இன்னொரு புதிய ஆண்டைப் பார்க்கும் வாய்ப்பு அமைந்துள்ளது. புதிய ஆண்டுதான் ஒருவருடத்தில் நான் கொண்டாடும் தினம்; எனக்கான தினம். கடந்து வந்த ஆண்டை முறையாகவும் முழுமையாகவும் பயன்படுத்திக்கொண்டுள்ளேன் எனும் நிறைவும் புதிய ஆண்டை எவ்வாறு கையாளப்போகிறேன் என்ற ஆர்வமும் ஒருங்கே இத்தினத்தை உற்சாகப்படுத்தும். அந்த உற்சாகத்துடன் கடந்து வந்த ஆண்டின் முக்கியத் தருணங்களைத் தொகுத்துப் பார்ப்பது வழக்கம். அதன் வழியாகவே புதிய ஆண்டின் போக்கையும் ஓரளவு வடிவமைக்க முடியும்.
ஒவ்வோர் ஆண்டும் இப்படி எழுதப்படும் கட்டுரைகளை வாசிக்கும் நண்பர்கள் ‘உங்கள் வாழ்வில் துன்பமே இல்லையா?’ என்பார்கள். எல்லார் வாழ்விலும் துன்பங்கள் உண்டு. முதலாவது, உலகியல் சார்ந்த அடைவுகளையும் இழப்புகளையும் நான் இங்குப் பதிவிடுவதில்லை. இரண்டாவது, உற்சாகமும் செயலூக்கமுமே எனது வழி. அங்குச் சோர்வுக்கும் தன்னிரத்திற்கும் இடமே இல்லை.
உண்மையில் நான் எம்.ஜி.ஆர் ரசிகனாக இருப்பதற்கும் அதுதான் காரணமென நினைக்கிறேன். எம்.ஜி.ஆர் உற்சாகமாக சோஃபாவில் துள்ளிக்குதித்து ஏறுவதை பலரும் கேலிச்செய்வதுண்டு. ஆனால் எனக்கு அந்தத் துள்ளல் முக்கியமானது. நான் இந்த உலகின் மேல் கட்டுப்பாடுகளற்று துள்ளிக்குதிக்கவே விரும்புகிறேன். எனவே, எந்தக் கவலைகளையும் சோர்வுகளையும் நான் அதிகம் அங்கீகரிப்பதில்லை. எனவே என்னிடம் புலம்பல்கள் இல்லை.
பயணங்கள்
கடந்த ஆண்டில் நான் எழுதிய வருடாந்திர நினைவுத் தொகுப்புக் கட்டுரையின் கடைசி வரியில் இவ்வாறு உள்ளது. ‘சரவாக் சென்று போர்னியோ காடுகளில் நுழைந்து அங்குள்ள மக்களைச் சந்திக்கும் திட்டம் உள்ளது.’
எழுதியதுபோலவே கடந்த ஆண்டின் எனது கடைசிப் பயணம் அவ்வாறே அமைந்தது. டிசம்பர் 22 முதல் 26 வரை சரவாக் பயணம்; தனிப்பயணம், சரவாக்கில் 40,000 வருடங்களுக்கு முன் மனிதர்கள் வாழ்ந்த நியா குகையினுள் நுழைந்து நடந்ததும் உலகின் ஆகப்பெரிய குகையான மான் குகையில் அமர்ந்திருந்ததும் வாழ்நாளில் மறக்கமுடியாத அனுபவங்கள். அதுபோல சரவாக்கில் இன்றும் காடுகளில் வசிக்கும் பூர்வகுடி இனமான பெனான் மக்களைச் சந்தித்து உரையாடியது இவ்வருடத்தை நிறைவானதாக மாற்றியது. போர்னியோ காட்டின் நதிகள், காடுகள், குகைகள், மனிதர்கள் என இவ்வருட இறுதி உயிர்ப்பானதாக அமைந்தது.
உண்மையில் இந்த சரவாக் பயணத்தைத் தவிர இவ்வருடம் நான் வேறெந்தப் பயணத்தையும் திட்டமிடவில்லை. அப்படித் திட்டமிடாமலேயே மேலும் சில பயணங்கள் அமைந்தன. முதலாவது, நண்பர்களுடன் சென்ற சபா மாநிலச் சுற்றுலா. என் நண்பர் முருகன் அவர்களின் பணி ஓய்வைக் கொண்டாடும் வகையில் இந்தப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதை நண்பர்களே வடிவமைத்தனர். எப்போதும்போல உற்சாகம் குன்றாத இனிய பயணம் அது. செப்டம்பர் மாதம் மேற்கொண்ட அந்தப் பயணத்தில் மலேசியாவில் ஆக உயரமான மலையான கினாபாலுவைப் பார்க்க முடிந்தது. அம்மலையில் எதிர்ப்புறமே தங்கும் விடுதியும் அமைந்திருந்தது கூடுதல் உற்சாகத்தைக் கொடுத்தது. அசோகமித்திரன் ‘பிரயாணம்’ சிறுகதையில் மலைகளை வர்ணிக்கும்போது ஓங்கி எழுந்த அலைகள் உறைந்து நின்றதுபோல என்பார். கினாபாலு மலை அப்படியானதுதான். கண்முன்னே ஓங்கி எழுந்த அலைகளின் வடிவில் பிரம்மாண்டமாக நின்றது மலை. உடனே அதில் ஏறும் ஆர்வம் எழுந்தது. அலைகளில் ஏறும் ஆர்வம் யாருக்குத்தான் எழாது? இந்த வருடம் ஏறக்கூடும். அதுபோல இப்பயணத்தில் உலகில் ஆகப் பெரிய மலரான ரெஃப்லேஸியாவையும் தொட்டு நுகர முடிந்தது. சபா மாநிலப் பயணத்தில் குண்டாசாங் செல்வதுதான் முக்கியமானது. மலேசியாவின் நியூசிலாந்து என அவ்விடத்தை அழைப்பார்கள். அங்குள்ள Holstein Friesian ரக மாடுகளைப் பார்த்தபோது 2023இன் நியூசிலாந்து பயணத்தை நினைவூட்டியது.
சீனப் பயணம் நான் உண்மையில் எதிர்பாராதது. நவம்பர் 24 அவ்வாய்ப்பு அமைந்தது. சீனாவின் கலாசார, சுற்றுலாத் துறை அமைச்சும் ஜெஜியாங் மாநிலமும் இணைந்து லியான்ஸு கலாசார கருத்தரங்கு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது. அக்கருத்தரங்கில் கலந்துகொள்ள சீன அரசாங்கத்தின் அதிகாரத்துவ அழைப்பில், மலேசியாவிலிருந்து புறப்படும் இலக்கியக்குழுவில் நானும் இடம்பெற்றிருந்தேன். இப்பயணம் பல வகையில் எனக்கு முக்கியமானதாக அமைந்தது. மலேசியாவிலேயே வெவ்வேறு மொழிகளில் இயங்கும் இலக்கியவாதிகளுடன் நட்புப் பாராட்ட முடிந்தது. மலேசியாவில் நாங்கள் இணைந்து இயங்க சீன தேசம் சூழலை உருவாக்கிக் கொடுத்தது. இப்பயணம் குறித்து விரிவாகத் தொடர் ஒன்றும் எழுதி வருகிறேன். எனது சீனப் பயணம் மட்டுமல்லாமல் சீன வரலாறு, பண்பாடு என அனைத்தையும் அறிமுகப்படுத்தும் நோக்கத்தில் எழுதி வருகிறேன்.
சிங்கப்பூரை வெளிநாடாகக் கருத முடிவதில்லை. எனவே அதன் பயணம் ஜனவரி மாதம் இயல்பாக அமைந்தது. அப்பயணத்தின் வழியாக எனது தாரா, அ.பாண்டியனின் கரிப்புத் துளிகள் ஆகிய நாவல்களை சிங்கப்பூரில் அறிமுகம் செய்ய முடிந்தது. சிங்கப்பூர் வாசகர் வட்டம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியின் வழியாக சிங்கை வாசகர்களுடனான உரையாடல் சாத்தியமானது. அதோடு இப்பயணத்தை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இளம் எழுத்தாளர்களுடனான சந்திப்பு ஜனவரி 28 சிங்கப்பூர் நூலக ஏற்பாட்டில் நடைபெற்றது. இச்சந்திப்பில் சிறுகதைகளை அறிந்துகொள்ளும் வழிகள் குறித்து உரையாடினேன். மேலும் சிங்கப்பூரின் மூத்த எழுத்தாளர்களான பி. கிருஷ்ணன், இராம. கண்ணபிரான் ஆகியோரைச் சந்தித்து என் நாவலை வழங்கினேன்.
இது தவிர பேராக் தம்பூனில் அமைந்துள்ள அறிவொளி இதய புத்த கோயிலுக்கு (Enlightened Heart Buddhist Temple) தாராவைத் தேடிச் சென்றது நல்ல பயணமாக அமைந்தது. மலேசியாவில் அப்படி ஒரு கோயில் இருந்ததை நான் அப்போதுதான் அறிந்தேன். தாராவை வணங்கிவிட்டு வந்தேன். மலேசியாவில் பல இடங்களுக்குப் பயணித்தாலும் இப்பயணம் குறிப்பிடத்தக்கதாக அமைந்தது.
யோகம்
கடந்த வருடம் நான் திட்டமிட்டவைகளில் மிக முக்கியமானது, உடல் சார்ந்த அக்கறையும் அதற்கான பயிற்சிகளும்தான். எனவே, இவ்வருடம் ஜனவரி மாதமே யோகா சௌந்தர் மலேசியாவுக்கு வரவழைக்கப்பட்டார். அவர் வருகையை நான் முன்னின்று ஏற்பாடு செய்ததால் சௌந்தருடன் தொடர்ந்து மூன்று நாட்கள் உப்சி பல்கலைக்கழகம், மை ஸ்கில்ஸ் என பல்வேறு இடங்களுக்குப் பயணம் செய்து அவருடன் யோகப் பயிற்சியில் ஈடுபட்டது உடலுக்கும் மனதுக்கும் புத்தெழுச்சியைக் கொடுத்தது. இதன் தொடர்ச்சியாக சௌந்தர் மீண்டும் மே 25 – 27 வரை கூலிம் பிரம்ம வித்யாரண்யத்தில் யோகப்பயிற்சிகள் வழங்கினார். அதன் பெரும்பான்மையான பொறுப்புகளை சுவாமி பிரம்மானந்தா அவர்கள் எடுத்துக்கொண்டதால் நான் பங்கேற்பாளனாக மட்டும் கலந்துகொண்டேன். சௌந்தரின் யோகப் பயிற்சிகள் இவ்வாண்டை உற்சாகமாகக் கடக்க உதவியது.
யாழ்
அக்டோபர் மாதம் யாழ் பதிப்பகத்தின் புதிய அறிவியல் நூல் வெளிவந்தது. ஒரு வருட உழைப்பில் உருவான நூல் அது. ஆசிரியர் மகேஸ்வரி இதன் ஆசிரியர். கோவிட்டுக்குப் பிறகு யாழை மீட்டு எடுத்து வருவதில் பல சிரமங்கள் இருந்தன. இந்நூல் அத்தடைகளை உடைக்கக் கூடும் எனும் எதிர்பார்ப்பில் வெளியிட்டுள்ளேன். நான்காம் ஆண்டு மாணவர்களுக்கான இந்நூல் விரிவான விளக்கங்களையும் அதை ஒட்டிய பயிற்சிகளையும் கொண்டது.
வேலையிட மாற்றம்
இவ்வருடம் நான் பள்ளி மாற்றல் ஆனேன். கோலசிலாங்கூரில் உள்ள சுங்கை ரம்பை தமிழ்ப்பள்ளியில் சுமார் ஆறு வருடங்கள் பணியாற்றியபின் நானே மாற்றம் கேட்டபோது பத்துமலைத் தமிழ்ப்பள்ளி கிடைத்தது. பின்னர் அங்கிருந்து மூன்றே மாதத்தில் நான் விரும்பிக்கேட்ட மெலாவாத்தி தமிழ்ப்பள்ளிக்கு இடம் மாற்றப்பட்டேன். பள்ளியில் நான் ஆறாம் ஆண்டு வகுப்பாசிரியர். சிறந்த மாணவர்களைக்கொண்ட வகுப்பு என்பதால் உற்சாகமாக ஓராண்டு கடந்தது. என் இருபதாண்டு ஆசிரியர் பணியில் நுட்பமும் கலைத்திறனும் நுண்ணுணர்வும் கொண்ட மாணவர்களை சந்திக்க முடிந்தது. அம்மாணவர்களுக்காக அலையாத்தி காட்டுக்குச் சுற்றுலா ஏற்பாடு செய்தேன். மேலும், அம்மாணவர்களுக்காக எழுத்தாளர்களை அழைத்து வந்து கதை கேட்கும் அங்கம் ஒன்றையும் ஏற்பாடு செய்தேன். மாணவர்கள் இயல்பிலேயே திறன் வாய்ந்தவர்களாக இருந்ததால் அத்திறமையை வெளியே எடுத்து வரும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. ஆற்றல் மிக்க தலைமுறை ஒன்றை உருவாக்க முடிவது ஒவ்வொரு நாளும் பள்ளி வாழ்வை இன்பமாக்கியது. இவற்றோடு என் பள்ளியில் நடந்த கதை கூறும் திட்டத்தால் கவரப்பட்டு மெந்தகாப் தமிழ்ப்பள்ளியும் அப்படி ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. அக்டோபர் 12 ஆம் திகதி நடைபெற்ற அந்நிகழ்ச்சியில் நானும் ஒரு கதைசொல்லியாகக் கலந்துகொண்டேன்.
எனது நூல்கள்
ஓராண்டுக்குப் பின்னர் நான் மீண்டும் இவ்வாண்டில்தான் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தேன். ‘சண்முகப்பிரியா’ சிறுகதையில் தொடங்கி ‘கீலாக்காரன்’, ‘மிருகம்’ எனத் தொடர்ந்து எழுதினேன். எனக்குள் எப்போதும் கதை உள்ளது. எப்போது எழுத வேண்டும் என்பதைத்தான் நான் முடிவெடுக்கிறேன். தொடர்ந்து சிறுகதைகள் எழுதியதன் தொடர்ச்சியாக எனது புதிய எட்டுச் சிறுகதைகளின் தொகுப்பான ‘வேப்டியான்’ வெளிவந்தது. இதில் உள்ள அனைத்துச் சிறுகதைகளையும் எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் வாசித்து அதன் நிறைகுறைகளைச் சொன்னது செறிவு பணிக்கு பெரிதும் உதவியது. அதோடு எனது நேபாளப் பயண அனுபவ நூலான ‘குமாரிகள் கோட்டம்’, நியூசிலாந்துப் பயண அனுபவ நூலான ‘க்யோரா’ ஆகியவையும் இவ்வருடம் வெளிவந்தன. இதற்கான அறிவிப்புகளை ஜூலை மாதம் செய்து முன்பதிவுத் திட்டத்தை மேற்கொண்டேன். வாசகரிகளிடம் கிடைக்கும் ஆதரவு தொடர்ந்து நூல்கள் வெளியிட ஊக்குவிப்பாய் அமைந்தது.
தமிழாசியா
தமிழாசியாவைத் தொடங்கியது வாசிப்பை ஓர் இயக்கமாக மாற்றுவதற்காகத்தான். 2023இல் அது மூன்றாண்டுகளை எட்டியது. இந்த மூன்று ஆண்டுகளில் எவ்வளவு சிரமம் இருந்தாலும் தமிழகத்தில் இருந்து தருவிக்கப்படும் நூல்களை ரூபாய்க்கு 10 சென் எனும் விலையில் விற்பதை பிடிவாதமாகத் தொடர்கிறோம். அதன் ஒரு செயல்பாடாக முன்னெடுத்த தமிழாசியா வாசகர் சந்திப்பு தொடர்ந்து உற்சாகமாக இவ்வருடமும் நடைபெற்றது. சந்திப்பை நடத்த இடமின்றி பல்வேறு இடங்களுக்குத் தாவிக்கொண்டிருந்த எங்களுக்கு மலாயா பல்கலைக்கழக நூலகத்தில் நிரந்தரமான வசதியான கலந்துரையாடலுக்கான இடம் விஜயலட்சுமியால் அமைந்தது. 2024இல் சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், லா.ச.ரா, ஜி. நாகராஜன், கு.ப.ரா, அம்பை, மௌனி, பாவண்ணன் என தமிழின் முதன்மையான எழுத்தாளர்களின் முக்கியமான சிறுகதைகள் குறித்து உரையாடி ஆழமாக அறிந்தோம். அச்சந்திப்புகள் குறித்து முறையாக எழுத்தின் வழி பதிவும் செய்யப்பட்டது.
வல்லினம் இலக்கியச் செயல்பாடுகள்
எப்போதும் போலவே வல்லினம் இரு மாதங்களுக்கு ஒருமுறை தவறாமல் பதிவேற்றம் கண்டது. அவ்வகையில் ஆறு இதழ்கள். அ. பாண்டியன், சாலினி, அரவின் குமார் என பலருடைய பங்களிப்பும் வல்லினம் சரியான நேரத்தில் தரமான வருவதற்குக் காரணம். குறிப்பாக அ. பாண்டியன் வல்லினம் இதழ்களுக்கு வழங்கும் உழைப்பு அபாரமானது.
வல்லினம் வழியாகப் பல்வேறு இலக்கியச் செயல்பாடுகளில் ஈடுபட்டாலும் இவ்வருடம் மலாய், சீன இலக்கிய அறிமுகத்திற்காக எஸ்.எம்.ஷாகீர், முனைவர் புலோரன்ஸ் ஆகியோருடன் மை ஸ்கில்ஸ் அறவாரியத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் பல புதிய திறப்புகளுக்குக் காரணமாக அமைந்தது. மார்ச் 3ஆம் திகதி நடைபெற்ற அந்த நிகழ்ச்சி, மலேசிய இலக்கியச் சூழலில் நிகழ வேண்டிய மாற்றங்கள் குறித்த புரிதலை அனைவருக்குமே ஏற்படுத்தியது.
வல்லினத்தின் வழியாக இவ்வருடம் இரண்டு முகாம்களை ஒருங்கிணைத்தோம்.
மார்ச் 2, 3 திகதிகளில், வல்லினம் விமர்சன அரங்குகளை ஒருங்கிணைக்க முடிந்தது. இரண்டு நாட்கள் நடைபெற்ற முகாமில் ஏறக்குறைய 25 பேர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கு முதல்நாள் எனக்குக் காய்ச்சல் 40 டிகிரி வரை உயர்ந்தது. விடிய விடிய தூங்காமல் உடலைக் குளிர்வித்து கலந்துரையாடலில் கலந்துகொண்டேன். கடும் காய்ச்சலுடனேயே விவாதங்களில் ஈடுபட்டேன். எல்லாம் முடிந்தபின்னர் மருத்துவமனைக்குச் சென்று சோதித்தபோது இன்புலூன்ஸா காய்ச்சல் எனத் தெரிந்தது. கூடவே டெங்கிக் காய்ச்சலும் வளர்ந்து தணியும் தருவாயில் இருந்தது. இரண்டு சக்திமிக்க கிருமிகள் தாக்கி வீழ்த்த முயன்றாலும் என்னை இயக்குவது இலக்கியமாக மட்டுமே இருந்தது.
இரண்டாவது முகாம், பிரிக் பீல்டில் அமைந்துள்ள YMCA மண்டபத்தில் நடைபெற்றது. ஒருநாள் தங்கி நவீன கவிதை, சங்கப்பாடல்கள், பக்திப்பாடல்கள், சிறுகதை, நாவல் என பல்வேறு தலைப்புகளின் எவ்வாறு ஒரு புனைவை வாசிப்பது என்றும் அவற்றை எவ்வாறு புரிந்துகொள்வது என்றும் ஜா. ராஜகோபால் அவர்களால் பயிற்சி வழங்கப்பட்டது. இம்முகாமில் 30 பேர் கலந்துகொண்டனர். பலருக்கும் மனநிறைவு கொடுக்கக் கூடிய முகாமாக இது அமைந்தது.
சிறிய அளவிலான முகாம்களைத் தவிர்த்து பெரிய விழாக்களையும் வல்லினம் வழியாக ஒருங்கிணைப்பது வழக்கம். இவ்வருடம் ஜார்ஜ் டவுன் இலக்கியக் குழுவின் ஆதரவுடன் வல்லினம் இளம் எழுத்தாளர் விழா நடைபெற்றது. இவ்விருது விழாவுக்கு எழுத்தாளார் பாவண்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இளம் எழுத்தாளார் அரவின் குமாருக்கு இளம் எழுத்தாளருக்கான விருது வழங்கப்பட்டதோடு அவரது முதல் சிறுகதை நூலும் வெளியீடு கண்டது. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் வல்லினம் பதிப்பகம் வெளியிடும் நூல் அது. மேலும் இவ்விழாவை ஒட்டி கடந்த ஐந்து ஆண்டுகளில் உருவான புதிய எழுத்தாளர்களின் படைப்புகள் குறித்த கருத்தரங்கு ஒன்றும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. பாவண்ணன் அவர்களின் ஆளுமை மேலும் பலருக்கும் பயனாக அமைய வேண்டும் எனும் நோக்கில் கோம்பாக் மாவட்ட தமிழாசிரியர்களுடன் பாவண்ணன் அவர்கள் கலந்துரையாடும் நிகழ்ச்சி ஒன்றையும் ஏற்பாடு செய்தேன். பத்துமலை தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியரிடம் இருந்து சிறந்த ஒத்துழைப்புக் கிடைத்ததால் நிகழ்ச்சி நிறைவாக அமைந்தது.
இணையப் பயிலரங்குகள்
இதுதவிர இணையம் வழி நடந்த உரையாடல்களிலும் பேசும் வாய்ப்பு அமைந்தது. மார்ச் 11 ஆம் திகதி ‘சிறகுகள் கதை நேரத்தில்’ நவீன சிறுகதைகள் எனும் தலைப்பில் பேசினேன். அதுபோல நியூசிலாந்து வாசகர்களுக்கு ஏப்ரல் 6, 13ஆம் திகதிகளில் ‘சிறுகதைகளின் ஆன்மாவை அறிதல்’ எனும் தலைப்பில் சிறுகதைகள் வாசிக்கும் நுட்பத்தை ஒட்டிய பயிலரங்கை வழிநடத்தினேன். தொடர்ந்து, சிங்கப்பூரில் ‘மாயா’ இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்த சிறுகதைப் பயிலரங்கை ஜூலை மாதம் மூன்று நாட்களுக்கு வழிநடத்தினேன். சிங்கை எழுத்தாளர்கள் எழுதி வழங்கும் சிறுகதைகளை வாசித்து அவற்றை எப்படி மேம்படுத்துவது என்பதாக அந்தப் பயிலரங்கு அமைந்திருந்தது. கடும் உழைப்பைக் கோரிய பயிலரங்குதான். ஆனால் எனக்குமே நல்ல அனுபவமாக அமைந்தது. மேலும், வட அமெரிக்காவில் இயங்கும் தமிழ் ஆர்வலர் குழு ஏற்பாடு செய்த சிறுகதைப் பயிலரங்கையும் நவம்பர் மாதம் இருநாட்கள் வழிநடத்தினேன். முதல் வாரம் சிறுகதைகளின் கலை நுட்பத்தையும் இரண்டாவது வாரம் புனைவு உக்திகளையும் கலந்துரையாடினேன்.
சர்ச்சைகள்
சர்ச்சை என பொதுவாக இந்த ஆண்டில் எதுவும் இல்லை. சொத்தை மனிதர்களை நான் எதிர்த்தரப்பாக எப்போதும் நினைப்பதே இல்லை. நான் அவர்கள் நினைவில் எப்போதும் இருப்பது ஆச்சரியமும் இல்லை. ஆனால் அந்தச் சொத்தைகள் இளம் தலைமுறையை நாசம் செய்யாமல் இருக்க தமிழ்ப்பள்ளிகளில் நடக்கும் குறுங்கதைப் பயிலரங்கு குறித்துப் பேச வேண்டியதாக இருந்தது. பொதுவாக சொத்தைகளைச் சீண்டும்போது எப்படி நாற்றம் எடுக்குமோ அவர்களின் எதிர்மொழியும் அவ்வளவு துர்வாடையுடன் வெளிபட்டது. ஆனால் முடிந்தவரை அவர்களின் செயல்பாட்டில் உள்ள போலித்தனத்தை வெளிப்படுத்த முடிந்தது. அறிவுள்ளவர்களால் அதை அறிந்துகொள்ளவும் முடிந்தது.
மலாய் சிகண்டி
இவ்வருடம் எனக்கு உற்சாகம் தரக்கூடியதாக இருந்தது ஆகஸ்டு 26 ஆம் திகதி மலாய் வாசகர்களுடன் சிகண்டி நாவல் குறித்து நடைபெற்ற உரையாடல். Kultus Kata எனும் அமைப்பினர் ஏற்பாடு செய்த அந்தச் சந்திப்பை Fasyali Fadzly வழிநடத்தினார். இருபதுக்கும் அதிகமான மலாய் வாசகர்கள் கலந்துகொண்ட அந்தச் சந்திப்பின் வழியாக எனது மலாய் சிகண்டி நாவலை மேலும் அதிகமான வாசகர்களிடம் சேர்க்க முடிந்தது. என்னால் மிக இயல்பாக வேறு மொழியில் உரையாட முடியும் என்ற எனது தன்னம்பிக்கையையும் அச்சந்திப்பு வலுப்படுத்தியது.
உரை
செப்டம்பர் 15ஆம் திகதி சுங்கை கோப்பில் அமைந்துள்ள பிரம்ம வித்யாரண்யத்தில் நடைபெற்ற பாரதியார் விழாவில் சிறப்புரையாற்றினேன். நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான மேனாள் விரிவுரையாளர் தமிழ் மாறன் அவர்கள் என்னை அழைத்தபோது உற்சாகமாக ஒப்புக்கொண்டேன். கல்வியாளர்களில் அவர் தனித்துவமானவர். கடும் உழைப்பில் உருவான உரை அது. எனக்கு பாரதியை இன்னும் நெருக்கமாக்க அந்த உரையைத் தயாரிக்கும் பயிற்சி வழிவகுத்தது. உரையும் சிறப்பாகவே அமைந்ததாக நண்பர்கள் சொன்னார்கள். எனக்கும் திருப்தியாகவே இருந்தது.
பிற
இது தவிர மெட்ராஸ் பேப்பரின் எனது நேர்காணல் ஒன்று வெளிவந்திருந்தது. ஐயா முத்து நெடுமாறன் அவர்கள் வழியாக அறிமுகமான எழுத்தாளர் கோகிலா பாபு அந்த நேர்காணலைச் செய்தார். செறிவான நேர்காணல் அது. மேலும் இவ்வருடம் சிங்கப்பூர் இலக்கியப் பரிசுப் போட்டியில் நடுவராகப் பங்களித்தேன். இதன்வழியாகச் சிங்கப்பூரில் அண்மையில் வந்த 12 நூல்களை வாசிக்கும் வாய்ப்பு அமைந்தது. தமிழ் விக்கிக்கும் கட்டுரைகளைப் பங்களித்தேன்.
எப்போதும்போல எழுத்தின் வழியாக சில சமூக சேவையாளர்களுக்கு நன்கொடை திரட்ட முடிந்தது. குறிப்பாக கைவிடப்படும் தெரு நாய்களுக்குப் பயிற்சி கொடுத்து அவற்றை வீட்டில் வளர்க்கும் தகுதி கொண்டவையாக உருமாற்றும் தமிழ் அவர்கள் குறித்து எழுதியபோது சிலர் முன்வந்து நன்கொடை வழங்கினர்.
இவ்வாண்டு எழுத்தாளர்கள் முத்தம்மாள் பழனிசாமி, கோ. முனியாண்டி ஆகியோரின் மரணம் வருத்தத்தை ஏற்படுத்தியது. அவர்களுக்கு விரிவான அஞ்சலிகூட எழுத முடியாத அளவுக்கு அப்போது பணிச்சுமையில் இருந்தேன். முகநூலில் சிறிய குறிப்புகள் எழுதினேன். இருவரையும் விரிவான ஆவணப்படம் செய்து வைத்தது மட்டும் ஓரளவு நிம்மதியைக் கொடுத்தது. மேலும் முத்தம்மாள் பழனிசாமி அவர்களின் ‘நாடு விட்டு நாடு’ நூலை யாவரும் பதிப்பகம் வழியாகப் பதிப்பிக்க அவர் உயிரோடு இருக்கும்போது அனுமதிபெற முடிந்ததால் எழுத்தின் வழியாக அவரைச் சென்று சேர முடிந்தது.
அடுத்த ஆண்டு
இவ்வாறு உற்சாகமாக நகர்ந்து சென்ற 2024ஐ பார்த்துக்கொண்டிருக்கிறேன். நான் எதற்காகப் பிறந்தேனோ அந்தப் பணியை முழுமையாகச் செய்ய முயன்றுக்கொண்டிருக்கிறேன்.
அடுத்த வருடம் பெரும்பாலும் பயணங்களைத் தவிர்க்கவே எண்ணம். புதிய நாவல் பணியை ஜனவரி தொடங்குகிறேன். எனது பயணங்கள் சார்ந்த காணொளித் தொகுப்புகளையும் யூடியூப்பில் பதிவுடும் எண்ணம் உண்டு. பாதியில் நிற்கும் ஆய்வுக்கட்டுரை ஒன்றை முடிக்க வேண்டும். மனமும் உடலும் காலமும் அனைத்திற்கும் துணையிருக்க வேண்டும்.
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.
2017: நானெனும் பொய்யை நடத்துவோன் நான்
2018: கண்டநற் சக்திக் கணமெலாம் நான்
2019: இயங்கு பொருளின் இயல்பெலாம் நான்!
2020: அண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான்
2021: ஞானச் சுடர்வானில் செல்லுவோன் நான்
2022: வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்
2023: மண்ணில் திரியும் மரமெல்லாம் நான்