்சாவான மொழிநடையில் புனைவுகளை எழுதுவதுண்டு. அவை நாவல் முழுக்கவே சொல்லப்படும் வாழ்வுடன் ஒன்றி வரும். ஒருவகையில் அம்மொழியே அவர்கள் காட்டும் வாழ்வை நெருக்கமாக்கும். கோ.புண்ணியவான் நாவலை நேர்த்தியான மொழியிலேயே எழுதியுள்ளார். கதாசிரியன் விவரிப்பில் ஜாமாங்கொட்டாபுழு ஊர்ந்து உடலில் ஏறுவதுபோல, மூலைகளில் குமுச்சிவைக்கப்பட்ட துணி ஈரங்கோத்து மொச்சு வாடை அடித்துக்கொண்டிருந்தது என்பன போன்ற பிராந்திய சொல்பிரயோகங்களின் அவசியம் புரியவில்லை. மலேசியாவுக்கென்ற பிராந்திய சொற்களைப் பயன்படுத்த வேண்டாம் எனச் சொல்லவில்லை. எழுத்தாளன் மொழியை ஒரு கலை சாதனமாகக் கொண்டு இயங்குபவன். அவனுக்கு மொழி ரீதியான தெளிவு அவசியம். யாருடைய நோக்கிலிருந்து கதை சொல்லப்படுகிறது என்பதை ஒட்டியே நாவலின் மொழி தீர்மாணிக்கப்படுகிறது. செலாஞ்சார் அம்பாட் நாவலைப் பொறுத்தவரை நாவலாசிரியரே கதைச்சொல்லி. அவர் செறிவான மொழியிலேயே நாவலைக் கொண்டுச்செல்கிறார். அவரது வசனங்களில் வட்டாரச் சொற்கள் தாராளமாகவே வந்துள்ளன. அம்மக்களின் மொழியிலேயே  உரையாடல்கள் சிறப்பாக எழுதப்பட்டுள்ளன. அப்படியிருக்க ஆசிரியரின் சித்தரிப்புகளில் வலிந்து மலேசியத்தன்மையை புகுத்துவதாக எண்ணிக்கொண்டு பிராந்திய சொற்களை கையால்வது நாவலில் ஒன்றாமல் விலகியுள்ளன.

இவை பெறும் குற்றமல்ல. தொழில்நுட்பக் கோளாறுகள்தான். ஆனால் பல ஆண்டுகளாக இலக்கியத்தில் இயங்கும் ஒருவர் புனைவில் இருப்பது சங்கடமானது.

தகவல் துல்லியம்

பொதுவாகவே புனைவுகளில் தகவல் பிழைகள் வருவது இயல்பு. ஒரு தகவல் என்பது புனைவில் எவ்வளவு செல்வாக்கு செலுத்துகிறது என்பதை ஆராய்ந்தே அதை விமர்சனமும் செய்ய வேண்டியுள்ளது. ‘செலாஞ்சார் அம்பாட்’ நாவலைப் பொறுத்தவரை அதன் பிரதான கதை செம்பனைத் தோட்டத்தில் நடக்கிறது. செம்பனைத் தோட்டத்தில் சில ஆண்டுகள் வாழும் ஒரு சமூகம் அந்த நிலத்தை எவ்வாறு அறிந்து வைத்துள்ளனர் என்பதும் அந்த நிலத்தில் எவ்வாறு வாழப் பழகிக்கொண்டனர் என்பதும் புனைவின் வழி வாசகன் அடையவேண்டிய அனுபவம். நாவலில் அவ்விடங்கள் பலவீனமாகவும் தவறாகவும் இருப்பதே அந்த வாழ்வு வாசகனுக்கு அந்நியமாகத் தோன்ற வைக்கிறது.

முதலாவது, செம்பனைகள் எல்லா காலங்களிலும் குலைகள் தள்ளுவதில்லை. மாதத்திற்கு சில சமயம் இருமுறைகூட குலை அறுப்பு நடக்கும். இந்த மக்கள் வெவ்வேறு பகுதிகளுக்கு குலை அறுக்கச் சென்றிருந்தாலும் வரிசையாக எல்லா மரங்களிலும் குலைகள் கிடைக்காது. ரப்பர் மரம்போல அடுத்தடுத்து மரம் சீவிச்செல்வது செம்பனை தோட்டத்தில் சாத்தியமில்லை. மேலும் ஒரு குலை அதிகபட்சம் 80 கிலோ வரைக்கும் கூட கனக்கும். (நாவலில் 100 கட்டி என சொல்லப்பட்டுள்ளது. ஏறக்குறைய 60 கிலோ) அப்படி இருக்க ஒரு பழத்தை நகர்த்தவே பெரும்பாடு படவேண்டும். மேலும் குலையை மறைத்துக்கொண்டிருக்கும் மட்டையை வெட்டுவது சாதாரணமல்ல. அலக்கையில் பொருத்தப்பட்ட கத்தியைத் தவறாக உபயோகித்தால் மட்டை அலக்கையில் சருக்கிக்கொண்டு வரும். அப்போது அலக்கையை வீசிவிட்டு ஓடுவர். இல்லாவிட்டால் செம்பனை மட்டையில் உள்ள முட்கள் கைகளை குத்திக் கிழிக்கும். இது புதிதாக செம்பனை தோட்டத்தில் பணி செய்பவர்களுக்கு நடப்பதுதான். நாவல் இந்த நுட்பத்தைத்தான் கேட்டு நிற்கிறது.

கோ.புண்ணியவான் காட்டும் செம்பனைக்காட்டு காட்சிகள் மிக மேலோட்டமானவை. போலியானவையும்கூட. செம்பனைகளை பைகளில் இரண்டு இரண்டாக வைத்து அதை காண்டாவில் தூக்கிச் சுமந்து வருவதெல்லாம் சாத்தியப்படாத ஒன்று. அதன் கனம் அசாத்தியமானது. கூரிய முட்கள் கொண்ட கனமான செம்பனைகளை எந்த சாக்குப்பையும் தாங்காது. மேலும் அதன் குலைகள் காண்டாவின் இருபுறமும் சமத்தாக இருக்க பழங்கள் ஒரே கனத்தில் இருப்பதில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக ஒரே மரத்தில் குலைகளை சேகரித்து காண்டாவில் கட்ட அது தென்னை மரமும் இல்லை. இவையெல்லாம் ஆசிரியரின் அறியாமையை மட்டுமே காட்டுகிறது. வாழ்வில் சிறு உளி பிடித்து ரப்பர் மரம் சீவியவர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்துள்ள மிகப்பெரிய மாற்றம் எளிய வர்ணனைகளில் கடக்க ஆசிரியரின் போதாமையே காரணம்.

இரண்டாவது, ஒரு நிலத்தில் வாழ்பவர்கள் அந்நிலத்தில் ஜீவிக்க சில ஏற்பாடுகளைச் செய்து கொள்வார்கள். இந்த நாவலில் ஒன்பதாவது பாகத்தில் சில மாதங்கள் கடந்துவிட்டன என்று ஒரு தாவல் நடக்கிறது. அப்படி சில மாதம் கடந்த பின்னர் முனியம்மா ஒருவனால் தாக்கப்படுகிறாள். அவளது காயத்துக்கு மருந்திட ‘கப்பால் தெர்பாங்’ இலையை அம்மக்கள் ஞாபகப்படுத்துகின்றனர். யாருக்கும் அது அந்தத் தோட்டத்தில் அவ்விலை உள்ளதா என்றுகூட தெரியவில்லை. இம்மக்கள் பட்டணத்தில் இருந்து வந்தவர்கள் இல்லை. பல ஆண்டுகள் தோட்டங்களில் வாழ்ந்தவர்கள். ஆனால் தங்கள் இருப்பிடத்தைச் சுற்றி எந்தச் செடிகொடிகளையும் அவர்கள் பராமரிக்கவில்லை. வாழ்வதற்கான சூழலை உருவாக்காமல் ஆடு மாடுகள்போல வேலை செய்துவிட்டு, உண்டு, குடித்து, புணர்ந்து, உறங்குவதுமாகவே நாவல் முழுவதும் அம்மக்கள் வந்து போகின்றனர்.

கோ.புண்ணியவான் தனக்கே முற்றிலும் அந்நியமான நிலத்தை புனைவுக்குள் கொண்டு வருகிறார். அப்படிக்கொண்டு வரும்போது அபாரமான கற்பனையாற்றல் தேவைப்படுகிறது. துல்லியமான அனுபவத்தை அவர் தனக்குள் உருவாக்கிப்பார்க்கும் ஆற்றலைப் பெற்றிருக்க வேண்டும். நுண்தகவல்களே வாசகனிடம் நம்பகத்தன்மையைப் பெற்றுத்தரும். இவையனைத்தையும் புனைவுக்குள் கொண்டு வர கூடுதலான தேடுதல் அவசியம். அவர் அதற்கு மெனக்கெடவில்லை. 170 பக்க நாவலில் ஒரு இடத்தில்கூட செம்பனை பழத்தின் வர்ணனை இல்லை. ரப்பரிலிருந்து செம்பனைக்கு மாறும் ஒரு சிறுவன் அந்தப் பழத்தை உரித்துப் பார்த்திருக்க மாட்டானா? அதில் எண்ணெய் எங்கே உள்ளது எனத் தேடியிருக்க மாட்டானா? அந்த எண்ணெய்யில் அவர்கள் சமைத்தார்களா? அவர்கள் தினசரி வாழ்வுக்கு அந்த பழத்தில் கிடைக்கும் எண்ணெய் எந்தப் பலனையும் கொடுக்கவில்லையா? செம்பனை மர வரிசையிலும் செம்பனை மரத்தின் மேலும் பற்றிப் படரும் செடிகளே இல்லையா? குலை வெட்டுவதை தாண்டி செம்பனையைப் பராமரிக்க வேறு வேலைகள் எதுவும் நடக்கவில்லையா? ரப்பர் காட்டுக்கும் செம்பனை காட்டுக்கும் இடையில் சீதோசன மாற்றங்கள் இல்லையா? என்ற பெரிய கேள்வியில் இருந்து அவ்வளவு மெல்லிய மூசாங்கின் காலடித்தடம் சேற்றில் பதியுமா? எனும் சிறிய கேள்வி வரை நாவலில் ஒன்ற முடியாமல் தொடர்கிறது.

கோ.புண்ணியவான் தன் கற்பனையில் ஒரு காட்டை உருவாக்கி அதன் இருளை வாசகனிடம் கடத்தப் பார்க்கிறார். உறவுகளிடம் உள்ள உணர்ச்சிகளை மிகையாக்கியும் மனித வதையைக் காட்சிப்படுத்தியும் வாசகனை பதற்றப்படவைக்க முயல்கிறார். மானுடத்தின் உயிர் இச்சையைப் படரவைத்து சோகத்தை ஏற்படுத்துகிறார். ஆரம்ப கட்ட வாசகனுக்கு அது போதுமானதாகவும் இருக்கலாம். ஆனால் தேர்ந்த இலக்கிய வாசகன் இவையெல்லாம் எழுத்தாளனின் போதாமைகள் என்று எளிதில் கண்டு கொள்வான்.

வரலாற்றுப் பிழை

கோ.புண்ணியவான் தன் முன்னுரையில் இது கதையல்ல உண்மை வரலாறு எனச் சொல்லியுள்ளார். பின்னர் அவர் எழுதியதில் வரலாற்றுப்பிழை இருந்ததால் இது வரலாற்று நாவலல்ல புனைவு மட்டுமே என தன் வளைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். நிச்சயமாக கோ.புண்ணியவான் நூலுக்கு எழுதிய முன்னுரையும் புனைவில் இணையாது என நம்புகிறேன். அசோகமித்திரன் ‘ஒவ்வொரு காலக்கட்டத்திற்கும் அக்காலக்கட்டத்து கதைகளும் நாவல்களும்தான் மிக மிக உண்மையான வரலாற்றுச் சான்றுகள்’ எனச் சொல்வார். அவர் வரலாற்று நூலைவிட நாவலில் அதற்கான சாத்தியம் அதிகமெனக்கூற காரணம் புனைவு எழுத்தாளன் ஒரு தருணத்தை மறுமுறை நிகழ்த்திகாட்டும்போது அதை ஒட்டிய மேலும் கூர்மையான காட்சிகளும் பல திசை நியாயங்களும் வந்து சேர்கின்றன. வரலாற்றை எடுத்துக்கொண்டு அதை புனைவாக்க எழுத்தாளனுக்கு எல்லா சுதந்திரமும் உண்டு. அதில் கேள்வி எழுப்ப யாருக்கும் உரிமை இல்லை என்பதை அறிவேன். ஆனால் இந்நாவலை வாசிக்கும் ஒருவருக்கு புண்ணியவான் தன் முன்னுரையில் கூறியுள்ள கருத்துகளின் அடிப்படையில் சிலவற்றைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

தவறு 1: கோ.புண்ணியவான் தன் முன்னுரையில் கூறியுள்ளதன் படி செலாஞ்சார் அம்பாட் சம்பவம் 1972இல் நடக்கவில்லை. 1983இல் நடந்தது.

தவறு 2: இச்செய்தி முதன்முறையாக தமிழ் ஓசையில் வரவில்லை. ஸ்டார் நாளிதழில் 2.7.1983இல் வெளிவந்தது.

தவறு 3: இந்தத் தோட்டத்தின் உண்மை நிலையை வெளி உலகத்திற்குக் கொண்டு வந்தவர் பேராசிரியர் ராமசாமி. பெ.ராஜேந்திரன் அல்ல. பேராசிரியர் ராமசாமி மூலமே இத்தகவல் ஸ்டார் நாளிதழுக்குச் சென்று பின்னர் தமிழ் நாளேடுகள், அரசியல் கட்சிகள் என பல தரப்புகளும் தலையிட்டுள்ளன.

இந்த மூன்று தவறான கருத்துகளையும் பதிவிடும் முன்னர் கோ. புண்ணியவான் கொஞ்சம் வரலாற்றை ஆராய்ந்திருக்கலாம். இதற்காக ராஜேந்திரனை நேர்காணல் செய்ததாக கோ.புண்ணியவான் சொல்கிறார். நாளையே இந்நாட்டில் கொரோனா இல்லாமல் போனாலும் அதற்கு தான்தான் முழு முதற்காரணம் எனச்சொல்ல தயங்காத ஒருவரிடம் பெறப்பட்ட பொய்களை எடுத்துக்கொண்டு உருவாக்கப்பட்ட இந்த நாவலுக்கு இலக்கியத்தில் என்ன இடம் கிடைத்துவிடப்போகிறது? புண்ணியவான் உண்மையில் பேராசிரியர் பி. ராமசாமியைத்தான் நேர்காணல் செய்திருக்க வேண்டும். அல்லது தனது நோக்கம் வரலாறல்ல புனைவுதான் என்றால் ராஜேந்திரன் போன்ற தன்னை மையப்படுத்தி தவறான தகவல்களை வழங்குபவர்களை அணுகியிருக்கக் கூடாது.

எல்லாவற்றுக்கும் மேலாக இம்மக்கள் செம்பனைத் தோட்டத்தில் பணியாற்ற அழைத்துச்செல்லப்படவில்லை. அடர்ந்த காடுகளை அழிக்கவும், களைகளை அகற்றவும், செம்பனைக் கன்றுகளை நடவும் கூலிகளாகப் பயன்படுத்தப்பட்டனர். தோட்டத்தை உருவாக்கியபின் அதை ஒப்படைப்பதே இவர்கள் பணி.

உண்மைநிலை இவ்வாறு இருக்க கோ.புண்ணியவான் செம்பனைத் தோட்டத்தில் குலைகளையும் மட்டையையும் வெட்டி வேலை செய்தார்கள் எனச் சொல்வதையும் செம்பனைக் காடுகளுக்குள் நுழைந்து முனியம்மா (உண்மையானவர் பெயர் சரஸ்வதியம்மாள்) தப்பினாள் எனச் சொல்வதையெல்லாம் புனைவுக்கான சுந்ததிரம் என மட்டுமே எடுத்துக்கொள்ள முடியாது. அப்படி கோ.புண்ணியவான் புனைவுக்காக எழுதினேன் எனச்சொன்னால் அவரை வரலாற்று மோசடி செய்தவர் என்றே வர்ணிக்க முடியும். தமிழர்கள் கொத்தடிமைகள் ஆக்கப்பட்டு எந்தக் கூலியும் இல்லாமல் நிலத்தைப் பண்படுத்தி பெரும் லாபம் ஈட்டும் வளமாக மாற்றி, அதில் எந்தப் பலனும் அனுபவிக்காமல் இருந்துள்ளதற்கான சான்றுதான் செலாஞ்சார் அம்பாட். நிலத்தை உருவாக்கியவன் அடுத்தடுத்து வெவ்வேறு நிலங்களை மேம்படுத்த அடிமைகளாகப் பிடித்துச்செல்லப்படும்போது அவன் பண்படுத்திய நிலம் அவனுக்கு உரிமையில்லாமல் போனது ஏன் என படைப்பாளனாக முன்வைக்க வேண்டிய கேள்வியல்லவா?

முதல் தலைமுறையில் இந்நாட்டில் காடுகளை வெட்டி வளப்படுத்தியவர்கள் போல பெல்டாவில் குடியமர்த்தப்படு பவர்களுக்காகப் பாடுபட்ட ஒரு சமூகத்தை குலை வெட்டும் தொழிலாளியாக மாற்றியுள்ளது கோ.புண்ணியவானின் அறியாமை. ஒரு மக்களின் துன்ப வரலாற்றை தன் புனைவு போதாமையாலும் தேடல் சோம்பலினாலும் பொய்யானவர்களின் வாக்குமூலத்தாலும் கோ.புண்ணியவான் மொண்ணையான குறுநாவலை வடிப்பாரென்றால் இப்புனைவு அதிகாரத்துக்கு விசுவாசமானது. யாருடைய அதிகாரத்துக்கு என்பதை தெளிந்த வாசகர்கள் சொல்லக்கூடும்.

துணை நூல்கள்:

  • மலேசியத் தோட்டத் தொழிலாளர் வாழ்வும் போராட்டமும் – பேராசிரியர் பி.ராமசாமி
  • Malaysia Today – Tan Chee Khoon
(Visited 463 times, 1 visits today)