சீனப்பயணம்: அறியப்படாத நூறு மலர்கள் – 8

மதியம் விட்டதை இரவில் பிடித்துவிட்ட திருப்தியுடன் அறைக்குத் திரும்பினேன். இனி நாளைய உரைக்குத் தயாராக வேண்டியிருந்தது. எங்கள் அரங்கில் பத்துப் பேர் பேசுவார்கள் என்றும் ஒருவருக்கு ஐந்து நிமிடம் என்றதும் மகிழ்ச்சியாக இருந்தது. அரங்கில் பேச அழைப்பிதழ் போல ஒன்றைக் கொடுத்திருந்தனர். இதை மலேசியாவில் இருக்கும்போதே கொடுத்திருந்தால் பேருரைக்கே தயார் செய்திருப்பேன்.

அறைக்குச் சென்றவுடன் பால்கனியை நோக்கிச் செல்லவே மனம் உந்தியது. வெட்டவெளி எனக்கு உவப்பானது. காப்பியைத் தயார் செய்துகொண்டு பால்கனிக்குச் சென்றேன். அதற்கு முன்னர்தான் ரிசார்ட் உணவகத்தில் இரண்டு காப்பி குடித்திருந்தேன். ஆனால் அஸ்ரினுடன் பேசிக்கொண்டே குடித்ததால் காப்பியை முழுமையாக இரசித்துக் குடிக்க முடியவில்லை. 

காப்பி என்பது தனிமையில் பருகுவது. சூடாறிய காப்பியைப் பருகுபவர்களுக்கு இரசனையில் குறைபாடு உள்ளது என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை. அதுவும் இப்படிக் குளிர்க்காற்று வீசும் வெட்ட வெளியில் நின்றுகொண்டு காப்பி பருகும்போது உலகில் இனி வேறென்ன இன்பம் உள்ளது எனத் தோன்றியது.

அஸ்ரினுடன் இந்துக்கள் மாட்டிறைச்சி உண்பது குறித்து சற்று விளக்கமாகவே பேசிக்கொண்டிருந்தேன். எனக்கு இதுகுறித்து ஓர் எளிய புரிதலுக்கு வர ஜெயமோகனின் கட்டுரைகளே காரணமாக இருந்தன. எழுத்தாளர் ஜெயமோகன் இதுகுறித்து விரிவாகவே எழுதியுள்ளார். அதை மூலமாகக்கொண்டு தேடினால் பல்வேறு தரவுகள் கிடைக்கின்றன.

ஜெயமோகன் கட்டுரைகளில் உள்ளவற்றை இவ்வாறு தொகுத்துக்கொள்ளலாம்:

அ. வேதங்கள் முதல் மகாபாரதம் வரை இந்துக்கள் மாட்டிறைச்சி சாப்பிட்டற்கான ஆதாரங்கள் உள்ளன.

ஆ. உபநிடத ரிஷிகளில் முதன்மையானவரும் வைதிகப் பிராமணருமான யாக்ஞவல்கியர் மாட்டிறைச்சி உண்டதை தாம் பிரஹதாரண்ய உபநிடதத்தில் எழுதியுள்ளார்.

இ. விவேகானந்தர் மாட்டிறைச்சியை உண்டதுடன் உடல்வல்லமை பெற மாட்டிறைச்சியை உண்ண வேண்டும் என வாதிடவும் செய்தார்.

ஈ. ஒரு காலத்தில் விரிந்த நிலத்தில் லாபகரமான தொழிலாக மேய்ச்சல் இருந்தது. பாலைச் சேமிக்கவோ வினியோகிக்கவும் தொழில்நுட்பமும் சாத்தியமும் இல்லாத சூழலில் நெய்யே மாடுகளிலிருந்து பெறப்படும் முக்கியமான வணிகப்பொருளாக இருந்தது. உணவாகவும் இல்லங்களில் எரிபொருளாகவும் அவை பயன்பட்டன. அப்படித்தான் மாட்டிறைச்சியும் உண்ணப்பட்டது. உண்ணாமல் அத்தனை ஆயிரம் மாடுகளை வளர்க்க முடியாது என்பது எளிய உண்மை.

உ. பின்னர் வேளாண்மைச் சமூகம் வளர்ந்து விளைநிலம் பெருகியபோது மாடுகளின் எண்ணிக்கை குறைந்தபடியே வந்தது. பஞ்ச காலங்களில் மக்கள் மாடுகளைக் கொன்று உண்ணத் தொடங்கிவிட்டால் பஞ்சம் விலகி மீண்டும் மாடுகள் தேவையாகும்போது அவை இல்லாமலாகி விடக்கூடும். ஆகவே பசுக்கொலை தடைசெய்யப்பட்டது.

ஊ. சங்ககாலப் பாடல்கள் தமிழகத்தில் மாட்டிறைச்சி உண்பது இயல்பான களியாட்டமாக இருந்ததைக் காட்டுகின்றன.

ஜெயமோகனின் அக்கட்டுரையை குறிப்பாகக் கொண்டு சமூகவியல் –பொருளியல் காரணங்களால் உருவாகி வந்த மனநிலைகள் நிரந்தரமாக மாற மதநெறியாக அது தன்னை எவ்வாறு உருவாக்கிக்கொள்கிறது என்பதை அறிய முடிகின்றது.  எனக்கு மிகவும் பிடித்த கட்டுரை அது. வெற்றுக் கூச்சலுடன் மாட்டிறைச்சி சாப்பிடுவதை ஒரு புரட்சிச் செயலாகக் கூவும் சூழலில் அல்லது மாட்டிறைச்சி தடையை இந்துக்களின் வெற்றியாகப் பார்க்கும் அரசியலில் இருந்து பன்முகத்தன்மையுடன் கூடிய இந்து மதத்தின் பெருவெளியில் உள்ள அத்தனைச் சாத்தியங்களையும் அக்கட்டுரை பேசுகிறது.

ஜெயமோகன்

இந்தக் கருத்துகளை முன்வைத்து நாமே விரிவான தகவல்களைத் தேடிக்கண்டடைய முடியும்.  ரிக் வேதத்தில் உள்ள சில பாடல்களில் இந்திரனின் பசு, கன்று, குதிரை, எருமை உண்ணும் வழக்கம் குறித்து இடம்பெற்றுள்ளது. உழைக்கும் மக்கள் மாட்டுக்கறி சாப்பிடுவதின் தேவையை விவேகானந்தர் தன் உரையில் கூறுவதையும் குடவாயில் கீரத்தனார், நக்கீரனார் பாடிய அகநானூற்றில் மாட்டிறைச்சி சாப்பிடும் தமிழர்களின் பழக்கங்கள் குறித்தும் பாடல்கள் தாராளமாகவே இணையத்தில் கிடைக்கின்றன.

இவை இப்படி இருப்பதனால் ஓர் இந்து மாட்டிறைச்சியைச் சாப்பிட்டே ஆகவேண்டும் என நான் சொல்ல வரவில்லை. அப்படி சாப்பிடாத இந்துக்களை மட்டம் தட்டவும் எண்ணமில்லை. விவேகானந்தர் சொல்வதுபோல, ”சாமானிய இந்துக்களின் மதம் என்பது வயிற்றில் உள்ளது. எதை உண்பது, எப்படி உண்பது, எங்கே உண்பது என்பதே அவர்களின் மத சிந்தனையாக எப்போதும் பேசப்படுகிறது. அந்த மனநோய்க்கூறிலிருந்து விடுபடாது இந்தியாவுக்கு மீட்பில்லை.” என்பதுதான் முக்கியக் கருத்து.

வெறும் வயிற்றுடன் சம்பந்தப்பட்ட உணவுக் கொள்கையை ஆசாரமாகப் பின்பற்றும் ஒருவன் தன்னைச் சுற்றி உருவாக்கிக்கொள்ளும் அபத்தமான புனிதத்தன்மை என்பது வேடிக்கையானாது. ஆனால் ஜீவகாருண்யத்துடன் கொல்லாமையை ஒருவர் வலியுறுத்துவாரேயானால் அதற்கு தலைவணங்க வேண்டியுள்ளது; அவ்வுணர்வை மதிக்க வேண்டியுள்ளது. சில சமயம் குற்ற உணர்ச்சியும் அடைய வேண்டியுள்ளது.

உண்மையில் நான் வரலாறெல்லாம் அறிந்து மாட்டிறைச்சி சாப்பிடப் பழகவில்லை. ஃபிரான்ஸ் சென்றபோது விமானத்தில் கொடுத்த மாட்டிறைச்சி ருசிக்குப் பழகிவிட்டேன் அவ்வளவுதான். தொடர்ந்து கேரளாவில் மிகச்சுவையான சமையலில் மாட்டிறைச்சியைப் புசித்துள்ளேன். இப்போது என் நண்பர்களில் பலரும் சாதாரணமாக மாட்டிறைச்சியைச் சுவைக்கின்றனர். இன்னும் இளம் தலைமுறையினர் மிக விரைவில் உணவுக்கான எல்லைகளைக் கடந்துவிடக்கூடும் எனத் தோன்றுகிறது. பல்லினம் வாழும் நாட்டில் இந்த எல்லைக் கடத்தல் மிகச் சாதாரணம் என்றே தோன்றுகிறது.

காப்பியைக் குடித்து முடித்தபிறகு மறுநாள் பேசவேண்டிய உரைக்குக் குறிப்பெடுத்தேன். இணைய வசதி பலவகையிலும் உதவியது. நான் மலேசியாவைப் பிரிதிநிதித்து வந்துள்ள ஒரு தமிழ் எழுத்தாளன். நாளைக்கு இலக்கியத்தின் நுட்பங்களைப் பற்றி பேச நிறைய பேர் இருப்பார்கள். நான் பேச வேண்டியது இலக்கியத்தின் வழியாக மலேசியத் தமிழர்களைப் பற்றியே. உலக அரங்கில் என் முன்னோடிகளுக்குச் செய்யும் நன்றிக்கடன் அதுவே.

மனதில் அதை பதிய வைத்துக்கொண்டு உரையைத் தயார் செய்தேன்.

  • தொடரும்


அறியப்படாத நூறு மலர்கள் – 1

அறியப்படாத நூறு மலர்கள் – 2

அறியப்படாத நூறு மலர்கள் – 3

அறியப்படாத நூறு மலர்கள் – 4

அறியப்படாத நூறு மலர்கள் – 5

அறியப்படாத நூறு மலர்கள் – 6

அறியப்படாத நூறு மலர்கள் – 7



(Visited 103 times, 1 visits today)