சியர்ஸ் வாசித்தேன். மிகக் கச்சிதமாக சிறுகதை வடிவம் கை கூடி வந்த கதை. அந்தக் கனவில் வரும் முகம் ஒரு புகைப் படம் என அவிழும் இடம் துணுக்குற வைத்தது. விவரிப்பின் ஊடே ஒரு கேமராவின் நோக்கில் பர்மாவை காட்சிப்படுத்துவது ஒரு அபாரமான யுக்தி. இது craft மேம்பட்டு creation னை உரசும் இடம். புகைப் படத்தையும் ஒரு சொல்லையும் வைத்துக் கொண்டு துவங்கும் மூர்த்தியின் பர்மா பயணம் ஒரு துப்பறியும் கதை போல வளர்ந்தது.
மலேசிய உள்ளதும் நாம் காண்பதும் ஒன்றா என்கிற கேள்வியை அர்த்தமில்லாமல் செய்து விட்டது இக்கதை. உணர்வே உள்ளது, அதுவே போதுமானது அல்லது அதற்கு மேல்.
போயாக் முதல் உங்கள் கதைகளை தொடர்ந்து வாசிக்கும் போது ஒரு அனாயாசமான வளர்ச்சியை உணர்கிறேன்.
கிருஷ்ணன்,ஈரோடு
நவீனின் சியர்ஸ் சிறுகதை வாசித்து விட்டேன். மனம் உருவகித்துக் கொள்ளும் உணர்வகளின் முன் நாம் நம்பும் பருவடிவ உண்மைகள் பலவீனமாய் ஓடி ஒளிந்து கொள்ளும் கதை. ‘உண்மை’ என்பது நடந்ததா அன்றி நம் நினைவில் பதிந்ததா போன்ற கேள்விகளை எழுப்புவதோடு கதை இக்கேள்விகளோடு முழுமையாக பயணித்து சரியான வடிவையும் எட்டியிருக்கிறது.
ஒரு புகைப்பட காட்சியின் வழியே நினைவுகள் ஒவ்வொன்றாய் மீள்வது நல்ல யுக்தி. ஒரு குழந்தைப்பருவ காட்சியின் மூலம் மொத்த பால்யமும் துல்லியமாய் நினைவில் மீளும் எழுத்தாளர்களின் அனுபவங்கள் பற்றி ஜெ சொல்லியிருக்கிறார். பலசமயம் நடந்தவற்றை விடவும் நினைவுகள் துல்லியம் கொண்டுவிடுகின்றன. அதில் அன்றாடத்தின் பிசிறுகள் இருப்பதில்லை. கண்காணாத தேசத்தில் தன் பால்ய நினைவுகளின் ஊடே மூர்த்தி மேற்கொள்ளும் பயணம் தீவிரமான அனுபவம். பைத்தியக்காரியின் தவம் வென்றதற்கு விழா எடுத்து கொண்டாடும் பர்மா மலைக்கிராமத்தின் மரபை நினைத்து மனிதம் பெருமை கொள்ளலாம்.
விதியின் ஆடல் உருவாக்கும் ஒருமை என்ற கோணத்திலும் கதையை வாசிக்கலாம் என்று பட்டது. உலகின் மூலைகளில் உள்ள இரு தீர்க்கப்படாத கணக்குகள் சந்தித்து தன்னைத்தானே தீர்த்துக் கொள்கின்றன. புத்தர் புன்னகைப்பதை உணர முடிகிறது.
பாரி பெருந்துறை
”பாலைவனத்தின் பேரதிசயமே எங்கோ ஒரு நீருற்றை தன்னுள் ஒளித்து வைத்திருப்பது தான்” – குட்டி இளவரசனில் வரும் ஒரு வரி. மனித மனங்களின் நினைவுகளும் அத்தகையது தான். அதனுள் ஒளித்து வைத்திருக்கும் ஆயிரம் ஆயிரம் நம்ப முடியாத நினைவுகளே மனம் என்ற ஒற்றை பாலைவனம்.
நமக்கு தெரிந்த Emotional கதையாக நின்றுவிடுமோ என்ற ஐயத்தை மீறி எழுந்த ஒரு சிறுகதை இது. மனித உறுவுகள் உச்சம் தொடும் தருணங்கள் வெளியே இருந்து பார்பவர்களுக்கு கிறுக்கு தனமாகதான் படும். மூர்த்தி ஒரு கிறுக்கனாக தான் தெரிந்திருப்பான் அங்கே கதைக் கேட்பவர்களுக்கு.
அறுந்த இரு சரடுகளை ஒன்றாக இணைப்பதே சியர்ஸ். கிட்டதட்ட உடலுக்கு, ஆன்மாவிற்குமான போராட்டம் தான். ஆன்மா என்ற ஒன்றை மீறி உடல் தன்னிச்சையாக ஒரு இணைப்பையோ, நம்பிக்கையோ ஏற்படுத்திவிட முடியாது. இரு ஆன்மா ஒன்றை ஒன்று அறிந்த பின்னர் உடலால் இல்லை பிற காரணிகளால் அதனை மாறியமைத்துவிடவும் முடியாது.
மூர்த்தியின் தேடல் வழியாக அவன் கண்டடைவது அவனுக்கான ஒரு தாயை. அவனுக்காக காத்திருக்கும் ஒரு தாய் தன் இருபது வருட தவத்தின் வழியாக அதனை அடைகிறாள். அவள் தவத்தின் மூலம் அடைந்த தருணத்தை அவன் கனவின் மூலம் அடைகிறான். இரண்டு ஒன்றை ஒன்றை நிரப்பிக் கொள்ளும் தருணம் தான் உச்சம்.
மனிதத்தின் சாத்தியங்களும் அதன் நம்பிக்கைகளும் உரசிப்பார்ப்பது என இக்கதையை சொல்லலாம். மேலே சொன்னது போல வெறும் Emotional சிறுகதையாக நின்றுவிடாமல் அதிலிருந்து ஒரு படி மேலே செல்லும் போதே இதனை சிறந்த சிறுகதையாக மாற்றுகிறது.
ஜி.எஸ்.எஸ்.வி.நவின், பெங்களூரு