2016இல் கீழவளவு மலையில் சமண படுகைகளைக் கண்டுவிட்டு இறங்க முயன்றபோது ஒரே மாதிரியான ஒன்றுக்கும் மேற்பட்ட பாதைகள் சரிந்துசெல்வதைக் கண்டேன். எந்த வழியில் ஏறிவந்தேன் என்று கொஞ்ச நேரம் குழம்பிவிட்டேன். என்னை அழைத்துச்சென்ற நண்பர் அன்புவேந்தனும் இறங்கும் வழியைக் கணிக்கச் சிரமப்பட்டார். ஏறிவரும்போது அந்தச் சிக்கல் இல்லை. உச்சி மட்டுமே கவனத்தில் இருந்தது. சிறுகதை எழுதுவதற்கும் நாவல் எழுதுவதற்குமான அடிப்படை வித்தியாசம் என மலை அடிவாரத்தில் இருந்து அதன் உச்சியைப் பார்ப்பதையும் உச்சியில் இருந்து பல்வேறு திசைகளில் பிரிந்து செல்லும் வழிதடங்களைப் பார்ப்பதையும் சொல்லலாம். சிறுகதையில் எழுத்தாளன் வாழ்க்கையின் ஒரு புள்ளியை அறிந்துகொள்ள முயல்கிறான். நாவலில் வாழ்வின் எண்ணற்ற திசைகளை ஓர் ஒட்டுமொத்த பார்வையில் தொகுக்கப் பழகுகிறான்.
எழுத்தாளர் ஜெயமோகனின் ‘வெள்ளை யானை’ நாவலை ஓர் உதாரணமாகக்கொண்டு இதை விளக்க முயல்கிறேன். இந்த நாவல் தாது வருஷ பஞ்சத்தின் பின்புலத்தில் உருவாக்கப்பட்ட நாவல். சென்னையில் உள்ள ஒரு ஐஸ் ஃபேக்டரியில் 1878ஆம் ஆண்டில் நடப்பதாகப் புனையப்பட்டிருக்கும். பெரும் மக்கள் தொகையை விழுங்கிய இந்தப் பஞ்ச காலத்தை ஆங்கிலேய ராணுவ அதிகாரியின் பார்வையில் ஜெயமோகன் எழுதியிருப்பார்.
வெள்ளை யானை ஏன் மேம்பட்ட படைப்பாக நிற்கிறது?
1.ஏய்டன் எனும் ஐரிஷ்காரன் அயர்லாந்தின் பஞ்சத்தால் பிரித்தானிய ராணுவத்தில் பணிபுரிய சென்னை வருகிறான். ஐரிஷ் ஆங்கிலேய அரசால் ஒடுக்கப்பட்ட இனக்குழு. அவ்வகையில் ஏய்டன் ஓர் அடிமை போன்றவனே. அந்த அடிமை தன்னைவிட கீழுள்ள அடிமைகளை எதிர்கொள்ளும்போது ஏற்படும் அறச்சிக்கலும் அகச்சிக்கலும் நாவல் முழுவதும் பதிவாகியிருக்கும்.
2. இந்தப் பஞ்சத்தில் சிக்குண்டு தவிக்கும் மக்களைப் பற்றி பொருட்படுத்தாத ஆங்கிலேய அரசின் கோரமுகமும் இந்தப் பஞ்சத்தைப் பயன்படுத்தி தங்களுக்கான லாபத்தை அடைய முயலும் மேட்டுக்குடிகளின் சுயநலமும் என அதிகாரம் கொண்ட இரு தரப்பினரின் உளவியல் துல்லியமாகப் பதிவாகியிருக்கும்.
3. சமூகப் படிநிலையைப் பிடித்துக்கொண்ட ஜாதி இந்துக்களின் வன்மம் ஏய்டன் போன்ற ஆங்கில இராணுவ அதிகாரியின் உத்தரவையும் ஏற்க மறுக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு ஆங்கிலேயர்களின் பங்களிப்பு என்ன என்று வரலாற்றில் இன்னொரு கோணத்தையும் பேசுகிறது நாவல்.
4. இதற்கு எதிர்முகமாக இந்தப் பஞ்சமும் பலிகளும் ஆங்கிலேயச் சுரண்டல் நிர்வாகத்தினால் செயற்கையாக உருவாக்கப்பட்டது என்பதையும் விமர்சனம் செய்யும் நாவல் இது.
5. தலித் மக்களின் கொடுமரணங்கள், பசியால் வாடும் அவல நிலை, அவர்கள் மத்தியில் மீண்டு வர நினைக்கும் குரல்கள் நாவலில் பிரதானமானது.
இன்னும் இந்த நாவல் குறித்து ஏராளமாகப் பேச முடியும் என்றாலும் அடிப்படையான இந்த ஐந்து இழைகளும் பெரும் வலைப்பின்னலாக ஒன்றுடன் ஒன்று இணைந்தும் பிரிந்தும் விரிகிறது. நாவலின் கரு தாது வருஷ பஞ்சத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும் அதை மட்டுமே பேசுவது ஆசிரியரின் நோக்கமல்ல. அந்த வரலாற்று நிகழ்வின் முன் மனிதனை நிறுத்தி சார்பு நிலை எடுக்க முடியாத பல்வேறு தருணங்களால் அவனை அலைக்கழிய வைக்கிறது. அந்த அலைகழிவே வாசகனுக்கு முழுமையைக் கொடுக்கிறது. மலை உச்சியிலிருந்து சரியும் எல்லா பாதைகளிலும் அலைந்து திரிந்தபின் அதை அறிந்து கொண்டதாக நம்பும் உருவக முழுமை அது.
இதற்கு மாற்றாக நாவலாசிரியர் இப்படிச் சிந்திக்கிறார் என வைத்துக்கொள்வோம். மேட்டுக்குடிகள் அடித்தட்டு மக்களை வஞ்சிக்கிறார்கள். அவர்களின் சாதிய அதிகாரத்தைக் கண்டுகொள்ளாத ஆங்கிலேயர்களும் அடித்தட்டு மக்களைச் சுரண்டி சாகடிக்கிறார்கள். எனவே ஒடுக்கப்பட்ட மக்களின் பஞ்ச வாழ்வுக்கு அதிகார வர்க்கமே காரணம். இந்தக் கருத்தை அடிப்படையாக வைத்து ஒரு நாவல் எழுதினால் அதுவே மோசமான நாவல் எனப்படுகிறது. காரணம் எழுத்தாளன் ஒரு சூழலை உள்வாங்கி ஒரு கருத்தை அடைகிறான். அந்தக் கருத்தை முன்வைக்க ஒரு நாவலை எழுதுகிறான். அந்த நாவல் அவன் முதலில் அடைந்த கருத்தை வலியுறுத்த உருவாக்கப்படும் சம்பவங்களே தவிர; புனைவல்ல. அப்படி மட்டுமே அது எழுதப்பட்டிருந்தால் கொடும் வரலாற்றின் ஒரு துளியை மட்டுமே எழுத்தாளன் பதிவு செய்தவன் ஆகிறான். இருபுறமும் தடுப்புகள் கொண்ட மலைப் படிக்கட்டுகளில் சாவகாசமாக ஏறி இறங்குவதுபோல.
மலேசியாவில் அப்படி பலவீனமாக எழுதப்பட்டு, பலகாலமாக கொண்டாடப்பட்ட நாவல்களில் முதன்மையானது கா.பெருமாளின் ‘துயரப்பாதை’.
முத்துக்கருப்பன் எனும் நற்பண்புகளும் போராட்ட குணமும் கொண்ட இளைஞன் தோட்டத்தில் கள் விற்பனையைத் தடுக்க நினைக்கிறான். ஆனால் கங்காணிக்கு கள் விற்பனை நடப்பது முக்கியமாக உள்ளது. எனவே அதைத் தடுக்கும் முத்துக்கருப்பனை தோட்டத்தை விட்டு விரட்டுகிறார். 246 பக்கங்களைக்கொண்ட மொத்த நாவலுமே இதைத்தான் பேசுகிறது.
நாவலுக்கிடையில் பொன்னம்மா என்ற வெள்ளைத்தோல் கொண்ட அழகிய பெண்ணை (அப்படித்தான் காட்டுகிறார்) அவள் தாய்மாமன் முனியனும் கங்காணி மகன் மாணிக்கமும் காதலிக்கின்றனர். ஆனால் பொன்னம்மா வழக்கம்போல நல்லவனை (முத்துக்கருப்பன்) விரும்புகிறாள். இது ஒருபுறம் நடக்க, நாவலில் கருத்து சொல்லவென்று மூன்று பேரை ஆசிரியர் நியமித்துள்ளார். அவர்கள் நாவலாசிரியரின் பிரதிநிதிகளாக வந்து அவ்வப்போது நல்லுபதேசங்களைக் கூறிச்செல்கின்றனர்.
எ.கா:
முதலாவது குழந்தைகளைப் பாதுகாக்கும் ஆயா: மகளே! சூரியன் வருவதால் பகலும், சூரியன் மறைவதால் இரவும் உண்டாகிறதல்லவா? உலக இருள் நீக்கச் சூரியன் வருவதால் மட்டுமே விடிந்துவிடாது. நமக்கு இருளும் பகலும் ஒன்றாகத்தான் இருக்கிறது. தன்னலம் படைத்த மனிதர்கள், பிறர் உழைப்பைப் படியாக்கிக்கொண்டு மேலேறி கூத்தாடும் எத்தர்கள் விடிவிற்குத் தடை போடுகின்றனர்.
இரண்டாவது சிவலிங்க வாத்தியார் : பிறரை இன்பத்திலாழ்த்தும் மலர்களுக்குத் துன்பம். மதுரமான தேனை ஓய்வின்றி உழைத்துச் சேர்த்த வண்டினங்கள் தாம் சேர்த்த தேனை பறிகொடுத்ததோடு மட்டுமல்லாமல் குடும்பத்தோடு கருகி மாண்டு போகின்றன. மண்ணினர் வாழச் சொந்த வாழ்வினைப் பணயம் வைக்கும் திண்ணியர் உழைப்போர் வாழ்வில் தீராத் துயரத்தைதான் கண்டனர்.
மூன்றாவது டிரசர் அருளானந்தம்: தொழிலாளர்களின் ஒற்றுமையிருந்தால் எதையும் சாதித்துவிட முடியும். உழைப்பின் ஒற்றுமை காட்டும் தொழிலாளர்கள் உள்ளத்தாலும் ஒன்றுபட்டு நின்றால், கள்ளுக்கடை மட்டுமல்ல, மதி மயக்கம் தரும் எல்லாவிதமான போதைகளையும் விரட்டி விடலாம்.
இந்த நாவலில் வரும் வில்லன்களான கங்காணி நாகன், அவர் மகன் மாணிக்கம் இருவரும் வருகின்றனர். அவர்களுக்கு சகாக்களாக வரும் பண்டாரம் மற்றும் முனியன் ஆகியோர் நகைச்சுவை வில்லன்கள் எனலாம். ‘லக்கி மேன்’ படத்தில் கொலைகள் செய்யக்கூடிய கொடிய ராதாரவி ‘தங்கச்சிக்கு கண்ணாலம்’ எனும் கவிதையைப் பத்திரிகைக்கு அனுப்பும் வெகுளியாக இருப்பார். அப்படி தோட்ட மக்களை போதைக்கு அடிமையாக வைப்பதும், இரவில் பால்மரம் சீவி அதிக லாபத்தை வெள்ளை துரையிடம் காட்ட அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதுமாக இருக்கும் கங்காணி, பண்டாரம் சொல்லும் பொய் ஜோதிடங்களை நம்புகிறார். கங்காணிகளை ஏமாற்றும் சாதுர்யம் உள்ள பண்டாரம் போதையில் வரும் முனியனைப் பார்த்து, முனியாண்டி சாமி என பயந்து ஓடுகிறார், முனியனும் மாணிக்கமும் போதையில் தடுமாறுவதை சண்டையென ஊர் முழுவதும் பரப்பும் அப்பாவியாக இருக்கிறார். பொன்னம்மாவை காதலிக்கும் மாணிக்கம் அவளைத் திருமணம் செய்யத்துடிக்கும் முனியனுடன் நட்புறவாடுகிறான்.
இப்படி குழப்படியான குணாதிசியம் கொண்ட வில்லன்கள் ஒரு பக்கம் என்றால் நகைச்சுவைக்கென்று தனியாக சிங்காரம் எனும் பாத்திரத்தையும் வடித்துள்ளார் கா.பெருமாள். இவரது பணி ஆங்காங்கு சென்று சூழலை நகைச்சுவையாக்குவது. வேடிக்கையாகப் பேசுவது. சொற்களை கொஞ்சம் மாற்றிப்போட்டு புதிய அர்த்தங்களை உருவாக்கி அனைவரையும் சிரிக்க வைப்பது.
இந்த உதிரி கதாபாத்திரங்கள் இப்படி கருத்தும் நகைசுவையுமாக நாவல் முழுவதும் பேசிக்கொண்டே இருக்க நாவலின் முதல் பகுதியில் வரும் கதாநாயகன் முத்துக்கருப்பன் மீண்டும் நாவலின் இறுதியில் வந்து குடிப்பதால் வரும் தீமைகளை தோட்டத்து மக்களுக்கு எடுத்துரைக்கிறான். விரிவான பிரச்சாரம் செய்கிறான். ஆனால் நாவலில் முனியனைத் தவிர யாரும் அதிகம் குடித்து விட்டு சத்தம் போடுவதாகவோ, அமைதியைக் கெடுத்ததாகவோ வலுவாகக் காட்சிப்படுத்தப்படவில்லை. முத்துக்கருப்பணின் சொற்களால் மட்டுமே அந்த சிக்கல் மைனா தோட்டத்தில் நடப்பதாக அறிய முடிகிறது.
கவிஞரான கா.பெருமாள் நாவலின் தொடக்கத்தில், அடுக்குமொழியில் தோட்டத்தைப் பற்றி விளக்குகிறார். இடையிடையே தர்ம ஆர்டர், இமிகிரேஷன் நிதி, திருக்குறளின் விளக்கம் என கதாபாத்திரங்களின் பிரதிநிதியாகவும் வந்துவிட்டுச் செல்கிறார். கவிஞருக்கு ஏது வேலி என துயரப்பாதை நெடுகிலும் தேவையான போதெல்லாம் தலைகாட்டிச் செல்கிறார். ஆனால் அழுத்தமற்ற கதாபாத்திரங்களாலும் காரணமற்ற சம்பவச் சித்தரிப்புகளாலும் நோக்கற்ற வசனங்களாலும் சிக்கலை வலுவாக்கும் காட்சி போதாமையாலும் அவரால் கடைசி வரை நாவலை மட்டும் எழுத முடியவில்லை.
1958இல் சங்கமணி நாளிதழில் தொடர்கதையாக வெளிவந்த துயரப்பாதை 1978இல் நாவலாக பதிப்பானது. அன்றைய தோட்டத்தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.பி.நாராயணன், இந்நாவலை ‘ரூட்ஸ்’ நாவலுக்கு நிகரானதெனச் சொல்கிறார். இந்த நாட்டில் 1950களில் கதை வகுப்பு நடத்திய பைரோஜி நாராயணன் தனது அணிந்துரையில் தொடர்கதையாக வந்து, நாவலாக பதிப்பாகும் வரையிலான இருபது ஆண்டு காலகட்டத்தில் இதற்கு நிகராக வேறு நாவல்கள் வரவில்லை என்கிறார். அன்றைய மலேசிய நவீன இலக்கியத்தை வளர்க்க முயன்ற டாக்டர் இரா.தண்டாயுதம் இந்நாவல் சுவை பொங்கும் காட்சிகளாக, சம்பவங்களாக ,கதையாக உருவாகியுள்ளது எனப் பாராட்டுகிறார். மலேசியாவில் குறிப்பிடத்தக்க விமர்சகராகச் சொல்லப்பட்ட ரெ.கார்த்திகேசு இந்நாவலை செவ்விலக்கியத் தகுதி கொண்டது என்கிறார்.
‘சங்கமணி’ நாளிதழ் தோட்ட மக்களின் நலன் கருதி உருவாக்கப்பட்டது. கா.பெருமாள் அப்பத்திரிகையில் பணியாற்றிய ஈராண்டு காலத்தில் இந்த நாவல் தொடர்கதையாக இடம்பெற்றது. அன்றைய தோட்ட மக்கள் மத்தியில் இலக்கிய வாசிப்பு என்பது தங்கள் அனுபவத்தின் சரடுகளை எழுத்தில் காண்பது மட்டுமே. அவ்வகையில் கங்காணியின் ஆதிக்கம், துரையின் பேராசை, கள் விற்பனை போன்ற ஏற்கனவே அவர்களுக்குப் பழக்கமான ஒரு சில சிக்கல்களை எழுத்தில் காணும்போது அது மக்கள் மத்தியில் பிரபலமான படைப்பு என்றாகிறது. ஏற்கனவே பிரபலமாக உள்ள அறிவுரைகளையும் வசனங்களையும் எழுத்தில் காணும்போது அதை தோட்ட மக்கள் ஏற்பதும் எளிதாகிறது.
இப்படி அன்றைக்கு தமிழ்ச் சமூகத்தின் மத்தியில், இலக்கியவாதிகளின் மத்தியில், கல்வியாளர்கள் மத்தியில் பாராட்டப்பட்ட ஒரு நாவல் குறித்து மீள்மதிப்பீடு இந்நாட்டில் நிகழவில்லை என்பதுதான் வருத்தமான விஷயம். அன்றைய மதிப்பீடுகளை மறுவிசாரணை செய்யாமல் இன்றும் மலேசிய நாவல்கள் பட்டியலில் இதன் பெயரை ஒலிக்கவிடுவதெல்லாம் துர்நிகழ்வு என்றே எண்ணி சமாதானம் கொள்ளவேண்டும்.
மலேசிய நாவல்கள் விமர்சனம் :
செலாஞ்சார் அம்பாட்: புனைவின் துற்கனவு
ரெ.கார்த்திகேசு நாவல்கள்: மெல்லுணர்ச்சிகளின் பூஞ்சணம்
எம்.ஏ.இளஞ்செல்வன் நாவல்கள் : பாலுணர்வின் கிளர்ச்சி