பேய்ச்சி: காலம் கடந்து வாழ்வாள் – ப.விஜயலெட்சுமி

எழுத்துத் துறையில் இதுகாறும் நவீன் எனும் எழுத்தாளரின் பல முகங்களைக் கண்ட நான், ‘பேய்ச்சி’ நாவலின் வழி வேறுபட்டு காண்கிறேன். எழுத்தாளரின் புதிய பரிணாமத்தை என்னால் 283 பக்கங்களைக் கொண்ட பேய்ச்சியின் மூலம் காண இயல்கிறது. எப்பொழுது, இந்நாவலைக் கையில் ஏந்தினோம் என, எண்ணி பார்ப்பதற்குள் இதன் இறுதிப் பக்கத்தைக் கடந்து விட்டேன்.

“பேச்சியை ஆத்தா என கைக்கூப்பி வணங்கத் தொடங்கியபோது” எனும் இறுதி வரிகளின் அழுத்தம் ஒரு வாசகனைத் தன்னை அறியாமலே, பேய்ச்சி எனும் அந்தத் தெய்வத்தைக் கைக்கூப்பி வணங்க வகைச் செய்கிறது. கதையில் கண்ட அந்த மறைப்பொருளைக் கொஞ்சம் வாசகன் உணரும் நோக்கத்தில் தனது எழுத்துகளின் வழி சற்று அழுத்தம் கொடுத்துள்ளார். சிறு தெய்வ வழிபாடு, குறிஞ்சி நிலக் கடவுள் வழிபாடு போன்ற நமது சமுதாயத்தின் இறைச்சிந்தனையைப் பொதுவான பார்வைக்குக் கொண்டு வந்துள்ளார். அதோடு, கதையில் சில குட்டிக்கதைகள் அக்காலக்கட்டச் சம்பவங்களுக்கேற்ப அங்காங்கே பிறக்கின்றன; அதன் ஒவ்வொரு முடிச்சுகளும் அங்கேயே அவிழ்க்கப்படுகின்றன. இவற்றை வாசிக்கும் வாசகனின் சிந்தனை பலவாறு அந்தக் கதைகளைப் பற்றி யோசிக்கும் தருணத்தில், மீண்டும் கதையின் மையப்பகுதிக்கே வாசகனைத் திசை மாற்றி விடும், நாவலாசிரியரின் உத்திப் பயன்பாடு பாராட்டிற்குரியது.

பல்லுயிர்களையும் நேசிக்கும் ஓலம்மாவின் மனப்பக்குவம் என் மனதைச் சற்று வருடியது. கருப்பன், ஆங்சா, கோழி, சேவல் மற்றும் பறவைகள் போன்ற பிராணிகளின் வளர்ப்பும் அதன் வாழ்வியலும் அழகாகக் வாசகர்களுக்குக் காட்டப்படுள்ளது. கால்நடை வளர்ப்பில் திறனைக் காட்டிலும், பிராணிகளின் உளவியலும் முக்கியம் என்பது, ஓலம்மாவின் செயலின் வழி நாம் அறியலாம். மருத்து இலைகளின் வகைகள் மற்றும் மூலிகை மருத்துவக் குணங்களையும் கொப்பேரன் மற்றும் அவரின் மகன் ராமசாமியின் வழி இயல்பாய் கூறப்பட்டுள்ளது. தமிழர்களின் வாழ்வு இயற்கை மருத்துவத்தைச் சார்ந்தும் உள்ளது என்பது நமது நினைவிற்குள் தோன்றியும் மறைகிறது. மறந்து போன சில மருத்துவ இலைகளின் பெயர்களையும் அதன் குணாதிசயங்களையும் கொப்பேரன் மற்றும் ராமசாமியின் வைத்தியத்தின் வழி நினைவுப்படுத்திக் கொள்வது, இதன் தொடர்பாக நூலாரிசியர் செய்த தேடலை நன்றாக உணர முடிகிறது. தொடர்ந்து, கதையின் இறுதிப்பகுதிகளில் கூறப்படும் ‘பூனியான் கம்பம்’ எனும் ஓர் இடத்தைப் பற்றி வாசகன் கொஞ்சம் தேடல் செய்யும் வாய்ப்பும் அவசியமாகிறது.

மொத்தத்தில், தோட்டத்து வாழ்க்கை ஆழமாக உணரப்பட்டு உருவகப்படுத்தப்பட்டுள்ளது என திடமாகக் கூறலாம். முக்காலத்தின் ஓட்டம் தான் பேய்ச்சி. காரணம் காலப் பரிணாமங்களை பேய்ச்சியின் வழி காண முடிகிறது. ஆனால், நாம் அறிந்த பேச்சியம்மனை ஏன் எழுத்தாளர் கதை முழுவதும் பேய்ச்சி என்றே பயணிக்க விடுகிறார் எனும் சிந்தைனையில் மூழ்கி, விடைக் காணாத வினாவாக அது மனதிற்குள்ளேயே நின்றது. பிறகு, தொடர் வாசிப்பின் வழி அதன் உண்மை புலப்பட்டது. ‘ஆவதும் பெண்ணாலே; அழிவதும் பெண்ணாலே’ எனும் தத்துவத்தை நாவலாசிரியர் முதன்மைபடுத்துகிறார் என விளங்கியது.

இருப்பினும், வாசிப்பில் எனக்கு நெருடலை சில சம்பவங்கள் தந்தன. அப்போது, நான் அறிந்த இந்த எழுத்தாளர் நண்பர் மீது கொஞ்சம் சினம் எழுந்தது. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால், மாணியம், ஓலம்மா மற்றும் சின்னியோடு பழகும் சில அந்தரங்கமான தருணங்களுக்கான சொல்லாட்சிகள் ஆகும். உவமைப்படுத்திச் சொல்ல வேண்டிய ஒன்றை இப்படி ‘படார்’ என சொல்லிவிட்டாரே எழுத்தாளர் என்ற கோபம் இருந்தது. ஆனால், ‘அவகாசம் எல்லாவற்றையும் மாற்றும்’ எனும் கதையின் உச்சப்பகுதியில் வலம் வரும் ஒரு வாசகம், என்னை வெகுவாக யோசிக்க வைத்தது. அவ்வேளையில் நான் எடுத்துக் கொண்ட அவகாசம் நூலின் மீது நான் கொண்ட பார்வையைத் திசைதிருப்பியது.

பின்னாளில் காட்டப்படும் குமரன் மாலதியின் இல்லற உறவுகள் இனிமையைத் தந்தன. பிறகு, மீண்டும் மாணிக்கம் ஓலம்மாவுடனும் சின்னியுடனும் இருந்த தருணங்கள் கூறப்பட்ட விதம் அக்காலக்கட்டத்திற்குத் தேவையான சொல் பயன்பாடு என்றும் உணர்ச்சிகளின் உண்மையான வெளிப்பாடு எனவும் புரிந்தது. கதைக்கு ஏற்ற கால அலைகளோடு பயணித்த எழுத்தாளரின் நோக்கமும் விளங்கியது.

பேய்ச்சி ஒரு சமூகத்தின் வாழ்வாதாரத்தையும் அதன் அவலங்களையும் பின்னிக் கொண்டு, அடுத்தக் கட்டத்திற்கும் பயணித்துள்ளது என வாசிப்பின் வழி நான் கண்டுகொண்டேன். நிறைவாக எழுத்தாளரின் நாவலுக்கான முதல் முயற்சி பாராட்டிற்குரியது.

(Visited 55 times, 1 visits today)