சியர்ஸ் : கடிதம் 3

சியர்ஸ் சிறுகதை

பிரியமுள்ள எழுத்தாளர் நவீன் அவர்களுக்கு,

சியர்ஸ் கதை வாசித்தேன். ‘சியர்ஸ்’ களித்திருக்கும் சந்திப்பு. இனிய சந்திப்பு ஒன்றின் முடிவு. இந்த இரண்டு தருணங்களிலும் அதை துவங்கி வைக்க முடித்து வைக்க கையாளப்பட்ட உவகைச் சொல். கதையின் உறவும் பிரிவுமான உணர்வுநிலைக்கு அதன் துவக்கத்துக்கும் முடிவுக்குமான சரியான சொல்லும் கூட சியர்ஸ்.

கதை பேசும் அடிப்படை உணர்வை இலக்கியம் உட்பட உளவியல் மரபணுவில் மூளை நரம்பியல் தத்துவம் என ஒவ்வொரு துறையும் அதன் ஆக சாத்தியமான எல்லை வரை சென்று பரிசீலித்திருக்கிறது. சுவாரஸ்யமானது மூளை நரம்பியல் சொல்வது. அம்மா என்பது உருவமும் அது அளிக்கும் உணர்வும் கலந்து உருவாகும் ஒன்று. மூளைக்குள் இந்த தொகுப்பை உருவாக்கும் நியூரான்களில் ஏதேனும் பழுதடைந்தால் பாதிப்பாளருக்கு அம்மாவை மட்டும் அடையாளம் தெரியாமல் போகும். வேறு இயல்பு வாழ்வில் எந்த பாதிப்பும் இருக்காது. அவனைப் பொறுத்த வரை அம்மா தொலைந்து போனவள் ஆயுளுக்கும் தேடிக்கொண்டே இருப்பான். அம்மா எதிரே இருக்கும் போதும். தொலைபேசி வழியே அம்மா பேசினால் அவள் குரல் அவனுக்கு அடையாளம் தெரியும். ஏங்கி அழைப்பான். நேரில் சென்றால் என் அம்மாவின் குரலில் பேசும் நீ யார்? என் அம்மா எங்கே என்று கேட்பான். இது போன்ற மற்றொரு நரம்பியல் பிசகு காணும் எல்லா பெண் மீதும் அம்மா எனும் உணர்வு எழுவது. இப்படி எல்லா துறையும் அதன் எல்லை வரை இந்த உறவை வகுத்து சொன்ன பிறகும் அப்படியா என்றபடி நிகர்வாழ்வின் இவற்றை உதறி முன்செள்கிறது இந்த உணர்வு. என் நோக்கில் இந்த வசீகர மர்மத்தை அதன் வீரியம் குறையாமல் அணுகிப் பார்ப்பது என்றும் இலக்கிய துறையாகவே இருக்கிறது. பல உதாரணங்கள் உண்டு. இந்தக் கதை உட்பட.

மூர்த்திக்கு கனவின் வழியே அழைப்பு வருகிறது. அம்மாவைத் தேடும் ஒருவன். இருபது வருடமாக மகனுக்காக காத்திருக்கும் ஒரு அம்மா. இருவரும் சந்தித்துக் கொள்கிறார்கள்.

அங்கே நிகழ்ந்தது வெறும் அம்மா மகன் சந்திப்பு மட்டும்தானா ? அம்மா என்பது உறவுக் கட்டுக்குள் சிக்கிய சிறிய வட்டம். ஆனால் தாய்மை என்பதோ சாராம்சமான ஒன்று. மூர்த்தி கண்டுபிடித்தது ‘அவன்து’ அம்மாவாக இல்லாமல் போனால்தான் என்ன? அவன் கண்டடைந்ததோ தாய்மை எனும் சாராம்சம். அம்மா எனும் உறவாக பல்வேறு உருவம் கொண்டு பல்வேறு குணநலன் கொண்டு மானுடத்தை சூழ்ந்திருப்பது என்ன? தாய்மை என்ற சாராம்சமான அந்த ஒன்று அல்லவா. மூர்த்தியால் புகைப்படத்தை மட்டும்தான் காட்ட முடியும். சாராம்சமான அந்த ஒன்றினை? Art, craft என இரண்டிலும் முழுமை கூடிய நல்ல கதை. வாழ்த்துக்கள் எழுத்தாளரே. 🙂

கடலூர் சீனு

மனித மனங்கள் எப்போதும் திருப்புமுனைகளை எதிர்ப்பார்க்கின்றன. நாம் கண்டடைவது சமயங்களில் வேறொன்றாக இருப்பதை வாழ்க்கையில் இருக்கும் சுவாரஸியம் என்று அதிசயித்துப் போகின்றோம். “நாம் நினைப்பது மட்டுமா வாழ்க்கை?” என்று சொல்வது கூட வாழ்க்கையில் சில எதிர்பாரா விடயங்கள் நடக்க வேண்டும் என்ற நப்பாசையில்தான்.
“இந்தப் படத்த பார்த்தியா, அவர் அம்மாவோட ஃபேஸ் கட் கொஞ்சம் கூட இல்ல” என்று பழைய படத்துடன் ஃபோனில் உள்ள படத்தை ஒட்டி வைத்தேன்.

“சியர்ஸ்” சிறுகதையின் மையப்புள்ளி இந்த வரிதான். ஒரு இயக்குனரின் உள்ளத்தை இந்த வரி அற்புதமாகப் படம்பிடித்துக் காட்டுகிறது; எழுத்தாளரின் உள்ளத்தைக் கூடவே. மூர்த்தி அவர்களின் அம்மாவாகத்தான் அந்தப் பெண்மணி இருக்க வேண்டும். எல்லாரும் அப்படியே நம்பினார்கள். இயக்குனரும் அதில் விதி விலக்கல்ல. ஆனால், வாசகனை ஆட்டி வைக்கும் வரி இதுதான்.

சமயங்களில் நாம் மனித உறவுக்களுக்கிடையே நுண்ணிய வகையில் பிணைந்துள்ள வலிமைகளை அறிவதில்லை. “சியர்ஸ்” சிறுகதை பலமான உறவுத் தொடர்பாடலைப் பேசுகிறது.

தந்தையால் சிறுவயதிலேயே மலேசியாவிற்கு அழைத்து வரப்படும் மூர்த்தியின் கனவு சம்பவங்களும் அத்தகைய கோட்பாட்டின்கீழ் வருபவைகள் தான். சிறுவயதில் தாயை எண்ணி அழுதச் சம்பவங்களுக்குப் பிறகு தன்னுடைய உண்மைத்தாயின் படத்தைக் கனவுகளுக்குப் பிறகுதான் மூர்த்தி தேடுவது மனித வாழ்வின் எதார்த்தைக் காட்டுகிறது. அதுவும் அது தனது தாயின் முகம் என்பதை அறியாமலேயே தேடியதுதான் கூடுதல் வியப்பு. காலம் எல்லாவற்றையும் மறக்கச் செய்யும். நமக்கு மிக மிக நெருக்கமானவர்களைக் கூட சில வருடங்கள் தொடர்ந்தாற்போல் காணாமல் இருந்தால் அவர்களின் தோற்றத்தை மறந்திருப்பதை நாம் உணர்ந்திருப்போம். இது தவறென்று சொல்லுவதற்கில்லை.
மியான்மாருக்குத் தாயைத் தேடிச் செல்லும் காட்சிகள் பெரும்பாலும் நமக்கு மிகவும் பரிச்சியமானவை. ஒரு மகன் தாயைத் தேடிச் செல்லும் போக்கினை ஓரிரு வரிகளில் முடித்து விடுவதை யாரும் விரும்ப மாட்டார்கள். மனிதப்பிறவியைப் பொறுத்தவரை தாய்ப்பாசமானது உணர்வுகளோடு கலந்த ஒன்று. அவளைப் பற்றி பேசும் போது ஒரு சோகத்தை மெல்லியதாகப் படரவிடுவது உளவியல் சூட்சுமம். அவளைக் கொண்டாடுவதிலும் ஒரு சோகம் இருக்க வேண்டும். எழுத்தாளர் அந்த உளவியல் பொருளை இச்சிறுகதையில் படரவிட்டிருப்பதும் ஒரு அந்நியத் தன்மையை விலக்கும் முயற்சிதான்.

அவங்க மேல வீசுன வாசத்த அஞ்சு வயசுல மோந்துருக்கேன் சார். நாய் மாதிரி அந்த வாசனைய திரும்பத் திரும்ப மோப்பம் பிடிச்சேன். அவங்க ஏதேதோ பேசுனாங்க. எல்லாமே பர்மா பாசைதான். ஆனா எல்லாமே புரிஞ்சதுசார். மனசுக்கு ஏது சார் மொழி…”

என்று வரும் இந்த வரிகளில் ஆழ்ந்து போகும் போது, கட்டுரையில் முதலில் கோடிக் காட்டிய சிறுகதை வரிகள் எழுத்தாளர் கதையில் உச்சம் ஏற்படுத்த வேண்டி கொடுத்தவை என்பது புலனாகிறது. தாயின் படத்தை அவரின் முகத்திற்கு நேரே காட்டி பின்னர் அவரின் மடியில் விழுந்து அழும் காட்சி உண்மையில் நெகிழ்ச்சியானது. தனது தாயின் முகத்தைப் பெட்டியிலிருந்து புகைப்படமாக, இதையும் தாண்டி ஏறக்குறைய கனவிலிருந்து தன்னுடைய “தாய்த்தேடல்” பயணத்தின் இறுதிவரை மூர்த்தி அவர்கள் சில நூறு முறைகள் பார்த்திருக்கலாம். அப்படியிருக்கையில் நேருக்கு நேர் சந்திக்கும் வேளையில் படத்திலிருப்பதை விட நேரில் தாயின் முகம் வேறுபட்டிருப்பதை ஒரு மகன் காணாமல் இருந்திருப்பாரா என்பது ஆய்வுக்குரியது. இயல்பாக, நாம் புகைப்படத்தில் பார்த்த ஒருவர் நேரில் அது போல் இல்லாதப் போது எளிதில் கண்டுப்பிடித்துவிடுவோம். நம் மனதோடும் கண்களோடும் பழகிய ஒரு பொருள் பின்பு வேறாகத் தோன்றும் பொழுது அதன் அந்நியத்தன்மை எளிதில் புலப்பட்டுவிடும். ஆக, இங்கே ஷாமின் கோபம் ஏற்பதற்குரியது.

இதையெல்லாம் தாண்டி, “சியர்ஸ்” சிறுகதை மனிதர்களின் பலதரப்பட்ட உளவியல்களைப் படம் பிடித்துக் காட்டுகிறது. மகனைப் பிரியும் தாய், ஒரு துரோகியாகத் தன்னைப் பாவித்துக் கொள்ளும் தந்தை ( அவர் தன்னுடையப் புற்றுநோய்க்குக் காரணம் மியான்மார் பெண்ணை விட்டு வந்ததுதான் என்பது), தாயைத் தேடும் மகன், அவனின் மனைவி, தான் எண்ணியது வேறொன்றாக மாறும் பொழுது கோபத்திற்கு ஆளாகும் ஒருவன் ( ஷாம் ), மற்றொருவனை வெல்லுவதில் ஏற்படும் இறுமாப்பினைக் காட்டும் ஒருவன் ( வசந்தன் ), சூழ்நிலையோடு ஒட்டாத ஆனால் அதனோடு கலந்திருக்கும் ஒருவன் ( இதுவும் ஷாம் ), குழந்தையில்லாத ஒரு தாய், ஒரு வியாபாரி, பாதைக் காட்டுக் கிழவி, மகனோடு தாயைத் தேடும் ஒரு ஓட்டுனர், ஊர் மக்கள் என “சியர்ஸ்” சிறுகதைப் பட்டியலிடும் மனித உளவியல் நீண்டது. சோற்றின் படத்தைக் காட்டினால் வயிறு நிறையாது என்பது போல, கதைக்குள் போகாமல் வெறும் எழுத்தில் அந்த மனித உளவியல்களைப் புரிந்து கொள்ள எத்தனிப்பது அறிவீனம்.

முடிப்பாக, “சியர்ஸ்” சிறுகதை தாயைக் கண்டனைந்த ஒரு மகனுக்காகக் கொடுக்கப்பட்ட கொண்டாட்டத்தின் கோப்பைத் தூக்கலாகவும், அதையே கதையின் இறுதியில் கொடுக்கப்பட்ட துக்கத்தின் பரிசாகவும் கொள்ளலாம் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. இயக்குனருக்கும் கொண்டாட்ட “சியர்ஸ்”-இல் பங்குண்டு. நன்றி.

திலிப்குமார், மலேசியா

(Visited 35 times, 1 visits today)