கழுகு: கடிதம்

கழுகு சிறுகதை

மிஸ்டிக் ஆன கதை.

ப்ரமாதம்.

கழுகாக தோற்றம் தரும் அமிர்தலிங்கத்தில் துவங்கி…பிணங்களை உண்ண கழுகு போல காத்திருக்கும் நிலைக்கு
சிவா வருவது (அல்லது வரப்போவது) வரை…

பித்து நிலை யதார்த்த நிலை இரண்டுக்கும் இடையே பயணிக்கும் மிஸ்டிக் ஆன கதை.

கால ரூபன் என ஒரு நொடியும் பித்தன் என மறு நொடியும் மாயம் காட்டும் அந்த ஆளுமை பித்தனா ஞாநியா என்று இனி சிவாவின் ஆழ்மனம் காத்திருக்கும்

பிணம் தின்னி கழுகு போல.

நிகழ்வு
உறவு
உணர்வு என இன்றில் துவங்கி

வரலாறு
மானுடம்
ஆத்மீகம்

என என்றும் உள்ள ஒன்றுடன் விவாதிக்கும் நல்ல கதை.

கடலூர் சீனு

 

தலைப்பை வாசித்ததும் செயல்பாட்டிலிருக்கும் ‘பேய்ச்சி’ சர்ச்சைகள் தொடர்பாக மறைமுகமான சாடல்கள் நிறைந்த கதையாக இருக்குமோ என்ற சந்தேகம் இருந்தது. கதையை வாசித்து முடிக்கையில் மனுசனால் எப்படித்தான் இந்நேரத்தில் இப்படியொரு கதையை யோசிக்க நேர்ந்தது என வியந்து போனேன்.

நவீனின் எழுத்தில் என்னை மிகவும் கவர்வது அவருடைய நகைச்சுவை உணர்வே. இதுவரை அவர் தந்துள்ளவற்றுள் அதிகமாக சிரிக்கவைத்த கதையாக கழுகை முதன்மைப் படுத்தலாம். சத்தமிட்டு சிரித்துவிட்டேன் போங்க.

ஓர் ஆவணப்படம் என்பது போரடிக்கும் சரித்திர செய்திகளை சொல்வதை விட…சஸ்பென்ஸான சமாச்சரங்களை சொல்வதே சிறப்பு என்ற கூரிய சிந்தனையுடைய முதியவர் ஒருவர் தனது உடல் ரீதியான பலவீனங்களை உணர்ந்து அதனை மறைக்க, இல்லாத வேறொரு குறையை முன்வைத்து கடைசி காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறார்.

சுயமாக எழுந்து மலக்கூடம் கூட செல்லமுடியாதவர் அறிவார்ந்த முறையில் பேசினாலோ நடந்துகொண்டாலோ யாருமே ஒரு பொருட்டாக மதிக்கப் போவதில்லை. மாறாக எடுத்தெறிந்து பேசி மனதை புண்படுத்தி விடலாம். பிறகு அச்செயலை நினைத்து அவர்களும் மன உளைச்சலடையாம் என்பதற்காக தான் ஒரு மனநோயாளி என்று அனைவரையும் நம்ப வைத்துள்ளார் போலும் (முதிர் கழுகு) அமிர்தலிங்கம்.

இக்கதையின் அடிப்படை சாரம் என நான் கருதுவது…இயலாமை நிலையில் உள்ளவர்கள் தங்களை சுற்றி ஏற்படுத்திக்கொள்ளும் மிகையான கற்பனை உலகம் என்பதைத்தான். இயலாமை நிலையின் தாக்கம் தன்னை மிக பிரமாண்டமாக ஆக்கிக்கொள்ளும். அந்த நம்பிக்கையே அவனை ஒரு வாயிலாக வாழ வைக்கும் என்ற கருவை நவீன் மிகவும் எதார்த்தமாக சித்தரித்துள்ளார்.

நான்கே கதாபாத்திரங்கள். நம்பகமான இணை தகவல்கள்/கூற்றுகள். கதைக்களமான அவ்வீட்டை நாமும் பார்க்க இயலும்படியான காட்சியமைப்பு. எதிர்பாராததொரு முடிவு. கதையை வலுப்படுத்திய இடமும் அம்முடிவுதான்.

சிகரம் அவர்களின் ‘கொலைச் சேவல்’ சிறுகதை தொகுப்பின் ஒரு கதையில் வரும் ஸ்ரீஸ்ரீ என்ற நிருபரை இக்கதை சற்றே நினைவூட்டினாலும் முற்றிலும் வேறொரு பாணியில் ஒரு நல்ல கதை கழுகு என்பதில் ஐயமில்லை.

வாழ்த்துகள் நவீன். தொடரட்டும் கதைகள்.

‘மகிழம்பூ’ கலைசேகர்

(Visited 139 times, 1 visits today)