வண்டி

நாச்சியாவிற்கு ஒரு கணம் நெஞ்சு அடைத்துவிட்டது. உணவகத்தின் பின்புறச் சமையல் கூடத்தில், மிளகாய் தூளை அள்ளிப் போட்டு நறுக்கியக் கோழித்துண்டுகளை அலுமினிய அகப்பையால் கிண்டிக் கொண்டிருந்தவளின் கைகள் சட்டென பிடியை விட்டன. முக்காடாக வேயப்பட்டிருந்தச் சேலைத்தலைப்பையை வாயில் பொத்தி,

“யா ரஃபி, என்ன கொடுமையிது!” வயிற்றைத் தள்ளிக் கொண்டு நிறைமாதமாக வந்து நின்ற அவளைப் பார்க்கும்போது மூச்சு ஸ்தம்பித்துவிட்டது. ஒரு விநாடி நம்ப முடியாமல், கண்களைக் கசக்கியவளின் விரல் நுனிகளில் ஒட்டியிருந்த மிளகாய் தூளின் காரம் கண்களை எரித்தது.

“க்கா” என்று நலுங்கிய சாப்பாட்டுத் தட்டைத் தன்னிடம் நீட்டியவளிடம், என்ன கேட்பது எனத் தெரியாமல், நாச்சியாவிற்கு நாக்கு மேல்லண்ணத்தில் ஒட்டிக் கொண்டது.

“என்ன அக்கிரமம் இது? என்னடிப் பண்ணித் தொலைச்ச? யாருடீ இதுக்கு காரணம்? ஒரு ஆறு மாசம் ஊருல இருக்குற வாப்பாவப் போய் பார்த்துட்டு வர்றதுகுள்ள இப்படி வயிறு வாங்கி நிக்கிறாளே?”

நாச்சியாவின் கைகள் தன்னிச்சையாக நெஞ்சில் அடித்துக் கொண்டன. சரிந்த வயிறோடு சுவற்றில் ஒரு கையை அண்டக் கொடுத்து நின்றவளின் கோலம் கோட்டோவியமாய்த் துலங்கியது. கட்டியிருந்தக் கந்தை, வயிற்றுப் பகுதியை இறுக்கமாய் பிடித்து உருண்டை வடிவத்தை முன் தள்ளி நின்றது. அவளிடமிருந்து பதிலேதும் வரவில்லை. நீட்டிய தட்டில் இன்னும் ஏதும் விழவில்லையே எனும் காத்திருப்பின் கனம் அவளது முகத்தைக் கோணலாக்கியது. அவளது குவிந்த பார்வை நாச்சியாவின் முகத்தைவிட்டு அகலவில்லை. உப்பிய கன்னங்களும், தாடைகளில் பிதுங்கிய சதைத்திரள்களும், அகன்ற இடுப்பும், ஒரு சுற்று பூசிய உடம்பும் தாய்மையின் துளிர்ப்பை வனப்பாய்க் காட்டின. அவளது கர்ப்பத்தில் வளரும் சிசுவின் தன்னொளி, அவளது முகச்சோபையிலும் கண்களிலும் மினுங்கியது.

“இத்தனை கூப்பாடு போடறீங்களே மச்சி, எங்கையாவது வாயைத் தொறக்குறாலா இந்த வண்டி? இன்னும் ரெண்டு இட்டிலி வேணும்முனு கேப்பாளே தவிர, வேற ஒரு மண்ணும் தெரியாது. நாங்களும் இவள சதா கேட்டு சலிச்சிட்டோம். இதுக்கு காரணம் யாருடீன்னு கேட்டா வயித்தயே தடவுறா. ஏதும் வெவெரம் தெரிஞ்சா, அந்த நாய புடிச்சி இவள கையோட கூட்டிப்போவ சொல்லலாம். வாய தொறக்க மாட்டுறா. அவகிட்ட பேசி எதுக்கு உங்க ஆவியை வீணாக்கனும். அடுப்புல வேகறக் கோழியப் பொரட்டி போடுங்க, தீஞ்சிடப் போகுது.”

அந்தத் துரிதமான காலை வேளையில், மும்முரமாகத் தேநீரை ஆற்றிக் கொண்டிருந்த அலி பாய், நாச்சியாவை ஆசுவாசப்படுத்தினார்.

“எந்த கஃபீர் சண்டாளப் பாவி இந்தக் காரியத்தப் பண்ணான்? பச்ச மண்ண, இப்படி அசிங்கப் பண்ண சைத்தானால மட்டுதான் முடியும். யா அல்லா, கியாமத்து நெருங்கிடுச்சு போலிருக்கே.”

நாச்சியாவிற்கு மனது கொஞ்சம் கூட ஆறவில்லை. ஆனால், எதிரில் நின்றவளோ தன் மேடிட்ட வயிற்றை ஒரு கையினால் தாங்கிப் பிடித்து, மறுகை விரலிடுக்கில் வழியும் சாம்பாரை லஜ்ஜையில்லாமல் நக்கியவாறு, தனக்கும் அங்கு நடக்கும் சம்பாஷணைக்கும் தொடர்ப்பே இல்லை என்பது போல் நகர்ந்தாள்.

அவளை எல்லோரும் ‘வண்டி’ எனத்தான் விளிப்பார்கள். ஆகுபெயர் போன்று, இந்தக் காரணப்பேரும் அவளோடு ஒட்டிக் கொண்டது. இவளுக்கும் ஏதோ ஒரு நல்ல பெயர் இருந்திருக்கக்கூடும். நாள் நட்சத்திரமெல்லாம் பார்த்துதான் ஏதோ ஒரு பெயரை இவளுக்கும் வைத்திருப்பார்கள். இது நாள் தொட்டு யாரும் இவளைச் சொந்தப்பெயர் சொல்லி கூப்பிட்டுக் கேட்டதில்லை. தனது பெயர் என்னதென்றே அவளுக்கும் தெரியாது போல. பேரங்காடிகளில் வாங்கும் பொருட்களை அமர்த்திக் கொள்ள ஏதுவாக இருக்கும், கம்பிகளாலான வண்டியில்தான் இவளது அத்தனை பொக்கிஷங்களையும் வைத்திருப்பாள். அந்த வண்டியைத் தள்ளிக் கொண்டுதான் அவளது பெரும்பாலான பிச்சை கேட்கும் பயணங்கள் தொடரும். அதனால் அந்த வண்டியே அவளின் அடையாளமாகிப் போய்விட்டது. முப்பது வயதுக்கும் குறையாத பேரிளம் பெண் பிச்சியாய் அலைந்தாலும் கந்தலும் கிழிச்சலுமாய் ஏதோ ஒன்றை ஆடையாகப் போர்த்திக் கொண்டாலும் கிழிந்த துணிகளின் சல்லடை கண்கள் வாயிலாக அவளது வளமையான அங்கங்கள் மாசுமருவோடு தெரியத்தான் செய்தன.

அந்த நகர்ப்புறத்தில் அவள் கால்கள் பாவாத இடங்களே கிடையாது. போக்கிடம் வேறெதுவும் இல்லையென்றாலும், இரவில் அவளின் ஒத்த மனிதர்களுடன்தான் தங்குவாள். வண்டிக்கு இன்னொரு சீனக் கிழவிதான் துணை. பாஷைகள் புரிகிறதோ இல்லையோ, அவர்களுக்குள் பொதுவாய் அமைந்த ஏதோ ஒரு உணர்வுகளின் பரிபாஷைதான் பாலமாய் இணைத்திருக்கின்றது. இரவில் அவள் துஞ்சுமிடம் இன்னதென்று சொல்லிவிட முடியாது. பெரும்பாலான இரவுகளில் கேட்பாரற்றுத் திறந்து கிடக்கும் சிதிலமடைந்த கட்டிடங்கள், அவள் ஒண்டிக் கொள்வதற்குப் போதுமானதாக இருக்கும். சமயங்களில் அங்கிருந்து விரட்டியடிக்கப்படும் வேளைகளில், விளையாட்டுப் பூங்காவின் கல்லிருக்கைகளும், பேருந்து நிறுத்தக் குடைகளும் அவளுக்குத் தஞ்சமாக இருந்துள்ளன.

அவளது கால்கள் தெருவெல்லாம் யாசகம் கேட்க அலைந்தாலும், காலை பொழுதின் கருக்கலில் ‘நாச்சியா நாசிக் கண்டார்’ உணவகத்திற்குத் தானாகவே வந்து சேரும். முந்தைய நாளின் உணவின் மீதங்களும், வாடிக்கையாளர்கள் சாப்பிடாமல் ஒதுக்கிவைத்தப் பதார்த்தங்களும் நெகிழிவாளிகளில் கொட்டப்பட்டு, கரப்பான்களும் எலிகளும் ஓடிக் கொண்டிருக்கும். ஊசல் வாடையும், அள்ளும்போது நூல்போன்று வழியும் அழுகலும் எப்பேர்ப்பட்டவருக்கும் வயிற்றில் பிரட்டலை உண்டுபண்ணும். அவளது நாசியில் மணத்தைப் பகுத்தறியும் அரும்புகள் கருகிவிட்டனவோ என்னவோ, துளியும் முகத்தைச் சுளிக்காமல், அசூசை படாமல், ஏதோ மலர்க்கட்டை வாரிக்கொண்டு போவதுபோல் இயல்பாய் தூக்கிச் செல்வாள். இந்தத் துப்புரவு வேலைக்குதான் அவளுக்குப் போதுமான காலையுணவு இட்டிலியாகவும் தேநீராகவும் வழங்கப்படுகிறது. சுத்திகரிப்பு பணிமுடிந்தபின், சாவகாசமாகப் பின்புற கல்தொட்டியில் பனியால் குளிர்ந்திருக்கும் நீரில் முகம் கழுவி, கொப்பளித்துத் தன்னை ஒருவாறாக ஒப்பனை செய்து கொள்வாள். தலைமயிர்கள் எண்ணெய் காணாமல், செம்பட்டை நிறம் வாங்கியிருந்தாலும், வாரி சீவி, ஒரு ஒழுங்குமுறையோடுதான் இருப்பாள். கந்தலையும் கிழிச்சலையும் கட்டினாலும், அவளிடம் ஒரு நறுவிசு இருந்தது. சமயங்களில், உணவக பின்கட்டில் பெரிய வாணலிகளில் சமைத்துக் கொண்டிருக்கும் நாச்சியா ஆச்சரியப்படுவதுண்டு.

“ஏண்டி, வண்டி, நீ நெசமாலுமே பிராந்து புடிச்சவளா இல்லை சும்மாகாட்டியும் நடிக்கிறீயா? ஒரு குப்பை மிச்சம் வைக்காமல் எல்லாத்தையும் சுத்தமா க்ளீன் பண்ணி, என்ன பவுசா சீவிச் சிங்காரிக்கற? இதெல்லாம் புத்தி சுவாதீனம் இல்லாத பொண்ணு செய்யுற வேலையா?” இப்படி ஏதாவது வண்டியிடம் வம்பு வளர்த்துக் கொண்டே காரியத்தைக் கவனிப்பார்.

அவளிடமிருந்து பதிலாக எந்த வார்த்தைகளும் வந்தது கிடையாது. முகம் சுத்தமாய் கழுவிவிட்டது போல் நிச்சலனமாய் இருக்கும். இதுவரை அவளைப் பைத்தியம் போல் சிரித்தோ அல்ல அழுதோ யாரும் பார்த்ததில்லை.

மதியத்திற்கு மேல், சீனக் கிழவியோடு கூட்டுச் சேர்த்துக்கொண்டு திரிவாள் வண்டி. அவளது கால்கள் ஓரிடத்தில் தங்கியதாய் சான்றுகள் இல்லை. சீனக் கிழவியோடு பெரும்பாலும் சீன உணவு அங்காடிகள் மற்றும் ஒட்டுக்கடைகளுக்குச் சென்று யாசிப்பாள். சீனக் கிழவி வழி நெடுக “குய்யோ முய்யோ” எனப் பேசிக் கொண்டே இருப்பாள். கூன் போட்ட முதுகைச் சாய்த்து, வண்டியின் தோளில் ஒரு கையை ஊன்றி, மறு கையைக் கண்களுக்கு மேலே குடையாய் விரிப்பாள். கபிலநிற கருவிழிகள் பூ விழுந்து வெண்மேகப்படலமாய் மாறியிருக்க, அதிகபடியான வெளிச்சம் உட்புக முடியாமல், கிழவியின் பார்வை விஸ்தீரணம் மழுங்கி போயிருந்தது. இவர்களுக்குக் கொடையளிக்கும் தர்மவான்களில் முதன்மையாகச் சீனர்கள்தான் இருந்தார்கள். சீனக் கிழவி அவளது மொழியில் இரைந்து கேட்க, அவளுக்கு விழும் சில்லறைகளில் ஓரிரண்டு இவளுக்கும் விழுவதுண்டு. மத்தியான வேளையில். சீன ஒட்டுக்கடையில் மிச்சமாகும் பன்றிக் கஞ்சியோ, நாசி ஆயம்மோ எது கிடைத்தாலும் இருவரும் பகிர்ந்துதான் உண்பார்கள். யாசகமாய் கிடைக்கும் உணவிற்கென்றே சீனக் கிழவி, சாய்ப்பானையைப் போல பெரியதாகச், சற்று வாய் குறுகிய தூக்குச் சட்டியை வைத்திருப்பாள். அதில்தான் அவர்களின் இரவு நேரத்திற்கான அமுது அடைக்கப்பட்டிருக்கும்.

சீனக் கிழவி கைகளில் எப்போதுமே பிரம்பைப் போன்று ஒரு மெல்லிய நீண்ட குச்சியை வைத்திருப்பாள். அது அவளைத் தெருநாய்களிடமிருந்து காப்பாற்றுகிறதோ இல்லையோ, ஆனால் சீண்டி வம்பிகிழுக்கும் பொடுசுகளையும், இரவு நேரங்களில் உடலுரசும் தன்னிலை மறந்த ஜந்துகளிடமிருந்தும் விலக்கிவிடும். சொந்தமாய் அடைவதற்கு ஒரு பொந்து இல்லாவிட்டாலும் கூட, சீண்டுவாரின்றி அகல திறந்து கிடக்கும் காலிக் கட்டிடங்கள், இவர்களைப் போன்ற நாதியற்ற மாந்தர்கள் ஒடுங்குவதற்கு மஞ்சங்களாயிருந்தன.

பகலின் வெளிச்சத்தில் மரவட்டையாய்ச் சுருண்டு கிடக்கும் இந்த இடங்கள், இரவானதும் வேறு ஒரு முகத்தைப் புனைந்து கொள்ளும். அது இரவுக்கே உரித்தான அந்தரங்கமான முகம். நாட்பொழுதில் தூங்கி, அந்தி சாய்ந்ததும் அரிதாரம் பூசிகொள்ளும் கூத்தாடியைப் போல, அந்தச் சந்தடியற்ற இடம், ஆழ்துயிலிலிருந்து மெல்ல விழிக்கும் பனிக்கரடியாய் உயிர்க்கொள்ள ஆரம்பிக்கும். மாலை நேர தெருவிளக்குக்குகளின் ஆரஞ்சு நிற ஒளி, சூரிய அஸ்தமனத்தை மிகைப்படுத்தும்போது, கூடடையும் பறவைகளாய் ஆட்கள் வந்து சேர்வார்கள். மலிவான போதைபானங்களை அருந்தும் அன்னியதேசத்தவர்களும், ரோக்குத் தாள்களில் சொர்க்கத்தைக் காட்டும் மூலிகைகளைச் சுருட்டி மோனநிலைக்குச் செல்லும் ‘தவயோகிகள்’ வரை தனிப்பட்ட சாம்ராஜ்ஜியமாய் விரிந்திருக்கும். வண்டிக்கும் சீனக் கிழவிக்கும் காலிமனையின் ஒரு மூலையில் பிரத்யோகமான சந்து ஒன்று இருப்பதால், அங்கு நடக்கும் கண்றாவிகளைக் கண்டு கொள்வதில்லை.

அந்தச் சீனக் கிழவிதான் வண்டிக்கு அரணாய் இருந்தாள். அவள் எழுப்பும் கர்ணகொடூரமான சத்தத்திற்கும் மெலிந்த குச்சியை விர் விர்ரென காற்றில் சுழற்றி எழுப்பும் ஒலியும் மற்றவர்களை அவர்களுக்கு அருகே அண்டவிடாது. குறிப்பாக ஆடவர்களை வண்டியின் அண்மையில் வரவிட்டதில்லை.

நாச்சியாவின் மண்டைக்குள் நண்டு பிறாண்டியது. வண்டியின் கர்ப்ப மூலத்திற்கு விதிட்டவனைக் கண்டுகொள்வதைவிட, இந்த அசிங்கம் எப்படிச் சாத்தியமானது எனும் கேள்வியே மூளையைக் குடைந்தது.

ஒருசில சமயங்களில் வண்டிக்கு வேலியாய் அமைந்திருக்கும் சீனக் கிழவி கிடைக்கும் கைக்காசில் குடுவையில் மதுவை ஊற்றிக் கொண்டு மல்லாந்து விடுவதும் உண்டு. அப்படி ஒரு பொழுதில் அவள் போதையில் இருந்தபோது, வேலியில் சின்னதாய் ஓட்டை விழுந்துவிட்டதோ? எனத் தோன்றியது நாச்சியாவிற்கு.

“கறப்பட்ட நெலத்தில தளிரு துளுக்குது.” என வாய்க்குள் முணு முணுத்துக் கொண்டாள். நிறைமாத சூலியாய் அவளைப் பார்க்கும்போது நாச்சியாவிற்கு வயிறெல்லாம் கலங்கியது. நாச்சியாவின் கணவன் ரஷிட்டிடம் அங்கலாயித்துக் கொண்டாள்.

“ஒடம்பும் மூளையும் நல்லா இருக்க பொறந்த நாங்களே, பிரசவத்துல செத்துப் பொழைச்சு வர்றோம். இந்த வண்டி எப்படிதான் புள்ளையைப் பெத்துக்க போறாலோ? அவளுக்குச் சூட்டு வலி தெரியுமா? பொய் வலி எதுன்னு தெரியுமா, இல்லை பனிக்குடம் ஒடைஞ்சி ஆஸ்பிட்டலுக்குதான் போக வழி தெரியுமா? புள்ள பெத்த பிறகு பத்தியமா ஆக்கிபோடதான் ஆள் இருக்கா? நாயி நாக்க வச்சு பண்டத்த அசிங்கமாக்குறது போல செஞ்சுட்டானுங்களே, மச்சான்” நாச்சியாவின் தாய்மை உணர்வும் பரிவும் அல்லல்படுத்தும்.

“நர்ஸ பக்கத்துல வச்சுகிட்டா நாயும் பூனையும் குட்டியப் போடுது? அதுமாதிரி அவ” இப்படி எதையாவது சொல்லி நாச்சியாவின் வாயை அடைத்துவிடுவார் ரஷிட்.

மெல்ல மெல்ல செங்கற்களால் அடுக்கப்பட்டு, சுதையினால் எழுப்படும் சுவர் போல, வண்டியின் வயிறும் மேலெழும்பி விம்மி விரிந்தது. விரிந்த வயிற்றினுள்ளே உருண்ட உயிரானது, அவளது மேலாடையின் குறுக்குவட்டத்தை முழுவதாய் அடைத்துப் பிதுங்கியது. குளத்து நீரில் முகம் காட்டி நிமிர்ந்திருக்கும் தாமரையிலையின் நரம்பு பின்னல்களை ஒத்த அவளது கீழ்வயிற்றுச் சருமத்தின் விரிந்த பகுதிகள், வெளிரிய கோடுகளாய் ஊடுபாதைகளை உண்டாக்கியிருந்தன. இளஞ்சிவப்பு அட்டையில் பெயர் பதித்து தாய்சேய் மருத்துவகத்திற்குச் சென்று கருவின் வளர்ச்சியை அவதானிக்க விட்டாலும், உள்ளுக்குள் வளரும் உயிரின் சின்ன சின்ன அசைவுகள் அவளை இன்னும் கனிவாக்கின.

ஒரு வழக்கமான இளமாலை நேரத்தில், நாசி ஆயாம் கடையில் மீந்திருக்கும் ஊனுணவை இரந்து கேட்கும் போது, ‘சொத்’தெனப் பனிக்குடம் உடைய, வலுவேறிய தொடைகளில் வழிய வழுக்கிவிழும் சிசுவை அவளது கரங்கள் அன்னிச்சையாகத் தாங்கிப் பிடித்துக் கொண்டன. பிரிப்போலத் தொங்கும் தொப்புள்கொடி அவளது உதிரமொழுகும் யோனியையும் அதனூடே பிதுக்கி வெளியேறியச் சிசுவையும் இணைத்திருந்தது. பொங்கியழும் பச்சிளம் மதலையை வாரிச்சுருட்டி நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள். மதர்தெழுந்த தாய்மையின் ஊற்றுக்கண் திறந்து மேலாடையை நனைத்தது. அது வரையில் கருவறையின் சுவரோடு பசை போல ஒட்டியிருந்த நஞ்சுக்கொடி, மரை கழன்றது போல உதிர்ந்து இரு கால்களுக்கிடையே ஊசலாடியது. தலை முதல் பாதங்கள் வரை குழந்தையின் ஊன் வாசத்தை நாசி நிறைத்தவள், ஏதோ ஒரு விசைக்கு ஆட்பட்டவள் போல, பற்களால் நரநரவென சிசுவோடு பிணைந்திருக்கும் தொப்புள் கொடியைக் கடித்துத் துப்பினாள். உடைப்பட்ட இரத்த நாளங்களின்வழி பீச்சியடிக்கும் இளவெம்மை குருதி அவளது நாவின் சுவைகாம்புகளை மீட்டி, உதட்டோரம் வழிந்தது. அவளது விழிகளில் குடிக் கொண்டிருக்கும் சிலை தன்மை நீங்கி, உயிர்ப்பும் அதனூடே இன்னதென்று வகை பிரிக்க முடியாத உக்கிரமமும் இணைந்து கொண்டது.

தனது நைந்த மேற்சட்டையினால் வண்டியின் கன்னங்களோரம் பிசுபிசுத்தத் தொப்புள்கொடி இரத்தத்தை ஒத்தியெடுக்க முனைந்த சீனக் கிழவியின் மெலிந்த கரங்கள் சரக்கெனப் பின்னிழுத்துக் கொண்டன. வண்டியின் கருநிற விழிப்பாவைகளில் திடீரேன உருவகம் கொள்ளும் பேரன்னையின் கொடுவடிவம் அவளை அச்சம் கொள்ள வைத்தது.

சபூர் அதிகாலை தொழுகைக்குப் பின்னர், கீழ்மாடியில் இயங்கும் உணவக வாசலில், கைக்குழந்தையோடு அவளைப் பார்த்தபோது நாச்சியாவிற்கு இன்னதென்று சொல்லயியலாத உணர்வுகளின் பிரவாகம் உடல் முழுவதும் அளைந்தது. எப்போதும் அவளுடனே பயணிக்கும் கூண்டு வண்டியில், சீனக் கிழவி உடலைக் குறுக்கி உட்கார்ந்து கொள்ள, கிழவியின் அரவணைப்பில் பழைய கைலியால் சுற்றப்பட்டச் சிசு, கதகதப்பில் தூங்கிக் கொண்டிருந்தது. சுருட்டி வைக்கப்பட்டப் பழந்துணியின் இதத்திலும், சீனக் கிழவியின் நெஞ்சுக்குழியின் வெம்மையிலும் கன்னங்களை விரித்து உறங்கிக் கொண்டிருந்த குழந்தையைக் கைகளில் அள்ளி முகம் பார்க்க நாச்சியாவின் கரங்கள் பரபரத்தன. நான்கு குழந்தைகளைப் பெற்று இறக்கியவளின் தாயுள்ளம் தளும்புகையில், அதனைவிடவும் மற்றுமொரு தவிப்பும் மன அரிப்பும் அவளை நிலையழியச் செய்தது. குழந்தையின் முகலட்சணங்களைப் பார்த்துத், தனக்குள் குடைந்து கொண்டிருக்கும் கேள்விக்கு விடை காணும் துடிப்பு பாடாய்ப்படுத்தியது. எவர்சில்வர் தட்டில், வெந்து வெடித்த ஐந்து இட்டிலிகளை அடுக்கி, ஆவிப் பறக்கும் பருப்புக் கறியைத் தாராளமாக ஊற்றி, கூடுதலாக, இருப்பதிலே பெரிதான வஞ்சிரம் மீனின் துண்டையும் போட்டு, வண்டியை நெருங்கினாள்.

நாச்சியா எட்டெடுத்து வைக்கும் அடிகள் கனத்து கால்கள் துவண்டன. அவளது தாய்மையுணர்வுக்கும் மன அரிப்புக்குமான போராட்டம், நெஞ்சிலிருந்து வழிந்து கால்களைக் கட்டிப்போட்டது. மனதின் உள்ளே எழுந்த கேள்விகளின் அடுக்கு குலைந்து, துக்கமும் இயலாமையும் ஒருசேரக் கவ்விக்கொண்டது. அந்த ஒரு வினாடி, நாச்சியாவிற்கு வண்டியைக் கட்டிக்கொண்டு “ஹோ” என அழவேண்டுமெனத் தோன்றியது. மனம் எண்ணியதைச் எதனாலோ சித்தம் செயல்படுத்தவில்லை, இருப்பினும் கண்களின் ஓரம், ஒரு சில நீர்மொட்டுகள் எப்போது வேண்டுமானாலும் வெடிக்க ஆயத்தமாக இருந்தன.

உயிர்ச்சுருளாய் சமைந்திருக்கும் புது ஜீவனின் வரிவடிவத்தைக் காணுகையில், அவளிடமிருந்த அற்ப அழுக்குகள் கரைந்து, அரித்த இடத்தில் சொறிந்தது போல் சுகம் உண்டாகியது. நாச்சியாவின் பார்வைத் துணிச்சுருளுக்கு வெளியே நீட்டிக் கொண்டிருந்த இரண்டு பிஞ்சு விரல்களில் நிலைகுத்தி நின்றது. குழந்தையின் பால்முகத்தைக் காண்பதற்கான திராணி அவளிடமில்லை. ஏதோ ஒரு பெருவெள்ளம் அவளது மனதின் அவலங்களைத் துடைதெறிந்து போயிருந்தது. தலையை மேலெழுப்பி பார்க்கையில், தாய்மையின் கனிவு அவளது கண்களில் திரண்டிருந்தது. காய்ந்த தோலின் துணுக்குகள் உதட்டோரம் ஒட்டியிருக்க, குவிந்திருக்கும் சின்னஞ்சிறிய செப்புவாயைப் பிதுக்கிக்கொண்டு குழந்தை சின்னதாகச் சிணுங்கியது. விழுங்கி கொண்டிருந்த இட்டிலியின் விள்ளல், தொண்டையை அடைக்க, கைகளை உதறி, குழந்தையைப் பிடுங்கிக் கொண்டாள் வண்டி. ஒரு சின்ன சிணுங்கல், இவளுக்கு எப்படி அத்துணை துல்லியமாய் கேட்டிருக்கக்கூடும்? ஒரு சிறு அசைவு இவளுள் இவ்வளவு பிரக்ஞையை ஊட்டுமோ?

அத்தனை ஆண்கள், சமையல் கட்டில் அங்கும் இங்குமாய் வேலை பார்த்துக் கொண்டிருக்க, வலது கையால் குழந்தையை அணைத்து, தனது தொளதொளப்பான இடதுபுறச் சட்டையின் சரிபாதியை விருட்டென மேலே நகர்த்தினாள். தாய்மையின் சின்னம் மறைப்புகளிலிருந்து நீங்கியது. நாச்சியாவிற்குத் தூக்கி வாரிப்போட்டது. ஓடிப்போய் அவளது நைந்த இரவிக்கையைத் தழைய விடும்போது,

“போ… பாப்பாவுக்குப் பசி…” என நாச்சியாவின் கைகளை முரட்டுத்தனமாகத் தட்டிவிட்டாள். அவளது விரல்களின் ஒட்டியிருந்த காய்ந்த இட்டிலியின் பிசிறுகள் நாச்சியாவின் முகத்தில் பருக்களாய் ஒட்டிக் கொண்டன. வண்டியின் அந்த மின்னல் வேக விழிநோக்கு நாச்சியாவைக் துணுக்குறச் செய்தது. அந்த விசித்திரமான விழிப்பார்வையின் அர்த்தம் புரிந்தது போல இருந்தாலும், அது இன்னதென்று வகை பிரிக்க முடியவில்லை. குட்டிகளை ஈன்ற பெண் நாயின் கண்களில் தெறிக்கும் ஒருவித குரூரம், அதன் கடைவாயில் இளித்து நிற்கும் கூர்ப்பற்களின் ஈரமான பளபளப்பு அல்லது அடைக்காக்கும் நாகப்பாம்பின் சிறு நாசித்துளைகளின் வழியே சீறி வரும் மூச்சுக்காற்று, இவைகளை ஒத்திருந்தது வண்டியின் விழியோட்டம்.

“யா அல்லா” நாச்சியாவின் பயம் இறை நாமமாய் வெளியில் விழுந்தது.

குழந்தைக்கும் அவளுக்குமான பிணைப்பின் அதீதம் அப்பட்டமாய் வெளிப்பட்டது. மிருகங்களிடம் இயைந்திருக்கும் மாசுப்படாத ஆதி உணர்வுகளின் நீட்சியை வண்டி கொண்டிருந்தாள். இது ஒரு வகையில் உவப்பைத் தந்தாலும் உள்ளுக்குள் எச்சரிக்கை மணி அடிக்கத்தான் செய்தது. இவளால், குழந்தையை வளர்த்தெடுக்க முடியுமா அல்ல இவளே குழந்தைக்கு எமனாய் வந்து நிற்பாளா?

நொய்மையாய் பிறக்கும் குட்டிகளை உண்ணும் மிருகங்களைப் போல், நிணமும் நீரும் பூத்திருக்கும் குருளைகளை மென்று விழுங்கும் தாய் ஓநாயென ஆகிவிடுவாளோ எனும் கிலேசம் நாச்சியாவின் இருதய சுவர்களை அதிர வைத்தது.

வண்டியின் தோளுக்கு அணையாய் சீனக் கிழவியின் தேமல் படர்ந்த கரங்கள் முலையூட்டுபவளைச் பின்னியிருக்க, தனது குருவி வாயினால் தாயின் உடலோடு பிணைந்திருந்தது குழந்தை. வண்டியின் இறுகியத் தாடைகள் இளகி கண்ணிமைகள் லேசாய் கீழிறங்கின. கரு விழிகள் மோனத்தவத்தில் மேலேறி அவளது உயிரும் உடலும் குழந்தையோடு ஒன்றிருந்தது. அது வரை மொட்டுக்களாய் அரும்பியிருந்த நீர்த்திவலைகள், நாச்சியாவின் கன்னங்களின் வழியே ஓடையெனச் சுரந்தன.

அன்றிரவு, சீனக் கிழவிக்கு யாசகமாக கிடைத்த சம்சு குடுவையில், அரைப்பங்கைக் காலியாக்கி, நீக்குபோக்குத் தெரியாமல் மூலையில் சுருண்டிருந்தாள். குழந்தையின் வருகையால், அவளது ஆழ்மனம் அமைதியுறாமல் சுற்றியிருக்கும் சத்தங்களுக்கு அசைந்து கொண்டுதான் இருந்தது. மங்கிய வெளிச்சத்தில், அரைகுறை உருவங்களாய் ஆட்களின் நடமாட்டத்தை அரை தூக்கத்தில் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ச்சீ.. போடா. இது பாப்பாவுக்கு” என கால்களால் மூர்க்கமாய் யாரையோ உதைக்கும் வண்டியை அவளால் பாதி மூடிய விழிகளின் வழியே பார்க்க முடிந்தது. பொத்தான்கள் இல்லாத தனது மேல்சட்டையை ஊக்குகளால் பிணைத்து இறுக்கிக் கொண்டவளை, இடைவெளியில்லாமல் மெல்ல அணைத்துக் கொண்டாள் சீனத் தாய்க்கிழவி.

4 comments for “வண்டி

  1. Sebas
    March 1, 2024 at 5:51 pm

    வாழ்வின்‌ அன்றாட நிகழ்வுகளில் இன்னொன்று. மனிதர்கள் பார்க்க மறுத்த ஒர் அபலையின் மெளன வழியில் பயணித்து , தாய்மையை தூக்கிப் பிடித்திருக்கிறீர்கள். பின்தொடர்வேன்.

  2. March 4, 2024 at 4:28 pm

    கதையின் கருவை மட்டும் ஆசிரியர் ஏந்திச்செல்லவில்லை . அந்த அபலைத்தாயின் கருவையும்தான்.

  3. Selva
    March 15, 2024 at 4:46 pm

    என் பள்ளி பருவத்தில் கண்ட ஒரு அவலத்தை, ஆசிரியர் சொல்லி சென்றார். நடைபாதையில் தன் தகப்பனுடன் வாழ்ந்து வந்த ஒரு மாற்று திறனாளி பெண், அவனிடம் கருவுற்று சமயம், பல நாச்சியாக்கள் கருணை பாராட்டியதை நினைவுருத்தி சென்ற ஆசிரியருக்கு, மேலும் தொடர்ந்து இது போன்ற சிறந்த படைப்புகளை அளித்திட வாழ்த்துக்கள். 🙏🏾

  4. Mathi
    May 29, 2024 at 8:58 am

    விவரிக்க தெரியாத,முடியாத ஒருவரின் உணர்வுகளை மிகத் துல்லியமாக பார்த்த விதம் அழகு.

    *நர்ஸ பக்கத்துல வச்சுகிட்டா நாயும் பூனையும் குட்டியப் போடுது?*

    இப்படித்தான் கடந்து போகின்றோம் பலவற்றை..

    நன்றி டாக்டர்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...