‘லியாங்ஸு பண்பாட்டுக் கருத்தரங்கு’ எனும் தலைப்பில் நடைபெற்ற அனைத்துலகச் சந்திப்பில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டபோதே அதன் தலைப்பில் ஈர்க்கப்பட்டு லியாங்ஸு பண்பாடு குறித்து ஆராயத் தொடங்கியிருந்தேன். மிகக்குறைவாகவே தமிழில் அதுகுறித்து எழுதப்பட்டிருந்தது.
உலகின் தொன்மையான பண்பாடுகள் குறித்து பள்ளிக் காலத்தில் இருந்தே படித்திருப்போம். அவற்றை இப்படித் தொகுத்துக்கொள்ளலாம்.
அ. இன்றைய ஈராக் பகுதியில் உருவான மெசபத்தேமியா நாகரிகம் (Mesopotamia) (கி.மு. 3500 – கி.மு. 539). உலகின் முதல் நகரங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதி இது. இங்கு கீனஃபோர்ம் (cuneiform) எழுத்துமுறை அமுலில் இருந்தது. ஹமுராபி சட்டமும் அமுலாக்கத்தில் இருந்தது. ஹமுராபி என்பது பாபிலோனின் ஆறாவது மன்னனின் பெயர். பாபிலோன் மெசபத்தோமியாவின் ஒரு நகரம் மட்டுமே.
ஆ. நைல் நதியின் அருகே உருவான மிஸ்ரின் நாகரிகம் (Egyptian Civilization) (கி.மு. 3100 – கி.மு. 30) தனிப்பட்ட முறையில் எனக்கு ஈர்ப்பானது. இங்குள்ள பிரமிடுகளின் படங்களை சின்ன வயதிலிருந்தே நாளிதழ்களில் வெட்டிச் சேகரித்து வந்துள்ளேன். இவர்களின் கணித முறை, கட்டுமான நுட்பம், பிரமிடுகள், அவற்றை ஒட்டிய நம்பிக்கைகள் அசாதாரண கனவுகளை உருவாக்கக்கூடியவை.
இ. அடுத்து இன்றைய பாகிஸ்தானில் அமைந்துள்ளது சிந்து வெளி நாகரிகம். (Indus Valley Civilization, கி.மு. 3300 – கி.மு. 1300) இங்கு ஹரப்பா, மொகஞ்சதாரோ நகரங்களின் தனித்தன்மை அதன் திட்டமிடல்தான். கழிவு நீர் செல்லும் பாதைகள், முறையான வீதிகள் குறித்தெல்லாம் நான்காம் ஐந்தாம் படிவத்தில் படித்தபோது ஆச்சரியமாக இருந்தது.
ஈ. ஏறக்குறைய கி.மு. 2100 – கி.மு. 221 காலத்தில் இருந்த சீன நாகரிகம் (Ancient Chinese Civilization) மஞ்சள் நதிக்கரையில் (Yellow River) உருவானது எனப் படித்திருக்கிறோம். சீன நாகரிகம் எனச் சொல்லும்போது ஷாங் வம்சத்தின் தலைநகராக இருந்த அன்யாங் (Anyang), பண்டைய அரசுகளுக்குத் தலைநகராக இருந்த லோயாங் (Luoyang) போன்ற தொல்லியல் தளங்கள் நினைவுக்கு வரும். இவற்றையெல்லாம்விட ஆகப் பழமையானதுதான் சீனாவில் கி.மு 2977இல் தோன்றிய லியாங்ஸு பண்பாடு. எனவே இந்தப் பயணம் தனித்த தன்மைகொண்டது என்பதை நான் தொடக்கத்திலேயே அறிந்திருந்தேன்.
என் புரிதலில் இந்தக் கருத்தரங்கின் அடிப்படை நோக்கமே 1930களில் தொல்லியல் ஆய்வுகளால் அடையாளம் காணப்பட்ட லியாங்ஸு பண்பாட்டை உலகிற்கு அறிவிப்பதுதான். உலகம் முழுக்கவும் இருந்து எழுத்தாளர்களை வரவழைத்து, பல கோடி செலவு செய்து ஓர் அரசு தன்னிடம் உள்ள பழமையான நாகரிகத்தை உலகம் முழுக்க கடத்த முயல்வது மிகச் சிறந்த முன்னெடுப்பு என்றே சொல்வேன்.
எனவே இந்தக் கருத்தரங்கில் ஓர் அங்கமாக இருந்த லியாங்ஸு தொல்பொருள் காட்சிக்கூடத்தைக் காணவும் அப்பண்பாடு செழித்திருந்த பகுதியில் உலா வரவும் ஆர்வமாக இருந்தேன். அந்த ஆய்வுகள் குறித்து நூல் ஒன்றையும் தரமான முறையில் பதிப்பித்திருந்தனர்.
மதிய உணவுக்குப் பின்னர் எங்கள் பயணம் தொடங்கியது. நாங்கள் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டோம். சீன மொழியில் விளக்கம் வேண்டுபவர்கள் ஒரு குழுவிலும் ஆங்கில மொழியில் விளக்கம் வேண்டுபவர்கள் மற்றொரு குழுவிலும் இடம்பெற்றோம். எங்கள் குழுவில் ஜோனாஸ் லுஷ்சர் இருந்ததால் அவர் பக்கமாக நின்றுகொண்டேன். காதுகளில் அணிய மொழிமாற்றுக் கருவி வழங்கப்பட்டது. அதையும் அணிந்துகொண்டேன்.
லியாங்ஸு அருங்காட்சியகம், ஏறக்குறைய 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய லியாங்ஸு நாகரிகத்தின் கலை, கலாசாரத்தை வெளிப்படுத்தும் களம். பிரம்மாண்டமான கட்டடத்தில் லியாங்ஸு நகரில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களைச் சேகரித்து வைத்திருந்தார்கள். பரிசோதனைகளுக்குப் பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டோம். எங்களுக்கு விளக்கம் சொல்பவர் தொல்பொருளகத்தில் ஒவ்வொரு பகுதியாக அழைத்துச் சென்று விளக்கினார்.
அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ள ஆபரணங்கள், பாத்திரங்கள், கருவிகள் எல்லாம் விவசாயம், மீன்பிடித்தல், வேட்டையாடுதல் ஆகியவை லியாங்ஸு வாழ்க்கை முறையாக இருந்ததைச் சுட்டிக்காட்டின.
கற்காலத்தின் (stone age) இறுதிக்காலத்தில்தான் சீனாவில் ஜேட் கல்லின் பயன்பாடு வந்திருந்திருந்ததை அறிய முடிந்தது. ஜேட் என்பது மிகவும் உறுதியான, பல ஆண்டுகாலத்துக்கு மினுமினுப்பை இழக்காத, அழகான கல். இவை பச்சை, மஞ்சள், வெள்ளை நிறங்களில் இருக்கும். அதிலும் கடும் நிறம், இளநிறம் என பல நிலைகளில் இருக்கும் என விளக்கப்பட்டது.
“ஜேட்டை வெட்டி வடிவமைப்பது மிகவும் கடினமான வேலை. அதை சாதாரணமாக உளிகொண்டு செதுக்கமுடியாது. மணலையும் மூங்கில் கழிபோன்ற கருவியையும் கொண்டு தேய்த்து தேய்ந்து வடிவமைக்க வேண்டும். அத்தனை உறுதியான கல்,” என்றார் வழிகாட்டி.
லியாங்சு மக்கள் ஜேட்டை மிகவும் நேர்த்தியாக வெட்டி வடிவமைத்திருப்பதைப் பார்த்தேன். அவர்களின் கலைத்திறன், கைத்திறனோடு அவர்களது தொழில்நுட்பத் திறனையும் ஓரளவு அறிந்துகொள்ள முடிந்தது.
சீனாவின் மஞ்சள் நதி படுகையிலிருந்து யாங்ஷாவ் (Yangshao) பண்பாடும் லியாங்சு பண்பாடும் ஜேட் பண்பாட்டில் முக்கியமானவை.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட லியாங்ஸுவில் உள்ள கல்லறைகளில் ஏராளமான ‘கொங்’ எனப்படும் நடுவில் குழியிருக்கும் நீள் உருளை வடிவங்கள், ‘பை’ எனப்படும் நடுவில் ஓட்டையுள்ள சக்கரவடிவங்கள், ‘யூ’ எனப்படும் கோடரி வடிவங்கள் மற்றும் பல ஆபரணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றை சடங்குகளுக்கானவை, ஆயுதங்கள், ஆபரணங்கள் என்று மூன்று வகையாகப் பிரிக்கலாம்
அதே நேரத்தில் இங்குக் கண்டெடுக்கப்பட்ட உயர்ரக ஜேட் கற்களினால் ஆன பொருள்கள், அச்சமூகத்தின் பல அடுக்குகள் கொண்ட சமூகக் கட்டமைப்பையும் அதிநவீன தொழில்நுட்பத்திறனையும் காட்டுவதாகக் கூறப்பட்டது. அதிகார பலமிக்க அல்லது குடித்தலைவராக இருந்திருக்கக்கூடும் என நம்பப்படும் மிகச் சிலரது கல்லறைகளை ஆடம்பரமான பொருள்களைக் கொண்டு உருவாக்க பலர் வேலைபார்த்துள்ளனர் என்று விளக்கப்பட்டது.
லியாங்ஸு பண்பாடு, குறிப்பாக லியாங்ஸுவின் ஜேட் பண்பாடு, அதன் சமகாலத்திலும் பிற்காலத்திலும் சீனப் பண்பாட்டில் பரவலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் பெரும்பகுதியில் லியாங்ஸுவின் ஜேட் பண்பாடு பரவியுள்ளதாகச் சொல்லப்பட்டது.
தொடர்ந்து லியாங்ஸு பீங்கான் பொருள்கள் அவற்றின் சிக்கலான வடிவமைப்பு, நேர்த்தியான தன்மைக்குப் பெயர் பெற்றவை. அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பீங்கான் பானை, கிண்ணங்கள் மற்றும் பிற பொருட்கள், அவர்களின் உணவுப் பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறையைப் பற்றிய புரிதலை வழங்கின.
லியாங்ஸு மக்கள், மரத்தைப் பயன்படுத்தி பல்வேறு வகையான பொருள்களை உருவாக்கியுள்ளதைக் காண முடிந்தது. அருங்காட்சியகத்தில் உள்ள மரச் சிற்ப வேலைப்பாடுகள், தச்சு வேலைப்பாடுகள், அவர்களின் கைவினைத்திறனை வெளிப்படுத்தின.
எனக்கு இந்தத் தொல்பொருளகத்தில் மிகவும் ஆர்வத்தைத் தூண்டியது லியாங்ஸு மக்கள் அனைவரும் வழிபட்ட ஒரே தெய்வத்தின் உருவம். மேலே ஒரு கடவுளும் கீழே நரசிம்மனைப் போல நகங்களால் எதையோ பிளக்கும் மிருகமும் கொண்ட வரைபடம். இந்தத் தெய்வத்தின் படம் பல்வேறு பொருட்களில் காணப்படுவதாக அறிந்துகொள்ள முடிந்தது. நான் நெடுநேரம் அந்தத் தெய்வத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். பெரிய கண்கள் கொண்ட நீண்ட நகத்துடனான கோர மிருகத்தின் மேல் அடர்த்தியான கேசம் கொண்ட கடவுள் அது. அந்த வரைபடம் பல்வேறு நுண் அனுபவங்களைக் கொடுக்கக் கூடியதாக இருந்தது. பார்க்கப் பார்க்கப் பல்வேறு படிமங்கள் உருவாயின.
கிட்டத்தட்ட இரண்டுமணி நேர அருங்காட்சி சுற்றுலாவுக்குப் பின்னர், பேருந்து எங்கே இருக்கிறது எனத் தேடி நடக்கத் தொடங்கினேன். மீண்டும் ஜோனாஸ் லுஷ்சரை தனியாக எதிர்கொண்டபோது அவருடன் இணைந்துகொண்டேன். அவர் சொன்னார், ”உன் உரை நன்றாக இருந்தது. நீங்கள் மலேசியாவில் சிறுபான்மையினமா?”
“ஆம்,” என்றேன்.
“அதனால் சிக்கல் உண்டா?”
“உலகம் முழுக்க சிறுபான்மையினருக்கு எவ்வகையான சிக்கல்கள் உள்ளனவோ அந்தச் சிக்கல்கள் அனைத்தும் உண்டு,” என்றேன்.
சிரித்தார். தொடர்ந்து அவரது அடுத்தகட்ட முயற்சிகள், மொழிபெயர்ப்பின் தேவைகள், சுவிஸ் நாட்டில் தங்கி எழுதுவதற்கான வாய்ப்புகள் என விளக்கினார். பேசிக்கொண்டே நடந்ததால் நாங்கள் பாதையைத் தவற விட்டிருந்தோம். ஒரு நெடிய சுற்றில் பேருந்து நிற்கும் இடத்தை வந்தடைந்து அவரவர் பேருந்துக்குத் திரும்பியபோது “உனக்குத்தான் காத்திருக்கிறோம்,” என்றார் ச்சாய் சியாவ்.
பேருந்து 5,000 ஆண்டுகளுக்கு முன்னர் லியாங்ஸு பண்பாடு செழித்தோங்கிய பகுதிக்குப் புறப்பட்டது. அங்கு நாங்கள் இன்னும் சிறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு மின்சார காரில் அந்த பூர்வ நகரத்திற்குள் அழைத்துச் செல்லப்பட்டோம். ஆங்காங்கு மாதிரி மனித உருவங்கள் செயலை நிகழ்த்துவதுபோல வடிவமைக்கப்பட்டிருந்தன.
என் அனுபவத்தில் இதுபோன்ற பகுதிகளைக் காண கொஞ்சம் கற்பனைத் திறன் தேவை. அதன் வழியாக அந்நிலத்தை இன்னும் நெருக்கமாக நிகழ்த்திப் பார்த்து உணர முடியும்.
சீனாவின் தென்கிழக்கு கடற்கரையில் யாங்சே நதிப் படுகையில் அமைந்துள்ள, லியாங்சுவின் தொல்பொருள் இடிபாடுகள் (ஏறக்குறைய கி.மு 3,300 – 2,300) சீனாவின் கற்காலத்தின் பிற்பகுதியில், (neolithic) நெல் சாகுபடியை அடிப்படையாகக்கொண்ட, தொன்மையான ஒரு நாகரிகம் இருந்ததைக் காட்டுகிறது. இரும்புக் காலத்துக்கு முற்பட்ட இந்தக் காலம்தான் வேட்டையாடி, நாடோடிகளாக வாழ்ந்த மனித இனம், நதிக்கரையோரக்களில் குடியேறி விவசாயம் செய்து, விலங்குகளை வளர்த்து வாழத்தொடங்கிய காலம்.
லியாங்ஸு தொல்லியல் பகுதி, நகரத்தின் உள்பகுதி வெளிப்பகுதி எனப் பிரிக்கப்பட்டுள்ளது. நகரத்தின் உள்பகுதியில் பழங்காலம் முதலே நதியின் செல்வாக்கு உண்டு. எனவே நதியே அவர்களுக்கு முக்கியமான போக்குவரத்து. பெரிய அளவில் மண் அணைகள் கட்டி, நீரை சேமித்து, அம்மக்கள் நெல் விவசாயம் செய்தனர். நீர் இங்கு பெரும் செல்வமாக இருந்ததால் இதை நீர் நகரம் என்றே அழைத்துள்ளனர். அவ்வகையில் கிழக்கு ஆசியாவில் முதல் நாகரிகம் தோன்றிய இடமென இதைக் குறிப்பிடுகின்றனர்.
அகழாய்வுகள், மட்பாண்டங்கள், நகர்ப்புற திட்டமிடல், தண்ணீர் சேகரிப்பு அமைப்பு போன்றவற்றுடன், மாறுபட்ட கல்லறைகள் வெளிப்படுத்தும் சமூக படிநிலையும் தொன்மையான நகர்புற நாகரிகத்தின் சிறந்த எடுத்துக்காட்டுகளாக உள்ளன.
இந்நகரத்தைச் சுற்றி வந்தபோது வழங்கப்பட்ட விளக்கங்கள் வழி நீரணைகளே இவர்களின் மாபெரும் சாதனையென தோன்றியது. பதினோரு நீரணைகள் இவ்விடத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளன.
எனக்கு அந்த நேரத்தில் கொஞ்சம் தனிமை தேவைப்பட்டது. நீண்ட நாணல் ரக புற்கள் வளர்ந்திருந்த பகுதிக்குச் சென்று நின்றேன். சூரியன் அஸ்தமிக்கும் நேரம். மனம் ஒருவித எழுச்சி கொண்டது. விருப்பப் படி புகைப்படம் எடுத்துக்கொண்டே இருந்தேன். எந்தப் புகைப்படமும் நான் காணும் அழகைக் காட்டவில்லை. பின்னர் அமைதியாகச் சுற்றிச்சூழும் குளிர்காற்றிடம் உடலைக் கொடுத்துவிட்டு அமைதியாக நின்றேன். அம்மேட்டுப் பகுதியிலிருந்து அந்நிலம் முழுவதும் 5000 ஆண்டுகளுக்கு முந்தைய மனிதர்களின் காண முடிந்தது. கால்நடைகளை ஓட்டிக்கொண்டும் விவசாயம் செய்துக்கொண்டும் ஜேட் கற்களைச் செதுக்கிக் கொண்டும் எங்கும் மனிதர்கள்.
அஸ்ரின் அழைத்தபோது சுய நினைவுக்கு வந்தேன்.
“எல்லாரும் சென்றுவிட்டனர்,” என்றார். மௌனமாக அவரைப் பின் தொடர்ந்தேன்.
மீண்டும் எங்கள் பேருந்துக்கே வந்து சேர்ந்தபோது பெரும்பாலும் சோர்ந்திருதோம். குளிர் மாய ஈட்டிகளாக உருமாறி விரல்களைக் குத்தியது.
“நாம் இந்த இரவு வெளியாகத்தான் வேண்டுமா? இப்படிக் குளிர்கிறதே…” என்றார்.
“பரவாயில்லை. நீ ஓய்வெடு. என்னால் இன்றும் அறைக்குள் அடைந்துகிடக்க முடியாது” என்றேன்.
“சரி அப்படியானால் நானும் வருகிறேன்,” என்றார்.
இரவுலா செல்லத் தயாரானோம்.
- தொடரும்