
எனக்காக வழங்கப்பட்ட இருக்கையில் அமர்ந்தபோது அங்கும் என் பெயர் ஓர் அட்டையில் அதே பிழையுடன் எழுதப்பட்டிருந்ததைக் கண்டேன். ஒரு வேளை ‘வீ’ எனும் நெடில் எழுத்தை ‘W’ போட்டுதான் சமன் செய்ய முடியுமோ என்னவோ. தூக்கம் இன்னும் கண்களில் இருந்தது. பொறுமையாக அரங்கைப் பார்த்தேன்.
முதல்நாளில் இருந்து நான் கண்ட பதாகைகள், அறிவிப்புகள், கொடிகள் எனத் தொடங்கி இன்றைய அரங்கின் மின்திரை வரை கருநீலம் மற்றும் வெள்ளை ஆகிய இரு வண்ணங்களில் மட்டுமே அனைத்தும் இருப்பதை உணர்ந்துகொண்டேன். ஆனால் எங்குமே சீனாவை ஆளும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அடையாளங்கள் இல்லை. எந்தத் தலைவர்களின் படங்களும் இல்லை. இந்தக் கருத்தரங்கை அரசாங்கம் ஏற்று நடத்தினாலும் எவ்வித அரசியல் தலையீடுகளும் இல்லை.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சிதான் சீன மக்கள் குடியரசின் ஆளும் அரசியல் கட்சி. 1921இல் நிறுவப்பட்ட இந்தக் கட்சி 1949 ஆம் ஆண்டில் சீனாவின் ஆட்சியைக் கைப்பற்றியது. இன்றுவரை அந்த ஒரே கட்சிதான் சீனாவை ஆள்கிறது.
என் வலது பக்கம் டாசோஸ் லாம்பிரோபுலஸ் (Tasos Lambropoulos) என்ற ஷாங்ஹாயில் வசிக்கும் கிரீஸ் நாட்டு எழுத்தாளர் அமர்ந்திருந்தார். கிரிஸின் ஏதென்ஸ் நகரில் பிறந்த டாசோஸ் லாம்பிரோபுலஸ் தற்போது சீனாவின் ஷாங்காய் நகரில் வசிக்கிறார். பல ஆண்டுகளாக இரு ஆன்மிக குருமாரைப் பின்பற்றி வரும் இவர், எழுத்துடன் தற்காப்புக் கலைகள், இசை, ஸ்கூபா டைவிங் போன்றவற்றிலும் ஈடுபட்டுள்ளார் என்பன போன்ற தகவல்களை இணையத்தில் படித்து அறிந்துகொண்டேன். டாசோஸ் லாம்பிரோபுலஸ் ஒரு நாவலாசிரியரும் கூட. ‘தி டாட்டர் ஆஃப் தி சன்’ (The Daughter of the Sun), ‘ஸ்டெர்வே டு ஹெவன்’ (Stairway to Heaven) போன்றா நாவல்கள் எழுதியுள்ளார்.

அவருடன் என்ன பேசுவதென தெரியவில்லை. கொஞ்சம் இறுக்கமாகத் தெரிந்தார். நான் ஏதும் மொக்கையான ஆங்கிலத்தில் பேசி, அவர் தான் கற்ற தற்காப்பு கலைகளில் ஒன்றை என் மீது பிரயோகித்து விட்டால் என்ன செய்வது என அமைதியாக இருந்துவிட்டேன். இயல்பான தலையாட்டலுடன் அவருடனான தொடர்பு நிறைவு பெற்றது.
இடது பக்கம் ஒரு சீன எழுத்தாளர் அமர வேண்டும் என்பது தெரிந்தது. முன்னரே இருக்கை அடையாளப் பலகையில் சீனத்தில் பெயர் எழுதியிருந்ததை கவனித்திருந்தேன். சீன மொழி எழுத்தாளர்களின் பெயர்கள் மட்டுமே சீனத்தில் இருந்ததால் வருபவர் சீன எழுத்தாளர் என்பதில் சந்தேகமும் இல்லாமல் இருந்தது. ஆனால் நெடுநேரமாகியும் அப்படி யாரும் வரவில்லை. கொஞ்ச நேரத்தில் ஓர் ஆங்கிலேயர் என் பக்கத்தில் வந்து அமர்ந்தார். ‘ஹாய்’ சொல்ல திரும்பியபோது கொஞ்சம் அதிர்ச்சியடைந்தேன். அசப்பில் புருனோ மன்சர் (Bruno Manser) போல தெரிந்தார்.

பக்கத்தில் இருந்த பெயரட்டை மாற்றம் கண்டதை அப்போதுதான் உணர்ந்தேன். அவர் பெயர் Jonas Luscher. உடனே கூகுளில் தட்டி அவர் குறித்தும் தேடினேன். அவர் சுவிட்சிலாந்து நாட்டுக்காரர் என்று இருக்கவும் மேலும் ஆர்வம் தொற்றிக்கொண்டது. புருனோ மன்சரும் அந்நாட்டைச் சேர்ந்தவர்தான்.
அதற்கு மேல் என்னால் அமைதி காக்க முடியவில்லை. என்னை அறிமுகம் செய்துக்கொண்டேன். நான் பேசுவது புரிந்தால் போதும் என இருந்தது. அவரும் கைகுலுக்கி அட்டையில் இருந்த என் பெயரைப் பார்த்து கூகுளில் டைப் செய்து என் குறித்து மேலும் அறிந்துகொள்ளத் தேடினார். நான் அட்டையில் என் பெயர் தவறாக உள்ளதைக் குறிப்பிட்டு அவர் கைப்பேசியை வாங்கி சரியாக டைப் செய்து காட்டினேன்.
நல்லவேளையாக Words Without Borders, good reads ஆகியத் தளங்களில் என்னைப் பற்றி ஓரளவு ஆங்கிலத்தில் இருந்தது.
“ஓ… நீ அதிக நூல்களைத்தான் எழுதியிருக்கிறாய்.” எனப் புருவம் உயர்த்தினார். “ஓ உன் நூலை அரசாங்கம் தடை செய்துள்ளது… சிறப்பு,” என மகிழ்ச்சியாகத் தலையை ஆட்டினார். பின்னர், “ஆவணப்படங்களையும் இயக்கியுள்ளாய் நீ… சிறப்பு சிறப்பு,” என மீண்டும் கைகுலுக்கவே நான் சற்று இயல்பான நிலைக்குத் திரும்பினேன். ”உங்களைப் பார்க்க புருனோ மன்சர் போல இருக்கிறீர்கள்,” என்றேன். அவர் இனிமையாகச் சிரித்தார். “புருனோ மன்சர் மலேசியாவில் ஒரு ஹீரோ அல்லவா…” என்றார்.
அவர் புருனோவை அறிந்திருந்து மகிழ்ச்சியாக இருந்தது. “எல்லாருக்கும் இல்லை… குறிப்பாக அரசியல்வாதிகளுக்கு,” என்றேன். சிரித்தார்.
என்னால் அவ்வளவு இயல்பாக ஆங்கிலம் பேச முடிவது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. நான் வேலை செய்யும் சூழல், புழங்கும் சூழல் அனைத்துமே தமிழ்ச் சார்ந்தது. ஆங்கிலம் நான் பேசுவது அரிதிலும் அரிது. ஆனால் இப்படியான நேரங்களில் எங்கிருந்தோ வந்து ஆங்கிலம் நாவில் ஒட்டிக்கொள்கிறது. நிச்சயம் என் உச்சரிப்பில், இலக்கணத்தில் தவறு இருக்கும் என அறிவேன். ஆனால் அவருடன் பேச வேண்டும் என்ற ஆர்வமே என்னைப் பேச உந்தியது.

“நீங்களும் அவர் நாட்டில் பிறந்தவர் என அறிந்தவுடன் ஆச்சரியமாக உள்ளது. நான் அவரது ரசிகன். அவர் வாழ்ந்த போர்னியோ காட்டின் அதே பகுதிக்கு மிக விரைவில் ஒரு பயணம் செய்ய உள்ளேன். அவர் பழகிய பெனான் மக்களைச் சந்திக்கச் செல்கிறேன்,” என்றேன்.
அவரும் தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார். “நீ அவர் பெயரை உச்சரிக்கும்போது அமெரிக்க முறையில் சொல்கிறாய். ‘மேன்சர்’ எனச் சொல்லக்கூடாது. மன்சர் என்பதே சரி.” எனத் திருத்தினார். பின்னர், “நான் அவரைப் போலவா இருக்கிறேன்,” என மீண்டும் கூகுளில் தேடி அவர் படைத்தைப் பார்த்து மீண்டும் புருவம் உயர்த்தினார்.
“அவரும் நீங்களும் ஒரே வடிவத்திலான கண்ணாடி வேறு அணிந்துள்ளீர்கள்,” என்றேன். சிரித்தார்.
ஜோனாஸ் லுஷ்சர் (jonas luscher) ஒரு சுவிஸ் – ஜெர்மன் எழுத்தாளார். ஜெர்மன் மொழியில் எழுதுபவர். ஆரம்பப் பள்ளி ஆசிரியராக இருந்து, பின்னர் சினிமா துறையில் தன் பயணத்தை வடிவமைத்துக்கொண்டவர். திரைக்கதை எழுதுவது, தொடர்பாக பயின்றவர். 2013இல் வெளிவந்த அவரது Barbarian Spring என்ற நாவல் பதினெட்டு மொழிகளில் மொழியாக்கம் கண்டுள்ளது. அதுபோலவே Kraft என்ற அவரது இரண்டாவது நாவலும் 2017 இல் சுவிஸ் புத்தக விருதை வென்றது குறிப்பிடத்தக்கது. மிகவும் புகழ்பெற்ற நாவலாசிரியர் ஜோனாஸ் லுஷ்சர் என்பதை அவர் பக்கத்தில் அமர்ந்துகொண்டே கூகுளில் வாசித்துத் தெரிந்துகொண்டேன்.
அவர் அறிமுகம் கிடைத்தது மகிழ்ச்சியாவும் போர்னியோ காடு நோக்கிச் செல்லும் என் பயணம் ஆசிர்வதிக்கப்பட்டதாகவும் உணர்ந்தேன். இருவரும் புருனோ மன்சர் குறித்தும் அவருக்கு என்ன ஆகியிருக்கலாம் என்பது குறித்தும் பேசிக்கொண்டோம். மலேசியாவின் ஆளும் அரசாங்கத்தினால் கட்டப்பட இருந்த நீரணைக்கு எதிராக பெனான் மக்களுடன் இணைந்து போராடிய அவர் காட்டில் திடீரென மாயமாக மறைந்துவிட்டார் எனும் தகவல்களுக்குப் பின்னால் உள்ள சதிகள் குறித்து நான் என் ஊகத்தைச் சொன்னபோது “இருக்கலாம்,” என்றார்.

நான் இன்னமும் புருனோ மன்சர் அறவாரியம் சுவிஸ் நாட்டில் இயங்குவதையும் நான் அவர்களுக்கு என் பயணம் குறித்து ஒரு மின்னஞ்சல் அனுப்பியபோது புருனோ குறித்த நூல்களை எனக்கு இலவசமாக அனுப்பி வைத்ததையும் பகிர்ந்துகொண்டேன். அவர் மேலும் நான் என்ன செய்யலாம் என்பது குறித்து சில ஆலோசனைகள் வழங்கினார்.
அவர் பக்கத்தில் அமர்ந்திருந்த ஒவ்வொரு கனமும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. புருனோ குறித்து நான் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறேன். இன்னொரு நாட்டில் எனக்காக அமைக்கப்பட்ட இருக்கைக்குப் பக்கத்தில் புருனோவின் நாட்டைச் சேர்ந்த, கிட்டத்தட்ட அவரைப் போல தோற்றம் கொண்ட, அவரைப் பற்றி அறிந்த ஒரு எழுத்தாளரைத் தற்செயலாகச் சந்திக்கிறேன்.
உண்மையில் தற்செயல்கள் எல்லாம் தற்செயல்கள்தானா?அல்லது இயற்கை வடிவமைக்கும் நாமறியாத முன் திட்டம் ஒன்றில் கடந்து செல்லும் எதார்த்தமான தருணங்களா? அல்லது மனம் கொண்டுள்ள தீவிரத்திற்கு ஏற்ப இயற்கை உருவாக்கிக் கொடுக்கும் வாய்ப்புகளா?
எனக்குப் புரியவில்லை.
துவக்க விழா எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் தொடங்கியது. சில உரைகள் கச்சிதமாக நிகழ்ந்து முடிந்தன. எல்லா உரைகளும் சீன மொழியில் ஆற்றப்பட்டாலும் அதனை ஏழு மொழிகளுக்கு உடனுக்குடன் மொழியாக்கம் செய்யும் குழு ஒன்று பின்னால் இருந்து இயங்கியது. அங்கு வழங்கப்பட்ட கருவி ஒன்றை காதில் அணிந்துகொண்டு சீனம், ஆங்கிலம், ஃபிரஞ்ச், ரஷியா, அரபிக், ஸ்பானிஷ், பாரசீகம் எனத் தேவைப்படும் மொழியைத் தேர்வு செய்தால் பேசுவதைச் செவிமடுக்கலாம். நான் எவ்வித ஆர்வமும் இல்லாமல் எல்லா மொழிகளையும் மாற்றி மாற்றி கேட்டுக்கொண்டிருந்தேன்.
எப்போது இடைவேளை விடும் ஜோனாஸ் லுஷ்சரைச் சந்தித்த அதிசயத்தை எப்போது அஸ்ரினிடம் சொல்லலாம் எனக் காத்திருந்தேன். காரணம், விமானப் பயணத்திலும் நான் புருனோ குறித்தே அவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். என் ஆச்சரியத்தை அவர் உணரக்கூடும். அதே சமயம் அந்த மண்டபத்தில் எனக்கு ஒரு ஒவ்வாமை இருந்தது.

இரு அழகிய சீனப் பெண்களை மேடைக்கு இரு புறமும் ஏதோ அலங்கார பொம்மைகள் போல நிறுத்தி வைத்திருந்தனர். உலகில் வல்லரசு நாடுகளில் ஒன்றாகவும் கம்யூனிஸ சித்தாந்தத்தைப் பின் பற்றுவதாகவும் சொல்லிக்கொள்ளும் ஒரு தேசம் பெண்களை இன்னமும் மேடையை அலங்கரிக்கும் பதுமைகளாக கையாள்வதைப் பார்க்க ஏமாற்றமாக இருந்தது. அந்தப் பெண்களும் எவ்வித அசைவும் இல்லாமல் அப்படியே நின்றுக்கொண்டிருந்தனர். அவர்களுக்கு அங்கு எந்த வேலையும் இல்லை. அவர்கள் வேலை காலவரையறை இல்லாமல் நிற்பது. பெண்ணை அலங்கார பொம்மையாக மட்டுமே பாவித்தல் எத்தனை அநாகாரீகம்!

இடைவேளை விட்டபோது அஸ்ரினிடம் சென்றேன். அவர் எனக்கு முன் ஓர் ஆச்சரியத்தைச் சொல்லக் காத்திருந்தார். “நவீன், விமானத்தில் வரும்போது நான் விரும்பிப் படிக்கும் Ana Maria Shua எனும் அர்ஜென்டினா நாட்டு எழுத்தாளர் குறித்து சொன்னேன் அல்லவா?”
“ஆம்!”
“கடவுளே… அவர் என் பின்னால் அமர்ந்திருந்தார். இதை நான் எதிர்ப்பார்க்கவே இல்லை,” என்றார்.
தற்செயல்கள் என்பவை மனிதனின் ஆழமான எண்ணங்களின் படியே இயற்கையால் வடிவமைக்கப்படும் தருணங்கள்தான் என எண்ணிக்கொண்டேன்.
“எனக்கு மேடையின் இரு பக்கமும் நிற்கும் சீனப்பெண்களைப் பார்க்க கஷ்டமாக உள்ளது. என் கால்கள் வலிப்பதாக உணர்கிறேன். இப்படி இரு ஆண்களை நிற்க வைப்பார்களா?” என்றேன் சற்று கோபமாக.
“ஆமாம்… அது சரியில்லை,” என்றார்.
பின்னர், முனைவர் ச்சாய் சியாவிடமும் அதையே சொன்னேன். “நானும் கவனித்தேன். ஏன் அப்படி நிற்க வைக்கிறார்கள். பாவம் அவர்கள்,” என்றார். உண்மையில் எனக்கு அச்சூழலை எப்படி யாரிடம் சொல்லி மாற்றுவது எனப் புரியவில்லை. ஒரு அறிவார்ந்த கூட்டத்தில் இப்படி நடக்கும்போது யாராவது ஒருவர் எதிர்வினையாற்ற வேண்டாமா? நூறு பேர் இருக்கும் அந்தக் கூட்டத்தில் யாராவது ஒரு பெண்ணியச் சிந்தனையாளர் இல்லாமலா போய்விடுவார். ஏன் அவரிடம் இருந்து எதிர்ப்புக் குரல் எழவில்லை? குறைந்தபட்சம் அவர்களுக்கு ஒரு நாற்காலியாவது போடச்சொல்லலாம் என எண்ணிக்கொண்டேன். அப்படி எனக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தால் அதை எப்படி ஆங்கிலத்தில் சொல்வது என்றும் எழுதி வைத்துக்கொண்டேன்.
மீண்டும் அரங்கு தொடங்கியது. அந்த பெண்கள் இடம் மாறாமல் நின்றுக்கொண்டிருந்தனர். ஜோனாஸ் லுஷ்சர் என்னை அருகில் அழைத்தார். “அந்தப் பெண்களை ஏன் அப்படி நிற்க வைக்க வேண்டும். இது அநாகரீகமானது.” என்றார். நான் அவரை அந்நிமிடம் கூடுதல் நெருக்கமாக உணர்ந்தேன்.
- தொடரும்