பேய்ச்சி: மலேசியா -சிங்கை வட்டாரத்தின் முதன்மையான நாவல் (லதா)

ஒரு நாவல் குறித்து, அது வெளிவந்த ஆறேழு மாதங்களில் தொடர்ச்சியான வாசக அனுபவங்கள் மலேசிய – சிங்கப்பூர் சூழலில் வருவது அரிது. ம.நவீனின் ‘பேய்ச்சி’ நாவல் வெளிவந்த சில மாதங்களுக்குள்ளாக இருபதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளால் பல்வேறு வாசிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. தனிமனித ஒழுக்கம் சார்ந்த அவதூறுகள் ஒரு எழுத்தாளரின் மேல் விழும்போது மௌனம் சாதிக்கும் சூழலில், பேய்ச்சி நாவலுக்கு ஆதரவாக வெளிவந்த குரல்கள் பெரும்பாலும் பெண்களுடையவை என்பது ஆச்சரியமளிக்கிறது. மேலும், எழுதப்பட்ட கட்டுரைகளில் காணப்படும் விமர்சனப் பார்வை வல்லினத்தின் பத்தாண்டுகால முயற்சியின் பலனென உணர முடிகிறது. விரிவாக வாசிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்ட ஒரு நாவல் குறித்து  எழுதுவதற்கு சில காரணங்கள் உண்டு.

Continue reading

காலம் தாண்டி நிலைக்கும் பேய்ச்சி (ப.தெய்வீகன்)

நாவல் என்பது காலமாற்றத்தின் இலக்கிய வடிவம்.

காலமாற்றத்திற்குள் தன்னை தொடர்ச்சியாக புதுப்புத்திக்கொள்கின்ற பண்பாட்டு கூறுகள் மீதான ஆழமான அவதானிப்புக்கள், அந்த மாற்றங்களுக்குள் தன்னை ஒப்புக்கொடுகின்ற மானுட உணர்ச்சிகள், அவற்றின் மீதான மதிப்பீடுகள் ஆகியவற்றை நுட்பமாக பேசுகின்ற நாவல்கள் காலம்தாண்டிய பிரதிகளாக இலக்கியத்தில் நிலைபெறுகின்றன.

Continue reading

உள்மடிப்புகளால் உயிர்க்கும் பேய்ச்சி (பவித்திரா)

காலத்தைக் கிழித்துக் கொண்டு வரும் இயற்கையின் பூதாகரமான கரங்களால் இந்த நாவல் தன்னைத் தானே வடித்துக் கொண்டதாகதான் என்னால் கற்பனை செய்ய முடிகிறது. இந்த நாவலுக்குள் வந்து போன ஒவ்வொரு வாழ்க்கைக்குமான துயரம் ஓர் இரும்பு பிடி போல நம்மை உலுக்குபவை. இறுதியில் இந்த வாழ்க்கை, துயரத்தைப் போர்த்திக்கொண்ட வெறும் தூசுபடலம்தானோ என்ற வெறுமையின் உச்சத்தைக் கண்டடைகிறேன்.

Continue reading

பேய்ச்சி: பேருரு அன்னையுள் பேயுரு (கி.இ.உதயகுமாரி)

என் பால்ய வயதிலிருந்தே என் வீட்டில் முருகன்தான் பிரதான சாமியாக இருந்தார். அவர் பக்கத்தில் விநாயகர், ராமர், கருமாரிஅம்மன். பட்டணத்திற்கு குடிபெயர்ந்த பிறகுதான் பேச்சியம்மன் அறிமுகமானாள். கையில் குழந்தையுடன் இருந்தவளைப் பேச்சிய்யம்மன் என்றார்கள். இன்னொரு கோயிலில் மடியில் ஒரு பெண்ணைக் கிடத்தி வயிற்றைக் கிழித்த கோலத்தில் இருந்தது. அதுவும் பேச்சியம்மன் என்றார்கள். கர்ப்பிணி பெண்களின் வயிற்றைக் கிழித்துக் குழந்தையை எடுத்துத் தின்றுவிடும் சாமி என்ற அச்சம் என்னை அதன் அருகில் போகவிடாமல் தடுத்தது. கொஞ்சகாலத்திற்குப் பிறகு வேறொரு கோயிலில் கைநிறைய கண்ணாடி வளையல்களுடன் சாந்தமான கோலத்தில் பெண்மையின் அம்சமாய் நின்றிருந்ததும் பேச்சிதான்.

Continue reading

பேய்ச்சி: தமிழர் மானுடவியல் ஓர் அலசல் (கி.இளம்பூரணன்)

யானைகளைக் குண்டலமாய், மலைப்பாம்பை முலைவடமாய் அணிந்த உக்கிரமான பேச்சியம்மனை எழுத்தாளர் ஜெயமோகனின் ‘படுகை’ சிறுகதையில் வாசித்திருக்கலாம்.  அது ஆச்சரியமான தோற்றம்தான். வழக்கத்தில் இல்லாத தோற்றம். ஆனால் பேச்சியம்மன் அவ்வாறான தோற்றத்தில்தான் குமரி நிலத்தில் காட்சியளிப்பதாக ஜெயமோகன் ஓர் உரையில் கூறுகிறார். நாட்டார் தெய்வங்கள் அவ்வாறான தோற்றம் எடுக்கக்கூடியவைதான். இதே பேச்சியம்மன்தான் மதுரை சிம்மக்கல்லில் வேறொரு தோற்றத்தில் அருள்பாலிக்கிறாள். தோற்றங்களைப் போலவே அந்த நிலத்தில் தெய்வம் உருவானதற்கான கதைகளும் சில வேறுபாடுகளைக் கொண்டிருப்பதுண்டு. இந்தக் கதைகள் அனைத்துமே மக்களின் கண்ணோட்டங்கள், பரிபாஷைகள், அவர்கள் வகுத்தறிந்த பார்வைகள் என்றும் அந்தக் கண்ணோட்டங்கள் மூலமாகவே அவர்கள் வெளியுலகை, உணர்வுகளை, மதிப்பீடுகளை, வாழ்க்கையை வசப்படுத்தி வைத்திருந்தார்கள் என்கிறார் லக்‌ஷ்மி மணிவண்ணன். (தெய்வங்கள், பேய்கள், தேவர்கள்).

Continue reading

பேய்ச்சி: அன்னையின் பேய்மையும் அதீதத்தின் திரிபும் (அழகுநிலா)

‘பேய்ச்சி’ நாவலைப் பற்றிய எனது வாசிப்பனுபவத்தை எழுதுவதற்கு முன்பு பேச்சியைப் பற்றிய எனது அறிதல்களையும் அனுபவங்களையும் முதலில் எழுத விரும்புகிறேன். என்னுடைய சிறுவயதில் அதிர்ச்சி அளிக்கக்கூடிய அந்தச் சம்பவத்தைப் பார்த்தேன். அம்மாச்சி வீட்டிலிருந்த நாய் ஒன்று குட்டிகள் ஈனுவதைச் சிறுவர்கள் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தோம். திடீரென்று நாங்கள் எதிர்பார்க்காத வகையில் நாய் தனது குட்டி ஒன்றைச் சாப்பிட ஆரம்பித்தது. நான் ஓடிச்சென்று அம்மாச்சியிடம் விஷயத்தைச் சொல்ல “பெத்தவளுக்கு இல்லாத உரிமையா? தின்னுட்டுப் போகட்டும் விடு” என்று அலட்டிக்கொள்ளாமல் பதில் அளித்ததை அந்த வயதில் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. தாய்மையின் வேறொரு பரிமாணத்தைப் பற்றிய குழப்பம் முதன் முதலில் அன்றுதான் என் மனதில் நுழைந்தது.

Continue reading

தாமின் புறுவது உலகின் புறக்கண்டு

உலகியல் சார்ந்த அடைவுகள் குறித்த பதிவுகளை நான் பொதுவாகவே எழுதுவதில்லை. அவை பெரும்பாலும் தொழில்திறனோடும் அதன் லாபங்களோடும் தொடர்புடையவை. தொழில் சார்ந்த அடையாளத்தை தனது அடையாளமாகக் கொண்டிருப்பவர்களுக்கு அதுவே முதன்மையானது. அரசாங்கக் கருத்தரங்குகளில் கலந்துகொள்வது, உயர்பதவிகளை அடைவது, சொத்துகள் வாங்குவது, இயக்கங்களின் செயற்குழுவில் இருப்பது, தொழில் சார்ந்த விருதுகள் வாங்குவது போன்றவற்றை வெற்றிகளாக நம்புபவர்கள் தாங்கள் செய்யும் தொழிலை தங்கள் அடையாளமாகக் கொண்டிருப்பவர்கள். அது தவறும் அல்ல.

Continue reading

கடிதம்: இலக்கிய அறம்

ZOOM நேர்காணல்

வணக்கம் நவீன் அவர்கள். தங்களின் zoom உரையாடலில் எனக்கு ஒரு கேள்வி இருந்தது. அதை கேட்க சூழல் அமையவில்லை. நேரநிர்வகிப்பை நீங்கள் எவ்வாறு மேற்கொள்கிறீர்கள். வல்லினம் திட்டங்களை எவ்வாறு நேர்த்தியாக வடிவமைக்கிறீர்கள். அதை சொன்னால் எங்களைப் போன்றவர்களுக்குத் தெளிவு கிடைக்கும். உதவியாக இருக்கும். மேலும் இன்னொரு கேள்வி. விருப்பம் இருந்தால் பதில் சொல்லலாம். (இல்லாவிட்டால் தனியாக அனுப்பலாம்) அரசாங்க ஊழியராக இருந்துகொண்டு சர்ச்சைகளில் ஈடுபடுவது சிக்கலாக இல்லையா? பாதிப்புகளை எதிர்கொள்ளவில்லையா?

பாரதி.

Continue reading

ஒலிப்பேழை: கடிதம் – சிவமணியன்

சிறுகதை: ஒலிப்பேழை

அன்புள்ள நவீனுக்கு,
நலம். மிக்க நலத்துடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.

மதுரைக்கு மேற்கில் தேனி செல்லும் சாலையின் நேரிணையாக உள்ள மலைத்தொடர் நாகமலை எனப்படுகிறது. வறண்ட தாவரங்களால் அடர்ந்து, பெரும்பாலும் செங்குறுங்கற்களாலான மர்மத் தனிமை கொண்ட குட்டி மலைத்தொடர் அது. எதிர்க்காற்றின் செம்மண் தூசு கண்களை நீர்க்க வைக்க வைக்கும் அந்தப் பகுதிதான், வடிவேலுவிடம் பஞ்சாயத்து பேசிய சங்கிலி முருகன் தயாரித்த பெரும்பாலான திரைப்படங்களின் பின்புலம்.

Continue reading