சீனப்பயணம்: அறியப்படாத நூறு மலர்கள் – 6

காலை 9.00 மணிக்குத் தொடங்கிய கருத்தரங்கின் அறிமுக உரைகளும் சிறப்புரைகளும் காலை 11.30க்குள் நிறைவு பெற்றன. மூன்றரை மணி நேரமும் அந்தப் பெண்கள் அங்கேயே நின்றுக்கொண்டிருந்துவிட்டு சிரித்த முகத்துடன் அனைவரும் அரங்கை விட்டு வெளியேறும் வரை காத்திருந்தனர்.

எழுத்தாளன் என்பவன் சமுதாயத்தின் மனசாட்சி என்றால் அவன் பேச வேண்டிய நேரத்தில் பேசியாக வேண்டும். நான் ஜெயகாந்தனை வாசித்து வளர்ந்தவன். ஒடுங்கிப்போவது என் தன்மையல்ல. என் மனதுக்குத் தவறு எனப் பட்டதை நான் ஒரு போதும் வெளிப்படுத்தத் தவறியதில்லை. அப்படிப் பேசியதால் பல்வேறு சிக்கல்களுக்கும் உள்ளாகியுள்ளேன். ஆனால் இப்போதெல்லாம் பெரும்பாலும் என் அணுகுமுறையை மாற்றிக்கொண்டேன். ஒரு மாற்றுக்கருத்தை வெளிப்படுத்துவதன் மூலம் மாற்றம் நிகழவேண்டும். மாற்றம் நிகழ எதிர்த்தரப்பில் உள்ளவர்களிடமும் இணக்கமான சூழல் உருவாக வேண்டும். ‘எதிர்த்தரப்பு என்பது எதிரி தரப்பு அல்ல’ என சண்முகசிவா பலமுறை என்னிடம் அறிவுறுத்தியுள்ளார். அதை மனதில் அடிக்கடி ஏற்றிக்கொள்வேன். பல சமயங்களில் அறியாமையால் மட்டுமே தவறுகள் நிகழ்கின்றன. அதை முறையாக எடுத்துக் கூறினால் மாற்றம் நிகழ்வதையும் கவனித்துள்ளேன்.

இன்னொரு தரப்பும் உண்டு. அவர்கள் சுயநலத்தினால் மட்டுமே இயங்குபவர்கள். தான் செய்வது தவறு என்பதை அறிந்தே செய்பவர்கள். சூழ்ச்சியும் பேராசையும் மட்டுமே அவர்களின் அடிநாதமாக இருக்கும். அப்படியானவர்களின் முகமூடிகளை ஈவிரக்கம் இல்லாமல் கிழித்தெறிவதும் எழுத்தாளனின் கடமைதான். ஆனால் அந்தக் கோபம் அப்படியே வன்மமாக மாறிவிடாமல் நேர்மறை செயல்பாடுகளாய் உருவெடுக்க வேண்டும். தங்கள் சுயநலப்போக்கினால் யார் ஒன்றை தவறாகக் கையாள்கிறார்களோ அதையே சரியாகச் செய்துக்காட்டி சமுதாயத்திற்கு உணர்த்த வேண்டும். இதை தன் செயல்களால் எனக்குப் பயிற்றுவித்தவர் வழக்கறிஞர் பசுபதி.

எப்போதுமே பெரும்பான்மையான சமுதாயம் கேளிக்கைகள் பக்கமே நிற்கும். ஆனால், எல்லாச் சூழலிலும் அறிவார்ந்த மிகச்சிறிய குழு ஒன்று திரண்டு வரும் என்பதையும் நாம் நம்ப வேண்டும். அவர்களே அடுத்தடுத்து சமுதாயத்தை வழிநடத்தும் சக்திகள்.

நான் எனது ஒவ்வாமையை வெளிபடுத்தும் சரியான சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தேன்.

மீண்டும் எங்களை அழைத்து வந்த பேருந்தில் ஏறி நரடா ரிசாட்டுக்கு (Narada Resort) சென்றோம். காலையில் சரியாகச் சாப்பிடவில்லை என்பதால் நேராக மதிய உணவு உண்ணச் சென்றேன். அப்போதுதான் மதிய உணவுக்கான கூப்பனை அறையில் விட்டுவந்தது தெரிந்தது. அறையை நோக்கி நடக்கவே கடுப்பாக இருந்தது. வேறு வழியில்லை.

மீண்டும் கூப்பனை எடுத்து வந்து ரிசாட் உணவகத்தில் நுழைந்தபோது அஸ்ரின் மற்றும் ச்சாய் சியாவ் கைகளைக் காட்டி அழைத்தனர். நான் வருவதாகக் கூறி விரவிக்கிடக்கும் உணவுகளை ஒவ்வொன்றாக ரசித்துப் பார்த்தேன். கோழி, பன்றி, மாடு என பல்வகை மாமிசங்கள், பழங்கள், கீரை, காய்கள், சிறிய கேக்குகள், மீ, கொய்தியாவ் என நிறைந்திருந்தன.

அடுத்த அங்கம் மதியம் 2.30க்குத்தான். அதுவும் நரடா விடுதி மண்டபத்தில் நடைபெற இருந்தது. எனவே பொறுமையாக ரசித்துச் சாப்பிடலாம் என கொஞ்சம் சோற்றைப் போட்டுக்கொண்டு இருப்பதில் கவர்ச்சியாகத் தெரிந்த பன்றி இறைச்சியையும் கோழியையும் தட்டில் வைத்துக்கொண்டு நண்பர்களை நோக்கி நடந்தேன்.

அவர்களின் தட்டைப் பார்த்தபோது என் தட்டை மேசையில் வைக்கத் தயக்கமாக இருந்தது. ச்சாய் சியாவ் தட்டில் பச்சை பசேல் என இருந்த கீரைகளும் பழங்களும் மட்டுமே இருந்தன. அஸ்ரின் சில கேக்குகளுடன் பழங்களைச் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். இவர்களுக்கு மத்தியில் என் தட்டு ஜெகஜோதியாகத் தரை இறங்கியது.

‘என் பசி எனக்கு’ என எண்ணிக்கொண்டு சாப்பிட ஆரம்பித்தேன். அப்போதுதான் ச்சாய் சியாவ் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். ”நாளை நாம் மூவரும் இருவேறு அரங்குகளில் பேச வேண்டும்.” என்றார்.

நான் வாயில் கடித்திருந்த பன்றியை விழுங்குவதா வேண்டாமா என அதிர்ச்சியில் அவரைப் பார்த்தேன். ”டாக்டர் ஃபிலாரன்ஸ் சிறிய குழுவில் மட்டுமே உரையாடல் இருக்கும் என்றாரே,” என்றேன் பரிதாபமாக. குழு உரையாடல் என்பது எனக்கு அல்வா சாப்பிடுவதுபோல. ”அவர் சொல்வதை நான் ஆமோதிக்கிறேன்”, ”ஆமாம்… அவர் சொல்வது சரிதான்”, ”இது நல்ல கருத்து,” எனக்கூறிக்கொண்டே மண்டையை மாங்கு மாங்கென ஆட்டிக்கொண்டே தப்பித்துவிடலாம். கல்லூரி நேர்முகத்தேர்வுக்கெல்லாம் அந்த உத்தியைத் தான் பயன்படுத்தினேன். ச்சாய் சியாவ் கூறுவது தனி அரங்கு. பலர் முன்னிலையில் பேச வேண்டும். அவர் சீன மொழியில் பேசிவிடுவார். நானும் அஸ்ரினும் ஆங்கிலத்தில் பேச வேண்டும். அதற்குப் பிறகு சாப்பாடு இறங்கவில்லை. நானும் அஸ்ரினும் அன்று இரவில் நகரத்தைச் சுற்றலாம் எனத் திட்டமிட்டிருந்தோம். இனி அதற்குச் சாத்தியமில்லை. மறுநாளைய அரங்குக்குத் தயார் செய்துக்கொள்ள வேண்டும் எனக் கிசுகிசுத்துக்கொண்டோம்.

இன்னொரு ரவுண்டில் எடுக்கலாம் என குறி வைத்திருந்த வேறு சில உணவு பதார்த்தங்களை எடுக்காமலேயே அறைக்கு ஓய்வெடுப்பதாகக் கூறிச்சென்றேன்.

‘படிக்காதவன்’ திரைப்படத்தில்  நடிகர் விவேக் கண்ணாடி முன் நின்று கொஞ்ச நேரம் அழுதுவிட்டு, ”நீ ஏன் அழுவுற… நீ கேங் லீடர்,” என்பாரே அதே நிலைதான் எனக்கும். பெரிய கண்ணாடி முன், கோட்டுடன் இருந்த என்னை நானே உற்றுப் பார்த்து பரிதாபப்பட்டேன். ”ஏன் அழுவுற… நீதான் பெரிய எழுத்தாளன் ஆச்சே… சமாளிச்சிடுவ,” என என்னை நானே தேற்றிக்கொண்டேன்.

மீண்டும் அரங்கு சரியாக 2.30க்குத் தொடங்க இருந்ததால் 2 மணிக்கெல்லாம் அங்குப் போய் நின்றுக்கொண்டேன். ‘creativity of literature: Resonance of world Literature and Development’ எனும் சுவாரசியமான தலைப்பில் உரைகள் இருந்தன.  வெளியே சிறிய வடிவிலான கேக்குகள் அடுக்கி வைப்பட்டிருந்தன. இன்னும் அரை மணி நேரம் இருந்ததால் கேக்குகளைச் சுவைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது ஒரு சீனப் பெண் தன்னை நிருபர் என அடையாளம் கூறிக்கொண்டு என்னிடம் சில கேள்விகள் கேட்க முடியுமா என்றார். அவர் ஆங்கிலம் கொஞ்சம் துவண்டிருந்ததால் என் ஆங்கிலத்தில் எனக்கு நம்பிக்கை வந்தது.

“முடியும்,” என்றேன்.

“உங்களைப் பற்றி கூறுங்கள்,” என்றார்.

‘இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லத்தானே நான் பிறந்தே இருக்கிறேன்’ என மனதில் நினைத்துக்கொண்டு மிக விரிவாகவே என்னைப் பற்றிக் கூறினேன். அதற்குள் அஸ்ரினும் ச்சாய் சியாவும் வந்திருந்தனர். தூரத்தில் நின்றபடி நான் நேர்காணல் கொடுப்பதை சிரித்தபடி பார்த்துக்கொண்டிருந்தனர். அஸ்ரின் என்னைச் சில படங்கள் எடுத்தபோது கூச்சமாக உணர்ந்தேன்.

அந்த நேர்காணல் முழுக்கவே என் படைப்புகள், நான் என்ன எழுதுகிறேன் என்பதாக அமைந்தது. அது முடிந்த கொஞ்ச நேரத்தில் இன்னொரு இணையத் தொலைக்காட்சியில் இருந்து இளம் நிருபர் ஒருவர் வந்தார். ”உங்களிடம் சில கேள்விகள் கேட்க வேண்டும்,” என்றார். டாக்டர் ச்சாய் சியாவைப் பார்த்தேன். எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் அவர், அன்று கூடுதல் சிரிப்புடன் உற்சாகமாகக் கையசைத்தார்.

”சீன தேசத்துக்கு வந்திருக்கிறீர்கள். இந்நாட்டைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்றார்.

”நான் நேற்று இரவு வந்தேன். இன்று முழுவதும் ஒரு கட்டடத்திற்குள் இருக்கிறேன். எனக்கு என்ன தெரியும்?” என்றேன்.

“ஏதாவது சொல்லலாமே,” என்றார்.

“நவீனமும் அமைதியும் ஒருசேர இணைந்துள்ள நகரமாக ஹாங்சொ தெரிகிறது,” என்றேன்.

அந்தப் பெண் மகிழ்ச்சியடைந்தார். ”உங்கள் நாட்டு சீனர்களும் இங்குள்ள சீனர்களுக்கும் ஏதும் வித்தியாசம் உண்டா?” என்பது அவரது அடுத்தக் கேள்வி.

“நான் வந்தே முழுமையாக ஒரு நாள் ஆகவில்லையே,” என்றேன் மீண்டும் பரிதாபமாக.

“அதனால் பரவாயில்லை. ஏதாவது சொல்லுங்கள்,” என்றார் உற்சாகமாக.

எனக்கு அவரைப் பார்க்கப் பாவமாக இருந்தது. யுவதி அவர். சீனாவில் கூகுள், யூடியூப் போன்றவை இல்லை. ஆனால், அதுபோன்ற ஏதோ ஒரு தளத்திற்காக இந்த நேர்காணலைச் செய்கிறார் எனப் புரிந்துகொண்டேன். அவர்களிடம் இருந்த எளிய கருவிகள் அதை வெளிபடுத்தின. வெளிநாட்டில் இருந்து வருபவர்களிடமிருந்து பாராட்டுச் சொற்களை எதிர்ப்பார்க்கிறார் என்பது புரிந்தது. மலேசிய எழுத்தாளர் சங்கத்தில் மட்டும் இவரை இணைத்துவிட்டால் ஒரே வருடத்திலேயே தலைவராக வந்துவிடுவார் எனத் தோன்றியது.

“சீனா தேசத்தைச் சேர்ந்த சீனப்பெண்கள் உங்களைப் போல அழகாக இருக்கிறார்கள்,” என்றேன். கேமராவை வைத்திருந்த பையன் சிரித்தான். அவர்களுக்குள் சீனத்தில் ஏதோ உற்சாகமாகப் பேசிக்கொண்டனர். நான் அப்படியே நழுவி விட்டேன். உண்மையில் எனக்கு ஆங்கிலத்தைக் கையாள்வதில் உள்ள பயம் குறைந்திருந்தது. என் அறிவின் மீது எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. அங்கு வந்திருக்கும் யாருக்கும் நான் குறைந்தவன் இல்லை. ஆனால் அதை வெளிபடுத்தும் கருவியான மொழி பயன்பாட்டில்தான் சிக்கல் இருந்தது.  

பேராசிரியர் ஃபன் பிக் அங்கு வந்திருந்தார். அவருடன் சாய் சியாவ் மற்றும் அஸ்ரின் ஆகியோர் இணைந்துகொண்டு என்னைக் கேலி செய்யத் தொடங்கினர்.

“அதென்ன உன்னை மட்டும் நேர்காணல் செய்கிறார்கள். எங்களையெல்லாம் யாரும் கண்டுக்கொள்ளவில்லை,” என்றார் பேராசிரியர் ஃபன் பிக்.

“ஆமாம், இங்குச் சீனர்களுக்கு முக்கியத்துவம் இல்லை. சீனர்கள் அல்லாதவர்களையே தேடித் தேடி நேர்காணல் செய்கிறார்கள். இன்று தொலைக்காட்சியைத் திறந்தால் உன் முகம்தான் எல்லா சேனலிலும் வரப்போகிறது,” என சாய் சியாவ் கூறவும் அனைவரும் சிரித்தனர்.

“அதுதான் கருப்பு நிறத்தின் மகிமை,” எனக்கூறி சிரித்தேன்.

‘ஆமாம்… இங்கு நீயும் ஒரு ஆப்பிரிக்க எழுத்தாளரும் மட்டுமே கருப்புத்தோல் காரர்கள். எனவே தனியாகத் தெரிகிறீர்கள்,” என்றார்.

“பாவம்… அஸ்ரின். அவரையும் யாரும் நேர்காணல் செய்யவில்லை,” பேராசிரியர் ஃபன் பிக் கூறவும் மீண்டும் சிரிப்பலை. அஸ்ரின் ‘ஆமாம்’ என்பதாக முகத்தை வேடிக்கையாகச் சோகமாக்கினார்.

உரையாடல் உற்சாகமாகச் சென்றபோது ஒரு சீனப் பெண் என் அருகில் வந்து, “நீங்கள் எழுத்தாளர் நவீனா? உங்களை ஒரு சிறப்பு நேர்காணல் செய்யலாமா?” என்றார். நான் மூவரையும் பார்க்க, அவர்கள் ‘போ போ’ என குறும்பான சிரிப்புடன் வழியனுப்பிவிட்டு கருத்தரங்கு அறைக்குள் நுழைந்தனர்.

வந்திருந்தவர் அரசாங்கத்தின் முதன்மையான தொலைக்காட்சியைச் சேர்ந்தவர். இரண்டு ஒளிப்பதிவு கருவியுடன் வந்திருந்தார். ‘நாளை ஸ்டூடியோ செல்லலாமா?’ எனக் கேட்டவர் அது சாத்தியப்படாத சூழலில் சரியான இடமாகத் தேடி நேர்காணலைத் தொடங்க ஏற்பாடுகள் செய்தார். எனது நூல்களை எடுத்து வந்துள்ளேனா எனக்கேட்டு உடனே அவற்றைக் கொண்டுவர பணித்தார். நானும் அவற்றை அறையில் இருந்து எடுத்து வந்தேன்.

அது கொஞ்சம் தரமான நேர்காணல்தான். என்னைப் பற்றிய அறிமுகத்திற்குப் பின்னர், இந்தக் கருத்தரங்கு எனக்கு ஏன் முக்கியமானது எனச் சொன்னேன். என் நூல்கள் குறித்து பேசினேன். மலேசியாவில் தடை செய்யப்பட்ட ‘பேய்ச்சி’ நாவலில் ஒரு சீனப்பெண்தான் இறுதியில் இந்துக்களின் கடவுளாகிறார் எனச் சொன்னபோது ஆர்வமாகக் கேட்டார். எனது மூன்றாவது நாவலில் உள்ள பௌத்த கூறுகளைக் கூறியபோது, ”மன்னிக்கவும் இங்கு மதம் குறித்து பேசுவது இன்னும் சென்ஸடிவ்வான விஷயம்தான். எனவே அதை தவிர்த்து விடலாம்,” என்றார்.

நான் நிறுத்தி நிதானமாகப் பேசினேன். ஒவ்வொரு வார்த்தையாக யோசித்துப் பேச அவகாசம் கொடுத்தார்கள். நான் தடுமாறிய இடங்களில் அவர் உதவியும் செய்தார். அப்பெண் ஆங்கிலப் புலமையுடன் இருந்தார்.

கடைசியாகக், “கருத்தரங்கு ஏற்பாடுகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்றார்.

கிடைத்ததே எனக்கு ஒரு வாய்ப்பு. “மிகச்சிறப்பு. ஆனால் முன்னால் நின்றுக்கொண்டிருக்கும் இரண்டுப் பெண்களுக்கும் ஏற்பாட்டுக்குழு இரண்டு நாற்காலிகள் வாங்கித் தரலாம்,” என்றுக்கூறிவிட்டுச் சிரித்தேன்.

அந்தப் பெண்ணின் முகம் மாறியது. வேறு வழியில்லாமல் அவரும் சிரித்துக்கொண்டார். நேர்காணல் நிறைவுற்றது. என் மனம் அமைதியானது. நாளை நடக்கவுள்ள கருத்தரங்கில் பேசிவிடுவேன் எனும் நம்பிக்கை பிறந்தது.

  • தொடரும்

அறியப்படாத நூறு மலர்கள் – 1

அறியப்படாத நூறு மலர்கள் – 2

அறியப்படாத நூறு மலர்கள் – 3

அறியப்படாத நூறு மலர்கள் – 4

அறியப்படாத நூறு மலர்கள் – 5

(Visited 104 times, 1 visits today)