சண்முகப்பிரியா

சண்முகப்பிரியா குறித்து நான் இதுவரை எனது எந்தச் சிறுகதையிலும் நாவலிலும் குறிப்பிட்டதில்லை. அவ்வளவு ஏன்… அனுபவங்கள் குறித்து மாங்கு மாங்கென்று எழுதிய எந்தக் கட்டுரையிலும் கூட அவள் தொலைதூரமாய் நிற்கும் மங்கிய பாத்திரமாகக் கூட வெளிபட்டதில்லை. சண்முகப்பிரியாவை நான் எப்படி அவ்வளவு எளிதாக மறந்தேன் என்பது எனக்கே ஆச்சரியமாகத்தான் உள்ளது. என் மூன்று வயது மகளை இன்று கடற்கரைக்கு அழைத்துச் சென்றபோது அவள் நினைவு ஓர் அலையின் வழியாகக் கால்களில் மோதி உயிர்பெற்றதை நான் எவ்வித குற்ற உணர்ச்சியும் இல்லாமல்தான் எதிர்கொண்டேன்.

சண்முகப்பிரியா நான் படித்த வெல்லஸ்லி தமிழ்ப்பள்ளியில் பாதியில் வந்து இணைந்தவள். பாதியில் என்றால், யூ.பி.எஸ்.ஆரில் ஆறு ஏக்கள் பெற்றுவிட வேண்டும் என நாங்கள் வெறி கொண்டு படித்துக்கொண்டிருந்த மே மாத காலை என நினைவு. தன் அம்மாவுடன் அசாதாரண உயரத்தில் ஆறாம் வகுப்பில் நுழைந்தவளை எதற்கும் அசராத சுப்பிரமணியம் சார் கூட ஒரு நிமிடம் வியந்து பார்த்தார். சண்முகப்பிரியாவின் இடுப்பளவு உயரமே இருந்த அவள் அம்மாவின் கைகளில் சில பாரங்கள் இருந்தன.

சண்முகப்பிரியாவைப் பார்த்தபோது வகுப்பில் இயல்பாக ஒரு சிரிப்பலையும் கூடவே வியப்பின் முணுமுணுப்பும் எழுந்தன. அதன் அசௌகரியத்தை அவள் தன் கருநீல பள்ளி கவுனை இருபக்கமும் இழுத்துச் சுருட்டிப் பிடித்துக்கொள்வதன் மூலம் வெளிபடுத்தினாள். சுப்பிரமணியம் சார் “பாவாட ஒன்னும் பறந்துபோயிறாது… கோசமா இருக்குற எடமா பாத்து ஒக்காரு,” என்றபோதுதான் விடுபட்ட அவள் விரல்களைப் பார்த்து நான் பிரமித்துப்போனேன். திருவிழாவில் அடிக்கும் உருமி குச்சி போல அவை நீண்டிருந்தன. அங்கேயே நின்றுகொண்டிருந்த அவள் அம்மாவைப் பார்த்து “ஒங்களுக்கு பாடம் படிச்சி கொடுக்க எங்களுக்கு இன்னும் ட்ரெய்னிங் கொடுக்கல… புள்ளய உட்டுட்டு வீட்டுக்குப் போங்க,” என்றார்.

சண்முகப்பிரியாவின் அம்மா ஏதோ சொல்ல நினைத்திருக்கக் கூடும். வெளுத்த கைலியுடன் சிறிய பூப்போட்ட சட்டை அணிந்திருந்த அவர் தோள்களில் கிட்டத்தட்ட கந்தலாகியிருந்த வெள்ளை துண்டு ஒன்று படிந்திருந்தது. எங்கள் ஊரில் கணவனை இழந்தவர்கள் அப்படி ஒரு வெள்ளை துண்டை மேலே போர்த்திக்கொள்வது வழக்கம். ஒழுங்காகப் படிந்து வாரப்படாத அவர் தலையில், நரம்புகள் போல நரைகள் எல்லா திசைகளிலும் நீண்டு கிடந்தன. செருப்பை வகுப்புக்கு வெளியில் ஓரமாகக் கலற்றி வைத்திருந்தார். அப்படி யாரும் வெறுங்காலுடன் பணிவாக வகுப்பில் நுழைந்து நாங்கள் பார்த்ததில்லை. அவர் தன் மகளின் கையைப் பிடித்து வகுப்பின் முன் புறம் காலியாக இருந்த இருக்கையில் அமர வைத்தபோது சுப்பிரமணியம் சார் ஆத்திரம் பொங்க கத்தினார்.

“ஏம்மா… ஒம்மவ பூதமாட்டம் கெடக்குறா… அவள முன்னுக்கு வரிசையில ஒக்கார வச்சா மத்த புள்ளைங்க பாடத்த ஏணிபோட்டா நின்னு படிக்குங்க… போம்மா… போயி தொ அங்க வௌவாலாட்டம் கெடக்குறானே அவனோட பக்கத்துல ஒக்கார வையி!” என வகுப்பின் இடகோடி மூலையில் அமர்ந்திருந்த என்னைக் கைக்காட்டினார்.

சுப்பிரமணியம் சார் என்னை ‘வௌவாலு’ என்றுதான் கூப்பிடுவார். அவருக்கு எந்த மாணவனின் பெயரும் நினைவில் நிற்காது. அவர் மனதில் என்னவாக நாங்கள் பதிவாகிறோமோ அதுதான் எங்கள் பெயராக நாள்பட மாறிவிடும். குறுகி அமர்ந்த நிலையில் கறுப்புருவாய் இருந்த நான் அவருக்கு வௌவாலாகத் தெரிந்திருக்கலாம். இதுபற்றி என் வீட்டில் பலமுறை புகாராகச் சொல்லியபோதும் “ஒரு நாளைக்கு ஸ்கூலுக்கு வந்து அந்த வாத்தியார என்னா ஏதுன்னு கேக்குறேன் பாரு!” எனக் கோபமாகக் கத்திவிட்டு என்னை ஆறுதல் படுத்தியதோடு என் அப்பாவும் அம்மாவும் கடமையை முடித்துக்கொண்டனர்.

நானறிந்து அப்படி யாருமே சுப்பிரமணியம் சாரிடம் சண்டைபோட பள்ளிக்கு வந்ததில்லை. சுப்பிரமணியம் சாரின் கடுமையான குரல் யாரையும் மிரள வைக்கும். சாதாரணமாகப் பேசினாலே மிரட்டுவது போலத்தான் தொணிக்கும். மற்ற ஆசிரியர்களும் அவரிடம் பேசி நான் அதிகம் பார்த்ததில்லை. தன் பாடவேளையில் அவர் நுழையும்போது பிற ஆசிரியர்கள் இன்னமும் பாடம் நடத்திக்கொண்டிருந்தால் “நா வேணுமுன்னா வீட்டுக்குப் போயிடவா?” எனக் கடுமையான குரலில் கேட்பார். தங்களது பாட வேளையில் ஆசிரியர்கள் நுழையும்போது அவர் பாடம் நடத்திக்கொண்டிருந்தால் “ஒரு அஞ்சி நிமிஷம் கொடுத்தா ஒன்னும் கொறைஞ்சி போயிடாது!” என்பார்.

எங்கள் பள்ளியில் அவர்தான் குட்டையான ஆசிரியர். எப்போதும் நெஞ்சை நிமிர்த்திதான் நடப்பார். அவரது உடலில் வயிறே பெரும்பான்மை என்பதால் வயிற்றைத் தூக்கிக் கொண்டு நடப்பதாகவே எங்களுக்குத் தோன்றும். மேலும் அவர் பள்ளியில் கட்டொழுங்கு ஆசிரியராக வேறு இருந்தார். பள்ளியின் கட்டொழுங்கை நிலைநாட்ட பழுதான நாற்காலியின் மரக்காலில் பிடி செதுக்கி அதில்தான் எங்களை அடிப்பார்.

அவர் அடி என்பது ஒரு தினுசானது. அடிப்பதற்கு முன் “சூத்தாம்பட்ட கிழிய போவுது!” என எங்கள் பிட்டத்தைக் கைகளால் ஒரு தட்டுத் தட்டுவார். பின்னர், செதுக்கப்பட்ட பட்டையான மரக்காலில் ஓங்கி ஓர் அடி கொடுப்பார். பிரம்பில் வாங்கும் அடியைவிட இதன் வேதனை வேறு மாதிரி இருக்கும். சரியாகச் சொல்வதானால் பிட்டத்தின் மேல் தோலை யாரோ சுரண்டி எடுப்பது போன்றதொரு கடும் வலியும் பின்னர் விடாத எரிச்சலும் நீடிக்கும். அந்த வலியோடு நாற்காலியில் உட்காருவதே பெரும்பாடு.

சுப்பிரமணியம் சாரிடம் அடிவாங்காத மாணவர்களே பள்ளியில் இல்லை எனலாம். என் வகுப்பில் அவருக்கு விருப்பமான மாணவியாக இருந்த மோகனவள்ளிகூட ஒருமுறை நகம் வெட்டாததற்கும் இன்னொருமுறை பச்சை நிற ரிப்பன் கட்டி வந்ததற்கும் என, இரண்டு முறை அடி வாங்கியிருக்கிறாள். பள்ளி பேருந்துகளிலும் வேன்களிலும் அன்று யாருக்குப் பிட்டம் கிழிந்தது என்பதுதான் முதல் விசாரணையாக இருக்கும். நோட்டு புத்தகத்தில் திகதி எழுதாதற்கு, அட்டை போடாததற்கு, காண்டினில் நொறுக்குத்தீனி வாங்கி சாப்பிட்டதற்கு, வீட்டுப்பாடம் செய்யாததற்கு, மனனம் செய்தவற்றை மறந்ததற்கு, மருதாணி போட்டு வந்ததற்கு, தங்கத்தில் ஆபரணங்கள் அணிந்து வந்ததற்கு, ஸ்டைலாக சிகை அலங்காரம் செய்ததற்கு, காலணிக்கு வெள்ளை பூசாததற்கு, சபைக்கூடலில் நெளிந்து நின்றதற்கு, தேசிய கோட்பாடு சொல்லும்போது கொட்டாவி விட்டதற்கு, கழிப்பறைக்குச் சென்று தாமதமாகத் திரும்பியதற்கு, அழுக்கடைந்த காலணி அணிந்து வந்ததற்கு இப்படிப் பள்ளி விதிமுறைக்கோடுகளைக் கொஞ்சம் மீறினாலும் மீற கற்பனை செய்தாலும் சுப்பிரமணியம் சாரிடம் தண்டனை நிச்சயம் உண்டு. அதிகம் குறும்பு செய்யும் மாணவர்களை பிற ஆசிரியர்களே அவரிடம் அனுப்பிவிடுவார்கள். அவரிடம் சென்றால் விசாரணையற்ற தண்டனைதான். வெளியே வரும் மாணவனோ மாணவியோ உண்மையில் பிட்டம் கிழிந்தது போலவே இரு கைகளாலும் பின்னால் அழுத்தியபடி கதறி நெளிந்து கொண்டு வெளியேறுவார்கள். சில மாணவர்கள் வலி தாங்காமல் வாந்தி எடுப்பதும் உண்டு.

சுப்பிரமணியம் சாரின் தண்டனைகள் எல்லை மீறும்போது நியாயம் கேட்டு சில ரோஷமுள்ள பெற்றோர்கள் வந்துள்ளனர். அப்படி யார் வந்தாலும் சுப்பிரமணியம் சார் அவர்களுடன் சரிக்குச் சமமாகச் சண்டைக்கு நிற்பார். சட்டம் பேசுபவர்களிடம் சட்டம் பேசுவார். சத்தம் போடுபவர்களிடம் சத்தம் போடுவார். அவர் உள்ளூர்காரர் என்பதால் யாருக்கும் பயப்படமாட்டார். கும்பலாக வந்து தலைமை ஆசிரியரிடம் முறையிட்டாலும் ஒன்றும் பலிக்காது. அந்த வட்டாரத்தில் செல்வாக்குடன் இருந்த கட்சியில் சுப்பிரமணியம் சார் செயலாளராக இருந்தது ஒரு காரணமாக இருக்கலாம். அவர் நினைத்தால் எந்த ஆசிரியரையும் பள்ளிக்கூடம் மாற்றுவார் என்பதெல்லாம் வதந்தியாக இருக்க வாய்ப்பில்லை என்றே இப்போது தோன்றுகிறது. அவருடன் மோதிப்பார்த்து பகைத்துக் கொண்டவர்களின் பிள்ளைகளை அதோடு கண்டுகொள்ள மாட்டார். அப்படி ஒரு ஜீவன் இருப்பதையே காணதது போல முற்றும் முழுதாகத் தவிர்த்து ஆண்டிறுதி அரசாங்க சோதனையில் தோல்வியுற வைப்பதில் சுப்பிரமணியம் சார் பேர் போனவர். இதனாலேயே பிள்ளைகள் நலனில் அக்கறை கொண்ட பெற்றோர்கள் எதற்கு வம்பு எனப் பொறுத்துப்போவதும் உண்டு.

“புள்ளைய பூதமுன்னு சொல்லாதீங்க சார். அவளும் மத்த பசங்களாட்டம்தானே,” என்றார் சண்முகப்பிரியாவின் அம்மா.

“அப்புடிதான் சொல்லுவேன். பூதம்! என்னா பண்ணுவ? மொதல்ல ஒம்பிள்ளைக்கு ஒழுங்கான ஐசி இருக்கா? அப்பா நைஜிரியா காரன்னா இவள அந்த ஊருக்குதான அனுப்பணும்… என்னா எழவுக்கு இங்க வந்து சேக்குறீங்க. பெரிய வாத்தியாரு சொக்கோங் செஞ்சதால எல்லாமே ஓசியில கெடைக்குது. எல்லாம் கவர்மெண்டு காசு. இல்லனா சட்டப்படி உம் பிள்ள இங்க படிக்க காசு கட்டணும்… கட்டுறியா? சொல்லு கட்டுறியா?” என்றார்.

சண்முகப்பிரியாவின் அம்மா ஒன்றும் பேசவில்லை. மகளின் கையைப் பிடித்து அழைத்து வந்து என் பக்கத்தில் அமர வைத்தார். வகுப்பு மொத்தமுமே என்னை நோக்கித் திரும்பிப் பார்த்துச் சிரித்தது. அவள் அம்மா என்னைப் பார்த்து, “பார்க்க நல்ல புள்ளையா தெரியுற. எம்மவள பாத்துக்கய்யா தம்பி!” எனச் சொல்லிவிட்டு வெளியில் கிடத்தியிருந்த செருப்பை அணிந்துகொண்டு அப்படியே குனிந்த தலையுடன் புறப்பட்டார். நான் சண்முகப்பிரியாவைத் தலை உயர்த்திப் பார்த்தேன். பிரியத்துடன் என்னைப் பார்த்துச் சிரித்தாள். சிரிக்கும்போது அவள் உதடுகள் மேலேறி ஈறுகள் கறுஞ்சிவப்பாகத் தெரிந்தன. எனக்கு அச்சிரிப்பு ஒருவித அச்சத்தை மூட்டியது.

சண்முகப்பிரியா என் பக்கத்தில் அமர்வதில் எனக்குத் துளியும் விருப்பம் இல்லை. உண்மையில் என் பக்கத்தில் அமர்பவன் தனபாலன். அன்று அவனுக்குப் பல் வலி என்பதால் பள்ளிக்கு வரவில்லை. அந்த இடைவெளியில் சண்முகப்பிரியா வந்து அமர்ந்ததை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. என் வலது பக்கத்தில் பெரிய மரம் ஒன்று இடைவெளியில்லாமல் அசைந்து கொண்டிருப்பதாக உணர்ந்தேன்.

சண்முகப்பிரியா உண்மையில் பூதம் போலதான் இருந்தாள். எங்கள் பள்ளியில் தலைமை ஆசிரியர்தான் உயரமானவர். மிகச் சரியாக ஆறு அடி எனப் பொதுவாகவே ஒரு பேச்சிருந்தது. அவர் நிமிர்ந்து பார்த்துப் பேசும் மாணவியாகச் சண்முகப்பிரியா இருந்தாள். உயரத்திற்கு ஏற்ற தாட்டியான உடல் அவளுக்கு. கன்னங்கரிய நிறம். சுருளை கேசம். அந்த நாற்காலியும் மேசையும் அவள் அமர்ந்து பயில பொருந்தாமல் இருந்தன. கால்களை மேசைக்கு அடியில் நுழைக்க முடியாமல் மூட்டுகள் டிராயர் விளிம்பில் இடித்தன. தனது சங்கடத்தைச் சொல்லத் தெரியாமல் என்னை வினோதமாகப் பார்த்துச் சிரித்தாள். நான் அவளது நீளமான கால்களையும் புடைத்துக்கிடந்த கால் மூட்டுகளையும் பார்த்து மிரண்டு போயிருந்தேன்.

பள்ளிக்குப் பூதம் போல நுழைந்த அவளைப் பற்றி வீட்டில் முதல் நாள் சொன்னபோது அம்மா என்னைத் திட்டினார். “நீ என்னா சூரிய குஞ்சியாடா? ஒன்னையுந்தான் வௌவாலுன்னு வெடைக்கிறாங்க,” எனக் கடிந்தபோது எனக்குக் கடும் கோபம் வந்தது. நான் கறுப்பாக இருந்தாலும் கலையாக இருக்கிறேன் எனச் சொன்ன அம்மா இப்படிச் சொன்னது எனக்கு வேதனையாக இருந்தது. மேலும் அம்மாவின் வாயிலிருந்து என்னைக் கேலி செய்யும் சொல் ஒன்று வந்ததை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. கண்ணாடி முன் நின்று என் சிறிய கருத்த உருவைப் பார்த்துப் பல மணி நேரம் அழுதேன். இரவானதும் அம்மா தன் மடியில் என்னைப் படுக்க வைத்து எனக்குச் சமாதானம் சொன்னாள். “அந்தப் புள்ள அப்படி பொறந்துடுச்சி. அதுக்கு அப்புடி பேய், பூதமுன்னு சொல்லலாமா? பொம்பளப்புள்ளைய கிண்டல் செய்யலாமா? அம்மா சொன்னதுக்கே ஒம்மனசு கஷ்டப்பட்ட மாரி அந்தப் புள்ளைக்கும் கஷ்டமா இருக்குமுல்ல,” என்றார்.

அம்மா சொல்வது சரியெனப் பட்டதால் மறுநாள் நானும் சண்முகப்பிரியாவைப் பார்த்துச் சிரித்து வைத்தேன். அவள் கண்களில் அப்படி ஓர் உற்சாகம். முகமே மலர என்னைப் பார்த்து புன்னகைத்தாள். இதைப் பார்த்த சக மாணவர்கள் இரண்டு நாள்கள் கழித்துப் பள்ளிக்கு வந்த தனபாலிடம் வத்திவைக்க எனக்கும் சண்முகப்பிரியாவுக்கும் காதல் எனக் கதைக் கட்டி விட்டானவன். அவனது இடத்தைச் சுப்பிரமணியம் சார் சண்முகப்பிரியாவுக்குத் தாரைவார்த்ததில் என்மீது கோவித்துக்கொண்டிருந்தான். அவரிடம் அதுபற்றி கேட்க வக்கில்லாமல் என்னை எப்படியும் பழி வாங்கத் துடித்தான். சண்முகப்பிரியாவுடன் எனக்குக் காதல் என்ற விஷமத்தை உண்மையில் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

பள்ளி வாழ்க்கையில் எனக்கு ஏராளமான காதல்கள் இருந்தன. எப்போதும் ஒரே சமயத்தில் மூன்று பேரையாவது மனதினுள் காதலிக்கும் திறனை நான் கொண்டிருந்தேன். எல்லாமே நல்ல சிவப்பிகள். அந்தச் சிவப்பிகளில் யாரோ ஒருத்தி, நான் வகுப்பில் அமர்ந்திருந்த இடது கோடிக்கு வெட்கத்துடன் தயங்கி வந்து தன் காதலைச் சொல்வாள் என்ற காத்திருப்பெல்லாம் சண்முகப்பிரியாவின் வருகையால் பாலானது. கிட்டத்தட்ட நான் காதலித்த அத்தனை சிவப்பிகளும் சண்முகப்பிரியாவுடன் என்னையும் சேர்த்துவைத்து கேலி செய்தபோது நான் அடைந்த அவமானத்திற்கு அளவே இல்லை.

சண்முகப்பிரியா இது குறித்தெல்லாம் அறிந்திருப்பாளா என்பது எனக்கு இப்போதுவரை தெரியவில்லை. அவள் எது குறித்தும் கவலையடைந்து நான் பார்த்ததும் இல்லை. எனது இடதுபக்கம் அமர்ந்திருந்த அவள் எந்த நேரமும் சிரித்துக் கொண்டுதான் இருப்பாள். காலையில் வகுப்பில் நுழைந்தவுடனேயே என்னைப் பார்த்துச் சிரிப்பாள். வகுப்பில் பாடம் நடக்கும்போதுகூட அவள் என்னைதான் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்கிறாளோ எனத் தோன்றும். நான் வலது பக்கம் திரும்பினால் அதை உணர்ந்து கொண்டவளாக கனிவுடன் பார்ப்பாள். கறுத்த அவள் முகத்தில் விழிகளும் பற்களும் மட்டும் பளிச்சென தெரியும். காண்டினில், திடலில், பள்ளி வாயிலில் என எப்போதும் அவள் என்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருப்பவளாகவே இருந்தாள். இதனால் நண்பர்களின் கேலியும் அதிகமானது. என்னிடம் ஒன்றிரண்டு முறை பேச முயன்று நான் பதில் சொல்லாததால் மௌனமாகவே சில நாட்களைக் கடந்தாள்.

தோழிகள் என யாருமே அவளுக்கு அவ்வளவு எளிதாக வாய்க்கவில்லை. ஓய்வு நேரங்களில் கூடி விளையாடும் ஆறாம் ஆண்டு மாணவிகள் சண்முகப்பிரியா நெருங்கி வருவதையே வெறுத்தனர். சண்முகப்பிரியா அவர்கள் வெறுப்பையும் பரிகாசத்தையும் பொறுத்துக் கொண்டு மாறாத சிரிப்புடன் அவர்கள் மத்தியில் நிற்பதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். அது எப்படியோ அவள் எங்கிருந்தாலும் நான் பார்ப்பதை அறிந்து என் கண்களைச் சந்தித்துவிடுவாள். தூரத்தில் இருந்தாலும் வாஞ்சையுடன் சிரிப்பாள். யாரும் தன்னை விளையாட்டில் சேர்த்துக்கொள்ளாததைப் பற்றி கவலை படாமல் ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்ப்பதில் நிறைவொழுகி நிற்பாள்.

சண்முகப்பிரியா பாடத்தில் கெட்டிக்காரி எனச் சில நாட்களுக்குப் பிறகுதான் தெரிந்தது. கணிதத்தை யாரைவிடவும் நன்றாகவே போட்டாள். மனிதனும் சுற்றுச்சூழலும் பாடத்தில் அறிவியல் கேள்விகளுக்குச் சரியாகப் பதில் தந்தாள். தடிமனான குரல் அவளுக்கு. அடிவயிற்றில் இருந்து பேசுவது போல ஒரு பாணி.

அவள் பள்ளியில் சேர்ந்து ஒரு மாதம் கடந்துவிட்டாலும் சுப்பிரமணியம் சார் அவளை ‘பூதம்’ என்றுதான் விளித்தார். அவர் எங்களின் வகுப்பாசிரியராக இருந்ததோடு மலாய் மொழி ஆசிரியராகவும் திகழ்ந்தார். மூன்று ஆண்டுகளாக அவரே வகுப்பாசிரியராக இருப்பதால் அவர் போதனா முறை எங்கள் எல்லோருக்கும் அத்துப்படி. அவர் வாரம் ஒருமுறை கட்டுரை ஒன்றை கரும்பலகையில் எழுதுவார். பின்னர் அதனை ‘சைக்கிலோஸ்டைல்’ தாளில் வடிவாக எழுத மோகனவள்ளியைப் பணிப்பார். அதனைப் படி எடுப்பார். நாங்கள் அதை நோட்டுப் புத்தகத்தில் ஒட்டி மனனம் செய்ய வேண்டும். அப்படி அவர் கொடுக்கும் கட்டுரைகளில் ஏதாவது ஒன்று யூ.பி.எஸ்.ஆருக்கு வந்தால் மனனம் செய்ததை அப்படியே எழுதி ‘ஏ’ எடுத்துவிட வேண்டும் என்பது அவர் திட்டமாக இருந்தது. மலாய் மொழியில் ‘ஏ’ எடுக்கும் மாணவர்கள் புகுமுக வகுப்புக்குச் செல்லாமல் நேராகப் படிவம் ஒன்றுக்கு நுழையும் வாய்ப்பு இருந்ததால் சுப்பிரமணியம் சாரின் பயிற்று முறையில் யாரும் தலையிடுவதில்லை. இந்த வழிமுறையைப் பின்பற்றி அவர் பல ஆண்டுகளாக நல்ல மதிப்பெண்களைக் கொடுத்து பள்ளியில் தன் புகழை நிலைநாட்டியும் வந்தார்.

சண்முகப்பிரியா மற்ற பாடங்களை நன்றாகப் படித்தாலும் மொழிப்பாடங்களில் தடுமாறினாள். அவள் பிறந்து பத்து ஆண்டுகள் நைஜரியாவில் வசித்ததால் மலாய் மொழி அவளுக்குப் பிடிகொடுக்காமல் நழுவி ஓடியது. சுப்பிரமணியம் சார் கொடுத்த கட்டுரைகளை மனனம் செய்வதில் அவள் எங்களை விட மூன்று நான்கு மடங்காவது உழைப்பைப் போட வேண்டியிருந்தது.

சுப்பிரமணியம் சார் எல்லா மாணவர்களையும் நேரடியாகச் சோதிப்பதில்லை. என் வகுப்பிலேயே அவருக்கு வலது கை போல இருந்த மோகனவள்ளியைத் தவிர மேலும் இரண்டு கெட்டிக்கார மாணவிகள் இருந்தனர். அந்த மாணவிகளிடம் வாரத்தின் இறுதி நாள் மனனம் செய்தக் கட்டுரையை ஒப்புவிக்க வேண்டும். அவர்களிடம் முறையாகக் கட்டுரையை ஒப்புவிக்காத மாணவர்கள்தான் சுப்பிரமணியம் சாரிடம் அனுப்பி வைக்கப்படுவார்கள். சுப்பிரமணியம் சாரின் முன் நின்றாலே மனனம் செய்த மிச்சமீதியும் மறந்துவிடும் என்பதால் அவர் அமர்ந்துள்ள நாற்காலி நோக்கி நடக்கும்போதே மூத்திரம் முட்டிக்கொள்ளும். அது நரகத்துக்குச் செல்லும் அக்னி பாதையாக மாறி கண்கள் இருண்டுவிடும்.

அந்த மூன்று மாணவிகள் கொடுக்கும் தீர்ப்பைப் பொறுத்துதான் எங்களின் தலைவிதி தீர்மானிக்கப்படும் என்பதால் நாங்கள் அவர்களிடம் பதுசாக நடந்துகொள்வோம். குறிப்பாக நான் அடிதாங்க மாட்டேன் என்பதால் அவ்வப்போது வீட்டு குளிர்சாதனப்பெட்டியில் அம்மா கட்டி வைத்திருக்கும் மைலோ ‘பாப்’ ஐஸ்கிரிம்களைத் திருடி வந்து அவர்களிடம் நல்ல உறவைப் பேணிக் கொள்வேன். இதனால் மனனத்தை ஒப்புவிக்கும்போது ஏற்படும் சில தடுமாற்றங்களை அவர்களும் பெரிய மனது பண்ணி பொறுத்துக் கொண்டனர். சண்முகப்பிரியாவின் கெட்ட நேரம் அந்த மூவரில் தலைவி போல இருந்த மோகனவள்ளியோடு அவளுக்குச் சிடுக்கொன்று ஏற்பட்டிருந்தது.

அந்தச் சம்பவம் நடக்கும்போது நானும் திடலில்தான் இருந்தேன். ஓய்வு நேரத்தில் நான் பெண்கள் இருக்கும் பக்கமாகச் சென்று அமர்ந்துகொள்வதுதான் வழக்கம். நொண்டி, கண்ணாமூச்சி, திரிதிரி, கல்லாங்காய் என அவர்கள் விளையாட்டு படு ஜோராய் இருக்கும். அப்படித்தான் ஒருமுறை கண்ணைக் கட்டி விளையாட்டு தொடங்கியது. விளையாடிக் கொண்டிருந்த மாணவிகள் மத்தியில் சண்முகப்பிரியாவும் நின்று கொண்டிருந்தாள். கண்ணைக் கட்டி விளையாடுதல் என்பது சுவாரசியமானது. இருபதுக்கு இருபது அடி சுற்றளவில் காலணிகளைக் கொண்டு எல்லைகள் வகுத்துக்கொள்ள வேண்டும். அதில் ஒருவரின் கண்கள் கட்டப்பட வேண்டும். கட்டப்பட்டவர் பேய். அந்தப் பேய், சுற்றி வரும் தேவதைகளைப் பிடிக்க வேண்டும். பிடி பட்டவர் கட்டத்துக்கு வெளியே நிறுத்தப்படுவார். பேய் தவறிப்போய் கட்டத்துக்கு வெளியே காலை வைத்தால் நங் நங்கென தலையில் மூன்று கொட்டு விழும்.

பொதுவாக இந்த விளையாட்டில் கண்ணைக் கட்ட யாரும் முன்வருவதில்லை. இருபது நிமிட ஓய்வில் ஒருவரை வளைத்துப் பிடிப்பதே பெரும்பாடு. மேலும் தேவதைகள் கொடுக்கும் சீண்டல்களைத் தாங்கிக்கொள்ள வேண்டும். நறுக்கென கிள்ளுதல் தொடங்கி தலையில் தட்டுதல், முதுகில் அறைதல் என வலியைத் தாங்க வேண்டிய கதாபாத்திரம் அது. மோகனவள்ளிக்கு ஏதோ திட்டம் தோன்றியிருக்க வேண்டும். தோழிகளின் காதில் குசுகுசுக்க சண்முகப்பிரியா முதன்முறையாக அவர்களுடன் விளையாட சேர்த்துக்கொள்ளப்பட்டாள். அவளும் பேயாக மாற தயக்கமின்றிச் சம்மதித்தாள். தனக்குக் கிடைத்துள்ள வாய்ப்பை எண்ணி பெருமை பொங்க என்னைப் பார்த்தபோது நான் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டேன். அவளது கண்களைக் கட்ட வழக்கமான துணியின் நீளம் போதவில்லை. எனவே இரண்டு கைக்குட்டைகளை முடிச்சிட்டு இணைத்து அவளைத் தரையில் மண்டியிட வைத்தனர். ஒரு மாணவி நுனிக்கால்களில் எக்கியபடி சண்முகப்பிரியாவின் கண்களை இறுக்கிக் கட்டியபோது அவள் “ஆ” என வலியில் முணகினாள்.

“பூதமுன்னா வலிய தாங்கிக்கிணும்,” எனக் கூடியிருந்த மாணவிகள் கூச்சலிட்டனர். விளையாட்டுத் தொடங்கியது. முதலில் எப்போதும் போல அனைத்துப் பற்களும் தெரிய சண்முகப்பிரியா தோழிகளை விரட்டத் தொடங்கினாள்.

தோழிகளும், “பேயி தொறத்துது… பூதம் வெரட்டுது,” என அவளைச் சுற்றி சுற்றி ஓடினர். சிலர் அவள் முதுகிலும் சிலர் தொடையிலும் ‘பொளேர்’ என அறைவிட்டு நழுவினர். சண்முகப்பிரியாவுக்கு அந்த அடிகள் எல்லாம் சுவாரசியமாக இருந்திருக்க வேண்டும். சிரித்தபடி சத்தம் வந்த திசைகளிலெல்லாம் ஓடினாள். பெரிய பருந்தொன்று கோழிக் குஞ்சுகளைத் துரத்துவது போல எனக்கு அந்தக் காட்சி ஒரு படிமமாக மனதில் பதிந்துள்ளது.

விளையாட்டு தீவிரமாகிக்கொண்டிருக்க மோகனவள்ளி, சண்முகப்பிரியாவை விழ வைக்கும் நோக்கில் காலைக் குறுக்கே விட்டாள். தடுமாறி விழச்சென்ற சண்முகப்பிரியா நிதானித்து நிமிர்ந்து நின்றாள். இடுப்பில் கைகளை வைத்து சுற்றி கேட்கும் கேலிக்குரல்களையும் கெக்கலிப்புகளையும் உற்றுக் கவனித்தாள். அவள் உதட்டில் சிரிப்பு மாறாமல் இருந்தது. என்ன நினைத்தாளோ திடீரென அந்த விளையாட்டை புதிய வீரியத்துடன் விளையாடத் தொடங்கினாள்.

இப்போது அந்த இருபதுக்கு இருபது பரப்பளவை அவளால் சில அடிகளில் கைகளை வீசி நிரப்ப முடிந்தது. விளையாட்டை அவள் ஆக்ரோஷமாகக் கையாள்கிறாள் எனத் தெரிந்தபோது நான் நிமிர்ந்து அமர்ந்தேன். நிஜப் பேய்போலவே உறுமிக் கொண்டு நாலாப்புறமும் கைகளை விசிறி அருகில் அடிக்க நெருங்கியவர்களைத் துரத்தியடித்தாள். அதெல்லாம் பாவனைகள்தான். அவள் சிரித்துக் கொண்டே தன்னைப் பேயாக உருவகித்துக் கொண்டாள். அப்போதுதான் அவள் கைகளில் தன்னை அறைய வந்த மோகனவள்ளியின் கொண்டை சிக்கியது. அதை ஒற்றைக் கையால் சுழற்றிப்பிடித்து இடப்பக்கமாகக் கைகளை விசிற மோகனவள்ளி சுருண்டடித்து காலணிகளின் எல்லையைத் தாண்டி விழுந்தாள். கொஞ்ச நேரம் மோகனவள்ளி எழுந்திருக்காததில் நாங்களும் கூட பயந்துவிட்டோம். கேலிச் சிரிப்புகளுக்கு மத்தியில் எழுந்த அவள், சுற்றியும் இருப்பவர்களை முறைத்துப் பார்த்தாள். சண்முகப்பிரியா கண் கட்டை அவிழ்த்துவிட்டு மோகனவள்ளியிடம் ஓடி வந்து “அடி பட்டுடுச்சா?” என்றாள் கனிவுடன். மோகனவள்ளி அவளை முறைத்துப் பார்த்துவிட்டு கண்கள் கலங்க வகுப்பை நோக்கி ஓடினாள்.

அன்று தொடங்கியது சண்முகப்பிரியாவுக்குக் கெட்ட நேரம்.

மறுவார இறுதிக்குக் காத்திருந்தது போல சண்முகப்பிரியாவைத் தான் சோதிக்கும் மாணவர்கள் பட்டியலில் நிற்க வைத்து சுப்பிரமணியம் சாரிடம் அவளது மனனத்தில் பிழை உள்ளது என மாட்டி விட்டாள். சண்முகப்பிரியா என்றதும் சார் எதையும் பெரிதாக ஆராய்ச்சி செய்யவில்லை.

“நீயா… பூதத்துக்கு மலாய் பாடமுன்னா கசக்குமுல்ல,” என்றவர் பிட்டத்தில் நான்கைந்து அடிகள் விட்டார். சண்முகப்பிரியா எல்லா அடிகளையும் வாங்கி கொண்டு சிரிப்பு மாறாமல் நின்றதை நாங்கள் எல்லாருமே ஆச்சரியமாகப் பார்த்தோம்.

“எரும தோலுடா அவளுக்கு!” என தனபாலன் காதைக் கடித்துவிட்டுச் சென்றான். “அவ நெஜமாவே பூதந்தான்!” என்றான் பீட்டர்.

சண்முகப்பிரியா அருகில் வந்து அமர்ந்தபோது “வலிக்கலயா?” எனக் கேட்டேன். என் நினைவில் நானாக முன் சென்று அவளிடம் பேசியது அதுதான் முதல் முறை.

சிரித்துக்கொண்டே ‘வலிக்கிறது’ என்பதுபோல தலையை ஆட்டினாள். உதடுகள் மேலும் கீழும் விரிந்து கருஞ்சிவப்பு ஈறுகளுக்கு மத்தியில் அவளது பெரிய பற்கள் விகாரமாகத் தெரிந்தன.

நான் மேற்கொண்டு எதையும் கேட்கவில்லை. ஆனால், அன்று முதல் ஒவ்வொரு வாரம் மோகனவள்ளி சண்முகப்பிரியாவை சிறிய தடுமாற்றங்களைக் காரணம் காட்டி மாட்டிவிடுவதும் அவளுக்கு கடுமையாக அடிவிழுவதும் தொடர்ந்தது. ஒவ்வொரு வாரமும் அடியின் எண்ணிக்கையும் கூடியது. ஏதாவது ஓர் அடியில் அவளை அழ வைப்பது எனச் சுப்பிரமணியம் சார் சபதம் எடுத்துள்ளதைப் போல அடிகளின் வேகம் உக்கிரமாக இருக்கும். சுப்பிரமணியம் சார் நிறுத்தி வைக்கும் பாணியில் இருந்து மாறாமல் நிர்ப்பாள் சண்முகப்பிரியா. கைகள் மேசையைப் பிடித்தவாக்கில் இருக்கும். தேவையான அளவு குனிந்து பிட்டத்தைக் காட்டுவாள். அடிவிழும்போது கால்களைச் சில சமயம் உள்நோக்கி நகர்த்தும்போது மட்டுமே அவளுக்கு வலிக்கிறதோ எனச் சந்தேகம் கொள்வோம். எவ்வளவு அடி வாங்கினாலும் சிரித்துக் கொண்டே வந்து நாற்காலியில் அமர்ந்து கொள்வாள். சில சமயம் தன்னைத் திரும்பிப் பார்க்கும் மாணவர்களைப் பார்த்து வெட்கத்தால் நெளிவாள். என்னை அவள் பார்க்கும் பார்வையில் ‘கவலைப்படாதே’ எனச் சொல்கிறாளோ எனத் தோன்றும்.

சண்முகப்பிரியா மோகனவள்ளிக்குப் பகையானவுடன் பலரும் அவளிடம் கொஞ்சம் நஞ்சம் பேசியதையும் குறைத்துக் கொண்டனர். நான் எப்போதுமே மோகனவள்ளியின் அடிமை என்பதால் அவளிடம் சிரிப்பதைக் கூட நிறுத்திவிட்டேன்.

சண்முகப்பிரியாவுக்கு அதனால் எல்லாம் கவலையில்லை. அவள் என்னிடம் அன்பாகவே இருந்தாள். தன் வீட்டில் இருந்து ரம்புத்தான் பழங்களை எனக்கு ரகசியமாகக் கொடுத்தாள். சில சமயம் காசு மிட்டாய்களை எனக்குத் தெரியாமல் என் பென்சில் பெட்டியில் வைப்பாள். நான் எதையும் தடுத்ததில்லை. ஆனால் அவளிடம் பேசாமல் இருப்பதே உயிருக்கு உத்தரவாதம் என விலகியிருந்தேன். அவளும் எதையோ விளங்கிக்கொண்டவளாக மௌனமாகவே வகுப்பில் தன் தினங்களைக் கழித்தாள். மீண்டும் அவள் பேசியதென்றால் அது பள்ளிச் சுற்றுலாவில்தான்.

பள்ளி சுற்றுலா ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கான சிறப்பு வழிபாடுடன் கூடியது என்பதால் பெற்றோர் ஆசிரியர் சங்கமே எல்லா செலவுகளையும் ஏற்றுக் கொண்டது. பங்கோர் தீவு சுற்றுலா அது. காலையில் சென்று இரவில் திரும்புவதாய் திட்டம். என் அம்மா செலவுக்கு ஐந்து ரிங்கிட் கொடுத்திருந்தார். என் வாழ்நாளில் அத்தனை பெரிய தொகையை அம்மாவிடமிருந்து பெற்றது அதுவே முதன்முறை. பங்கோர் தீவில் கடலோரம் அமைந்திருந்த பத்திரகாளியம்மன் கோயிலில் யூ.பி.எஸ்.ஆர் சிறப்பு வழிபாடு முடித்தபிறகு கடலில் குளிக்க ஆசிரியர்கள் அழைத்துச் சென்றனர். இந்தப் பயணம் முழுக்க தனியாகவே இருந்த சண்முகப்பிரியா கடலில் குளித்துக் கொண்டிருக்கும்போதுதான் என் அருகில் வந்தாள்.

“யேன் எங்கிட்ட இப்பவெல்லாம் பேச மாட்டுற?” என்றாள். கடலில் நனைந்த அவளைப் பார்க்கவே விகாரமாக இருந்தது. எப்போதும் முகத்தில் அப்பி வரும் புட்டாமாவு கூட இல்லாமல் கன்னங்கரியவளாய் தெரிந்தாள். அவளது சுருளை முடிகள் முகத்தோடு மேகிமீ போல ஒட்டிக் கிடந்தன.

“நாந்தான் எப்பவும் ஒங்கிட்ட பேச மாட்டனே,” என்றேன். சண்முகப்பிரியா என்னிடம் பேசுவதைப் பார்த்த தனபாலன் கொஞ்சம் கடல் நீரை அள்ளி எங்கள் மீது தூவிவிட்டு மற்றவர்களிடம் தான் பார்த்ததைச் சொல்வதற்காக ஓடினான்.

“ஆனா சிரிப்பியே நீ!” என்றாள். அவள் வெட்கப்படுவதைப் பார்க்க எனக்கு வெறுப்பாய் இருந்தது.

“புடிக்கல!” என்றேன்.

“ஏன்?” என்றாள்.

“நீ கொக்கு பாஞ்சாங்” என்றேன்.

“அப்புடினா?”

“ரொம்ப ஒயரம்” என்றேன். அவள் அதற்கும் சிரித்தாள்.

“ஒன் ஒயரத்துக்கு வந்தா புடிக்குமா?” என்றாள்.

“அதெப்படி முடியும்?” என்றேன்.

நாங்கள் பேசிக்கொள்வதை நண்பர்கள் தொலைவில் கூட்டமாக நின்று கேலி செய்வதை என்னால் காண முடிந்தது. உடலெல்லாம் கூசியது. மோகனவள்ளி எங்கிருந்தாவது கண்காணிக்கிறாளா எனப் பயம் வந்தது.

“முடியும்!” என்றாள் சண்முகப்பிரியா. பின்னர் எதுவும் சொல்லாமல் கடல் நோக்கி நடந்தாள். உள்நோக்கிச் செல்லச் செல்ல அவள் குட்டையாகிக்கொண்டே இருந்தாள். கிட்டதட்ட பத்து அடியைத் தாண்டியவுடன் “ஒன்னோட ஒசரம் வந்துட்டேனா?” என வாய்க்கு இருபக்கமும் அணை வைத்து கத்தினாள். அது நண்பகல் நேரம். சூரியன் வெள்ளித்துளிகளாக மின்னி கடல் கண்களைக் கூசச் செய்தது.

நான் “இல்லை” எனக் கைகளை ஆட்டியபடி கத்தினேன். கடல் அலைகளுக்கு நடுவில் நான் ‘இல்லை’ என சிலமுறை கத்திய சொற்களைக் காற்று பறித்துச் சென்றிருந்தது.

சண்முகப்பிரியா மேலும் நடந்தாள். நடந்துகொண்டே இருந்தாள். அவள் நடக்க நடக்க குள்ளமாகிக்கொண்டே வருவதாகத் தோன்றியது. அலைகள் அவள் உடலை அசைத்துக்கொண்டே இருந்தது. அவ்வப்போது அவற்றால் தள்ளிவிடப்பட்டு மீண்டும் எழுந்து நின்றாள்.

சண்முகப்பிரியா வெகுதூரத்தில் இருந்தாள். மிகச்சரியாக என்னுடைய உயரத்தில் இருந்ததாய் நினைவு. உண்மையில் சொல்லப்போனால் அவள் அன்று அழகாகத் தெரிந்தாள்.

நான் அவளைப் பார்த்துச் சிரித்தேன். அவள் அங்கிருந்தபடியே எதையோ கத்திச் சொன்னாள். என் காதுகளில் எதுவும் கேட்கவில்லை. ஆசிரியர்கள் பதறியடித்து வந்து அவளை அழைக்கும் வரை அவள் அங்கு நின்று ஒன்றையே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தாள். ஓர் ஆசிரியர் அவளைக் காப்பாற்றுவதாகச் சொல்லி பாதி தூரம் சென்றவர், தரையில் கால் எட்டாமல் பின்வாங்கித் திரும்பினார்.

சண்முகப்பிரியா அவளாக முடிவெடுத்து மிக நிதானமாக கரைக்கு வந்தபோது அவள் முகத்தில் தீராத வெட்கம் இருந்தது. ஆசிரியர்கள் ஏசுவது எதுவும் அவள் காதுகளில் விழவில்லையோ எனத் தோன்றியது. சுப்பிரமணியம் சார் “அப்படியே உழுந்து செத்துருக்கலாமே பூதம்!” எனக் கையை ஓங்கிச் சென்றபோது சில பெண் ஆசிரியர்கள் “வெளியாளுங்க பாக்குறாங்க சார்… வேணாம்!” எனத் தடுத்தனர்.

அவள் வெட்கம் தாளாமல் சிரித்துக்கொண்டே இருந்தாள்.

யூ.பி.எஸ்.ஆர் சோதனையில் தீவிர பயிற்சிகள் ஆகஸ்டு மாதத்திற்குப் பின்னர் படு வேகம் எடுத்ததால் நான் சோதனையில் எனக்கு முன்னும் பின்னும் பக்கவாட்டிலும் அமரும் மாணவர்களிடம் நல்லுறவை வளர்ப்பதில் தீவிரமாக இருந்தேன். பரீட்சையில் ஏதும் தெரியாவிட்டால் அப்போதைக்குக் கண் கண்ட தெய்வங்கள் அவர்களாகவே இருப்பார்கள் என்பதால் வீட்டில் அடிக்கடி பாப் ஐஸ்கிரீம்கள் காணாமல் போயின.

யூ.பி.எஸ்.ஆருக்குச் சில வாரங்கள் இருக்கும்போது சுப்பிரமணியம் சார், மாதிரி யூ.பி.எஸ்.ஆர் சோதனை ஒன்று வைக்க முடிவெடுத்தார். அதில் யாராவது மலாய் மொழியில் ‘ஏ’ எடுக்காவிட்டால் சூத்தாம்பட்ட கிழியும் என்றார் உறுதியாக. எனக்கு ஏற்கனவே அப்பகுதியில் சதைப்பற்று குறைவு. அடித்த வேகத்தில் நேராக மரக்கட்டை எலும்பை உடைத்துவிடுமோ எனும் பயம் வந்ததால் நான் தீவிரமாகப் படிக்க ஆரம்பித்திருந்தேன். பரீட்சை நெருங்க நெருங்க பயமும் கூடியதால் மலாய் மொழியில் ‘ஏ’ எடுக்க ஓர் உபாயம் செய்தேன்.

அது எனக்கும் தனபாலுக்கும் பழக்கமான பழைய செய்முறைதான். பழுப்பு நிறமான மேசையின் மேல் பரப்பில் பென்சிலைக் கொண்டு குறிப்புகள் எழுத வேண்டும். பக்கவாட்டில் சாய்ந்து பார்த்தால் பென்சில் எழுத்துகள் வெள்ளி நிறத்தில் துலங்கித் தெரியும். எனவே, எல்லாரும் வகுப்பை விட்டு வெளியேறிய ஒரு மதியத்தில் நான்கைந்து மலாய் கட்டுரைக்கான முக்கிய குறிப்புகளை எழுதி வைத்துவிட்டு மாரியம்மன் கோயிலில் அந்த நான்கில் ஏதாவது ஒன்று வர வேண்டும் எனச் சூடம் ஏற்றி வந்தேன்.

அம்மனின் அருள்! அதில் ஒரு கட்டுரைதான் பரீட்சைக்கு வந்தது. திட்டமிட்டபடி குறிப்புகளைக் கொண்டு காப்பி அடிக்கலாம் என முயன்றபோது சுப்பிரமணியம் சாரிடம் பிடிபட்டேன். தனபாலன் என்னைப் பார்த்துக் கேலியாகச் சிரித்துக் கொண்டிருப்பதில் எல்லாமே மளமளவென புரிந்தது.

“இத நீதானடா எழுதின வௌவாலு?” என்றார்.

என்னால் எதுவுமே பேச முடியவில்லை. யானை மிதித்த களிமண்போல என் பிட்டம் கூழாகிக் கிடப்பாகக் கற்பனைகள் வந்தன.

“சொல்லுடா…” என்றார்.

“அவன் இல்ல சார்… நான்தான் எழுதினேன்!” என்றாள் சண்முகப்பிரியா.

“ஏய்… நீ எழுதுனது அவன் மேசைக்கு எப்புடி போனுச்சி… என்னா கத உடுறியா?” என்றார் சுப்பிரமணியம் சார்.

“நான்தான் சார் எழுதினேன்!” சண்முகப்பிரியா உறுதியாகச் சொன்னாள். சுப்பிரமணியம் சார் கோபமாகத் தனபாலைத் திரும்பிப் பார்த்தார். அவன் ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தான்.

“என்னடா…” என்றார் மீண்டும் என்னைப் பார்த்து.

“நா… எழுதல சார்!” என்றேன் தடுமாற்றமாக.

“நான்தான் சார்!” என்றாள் சண்முகப்பிரியா மீண்டும் உறுதியாக.

சண்முகப்பிரியா ஏன் அவ்வாறு சொன்னாள் என இப்போதுவரை தெரியவில்லை. ஆனால் சுப்பிரமணியம் சாருக்கு அவ்வளவு வெறியேறி நாங்கள் யாரும் பார்த்ததில்லை. எகிறி குதித்து அவளது சுருளை முடியைப் பிடித்தவர், தரதரவென அவளை இழுத்துக் கொண்டு விளையாட்டு அறை நோக்கிச் சென்றார். சண்முகப்பிரியா உடலைப் பாதியாக வளைத்து அவர் பின்னால் நடந்தாள். ஓர் ஒட்டங்கச்சிவிங்கியின் கொம்பைக் கௌவிய நாய்க்குட்டி ஒன்று பலம் கொண்ட மட்டும் இழுத்துச் செல்வதுபோல அக்காட்சி என் மனதில் பதிவாகியுள்ளதை இப்போது இதை எழுதும்போது நான் உணர்கிறேன். எனக்கு ஒன்றுமே செய்ய தோன்றவில்லை. என் பிட்டம் வடிவக்குலைவில் இருந்து தப்பியது என்பது மட்டும் எனக்கு அப்போது நிம்மதியாக இருந்தது.

இரண்டு மூன்று ஆசிரியர்கள் விளையாட்டு அறையில் கதவைப் பலம் கொண்ட மட்டும் தட்டி அவரைச் சமாதானம் செய்யும் விதமாகப் பேசிய பிறகே கதவு திறந்தது. ருக்குமணி டீச்சர் சடாரென உள்ளே நுழைந்து சண்முகப்பிரியாவைச் சமாதானம் செய்வது போல இடுப்பில் அணைத்தபடி வெளியேறியதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த நாங்கள் அவள் வகுப்புக்குள் நுழைவதற்கு முன்பே ஓடி இடங்களில் அமர்ந்தோம்.

சண்முகப்பிரியா அழுவதை நாங்கள் முதன்முறையாகப் பார்த்தது அன்றுதான். அவள் கண்கள் பொங்கி சிவந்திருந்தன. களைந்த தலையை வாராமல் இருந்தாள் சண்முகப்பிரியா. எதையோ நினைத்து குமுறி குமுறி அழுதாள். கைகள் இரண்டையும் உடலில் குறுக்காகக் கட்டியிருந்தாள். என் முகத்தை அவள் பார்க்கவே இல்லை. நான் அவளிடம் என்ன பேசி எப்படிச் சமாதானம் சொல்வது எனத் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தேன். மோகனவள்ளியும் அவளது நெருங்கிய தோழிகளின் குழுவும் பரம திருப்தியுடன் திரும்பிப் பார்த்துச் சிரித்தனர். சுப்பிரமணியம் சார் எப்போதையும் விட அன்று அமைதியாகத் தன் இருக்கையில் வந்து அமர்ந்தார். எதுவும் நடக்காதது போல மேசையில் இருந்த தாள்களை அடுக்கிக் கொண்டிருந்தார்.

நான் மெல்லமாக “சோரி!” என்றேன்.

ஒரு சொல்கூட வெளியிட முடியாத தேம்பலுடன் விழிகளை மட்டும் திருப்பி என்னைப் பார்த்தாள். முகம் முழுவதும் அவமானம். சண்முகப்பிரியாவும் ஒரு சிறுமிதான் என்றும் அவளுக்கும் அடித்தால் வலிக்கும் எனவும் நாங்கள் பள்ளி முடிந்து பரபரப்பாகப் பேசிக்கொண்டோம்.

மறுநாள் சண்முகப்பிரியா தன் அம்மாவுடன் பள்ளிக்கு வந்தாள். தலையைக் குனிந்தவாக்கில் வைத்திருந்தாள். அவள் என்னைப் பார்க்க வேண்டும் என மிகவும் எதிர்ப்பார்த்தேன். அவள் யாரையும் பார்க்க பிடிக்காதவளாக நின்று கொண்டிருந்தாள். அவரைப் பார்த்தவுடனே சுப்பிரமணியம் சாருக்கு ஏதோ புரிந்திருக்க வேண்டும். தன்னிலிருந்து எதையோ திரட்டி உருமல் குரலில் “என்னா?” என்றார். சண்முகப்பிரியாவின் அம்மா மெல்ல அவர் அருகில் வெறுங்காலுடன் நடந்து சென்றார். இதற்குள் பக்கத்து வகுப்பு ஆசிரியர்கள் ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என வேடிக்கைப் பார்க்கக் கூடியிருந்தனர்.

“என் புள்ளைய எவ்வளோ வேணுமுன்னாலும் அடிக்கலாம். கண்ண மட்டும் மிச்சம் வச்சிட்டு தோலையெல்லாம் உரிச்சி எடுக்கலாம். பாடம் சொல்லி கொடுக்குறவரு சாமி. சாமி என்னவும் செய்யலாம். ஆனா…” அவள் அம்மா கையெடுத்துச் சுப்பிரமணியம் சாரை வணங்கினார். பின்னர் மௌனமாகச் சண்முகப்பிரியாவை அழைத்துக் கொண்டு வகுப்பைவிட்டு வெளியேறினார். தலைமை ஆசிரியர் சமாதானம் செய்ய வந்தும் அவர் யாருக்காகவும் நிற்கவில்லை. சண்முகப்பிரியா எங்கள் யாரையும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

அந்தச் சம்பவத்துக்குப் பிறகு சுப்பிரமணியம் சார் எங்களை அடிப்பதை முழுமையாக நிறுத்தியிருந்தார். அதிகமாக விடுப்பு எடுத்தார். யூ.பி.எஸ்.ஆர் பரீட்சைக்கு முன்னதாகவே அவர் பள்ளியை விட்டு மாறிவிட்டதாகக் கேள்விப்பட்டோம். சண்முகப்பிரியா யூ.பி.எஸ்.ஆர் பரீட்சை எழுதவாவது கட்டாயம் வருவாள் எனச் சொன்னார்கள். ஆனால் அவள் குடும்பத்தை யாராலும் தொடர்புக்கொள்ள முடியவில்லை. அவள் யூ.பி.எஸ்.ஆர் எழுத வரவே இல்லை.

அதன்பிறகு நான் சண்முகப்பிரியாவை முழுவதுமாக மறந்திருந்தேன். ஆனால் அவள் கடலுக்குள் இறங்கி என் உயரத்திற்குச் சமமாகி நின்று, அலைகளின் பேரிரைச்சலில் என்ன சொன்னாள் என என்னால் இன்றளவும் ஊகிக்க முடியாததாகவே உள்ளது. ஒருவேளை என் தோள்களில் அமர்ந்துகொண்டு உயரத்தில் இருந்து கடலைப் பார்த்து இடைவிடாது சத்தமிட்டு சிரிக்கும் மகளின் வழியாக ஒருநாள் எனக்கு அது புரியக்கூடும்.

3 comments for “சண்முகப்பிரியா

  1. March 4, 2024 at 1:35 am

    சண்முகப்பிரியாவின் பாத்திரம் நன்றாக வார்க்கப்பட்டிருக்கிறது. அவள் கதைசொல்லியின் மேல் ஒரு கண் வைத்திருப்பதும் அழகாக வந்திருக்கிறது. இதனை பப்பி லவ் என்று சொல்லலாம். கடலின் குளிக்கும்போது அவள் கதைசொல்லியின் மீதான தன் காதலைச் சொல்வதைப் புரிந்துகொள்ளமுடிகிறது. ஆனால் அவள் மீதான உடற்கேலிக்கு அவள் எந்தவித எதிர்ப்பையோ குறைந்தபட்சம் குழந்தைப் பருவத்துக்கே உண்டாகும் அழுகையைக் கூடக் காணமுடியவில்லை. சுப்பிரமணியம் சார் தண்டிக்கும்போது அவள் ஆசிரியருக்குப் பயந்து தன் எதிர்வினையக் காட்டாமல் இருந்திருக்கலாம் ஆனால், சக மாணவர்கள் கேலியை அவள் பொருட்படுத்தாதது சற்று உறுத்துகிறது.

  2. M Murali
    March 6, 2024 at 12:02 pm

    சிறுகதை சற்று ஆழமாக பாதித்தது. சண்முகப்பிரியா தோற்றத்தின் வித்தியாசம் குறியீடாக.. சற்று தூரம் சென்று விரும்பத்தக்கவளாக மாற வேண்டும் என்கிற நினைப்பும் கூட.. பலருக்கு இதுபோன்ற அனுபவம் இருந்திருக்க கூடும். அது ஒரு இணைப்பு தருணம் ஆகலாம்.

    தோன்றியது – கதை முழுவதும் வெளிப்படையாக பேசும் கதாபாத்திரம் சண்முகப்பிரியா ஏன் அழுதாள் என்பதை பூடகமாக சொல்லியது.. ஏன்.. சமூக ஊடக நாகரீகமா? இதற்கு பதில் வேண்டுமென எதிர் பார்க்கவில்லை..

    விழிப்புணர்வை நோக்கிய சிறுகதை என நினைக்கிறேன். வாழ்த்துக்கள்..

  3. எம். பிரபு, பெந்தோங்
    April 15, 2024 at 8:36 pm

    சுப்பிரமணியம் ஆசிரியர் சண்முகப்பிரியாவிடம் அப்படி நடந்திருக்கக் கூடாது. இந்தக் கதை 28 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவமாக எடுத்துக் கொள்ளலாம். இப்போதும் பல ஆசிரியர்கள் இது போலவே இருக்கின்றனர்/ இருக்கக்கூடும்.

    கதைச்சொல்லிக்கு நடக்கும் சங்கடமெல்லாம் படிக்கும்போது நகைச்சுவை கொட்டுகின்றது.

    சண்முகப்பிரியாவை விகாரமாக காட்சிப் படுத்தினாலும், அவள் அழகாகவே தோற்றமளிப்பது ஏன் என்று புரியவில்லை.

    -எம். பிரபு, பெந்தோங்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...