சியர்ஸ் : கடிதம் 2

சியர்ஸ் சிறுகதை

சியர்ஸ் சிறுகதையை வாசித்தேன். தாயைத் தேடிச் செல்லும் அலைவு மிகச் சிறப்பாக இருந்தது. இந்தத் தேடலை அலைவை எந்த விசை உந்தி தள்ளுகிறது எனும் கேள்வியை இச்சிறுகதை எழுப்புகிறது. தாய்மை என்கிற உணர்வு. தாயை இழந்து போகின்ற தருணத்தில் யாருமே அருகில் இல்லை என்ற உணர்வு மேலோங்கியிருக்கும்.

ஒரு வகையில் தாய்மை என்பது ஒரு அருகுணர்வை அளிக்கிறது. அந்த அருகிருத்தல் நிலை தொலைகிறபோது நிலைகுலைந்து போகிறோம். அதுவே இப்படி அலைகழித்து தேடி அலையச் செய்கிறது. அவ்வுணர்வு பரு வடிவாக எல்லா தாயை தொலைத்தவர்களுக்கும் தாய்களுக்கும் இருக்கும் போலும். அதைத்தான் கதைசொல்லி மியான்மாரில் கண்டடைந்திருக்கிறார். கயிறு அரவாக மாறுவதைப் போன்ற தருணம்.

அர்வின், மலேசியா

கனவில் வரும் ஒரு அசையாக் காட்சி, சின்ன வெறுப்பின் வழியாக கொஞ்சம் தள்ளிப்போவதால் அந்த காட்சியை ஃபோட்டோ கண்டுகொள்ளுதல் மிக வலுவான படிமம். //கண்ணாடி தெரிச்ச மாதிரி சுருக்கம் செதறி கெடந்த தோலோட ஒரு கெழவன்// போன்ற கூர்மையான உவமைகள். இந்த சிறுகதை வழியாக வெளிப்படும் பர்மா மக்கள், நாம் கனவு காணும் லட்சிய சமூகம். கதைசொல்லியின் sceptical தன்மையும், மூர்த்தியின் கதையை சினிமாவாக யோசித்தால் என்ன குறைகிறது போன்ற எண்ணங்கள் இதை வெறும் ஒரு மிகையுணர்ச்சிக் கதையாக ஆக்காமல் நல்ல சிறுகதையாக ஆக்கியிருக்கிறது.

மணவாளன், பெருந்துறை

பழக்கப்பட்ட இறுதி முடிச்சு, அவர் தாயா இல்லையா என்ற கேள்வியை முன்வைத்தே கதை முடியும் என்பதை பெரும்பாலான வாசகர்கள் யூகிதிருபார்கள். ஆனால் வித விதமான கதாபாத்திரங்கள் மூர்த்தியின் கதையில் ஒன்றுவதும், நினைவுகள் மீட்டெடுக்க பட்டுள்ள விதமும் அருமையாக சித்தரிக்க பட்டுள்ளது.

//அவர் நிறுத்தியபோது அறையின் அமைதி அச்சமளித்தது.//
இங்கே நானும் அதே அமைதியை உணர்ந்தேன். கனவில் நன்கு பரிச்சமான ஆனால் யாரென்று அறியாத ஒரு பெண், புகைப்பட பிம்பம் ஆகி பின் தாயாகி தாயின் நாட்டில் கொண்டு சென்று அங்கு ஒரு தாயை கண்டடைய ஊர் க்கூடி கொண்டாடுகிறது.

எங்கோ இரு மூலைகளில் வசிக்கும் இருவர் தங்கள் உள்ளிருக்கும் ஒரு தேடலை ஏக்கத்தை தீர்த்து கொள்ள விதி செய்த ஆட்டம் என்று கொண்டால் கதை பிரமாண்டமாக விரிகிறது. அருமையான வாசிப்பனுபவம் அளித்த கதை.

அருள், கொச்சின்

நவீனின் சிறுகதையைப் பொறுத்தவரை அருமையான சிறுகதை வடிவம்.தேவையற்ற சொற்களோ விவரணைகளோ அற்ற சரியான வடிவம்.தந்தை மற்றும் வளர்ப்புதாயின் இறப்புக்குப் பிறகு தன்னுடைய அம்மிவைத்தேடி செல்வதும் அவர்படும் துயரும் அவர் அடைந்தது உண்மையானதென்று அவருக்கு தோன்றினாலும் தவறானதை அடைந்திருக்கிறார் என்பது புரிகிறது.

மங்கி ஷோல்டர் போலி என்பதைப்போல் இதுவும் சொல்லப்பட்டதென்றாலும் அடைந்த உணர்வே முக்கியமானதென்று சொல்வதால் கடைசியில் புன்னகை வருவதைத் தவிர்க்க முடியவில்லை.நல்ல சிறுகதை.

அந்தியூர் மணி

(Visited 73 times, 1 visits today)