
நேர்காணல் முடிந்தபின்னர் வெளியில் நின்றுகொண்டிருந்தேன். கிட்டத்தட்ட கருத்தரங்கு முடியும் தருவாயில் இருந்ததால் உள்ளே செல்லச் சங்கடமாக இருந்தது. வெளியே மாதிரி புத்தகம் ஒன்றை பெரிதாக வைத்திருந்தார்கள். அதில் ஒவ்வொரு எழுத்தாளரும் அவரவர் தாய்மொழியில் கையொப்பம் வைத்திருந்தார்கள். நான் தமிழில் என் கையொப்பத்தை வைத்து தூர நின்று பார்த்தேன். மொத்த கையொப்பங்களில் ஒரே தமிழ்க் கையொப்பம். இன்னொரு பக்கம் வெளிநாட்டு எழுத்தாளர்களின் பட்டியல் கொடுத்திருந்தார்கள். ஒவ்வொருவரையாக வாசித்து சிலரை கூகுளில் தேடிப்பார்த்தேன்.
நேர்காணலில் நான் பேசியவற்றை மனதில் தொகுத்தபோது ஓரளவு திருப்தியாகவே இருந்தது. மலேசிய – சிங்கையில் வசிக்கும் சில தமிழ் எழுத்தாளர்கள் பெயர்களைத் தவறாமல் குறிப்பிட்டிருந்தேன். நான் செல்லும் பாதை எப்போதுமே யானை நடந்து செல்லும் பாதைபோல இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பேன். புலிகள் செல்லும் பாதைகளில் தடயங்கள் இருப்பதில்லை. அது அவற்றின் தனிப்பாதை; இரகசியப்பாதை. யானைகளே காட்டில் வழிகளை அமைக்கின்றன. அதில் எந்த விலங்கும் பின் தொடர்ந்து வரலாம்; நீர்நிலைகளைக் கண்டுப் பலன்பெறலாம். இப்படிப் போகும் இடமெல்லாம் சிலர் பெயர்களையும் படைப்புகளையும் அழுத்தமாகக் குறிப்பிடுவது அதற்கு உதவும்.

அடுத்து என்ன செய்வதெனத் தெரியாமல் வெளியே கொஞ்ச நேரம் அலைந்தேன். ஜெஜியாங்கில் மாலை 5 மணிக்கெல்லாம் இருள் சூழத் தொடங்கிவிடும். அதுபோல காலை 6 மணிக்கு நன்றாக விடிந்து விடுகிறது. நேர்காணல் முடியும்போது கிட்டத்தட்ட மாலை நேர மந்தகாசம் சூழ்ந்ததால் அதுவே ஒருவித அசாதாரண உணர்வை கொடுத்தது. இலையுதிர்கால மரங்களையும் வண்ணம் பூத்த இலைகளையும் நெடுநேரம் பார்த்துக்கொண்டிருந்தேன். குளிர், கோட்டுக்கு அடங்காமல் அணைத்துக்கொண்டது.
நான் சீனாவில் மிகச்சிறிய பகுதியில் அதுவும் சுற்றுலாப் பயணிகளுக்காக வடிவமைக்கப்பட்ட கவர்ச்சியான வளையத்துள் இருந்தேன். நேர்காணல்களில் திரும்பத் திரும்பக் கேட்பதுபோல அந்த வட்டத்திற்குள் இருந்துகொண்டு என்னால் சீனாவை அறிய முடியாது. அதுவும் செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள சூழலைக்கொண்டு ஒரு நாட்டைப் பற்றிக் கருத்துச் சொல்வது சாத்தியமே அல்ல. அது பிரம்மாண்ட குளியல் தொட்டியில் மிதந்தபடி கடலைப் பற்றி கருத்துச் சொல்வதுபோல. ஆனால் நான் அறிந்த சீனா உண்டு. அது பள்ளிக் காலத்தில் இருந்தே பயிற்றுவிக்கப்பட்டது.

சிந்துவெளி, நைல்நதி, மெசபத்தோமிய நாகரிகங்களைப்போல மிகத் தொன்மையானது, மஞ்சள் நதிக் கரையோரம் தோன்றி வளர்ந்த சீன நாகரிகம்.
ஏறக்குறைய 5,000 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய நாகரிகம் எனக் கூறப்பட்டாலும் இதன் பழைமையை கால எல்லைக்குட்படுத்தி கணித்துவிட முடியாதுதான். உலகிலேயே மிகவும் தொன்மையான வரலாற்றுக் குறிப்புகள் சீனாவிடம் உண்டு. சீனாவின் மிக நீளமான இரு ஆறுகளில் ஒன்றான மஞ்சள் ஆற்றின் (ஹுவாங்கோ) கரையோரம் தோன்றிய நாகரிகம் உலகின் மிகப் பெரிய இனத்தின் வரலாறாக இன்று வளர்ந்துள்ளது.
சீனா என்று நாம்தான் அழைக்கிறோம். ஆனால் சீனர்கள் தங்கள் நாட்டை ‘சுங் ஹுவா’ அல்லது ‘சுங் குவோ’ என்றே சொல்கிறார்கள். இரண்டையும் சேர்ந்து சுங் ஹுவாமின்- குவோ என்று பெரும்பாலும் சொல்வர். ‘சுங்’ என்றால் நடுவில் உள்ளது. ‘ஹுவா’ என்றால் மலர் அல்லது புகழ் நிறைந்தது. குவோ என்றால் ‘நாடு’. பூமியில் மத்தியில் உள்ள மலர் போன்ற அல்லது புகழ் மிக்க நாடு என்று பொருள்.
சீன புராணக் கதையின்படி, சீனாவையும் இந்த உலகத்தையும் மனிதர்களையும் படைத்த ஆதிக் கடவுள் பான் கூ. அவரைப் பற்றிய சுவாரசியமான புராணம் உள்ளது.

பண்டைய சீனாவின் படைப்பு நாயகனான பான் கூதான் பிரபஞ்சத்தின் முதல் உயிரினமாகக் கருதப்படுகிறார். பிரபஞ்சம் இன்னும் உருவாகாத காலத்தில், பான் கூ ஒரு பெரிய முட்டையிலிருந்து பிறந்தார். அந்த முட்டையை உடைத்து, அவர் பிரபஞ்சத்தை உருவாக்கினார். பூமியையும் வானையும் பிரித்து, சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், கோள்களை வைத்தார். பள்ளத்தாக்குகளை வெட்டி, மலைகளை உருவாக்கி பூமியை வடிவமைத்தார்.
ஏறக்குறைய 18,000 ஆண்டுகள் வானையும் பூமியையும் பிரித்த இந்த உலகை உருவாக்கிய பின்னர், பான் கூ இறந்தார். அவரது உடல் உறுப்புகள் உலகின் பல்வேறு அம்சங்களாகின. அவரது மூச்சு காற்றாகவும், குரல் இடியாகவும், கண்கள் சூரியன்- சந்திரனாகவும், இறைச்சி பூமியாகவும், எலும்புகள் மலைகளாகவும், இரத்தம் நதிகளாகவும், முடி மரங்களாகவும் புல்லாகவும், வியர்வை மழையாகவும் மாறியது.
பான் கூ சீனப் புராணங்களில் மையமான நாயகர்.
நான் சொன்னதுபோல, சீனாவின் வரலாறு பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இந்தத் தொடரில் விரிவாகக் கூறுவதும் சிரமம். பல்வேறு வம்சங்கள் ஆட்சி செய்த காலத்தில் பல முக்கிய மன்னர்கள் தோன்றியுள்ளனர். அவர்களில் குறிப்பிடத்தக்க சிலரை அறிவது ஓரளவு சிறிய வரைப்படத்தைக் கொடுக்கலாம்.
முதலில் பண்டையக் கால மன்னர்களாக யாவ், சுன் ஆகியோரைக் குறிப்பிடுவதுண்டு. இவர்கள் புராண கால மன்னர்கள். தசரதன் போல. இவர்கள் சீன நாகரிகத்தின் தொடக்கத்தில் விவசாயம், நீர்ப்பாசனம் போன்றவற்றை வளர்த்ததாக நம்பப்படுகிறது.
அதுபோலவே ‘யு – தி கிரேட்’ என்று போற்றப்படுபவர் மன்னர் டா யு (Da Yu). சீனாவில் வெற்றிகரமாக வெள்ளத்தை கட்டுப்படுத்தி, சீனாவில் வாரிசு அரசியலை உருவாக்கியவர் என்று கூறப்படுகிறது. இவர் சியா வம்சத்தை நிறுவியவர்.

பேரரசு கால மன்னர்களைப் பார்த்தால் சின் ஷி ஹுவாங் குறிப்பிடத்தக்கவர். இவர் சீனாவை முதன்முதலாக ஒன்றிணைத்து, சின் பேரரசை நிறுவினார். சீனப் பெருஞ்சுவர் கட்டுமானத்தை தொடங்கியவர் இவரே.
அடுத்து ஹான் டி. இவர் ஹான் பேரரசை விரிவுபடுத்தி, சீனாவின் செல்வாக்கை வெளிநாடுகளுக்கு கொண்டு சென்றார். பட்டுப் பாதைலை (சில்க் ரோட்) நிறுவியதில் இவருக்கு முக்கியப் பங்கு உண்டு.
தாங் பேரரசின் மிகவும் சக்திவாய்ந்த மன்னர்களில் ஒருவர் வு டி. இவர் சீனாவை செழிப்பான கலாசார, பொருளாதார மையமாக மாற்றினார்.
கங்க்சி பேரரசர், சிங் பேரரசின் மிகவும் நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னர். இவர் சீனாவை ஒன்றிணைத்து, மங்கோலியா , திபெத்தை கைப்பற்றினார்.
அடுத்து குவாங்ஷு பேரரசர். சிங் பேரரசின் கடைசி காலகட்டத்தில் ஆட்சி செய்த இவர், மேற்கத்திய கலாசாரத்தை ஏற்று, சீனாவை நவீனப்படுத்த முயற்சித்தார். 1871 முதல் 1908 வரை இவர் ஆட்சி நீடித்தது.

முதலில் சொன்னதுபோல, யூவிடமிருந்து தொடங்கியது ஷியா வம்சம். அடுத்தடுத்து ஷாங், சாவ், சின், ஹான் போன்ற சக்திவாய்ந்த வம்சங்களின் எழுச்சியும் வீழ்ச்சியும் தொடர்ந்தன. இது சீனப் பண்பாடு, ஆட்சி முறை, தத்துவம், பெருஞ்சுவர் போன்ற புதுமைகளுக்கு அடித்தளம் அமைத்தன.
சுருக்கமாகச் சொல்வதென்றால், கி.மு 221ல் தோன்றிய சின் வம்சம் சீனாவை ஒன்றிணைத்தது. இந்தப் பெயரே மருவி சீனாவானது. ஹான் வம்சம் சீனாவில் நிலப்பரப்பை விரிவாக்கியது. டாங், சோங் வம்சங்கள் பண்பாட்டுப், பொருளியல் பொற்காலங்களாக இருந்தன. கலை, அறிவியல், வர்த்தகத்தில் சீனா பெயர் பெற்றது. யுவான் (மங்கோலியர் தலைமையிலான), மிங் வம்சங்கள் வணிகம், கலையில் விரிவாக்கங்களைக் கண்டன. மிங் வம்சம் (1368–1644) ஆட்சிக் காலத்தில்தான் சீன வளப்பமடைந்தது. உலகைக் கண்டடைய சீனர்கள் கிளம்பினர். சீனாவின் கடைசி ஏகாதிபத்திய ஆட்சியான கிங் வம்சத்துடன் (Qing dynasty 1644–1912) முடியாட்சி முடிவுக்கு வந்தது. சீனக் குடியரசு உருவானது.
இது எளிமையான வரைபடம்தான். ஒவ்வொரு வம்ச வரலாற்றை ஆராய்ந்தால் இன்னும் சுவாரசியமாக புராணங்களும் வரலாறுகளும் கிடைக்கும்.
நான் எதையெதையோ யோசித்துக்கொண்டே அறைக்குச் சென்றிருந்தேன். ஒரு காப்பி போட்டு அதே பிஸ்கட்டைச் சாப்பிட்டேன். இரவுணவைத் தனியாகச் சென்று சாப்பிடத் திட்டம். அளவாகச் சாப்பிடுபவர்கள் மத்தியில் கடோத்கஜன் அமர்வது அநாகரிகம். எனவே இரவுணவு வேளையில் யாரிடமும் சொல்லாமல் தனியாகச் சென்று இருக்கின்ற உணவுகளையெல்லாம் சுவைக்க முடிவெடுத்தேன்.
ஆசை தீரக் குளித்துவிட்டு ரிசார்ட் உணவகம் சென்று கூப்பனை ஸ்டைலாக நீட்டி, நல்ல தட்டாகத் தேடி எடுத்து, எனக்கு விருப்பமான உணவுகளை அடுக்கிக்கொண்டு ஓரமாகச் சென்று அமர்ந்தபோது “ஹாய் நவீன்” எனும் குரல் கேட்டது.
அஸ்ரின்தான்.

ஆனால் இம்முறை அவரும் வளமான உணவுகளோடு களம் கண்டிருந்தார். என் தட்டைப் பார்த்தவர், “ஓ… நீ மாட்டிறைச்சி சாப்பிடுவாயா?” என்றார்.
“எனக்கு எந்த உணவும் விலக்கு இல்லை,” என்றேன். அவர் தட்டைப் பார்த்து, “நீ பன்றி இறைச்சி சாப்பிடுவாயா?” என்றேன்.
“எனக்கும் உணவில் விலக்கு இல்லை,” என்றவர் சிரித்தார். எங்களுக்குள் நெருக்கம் இன்னும் அதிகமானது.
- தொடரும்