
காலையில் எந்தப் பதற்றமும் இல்லை. நிதானமாக எழுந்து குளித்துவிட்டு உணவுண்ணச் சென்றேன். விருப்பமான உணவுகளைச் சாப்பிட்டேன். முக்கியமாக வாத்துக்கறி. நான் சிறுவனாக இருந்தபோதிருந்தே வாத்துக்கறி சாப்பிட்டு வருகிறேன். நான் பிறந்து வளர்ந்த ஊரான லூனாஸில் வாத்துக்கறி மிகவும் பிரபலம். கோழியைவிட சற்று கடினமாக இருந்தாலும் எனக்கு அது அவ்வளவு பிடிக்கும்.
நான் பயின்ற இடைநிலைப்பள்ளியில் என் வகுப்பில்தான் வாத்துகளை வளர்த்து லூனாஸ் முழுவதும் விற்பனை செய்பவரின் மகள் படித்தாள். அவள் பெயர் சியாங் நி. மறக்கவே முடியாத பெயர். எப்படியாவது அவளைத் திருமணம் செய்துக்கொண்டால் விரும்பும்போதெல்லாம் வாத்துக்கறி சாப்பிடலாம் எனக் கனவு கண்டதுண்டு. நான் மினி சைக்கிளில் பள்ளிக்குப் போன காலத்தில் அவள் பெயரே தெரியாத ஏதோ வெளிநாட்டு காரில் பள்ளிக்கு வந்திறங்குவாள். பள்ளி உடையை தைத்துதான் அணிவாள். தேவதைகள் இளநீல வண்ண கவுன்தான் அணியும் என அவளைப் பார்த்துதான் அறிந்துகொண்டேன். ஆனால் அவள் என்னைக் கண்டுக்கொள்ளவே மாட்டாள். என்னை மட்டுமல்ல; யாரையுமே அவள் பொருட்படுத்தி பேசியதில்லை. அப்படி கண்டுக்கொள்ளாதப் பெண்களை கேலி செய்துவிட்டு கடந்துவிடுவது வழக்கம். ஏதும் கேட்டு அவளிடம் சரியான பதில் வராவிட்டால் “ஓய் ஈத்தே” எனக் கூச்சல்போட்டு கேலி செய்வேன். அதையும் அவள் பொருட்படுத்தியதில்லை.
இப்படி அகமும் புறமுமாக என் வாழ்வில் வாத்துக்கறி இருந்ததால் சீனாவின் வாத்துக்கறி சுமாரான சுவையுடன் இருந்தது என்றே சொல்வேன்.
ஒரு காப்பிக்குப் பின்னர் லாபிக்குச் சென்றேன்.
முதல்நாள் போலவே பேருந்து காத்திருந்தது. என் பெயர் உள்ள முதல் பேருந்தில் ஏறி அமர்ந்துகொண்டேன். பேருந்தில் யாரும் இல்லை. உள்ளிருந்தபடியே வெளியில் நிற்கும், நடமாடும், பேசிக்கொண்டிருக்கும் மனிதர்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். வெவ்வேறு நாட்டு முகங்கள். வெவ்வேறு பண்பாட்டைக் கொண்ட மனிதர்கள். யாருடைய சத்தமும் பேருந்தினுள் நுழையவில்லை. அது இரு அசையும் அழகிய ஓவியம்போல தெரிந்தது.

கொஞ்ச நேரத்தில் பேருந்தில் பலரும் ஏறினர். மலேசிய குழுவினரின் தலைகள் தெரிந்தன. கொஞ்ச நேரத்தில் அஸ்ரின் வந்து இணைந்துகொண்டார். அன்றைய உரை குறித்துப் பேசிக்கொண்டோம். நேற்று எங்கும் போகாமல் நல்லப் பிள்ளையாக அறையில் இருந்தது வசதியாகி விட்டது இருவருக்கும் திருப்தி. ஆனால், இந்த இரவு அப்படி இருக்கக் கூடாது என முடிவெடுத்துக்கொண்டோம்.
இன்றைய அரங்குகளுக்குப் பின்னர் 5000 ஆண்டுகள் பழைமையான லியாங்சூ நாகரீகம் குறித்து அறிந்துகொள்வதற்கான சுற்றுலா இருந்தது. அதன் பின்னர் இரவில் ஊர் சுற்றத் திட்டமிட்டோம். அப்படித் திட்டமிடுவதே உற்சாகமாக இருந்தது.
அஸ்ரின் மிகச்சிறந்த புகைப்படங்களைத் தன் கைப்பேசியில் எடுத்திருந்தார். நான் சாதாரணமாகக் கடந்து வந்த இடங்களெல்லாம் அவருக்குள் அருமையான காட்சியாகப் பதிவாகியிருந்தது. அவர் கைப்பேசியைப் பார்த்தபடி பயணித்தேன்.
ஜெஜியாங் பல்கலைக்கழகத்தில் எங்களுக்காக Dai Xiao Hua காத்திருந்தார். அவரும் மலேசிய எழுத்தாளர்தான். எங்களுடன் விமானத்தில் வரவில்லை. எங்களைப் பார்த்தவுடன் மகிழ்ச்சியில் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆர்வமாக இருந்தார். குழுப்படம் எழுத்துக்கொண்டோம்.

அப்போது இரு சீன நாட்டுப் பெண்கள் அருகில் வந்து, “நீங்கள் நவீனா?” என்றனர். “ஆம்” என்றேன். “உங்கள் அரங்குக்கு வர ஆவலாக உள்ளோம். சந்திக்கலாம்.” எனச் சொல்லிவிட்டுச் சென்றனர். அவர்கள் வெளிநாட்டில் வசிக்கும் சீனர்களாக இருக்கக் கூடுமெனத் தோன்றியது. சுத்தமான ஆங்கிலம். ஏதாவது நேர்காணலில் பார்த்திருப்பார்களோ என்னவோ.
இரண்டு அரங்குகள் தயார் செய்யப்பட்டிருந்தன. விருப்பம் உள்ளவர்கள் விரும்பிய அரங்கில் சென்று அமரலாம்; விரும்பிய உரைகளைக் கேட்கலாம். ஆனால் பேச்சாளர்கள் குறிப்பிட்ட அரங்கில் மட்டுமே பார்வையாளர்களாகவும் பங்கேற்பாளர்களாகவும் அமர்ந்திருக்க வேண்டும். எங்கு அமர வேண்டும் என்றும் தீர்மானித்திருந்தார்கள்.

முதலிலேயே எங்கள் அரங்குதான். நேற்று நின்றதுபோல இரு பக்கமும் பெண்கள் நிற்காதது நிறைவாக இருந்தது. நான் காதில் மொழிமாற்று கருவியை அணியவில்லை. நான் என்ன பேசப்போகிறேன் என்பதில் மட்டும் கவனத்தைக் குவித்தேன். அரங்கில் பார்வையாளராக Jonas Luscher இருந்தார். அந்த இரு சீனப்பெண்களைப் பார்க்க முடிந்தது.
எங்கள் அரங்கின் தலைப்பு, ‘Creativity of Literature: Resonance of World Literature and Development of Human Society’.
என்னையும் அஸ்ரினையும் தவிர அனைவரும் சீன மொழியில் பேசினர். ஒருவர் அரபு மொழியில் பேசினார். என் முறை வந்தது. நான் பின் வருமாறு உரையாற்றினேன்.

அனைவருக்கும் வணக்கம்.
நான் நவீன், மலேசியத் தமிழ் எழுத்தாளன்.
நான் என்னை மலேசியத் தமிழ் எழுத்தாளன் எனச் சொல்வதில் காரணமுண்டு. ஆம்! நான் மலேசிய மண்ணின் வாழ்வை தமிழ் மொழியில் எழுதுகிறேன். என் தாய்மொழி தமிழ். ஆனால் நான் ஒரு மலேசியன்.
தமிழ் மொழியில் இலக்கியங்கள் எழுதப்படுவதை நீங்கள் அறிந்திருக்கலாம். இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் தமிழ் இலக்கியங்கள் படைக்கப்படுகின்றன. ஆனால் மலேசியாவில் வாழும் தமிழ் எழுத்தாளர்கள் தனித்துவமானவர்கள். எங்கள் வாழ்க்கை தனித்துவமானது. இன்னும் சொல்வதானால் 2000க்குப் பின்னால் உருவான மலேசியத் தமிழ் இலக்கியம் முற்றிலும் புதிய தன்மை கொண்டது.
எங்களுக்கு மூத்த எழுத்தாளர்கள் தங்களை மலேசிய எழுத்தாளர்கள் எனச் சொல்லிக்கொண்டாலும் அவர்களின் படைப்புகளில் சொந்த ஊர் குறித்து ஏக்கங்களும் மண்ணை விட்டுப் பிரிந்த துயரங்களும் இருந்தன. நாங்கள் பிரிட்டிஷ் அரசால் மலேசியாவுக்கு ரப்பர் தோட்டங்களில் வேலை செய்ய கூலிகளாக அழைத்துவரப்பட்டோம். எனவே சொந்த நிலம் குறித்த ஏக்கங்கள் இருப்பது இயல்பு என அறிவீர்கள்.

அந்த வம்சாவழியில் வந்த அடுத்தத் தலைமுறையினர் மலேசிய வாழ்வை எழுதினாலும் அவர்கள் தமிழ் வாழ்க்கையை மட்டுமே எழுதினர். வேறு வாழ்க்கையைப் பார்க்கும் வாய்ப்பு அவர்களுக்கு அமையவில்லை.
ஆனால் பரந்த மலேசிய வாழ்வை பார்க்கும் தலைமுறை உருவானபோதும் அவர்கள் இந்தியாவின் பிரபல வணிக இலக்கிய பாதிப்புகளுடன் எழுதினர். மலேசியாவின் தனித்துவமான பல்வேறு பண்பாடுகளை உள்ளடக்கிய தமிழ் படைப்புகள் 2000க்குப் பின்னர்தான் உருவாகத் தொடங்கின.
அப்படி எழுதத் தொடங்கிய எழுத்தாளர்களின் பிரதிநிதி நான்.
எங்களுக்கு மூத்தவர்கள் ரப்பர் தோட்டங்களில் வேலை செய்ய இந்தியாவில் இருந்து அழைத்துவரப்பட்டவர்கள். ஜப்பானியர் ஆட்சியின்போது கைவிடப்பட்டவர்கள்.
வறுமையும் கொடுமையும் பல சந்தித்தாலும் நாங்கள் மொழியையும் இலக்கியத்தையும் தக்க வைத்துள்ளோம். ஆனால் பல்வேறு இனங்களின் பண்பாடுகள், பழக்க வழக்கங்கள் எங்களுடன் கலந்துள்ளது. இந்த கலவையின் தனித்தன்மையை இலக்கியங்களில் எழுதுவது முக்கியம் என நான் கருதுகிறேன். அப்படிதான் மலேசியாவில் தடை செய்யப்பட்ட என் நாவல் ‘பேய்ச்சி’யில் சீனப் பெண் எவ்வாறு இந்தியர்கள் நாட்டார் தெய்வமானாள் என எழுதியுள்ளேன். அப்படித்தான் குவான் யின் போன்ற இந்திய நிலத்தில் இருந்து புறப்பட்ட குருமார்கள் சீன தெய்வங்களாக மாறி இப்போது இந்துக்களிடையே இன்னொரு தெய்வமாக நுழைகிறார் என எழுதியுள்ளேன். எங்களைப் போன்று பிழைப்பிற்காக மலேசியாவில் வாழும் அந்நியத் தொழிலாளர்கள் தங்கள் பண்பாடுகளைத் தக்க வைக்க எவ்வாறு போராடுகிறார்கள் என்றும் எழுதியுள்ளேன்.
எங்களைப் போன்ற பல்வேறு பண்பாடுகளைக் கொண்ட நாட்டின் தன்மையை Multiculturalism எனக் குறிப்பிடுவதுண்டு. ஒரு பெரும்பான்மைச் சமூகம் மற்ற சிறுபான்மைச் சமூகங்களின் பண்பாடுகளை இணைத்துக்கொண்டுள்ளது என அதைப் பொருள் கொள்ளலாம். ஆனால் இங்கு பண்பாட்டுப் பன்மைத்தன்மை (Cultural Pluralism) என்பது தேவையாக உள்ளது. அதன் வழியாகவே பல்வேறு பண்பாட்டு மக்களின் சிறந்த அம்சங்களை, தனித்தன்மைகளை அறிந்து வைத்திருக்க முடியும். இந்த அறிதலே மனிதநேயத்தின் அடிப்படை.
என் படைப்புகள் அப்படியானவையாக இருக்கவே நான் விரும்புகிறேன்.
நன்றி.
நான் உரையாற்றினேன் எனச் சொல்வதை விட குறிப்புகளைப் பார்த்து பேசினேன் எனலாம். பெரும்பாலும் கைப்பேசியில் இருந்து கண்களை எடுக்கவில்லை. பொதுமேடையில் ஆங்கிலத்தில் உரையாற்றி பழக்கம் இல்லாததால் தடுமாற்றம் ஏற்படாமல் இருக்க அதுவே வழியாக இருந்தது.
உரையாற்றி முடிந்தவுடன் விடுதலை உணர்வு ஏற்பட்டது. அஸ்ரினும் என்னைப் போல கைப்பேசி குறிப்புகளைப் பார்த்து பேசினார். நான் என்ன பேசினேன் என நினைத்துக்கொண்டிருந்ததால் அஸ்ரின் பேசியதை கவனிக்கவில்லை.
அவரே கடைசி பேச்சாளர் என்பதால் நிறைவுடன் இருக்கைக்குச் சென்று அமர்ந்தோம்.

தொடர்ந்த அரங்கில் ஜோனஸ் மற்றும் முனைவர் ச்சாய் சியாவ் பேசுவதால் ஆர்வமாக அமர்ந்து கேட்டேன். ‘Science Fiction and exchanges and mutual learning between estern and western civilization’ என்பது அவர்கள் தலைப்பு. ச்சாய் சியாவ் எப்போதும்போல சிரித்த முகத்துடன் சீன மொழியில் பேசினார். முழுமையான கறுப்பு நிற உடையில் பார்க்க அழகாகத் தெரிந்தார்.

ஜோனஸ் பேசத் தொடங்கும்போது முதலில் பண்பாட்டு பரிமாற்றத்திற்கு மிகவும் உதவியாக இருப்பது மொழி. இந்த அரங்கில் உடனுக்குடன் மொழியை மாற்றி உதவும் பின்னால் இருக்கும் மொழிபெயர்ப்பாளர்களுக்கு நன்றி என்றார்.

மேலும், அறிவியல் புனைவுகளின் அறிவியலுக்கான கலைச்சொற்களைப் பயன்படுத்துவதில் உடன்பாடில்லை என்றவர், எழுத்தாளன் தன் அறிவியல் புனைவுக்கு ஏற்ப புதிய சொற்களை உருவாக்க வேண்டும் என்றது கவர்ந்தது.

தொடர்ந்து இந்த உலகலாவிய கருத்தரங்கின் நிறைவு விழா இடம்பெற்றது. சரியாக 20 நிமிடங்கள் அவ்விழா நிறைவுற்றது ஆச்சரியத்தைக் கொடுத்தது. நாங்கள் கையொப்பம் வைத்த மாதிரி பெரிய புத்தகத்தைக் கொண்டே நிறைவு விழாவை வெற்றிகரமாகவும் கச்சிதமாகவும் செய்து முடித்தனர்.
- தொடரும்