பேய்ச்சி: கதையல்ல வாழ்க்கை

நீண்ட நாட்களுக்குப்பிறகு ஒரு நாவலைக் கைகளில் ஏந்தி அதை வைக்க மணமில்லாமல் வாசித்து முடித்தேன்.

பிரபஞ்சன் சொல்வார் – கதை என்பது கதையே அல்ல, கதைவிடுவதும் அல்ல, நிகழ்ச்சிகளின் தொகுப்பும் அல்ல.. நிகழ்விற்குக் கீழே நிகழ்விற்கு வெளிப்படையாகத் தெரியாமல், நிகழ்வோடு அந்தரங்கமாக ஒரு நிகழ்வு நிகழ்கிறதல்லவா, அதுதான் கதை.

பேய்ச்சிக்கு இது பொருந்தும்.

பேய்ச்சி. இது கதையல்ல. இங்கு நம்மவர்களில் பலர் கடந்துவந்த வாழ்க்கைப் பயணம். ஒவ்வொரு ஏட்டின் சம்பவமும் என் கண்முன் எதோ ஒரு நிகழ்வினை ஒத்திகை பார்த்துக்கொண்டே நகர்ந்துகொண்டிருந்தது.

நாவலாசிரியர் நவீன் இக்கதையினை வடிக்க எடுத்துக்கொண்ட உழைப்பு என்னை பிரமிக்கவைக்கிறது. மூலிகை மருத்துவமாக இருக்கட்டும், பச்சிலைகளின் மகிமைகளாக இருக்கட்டும். செம்பனை மரம் நடுவதில் நிலம் நீர் பாதிப்பாக இருக்கட்டும் ரப்பர் தோட்ட மண்ணின் மகிமையாக இருக்கட்டும். குருவி கோழி சேவல் ஆங்சா நாய் போன்ற பிராணிகளாக இருக்கட்டும் ஒவ்வொன்றையும் மிக ஆழமாக அதனதன் தன்மைகளை ஆராய்ந்து உள்வாங்கி அழகான அதேவேளையில் எளிமையான தமிழில் அனைவரிடமும் எளிதில் சென்று சேரும்படி இந்நாவலை நம்மிடம் ஒப்படைத்திருக்கின்றார்.

கதை, நிகழ்வுகளையும் காட்சிகளையும் படம்பிடித்துக் காட்டிக்கொண்டே செல்வதுதான். 1981, 1999 இவை இரண்டும்தான் அதன் அத்தியாங்களின் தலைப்பு. கொஞ்சம் கவனச்சிதறல் ஏற்பட்டாலும் கூட வாசகனுக்கு கதைபுரியாமல் போகநேரிடலாம். காரணம் ஒரு அத்தியாயத்தில் அவன் இளைஞன். இவள் அம்மா. மற்றொரு அத்தியாயத்தில் அவள் குழ்ந்தை. இவள் குமரி. அவன் பிறக்கவில்லை இவன் சிறுவன். ராமசாமி யார் என்றே, பாதி நாவல் வாசித்தப்பின்புதான் புரியவந்தது. அதன் பின் தமிழ்நாட்டில் நடந்த சம்பவத்தோடு தொடர்புபடுத்திக் கதையோடு ஐக்கியமாக முடிகிறது.

ஒரு நாவலை வாசிக்கின்றபோது, அது உடைப்பட்டு உடைப்பட்டு வெவ்வேறு தருணங்களை/ சம்பவங்களைச் சொல்லிக்கொண்டே ஒரு மையப் பகுதியில் வந்து நிற்கிறபோது. கைத்தேர்ந்த அதன் வாசகன் தனது கூர்மையான கிரகித்தலின் மூலம் நாவலாசிரியரின் கைக்கோர்த்து அதே மையப்புள்ளியில் சரியாக வந்து நிற்கிறபோது இலக்கிய வாசிப்பின் மகத்துவம் அங்கு நிகழும். அது வாசகனின் வெற்றியாக நான் காண்கிறேன்.

அந்த நிகழ்வு இந்த பேய்ச்சி நாவலில் எனக்கு நிகழ்ந்தது. கதையில் சொல்லப்படாத சம்பவங்களை நான் யூகித்து என் சிந்தையில் நிரப்பிக்கொண்டு கதாசிரியரோடு உரையாடல் நிகழ்த்திக்கொண்டே வாசித்தேன். இது ஒரு புதிய அனுபவமாக எனக்குப்பட்டது. காரணம் நாவல்கள் வாசித்து பல மாதங்கள் ஆகிவிட்டன. பெரும்பாலும் சிறுகதைகள் மற்றும் இணையத்தில் கட்டுரைகள் வாசிப்பதில் எனக்கு அதிக ஈடுபாடு உண்டு. நாவல் சோர்வினைத் தட்டும் என்பதால் நாவலைத் தொடுவதில் சுணக்கம் ஏற்படும். ஆனால் பேய்ச்சி அப்படியல்ல. சுவாரஸ்யம் குறையாமல் நாவலை நகர்த்திய விதம், வாசகனை நாவலில் எப்படிக் கட்டிப்போட வேண்டும் என்கிற உத்தியினை மனதில் வைத்தே பேய்ச்சியை நகர்த்தியிருக்கின்றார். அதில் வெற்றியும் கண்டிருக்கின்றார். வாசிப்பில் மிக விரைவாக சோர்ந்துபோகிற நான், நான்கு மணிநேரத்தில் நாவலை முழுமையாக வாசித்துமுடித்தேன்.

கதாப்பாத்திரங்கள் நாவலில் பேசுகின்றன. ஓலம்மாவைக் காட்டுகிற இடங்களின் மனித யதார்த்தங்களையும் இயற்கையின் ரகசியங்களையும் அதன் அழகையும் கூடுதலாக மெருகேற்றி நம்மிடம் காட்டுகிறார். தாவரங்களின் செழிப்பு அதற்கு ஓலம்மா போடுகிற உழைப்பு. தாவரத்தின் தன்மைகள். பிராணிகளை அவள் அறிந்துகொண்டு அது பேசுகிற பாஷைகளில் தன்னையும் இனைத்துக்கொண்டு அதனுடன் பேசுவது. கோழி சேவல் அதன் குணங்கள், பெட்டை முட்டையினை அடைக்காக்கின்ற நேரம் அதன் பாவனைகள், பறவைகளுக்கு தீனி போடுகிற நேரம், ஆங்சா வளர்ப்பின் சாதகபாதகங்கள் என இயற்கையோடு பயணித்து நமக்கு பலவிஷயங்களைச் சொல்லித்தருகிறார். இது வாசகனுக்கு மிகுந்த உற்சாகம் கொடுக்கக்கூடிய தருணங்கள். எழுத்தாளர் கிராமிய மண்நுணுக்கம் கற்ற விவசாய விஞ்ஞானியான நம்மிடம் பவனிவருகிறார்.

ராமசாமியினை வாசிக்கின்றபோது காடு மேடு அருவி அதன் அழகு, அங்குள்ள மூலிகைகளையும்,மூலிகைகளின் பெயர்களையும் பட்டியல் இட்டு விவரிக்கின்றார். இது சாமானிய செய்கையே அன்று. இதன் பின் இருக்கின்ற கடுமையான உழைப்பு பிரமிப்பைத்தருகிறது.

மணியம், நல்லவராகவே நம் மனதில் இடம்பிடித்துவருகிறார். துடிப்புமிக்க திறமையான பலசாலியான பகுத்தறிவாளராகவே பயணிக்கின்றார். சபலம் துரத்துகிறது. அவரின் நற்காரியங்களுக்கு முன் அது ஒரு குறையாகவே தென்படவில்லை. இருப்பினும் இறுதியில் அவர் செய்யத்துணிந்த கொலைச்செய்கை ஒன்றினை அறிந்தபோது.. அடப்பாவி.. என்று மனதிற்குள்ளே முனகிக்கொண்டாலும் அவர்மேல் கோபத்தைவிட பரிதாப உணர்வே எஞ்சி நின்றது. சமூதாயப் பார்வையே அவசியம் மற்றவையெல்லாம் அவசியமற்றவை என்பதனை உறுதியாகச் சொல்லவைத்த கதாப்பாத்திரம் மணியத்தினுடையது

கோப்பேரன் மனைவிக்கு என்ன நிகழ்ந்தது.? சொல்லவே இல்லை. எங்கேயாவது அவரின் நிழல் விழும் என்று எதிர்ப்பார்த்தேன். காணவில்லை. சரி கதை மண்மணம் சொல்லுகிற கதையாதலால், அங்குள்ளவர் நிலை நமக்கெதற்கு என்று காத்தாயி பற்றிச்சொல்லவில்லை போலும்..!

முனியம்மாவை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவள் அம்மாவிடம் சண்டை போடுகிற காட்சி மிக சுவாரஸ்யமானது. அவளின் பேச்சு அங்கே மிக நியாயமாக இருந்தது. கதையில் இங்கு பேசப்படுகிற உரையாடல் very logic. ஓலம்மாவிடம், வீடு உன்னுடையதா.? நெலம் அவனுடையது, என்று சண்டைபோடுகிற காட்சியினை நான் ரசித்தேன். அவள் சொல்வது அப்பட்டமான உண்மை. ஏமார்ந்துபோன ஓலம்மாவைப்பார்க்க பரிதாபமாக இருந்தாலும், மிக சாமார்த்தியமாக திட்டமிட்டு இழைக்கப்பட்ட துரோகம் ஒன்று அப்போது வெட்டவெளிச்சமாகத் தெரிந்தது. தாய் சொல்வது சரிதான்.மகள் சொல்வதும் சரிதான்.
இதே சூழல் எங்களுக்கும் நிகழ்ந்தது. 1980யில். அம்மா வேலைமுடிந்து வீடு திருப்புவதற்குள் அப்பா விட்டைக் காலிசெய்து ரூமாபாஞ்சாங் செல்கிறோம் என்று கையெழுத்துபோட்டுவிட்டார். அம்மா அன்று ஓலம்மாவாக மாறியதையும். அப்பா முனியம்மாவாக வாதிட்டதையும் நினைத்துப்பார்க்கிறேன். அதேபோல் லாஜிக் சண்டை நிகழ்ந்தது. வளர்ப்புப்பிராணிகளாலும் பயிர்களாலும் கொய்யா மரங்களாலும் சூழ்ந்திருந்த எங்களின் வீட்டு நினைவு இப்போது வருகிறது. மனம் ஏங்குகிறது. இருவரும் கெட்டக்கெட்ட வார்த்தைகளால் புழுதிவாரிக்கொண்டார்கள் . நாவலில் இந்த அத்தியாயம் என்னைக் கறையவைத்தது.

அப்போய் முக்கிய கதாப்பாத்திரம். அவனிடம் ஒரு ரகசியம் புதைந்துள்ளது இறுதியில் கதாசிரியர் அவிழ்த்துவிடுகிறார்.

சின்னி. சீனப்பெண் நம்மோடு கலந்து வாழ்கிறாள். சுயலாபம் வேண்டி. அவர்கள் மரங்களைக்கூட பட்சிகளின் வசிப்பிடமாக்க விடமாட்டார்கள். மரங்கள் கூட அவர்களுக்கு இலாபம் கொடுக்கின்ற கருவியாக இருக்கவேண்டும். யோசிக்கவைத்த வரிகள் இது.

எஸ்டேட் சூழல், கம்பத்துச்சூழல் என எல்லாமும் பழகிப்போன ஒன்றாக இருப்பினும், சாமி, சாமிக்குத்தம், பாம்பின் வெறிப்பார்வை, பற்றி எரிகிற கோழிக்கொட்டகை கட்டையில் ஓலம்மா சர்வசாதாரணமாக நடந்துசெல்கிற விதம், கொலைக்கல்லை சாமியாக வைத்து பேய்ச்சியாக பூஜிக்கின்ற நிலை, மாமிசம் படைத்து சாமிக்கு வைக்கின்ற வழக்கம் பிறகு அனைத்தும் வழிபாடாக மாறியிருக்கின்ற சூட்சமம் ஓரளவு புரிந்தது.

அப்பாவி மக்களின் நிஜமான அன்பில் நனைந்துவிட்டு வந்த நான் இன்னமும் பேய்ச்சியின் பார்வையில் இருந்து முழுமையாக விடுபடாமல் தவித்துக்கிடக்கிறேன். நிச்சயம் பேய்ச்சி மலேசிய நாவல் வரலாற்றில் சிறந்த நாவல்களில் ஒன்றாக முத்திரை பதிக்கும். நவீன் ஆசிரியர் பணிசெய்பவராக இருப்பினும், தான் ஒரு ரைட்டர் என்று போட்டுக்கொண்டிருக்கின்றார் முகநூலில்., கண்டிப்பாக அவர் ஓர் நல்ல எழுத்தாளர் என்பதை நிரூபிக்கின்ற நாவல் இது.

பெண்களைக் கொண்டாடுகிற அதே வேளையில் பேயாகவும் பேய்ச்சியாகவும் சித்தரித்திருக்கின்றார்.

***

ஆங்..கடைசியாக ஒன்றே ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இங்கு கடுமையான விமர்சனத்திற்கு உற்பட்ட நாவல் இது என்பதால், வாசித்து முடித்த நான் என் பங்கிற்கு எதாவது சொல்லவேண்டுமல்லவா…

கோழிக்குஞ்சு என்பதைத் தவிர்த்திருக்கலாம். அதற்குப் பதில் பறவையின் குழந்தை என்று குறிப்பிட்டிருக்கலாம். குழந்தைகள் பெண்கள் வாசிப்பார்கள் அல்லவா! வாசிக்கின்ற போது முகஞ்சுளிக்கச்செய்தது.

(Visited 69 times, 1 visits today)